Jump to content

ஸ்டாலினின் ’ஜனவரி 26’ திட்டம்!: தேதி கொடுத்த அமித் ஷா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினின் ’ஜனவரி 26’ திட்டம்!: தேதி கொடுத்த அமித் ஷா

spacer.png
 

நீட் விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் குழுவை சந்திப்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இசைவு தெரிவித்துவிட்டார். வரும் ஜனவரி 17 ஆம் தேதியன்று தமிழக எம்பிக்கள் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்கிறார்.

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட நீட் விலக்கு சட்ட மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த மசோதா ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை.

இதுகுறித்து மாநில மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியன்று நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார்.ஆனபோதும் ஆளுநரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் இதுகுறித்து குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முறையிட முடிவெடுத்து அதற்காக திமுக, காங்கிரஸ், அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏழு எம்பிக்கள் திமுக மக்களவை குழுத் தலைவர் டி. ஆர்.பாலு தலைமையில் முயற்சித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் செல்வராஜ், முஸ்லிம் லீக் உறுப்பினர் நவாஸ் கனி, காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார், அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்ற இந்த குழுவினர், டிசம்பர் கடைசி வாரத்தில் டெல்லி சென்றனர்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் குடியரசுத் தலைவரைச் சந்திக்க முடியாமல், தங்களது கோரிக்கை மனுக்களைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அவரது செயலாளரிடம் கொடுத்தனர்

இதுதொடர்பாக டிசம்பர் 30 ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய, கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் தரப்பிடம் கொடுக்கப்பட்ட பிறகு அன்று இரவே பதில் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், இதன் மற்றொரு நகல் உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக எனது இல்லத்தில் நேற்று காத்திருந்தோம். ஆனால் உத்தரப் பிரதேசத்திலிருந்து அவரது உதவியாளர் தொடர்புகொண்டு திட்டமிட்ட 12 மணிக்கு வராதீர்கள். வேறு ஒரு நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் நேரம் எதுவும் சொல்லவில்லை. அன்று இரவு 9.15 மணி வரை காத்திருந்தோம். பின்னர் இருமுறை வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினோம். ஆனால் இதற்கு இதுவரை பதில் இல்லை. எப்போது சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குவார் என தெரியவில்லை.

உள்துறை அமைச்சருக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம். ஏனென்றால் நானும் அமைச்சராக இருந்திருக்கிறேன். ஆனால் தேதி இல்லை என்றோ, நேரம் இல்லை என்றோ சொல்ல முடியாது. அவர் சாதாரண ஆள் இல்லை. திறமையானவர். மாநில அரசின் கோரிக்கையை அவரிடம் வலியுறுத்தத் தேதி கொடுப்பார். அவரை சந்திக்கத் தேதி கேட்டு மெயில் அனுப்பியுள்ளோம்”என்று குறிப்பிட்டார்.

அதன் பின் டெல்லியில் இருந்து சென்னை வந்த திமுக எம்பிக்கள் தங்கள் கட்சித் தலைவரான முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது அவர்கள் ஸ்டாலினிடம் முக்கியமான ஒரு கோரிக்கையை முன் வைத்தனர்.

’டெல்லியின் சிறப்பே கட்சிப் பாகுபாடின்றி தனி ஒரு எம்பி கூட ஒன்றிய அமைச்சர்களிடம் நேரம் கேட்டு சென்று பார்க்க முடியும். அதிலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான திமுகவுக்கு அந்த உரிமையும் பொறுப்பும் இன்னும் அதிகமாகவே உள்ளது. ஆனால் நம்மாலேயே உள்துறை அமைச்சரை சந்திக்க முடியவில்லை என்பது டெல்லியில் நமக்கு இமேஜ் குறைவை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச தேர்தலுக்காக விடிய விடிய ஆலோசனைகளை நடத்தும் அமித் ஷா இந்தியாவில் முக்கியமான உற்பத்தி மாநிலமாக விளங்கக் கூடிய தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவை சந்திக்க மறுப்பது என்பது குரூரமான அரசியலாக இருக்கிறது. இதற்கு நாம் நிச்சயம் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்.

வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. வழக்கமாக மெரினா கடற்கரையில் நடக்கும் குடியரசு தினத்தில் பங்கேற்று ஆளுநர்தான் கொடியேற்றுவார். இந்த முறை அந்த மரபை நாம் உடைப்போம். நீங்களே (ஸ்டாலின்) மாநில முதல்வர் என்ற முறையில் கொடியேற்றுங்கள். ஆளுநரை நாம் அந்த விழாவுக்கு அழைக்க வேண்டாம். அவர் ஆளுநர் மாளிகையில் தனியாக கொடியேற்றிக் கொள்ளட்டும்.

இது முன்பு நடக்காத நடைமுறை அல்ல. ஜெயலலிதா தனது 91-96 முதல் ஆட்சி காலத்தில் ஆளுநராக சென்னா ரெட்டி இருந்தபோது அவரை குடியரசு தினத்துக்கு அழைக்காமல் தானே முதல்வராக இருந்து கொடியேற்றியிருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்தான் குடியரசு தின கொடியேற்றினார். அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிர மாநிலத்தின் முழு நேர ஆளுநராக இருந்தார். அதனால் அவர் ஜனவரி 26 ஆம் தேதி கொடியேற்ற மும்பைக்கு சென்றுவிட்டார். ஆளுநர் வரவில்லை என்பதால் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்து கொடியேற்றினார்.

ஜெயலலிதா ஆளுநருடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் போக்கினால் குடியரசு தின விழாவுக்கு ஆளுநரை அழைக்காமல் தானே தேசியக் கொடியை ஏற்றினார். ஓ.பன்னீர் செல்வம் ஆளுநர் வராததால் ஜனவரி 26 ஆம் தேத் தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால் இப்போது நாம் அப்படி அல்ல, தமிழ்நாட்டின் உரிமைக்காக மாநிலத்தின் சட்டமன்றத்தின் இறையாண்மைக்காக குடியரசு விழாவை நாமே நடத்துவோம். ஆளுநரை அழைக்காமல் முதல்வரே கொடியேற்றினீர்கள் என்றால் இந்தியா முழுதும் இது பேசப்படும்’என்று முதல்வரிடம் யோசனை தெரிவித்திருக்கிறார்கள். தன் மீசையை சொரிந்தபடி முதல்வர் இதை ஆர்வமாகக் கேட்டுவிட்டு, ‘இதுபத்தி நாம யோசிப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதன் பிறகுதான் சட்டமன்றத்தில். ‘தமிழக எம்பிக்களை சந்திக்காத ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் போக்கு ஜனநாயகத்துக்கு எதிரானது’ என்று கடுமையாக சாடினார் முதல்வர். அதன் பின் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, அதில்... ’ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் நாம் ஏற்கெனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க அவரிடமிருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத்து கட்சிகளின் சார்பில் அவரை சந்திக்கலாம்’என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அழைக்காமல் முதல்வரே கொடியேற்றுவது என்ற தமிழகத்தில் நடந்த ஆலோசனைகள் உளவுத்துறை மூலமாக டெல்லிக்கும் சென்றிருக்கிறது. மேலும், ‘நீட் தேர்வில் பாஜகவுக்கு ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதேநேரம் எம்பிக்கள் குழுவினரை சந்திக்க மறுப்பது என்பது தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான அரசியலை மேலும் கூர்மைப்படுத்துவதாக இருக்கிறது’ என்றும் தகவல்கள் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளன.

இந்த நிலையில்தான் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அழைத்து தமிழக எம்பிக்களை சந்திக்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படியே வரும் 17ஆம் தேதி இந்த சந்திப்பு நடக்கிறது.

அமித் ஷாவை சந்திக்கும் குழுவில் இடபெற்றுள்ள காங்கிரஸ் எம்பி ஜெயக்குமாரிடம் நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஆமாம் சார். தமிழக எம்பிக்கள் குழுவை சந்திக்க வரும் 17 ஆம் தேதி உள்துறை அமைச்சர் தேதி கொடுத்திருப்பதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது’ என்று கூறினார்.

அமித் ஷா தமிழக எம்.பிக்களை சந்திக்க தேதி கொடுத்துவிட்டாலும்... குடியரசுதின விழாவில் ஆளுநரை அழைக்காமல் தானே கொடியேற்றலாமா என்ற திட்டம் முதல்வரின் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் திமுக மூத்த முன்னோடிகள்.

 

https://minnambalam.com/politics/2022/01/11/28/stalin-republic-day-plan-amit sha-meet-tamilnadu-mps-neet

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.