Jump to content

குரங்கு பிடிக்க முயன்ற ரெலோ; திட்டத்தை மாற்றிய தமிழரசுக் கட்சி!


Recommended Posts

குரங்கு பிடிக்க முயன்ற ரெலோ; திட்டத்தை மாற்றிய தமிழரசுக் கட்சி!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆரம்பித்த தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு கோரிக்கைக் கடிதம் எழுதும் முயற்சி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றது. கடந்த வருடத்தின் இறுதி மாதங்களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த இந்தப் பயணம், அடுத்த வாரமளவில் கோரிக்கைக் கடிதத்தை இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பதோடு முடிவுக்கு வரும்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தினை இலங்கைக்கு இந்தியா வழங்கக் கோரும் கடிதத்தைத் தயாரிக்கும் முயற்சியையே தமிழ் பேசும் கட்சிகளை இணைத்துக் கொண்டு ரெலோ முன்னெடுக்க நினைத்தது. அந்தச் சந்திப்புக்கு ரவூப் ஹக்கீமையும், மனோ கணேசனையும் அழைத்துவர முடிந்த ரெலோவால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு பங்காளிக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவை அழைத்துவர முடியவில்லை. இது ஆரம்பத்திலேயே அந்த முயற்சிக்கான பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அத்தோடு, 13வது திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக இறுதி செய்யும் வேலையை ரெலோ முன்னெடுப்பதாக விமர்சனமும் எழுந்தது. 

இந்த இரு விடயங்களையும் கையாள வேண்டுமாயின் கூட்டமைப்பின் தலைமையும், தமிழரசுக் கட்சியின் தலைமையையும் எப்படியாவது தன்னுடைய முயற்சிகளின் பங்காளிகளாக மாற்றிக் கொள்ள வேண்டிய அழுத்தம் ரெலோவுக்கு ஏற்பட்டது. அதனை, ஹக்கீமையும், மனோ கணேசனையும் முன்னிறுத்தி கடந்துவிடலாம் என்று ரெலோவின் சார்பில் இந்த முயற்சிகளை முன்னெடுத்த  செல்வம் அடைக்கலநாதனும், குருசாமி சுரேந்திரனும் கருதினர். அதனால், முதலாவது சந்திப்பில் உரையாடப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்தி எதிர்காலத்தில் இந்த முயற்சிகளில் பங்களிக்கக் கோரும் அழைப்பினை ஹக்கீமையும் மனோ கணேசனையும் கொண்டு சம்பந்தனிடம் விடுத்தார்கள். அது வெற்றியளிக்கவும் செய்தது. ஆனால், கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பிலும் தமிழரசுக் கட்சியின் தலைவரோ, அவரது பிரதிநிதியோ கலந்து கொண்டிருக்கவில்லை. இந்தியப் பிரதமருக்கு தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் எழுதும் கோரிக்கைக் கடிதத்தில் தமிழ் மக்களின் பிரதான கட்சியின் தலைவர் கையெழுத்திடவில்லை என்றால், அந்தக் கடிதம் இயல்பாகவே வலுவிழக்கும் என்பது வெளிப்படையானது. அதனால், தமிழரசுக் கட்சியைத் தவிர்த்துவிட்டு கடிதமொன்றை அனுப்ப எடுக்கும் முயற்சிகளை இந்தியாவேகூட விரும்பாது. அது, ரெலோவுக்கும் தெரியும். அதனால்தான், தமிழரசுக் கட்சியின் தலைவர்களுடனான தன்முனைப்பு (ஈகோ) மோதல்களையெல்லாம் விடுத்து ரெலோ முழுவதுமாக இறங்கிச் செல்லவேண்டி வந்தது.

ரெலோவின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சி அதிருப்தி கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பின் ஏகபோகம் என்பது தன்னிடம் மாத்திரமே இருக்க வேண்டும் என்பது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு. ஆனால், கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னரான நாட்களில், கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி செலுத்தி வரும் ஏகபோக நிலையை கேள்விக்குள்ளாக்கும் வேலைகளை ரெலோ ஆரம்பித்திருக்கின்றது. குறிப்பாக, கூட்டமைப்பில் தற்போதுள்ள பங்காளிக் கட்சிகளில் ரெலோ  மாத்திரமே ஸ்தாபக் கட்சி என்கிற உரையாடலை செல்வமும் சுரேந்திரனும் ஊடகங்களிடம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தனர். சம்பந்தனின் காலத்துக்குப் பின்னராக கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கோரும் முயற்சியாக அது பார்க்கப்பட்டது. அத்தோடு, கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது, அதன் மூலம் சம்பந்தனின் காலத்துக்குப் பின்னரான கூட்டமைப்பில் கூட்டுத் தலைமை என்கிற விடயம் பேணப்பட வேண்டும் என்று ரெலோ பேச ஆரம்பித்தது. அதன் போக்கிலும்தான், தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இணைத்துக் கொண்டு இந்தியாவுக்கு கோரிக்கைக் கடிதத்தை தயாரிக்கும் வேலைகளை ரெலோ முன்னெடுத்தது. 

வழக்கமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தயாரிக்கப்படும் கோரிக்கைக் கடிதங்கள், அறிக்கைகள், தீர்மானங்கள் என்று அனைத்து விடயங்களும் கூட்டமைப்பின் தலைமையினாலேயே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் தலைமை என்பது கடந்த ஒரு தசாப்த காலத்தில் சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் என்கிற நிலைக்குள் சென்றுவிட்டது.  அதற்கு மேலதிகமாக தமிழரசுக் கட்சி மாத்திரமே கூட்டமைப்புக்குள் தாக்கம் செலுத்தியது. இவர்களின் தீர்மானங்களை அங்கீகரிப்பதுதான் பங்காளிக் கட்சித் தலைவர்களின் வேலை என்றாகிவிட்டது. இந்த நிலையிலிருந்து வெளியேறி, தங்களை ஆளுமைமிக்க தலைமையாக முன்னிறுத்தும் அவசியம் ரெலோவுக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஒரு கட்சியாகவோ, கட்சித் தலைமையாகவோ அது தவறில்லை. அதுவும், கடந்த பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குப் பிறகு அதிக ஆசனங்களை வெற்றி கொண்ட தமிழ்த் தேசியக் கட்சியாக ரெலோ இருக்கின்றது. ஆனால், தமிழ்த் தேசியப் பரப்பில் முதன்மைக் கட்சியாக அல்லது தீர்மானிக்கும் கட்சியாக தன்னை தயார்ப்படுத்துவதற்கு தேர்ந்தெடுத்த வழிமுறைதான் ரெலோவை கூட்டமைப்பின் அனைத்து ஆணைகளுக்கும் தலையாட்டும் கட்சிதான் என்ற கட்டத்தில் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. 

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தையோ மாகாண சபையையோ தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக எந்தவொரு தமிழ்த் தேசியக் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவின் ஏவல் தரப்பாக இயங்கிய ஈபிஆர்எல்எப்பும்  கூட, மாகாண சபை முறைமை தமிழ் மக்களுக்கு தீர்வில்லை என்று அறிவித்திருக்கின்றது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள், முதலமைச்சர் பதவியை துறந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த போதே அதனை வெளிப்படையாக அறிவித்தார். அப்படியான நிலையில், 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தும் கோரிக்கையை பிரதான விடயமாக்கியதுதான், ரெலோவின் முயற்சிகளின் தோல்விக்கு காரணம். அது இந்த முயற்சியின் பின்னணி தொடர்பில் இன்னமும் சந்தேகம் எழுப்பப்படுவதற்கும் ஏதுகையாக அமைந்தது. 

ரெலோவின் சந்திப்புக்களில் சம்பந்தன் பங்கெடுத்த போதே அது, ரெலோவின் பிடியிலிருந்து விடுபட ஆரம்பித்தது. மூன்றாவது சந்திப்பில் தமிழரசுக் கட்சி கலந்து கொண்ட போது, அந்தக் கட்சி முழுமையான ஆவணமொன்றை கொண்டு வந்தது. அதற்கும் ரெலோ தயாரித்த ஆவணத்திற்கும் பாரிய இடைவெளி காணப்பட்டது. வடக்கு கிழக்கிற்கு வெளியில் இருக்கும் தமிழ்க் கட்சிகளுக்காகவும், முஸ்லிம் கட்சிகளுக்காகவும் சமஷ்டி, சுயநிர்ணயம் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்து தமிழரசுக் கட்சி கோரிக்கை ஆவணத்தை தயாரிக்க இணங்கிய போதும், 13வது திருத்தத்தை பிரதானப்படுத்தும் கடிதமாக அது அமையவில்லை. அதனால், மனோ கணேசன், ஹக்கீம் உள்ளிட்டவர்கள் அந்தக் கடிதத்தில் கையெழுத்திடுவதிலிருந்து தங்கள் கட்சிகள், உறுப்பினர்களின் அழுத்தத்தினால் பின்வாங்கினர். அப்படியான நிலையில், ரெலோவின் முயற்சி இறுதியாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கைக் கடிதத்தில் கையெழுத்திடும் நிலைக்குள் சுருங்கியது. மாவை சேனாதிராஜா தவிர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையெழுத்தும் இட்டார்கள். 

கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படவிருந்தது. ஆனால், அதற்கு முன்னால், கடிதத்தின் பிரதி ரெலோவினால் வெளிநாட்டுத் தூதுவராலயங்களுக்கு அனுப்பப்பட்டது. இது, மீண்டும் சிக்கலைத் தோற்றுவித்தது. தமிழரசுக் கட்சியின் தலைவர் ஒப்பமிடுவதற்கு முன்னர், கடிதம் எப்படி வெளிநாட்டுத் தூதுவராலயங்களுக்கு அனுப்பப்பட்டது. அதுவும், யாருக்கு கோரிக்கை விடுக்கப்படுகின்றதோ, அந்தத் தரப்பிடம் கையளிக்கப்படாத கடிதத்தை எப்படி, ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தமிழரசுக் கட்சி விடயத்தை பெரிதாக்கியது. 

இப்படியான இறுதி நேரச் சிக்கல்களை அடுத்து தமிழரசுக் கட்சி மீண்டும் தன்னை முதன்நிலையில் காட்சிப்படுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது. மனோ கணேசனும், ஹக்கீமும் கடிதத்தில் கையெழுத்திட மாட்டார்கள் என்கிற நிலையில், கோரிக்கைக் கடிதத்தில் சமஷ்டி, சுயநிர்ணயம் என்கிற விடயங்களை சேர்ப்போம் என்று  தமிழரசுக் கட்சி வலியுறுத்தியது. தற்போது அந்த விடயங்களுக்கு ஏனைய கட்சிகளும் இணங்கி, புதிய கடிதத்தில் கையெழுத்திட இருக்கிறார்கள். எதிர்வரும் 18ஆம் திகதிக்கு பின்னர், குறித்த கடிதம் இந்தியத் தூதுவரிடம் கையெளிக்கப்படலாம். ரெலோ ஆரம்பித்த விடயம், இறுதியாக தமிழரசுக் கட்சியினதும் சம்பந்தனினதும் தீர்மானங்களோடு முடிவுக்கு வந்திருக்கின்றது. இறுதியாக விடயம் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாறாமல், 13வது திருத்தம் என்ற குரங்கைப் பிடிக்க கிழம்பியவர்களிடம் இருந்து ஒருவாறாக மீட்கப்பட்டு பிள்ளையாருக்கு அண்மித்த ஒரு வடிவம் பிடிக்கப்பட்டிருக்கின்றது. அந்தளவில் தமிழ் மக்கள் ஓரளவுக்கு நிம்மதி கொள்ளலாம். 

நன்றி- புருஜோத்தமன் தங்கமயில்

https://www.facebook.com/100001823568926/posts/6813353358735382/?d=n

-தமிழ்மிரர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ இந்தியா பிள்ளையார் சிலையைக் கரைக்கிறமாதிரிக் கரைக்காமலிருந்தால் சரி.

  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.