Jump to content

அவனும் அவர்களும் - சிறுகதை


Recommended Posts

பறை (இசைக்கருவி) - Wikiwand      அக்கினிக்குஞ்சு   இணையத்தில் இம்மாதம் வெளியாகியிருந்தது .

அந்த மேளச் சத்தத்தின் அதிர்வில் கண்விழிக்கிறார் தேவர்.

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண்  

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண்  டாடாண்டு டண் டண்

பறை மேளத்துக்குச் சொல்லியிருக்கு எண்டல்லோ சொன்னவை. இதென்ன கர்ண கடூரமான ஒரு அடி. சத்தத்தைக் கேட்டால் பறை மேளச் சத்தம் போல இல்லையே. மெதுவாக யார் அடிக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தார் தேவர். அதில் ஒன்றே ஒன்றுதான் பறை மேளம். மற்ற இரண்டும் வேறு வடிவத்தில் இந்தியாவில் கிந்திக் காரங்கள் அடிக்கிற மேளத்தின்ர வடிவில இருக்க, எல்லாமே இப்ப மாறிக்கொண்டேதான் வருகுது என்னைத் தவிர என எண்ணிக்கொண்டார்.  தாளக்கட்டுப்பாட்டோட தான் மூன்றுபேரும் மேளத்தை அடிக்கினம். ஆனாலும் முன்னைய இசை எங்கோ தொலைந்து ........... சனங்களுக்கும் அதுபற்றி எல்லாம் யோசிக்க எங்க நேரம். காசைக் குடுத்துக் கடமையைச் செய்தாச் சரி என்ற மனநிலை.

டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு

டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு 

டாண் டாண் டாண் டாண் டாண் டாண்

டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு

முன்னரெல்லாம் செத்தவீடுகளுக்கு அடிக்கும் இசை நினைவில் வந்து மனதை நிறைக்க பெரிய பெருமூச்சு வெளிவருகிறது அவரிடம் இருந்து.

உடலை அசைக்க முடியாமல் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகப் படுத்த படுக்கைதான். எட்டு மாதங்களுக்கு முதல் சைக்கிளால விழுந்து ஆஸ்பத்திரியில கொண்டுபோய் போட்டதுதான். கோதாரி விழுந்த கொறோனா அங்க தொத்தி தனி வாட்டில கொண்டேப் போட்டு ஒருத்தரும் கொறோனா வந்தவையைப் பாக்க வரேலாது எண்டுபோட்டு, “இவரைப் பார்க்க தனி ஆள் போடுவம். ஒரு நாளைக்கு 2000 ரூபா தரவேணும்” எண்டு சொன்னார்கள். அங்க போய் ஆரிட்டைக் கதைக்க முடியும்? உடனேயே வீட்டுக்காறரும் வேற வழியில்லாமல் ஓம் என்று தலையாட்ட, ஒழுங்கான சாப்பாடுகூட அவங்கள் தராமல்த்தான் நான் சரியாய் இளைச்சுப்போனன் என எண்ணியவருக்கு மானச்சாட்சி உறுத்தியது.

காலையில இடியப்பமும் சொதியும் சம்பலும் கட்டிய பார்சல் கொண்டுவந்து குடுத்தவங்கள் தானே. மத்தியானமும் இரண்டு கறியோட சோறு, இரவிலும் என்ன வேணும் எண்டு கேட்பாங்கள். சிலவேளை பக்கத்துக் கட்டில்காரர் சாப்பிடும்போது அவிச்ச முட்டை கூடக்கண்ணில் பட்டதுதான். இவர் தான் வீட்டில இருந்து சாப்பாடு வாறேல்லை என்ற கோபத்தில வேண்டாம் எண்டு தலையாட்டிவிட்டுச் சாப்பிடாமல் பிடிவாதம் பிடிச்சது. சாப்பிடாமல் விடவிட வயதுபோன இவரின் குடல் இன்னும் சுருங்கிப்போய் இவரால ஒழுங்காச் சாப்பிடவே முடியாமல் போச்சு.  

ஒரு மாதத்தின் பின்னர்தான் அவரை வீட்டுக்குக் கூட்டிப் போக அனுமதித்தார்கள். இவரைப் பார்த்த ஆளுக்கு வீணாக அறுபதாயிரம் கட்ட மருமகன் தான் தன் இருப்பிலிருந்த பணத்தைக் கொடுக்கவேண்டியதாகிவிட்டது. இவர் மருமகன் இவரைக் கூட்டிக்கொண்டு போக வந்து பார்த்து என்ன இப்பிடி மெலிச்சு போனார் மாமா என்று ஏங்கித்தான் போனான்.

வீட்டை போனதும் இவர் மனைவி சந்திரா ஐயோ என்னப்பா இப்பிடி ஆயிட்டிங்களே என்று கத்திக் குளறி அழ, மாமி அவருக்கு வருத்தம் இல்லை மாமி. நீங்கள் அழுது அவரைப் பயப்படுத்தாதேங்கோ எண்டதோடை மகள்களின் சத்தம் வராத அழுகையும் நிண்டு போச்சு.  

வெளிநாட்டில இருக்கிற இவற்றை மருமகன் அனுப்பின காசில உயத்திப் பதிக்கிற கட்டில் வாங்கி அவரை அதில கிடத்திச்சினம். பேரப்பிள்ளையள்  எல்லாம் இவரில நல்ல உயிர். சுற்றிவர வந்து நின்று இவரின் கையைப் பிடிச்சுக்கொண்டு தாத்தா என்று விக்கியபடி இருக்கினம்.   

“எனக்கு ஒண்டும் இல்லை. அதுதான் நான் வீட்டை வந்திட்டன் தானே அழாதேங்கோ அப்பனவை”

“சந்திரா உன்ர கையால இடியப்பமும் சம்பலும் சொதியும் செய்துதா”   

தலையைத் திருப்பி மனைவியிடம் கேட்க “வருத்தமாக கிடந்தாலும் அவற்றை குரலிலை இருக்கிற கம்பீரம் குறையேல்லை” என எண்ணியபடி  எழுபத்தி ஐந்து வயதுக் குமரி மகிழ்வுடன் சமையலறைக்கு ஓடுகிறார்.

 

 

************************************************

 

 

பணக்காரக் குடும்பத்தில இந்திரன் மூத்த மகன். மூன்று பெயரை ஒன்றாகச் சேர்த்து பெற்றவர்கள் ஏன் அவனுக்கு வைத்தார்களோ என்று அவன் அடிக்கடி விசனப்பட்டதுண்டு. பள்ளிக்கூடத்தில சேரந்தபோது மார்க்கண்டு வாத்தியார் ஆரடா உனக்கு உந்தப் பெரிய பேரை வச்சது எண்டு சொல்லிக்கொண்டு அவனின் பெயரை உச்சரிக்க மற்றப் பிள்ளையள் எல்லாம் சிரிக்க இவனுக்கு அவமானமாகப் போய்விட்டது. என்ர பேர் நல்லாத்தானே இருக்கு என்று இவன் சொல்ல, “எனக்கு வாய் காட்டிறியோ. கையை நீட்டடா என்று சொல்லி தான் வைத்திருந்த பெரிய பிரம்பால் போட்ட அடியில் கை வீங்கியதுகூட இந்திரனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இந்த வாத்தியிட்டை இன்னும் எத்தனை நாட்கள் படிக்கவேணுமோ என்ற கவலையே பெரிதாக ஏற்பட்டது. அன்று மாலையே வீட்டுக்குப் போய்,

“ஏனமா இப்பிடிப்பெரிய பெயர் வச்சனீங்கள்” என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்க,

“எல்லாரும் ஒரேமாதிரிப் பேர் தானே வைக்கிறவை. உன்ர பெயர் ஆருக்காவது இருக்கோ சொல்லு. மற்றவைக்கு ஒரேஒரு பேர்தான் இருக்கு. உனக்கு மூண்டுவிதமாக கூப்பிடலாம்”

தாய் கூறியது சரியாகவே பட அவனுக்கு ஆறுதல் ஏற்பட்டது. வளர வளர பெயரைக் குறுக்கிச் சிலர் தெய்வா என்றும் சில நண்பர்கள் இந்திரன் என்றும் அழைக்க இவனுக்கு இந்திரனே பிடித்துப்போனது.

பணக்காரச் செல்லர் என்ற தந்தையின் பட்டமே இவனைப் படிக்கவிடாது பின் தள்ளியது. உனக்கென்ன நல்ல சொத்துப்பத்து என்று நண்பர்கள் சொல்லும்போது இவனையறியாமலே ஒரு கர்வம் இவன் முகத்தில் வந்தமர்ந்துவிடும். இத்தனைக்கும் இந்திரனின் தந்தை ஒன்றும் உழைத்துப் பணக்காரர் ஆனவர் கிடையாது. பெரிதாகக் கல்வியறிவும் கிடையாது.

“அந்தக் காலத்தில வழியிலாத சனங்களின்ர காணியளைக் காசு குடுத்து எழுதிவாங்கினதும், விதானை, புரக்கராசி எல்லாம் சேர்ந்து கன காணியளை உப்பிடித்தான் காலாலை அளந்தே வாங்கினவை” என்று இவனின் தந்தையின் தாய்க்கிழவி பேரப்பிள்ளைகளை இருத்திவைத்துக் கதை சொல்லும் வேளைகளில் கூறும்போது,

“அதுக்கும் ஒரு திறமை வேணும் எல்லோ மாமி. எல்லாராலையும் அது முடியுமே” என்று மாமனாருக்கு இவன் தாயார் வக்காலத்து வாங்குவதையும் சிறு வயதில் கேட்டிருக்கிறான். ஊரில கால்வாசித் தோட்டக்காணி இவர்களதாய்த் தான் இருந்தது. தோட்ட வேலை செய்யவும் நிறையப்பேர் இருந்தார்கள்.

ஆனால் இந்திரனின் வீடு அத்தனை பெரிதாக இல்லை. வளவுதான் எட்டுப் பரப்பு. அந்தப்பக்கம் இரண்டு அறைகளுடன் ஒரு கட்டடம். பக்கத்தில சமையலறை. இந்தப்பக்கம் ஒரு அறை. மூண்டும் ஆண்பிள்ளைகள் என்றதால தானோ என்னவோ செல்லர் பெரிதாக வீட்டைக் கட்டவில்லை. பிள்ளைகளுக்கும் அந்த இரசனையும் இல்லை. இப்படியான விடயங்களில் பெண்கள் எல்லாத்துக்கும் ஆசைப்படுபவர்கள் என்ற குற்றச்சாட்டு இவனின் தாயோ அதற்கு எதிர்மாறாக இருந்தார். அதற்கு யாவரும் பெரிதாகப் படிக்காததுகூடக் காரணமாக இருக்கலாம். இருந்தாலும்  முற்றத்தில் தனியாக ஒரு கட்டடம். நாலு பக்கமும் குந்துகளேயன்றி சுவர் எழுப்பாமல் கத கத என்று நான்கு பக்கமும் காற்று வருவதுபோல் கட்டியிருந்தது நன்றாகத்தான் இருந்தது.

மூத்த பிள்ளை எண்டதாலை அவரை நன்றாகப் படிப்பிக்க வேண்டும் என்று அவர் தந்தை ஆசைப்பட்டாலும் அவனால் முன்னிலை மாணவனாகவே முடியவில்லை. தந்தையும் நல்ல பள்ளிக்கூடங்கள் என்று இரண்டு மூன்றில் மாற்றிமாற்றிச் சேர்த்தும் பார்த்தார். ஆனால் நூல்கள் வாசிப்பதிலும், சமய அறிவுப் போட்டிக்களில் கலந்து பரிசுகள் எடுப்பதிலும் காட்டிய உற்சாகத்தையும் அக்கறையையும் படிப்பில் காட்டவே இந்திரனால் முடியவில்லை. தகப்பன் ஆசைப்பட்டதுபோல் பல்கலைக் கழகம் செல்லவும் முடியவில்லை.

சிறிய கதைகள் கட்டுரைகள் என்று எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்ப அவை வரவேற்புப் பெற்றன. “வெடிப்புக்கள்” என்ற பெயரில் அவர் எழுதிய சிறுகதை உதயன் பத்திரிகையில் வந்து சிறந்த பாராட்டைப் பெற்றது. பெண்கள் உட்பட எத்தனையோ பேர் இவனை உற்சாகப்படுத்தி உதயன் பத்திரிக்கைக்குக் கடிதம் எழுதினர். அவற்றை அவர்கள் இந்திரனுக்கு  அனுப்பியிருந்தனர். கடிதங்களைப் பார்த்தபோது அவனுக்கு வானில் மிதப்பதுபோல் மகிழ்வேற்பட்டது. இன்னும் எழுதவேணும் என்ற உத்வேகமும் எழ அவன் எழுதிக் குவித்தான். இந்திரனின் கதை வருகின்றது என்றாலே பத்திரிகை வாங்குவோரும் அதிகரித்தனர்.

“சேற்றில் ஒரு செந்தாமரை” என்ற பெயரில் அவன் எழுதிய தொடர்கதை மிகப் பிரசித்தமானது. பிரபல எழுத்தாளராக இருந்த “செங்கை ஆழியான்” கூட தன்னை வந்து பார்க்கும்படி இந்திரனுக்குக் கடிதம் போட, அக்கடிதத்தை தன் நண்பர்களிடம் எல்லாம் காட்டி அவர்களைப் பொறாமை கொள்ள வைத்ததை எண்ணி இப்பவும் இந்திரன் சிரிப்பதுண்டு. ஆனாலும் அவன் செங்கை ஆழியான் கூப்பிட்டவுடன் ஓடவுமில்லை. இன்றுவரை போக நினைத்ததுமில்லை.   

நண்பர்களை விடுங்கள். அதன்பின் வந்த பெண் விசிறிகளின் கடிதங்களை வாசித்து முடிக்கவே அதிக நேரம் தேவைப்பட்டது. அந்த நேரம் வொலிங்டன் திரையரங்கில் வெளியாகிய “பலே பாண்டியா” திரைப்படத்தை நண்பர்களுடன் பார்த்துக்கொண்டிருந்தபோதே அப்படத்தில் வந்த பாடல் வரிகளைத் தலைப்பாக்கி “நான் என்ன சொல்லிவிட்டேன்” என்னும் தலைப்பில் தொடர்கதையை வீரகேசரியில் ஆரம்பித்து அதை அவர்களே நாவலாகவும் வெளியிட்டு இரண்டாம் பதிப்பும் பதிப்பிக்கவேண்டி வர, முக்கியமான ஒரு எழுத்தாளராக இந்திரன் அறியப்பட, எழுதுவதிலும் அவனுடைய பெண் விசிறிகளைச் சமாளிப்பதே பெரும் பாடாகிப் போனது.

அவனின் எழுத்தாற்றலைக் கண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இவனை வேலையில் இணைந்துகொள்ளும்படி அழைத்தார்கள். இந்திரனின் பெருமை சொல்ல முடியாததாக, அவனுக்கே தாங்க முடியாததாக இருக்க, விண்வெளிக்குச் செல்லும் ஒருவன் போல தன்னை எண்ணிக்கொண்டு கற்பனைகளுடன் வேலைக்குக் கிளம்பினான்.

அவன் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வேலை அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தானே முன்னிலை வகிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மற்றவரை ஏறி மிதித்தபடி போய்க்கொண்டிருந்தனர். பெண்களுக்கு பேயும் இரங்கும் எண்டதால் அவர்கள் கலகலப்போடு தம் அலுவல்களைச் சாதித்துக்கொண்டனர். இவர் நினைத்ததற்கு நேர்மாறாக இவரை யாருமே ஒரு பெரிய எழுத்தாளர் என்று சட்டை செய்யவே இல்லை என்பது இவரின் தன்மானத்தைச் சீண்ட, நீங்களும் உங்கள் வேலையும் என்றுவிட்டு ஒரு மாதம் முடிய முன்னரே மீண்டும் இவரின் ஊருக்கு வந்துவிட்டார்.

கொஞ்சம் அனுசரிச்சுப் போயிருக்கலாமே என நண்பர்கள் அங்கலாய்த்ததுக்கு “இவையிட்டையெல்லாம் பல்லைக்காட்டி வேலை செய்யவேண்டிய தலையெழுத்து எனக்கு இல்லை. அப்பர் சேர்த்து வைத்த  முதிசமே எவ்வளவு இருக்கு. என்ர பிள்ளையளுமே சும்மா இருந்து சாப்பிட ஏலும்” என்று திமிராகப் பதிலளிக்க, நண்பர்கள் வாயை நெளித்தும் கண்ணைக் காட்டியும் ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டதை இந்திரன் கவனிக்கவில்லை.  

வந்ததும் வாராததுமாக தன்னைச் சந்திக்க வருமாறு தூது அனுப்பிய அளவெட்டி வனஜா மூன்று மாதம் கற்பமாக இருப்பதாகக் கூற, பெரும் இடி ஒன்று தன்னைத் தாக்கியதுபோல் நிலைக்குலைந்தான் இந்திரன்.  

 

 

************************************************

  

 

 

திடீரென்று செத்தவீட்டில் சலசலப்பு அதிகமாக தேவர் கண்ணைத் திறந்து பார்க்கிறார். முன் வீட்டு கணபதிப்பிள்ளையின் மகள் சுகிர்தா “ ஐயோ எங்களை எல்லாம் விட்டுட்டுப் போட்டியளோ” என்று தலையிலடித்து அழுதபடி வருகிறாள். அவளைப் பார்த்தவுடன் எழும்பி இருந்து பார்க்கவேண்டும் போல இருக்க எழ முயற்சிக்கிறார். அவரின் கையைத் தவிர எதையுமே அசைக்க முடியவில்லை.

இப்ப உவளுக்கு அறுபது வயது இருக்கும் என்று எண்ணிய தேவர் இந்த வயதிலும் இன்னும் கட்டுக்குலையாமல்த்தான் இருக்கிறாள். சுருள் முடியும் இறுகிய உடலும் அவளின் வயதில் பத்தைக் குறைத்தே மற்றவர் மதிப்பிடுவதாய் இருக்கின்றது. தேவண்ணை தேவண்ணை என்று இந்த வீட்டு முற்றத்தைச் சுற்றியவள் தானே. இண்டைக்கு குழந்தை கணவன் பொறுப்புகள் எண்டு மட்டுமில்லை, மட்டுவிலுக்குக் கலியாணம் கட்டிப் போனபிறகு நெருங்கின உறவுகளின் திருமணத்தைத் தவிர வேறு எதுக்கும் இந்த ஊர்ப் பக்கம் அவள் எட்டியும் பாரக்கேல்லை. அப்படி எப்பவாவது தாயைப் பார்க்க வந்தாலும் புருஷனோட வந்திட்டு அப்பிடியே போய்விடுவாள். பிள்ளைகள் பேர்த்தியாரைப் பார்க்க சிலவேளை வாறதுதான். பெட்டை உரிச்சுவச்சு சுகிர்தா போலவே இருக்க, தேவர் பார்த்துவீட்டுப் போய்விடுவார்.

பிரேதத்துக்கு மேலே விழுந்துகட்டி அழுதுவிட்டு பக்கத்தில் கதிரையில் இருந்த சந்திராவைக் கட்டிப்பிடித்து அழத்தொடங்க, சந்திராவுக்கு வந்த கோபத்தில் சுகிர்தாவைத் தள்ளிய தள்ளில் சுகிர்தா ஒருவாறு சமாளித்து காலை ஊன்றி அப்பால் நகர்ந்துபோக, அதைக் கவனித்த தேவருக்கு சுகிர் தாவின் மேல் இரக்கமும் சந்திராவின் மேல் ஒருவித பச்சாதாபமும் எழுந்தது. கூடவே ஒரு பயமும் எழுந்தது. சந்திராவுக்கு அந்த விஷயம் தெரியுமோ? என்னட்டை ஒருநாளுமே தெரிஞ்சமாதிரி இதுவரை  காட்டிக்கொள்ளேல்லையே. சரியான அமசடக்கி தான் சந்திரா என்று எண்ணியவர் முந்தி நடந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் கொண்டுவர முயன்றார்.  

அக்கம் பக்கத்தவர் எல்லாம் இவர்கள் வீட்டுக்கு வந்து போவார்கள். வாசிப்பில் இவருக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக ஒரு அறை முழுவதும் கதைப்புத்தகங்கள் நிறைந்த அலுமாரிகள் நிறைந்திருக்க பலரும் வந்து வாங்கி இவரின் வீட்டுக் குந்தில் இருந்து வாசித்துவிட்டுப் போவார்கள். எவருக்குமே இவர் கொண்டுபோய் வாசிக்க அனுமதித்ததில்லை. இவர் பெற்றோர் உட்பட வீட்டில் உள்ள மற்றவர்கள் கூட அந்த அறையுள் இவர் அனுமதியின்றி நுழைவதே இல்லை. இவருக்கு அது கோவில் போல.

கோயில் திருவிழாக்கள் எண்டால் சொல்லி வேலையில்லை. சுவாமி தூக்குவது தொடக்கம் எல்லாமே இவர்கள் தலைமையில் நடக்கும். ஆண்கள் எல்லாம் வேட்டி கட்டி பார்க்கவே பக்தி மயமாக இருக்கும். இவர் வேட்டி கட்டி இடுப்பில் நிறத் துண்டு ஒண்டும் கட்டி யானைப்பல் வைத்துக் கட்டிய பென்ரன் கோர்த்த நாலு பவுன் சங்கிலியையும் கழுத்தில போட்டுக்கொண்டு றோட்டால போனால் ஆரெண்டாலும் திரும்பிப் பார்க்காமல் விடாயினை. அத்தனை கம்பீரமாகவும் அழகாகவும் இருப்பார். எத்தனையோ பெண்கள் எல்லாம் கண்களால் கதை சொல்லிவிட்டுக் கடந்து போவார்கள். ஊருக்குள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்பதில் இவர் கவனமாக இருந்தபடியால் நல்லகாலம் பல இடங்களில் தப்பிவிட்டார்.

சுகிர்தாவுக்கு அப்ப பதினேழு வயது தான் இருக்கும். இவருக்கு முப்பத்திமூன்று கடந்திட்டுது. தளதளவென பெரிய கண்களும் நீண்ட முடியுடனும் இருந்த அவள் அடிக்கடி கதைப் புத்தகம் வாங்க இவரிடம் வந்து நின்றாள். இவர் ஓரிருதடவை எடுத்துக் கொடுத்தார்தான். எப்பிடித்தான் அத்தனை விரைவாக வாசிச்சு முடிக்கிறாளோ என்று ஆச்சரியப்பட்டாரே ஒழிய படிக்கிற வயதில ஏன் இத்தனை புத்தகம் வாசிக்கிறாய் என்று ஒருமுறை கூட அவளைக் கண்டிக்காவோ கேட்கவோ செய்யவில்லை. அடிக்கடி வந்து வந்து அவள் புத்தகம் கேட்டதால் அவருக்கும் புத்தகங்களை எடுத்துக்  குடுக்கப் பஞ்சிப்பட்டு நீயே போய் எடு என்று கூறிவிட்டார்.

முன்னரெல்லாம் மற்றவர்கள் நிற்கும்போது வந்து நூல்களை வாங்கும் சுகிர்தா இப்போதெல்லாம் மற்றவர்கள் இல்லாத நேரமாகப் பார்த்து வருவதையும் நீண்ட நேரமாக அந்த அறையுள் நின்று நூல்களை எண்ணுவதையும் இவர் சில காலம் செல்லத்தான் உணர்ந்துகொண்டார்.  

இவரும் பாலை விரும்பிக் குடிக்கும் பூனைதானே. தானாக வந்து விழுவதை ஏன் வேண்டாம் என்பான். கோவிலில் மாலை நேரப் பூசை நடக்கும் போது மனைவியும் தாயும் சென்றுவிட இவர்கள் வீட்டிலும் ஆராதனை நடந்தது. சுகிர்தா இன்னும் பூப்பெய்தாததும் இவருக்குச் சாதகமாய்ப் போனது. பதினெட்டு வயதாகியும் அவள் அப்படியே இருக்க இன்னும் உன்ர மேள் பெரிசாகேல்லையே என்று கேட்போரின் வாய்க்காக அவளை பள்ளிக்கும் செல்லாமல் தடுத்ததும் நல்லதாயிற்று.

இவரோ எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி தொடர்ந்தும் தான் விருப்பப்படி இருக்கத் தலைப்பட்டார். பத்தொன்பது வயதில அவள் பெரிதானபின் கண்டபடி வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் கட்டுப்பாடுகளும் அவளைக் கண்காணித்தபடி தாயோ அம்மம்மாவாரோ இருக்க அவரைப் பார்க்கவேணும் என்ற தவிப்பு உண்டானது. பெரிதான பிறகு எதுக்குத் தேவையில்லாத பிரச்சனை என்று தேவரும் அவளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தார்.

ஆனால் ஒருநாள் இவர் வீரகேசரியை வாசித்துக்கொண்டு இருந்தபோது திடுதிப்பென்று சுகிர்தா இவர் முன்னால் வந்து நின்றாள். நீங்கள் என்னை ஒரேயடியா கைகழுவி விட்டுட்டியளோ. என்னை ஏமாத்திப்போட்டியள் என்று அவள் கூற தேவர் வெலவெலுத்துப்போய் கதிரையை விட்டு எழுந்தார்.

“உனக்கு என்ன விசரே. வீட்டில ஆக்கள் நிக்கினம். நான் பிறகு கதைக்கிறான். முதல்ல வெளிய போ” என்று உறுக்க,

“இண்டைக்கு நீங்கள் ஒரு முடிவு சொல்லுமட்டும் நான் போக மாட்டான்” என்று வீம்புடன் நிக்க, மனைவியும் தாயும் வீட்டில் தான் என்னும் எண்ணத்தில் தவிப்புக் கூடி முதல்முறையாக கைகால்களில் நடுக்கமும் பதட்டமும்  ஏற்பட்டது.

“எளிய நாயே. அவன் கலியாணம் கட்டினவன் எண்டு தெரிஞ்சும் இப்பிடி வந்து நிண்டு கதைக்க உனக்கு வெக்கம் இல்லையே” என்றபடி தாய் சுகிர்தாவை தலைமயிரில பிடிச்சு இழுத்துக்கொண்டு போய் அவளின் வீட்டுக்குள் தள்ளிவிட்டு வந்ததும், மனைவிக்கு ஏதும் கேட்டிருக்குமோ என்ற பதட்டத்துடன் சுற்றுமுற்றும் பார்க்க, மனைவியின் தலை தெரியாததில் இவர் நின்மதிப் பெருமூச்சு விட்டதும் இவருள் இப்பவும் ஒரு உலுக்கத்தை ஏற்படுத்த நடுக்கத்துடன் பெருமூச்சொன்று வெளிவந்தது. சந்திராவுக்குத் தெரிந்தும் அவள் ஒருநாள்க்கூட என்னை எதுவும் கேட்கவே இல்லை என்னும் எண்ணம் எழுந்ததும் அவரை அறியாமல் கண்கள் நிறைகின்றன.

 

 

************************************************

இந்திரனின் நண்பன் மாறனுக்கு நேற்றுத்தான் அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்று முடிந்திருந்தது. வந்தவர்களுக்கு உணவு பரிமாறுவதில் இருந்து எல்லோரையும் தண்ணி வென்னி எல்லாம் குடுத்து உபசரிப்பது உங்கள் வேலை என்று மாறன் கட்டன் றைற்றாகக் சொன்னதால எல்லா நண்பர்களும் ஒரு குறையும் விடாமல் வந்தவர்களை உபசரித்து அனுப்பி ஒருவாறு எல்லாம் முடிந்தாயிற்று. பெண் வீட்டில் நாலாம் சடங்கு. கட்டாயம் எல்லாரும் வந்திடுங்கோடா என மாறன் சொன்னதைத் தட்டாமல் இந்திரனும் மற்ற நண்பர்களுடன் செல்லத்தான் எண்ணியிருக்கின்றான்.

“உனக்கும் முப்பத்தைந்தாகுது. எத்தனை நாளைக்குத்தான் சாக்குப்போக்குச் சொல்லப்போறாய். நீ கட்டினாத்தானே உன்ர தம்பிமாருக்கும் கட்டிவைக்கலாம்” என்ற வழமையான தாயின் புலம்பலுக்கு,

“அம்மா என்னைப் பார்க்கவேண்டாம். எனக்கு எப்ப முடிக்கவேணும் என்று தோன்றுதோ அப்ப உங்களிட்டைச் சொல்லுறன். முதல்ல தம்பிக்கு பாருங்கோ”

“அப்ப அதுவரை ஊர் மேஞ்சு கொண்டு இருக்கப்போறியோ”

தாய் கூறியதைக் காதில் வாங்காதவன் போல சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் இந்திரன்.

அன்று மாலை நாலாம் சடங்குக்கு நல்லா வெளிக்கிட்டுக்கொண்டு போய் நண்பனுக்குப் பக்கத்தில் இவர்களுக்கும் கதிரை கொண்டுவந்து போடுகிறார்கள். பெண்கள் எல்லாம் அப்போது கதிரைகளில் இருப்பதில்லை. அழகிய பாய்கள் நிலத்தில் விரிக்கப்பட்டிருக்கும். வருபவர்கள் குழுவாகவோ அல்லது குடும்பத்துடனோ அமர்ந்திருக்க எவசில்வர் தட்டிலோ அல்லது பித்தளைத் தாம்பாளத்திலோ பலகாரங்கள் வைக்கப்பட்டிருக்கும். சில்வர் தேநீர் குவளைகளில் சுடச் சுடப் பரிமாறப்படும் டரின்பால் விட்ட தேனீரும் கூட சுவையாக இருக்கும்.

ஆண்களுக்கு பந்தலினுள்ளே கதிரைகள் போடப்பட்டிருக்கும். அவர்கள் போகும்போது மட்டும் மாப்பிளையையும் பெண்ணையும் எட்டிப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தபடி போட்டுவாறன் என்று கூறிவிட்டுச் செல்வார்கள். இவர்கள் நண்பர்கள் என்பதனால் பக்கத்தில் கதிரைபோட்ட உபசரிப்பு.

இந்திரன் வெள்ளை பெல்பொட்டமும் செம்மஞ்சள் நிற சேர்ட்டும் போட்டு வந்துள்ளான். அடர் மீசையும் மேலே சிறிது திறந்துவிட்ட அங்கியூடாகத் தெரியும் சங்கிலியும் மாப்பிள்ளைபோலவே தெரிக்கிறான். மற்ற நண்பர்கள் கூட நன்றாகவே இருக்கின்றனர். இரு குமர்ப்பெண்கள் ஓடியாடி எல்லோருக்கும் சிற்றுண்டியும் தேனீரும் பரிமாறுகின்றனர். தேவதைபோல் ஒருத்தி இவர்களுக்கு சிறுசிறு தட்டுக்களில் பழக்காரவகைகளுடன் இவர்களை நோக்கி வந்து ஒவ்வொருவருக்கும் ஒரு தட்டை எடுத்துக் கொடுக்கிறாள். ஒவ்வொருவரிடமும் கொடுக்கும்போதுகூட அவள் யாரையுமே நிமிர்ந்து பார்க்கவில்லை. அந்த நிறமும் அமைதியான அழகிய முகமும் அவளின் ஆடையும் அவளின் பண்பைச் சொல்லி நிறக்கின்றது.

“எடேய் மச்சான். சினிமாவில நடிக்க வைக்கலாம் போல இவ்வளவு அழகாய் இருக்கிறாள். ஆரடா இது” என்று நண்பனிடம் முணுமுணுக்கிறான் இந்திரன். “எனக்குத் தெரியாதடா இவவைத்தான் கேட்கவேணும். இப்ப கேட்டு என்ர குடும்பத்தைக் குழப்ப ஏலாது. கொஞ்சம் பொறுமையாய் இரு” என்கிறான்.

வீட்டுக்கு வந்த பின்னரும் அந்தப் பெண்ணின் நினைப்பாகவே இருக்கிறது.

எவ்வளவு அமைதியும் அழகும். எத்தனை பெண்கள் என் மேல் வந்து விழுந்திருக்கிறார்கள். இவளை விடக்கூடாது. எனக்கானவள் இவள்தான் என்று எண்ணிக் கனவுகளுடன் மனம் கனக்க, யாரும் இவளைக் கொத்திக்கொண்டு போக முதல் நான் முந்தவேண்டும் என்பதுவாய் மூன்று நாட்கள் சென்றபின் வெட்கத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு நண்பன் வீட்டுக்குச் செல்கிறான்.

“நான் இவாவிட்டைக் கேட்டனான். இவவின் மாமியின் மகளாம். ஆனா என் மனிசியின்ர குடும்பம் மாதிரி வசதி ஒண்டும் இல்லை. ஒரு சீதானமும் எதிர்பார்க்கேலாது மச்சான். மூண்டு பெட்டைகளில இது கடைசிப் பெட்டையாம். மற்ற இண்டுபேரும் கலியாணம் கட்டீட்டினம். ஆனா இப்பவே சொல்லிப்போட்டன்.  என்னை ஒண்டுக்கும் சாட்டப்படாது. நல்ல பிள்ளையாம். ராமநாதன் கொலிச்சில படிச்சிட்டு வேலை தேடிக்கொண்டிருக்குதாம். யூனிவேசிற்றி கிடைக்கேல்லையாம்” கிளார்க் வேலை ஒண்டுக்கு அப்பிளிக்கேசன் போட்டுட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கிறாவாம். வதானா எண்டு கூப்பிடுறவையாம்”

சிவம் சொல்லி முடிக்கமுதலே தகப்பன்ர பெயரைச் சொல்லு. எங்க இருக்கிறவை? என்று அவதிப்பட்டான் இந்திரன்.

உடுவில் லேடீஸ் கொலிச்சுக்குப் பக்கத்தில குலத்தார் வீடு எங்கே எண்டால் காட்டுவினமாம்.

“சரியடா வாறன்” என்றுவிட்டு சைக்கிளை மிதித்தவன் தாயின் முன் வந்து நின்றான்.

“அம்மா எனக்கு அந்தப் பிள்ளையை நல்லாப் பிடிச்சிருக்கு. நான் இப்ப கலியாணம் செய்ய ரெடி. மிச்ச அலுவலை நீங்கள் தான் கெதியாப் பார்க்கவேணும்” என்று முடித்தான்.

ஒரு மாதத்திலேயே திருமணப் பேச்சு முடிந்து திருமணமும் முடிந்து வதானா குனிந்ததலை நிமிராமல் இவர்கள் வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தாள். அதிர்ந்து பேசத் தெரியாத வதானாவை எல்லோருக்கும் பிடித்துப்போனது. அண்ணி அண்ணி என்று இந்திரனின் சகோதரர்கள் அன்பையும் மரியாதையையும் காட்டினார்கள்.

மாமியார் தான் பெரிதாக வதானாவை மதிக்கவில்லை. எல்லா வேலைகளையும் இவள் தலையில் சுமத்திவிட்டு அங்கும் இங்கும் வலம் வந்துகொண்டிருந்தாள். அவவுக்கும் வயது போட்டுது தானே என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டு இது என் வீட்டு வேலைதானே என எண்ணியபடி எந்தவித முகச்சுழிப்புமின்றி வேலை செய்தாள் வதானா.

திருமணமாகி ஒரு மாதத்திலே இவளுக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாக இவளின் தாயார் கொண்டுவந்து கொடுத்தபோது ஏனோ தானோவென அதை உடைத்தவளுக்கு முகம் முழுதும் விளக்கெரிந்தது.

“அம்மா எனக்கு வேலைக்கு அழைப்பு வந்திருக்கு” என்று மகிழ்வுடன் கூறும் மகளை அம்மா பார்த்த பார்வையில் எவ்வித பூரிப்பும் இருக்கவில்லை.

“ஏனம்மா எனக்கு வேலை கிடைச்சது உங்களுக்கு சந்தோசம் இல்லையோ”

கவலையுடன் கேட்ட மகளுக்கு என்னத்தைச் சொல்வாள் அவள்.

“கலியாணம் கட்டின பிறகு அவர் என்ன சொல்லுவாரோ எனக்குத் தெரியாது. எதுக்கும் கேட்டுப் பாரம்மா. சம்மதிச்சால் போ. இல்லையெண்டாலும் என்ன. முந்தி எண்டால் வேலைதான் முக்கியம் எண்டு சொல்லியிருப்பன். இப்ப நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதோடை திருப்திப்பட்டுக் கொள்ளம்மா” என்று புத்திசொல்லிவிட்டுப் போகும் தாயை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இந்திரன் வந்தவுடன் மகிழ்ச்சியுடன் தனக்கு வந்த கடிதத்தைக் கொடுத்தாள். வாங்கிப் பார்த்தவன் மனதிலும் மகிழ்ச்சி ஏற்பட “வாழ்த்துக்கள் வதானா. ஆனால் மட்டக்களப்புக்குப் போய் நீர் வேலை செய்ய நான் இங்க தனிய இருக்கேலுமே. இங்கினேக்கை எண்டால் கட்டாயம் போம் என்று நானே அனுப்பியிருப்பன்” என்று கூறிவிட்டு அவளைப் பார்க்கத் துணிவின்றி அப்பால் நகர வதானாவுக்கு அழுகை வந்தது.

பெலத்து அழக்கூட என்னால் முடியவில்லையே. இந்த வேலை ஒரு மாதத்தின் முன்னம் கிடைத்திருந்தால் கலியாணமே வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நின்றாவது கலியாணம் காட்டாது வேலைக்குப் போயிருப்பன். என் விதி இதுதான் போல என மனதைத் தேற்றிக்கொண்டாள்.

அடுத்த வாரம் தமக்கை தாய் வீட்டுக்கு வருகிறாள் எனக் கேள்விப்பட்டு கணவனின் அனுமதியுடன் அங்கு சென்றவள் தமக்கையைக் கட்டிப்பிடித்து “சின்னக்கா வேலை கிடைத்தும் என்னால போக முடியேலையே” என விக்கி விக்கி அழுபவளை ஆறுதல் படுத்த அவளின் முதுகை ஆதரவாக வருடிக்க கொடுத்தபடி இருந்தாள் வதானாவின் இளைய சகோதரி.

அவள் கச்சேரியில் வேலை பார்க்கிறாள். கணவனும் பேராசிரியராக இருப்பதனால் இருவரும் வசதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர். மூத்த சகோதரிக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. ஆனாலும் கடைசித் தங்கைமேல் பாசம் இருக்கிறதா இல்லையா என்பதுபோல் நடந்துகொள்வாள். பெரிதாக யாரையுமே தன்னுடன் ஒட்ட விட்டது கிடையாது. வசதியாகத்தான் வாழ்கிறாள். ஆனாலும் தங்கையின் திருமணத்துக்கு ஒரு அட்டியல் செய்துபோடுமாறு தாய் கேட்டும், தந்தை வேலை செய்யும்போது  கிளிநொச்சியில் வாங்கிப்போட்ட மூன்று ஏக்கர் காணியை தனக்கு எழுதுங்கோ என்று விடாப்பிடியாய் நிண்டு தான் பேருக்கு மாற்றிய பிறகுதான் தங்கையின் திருமணத்துக்கு நகையைச் செய்து கொடுத்தாள்.

வதானாவின் சின்னக்கா “அப்புவுக்கும் ஆச்சிக்கும் சரியான விசர். அரசாங்க உத்தியோகம் பாக்கிற மாப்பிளை எண்டு எல்லாக் காணியளையும் அக்காவுக்கே சீதானமாய்க் குடுத்திட்டு எங்கள் இரண்டு பேரையும் அனாதைகள் போல விட்டிட்டினம் என்று அடிக்கடி வதானாவிடம் மட்டும் அங்கலாய்ப்பாள். அந்தக் கோபத்துடனேயே படித்து கச்சேரியில் வேலை கிடைத்ததும் தகப்பன் ஈடுவைத்த மூன்று பரப்புக் காணியை மீண்டு, அதில் வீடு ஒன்றும் கட்டி நன்றாகத்தான் வாழ்கிறாள்.

“எனக்கு இங்கே எங்காவது வேலை கிடைச்சிருந்தால் நான் கட்டாயம் விட்டிருப்பன். நீ இல்லாமல் நான் எப்பிடித் தனிய இருக்கிறது எண்டு சொன்னவர்” என்று தன் கணவனையும் விட்டுக்கொடுக்காது கூறியவளை அன்பொழுகப் பார்த்தாள் தமக்கை.

 

 

****************************************** 

 

 

வதானாவுக்கு எல்லாமே பழகிவிட்டது. இந்திரன் இப்பொழுதெல்லாம் எழுதுவதுக்கூட இல்லை. சும்மா இருக்காமல் ஏதும் எழுதுங்கோ எண்டால் எனக்கு நீ புத்தி சொல்லாதை, எனக்கு என்ர அலுவல் தெரியும் என்பான்.

முன்புபோல இல்லை இப்ப எல்லாம். செல்லருக்கும் தோட்டங்களைப் பராமரிப்பது கடினமாக இருந்தது. இரண்டாவது மகன் முன்பு இவருடன் தோட்ட வேலைகளைப் பார்த்துக்கொண்டான். இப்ப அவனும் ஆசிரியர் வேலை கிடைச்சு மட்டக்களப்புக்குப் போய்விட்டான். அவனுக்கும் நிறையச் சம்மந்தம் வருகிறது. வேளைக்கு அவனுக்கும் திருமணம் செய்து வைக்கவேணும் என்று எண்ணியபடி இந்திரனை அழைத்தார் செல்லர்.

“தம்பி எவ்வளவு நாளைக்குத்தான் இப்பிடிப் பொறுபில்லாமல் இறுக்கப்போறாய். ஏதேனும் வேலைவெட்டி தேடவேணும். இல்லாட்டில் தோட்டங்களையாவது பாக்கவேணும். உவன் கடைசி குகனும் இவ்வளவுநாள் தோட்டவேலையளுக்கு உதவி செய்தவன். இப்ப அவன் யூனிவேசிற்றிக்குப் போப்போறான். இனி நீதான் எல்லாத்தையும் பாக்கவேணும்” என்று தகப்பன் கூறிய பிறகு மறுத்து எதுவும் சொல்ல முடியாது தலையாட்டிவிட்டுச் சென்றான் இந்திரன்.

மற்றவரிடம் சென்று கையேந்தி வாழ அவனுக்குத் துளிகூட விருப்பம் இல்லை. வதானாவுக்கு சீதனம் என்று இவன் கேட்கவில்லையே ஒழிய, ”உங்களால முடிஞ்சதைச் செய்து போடுங்கோ” என்று இவனின் தாயார் சொன்னதாலை மட்டுமில்லை, சும்மா தங்கச்சியை அனுப்பக் கூடாது எண்டு வதானாவின் சின்னக்கா சொல்லி இரண்டு சோடி காப்புகளும் பதக்கமும் தானே செய்து போட்டு தமக்கை கொடுத்த அட்டியலோடு தங்கையைச் சிறப்பாய் அனுப்பி வைத்தார்கள்.

வதானா திருமணமாகி மூன்று மாதங்களில் கர்ப்பமாகி அயலட்டையாரின் வெறும் வாய் மெல்ல சந்தர்ப்பம் கொடுக்காது எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள். ஆனாலும் அவளை ஆசைக்கு இரு வாரம் கூட அவள் வீட்டில் இருக்க விடாது இங்கே வேலைகள் குவிந்திருந்தன. எட்டாம் மாதம் நடக்கும்போது சின்னக்காவும் தாயாரும் தம்முடன் அழைத்துப் போகிறோம் என்றதற்கு “ஏன் நாங்கள் ஒழுங்காப் பார்க்க மாட்டமோ” என்று மாமியார் கூறியதில் வதானாவின் ஆசையும் மதுக்குள்ளேயே அடங்கிப்போக தமக்கையும் தாயும் வேறு வழியின்றித் திரும்பிச் செல்லவேண்டியதாயிற்று.

மாமியார் உதவிகள் செய்தார்தான். ஆனாலும் இந்திரன் தன் வேலையில் ஒன்றைக் கூட தான் செய்ய முன்வரவில்லை. 

ஒன்பதாம் மாதத்தில் ஒருநாள் நோவெடுக்க சொக்கனின் காரைப் பிடிச்சு யாழ்ப்பாணம் பெரியாசுபத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். மாமியாரும் கூடவே வந்திருந்தது வதானாவுக்குத் தெம்பாக இருந்தது. இரண்டு மணிநேர வாதைக்குப் பின்னர் ஆண் குழந்தை எவ்வித அசுமாத்தமும் இன்றி வெளியே வர வதானாவுக்கு அரை மயக்கமாய் இருந்தது.

“இவான்ர புருஷன் வெளியில நிண்டாக் கூட்டிக்கொண்டு வாங்கோ” என்று அந்தப் பெண் மருத்துவர் கூற, மனப் பதைப்புடன் தாய் சென்று மகனை அழைத்து வந்தார். சொறி குழந்தை பிறக்கேக்குள்ளையே செத்துத்தான் பிறந்தது. ஒருக்கா வடிவாப் பிள்ளையைப் பாருங்கோ. தாய்க்கு மயக்கம் தெளியமுதல் பிள்ளையை எடுத்துக் கொண்டுபோய்விட வேண்டும்  என்றுவிட்டு மருத்துவர் அகல..  

“அளவெட்டிக் காறியின்ர பிள்ளையையும் கலைப்பிச்சு அவளைக் கைகழுவி விட்டதுக்குத் தான்ரா உனக்கு உந்தத் தண்டனை கிடைச்சிருக்கு” தாய் கூறப் பதட்டத்துடன் “வாயை மூடெணை” எனத் தாயை உறுக்கியவன் வதனா கேட்டிருப்பாளோ என்று துணுக்குற்றான்.

தாய் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்ல வதனா என்று மெதுவாகக் கூப்பிட்டான். அவளுக்கு எல்லாமே நன்றாகக் கேட்டதுதான். ஆயினும் கண்களை தொடர்ந்தும் மூடியபடி மயக்கத்தில் இருப்பதுபோல் இருந்தாள். மனதில் எழுந்த வெறுமையும் ஏக்கமும் கவலையும் கண்ணீராக மூடிய கண்களினூடாக வழிந்தபடி இருக்க எதுவும் செய்வதற்று தொய்ந்துபோய்க் கிடந்தாள் வதானா.

அவன் சிறிது நேரத்தில் அப்பால் செல்ல வெடிக்கும் மனதுடன் அசையாது கிடந்த குழந்தையை எடுத்து நெஞ்சோடு அணைக்கவேண்டும்போல் இருக்க மெதுவாகக் கைகளை ஊன்றியபடி எழும்ப எத்தனிக்க, அதற்குள் பெண் தாதியும் அவனின் தாயாரும் உள்ளே வந்து அவளை எழும்பவேண்டாம் என எச்சரித்துவிட்டு பிள்ளையை இவளுக்குக் காட்டிவிட்டு உடனே வெளியே கொண்டுசெல்ல எப்படித் தன் கவலையை வெளிப்படுத்துவது என்று கூடத் தெரியாமல் படுத்துக்கிடந்தாள் வதனா.   

குழந்தை அதுவும் ஆண்குழந்தை இறந்துவிட்டது அனைவருக்கும் மிகக் கவலையாக இருக்க இந்திரனுக்கு நரக வேதனையாக இருந்தது. அவளை எங்களோடை அனுப்பியிருந்தால் இப்பிடி நடந்திருக்காது என்று ஏசிவிட்டு அவளை வைத்தியசாலையிலிருந்தே தன்னுடன் சின்னக்கா கூட்டிச் சென்றாள். மனதிலை கவலையளை வச்சிருக்காமல் இணக்கை ஏந்தாலும் வடிவா அழுதிடு என்று அவளுக்கு ஆறுதல் கூறி அவளை நன்றாகத் தேற்றி ஒரு மாதம் சென்றபிறகே இந்திரனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

வதானாவைக் கண்டதும்தான் இந்திரனுக்கு உயிர் வந்தது போல இருந்தது. வதானாவுக்கு எதுவுமே சொல்லாமலேயே அதது அவனுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. “எங்கிருந்தோ வந்தாள். எனக்காகவே வந்தாள்” என்றுதான் அவள் இவனுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்யும்போதெல்லாம் இந்திரன் எண்ணிக்கொள்வதுண்டு.

அவள் இல்லாமல் தாய் வைத்துக் கொடுத்த சுரணைகெட்ட தேனீரும் உணவுகளும் அயன் செய்யாத ஆடைகளும் எல்லாமே அவளின் அருமையை உணரவைத்தன.

உடையவன் உழைத்தால் தான் தோட்டமும் தொழிலும். இந்திரனுக்கு மண்வெட்டி பிடித்து வாய்க்காலில் நீர் கட்டக்கூடத் தெரியாமல் இருந்தது. எல்லாத்துக்கும் கூலிக்கு ஆள் வைத்து விவசாயம் செய்ததில் பெரு நட்டமே ஏற்பட்டது. வதானாவின் நகைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்க் காணாமல் போயின. அடுத்த ஆண்டிலேயே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து மூக்கும் முழியுமாக எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இரண்டு ஆண்டுகளின் பின்னர் இன்னொரு பெண் குழந்தை. அவர்கள் எல்லாம் ஆண்பிள்ளைகள் என்றதாலோ அல்லது முதல் முதல் வதானாவுக்குப் பிறந்தது ஆண் குழந்தை என்பதாலோ என்னவோ இந்திரனோ தாயோ கூட ஆண் குழந்தை என்ற பெயரை மறந்துபோயும் உச்சரிப்பதுமில்லை. ஆண் பிள்ளைக்கு ஆசைப்பட்டதும் இல்லை.

பிள்ளைகள் வளர வளர பணம் தேவைப்பட “உவ்வளவு காணிகளை வச்சு என்ன செய்யப்போறம்” என்று சில நிலங்களையும் அப்பப்ப விற்றுக்  குடும்பத்தை நடத்தினாலும் எந்தவிதக் குற்ற உணர்வும் இந்திரனுக்கு ஏற்பட்டதே இல்லை. 

அதன் பிறகும் இந்திரன் சில நாவல்களை எழுதினான்தான். ஒரு நாவலுக்கு சாகித்திய விருதும் கிடைத்ததுதான். ஆனால் அதனால் கிடைத்த சொற்ப வருமானம் அவரின் குடும்பத்துக்குப் போதுமானதாக இருக்கவில்லை. மண்வெட்டி எடுத்துத் தோட்டம் கொத்தவோ வேறு வேலை செய்யவோ இந்திரனால் முடியாதது அவன் குற்றமா என்ன? சிறுவயதில் இருந்தே எனக்குப் பொறுப்பைப் பழக்கியிருக்க வேணும். பிழை விட்டது அம்மாவும் அப்பரும் தான். இன்னும் காணியள்  கிடக்குத்தானே. பார்த்துக்கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டான்.

அப்பப்ப இவனின் கதைகளை வாசித்த பல்கலைக் கழக மாணவர்கள் இவனை வந்து பார்த்துச் செல்கிறார்கள். அவர்களுடன் பலவிடயங்களையும் விவாதிக்குமளவு பொது விடயங்களையெல்லாம் கரைத்துக்குடித்து வைத்திருந்தான் இந்திரன். வதானாவுக்கு இவர் வேலை எதுவும் செய்யாது திண்ணையில் இருந்து விவாதிப்பது எரிச்சல் கொடுத்தாலும் பெருமையாகவும் இருந்ததுதான். எனக்கு அந்தளவு அறிவு இல்லை. விஷயமில்லாமலோ அவரைத் தேடி வரீனம் என தமக்கையாருடன் கதைக்கும் போது கூறுவதை தமக்கையோ சிரித்தபடி கேட்டுக்கொண்டிருப்பாளேயன்றி தங்கையின் மனதைப் புண்படுத்தக் கூடாது என எதிர்மறையாகக் கதைத்ததில்லை..

வதானா வெறுங்கையுடன் வந்ததைப் பொறுக்க முடியாமல் தன் காப்புகளில் ஒரு சோடியை வேண்டாம் என்று சொன்ன தங்கைக்குப் போட்டே அனுப்பினாள். எக்காரணம் கொண்டும் இதை உன்ர கையைவிட்டுக் கழட்டவே கூடாது என்றும் சத்தியம் வாங்கிக்கொண்டும் தான் இவளை அனுப்பினாள்.

ஆனால் அக்காப்பு ஆறு மாதங்களின் பின்னர் அடக்குக் கடைக்குப் போனதையும் அதேபோன்ற கிலிட்டுக் காப்பு ஒன்றைக் கணவன் அவளுக்கு மாற்றிச் செய்து கொடுத்ததையும் அவளும் தெரிந்ததுபோல் இந்திரனுக்குக் காட்டிக்கொள்ளவில்லை. மறந்துபோய்த்தன்னும் தமக்கைக்கு மட்டுமல்ல யாருக்குமே கூறவில்லை.

 

 

*****************************************************

 

 

ஐயர் வந்து கிரியைகள் எல்லாம் முடிந்து பிள்ளைகள் வாய்க்கரிசி போட்டு பேரபிள்ளைகள் எல்லாம் சுற்றி நின்று நெய்ப்பந்தம் பிடித்து முடிய ஊரில் உள்ள பெரியவர்கள் சிலரும் இலக்கிய கர்த்தாக்கள் சிலரும் அவரைப்பற்றி ஆகா ஓகோவென்றெலாம் புகழ, கேட்டுக்கொண்டிருந்த சில உறவினர்களுக்குப் பெரிய இம்சையாக இருந்தது. சிலருக்கோ அட இப்பிடி எல்லாம் கூட நடந்திருக்கா. எங்களுக்குத் தெரியாமல் போட்டுதே இவ்வளவு நாளும் என எண்ணியபடி வாய்பிளந்து கேட்டுக்கொண்டும் இருந்தனர்.  

“இவர் இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் எம்மூரில் பிறந்தது நாம் செய்த பாக்கியம். இத்தனை விரைவில் இவர் மரணமடைந்தது எமக்கெல்லாம் பெரிய இழப்பு” என்று கூறிவிட்டு அமர்ந்தார் ஒருவர்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தேவருக்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல் இருந்தது.

“இவன் எண்பத்தைந்து வயதுவரை இருந்து எழுதினதைத் தவிர என்னத்தைச் சாதிச்சுக் கிழிச்சான் என்று இன்னும் இருந்திருக்க வேண்டும் என்று உப்பிடிக்க கதைக்கிறாங்கள்”

“பிள்ளையளுக்கும் பெண்டிலுக்கும் சோறு போட்டதும், உடம்பை வளர்த்ததும், பிள்ளையளைக் கலியாணம் கட்டிக் குடுத்ததும் தகப்பன் சேர்த்து வச்ச சொத்துக்களை விற்றுத்தான்” இவர் மனதில் எண்ணி முடிய முதல் அடுத்தவர் ஆரம்பித்துவிட்டார்.

“இவரைப்போல ஒருவரை நான் இதுவரை காணவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிடைத்த அரசாங்க வேலையைக் கூட வேண்டாம் என்று கூறிவிட்டு இந்த மண்ணுக்காக உழைக்கவேண்டும் என்று தோட்டம் செய்து உழைத்துச் சாப்பிட்ட உழைப்பாளி இவர்”

“எடேய்.. செத்தவீட்டில ஒருத்தரும் வந்து சொல்ல மாட்டினம் எண்டு இப்பிடி எல்லாமா புழுகுவியள். தோட்டத்தைப் பாக்கிறன் எண்டு தோட்டத்துக்குப் பக்கத்தில இருந்த சுகுணாவைப் பார்க்கப் போறது உவங்களுக்குத் தெரியாது போல” மனதுள் எண்ணியவுடனேயே இவருக்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல இருந்ததை அடக்கிக்கொண்டார்.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வேலை அரச வேலையோ இல்லையோ எண்டு இவருக்கு இப்ப சந்தேகம் வந்தது. “இப்ப கோதாரி ஆரிட்டைக் கேட்கமுடியும்” என்று தன்மனதை அடக்கிக் கொண்டார்.

எண்டாலும் உந்தக் கொறோனாக் கட்டுப்பாடுகள் தளர்த்தின பிறகு செத்ததால ஊரிப்பட்ட சனம். ஒரு இருநூறு முன்னூறு பேராவது இருக்கும். இரண்டு கிழமைக்கு முதல் செத்த பாக்கியத்துக்கு இருபது பேர் கூடப் போகேல்லையாம். பாடை கட்டவும் ஆட்கள் வரேல்லை. ஐயரும் பயத்தில போகாமல் ஒரு இருபது பேரோடை வானிலதான் கொண்டு போய் எரிச்சதெண்டு இவரை வருத்தம் பார்க்க வந்த கந்தசாமி சொன்னவன்.

பெரிய வடிவான பாடைகட்டி தென்னோலையெல்லாம் பின்னி, பூமாலை எல்லாம் கட்டி பார்க்கவே அழகாய்த்தான் இருக்கு. எனக்கே ஏறிப் போய்ப் படுக்கவேணும் போல இருக்கு என்று எண்ணித் தன்பாட்டில் சிரித்துக்கொண்டார் தேவர்.

திடீரென பெருங் குரலெடுத்து எல்லோரும் அழுகின்றார்கள். திடுக்கிட்ட தேவர் என்ன நடக்குது என்று நினைவுகளைத் தள்ளிவிட்டுப் பார்க்கிறார். சவப்பெட்டியை மூடுகிறார்கள். மூடவிடாது பிள்ளைகளும் மனைவியும் பிடித்துக்கொண்டு கத்த, அவர்களை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக மூடியபின் உரித்துடையவர்கள் ஆறுபேர் நான் முந்தி நீ முந்தி என தள்ளுப்பட்டு அவரின் பிரேதப் பெட்டியைக் கொண்டுபோய் பாடையில் வைத்துவிட்டு தூக்கிக்கொண்டு போகிறார்கள்.

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் 

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண்  டாடாண்டு டண் டண்

மேளச் சத்தம் காதைப் பிளக்கும்படி இருக்கிறது. தேவரின் எரிச்சல் அதிகரிக்கப் பாடை நகர்ந்தபடி இருக்கின்றது.

“என்றாலும் நான் குடுத்துவைத்துத்தான் பிறந்திருக்கிறேன். இத்தனை நாட்கள் இராசா மாதிரி இருந்தேன். எந்தக் குறையும் இல்லாமல் மனைவி பிள்ளைகள் பார்த்துக்கொண்டார்கள். இறந்தபின்னும் சிறப்பாகப் பாடைகட்டி இத்தனைபேர் பின்தொடரச் செல்கிறேனே. பாவம் சந்திரவதனா நானில்லாமல் என்ன செய்யப்போறாளோ. என்னோடை அவளையும் கூட்டிக்கொண்டு போனால் எவ்வளவு நல்லாய் இருக்கும்” என்று எண்ணியபோதே உடலெங்கும் விசுக்கென இழுபட, தன் செத்தவீட்டை இத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்த இந்திரன், தேவர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட தெய்வேந்திரத் தேவரின் உயிர், மிகுதி இறுதி ஊர்வல நிகழ்வைப் பார்க்க முடியாதவாறு எங்கோ வேகமாக இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.    

 

 

முடிந்தது.  

 

 

 

 

                

         

 • Like 10
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பம் என்றால் ஒரு புத்தகமே இருக்கு.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 அழகாக சொல்லப்படட கதை . கிராமத்து நினைவுகளோடு  பழைய வாழ்வியலும் சேர்ந்து நன்றாக எழுதியுள்ளீர்கள்." தெய்வ இந்திரா தேவர் "...பாராட்டுக்கள் . ஒரே மூச்சில் வாசித்தேன். அருமை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது கதை......எல்லா வசதியான இடங்களிலும் மூத்த பிள்ளை ஆண் என்றால் செல்லம் குடுத்தே பழுதாக்கி விடுவார்கள்......இந்திரனும் அதற்கு விதிவிலக்கல்ல.......!   👍

நன்றி சகோதரி......!  

Link to comment
Share on other sites

6 hours ago, ஈழப்பிரியன் said:

வாசிப்பம் என்றால் ஒரு புத்தகமே இருக்கு.

பரவாயில்லை. ஆறுதலாக வாசியுங்கள் அண்ணா.

2 hours ago, நிலாமதி said:

 அழகாக சொல்லப்படட கதை . கிராமத்து நினைவுகளோடு  பழைய வாழ்வியலும் சேர்ந்து நன்றாக எழுதியுள்ளீர்கள்." தெய்வ இந்திரா தேவர் "...பாராட்டுக்கள் . ஒரே மூச்சில் வாசித்தேன். அருமை. 

நன்றி அக்கா

1 hour ago, suvy said:

நன்றாக இருக்கின்றது கதை......எல்லா வசதியான இடங்களிலும் மூத்த பிள்ளை ஆண் என்றால் செல்லம் குடுத்தே பழுதாக்கி விடுவார்கள்......இந்திரனும் அதற்கு விதிவிலக்கல்ல.......!   👍

நன்றி சகோதரி......!  

மிக்க நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்லப்பட்ட விதம் மிகவும் அழகு...!

ஒரு கிராமத்தின் வாழ்வு அப்படியே கதையில் பிரதிபலிக்கப் படுகின்றது!

பற மேளம் கூட வழக்கொழிந்து போகின்றது என்பதை இந்தக் கதை மூலம் தான் அறிந்து கொண்டேன்!

வாழ்த்துக்கள் சுமே...!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெரிய வடிவான பாடைகட்டி தென்னோலையெல்லாம் பின்னி, பூமாலை எல்லாம் கட்டி பார்க்கவே அழகாய்த்தான் இருக்கு. எனக்கே ஏறிப் போய்ப் படுக்கவேணும் போல இருக்கு என்று எண்ணித் தன்பாட்டில் சிரித்துக்கொண்டார் செல்லர்

தேவரா? செல்லரா? நல்ல கிராமத்துக் கதை , வாழ்த்துக்கள் அன்ரி

Link to comment
Share on other sites

3 hours ago, புங்கையூரன் said:

கதை சொல்லப்பட்ட விதம் மிகவும் அழகு...!

ஒரு கிராமத்தின் வாழ்வு அப்படியே கதையில் பிரதிபலிக்கப் படுகின்றது!

பற மேளம் கூட வழக்கொழிந்து போகின்றது என்பதை இந்தக் கதை மூலம் தான் அறிந்து கொண்டேன்!

வாழ்த்துக்கள் சுமே...!

மிக்க நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.

3 hours ago, வாதவூரான் said:

தேவரா? செல்லரா? நல்ல கிராமத்துக் கதை , வாழ்த்துக்கள் அன்ரி

அடடா தவறு நேர்ந்துவிட்டதா. திருத்தவும் வழியில்லை. நன்றி வரவுக்கு.

Link to comment
Share on other sites

பச்சைகளை வழங்கிய ஏராளன், நிலாமதியக்கா, யாயினி, புங்கையூரன், குமாரசாமி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

நான் எழுதிய கதைகளில் எனக்குத் திருப்தியைத் தந்த கதை இது. ஆனால் குறைவானவர்களால் பார்க்கப்பட்டும் , கருத்து எழுதப்பட்டுமிருப்பதுவும் இதுதான். விந்தை மனிதர்கள் 😀

Link to comment
Share on other sites

கிராமிய மணம் வீச அற்புதமான கிராமிய மொழிநடையில் எழுதப்பட்ட கதை அருமை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல படைப்பை பார்த்த திருப்தி. வாழ்த்துகள் தோழி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்ரியின்ரை கதை வாசிக்கிறதெண்டால் ஒரு நாள் லீவு எடுக்கவேணும். பாப்பம் வாற கிழமை. 😎

Link to comment
Share on other sites

மிக நீண்டதாக இருந்தாலும் அருமையாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் அக்கா.

பறை அடிப்பவர்கள் அடிக்காமல் விட்டதால் தான் அது இல்லாமல் போனது என்று கேள்விப்பட்டேன். உண்மையா??

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
On 22/1/2022 at 22:54, nige said:

கிராமிய மணம் வீச அற்புதமான கிராமிய மொழிநடையில் எழுதப்பட்ட கதை அருமை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல படைப்பை பார்த்த திருப்தி. வாழ்த்துகள் தோழி

மிக்க நன்றி சகோதரி.

On 23/1/2022 at 00:10, குமாரசாமி said:

அன்ரியின்ரை கதை வாசிக்கிறதெண்டால் ஒரு நாள் லீவு எடுக்கவேணும். பாப்பம் வாற கிழமை. 😎

உங்களுக்கும் அன்ரியோ. தாங்கள் இளசுகள் எந்த நினைப்பு. வயசு போனதால வாசிக்க முடியேல்லை எண்டு ஒத்துக்கொள்ளுங்கோ😀

Link to comment
Share on other sites

On 23/1/2022 at 02:20, nunavilan said:

மிக நீண்டதாக இருந்தாலும் அருமையாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் அக்கா.

பறை அடிப்பவர்கள் அடிக்காமல் விட்டதால் தான் அது இல்லாமல் போனது என்று கேள்விப்பட்டேன். உண்மையா??

மிக்க நன்றி நுணா. அடிப்பவர்களும் குறைந்துவிட்டனர் தான். ஆனாலும் அதை ஒரு களையாகப் பார்க்காது சாதீய முத்திரை குத்தியதாலும் அதைப் பழகுபவர்கள் குறைவு. நான் என் உறவினர் ஒருவரின் மரண நிகழ்வில் லைவ்வில் பார்த்த பறை மேல அடியை வைத்தே எழுதினேன். எனக்குச் சகிக்கவே முடியாமல் போய்விட்டது.

தற்போது லவந்தனில் பலரும் சீக்கிய மக்களின்  றபான்என்று சொல்லப்படும் மேளத்தை திருமண,மற்றும் மங்கள நிகழ்வுகளுக்கும் பிடிக்கின்றனர். ஆனால் அவர்கள் அடிப்பதும் பறை மேள  இசை போலத்தான். எம்மவர்க்கு இப்போது எதை எதை எப்போது செய்யவேண்டும் என்பதுக்கூட மறந்துவிடுகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கும் அன்ரியோ. தாங்கள் இளசுகள் எந்த நினைப்பு. வயசு போனதால வாசிக்க முடியேல்லை எண்டு ஒத்துக்கொள்ளுங்கோ😀

யூத்ஸ் எல்லாம் போறாமைப்படுற அளவுக்குத்தான் நாங்கள் இருக்கிறமாக்கும்..:cool:

என்ன ஒண்டு நான் இன்னும் இந்த கதையை வாசிக்கேல்லை 😊

Link to comment
Share on other sites

14 minutes ago, குமாரசாமி said:

யூத்ஸ் எல்லாம் போறாமைப்படுற அளவுக்குத்தான் நாங்கள் இருக்கிறமாக்கும்..:cool:

என்ன ஒண்டு நான் இன்னும் இந்த கதையை வாசிக்கேல்லை 😊

கெதியா வாசிச்சிட்டு கருத்தைச் சொல்லுங்கோ 😀

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

கதையை யாரையோ மனதில வைச்சு எழுதியிருக்கிறா சுமே ஆன்ரி..😁

அரச இலக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் பொறாமைகொண்டவரா?😬

 

Link to comment
Share on other sites

On 21/2/2022 at 19:06, கிருபன் said:

கதையை யாரையோ மனதில வைச்சு எழுதியிருக்கிறா சுமே ஆன்ரி..😁

அரச இலக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் பொறாமைகொண்டவரா?😬

 

ஒருவரை மனதில் வைத்தே தான் எழுதினேன். ஆனால் நீங்கள் கூறிய ஆட்களில்லை. 😀

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.