Jump to content

ஆவணத்தைப் பெறமுன்னர் இலங்கைக்கான நிதியுதவியை உறுதிப்படுத்தியது இந்தியா


Recommended Posts

 

தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் இருந்து

ஆவணத்தைப் பெறமுன்னர் இலங்கைக்கான நிதியுதவியை உறுதிப்படுத்தியது இந்தியா

திருகோணமலை எண்ணெய்க்குத ஒப்பந்தத்தையடுத்து விரிவடையும் இந்திய- இலங்கை புவிசார் ஒத்துழைப்பு
 
 
main photomain photomain photo
  •  
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் சென்ற வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வியாழக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நேரில் சந்தித்து உறுதிப்படுத்தினார். மோடிக்குக் கடிதம் அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட அன்றைய நாளே தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
 
சிங்கள ஆட்சியாளர்களும் பௌத்த குருமாரும் சிங்கள மக்களில் பெரும்பான்மையோரும் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சியைப் பலப்படுத்தினால், இலங்கையில் தாம் நினைப்பதைச் சாதிக்கலாமென்ற எண்ணக்கருவுடன் அமெரிக்க- இந்திய அரசுகளும் செயற்படுகின்றன என்பதே இங்கு பட்டவர்த்தனம்

 

தமிழ்த்தேசியக் கட்சிகள் தாம் கைச்சாத்திட்ட ஆவணத்தைக் கொழும்பு கொள்பிட்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்கத் தயாராக இருந்தபோது, தூதுவர் கோபால் பாக்லே புதுடில்லிக் சென்றிருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

இதனால் கடிதம் கையளிக்கப்படவில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நல்ல நாள் பார்ப்பதாகவும் இதனாலேயே ஆவணத்தைக் கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டதென்றும் தமிழ் நாளேடுகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தவொரு நிலையில், இலங்கைக்கு தொள்ளாயிரம் மில்லியன் டொலர் வழங்குவது தொடர்பாக கொழும்பில் இந்திய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று இலங்கை மத்திய வங்கிக்கு நேரடியாகச் சென்று ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலைச் சந்தித்து நிதியுதவி வழங்கப்படவுள்ள செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஆனால் 13 இற்கு அப்பால் என்று கூறப்படும் அதிகாரப் பரவலாக்கத்தைக் கோருவதற்காக மோடிக்கு அனுப்பவிருந்த ஆவணத்தைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் இதுவரை கையளிக்கவில்லை.

ஆவணத்தைக் கையளிக்க வாருங்கள் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அதிகாரபூர்வமாக இன்னமும் அழைப்பு விடுக்கவில்லையா அல்லது தமிழ்த்தேசியக் கட்சிகள் அதிகாரபூர்வமாக இதுவரை கேட்கவில்லையா என்பது குறித்து எதுவுமே அறிய முடியவில்லை.

ஆனாலும் ஆவணத்தைப் பெற வேண்டுமென்பதில் கோபால் பாக்லேக்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லையென கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.

இந்த நிலையில், இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள நிதியுதவி தொடர்பான செய்திக்கு கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இலங்கை சமீபகாலமாக எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடியைக் குறைக்க இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்குமெனவும் இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் அந்நிய செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கவுள்ளதாகக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்களும் கூறுகின்றன.

900 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படும் என்பதை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியத் தூதுவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் வர்த்தகச் செயற்பாடுகளில் சிறப்பாகச் செயற்பட்டு வருவதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்தியாவின் நோக்கம் எனவும் இந்திய ஊடகங்கள் விபரிக்கின்றன.

அதேவேளை, மோடியிடம் கையளிக்கவிருந்த ஆவணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று வியாழக்கிழமை வவுனியாவில் தெரிவித்தார்.

 

குற்றச்சாட்டுக்கான முழுப் பொறுப்பையும் தமிழரசுக் கட்சியே ஏற்க வேண்டுமென எந்தவொரு சிவில் சமூக அமைப்புகளும் இதுவரை பகிரங்கப்படுத்தவுமில்லை. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தமிழரசுக் கட்சிக்கு ஒத்தூதுகின்றது

 

மீளப் பெறப்பட முடியாத அதிகாரப் பரவலாக்கல் ஒன்றையே தாம் கோரியுள்ளதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் ஆவணம் மோடியிடம் எப்போது கையளிக்கப்படுமென அவர் எதுவுமே கூறவில்லை.

கொழும்பில் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கூறப்பட்டிருந்த விடயங்கள் குறைக்கப்பட்டு அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமை நீக்கம் செய்யப்பட்டு ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப் பரவலாக்கத்தையே கோரியுள்ளதாக தமிழரசுக் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன.

ஆகவே ஈழத்தமிழர்களின் தேசம், சுயநிர்ணய உரிமை ஆகிய பிரதான அம்சங்கள் முற்றாகவே நீக்கம் செய்யப்படக்கூடியதொரு முறையில், இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குள் 'அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம்' என்ற பெயரில் ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கின்றதா என்று ஏலவே எழுந்த சந்தேகங்கள் மேலும் உறுதிப்படுத்தப்படும் நிலைமையே காணப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிங்கள ஆட்சியாளர்கள் ஏலவே பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடு தற்போது மெல்ல மெல்ல வெளிப்படுவது போலவும் தென்படுகின்றது.

2009 இல் ஏற்பட்டிருந்த புவிசார் அரசியல் போட்டியைப் பயன்படுத்திய இலங்கை ஒற்றையாட்சி அரசு, அமெரிக்கா, இந்தியா. பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற பல நாடுகளிடம் இருந்து பெருமளவு ஆயுதங்களைப் பெற்றுப் பலவீனமாக இருந்த இலங்கை இராணுவத்தைப் பலப்படுத்திப் போரை நடத்தியிருந்தது.

அதன் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்தவொரு சூழலில் ஏற்பட்டுள்ள இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்களைப் பயன்படுத்திப் பொருளாதார நெருக்கடிகளையும் இலங்கை சீர்செய்கின்றது.

அதற்காக ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரங்கள் சர்வதேச அரங்கில் பேசுபொருளாக இருக்கக்கூடாது என்ற நோக்கில் அமெரிக்க- இந்திய அரசுகளுக்கு நிபந்தனைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை விதித்திருக்கின்றது.

குறிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில், மனித உரிமைச் சபையின் ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய்மொழிமூல அறிக்கையில் வெளியிடப்படவுள்ள இலங்கை குறித்த விவகாரங்களைத் தணிக்கை செய்யக்கூடிய முறையிலேயே மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணம் தயாரிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் ஏற்கனவே எழுந்திருந்தன.

தற்போது அந்த சந்தேகங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூற முடியும்.

அதாவது இலங்கை தனக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சீர் செய்வதற்குரிய முறையில் அமெரிக்க- இந்திய அரசுகளைக் கையாள ஈழத்தமிழர் விவகாரத்தை நன்கு பயன்படுத்துகின்றது என்றே கூற வேண்டும்.

இதன் பின்னணிகளை அறிந்து தமிழ் மக்கள் சார்பான நீதியான அரசியல் கோரிக்கைகளை முன்வைக்காமலும், இன அழிப்பு விசாரணைக்கான முக்கியத்துவத்தைக் கொடுக்காமலும், வெறுமனே வல்லரசு நாடுகளுக்கான புவிசார் அரசியல்- பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதும் இலங்கையின் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை நிலை நிறுத்தக்கூடிய முறையிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுக்கான முழுப் பொறுப்பையும் தமிழரசுக் கட்சியே ஏற்க வேண்டுமென எந்தவொரு சிவில் சமூக அமைப்புகளும் இதுவரை பகிரங்கப்படுத்தவுமில்லை. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தமிழரசுக் கட்சிக்கு ஒத்தூதுகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளின் அழிவில் இருந்து தேசியம் என்ற பெயரில் மற்றுமொரு அரசியல் செய்வதற்காக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு காத்திருக்கின்றது.

கொழும்பில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் பலமிழந்துள்ளன. இந்த இரு எதிர்க்கட்சிகளும் மீண்டும் கூட்டுச் சேரக்கூடிய சந்தர்ப்பங்களும் இல்லை.

ஜே.வி.பி ஆர்ப்பரித்தாலும் ஆட்சியமைக்கும் அளவுக்கோ அல்லது சஜித், ரணில் அணிகளுடனோ கூட்டுச் சேரக்கூடிய வாய்ப்புகளோ இருப்பதாகத் தெரியவில்லை.

ராஜபக்சக்களின் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்திற்குள் முரண்பட்டுள்ள சிறிய கட்சிகள் வெளியே வந்து எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்குச் சக்தி படைத்தவர்களாகவும் தெரியவில்லை.

குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு முரண்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடனடியாக நம்பும் அளவுக்கு ரணில்- சஜித் அணிகள் இல்லை என்பதும் வெளிப்படை.

இதனால் பொருளாதார நெருக்கடியும் அரசாங்கத்துக்குள் உள்ளக முரண்பாடுகள், அதிருப்திகள் அதிகரித்திருந்தாலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கமே மேலெழும் வாய்ப்பு தற்போதைக்கு உண்டு.

ஏனெனில் அமெரிக்க- இந்திய அரசுகள் 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை ராஜபக்சக்களுக்கு எதிராக உருவாக்கிப் பின்னர் கண்ட தோல்வியால், இலங்கையில் மற்றுமொரு ஆட்சி மாற்றத்துக்குத் துணைபோவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

 

பொருளாதார நெருக்கடியும் அரசாங்கத்துக்குள் உள்ளக முரண்பாடுகள், அதிருப்திகள் அதிகரித்திருந்தாலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கமே மேலெழும் வாய்ப்பு தற்போதைக்கு உண்டு

 

ஆகவே சிங்கள ஆட்சியாளர்களும் பௌத்த குருமாரும் சிங்கள மக்களில் பெரும்பான்மையோரும் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சியைப் பலப்படுத்தினால், இலங்கையில் தாம் நினைப்பதைச் சாதிக்கலாமென்ற எண்ணக்கருவுடன் அமெரிக்க- இந்திய அரசுகளும் செயற்படுகின்றன என்பதே இங்கு பட்டவர்த்தனம்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இருந்து பன்னிரெண்டு ஆண்டுகளில் தமிழ்த்தேசியக் கட்சிகள், தேசம்- சுயநிர்ணய உரிமை என்பதிலும், இன அழிப்பு விசாரணையை நடத்துங்கள் என்ற கோரிக்கையிலும் பிடிவாதமாக ஒருமித்த குரலில் நின்றிருந்தால், இன்று நிலைமை மாறியிருக்க வாய்ப்புண்டு.

அரசு என்ற கட்டமைப்பு இல்லாத தேசிய இனம் ஒன்று, தேசமாக நின்று அதுவும் எழுபது வருட அரசியல் போராட்டம் நடத்திய இனம் ஒன்று ஒருமித்த கருத்தோடு நின்றிருந்தால், விரும்பியோ விரும்பாமலோ வல்லாதிக்க நாடுகள் செவிசாய்த்திருக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியிருக்கும்.

அதற்கேற்ப இன்றைய புவிசார் அரசியல் போட்டிகளும் நிலவுகின்றன. இருந்தாலும் தேர்தல் அரசியலில் மாத்திரம் தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனம் செலுத்தியதனால் ஏற்பட்ட விளைவே இன்று கையாளப்படும் இனமாக மாற்றப்பட்டிருக்கின்றது.

https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=2111&fbclid=IwAR0jSHNzZIGnYivXP7wqVSk5hKfG7WIlc3m6VvpZ8d0NWJS3Eos27W_0D2I

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.