Jump to content

எரிமலை வெடிப்பால் சுனாமி எச்சரிக்கை


Recommended Posts

எரிமலை வெடிப்பால் சுனாமி எச்சரிக்கை

 

டோங்கா நாட்டில் நீருக்கடியில் ராட்சத எரிமலை வெடித்ததை அடுத்து டோங்கா, பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு தேவாலயம் மற்றும் பல வீடுகள் வழியாக அலைகள் செல்வது டோங்காவில் இருந்து வெளியாகிய சமூக ஊடகக் காட்சிகளில் இருந்து தெரியவருகிறது. 

இதனையடுத்து, அங்கு வசிப்பவர்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
 
எட்டு நிமிட வெடிப்பு மிகவும் வன்முறையாக இருந்தது என்றும் 800 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பிஜியில் "பலத்த இடி சத்தங்களை" என்று கேட்க முடிந்தது என்று தலைநகர் சுவாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரிமலையில் இருந்து கொட்டும் வாயு, புகை மற்றும் சாம்பல் ஆகியவை வானத்தில் 20 கிலோ மீற்றர் தூரத்துக்கு சென்றுள்ளதாக டோங்கா புவியியல் சேவைகள் தெரிவித்துள்ளது.

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/எரமல-வடபபல-சனம-எசசரகக/50-289284

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டோங்காவில் எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி

January 15, 2022
spacer.png

பசிபிக் ஒசியானா பகுதியில் அமைந்துள்ள குட்டிதீவு நாடான டோங்கா நாட்டில் எரிமலை வெடித்ததன் காரணமாக சுனாமி ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு நீருக்கு அடியே உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதனால் சுமார் 20 கிலோமீட்டர் வரையிலும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் பரவியுள்ளதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் சில பகுதிகளில் ஏற்கனவே சுனாமி தாக்கத் தொடங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், எரிமலை வெடிப்பு காரணமாக அங்கு அமில மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோங்கா நாடு. மொத்தம் 177 சிறு தீவுகளைக் கொண்டதாகும். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 1.03 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது

spacer.png

 

https://globaltamilnews.net/2022/171838

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசிபிக் சுனாமி டோங்கா, தென் அமெரிக்காவை தாக்கியது - மீட்புப் பணிகள் துரிதம்

17 ஜனவரி 2022, 01:39 GMT
 

சுனாமி

பட மூலாதாரம்,TONGA GEOLOGICAL SERVICES

ஒரு பெரிய எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமியைத் ஏற்பட்டதைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூசிலாந்து விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த எரிமலை உமிழ்வு காரணமாக பசிபிக் தீவுகள் சாம்பலால் மூடப்பட்டுள்ளன. டோங்காவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு வசதிகளும் செயல்படவில்லை.

பெரு, சிலி, ஃபிஜி ஆகிய நாடுகளில் ஆக்ரோஷமான சுனாமி அலைகள் தாக்கின. கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தன.

டோங்காவில் 80,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC) பிபிசியிடம் தெரிவித்தது.

சுனாமி "கணிசமான சேதத்தை" ஏற்படுத்தியதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியிருக்கிறார்.

இருப்பினும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன.

"தாழ்வான தீவுகளின் பாதிப்பை மதிப்பிடுவதற்காக" ஒரு விமானம் புறப்பட்டது என நியூசிலாந்து பாதுகாப்புப் படை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.

"டோங்கா முழுவதும் 80,000 பேர் வரை எரிமலை வெடிப்பு, சுனாமி அலை அல்லது எரிமலை வெடிப்பின் விளைவாக ஏற்பட்ட மூழ்கடிப்பால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த கேத்தி க்ரீன்வுட் கூறியுள்ளார்.

சனிக்கிழமையன்று நீருக்கடியில் எரிமலை வெடித்தது. இதைத் தொடர்ந்து 1.2 மீ (4 அடி) அலைகள் டோங்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டோங்காவிலிருந்து சுமார் 2,383 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நியூசிலாந்தில் இந்த எரிமலை வெடிப்பு மிகவும் சத்தமாகவே கேட்டது.

டோங்காவில் உள்ள நியூசிலாந்தின் தூதர் பீட்டர் லூண்ட், எரிமலை சாம்பல் அடுக்கால் மூடப்பட்ட பிறகு, "நிலாவைப் போல்" டோங்கா இருப்பதாகக் கூறினார்.

தூசி காரணமாக குடிநீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டிருப்பதாக ஜெசிந்தா கூறியுள்ளார்.

சாம்பல் காரணமாக மக்களை பாட்டில் தண்ணீரைக் குடிக்கவும், நுரையீரலைப் பாதுகாக்க முகமூடிகளை அணியவும் வேண்டியிருக்கிறது.

 

சுனாமி

பட மூலாதாரம்,CONSULATE OF THE KINGDOM OF TONGA

சாம்பல் மூடியதால் மக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து காரில் தப்பிச் செல்ல மக்கள் முயன்றனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காணொளிகள் இணையத்தில் பரவியிருக்கின்றன.

டோங்கோ தீவில் வசிக்கும் சுமார் 1,05,000 பேரை அணுக முடியவில்லை.

மிகப்பெரிய வெடிப்புக்கு முன்னதாக, எரிமலை பல நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. சில பகுதிகளில் கந்தகம் மற்றும் அம்மோனியா வாசனை வீசுவதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

தீவின் சில பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு வருவதாகவும், மொபைல் போன்கள் மெதுவாக மீண்டும் வேலை செய்யத் தொடங்குவதாகவும் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார். ஆனால் சில கடலோரப் பகுதிகளின் நிலைமை இன்னும் தெரியவில்லை.

தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேச முடியவில்லை என ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள டோங்கோவைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

டோங்காவின் தலைநகரான நுகு அலோபாவில் கடலோர உணவகத்தை நடத்தி வரும் தனது நண்பரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பாத்திமா கூறினார்.

 

சுனாமி

செயற்கைக்கோள் படங்கள் சில வெளியிலுள்ள தீவுகள் கடல்நீரால் முழுமையாக மூழ்கிவிட்டதாகக் காட்டுகின்றன.

ஹங்கா-டோங்கா ஹங்கா-ஹா'பாய் என்ற இந்த எரிமலையின் வெடிப்பு பல தசாப்தங்களாகப் பிறகு நடக்கும் மிகவும் தீவிரமான ஒன்றாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால் ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அங்கு கலிபோர்னியா மற்றும் அலாஸ்காவின் சில கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.

https://www.bbc.com/tamil/global-60018668

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டோங்கா எரிமலை வெடிப்பு: சுனாமியின் கோரத்தைக் காட்டும் புகைப்படங்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்கள்

பட மூலாதாரம்,CONSULATE OF THE KINGDOM OF TONGA

 

படக்குறிப்பு,

தலைநகர் நுக்வாலோஃபாவில் இருந்து எடுக்கப்பட்ட படம், சனிக்கிழமை சுனாமியைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதத்தைக் காட்டுகிறது

கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் தூண்டப்பட்ட சுனாமி அலைகளால் ஏற்பட்ட சேதத்தை வெளிப்படுத்தும் புதிய படங்கள் டோங்கோவில் இருந்து வெளிவந்துள்ளன.

அவை, பசிபிக் தீவுகள் எரிமலை சாம்பலால் மூடப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. அதேநேரம், கடலோரப் பகுதிகளில் அலைகள் மரங்களை இடித்து கட்டிடங்களை கிழித்தெறிந்தன.

சனிக்கிழமை சுனாமியால் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்படக் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர். தகவல் தொடர்புகள் முடங்கின.

சர்வதேச தொலைபேசி இணைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட கேபிள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதைச் சரிசெய்ய வாரங்கள் ஆகலாம்.

டோங்கோ பெரும்பாலும் வெளி உலகத்திடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அழிவின் அளவு குறித்து அதிகமாக அறியப்படவில்லை.

 

சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்கள்

பட மூலாதாரம்,CONSULATE OF THE KINGDOM OF TONGA

 

படக்குறிப்பு,

டோங்காடபு தீவு முழுக்க எரிமலை சாம்பல் படிந்துள்ளது

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள டோங்கோவின் தூதரகத்தால் வெளியிடப்பட்ட புதிய படங்கள், தலைநகர் நுக்வாலோஃபாவில் உள்ள கார்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் முழுக்க சாம்பல் படர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. தூசியால் நிவாரண விமானங்கள் தரையிறங்குவதற்கும் மிகவும் தேவையான உணவு மற்று குடிநீரை வழங்குவதகும் தடையாக உள்ளது.

 

சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்கள்

பட மூலாதாரம்,CHURCH OF JESUS CHRIST OF LATTER-DAY SAINTS

 

படக்குறிப்பு,

எரிமலை மற்றும் சுனாமியைத் தொடர்ந்து தலைநகர் நுக்வாலோஃபாவில் வெள்ளம்

தீவின் கடலோரப் பகுதிகளில், "முன்னெப்போதும் இல்லாத பேரழிவு" என்று டோங்கோவின் அரசாங்கத்தால் விவரிக்கப்பட்ட சுனாமி அலைகளின் பின்விளைவுகளையும் படங்கள் காட்டுகின்றன. டோங்கோவில் ஒரு மீட்டருக்கும் அதிகமான உயர அலைகள் தாக்கியதை அடுத்து, கட்டிடக் கழிவுகள் கரையோரத்தில் சிதறிக் கிடக்கின்றன.

 

சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்கள்

பட மூலாதாரம்,CONSULATE OF THE KINGDOM OF TONGA

 

படக்குறிப்பு,

மரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன

இதற்கிடையில், நியூசிலாந்து விமானப்படையால் எடுக்கப்பட்ட வான்வழிப் படங்கள், தீவுகளின் பல கிராமங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதைக் காட்டுகின்றன.

மீட்புப் பணிகளை சாம்பல் தடுக்கிறது

இந்தப் பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் சேதமடைந்த கடலுக்கடியில் உள்ள கேபிளை சரிசெய்வதற்கும் குழுக்கள் 24 மணிநேரமும் உழைத்து வருகின்றன.

 

டோங்கோ எரிமலை வெடிப்புக்குப் பிறகு குடியிருப்புகள் தென்படவே இல்லை

 

படக்குறிப்பு,

டோங்கோ எரிமலை வெடிப்புக்குப் பிறகு குடியிருப்புகள் தென்படவே இல்லை

டோங்கோவின் பிரதான விமான நிலைய ஓடுபாதையில் இருந்து அடர்த்தியான சாம்பலை அகற்றுவதற்கான முயற்சிகள் புதன்கிழமை முடிவடைந்ததாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது மீட்புக் குழுக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் சக்கர வண்டிகள் மற்றும் மண்வெட்டிகளைப் பயன்படுத்தி டார்மாக்கில் இருந்து தூசியை அகற்ற தீவிரமாகப் பணியாற்றினர்.

அவசர உதவி விமானங்கள் விரைவில் தரையிறங்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கையோடு உள்ளனர்.

எரிமலை வெடித்ததில் இருந்து மிகக் குறைவான தகவல் தொடர்புகள் நிறுவப்பட்டுள்ளன. முக்கியமாக தலைநகர் நுக்வலோஃபாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் வைத்திருக்கும் சில செயற்கைக்கோள் தொலைபேசிகள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. வெளிநாட்டிலுள்ள பல டோங்கன்கள் அவர்களுடைய உறவினர்களிடமிருந்து அன்பானவர்களிடமிருந்து செய்திகளைக் கேட்கக் காத்திருக்கிறார்கள்.

 

சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்கள்

பட மூலாதாரம்,CONSULATE OF THE KINGDOM OF TONGA

 

படக்குறிப்பு,

டோங்காவின் கரையோரப் படங்கள் சுனாமியைத் தொடர்ந்து கட்டமைப்புகள் மற்றும் மரங்களுக்கு சேதம் விளைவிப்பதைக் காட்டுகின்றன

தொலைத்தொடர்பு நிறுவனமான டிஜிசெல் புதன்கிழமை, சர்வதேச அழைப்புகளை மீட்டெடுக்க முடிந்ததாகக் கூறியது. இருப்பினும் பிபிசியால் டோங்கோவுக்குத் தொடர்புகொள்ள முடியவில்லை.

தீவுகளுக்கான ஒரே கேபிள் இரண்டு இடங்களில் சேதமடைந்துள்ளதால், இணையம் உட்பட முழு இணைப்பும் மீண்டும் கிடைப்பதற்கு நான்கு வாரங்கள் அல்லது அதற்கு மேலும்கூட ஆகலாம்.

புதன்கிழமை காலை, செஞ்சிலுவை சங்கம், எரிமலை வெடிப்புக்குப் பிறகு முதன்முறையாக டோங்கோவில் உள்ள தனது குழுவுடன் "மகிழ்ச்சியுடன்" தொடர்புகொள்ள முடிந்ததாகக் கூறியது.

 

டோங்கா எரிமலை வெடிப்பு

பட மூலாதாரம்,TONGA GEOLOGICAL SERVICES

 

படக்குறிப்பு,

டோங்கா எரிமலை வெடிப்பு

"துரதிர்ஷ்டவசமாக டோங்கோவில் இருந்து இரவோடு இரவாக வீடுகள் அழிக்கப்பட்ட, அழிவுகரமான செய்தி வருகிறது," என்று அதன் பசிபிக் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், கேட்டி கிரீன்வுட் பிபிசியின் நியூஸ்டே நிகழ்ச்சியில் கூறினார்.

மேலும், செஞ்சிலுவை சங்கக் குழுக்கள் சுத்தமான தண்ணீரை விநியோகிக்கச் செயல்பட்டு வருவதாகவும் மக்கள் தங்கல் மழைநீர் தொட்டிகளை சாம்பலில் இருந்து பாதுகாக்கும் வகையில் மூடி வைக்கவேண்டும் என்று சமீபத்தில் பிரச்சாரம் செய்ததாகவும் பாட்டில் தண்ணீர் விநியோகத்திற்கு ஊக்கம் அளித்ததாகவும் கிரீன்வுட் கூறினார்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து முதலுதவி கப்பல்கள் வெள்ளிக்கிழமை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சர் பீனி ஹெனாரே பிபிசியிடம், கப்பல்கள் 250,000 லிட்டருக்கும் அதிகமான நன்னீர் மற்றும் உப்புநீக்கும் கருவிகளைக் கொண்டுவருவதாகக் கூறினார்.

"டோங்கன் அரசிடம் இருந்து தண்ணீர் தேவையே மிக முக்கியப் பிரச்னையாக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.

 

சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்கள்

 

படக்குறிப்பு,

சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்கள்

ஆனால், டெலிவரிகள் கோவிட் பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும் டோங்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அக்டோபரில் தான் அந்த நாடு அதன் முதல் கோவிட் நோய்த்தொற்றை பதிவு செய்தது.

கடைகளில் உணவுப் பொருட்கள் குறைவாக இருப்பதாகவும் டெலிவரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.

ஹூங்கா டோங்கா-ஹூங்க ஹாபாய் எரிமலை வெடிப்பு அமெரிக்கா வரை உணரப்பட்டது. பெருவில், எண்ணெய் கசிவைத் தொடர்ந்து தலைநகர் லிமாவுக்கு அருகிலுள்ள கடற்கரைகள் மூடப்பட்டபோது, அசாதாரணமாக உயர்ந்த அலைகளில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.

https://www.bbc.com/tamil/global-60063982

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டோங்கா சுனாமி: "27 மணி நேரம் கடலில் மிதந்து உயிர் பிழைத்தேன்" - தப்பியவரின் மிரள வைக்கும் கதை

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

Debris litters the beach in Nuku'alofa, Tonga, after the tsunami - near Atata island where Mr Folau was

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

ஃபோலாவ் இருந்த அட்டாடா தீவுக்கு அருகில், சுனாமிக்குப் பிறகு டோங்காவின் நுகுஅலோபாவில் உள்ள கடற்கரையில் குப்பைகள் குவிந்துள்ளன.

டோங்காவைத் தாக்கிய சுனாமியில் இருந்து தப்பிக்க, கடலில் ஒரு நாளுக்கு மேல் தான் மிதந்ததாகக் கூறும் ஒருவரின் கதை, உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த தீவு தேசத்தை சனிக்கிழமையன்று எரிமலை வெடிப்பும் சுனாமியும் தாக்கியது. அட்டாடா தீவைச் சேர்ந்த லிசாலா ஃபோலா என்பவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது பேரலை.

கடலில் தான் மிதக்கும் மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டு 27 மணி நேரம் மிதந்த பிறகு, மீண்டும் கரையை அடைந்ததாக அவர் கூறினார்.

இந்த சுனாமி பாதிப்பின் அளவு குறித்து இன்னும் தெரியவில்லை என்றாலும், டோங்காவில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிபிசியின் நியூஸ்டே நிகழ்ச்சியில் பேசிய 57 வயதான ஃபோலாவ், "கடல் அலைகள் என்னை நோக்கி வருவதை கண்டு பயந்தேன். ஆனால், கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது," என்று கூறினார்.

"நான் நீரில் இருந்தபோது, கடல் எட்டு முறை என்னை அதன் கீழ் இழுத்து சென்றது எனக்கு நினைவிருக்கிறது. என் கால்கள் செயலிழந்தன. அவை செயல்படவில்லை என்றே சொல்ல வேண்டும்," என்று தமது அனுபவத்தை விளக்கினார்.

"ஒரு கட்டத்தில் கடல் என்னைச் சுழற்றி நீருக்கடியில் அழுத்திச் சென்றது," என்கிறார் அவர்.

பின்னர், கடல் மேல்பரப்பில் மிதந்த மரக்கட்டையை தன்னால்பிடிக்க முடிந்தது என்றார்.

"எனது மகன் நிலத்திலிருந்து அழைப்பதை என்னால் கேட்க முடிந்தது. நான் பதிலளிக்க விரும்பவில்லை, ஏனென்றால் என்னைக் கண்டுபிடிக்க அவன் கடலுக்குள் இறங்கி நீந்துவதை நான் விரும்பவில்லை. வெறும் மரத்தடியைப் பிடித்துக்கொண்டு நான் சுழன்றுக்கொண்டிருந்தேன்," என்று ஃபோலாவ் கூறினார்.

 

Lisala Folau (second from left) with other Atata survivors at a radio interview on the main island

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

ஒரு வானொலி நேர்காணலில்,அட்டாட்டாவில் உயிர் பிழைத்தவர்களுடன் லிசாலா ஃபோலாவ் (இடமிருந்து இரண்டாவது)

"கடலில் தான் வாழ்வும் மரணமும் இருக்கிறது என்று அப்போது [என்] மனதில் தோன்றியது. நாம் கரையை அடையும் வரை, நாம் உயிருடன் இருக்கிறோமா அல்லது இறந்துவிட்டோமா என்பது நமக்கு தெரியும்."

இதற்கிடையில், அந்நாட்டிற்கு பல நாடுகளின் அரசு, கப்பல்களும் விமானங்களும் அனுப்பவதன் மூலம் உதவி கிடைப்பது இப்போது தொடங்கியுள்ளது.

தீவை இணைத்த கேபிள் தொடர்புகள் துண்டிப்பு

டோங்காவை வெளி உலகத்துடன் இணைக்கும் கடலுக்கு அடியில் உள்ள ஒரே கேபிள், இரண்டு இடங்களில் உடைந்ததால், தகவல் தொடர்புகள் முடங்கியுள்ளன.

வெள்ளிக்கிழமையன்று முக்கிய தீவான டோங்காடாபுவை வந்தடைந்த நியூசிலாந்து கப்பல், அங்கு தரையிறங்கிய முதல் வெளிநாட்டு உதவி வழங்கும் பெரிய கப்பல் ஆகும்.

இது 2 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கடலில் இருந்து உறிஞ்சியது. அந்த கப்பலில் ஒரு உப்புநீக்கும் ஆலை உள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் லிட்டர் சுத்தமான தண்ணீரை உற்பத்தி செய்ய முடியும்.

பசிபிக் தேசத்திற்கு சுத்தமான நீர் விநியோகமே முதன்மையானது என்று ஐ.நா கூறியுள்ளது.

இருப்பினும், பிரதான தீவில் நீர் பரிசோதனை செய்யப்பட்டபோது, அது குடிப்பதற்கு பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"டோங்காடாபுவில் உள்ள சில சமூகத்தினர் குடிநீர் வசதி பெற முடியவில்லை. வெளி தீவுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது" என்று நியூசிலாந்து அரசு கூறியுள்ளது.

காணாமல் போனவர்கள் பற்றிய அறிக்கைகள் வெளிவந்தாலும், டோங்கனைச் சேர்ந்த இருவரும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவரும் என இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகவே உள்ளது.

தனது மிகப்பெரிய கப்பலான, எச்.எம்.ஏ.எஸ் அடிலெயிட்டை ஆஸ்திரேலியா, வெள்ளிக்கிழமை டோங்காவிற்கு அனுப்பியுள்ளது. அடுத்த வாரம் நடுப்பகுதியில் அது அங்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பலில் ஹெலிகாப்டர்களை கொண்டு செல்ல முடியும். இதன்மூலம் டோங்காவின் சிறிய வெளிப்புற தீவுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல அவை பயன்படுத்தப்படலாம்.

 

Australian Defence Forces members have already brought some supplies into Tonga

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஏற்கனவே சில பொருட்களை டோங்காவிற்கு கொண்டு வந்துள்ளனர்

தனது கப்பலான எச்.எம்.எஸ். ஸ்பேயை பிரிட்டன் டோங்காவிற்கு மீண்டும் அனுப்புவதாகவும், ஏற்கெனவே ஆஸ்திரேலிய கப்பலுடன் உதவிப் பொருட்களை அனுப்பியதாகவும் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

"டோங்காவில் மீட்பு பணிக்கு உதவ பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றும். மேலும் எங்கள் நீண்டகால காமன்வெல்த் கூட்டாளருக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது," என்று பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் கூறினார்.

எரிமலை வெடிப்புக்குப் பிறகு முதல் சில நாட்களில் சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டது. ஏனெனில், எரிமலையின் சாம்பல் போர்வை டோங்காடாபுவில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையை பயன்படுத்த முடியாததாக மாற்றியது.

நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், அவசர உதவி விமானங்கள் தரையிறங்கக்கூடிய வகையில், சாம்பலை தங்களின் சொந்த முயற்சியில் அகற்றுவதில் பல நாட்கள் செலவிட்டனர்.

குடிநீர், உப்புநீக்கும் கருவிகள், சுகாதாரம், தங்குமிடம் வசதிக்கு தேவையானவை, மருத்துவ கருவிகள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களுடன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் இரண்டு விமானங்கள் வியாழக்கிழமையன்று தரையிறங்கின.

வைரஸ் இல்லாத இந்த தேசத்தில், கோவிட் தொற்று ஏற்படுபவதைப் பற்றி டோங்கன் அதிகாரிகள் கவலை தெரிவித்ததால், தொடர்புயில்லாத விநியோகத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை அங்கு ஒரே ஒரு உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்பு மட்டுமே உள்ளது. இது 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது.

வியாழக்கிழமையன்று, விமானத்தில் இருந்த ஒரு குழு உறுப்பினருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இரண்டாவது ஆஸ்திரேலிய விமானம் நடுவானில் திருப்பி அனுப்பப்பட்டது.

கடற்படை மூலம் மிகப் பெரிய அளவிலான உதவிகளை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அடிப்படை தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் மூலம் டோங்காவுடனான தொடர்புகள் மெதுவாக மீட்டெடுக்கப்படுகின்றன.

எரிமலை வெடிப்பு காரணமாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் மக்கள் வாழும் தீவை உலகத்துடன் இணைக்கும் ஒரே இணைய கேபிள் துண்டிக்கப்பட்டது. புதன்கிழமை வரை, பேரழிவு பற்றிய அனைத்து தகவல்களும் தீவில் உள்ள செயற்கைக்கோள் தொலைபேசிகளைக் கொண்ட சில நிறுவனங்களிலிருந்து வந்தன.

உதவியில் ஒளியும் அரசியல்

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் உதவிகளை அனுப்பி வருகின்றன.

ஜப்பான் தனது சொந்த ராணுவ விமானம் ஒன்றை வியாழன் அன்று விநியோகம் செய்ய அனுப்பியது.

 

Japan has prepared a Hercules carrier to bring aid to the island

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

இந்த தீவுக்கு உதவ ஹெர்குலிஸ் கேரியரை ஜப்பான் தயார் செய்துள்ளது.

சீனாவும் நிவாரணப் பண உதவி மற்று அவசரகாலப் பொருட்கள் வழங்கும் ஒரு பகுதியாக 100,000 டாலர்கள் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், "முன்னோக்கிச் செல்லும்போது, டோங்காவின் தேவைகள் மற்றும் சூழ்நிலை அடிப்படையில் சீனா தொடர்ந்து பணம் மற்றும் பொருட்களை வழங்கும்," என்று கூறினார்.

டோங்கா பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றாகும். இது சீனாவிடம் இருந்து கடன்கள் மற்றும் நன்கொடைகள் பெறும் பகுதிகளில் அதிகம் போட்டியிடும் ஒரு பகுதியாகும்.

ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக சீனா இப்போது வெளிநாட்டு உதவிகளை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வார தொடக்கத்தில், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இவ்வாறு ட்வீட் செய்தார்: "டோங்காவிற்கு முதல் மற்றும் முதன்மையான உதவியை ஆஸ்திரேலியா வழங்க வேண்டும். இல்லையெனில் சீனா அங்கேயே இருக்கும்."

https://www.bbc.com/tamil/global-60095044

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.