Jump to content

யுகக்குருதி: சித்தாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுகக்குருதி: சித்தாந்தன்

yugakuruthi.jpg?resize=725%2C1024&ssl=1

“நீ எங்கே இருந்து வருகின்றாய்”

“நான் இன்மையிலிருந்து வருகின்றேன்”

“இன்மையிலிருந்தா”

“ஆம் இன்மையிலிருந்துதான்”

அவர்களின் உரையாடல் எனக்கு விசித்திரமாகப்பட்டது.

அந்த மண்டபத்துள் அவர்கள் மட்டுந்தான் அமர்ந்திருந்தனர். அவர்களை எனக்கு யார் என்றே தெரியாது. ஊருக்குப் புதியவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் வார்த்தைகள் ஒன்றிலிருந்து ஒன்று இழை பிரிந்த, முற்றிலிலும் புதியதான சங்கீதம் போல அந்த மண்டபம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

இன்னும் நாகரீகம் தீண்டாத இடங்களிலிருந்து வந்தவர்கள் போல இருக்க வேண்டும். ஆதிமனிதச் சாயலோடு இருந்தார்கள். ஒருவரை ஒருவர் வியப்பு மேலிடப் பார்க்கும் ஒவ்வொரு கணத்தையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் உரையாடல் தராத இன்பத்தை அவர்களின் பார்வைகள் தந்தன.

நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க விரும்பவில்லை. தவிரவும் எனது குரல் அவர்களின் குரலுக்குப் பதட்டத்தை ஊட்டிவிடுமோ என்று அச்சமாக இருந்தது. அக்கணத்தில் காற்றில் ஏறி வந்த பறவையொன்று மண்டபத்தின் சுவர்களில் மோதிச் சுழன்றபடியிருந்தது. அவர்கள் இருவரும் அதை விசித்திரமாகப் பார்த்தார்கள்.

“உன்னால் பறக்கமுடியுமா”

“ஆம்”

“பறந்து காட்டு பார்ப்போம்”

“இப்போது அங்கே பறந்து கொண்டிருப்பது நான்தான்”

“என்ன சொல்கிறாய்”

“நான்தான் பறந்துகொண்டிருக்கிறேன்”

அவர்களின் வார்த்தைகள் மில்லி மீற்றர் அளவு குறுகியிருந்தன. எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அவர்கள் பொழுதுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஒருவனின் கையில் பெரும் நதிப்பெருக்கொன்றிருந்தது. அதை அவன் அரவத்தைப் போல வளைத்து தன் கையில் சுற்றியிருந்தான். மற்றவனின் மேனி முழுவதும் வண்ணத்துப்பூச்சிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோடைக்கு வழுவி மாரிக்கு வந்தவர்கள் போல ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் நனைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருவன் தன்னை ஒரு வனதேவதை போல உருமாற்றிக் கொண்டான். அவனது கண்களில் இரண்டு நட்சத்திரங்களைச் சொருகியிருந்தான். உதடுகளில் அந்திக் கருக்கலின் செந்நிறத்தை அப்பியிருந்தான். அந்த உதடுகள் மயக்கும் அதிரசக் கனிகளாக மற்றவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அவன் விரைந்தெழுந்து அவனின் உதடுகளைக் கௌவிக் கொண்டான். வனதேவதையானவன் தன் கண்களை மூடி அந்த அதிரசத்தை அவனுக்குப் பரிமாறினான். பிறகு மற்றவனும் வனதேவதையாகி இருவரும் கலந்து களித்தனர்.

நான் அந்த மாயத் தருணத்தில், வானிலிருந்து பொழிந்த நீலத் துணிக்கைகளை அள்ளி அவர்கள் மீது வீசினேன். அது கடலாகியது. அவர்கள் அதில் ஓரு தெப்பத்தைப் போல மிதந்துகொண்டிருந்தனர்.

முயக்கத்தின் நடுவில் முன்னர் தேவதையானவன் பின்னர் தேவதையானவனைக் கேட்டான் “நீ எங்கிருந்து வருகிறாய்”

“நான் இருத்தலிலிருந்து”

“இருத்தலிலிருந்தா”

“ஆம் இருத்ததிலிலிருந்துதான்”

அவர்களின் வார்த்தைகளுக்கு நடுவில் ஒரு பந்தினைப் போல நான் உருண்டு கொண்டிருந்தேன். மிதமிஞ்சிய ஆச்சரியத்தினால் என் கண்கள் பூமியைப் போல விரிந்தன.

“பாலன் அபிமன்யு பத்ம வியூகத்துக்குள் புகுந்த போது. அர்ச்சுனா நீ என்ன செய்துகொண்டிருந்தாய்”

“நா……நான் போரிட்டுக்கொண்டிருந்தேன்”

“பேடி நீதான் அவனைக் கொன்றாய்”

“இல்லை சுபத்திரை…..இல்லை”

அர்ச்சுனனின் வார்த்தைகள் மண்டபச் சுவரில் மோதி ஏதிரொலித்தன. அந்த வார்த்தைகளை நானும் ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். பொருளற்ற வார்த்தைகள் போல் என் உதடுகளிலேயே தேங்கிக்கிடந்தன.

பத்ம வியூகத்தின் மையத்தில் அபிமன்யு இறந்து கிடந்தான். அந்தியின் செந்நிறம் படிந்த அந்தப் பொழுதில் கழுகுகள் வானத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.

சுபத்திரையின் குரல் அவலத்தின் பெருவெளியில் நிர்க்குரலாக அலைந்துகொண்டிருந்தது. பாண்டவர்கள் பாலன் அபிமன்யுவின் முன்னால் மண்டியிட்டிருந்தார்கள். அருச்சுனின் காண்டீபம் சரிந்துகிடந்தது. சுபத்திரையின் ஒவ்வொரு வார்த்தையும் அவனை நோக்கி அம்புகளாகப் பாய்ந்தன.

“நீங்கள் யாருக்காகப் போரிடுகிறீர்கள். மகவுகள் எல்லோரையும் கொன்று விட்டு உங்கள் வீரத்தின் கொடியை எதன் மீது ஏற்றப் போகின்றீர்கள். என் குழந்தை உங்களுக்கு மகனாகப் பிறந்ததை விட என்ன பாவம் செய்தான். புலியை கருவறையாய் கொண்டது என என் வயிற்றை நீங்கள் புகழ்ந்துரைத்த போது அவனைப் பலியிடப் போகின்றீர்கள் என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை. உங்கள் பெருவீரத்தின் முன் நான் கோழையாகிக் கிடந்தேன். நான் அவனைத் தடுத்திருக்க வேண்டும். அவனின் பச்சை மூளையில் நச்சு விதைகளையா ஊன்றினீர்கள். உங்கள் குழந்தைகளைப் பலியிட்டுவிட்டு நீங்கள் இந்த இராச்சியத்தை ஆளுங்கள். இந்தப் பாலனின் இரத்தம் உங்கள் இராச்சிய தாகத்தை ஒரு போதும் தணிக்காது. எஞ்சியிருக்கும் பாலர்களையும் கொன்று இரத்தத்தைப் பருகுங்கள்.”

சுபத்திரையின் பெருமூச்சில்  மூண்ட அனல் குருசேத்திரத்தை மூடிப்படர்ந்தது.

0

“என்னை ஐவருக்கும் மனைவியாக்கிய போது, நீ ஏன் வெகுளவில்லை”

பெரும் மௌனம் திரையிட்டுக்கொண்டது.

பாஞ்சாலியின் கண்களில் தீப் பிழம்பு சுழன்றது.

“நீ குந்தியைக் கொன்றிருக்க வேண்டும். என்னை தாசி போலாக்கியவளின் இருதயத்தை கிழித்திருக்க வேண்டும்.”

“என்னை அருங்கனி என வர்ணித்தது யார்? நான் அருங்கனியல்ல இப்போது அழுகிய கனி. ஐந்து கொடும் பறவைகள் என் சதையைப் புசித்திருக்கின்றன. என் சரீரத்தைப் பிழிந்து சாற்றைப் பருகியிருக்கின்றன.”

அருச்சுனன் மேலும் மௌனம் காத்தான். அவனது உதடுகள் ஒரு பறவையின் அலகுகள் போலாகி ஒட்டிக்கொண்டன.

பாஞ்சாலி இன்னும் இன்னும் வெகுண்டாள்.

“சுயம்வரத்தில் என்னை உன் மனைவியாக்கிய போது நான் அடைந்த மகிழ்வை என்னால் வர்ணிக்க முடியாது. வீரனை மணந்தேன் என்ற பெருமிதம் என் இதயத்தில் மிதந்தது. என் அரண்மனையிலிருந்து வெளிவந்த போது என்னை ஒரு பறவையைப் போல உணர்ந்தேன். ஆம் உன் நிழலில் பறக்கும் பறவையைப் போல. நீ என் கண்களில் ஆண்மையின் நிமிர்வாயிருந்தாய். உன் கரங்களைப் பற்றி நடந்த போது இந்தக் குவலயமே என் கால்களின் கீழே சுழல்வதாகப்பட்டது. என் கண்கள் சுழன்று சூழலை இரசித்தாலும் என் மனம் உன்னையே மொய்த்துக்கிடந்தது.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா அருச்சுனா? வழியில் நான் தாகமெடுத்து உடல் தளர்ந்த போது உன் கண்களால் என்னை உணர்ந்தாய். உன் வில்லை வளைத்து அம்பினால் தரையைப் பிளந்து பெருகிய நீரை உன் கைகளில் ஏந்தி எனக்குப் பருக்கினாய். இன்னும் அந்த நீரின் இதம் என் நாவில் ஒட்டியிருக்கிறது. அப்போது உன்னை இறுகத் தழுவி முத்தமிட வேண்டும் போலிருந்தது. உன் பரிவு கண்டு நான் குதூகலித்தேன் அருச்சுனா. என் அரண்மனையில் நான் அடையாத பேரின்பத்தை அன்று அடைந்தேன்.

குந்தியின் வார்த்தைகளின் முன் நான் தேம்பியழுதபோது, உன் சகோதர்கள் களி கொண்டு திளைத்தனர். இப்போது நான் யோசித்துப் பார்க்கின்றேன். உன் சகோதரர்கள் ஒவ்வொருவரும் துரியோதனர்கள்தான். தாய் சொல்லைத் தட்டக்கூடாது என்பதை நான் அறிவேன். ஆனால் தவறான வார்த்தையை திருத்திக் கொள்ளவதில் என்ன  தவறு இருக்கின்றது. அறியாது சொன்ன வார்த்தையை அழித்துவிடுவதுதானே முறை. நீயாவது விளக்கியிருக்க வேண்டும். குந்தியின் அறியாமையை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். தருமர் அறத்தின் புதல்வர் அவர்கூடவா தம்பியின் மனைவி என்ற குற்றவுணர்வு கொள்ளவில்லை. அண்ணி என்பவள் தாயை நிகர்த்தவள் என்று உன் தம்பியர்க்கு உன் அன்னை கற்பிக்கவில்லையா? அவர்கள் எல்லோரும் ஏன் மௌனம் காத்தனர்? ஒவ்வொருவருடனும் கூடும் முன்னும் அக்கினியில் என்னை ஸ்நானம் செய்யச் சொன்னீர்கள். ஏன் உங்கள் உடலை ஸ்நானம் செய்யவில்லை. நீங்கள் என்ன ஏகபத்தினி விரதர்களா?”

பாஞ்சாலியின் வார்த்தைகள் ஒவ்வொன்று சர்ப்பங்களாகி அருச்சுனனைத் தீண்டின. விசம் தலைக்கேறியவனைப் போல அவன் மயக்கமுற்றான்.

0

“நீ ஏன் பாலச்சந்திரனைக் கொன்றாய்?”

“நிர்ப்பந்தம்”

“குழந்தையைக் கொல்ல நிர்ப்பந்தித்தவர் யார்”

“நானறியேன்”

“அவன் உடல் முழுவதும் சன்ன விதைகளை ஊன்றிய போது, உன் இதயத்தில் வலிக்கவில்லையா?”

“யுத்தத்தில் தர்மம் நீதி என்பவையெல்லாம் கிடையாது? கட்டளைகளுக்குச் தலை சாய்ப்பதைவிட வேறெதும் நான் அறியேன்?

பாலன் பாலச்சந்திரன் யுத்தத்தில் கைவிடப்பட்ட குழந்தையாகி களத்தில் அலைந்துகொண்டிருந்தான். அவன் கால்த் தடங்களில் புல்நுனிகள் ஏதும் மடிந்து சாகவில்லை. பிணங்கள் குவிந்துகிடந்த கடல் இரைந்த வெளியில் வீரத்தின் பெயரால் காற்று சுழன்றடித்த அந்தப் பொழுதில் நான் அவனைக் கண்டேன். அச்சம் தோய்ந்திருந்த அவனது விழிகளில் உறைந்த சாவுகளின் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. வார்த்தைகளற்ற பறவை போல திசையற்று நின்றிருந்த அவனை, நானே கூட்டிவந்தேன். நீ அவனைப் பெற்றுக்கொண்டாய். கரிசனை ததும்பிய விழிகளால் நீ அவனை வருடிக்கொண்டாய். நான் உன் கருணையின் மலர்ச்சிகண்டு உண்மையில் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனேன். மறுநாள் மதியம் சாவு துளைத்த அவன் உடலத்தை கண்டு துணுக்குற்றேன். குழந்தையின் குருதியில் சூரியன் உருச்சிதைந்திருந்த அன்றைய மாலையில் நான் அவனுக்காக என் ஈமத்தைக் கடலில் கரைத்தேன். நீ ஏன் அவனைக் கொன்றாய்”

“யுத்தத்தில் விளைந்தவனிடம் யுத்தத்தின் குணங்கள்தான் இருக்கும்”

“நீ உன் வாயை மூடு”

“கருணையின் கடவுளைத் தொழும் உன்னிடம் கொடூரத்தின் அலகுகள் முளைக்கவில்லையா? அது உன் குற்றமா அல்லது கடவுளின் குற்றமா? கடவுள் குழந்தைகளால் இந்தப் பூமியை அலங்கரித்தான். நீ அவற்றிற்கு முள் முடி சூட்டி அழகு பார்க்கின்றாய். அமைதியற்று பெருந்தொலைவுக்கு இட்டுச் செல்கிறாய். குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கிவிடுகிறாய்.”

நிலை கொள்ள முடியாத கண மௌனத்துள் இருவரும் கரைந்துகொண்டிருந்தார்கள். தொலைவில் காவி நிறத்தில் ஒரு பாடல் காற்றில் மிதந்து வந்தது. கருணை வழியும் அப் பாடலில் குழந்தைகள் மலர்ந்து சிரிப்பதைக் கண்டேன்.

0

“உன் முகத்தில் பருவங்கள் முதிர்ந்து கிடக்கின்றன”

“இனி என்னால் கடைத்தேற முடியாது. என் கண்களில் சாம்பல் படரத் தொடங்கிவிட்டது. அந்திச் சூரியன் கூட மங்கியபடிதான் என் குடிசையின் மேலாயச் செல்கின்றது.”

“நொய்ந்த தேகத்தை இன்னும் எதற்காக தாங்கிக்கொண்டிருக்கின்றாய்?”

“நான் என் பிள்ளையை சாவதற்குள் கண்டடைந்துவிட வேண்டும். அதற்காகத்தான் என் தேகத்தில் உயிரைத் தேக்கி வைத்திருக்கிறேன். அவன் என்னிடமிருந்து விடை பெற்ற போது காலை உணவைக்கூட அருந்தியிருக்கவில்லை. ஏதோ அவசரத்தில் புறப்பட்டுச் சென்றான். இன்னும் வீடு வந்து சேரவில்லை. இத்தனையாண்டுகளாக அவன் எங்கோ பசித்த வயிறோடு ஏங்கிக்கொண்டுதான் இருப்பான். நிச்சயமாக அவன் வந்து சேருவான். என் முதிர்ந்த தேகம் விழுந்தணைவதற்கு முன் நான் என் பறவையை முத்தமிட வேண்டும்.”

0

குறுக்கும் நெடுக்குமான சதுரங்கப் பாதையில் அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இருவரும் ஒருவருக்குள் ஒருவர் தோற்றுத்தான் போயிருந்தனர். வார்த்தைகளில் வெளிப்படா அவமானத்தை தேகங்களால் திரையிட்டு மறைத்திருந்தனர்.

அவர்களின் முன்னால் அபிமன்யுவும் பாலச்சந்திரனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் கண்களில் கனவுகள் தீய்ந்து அணைந்து புகையெழும்பியவாறிருந்தது. உதடுகளில் குறுநகை. வார்த்தைகள் உலர்ந்துபோன அந்தப் பொழுதில் பேரண்டத்தின் உச்சியில் சூரியன் ஒளித்துணிக்கைகளாகச் சிதறிக்கிடந்தது.

பாலகர்கள் அவர்களின் கண்களை கூர்ந்து பார்த்தபடியிருந்தார்கள். கரைந்து திரவமாய் உருகிக்கொண்டிருந்த அவர்களின் தேகத்தில் பாலர்கள் பாம்புகள் நீந்திக் களிப்பதைக் கண்டார்கள், துணுக்குக் கொள்ளவில்லை தங்கள் இதயத்தில் மலர்ந்த பூக்களைக் கொய்து அந்த திரவத்தில் வீசினார்கள்.

அபிமன்யு வாய் விரித்து “பாலச்சந்திரா” என அழைத்தான்.

“சொல்லு அபிமன்யு”

“என் தேகத்தை அம்புகள் துளைத்திருந்தததைப் போலவே உன் தேகத்தையும் சன்னங்கள் துளைத்திருந்ததைக் கண்டேன். உன் கதறலை என் காதருகே கேட்டேன்.”

பாலச்சந்திரனின் கண்களில் கண்ணீர் பெருகியது. அபிமன்யு அவனை ஆதரவாக அணைத்து தலையைத் தடவிக்கொண்டான்.

வார்த்தைகள் நொருங்கிக் கிடந்த அந்தப் பொழுதில் ஒரு பேரலையைப் போல இருவரினதும் பெருமூச்சுக்கள் வெளிப்பட்டன.

பாலச்சந்திரனின் தேகத்தில் சன்னங்கள் துளையிட்டிருந்த தழும்புகள் இருந்த இடத்தில்த்தான் அபிமன்யுவின் தேகத்திலும் அம்புகள் துளைத்த தடங்கள் இருந்தன.

பாலகர்கள் இருவரும் தம் தழும்புகளை தடவிக் கொண்டே உரத்துச் சிரித்தார்கள். அந்த சிரிப்பொலியில் வானம் ஒரு தரம் குலுங்கியடங்கியது.

தேவதையானவள் தன் தேகத்தைவிடுத்து எழுந்து கொண்டாள். தேவதையானவன் அவளைப் பற்றி இழுத்தான்.

மண்டபத்துக்கு வெளியே சடைத்திருந்த முதுமரத்தின் கீழ் சுபத்திரையும் மதிவதனியும் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் கண்களின் முன்னால் குருசேத்திரமும் முள்ளிவாய்க்காலும் திரையாகத் தொங்கிக்கொண்டிருந்தன. அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பிணங்கள் குவிந்து கிடந்த வெளியில் வெற்றிப் பெருமிதங்களின் கொடிகள் பறந்துகொண்டிருந்தன. கைவிடபட்ட வில்லும் அம்பும் ஏகேயும் சினைப்பரும் எறிகுண்டுகளும் ஆட்டிலறிகளும்  கதாயுதமும் வேலும் ஈட்டியும் நிறைந்துகிடந்தன.

சுபத்திரை தன் கணவனின் காண்டீபத்தைத் தேடினாள். மதிவதனி தன் கணவனின் கைத்துப்பாக்கியைத் தேடினாள். கண்டு பிடிக்கவே முடியவில்லை.

சற்றுத்தொலைவில் அபிமன்யுவும் பாலச்சந்திரனும் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களின் கைகள் சிறகுகள் போல காற்றில் அலாதியாக அசைந்தன. அபிமன்யுவின் கையில் வில்லும் அம்பும் இருந்தன. பாலச்சந்திரனின் கையில் கைத்துப்பாக்கியிருந்தது. அவர்கள் விநோதமான மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு தமது ஆயுதங்களை வீசி எறிந்து விட்டு வலசை போகும் வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்திச் சென்றனர். அவர்களின் உடல் முழுவதும் வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள் ஒட்டிக்கொண்டதைப் போல ஒளிர்ந்துகொண்டிருந்தனர். சுபத்திரையும் மதிவதனியும் அவர்களின் விளையாட்டைப் பார்த்து இரசித்துகொண்டிருந்தனர்.

அப்போதுதான் அவள் அங்குவந்து சேர்ந்தாள். அவளது முகத்தில் பருவங்கள் முதிர்ந்துகிடந்தன. கடவுளாலும் கைவிடப்பட்டவள் போலிருந்தாள். “நான் சாவதற்கிடையில் என் பிள்ளையை கண்டுபிடிப்பதற்காக கடைசிவரை அலைந்துகொண்டிருந்தேன். என்னால் முடியவில்லை. என் பிள்ளை பசியோடு அலைந்துகொண்டிருக்கப் போகின்றான். என் வயிறு பற்றி எரிகின்றது” அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுபத்திரையினதும் மதிவதனியினதும் இதயத்தைக் கிழிப்பது போலிருந்தன. அவர்கள் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. ஆறுதலுரைக்கும் இடத்தில் கூட தாம் இல்லை என்ற குற்றவுணர்ச்சி அவர்களை வதைத்தது. மௌனத்தின் திரை கொண்டு தங்கள் இருதயங்களை மூடியிருந்தனர். அவள் ஓலமிட்டு அழுதாள்.

பாலகர்கள் வண்ணத்துப்பூச்சிகளை விடுத்து அவளிடம் விரைந்து ஓடிவந்தனர். அவளின் அருகே அமர்ந்தனர். இருவரும் தங்கள் கைகளால் அவளை ஆதரவாக அணைத்தவாறே கண்ணீரைத் துடைத்தனர்.

குருசேத்திரத்திலும் முள்ளிவாய்க்காலிலும் காணாத காட்சியை சுபத்திரையும் மதிவதனியும் கண்டார்கள்.

0

பாலையாய் விரிந்துகிடந்த பாதைகளின் வழி பாஞ்சாலி அலைந்துகொண்டிருந்தாள். அன்று காலைதான் அவள் தன் உடலைத் தீ தின்னக் கொடுத்திருந்தாள். நைந்த தன் தோலாடை தீயில் எரிவதைக் கண்டு களிகொண்டு பெருங்கூத்திட்டாள். அருச்சுனனின் காண்டீபத்திலிருந்துகூட எழாத பேரதிர்வு அவள் கூத்திலிருந்தது. திசைகள் எட்டையும் தன் கால்களில் மிதித்தவாறு அவள் கூத்திட்டாள்.

சுபத்திரையின் கண்களில் காலங்கள் கரைந்து வெளியாக விரிந்தது. கையறு நிலையின் கடைசிக் கணத்தில் அவள் உதடுகளில் வெறுப்பினால் ஒரு புன்னகை அவிழ்ந்து உதிர்ந்து போனது. கண்களை மூடி பெருமூச்செறிந்தாள்.

“பாஞ்சாலி…..” உரத்துக் குரல் எழுப்பினாள் சுபத்திரை.

பாஞ்சாலி திரும்பிப் பார்த்தாள். “என்னை அழைக்காதே சுபத்திரை. இப்போதுதான் நான் நானாக வாழ்கின்றேன். என் சபதங்கள் யாவும் அர்த்தமற்றவை. துரியோதனன் சபையில் நான் துகில் உரியப்பட்டபோது பேடிகள் போல் நின்ற என் கணவன்மாரைக் கொல்வதாகத்தான் நான் சபதம் செய்திருக்க வேண்டும். நம்பி வந்தவளின் துகில் உரியப்படும் போது அவர்களும் கைகட்டி வேடிக்கைதான் பார்த்தார்கள். அவர்களின் தலையைத் துண்டித்து அந்தக் குருதியில்த்தான் என் கைகளை நனைத்து கூந்தலை வாரி முடித்திருக்க வேண்டும். என் தேகத்தை நிரந்தரமாகவே எரித்துவிட்டேன். எத்தனை அக்கினிப் பிரவேசங்கள் ஒவ்வொன்றும் என்னுடலை தூய்மையுறுத்தியதாய்ச் சொன்னார்கள். பேடிகள்….பேடிகள்”

சுபத்திரை மௌனத்தில் உறைந்திருந்தாள். மதிவதனி அவளின் தோள்களில் தன் கையைப் போட்டவாறு பாஞ்சாலியை ஏறிட்டாள். கருகி அவிந்த பட்டமரம் போல அவள் நடந்துகொண்டிருந்தாள்.

இருவரும் எதிர்த்திசையில் நடக்கத்தொடங்கினார்கள்.

0

அவர்கள் இருவரும் மீளவும் வன தேவதைகளாகினர். இறுகத் தழுவிக்கொண்டனர். அவர்களின் கைகளும் கால்களும் அரவங்களாகப் பிணைந்தன. விழிகளில் ஊறிய விசத்தை இருவரும் பருகத் தொடங்கியிருந்தனர். அவர்களின் நாக்குகளின் பிளவுகளிலிருந்து வீணீராய் முனகல்கள் வழிந்தன.

“உன் தாகம் அடங்கவில்லையா”

“இல்லை”

“மேலும் உன் சரீரத்தை கொடு புழிந்து பருகிக்கொள்கின்றேன்.”

“இதோ எடுத்துப் பருகிக்கொள்”

மண்டபத்தின் மையத்தில் அவர்கள் மூச்சிரைத்துக் கிடந்தார்கள்.

ஒரு பிரளயத்தின் மூடிவில் சுழன்றடித்த ஊழிக் காற்றைப் போல அவர்களின் பெருமூச்சு சுழன்றது. ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களிடம் வார்த்தைகள் தீர்ந்துபோயிருந்தன. கண்களாலும் தேகத்தின் தீண்டலாலும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மண்டபத்துள் திடீரென பறவைகள் கூட்டமாக நுழைந்தன. வனதேவதையானவன் வனதேவதையானவளை தன்னை நோக்கி ஈர்த்து தன்னை அவளுக்குள் ஒடுக்கிக் கொண்டான். அவனது கண்களில் திரண்ட அச்சத்தை வனதேவதையானவள் தன் கண்களால் பருகிக்கொண்டாள்.

0

என்னால் அங்கு நிலைகொள்ள முடியவில்லை. நான் வெளியேறத் தொடங்கினேன். வானத்தில் நிலவு சுடர்ந்துகொண்டிருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். அந்தகாரமாய் படிந்திருந்த அந்த வெளியில் இரண்டு தேகங்கள் தழுவிக்கொண்டிருந்தன. அவற்றின் கைகளும் கால்களும் அரவங்களாகிப் பிணைந்தன. பிளந்த நாவுகளிலிருந்து முனகல்கள் வீணிராய் வழிந்துகொண்டிருந்தன.

00

 

சித்தாந்தன் 

 

யாழ்ப்பாணம் கோண்டாவி்லில் வசித்தது வருகின்றார். சித்தாந்தன் கவிதைகளுடன் சிறுகதைகளும் விமர்சனங்களும் எழுதி வருகின்றார். ‘காலத்தின் புன்னகை’, ‘துரத்தும் நிழல்களின் யுகம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. மறுபாதி என்னும் கவிதைக்கான சஞ்சிகையை நடத்திவருகிறார்.

 

https://akazhonline.com/?p=3683

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி. படைப்பாளிக்குப் பாராட்டுகள். நல்லதொரு உவமை: பாலச்சந்தின் - அபிமன்யு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு நிஜங்களை இறுக்கி அணைத்த இணையற்ற கற்பனை அபாரம்.....!  👍

நன்றி கிருபன்.....!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.