Jump to content

புதிய ஆண்டிலாவது நற்செய்திகள் கிடைக்குமா? - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆண்டிலாவது நற்செய்திகள் கிடைக்குமா? நிலாந்தன்

இரண்டாவது பெரும் தொற்றுநோய் ஆண்டு நம்மை கடந்து சென்றிருக்கிறது. உலகம் முழுவதுக்கும் அது ஒரு பொதுவான தோற்றப்பாடு. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை பெரும் தொற்றுநோய் மட்டும் பிரச்சினை அல்ல.அதற்கும் அப்பால் பொருளாதார நெருக்கடிகள் மிகுந்த ஒரு ஆண்டு அது எனலாம்.

மூன்றில் இரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதாக கூறிக்கொள்ளும் ஓர் அரசாங்கம் கடந்த ஆண்டு முழுவதிலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வெற்றிகள் எதனையும் பெறவில்லை. ஒரே ஒரு விடயத்தில் மட்டும் துலக்கமான வெற்றியை காட்டியது. அது என்னவென்றால் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகளில் உலகிலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் அது வினைத்திறனோடு செயல்பட்டிருக்கிறது. அண்மையில் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் ருவிற் பண்ணியது போல, வளர்ச்சி அடைந்த அமெரிக்கா போன்ற நாடுகளை விடவும் முன்னேற்றகரமான விதத்தில் இலங்கைத்தீவு தடுப்பூசிகளைப் போட்டிருக்கிறது. அதாவது அரசாங்கத்தின் ராணுவ மயப்படுத்தும் கொள்கையின் அடிப்படையில் கிடைத்த ஒரே ஒரு வெற்றி அதுதான். தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளை படைத்தரப்பிடம் ஒப்படைத்ததன் மூலம் அப்படி ஒரு வெற்றி கிடைத்தது. ஆனால் மற்ற எல்லா விடயங்களிலும் கடந்த ஆண்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு தோல்வி ஆண்டாகவே காணப்படுகிறது.

முழுச் சமூக முடக்கம், அரைச்சமூக முடக்கம், தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பயணத் தடை போன்றவற்றின் கீழ் நாட்டின் பொருளாதாரம் மேலும் முடங்கிய ஓராண்டு அது. தவிர இராணுவமயமாக்கல், மோசமான நிர்வாகம், அடிக்கடி நிர்வாகிகளை மாற்றுவது போன்ற காரணங்களின் விளைவாகவும் நாட்டின் பொருளாதாரம் மேலும் சரிந்தது. நாட்டின் நவீன வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டொலர் நெருக்கடியும் ஏனைய நெருக்கடிகளும் ஏற்பட்டன. தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராடின. செயற்கை உர இறக்குமதி நிறுத்தப்பட்டதால் ஒரு போக பயிற்செய்கை பெருமளவுக்கு பாதிப்புற்றது. இதன் விளைவுகளை வரும் மாதங்களில் அனுபவிக்க வேண்டி வரும் என்று துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். நாட்டில் நிச்சயமாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே எச்சரித்துள்ளார். அரிசியின் விலை இப்போது இருப்பதை விடவும் பல மடங்காக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சிக்கு வந்த புதிதில் கொரோனா வைரஸ் அரசாங்கத்துக்கு ஒருவிதத்தில் உதவியது. நாட்டை இராணுவ மயப்படுத்த அது உதவியது. அனர்த்த காலங்களில் படைத்தரப்பு எல்லா நாடுகளிலும் முன்னுக்கு வரும். அதுவே இலங்கைத் தீவிலும் நடந்தது. ஆனால் இலங்கை தீவில் போரில் வெற்றிபெற்ற படைத்தரப்பானது நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக வளர்ச்சி பெற்றுவிட்டது. அதே சமயம் ராஜபக்சக்களுக்கும் படைத் தரப்புக்கும் இடையிலான உறவு நிரந்தரமான ஒரு தங்கு நிலை உறவு எனலாம். இதனால் பெரும் தொற்று நோய் காலத்தை நன்கு பயன்படுத்தி நாட்டை அதிகம் படை மையப்படுத்திய ஓர் அரசாங்கம் இது அதுபோலவே பெருந்தொற்றுச் சூழலைப் பயன்படுத்தி நிறைவேற்று அதிகாரங்களை ஒரு மையத்தில் குவித்த அரசாங்கமும் இது. போரை வெற்றி கொண்ட படைத்தரப்பு வைரசையும் வெற்றிகொள்ளும் என்று சிங்கள மக்களும் தொடக்கத்தில் நம்பினார்கள். ஆனால் டெல்டா திரிபு வைரஸானது போரும் வைரஸ் ஒன்று அல்ல என்பதை நிரூபித்தது. அதைப்போலவே போரும் பொருளாதார நெருக்கடிகளும் ஒன்று அல்ல என்பது கடந்த ஆண்டில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதாவது எந்த ஒரு வைரஸ் தொடக்கத்தில் அரசாங்கத்துக்கு உதவியதோ அதே வைரஸ் பின் வந்த மாதங்களில் அரசாங்கத்தை கீழ்ப்படிய வைத்திருக்கிறது. அரசாங்கத்தை சிங்கள மக்கள் முன் தலைகுனிய வைத்திருக்கிறது..

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபொழுது பெருமளவுக்கு அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் இணக்கம் இல்லாத ஒரு போக்கையே காட்டியது. கொள்கையளவில் இந்தியா முதலில் என்று கூறிக்கொண்டாலும் நடைமுறையில் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது. ஆனால் வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம் மேலும் சரிந்தது. தடுப்பூசி அரசியலாக மாறியது. ஐரோப்பிய யூனியன் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தப் போவதாக எச்சரித்தது. ஐநா சான்றுகளையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கான ஒரு பொறிமுறையை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இவ்வாறாக பெருந்தொற்று நோய், ராஜதந்திர நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடி ஆகிய மூன்று நெருக்கடிகளோடு மேலதிகமாக ஆளும் கட்சிக்குள் பங்காளிகளும் பிரச்சினைப்படத் தொடங்கினார்கள். போதாக்குறைக்கு சமூக முடக்கம் நீக்கப்படும் காலங்களில் எதிர்க் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் போராடத் தொடங்கின. செயற்கை உரம் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் போராடினார்கள்.

இவ்வாறாக நெருக்கடிக்குப் பின் நெருக்கடிகளாக வரத் தொடங்கிய பொழுது அரசாங்கம் முதலாவதாக வெளியுறவுப்பரப்பில் தன்னை சுதாகரித்துக் கொள்ள முற்பட்டது. அதன் விளைவாக பசில் ராஜபக்சவை அமைச்சரவைக்குள் கொண்டுவந்து அதன் தொடர்ச்சியாக வெளியுறவு பரப்பில் ஒரு தோற்ற மாற்றத்தை ஏற்படுத்தியது.அதன்மூலம் மேற்கு நாடுகளுடனும் இந்தியாவுடனும் அரசாங்கம் உறவுகளை சுதாகரிக்க தொடங்கியது. ஆட்சிக்கு வந்த புதிதில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எதிராக காணப்பட்ட அரசாங்கம் அதன் வெளியுறவு நிலைப்பாட்டிலிருந்து கீழே இறங்கி வந்தது. ஆட்சிக்கு வந்த புதிதில் அமெரிக்காவின் மில்லீனியம் சலேஞ் உதவியை நிராகரித்த ஓர் அரசாங்கம், அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை,குறுக்குச் சேவைகள் உடன்படிக்கை போன்ற உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த ஓர் அரசாங்கம், ஐநாவின் நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்திற்கு முன்னைய அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகுவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஓர் அரசாங்கம், அமெரிக்காவின் இரட்டை பிரஜாவுரிமை பெற்ற பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்ததன் மூலம் தனது நிலைப்பாடுகளில் தளர்வு போக்கை காட்டிய ஓராண்டு கடந்த ஆண்டாகும். அதாவது அரசாங்கம் தான் நினைத்தபடி வெளியரசுகளை அணுக முடியவில்லை என்ற தோல்வியை ஒப்புக்கொண்ட ஓராண்டு.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடந்த ஆண்டு எனப்படுவது அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதன் வெளியுறவுக் கொள்கையில் விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டி வந்த ஓர் ஆண்டு எனலாம். எனினும் வெளியுறவு நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டு வந்த பின்னரும் பொருளாதார நெருக்கடியை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை என்பதைத்தான் புத்தாண்டு நிரூபித்திருக்கிறது.பசில் ராஜபக்ச ஒரு மந்திரவாதி அல்ல என்பதனை ஆண்டிறுதி நிருபித்திருக்கிறது.

பால் டீ இல்லாத ஒரு புது வருடப்பிறப்பு. சமையல் எரிவாயு இல்லாத அதே சமயம் சமையலறை பாதுகாப்பற்ற இடமாக மாறிய புத்தாண்டு இது. புத்தாண்டு பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தொழில் அமைச்சரான பந்துல குணவர்த்தன கூறுகிறார் “வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகளை பயிரிடுங்கள். அடுத்த ஏப்ரல் மாதம் அவற்றை அறுவடை செய்யக் கூடியதாக இருக்கும்” என்று. அதாவது அடுத்த ஏப்ரலில் மரக்கறிகளும் உட்பட சாப்பாட்டுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வரலாம் என்று அமைச்சர் கூறுகிறாரா?

அதேபோல அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகிய விஜயதாச ராஜபக்ச பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.…..” அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதமளவில் நாடாளுமன்றத்தில் பெரிய ஆட்சி கவிழ்ப்பு ஒன்று இடம்பெறும். அவ்வாறு இல்லையென்றால் அரசுக்குள் அதிகார மாற்ற புரட்சி ஒன்று நிச்சயமாக இடம்பெறும் ”

இவை தவிர ஜனாதிபதியின் விசேட செயலணியான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவரான ஞானசார தேரர் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்…..” எனது தனிப்பட்ட நிலைப்பாடு என்னவென்றால் நாட்டை அடுத்த சில ஆண்டுகளுக்கு ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்பொழுது தான் நாட்டை மீட்டெடுக்க முடியும் ”

மேற்கண்ட கூற்றுக்கள் யாவும் வருஷப் பிறப்புக்கு முன் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளாகும். இவை யாவும் பீதியூட்டும் செய்திகள் அல்லது கெட்ட செய்திகள். நிச்சயமாக நற்செய்திகள் அல்ல. அதாவது ஒரு புதிய ஆண்டு பிறந்தபோது நாட்டில் அரசியல் ரீதியாக நற்செய்திகள் எவையும் இருக்கவில்லை.

 

https://athavannews.com/2022/1259509

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.