Jump to content

உத்தர பிரதேச தேர்தல்: நரேந்திர மோதி, யோகியின் பாஜகவில் அதிகரிக்கும் அதிருப்தி தலைவர்கள் - மவுசு குறைகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உத்தர பிரதேச தேர்தல்: நரேந்திர மோதி, யோகியின் பாஜகவில் அதிகரிக்கும் அதிருப்தி தலைவர்கள் - மவுசு குறைகிறதா?

  • தில்நவாஸ் பாஷா
  • பிபிசி செய்தியாளர்
6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,@YADAVAKHILESH

 

படக்குறிப்பு,

சுவாமி பிரசாத் மெளரியா ராஜிநாமா செய்தவுடன், அகிலேஷ் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மௌரியா இன்னும் அதிகாரபூர்வமாக சமாஜ்வாதி கட்சியில் சேரவில்லை.

கடந்த 48 மணி நேரத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி அரசின் இரண்டு பெரிய தலைவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். முதலில் சுவாமி பிரசாத் மௌரியா, பிறகு தாரா சிங் செளஹான். விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர், மற்றும் பிற்படுத்தப்பட்டோரை அரசு புறக்கணித்து வருவதாக இரு தலைவர்களும் தங்களது ராஜிநாமாவில் தெரிவித்தனர்.

அதேபோல,உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஷிகோஹாபாத் தொகுதி எம்எல்ஏ முகேஷ் வர்மாவும் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

சுவாமி பிரசாத் மெளரியாவே தனது தலைவர் என்றும் அவர் எங்கு சென்றாலும் அவருடன் தாமும் செல்லப்போவதாக, பதவி விலகிய முகேஷ் வர்மா தெரிவித்திருக்கிறார்.

இவர்கள் தவிர, பாஜகவில் இருந்து வெளியேறும் அல்லது வெளியேறத் தயாராகும் பல தலைவர்களின் பெயர்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் அடிபடுகின்றன.

என்ன காரணம்?

ஷாஜஹான்பூரில் உள்ள தில்ஹர் தொகுதியின் எம்எல்ஏ ரோஷன்லால் வர்மா, பில்ஹோர் எம்எல்ஏ பகவதி பிரசாத் மற்றும் திந்த்வாரி எம்எல்ஏ பிரஜேஷ் பிரஜாபதி ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் புறக்கணிக்கப்படுவதாகவே இந்தத் தலைவர்களும் தங்கள் ராஜிநாமா கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.

அடுத்த சில நாட்களில் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் சமூக வலைதளங்களில் எழுதி செய்தியாளர்களுக்கு தகவல்களைக் கசிய விடுகின்றன.

இந்நிலையில் "பாஜகவில் இருந்து விலக விரும்பும் பல தலைவர்களுடன் சமாஜ்வாதி கட்சி தொடர்பில் உள்ளது. இவர்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். வரும் நாட்களில் மேலும் பலர் பாஜகவை விட்டு சமாஜ்வாதி கட்சியில் சேருவார்கள்," என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்துல் ஹஃபீஸ் காந்தி குறிப்பிட்டுள்ளதும் கவனம் பெறுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், "பாஜகவில் இருந்து தலைவர்கள் வெளியேறும் நடவடிக்கை தொடருமா?", "இது குறித்து பாஜக கவலை கொண்டுள்ளதா?" என்பது பற்றிய ஊகங்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளன.

 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,SWAMIPMAURYA

 

படக்குறிப்பு,

கேசவ் பிரசாத் மெளரியா

பாஜகவில் இருந்து ராஜிநாமா செய்த சுவாமி பிரசாத் மெளரியா ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி. 2017 தேர்தலுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து அமைச்சரானார். இவர் யாதவர்கள் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளை ஈர்க்கும் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார்.

இதற்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறியபோது, தமது கட்சிக்கு மெளரியா மிகப்பெரிய நன்மை செய்துவிட்டார் என்று மாயாவதி கூறியிருந்தார்.

மௌரியா பாஜகவுக்கு வந்தபோது பல தலைவர்களை தம்முடன் அழைத்து வந்தார். இப்போது அவர் பாஜகவை விட்டுச்சென்றபோதும், பல தலைவர்களை தன்னுடன் அழைத்து செல்வார் என்று தோன்றுகிறது.

இதன் அடிப்படையில், தங்கள் சாதிக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற உணர்வு கட்சியில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்களுக்கு ஏற்படுகிறது என்பதன் தெளிவான அறிகுறிதான் மௌரியா மற்றும் இதர தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறுவது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாஜகவில் பீதி?

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் பிரதான் பேசியபோது "பாஜக உயர்சாதி (ஆதிக்க சாதி) கட்சியாக மாறியிருப்பதை இவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர் என்பதை மெளரியா மற்றும் பிற தலைவர்களின் ராஜிநாமாக்கள் காட்டுகின்றன.

 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,BJP

குறிப்பாக கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் யோகி ஆதித்யநாத், தாக்கூர் வகுப்பினருக்கு முக்கியத்துவம் கொடுத்தது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உருவாகி வரும் சூழ்நிலையும், கட்சியை விட்டு தலைவர்கள் வெளியேறுவதும் ஓபிசி தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Twitterவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Twitter பதிவின் முடிவு, 1

அவர்கள் பா.ஜ.க மற்றும் யோகி ஆதித்யநாத்தை விட்டுச்செல்கிறார்கள். பாஜகவின் வகுப்புவாத அரசியல் தோல்வியடைந்து வருகிறது என்றே தோன்றுகிறது" என்று ஷரத் பிரதான் குறிப்பிட்டார்.

 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,BJP

 

படக்குறிப்பு,

ராகேஷ் திரிபாதி

மறுபுறம், பாஜகவில் பீதி எதுவும் இல்லை என்றும் கட்சியின் நிலை முன்பை விட வலுப்பெற்றுள்ளதாகவும் பா.ஜ.க.கூறுகிறது.

"பாஜகவில் யாரும் பீதி அடையவில்லை. புதன்கிழமை இரண்டு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸில் இருந்து நரேஷ் சைனியும், சமாஜ்வாதி கட்சியில் இருந்து முலாயம் சிங்கின் சம்மந்தி ஹரிஓம் யாதவும் கட்சியில் இணைந்துள்ளனர். ஹரி ஓம் யாதவ், ஃபிரோஸாபாதின், சிர்சாகஞ்ச் எம்எல்ஏ.ஆவார். சமாஜ்வாதியின் கோட்டையிலிருந்து எம்எல்ஏக்கள் பா.ஜ.க.விற்குள் வருகின்றனர். பாஜகவில் ஒரு வித பீதி நிலவுகிறது என்று கூறுவது முற்றிலும் தவறு," என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி குறிப்பிட்டார்.

அதாவது, கட்சியை விட்டு வெளியேறும் தலைவர்களை விட கட்சிக்குள் வரும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று பாஜக கூறுகிறது. "ஒரு மாதத்துக்குள் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் பல எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க சேர்த்துள்ளது. மக்களின் பேராதரவு ,சுத்தமான இமேஜ் உள்ள தலைவர்கள் கட்சியை நோக்கி வருகிறார்கள். எங்கள் கட்சியில் சேர விரும்பும் பல தலைவர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. நாங்கள் அவற்றை பரிசீலனை செய்து வருகிறோம். மக்கள் ஆதரவு கொண்ட தலைவர்களை கட்சி தொடர்ந்து சேர்த்து வருகிறது," என்று திரிபாதி கூறினார்.

வரவேற்கும் சமாஜ்வாதி கட்சி

பாஜகவில் இருந்து வெளியேறும் தலைவர்கள் சமாஜ்வாதி பக்கம் செல்கின்றனர்.

"அவர்களை தங்களுடைய கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனதார வரவேற்கிறார். சமூக நீதிக்காக போராடும் எந்த ஒரு தலைவரும், நபரும் கட்சியில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதே கட்சியின் முதல் முயற்சி. பா.ஜ.க, மீது கோபப்பட்டு வெளியேறும் தலைவர்களை சமாஜ்வாதி கட்சி மனமார வரவேற்கிறது. இதனால் சமூக நீதிக்கான போராட்டம் வலுப்பெறும்," என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்துல் ஹஃபீஸ் காந்தி தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஐந்தாண்டு ஆட்சியில் பாஜகவுடன் கூடவே தனக்கும் ஒரு சமமான பிம்பத்தை உருவாக்கியுள்ளார். மாநில அரசு, பாஜக அரசு என்பதைவிட யோகி அரசு என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், கட்சியை விட்டு வெளியேறும் தலைவர்கள், குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோபம் கொண்டுள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதில் சந்தேகமேயில்லை என்று ஷரத் பிரதான் கூறுகிறார்.

"கடந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தைப் பார்த்தால், உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ள முயன்றார். உத்தர பிரதேசத்தில் யோகி தான் எல்லாம் என்று மீண்டும் மீண்டும் செய்தி கொடுக்கப்பட்டு வருகிறது. யோகி தனது கட்சி தலைவர்களைக்கூட எளிதில் சந்திக்கமாட்டார் என லக்னெள அரசியல் வட்டாரத்தில் செய்தி அடிபடுகிறது. கட்சியை விட்டுச் செல்பவர்களும் இதை உணர்ந்திருக்கக்கூடும். யோகி ஆதித்யநாத்தை சந்திப்பது எளிதல்ல என அதிகாரப்பூர்வமற்ற முறையில் பல அமைச்சர்கள் புகார் கூறுகின்றனர்,"என்கிறார் அவர்.

 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,SWAMIPMAURYA

 

படக்குறிப்பு,

இந்தப் படத்தில், சுவாமி பிரசாத் மௌரியா, உ.பி., பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங் மற்றும் கட்சித் தலைவர் பிரஜேஷ் பதக் ஆகியோருடன் காணப்படுகிறார்

இது யோகி ஆதித்யநாத்தின் பிம்பத்தை பாதிக்குமா? என கேட்டதற்கு, "யோகி ஆதித்யநாத் தனக்கென ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கி இருக்கலாம், ஆனால் உண்மை என்னவெனில், பாஜகவில் அங்கம் வகித்ததன் மூலம் மட்டுமே அவரால் முதல்வராக முடிந்தது.

கட்சியை விட தான் பெரியவர் என்று யோகி ஆதித்யநாத் நினைத்தால், இது முதிர்ச்சியற்ற சிந்தனை. கட்சியை விட்டு வெளியேறும் தலைவர்கள் யோகி ஆதித்யநாத் மீது கோபத்தில் இருந்தாலும், இதன் தாக்கத்தை பா.ஜ.க.சந்திக்க நேர்ந்துள்ளது," என்று ஷரத் பிரதான் கூறினார்.

பாஜக குடும்ப கட்சியல்ல, கட்சியே குடும்பம்

 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,YADAVAKHILESH

 

படக்குறிப்பு,

அமைச்சர்களின் ராஜிநாமாவால் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தப் படத்தை எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.

கட்சியில் இருந்து சுவாமி பிரசாத் மெளரியா ராஜிநாமா செய்ததை அடுத்து, அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேசவ் பிரசாத் மெளரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் திரும்பி வர விரும்பினால் அவரை மீண்டும் வரவேற்க பாஜக தயாராக உள்ளது.

"மாநிலத்தில் அமைச்சராக சுவாமி பிரசாத் மெளரியா சிறப்பாக பணியாற்றியிருக்கிறார் என்று பாஜக நம்புகிறது. கட்சியை விட்டு வெளியே சென்ற பிறகும் இந்தப்பணியை தனது சாதனையாக அவர் கூறிக்கொள்கிறார். கட்சியுடன் அவர் பேச விரும்பினால் அது வரவேற்கப்படுகிறது. அவர் கட்சியில் நீடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவர் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தால், அது அவரது விருப்பம்," என்கிறார் திரிபாதி.

"பாஜக என்பது குடும்ப கட்சியல்ல, கட்சியே குடும்பம். குடும்பத்திற்குள் ஏதேனும் மனக்கசப்பு அல்லது பிளவு ஏற்பட்டால், கட்சியினருடன் வந்து , தொடர்பு கொண்டு, பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்யவேண்டும். கட்சிக்குள் அமர்ந்துதான் தீர்வு காண வேண்டும். இருந்தாலும், கட்சியை விட்டு வெளியேறும் அளவுக்கு ஒருவரின் மனக்கசப்பு இருந்தால், அவர் தன் வழியை தேர்வு செய்யும் சுதந்திரம் அவருக்கு உள்ளது. யாரையும் கட்டிப்போட முடியாது. கட்சி, பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஏதாவது பிரச்னை என்றால் கட்சியை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றார் அவர்.

சுவாரஸ்யமாகும் அரசியல் களம்

சுவாமி பிரசாத் மெளரியா, பிற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா காரணமாக உத்திர பிரதேச அரசியலில் சூடு பிடித்துள்ளது. சிக்கலை சீர்செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது. மறுபுறம், பாஜக பலவீனமடைந்து வருவதாகக்கூறி சமாஜ்வாதி கட்சி இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. கண்ணுக்குப் புலப்படுவதை விட அதிகமான நிகழ்வுகள் திரைக்குப் பின்னால் நடக்கின்றன.

"கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் தேர்தலை சுவாரசியமாக்கியுள்ளன. மூத்த பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் வெளியேறியதால், தேர்தலில் பாஜக பலவீனமாக இருக்கலாம் என்ற சிமிஞ்சை சென்றுள்ளது. உண்மை என்னவாக இருந்தாலும் சரி, இதுபோன்ற சிமிஞ்சைகள் தேர்தலில் முக்கியமானவை. அவை தேர்தல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று இதுகுறித்து ஷரத் பிரதான் குறிப்பிட்டார்.

கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எப்படி சரிசெய்வது என்பதுதான் பாஜகவின் முன் உள்ள சவால். ஆனால் பாஜகவால் இதை செய்ய முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

https://www.bbc.com/tamil/india-59988158

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.