Jump to content

கோரிக்கைகளை முன்வைப்பது மட்டும் அரசியல் அல்ல -நிலாந்தன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோரிக்கைகளை முன்வைப்பது மட்டும் அரசியல் அல்ல -நிலாந்தன்.

January 23, 2022

spacer.png

 

 

நாட்டில் செயற்கை உர இறக்குமதி நிறுத்தப்பட்டதால் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் திருமணம்,பிறந்தநாள் போன்ற சுபகாரியங்களில் வழங்குவதற்கு பூச்செண்டுகளுக்கு தட்டுப்பாடு. மரண வீடுகளில் வைப்பதற்கு மலர் வளையங்களுக்கும் தட்டுப்பாடு. அதே சமயம் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்குவது நிறுத்தப்பட்டதால் மெழுகுதிரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். சபுகஸ்கண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உப உற்பத்திகளில் ஒன்றாகவே மெழுகுதிரி வார்க்கப்படுவதாகவும் இப்பொழுது அதற்கும் தட்டுப்பாடு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம்,  எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர் நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளமை ஆகிய காரணங்களினால் 4 மணி நேர  மின் வெட்டை எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் எதிர்வு கூறுகின்றது. எனவே மின் வெட்டு நேரத்தில் பயன்படுத்துவதற்கு மெழுகுதிரிகளுக்கும் தட்டுப்பாடு வரும்போலிருக்கிறது. இப்படியாக பூச்செண்டுகளுக்கும் மலர்வளைங்களுக்கும் மெழுகுதிரிகளுக்கும் தட்டுப்பாடான ஓர் அரசியல் பொருளாதாரச் சூழலில்  தை பிறந்திருக்கிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால்  தை பிறந்த பொழுது நாட்டில் பெரும்பாலான வழிகள் மூடப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. தை பிறந்த கையோடு இந்தியா ஒரு தொகுதி பணத்தை கடனாக வழங்கியிருக்கிறது. அது அரசாங்கத்துக்கு இரண்டு மாதங்களுக்காவது மூச்சு விடும் அவகாசத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மேலும் கடன் உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் தமிழ் கட்சிகள் கூட்டாக ஒரு ஆவணத்தை தயாரித்து அதனை இந்திய தூதரகத்திடம் கையளிக்கவிருந்தன. ஆனால் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அவசர அவசரமாக டெல்லிக்கு போக வேண்டி இருந்தபடியால் ஆவணம் கையளிக்கப்படவில்லை. அது பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.

தமிழ் கட்சிகளின் கடிதத்தை பெற்றுக்கொள்ளாமல் இலங்கைக்கான இந்திய தூதுவர் ஏன் டெல்லிக்கு பறந்தார் என்று பல்வேறு விதமான ஊகங்கள் எழும்பின. டெல்லிக்கு போன தூதுவர் திரும்பி வந்த கையோடு மத்திய வங்கியின் ஆளுநரைச் சந்தித்து இந்தியாவின் நிதி உதவியை உறுதிப்படுத்தியுள்ளார். ஆயின், அந்த நிதிஉதவியை அவசரமாக பெற்றுக்கொடுப்பதற்காகத்தான் அவர் புதுடில்லிக்கு பறந்தாரா? என்ற ஒரு ஊகமும் உண்டு. ஏனெனில்  நாடு அதன் படுகடனில் ஒரு பகுதியை அடைப்பதற்கு கடந்த 18ஆம் திகதி வரையிலும் ஒரு காலக்கெடு இருந்தது. அக்காலக்கெடுவுக்குள் இலங்கை அரசாங்கத்திற்கு சீனா அல்லாத வேறு எந்த நாடாவது உதவி வழங்க தவறினால் அரசாங்கம் சீனாவை சரணடைவதே தவிர வேறு வழி கிடையாது என்றிருந்த ஒரு நிலையில்  அவ்வாறு அரசாங்கம் சீனாவிடம் உதவி கெட்டுப் போவதை தடுக்கும் நோக்கத்தோடு இந்திய தூதுவர் அவசர அவசரமாக டெல்லி சென்று ஒரு தொகுதி கடனை கொழும்புக்கு வழங்கியதாகவும் ஊகிக்கப்படுகிறது. 

அதேசமயம் தமிழ் கட்சிகள் கூட்டாக தயாரித்த ஆவணத்தை பெற்றுக்கொள்வதில் காட்டிய அக்கறையை விடவும் கொழும்பின் கடனை அடைப்பதில்தான் புதுடில்லி அதிகம் கவனம் செலுத்தியது என்றும் ஒரு விமர்சனம் உண்டு. தமிழ் கட்சிகளின் கடிதத்தை கொடுப்பதற்கு கால வரையறை இல்லை. ஆனால், இலங்கை அரசாங்கம் அடைக்க வேண்டிய கடன்களுக்கு ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு காலக்கெடு இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டு வியாக்கியானம் செய்ய முடியாது. மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவு உண்டு அந்த உறவின் பிரகாரம் ஓர் அரசு இன்னொரு அரசைப் பாதுகாக்கும்.

இந்தியாவுக்கு ஆவணத்தைத் தயாரித்த கட்சிகளை விமர்சிக்கும் தரப்புகள் இந்த விடயத்தை வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றன. தமிழ் கட்சிகள் தயாரித்த ஆவணத்தை வைத்து இந்தியா இலங்கையுடனான தனது பேரத்தை அதிகப்படுத்தி விட்டது என்றும்,அண்மையில் திருகோணமலையில் உள்ள எண்ணை குதங்களில் ஒரு பகுதி தொடர்பான உடன்படிக்கைக்கு அதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. அதாவது தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி செல்வதை இந்தியா தனக்கு சாதகமாக கையாண்டு தன்னுடைய காரியங்களை முடித்துக் கொள்கிறது என்பதே அந்த குற்றச்சாட்டாகும். 

ஏற்கனவே இந்திய இலங்கை உடன்படிக்கை அவ்வாறுதான் செய்யப்பட்டது. அமெரிக்க சார்பு ஜெயவர்த்தனவை வழிக்குக் கொண்டுவருவதற்காக சோவியத் சார்பு இந்தியா தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியையும் ஆயுதங்களையும் பின்தள வசதிகளையும் வழங்கியது. அதன்மூலம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ஓரு கருவியாகப் பயன்படுத்தி கொழும்பை வழிக்கு கொண்டு வந்து இலங்கைதீவில் இந்தியா என்றென்றும் தனது மேலாதிக்கத்தை சட்டப்படி நிலைநிறுத்த தேவையான ஒரு ஆவணத்தை -அதுதான் இந்திய-இலங்கை உடன்படிக்கையை – எழுதிக் கொண்டு விட்டது. எனவே இந்தியா எப்பொழுதும் கொழும்பைப் பணிய வைப்பதற்கான அழுத்த பிரயோக சக்தியாகத்தான், கருவியாகத்தான் தமிழ் மக்களை கையாண்டு வருகிறது என்றும் அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

இந்த இடத்தில் இந்தியாவுக்கு ஒரு பொது ஆவணத்தை வழங்கிய கட்சிகள் தமது செயற்பாடுகளின் மூலம் நிரூபிக்க வேண்டிய ஒரு அம்சம் இருக்கிறது. அது என்னவெனில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இக்கட்சிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மைகள் இல்லை என்பதனை செயல் மூலம் நிரூபிப்பதுதான். தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேற்படி ஆவணத்தை தயாரித்த கட்சிகளை இந்தியாவின் கைக்கூலிகள் என்றும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படி இயங்குபவை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியா சொல்லித்தான் அப்படி ஓர் ஆவணத்தை தாங்கள் தயாரிக்கவில்லை என்பதனை நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டாயம் மேற்படி கட்சிகளுக்கு உண்டு.அதோடு தாங்கள் தயாரித்த ஆவணம் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒற்றையாட்சிக்குள் பெட்டி கட்டி விடவில்லை  என்பதையும் நிரூபிப்பதற்காக உழைக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் மேற்படி கட்சிகளுக்கு உண்டு.

கிடைக்கும் தகவல்களின்படி மேற்படி கட்சிகள் மேலும் சில ஆவணங்களை தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. அதன்படி பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றவேண்டும் என்று கேட்டு ஒரு கூட்டுக் கோரிக்கையை அவர்கள் வரைந்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் ஏறக்குறைய ஒரு மாதத்தில் தொடங்கப்போகிறது. இவ்வாறான ஒரு காலப் பின்னணியில் அப்படி ஒரு கோரிக்கையை முன்வைப்பது அவசியம் என்றும் மேற்படி கட்சிகள் கருதுகின்றன. தவிர ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்குவதாக இருந்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்த வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. இது தொடர்பான இறுதி முடிவை பெரும்பாலும் வரும் ஏப்ரல் மாதமளவில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கலாம் என்று தெரிகிறது. எனவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை எல்லா கட்சிகளும் ஒன்றாகக் கூடி முன்வைப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீது அதிகரித்த அழுத்தங்களை கொடுக்கலாம் என்று அவை நம்புகின்றன.

அது சரிதான். அப்படி ஒரு கூட்டுக் கோரிக்கை கட்டாயமாக முன்வைக்கப்பட வேண்டும். அதேசமயம், இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கூட்டுக் கோரிக்கை வெறும் கடிதமாக முடியக்கூடாது. அது அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செயல்பூர்வ வடிவத்தை எடுக்க வேண்டும். கடிதம் எழுதியதோடு மேற்படி கட்சிகளின் பணி முடிந்துவிடவில்லை. கடிதம் எழுதுவது மட்டுமே அரசியல் செயல்பாடாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. கடிதம் எழுதிய கட்சிகளுக்கு அந்த கடிதங்களை நோக்கி உழைக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு இருக்கிறது.

உதாரணமாக, கடந்த மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு மூன்று கட்சிகள் ஒன்றாக இணைந்து ஓர் ஆவணத்தை தயாரித்து ஜெனிவாவுக்கு அனுப்பின. அதன் விளைவாக மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை ஒப்பீட்டளவில் கடுமையானதாகக் காணப்பட்டது. ஆனால் ஐநா தீர்மானம் வழமைபோல இலங்கை அரசாங்கத்துக்கு “என்கேஜ்” பண்ணத் தேவையான இடைவெளிகளை வழங்கியது. கடிதத்தை எழுதிய கட்சிகள் பின்னர் தங்களுக்கிடையே முட்டி மோதிக் கொண்டன. 

குறிப்பாக அக்கடிதத்தில்  பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே அதாவது, மனித உரிமைகள் ஆணையத்துக்கு வெளியே கொண்டு போக வேண்டும்; ஐநா பொதுச்சபை, பாதுகாப்புச் சபை போன்ற ஐநாவின் ஏனைய மன்றங்களை நோக்கி கொண்டு போகவேண்டும் ; அனைத்துலக நீதிமன்றம் போன்ற கட்டமைப்புக்களை நோக்கி கொண்டு போகவேண்டும் என்ற கோரிக்கையை அதிகம் வலியுறுத்தியது தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். ஏனைய கட்சிகளும் அதை ஏற்றுக்கொண்டு அக்கடிதத்தை தயாரித்தன. கடிதம் அனுப்பப்பட்டது கடந்த ஜனவரி 21ஆம் திகதி. இப்பொழுது அடுத்த ஜனவரி வந்துவிட்டது. மறுபடியும் ஒரு ஜெனிவாக் கூட்டத்தொடர் வருகிறது. இந்த ஓராண்டு காலகட்டத்துக்குள் மேற்படி கடிதத்தில் தாம் முன்வைத்த கோரிக்கையை செயல்படுத்தும் நோக்கத்தோடு மேற்படி கட்சிகள் குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்னென்ன செய்திருக்கிறது என்பதனை பட்டியலிட்டு காட்ட வேண்டும். அதே போல இந்தியாவுக்கு கடிதம் எழுதிய கட்சிகளும் அதன் அடுத்த கட்டமாக இந்தியாவை எப்படி தமிழ் மக்களுக்கு சாதகமாக தலையிட வைக்கலாம் என்று திட்டமிட்டு உழைக்க வேண்டும். ஏனெனில் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக ஆனந்தசங்கரி கடிதங்களை எழுதியது போலல்ல இது.

 

https://globaltamilnews.net/2022/172168

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.