Jump to content

பொது வேட்பாளருக்கான ஓட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேட்பாளருக்கான ஓட்டம்

புருஜோத்தமன் தங்கமயில்

அடுத்த ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி, ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பொது வேட்பாளரைத் தேடும் பயணத்தில் தென் இலங்கை, மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோரைப் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் செயற்றிட்டங்களை எதிரணிக்குள் இருக்கும் பல்வேறு தரப்புகளும் முன்னெடுத்து வருகின்றன.

இவர்களுக்குப் போட்டியாக ராஜபக்‌ஷர்களை ஏற்கெனவே தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தன்னை மீண்டும் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்.

ஆட்சியில் இருக்கும் தலைவருக்கு எதிராக, பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஓட்டத்தில், எப்போதுமே ஒருவர் அல்லது இருவரைச் சுற்றியே, எதிரணியும் சிவில் சமூக கட்டமைப்புகளும் ஒளிவட்டங்களை வரைய ஆரம்பிக்கும்.

ஐக்கிய தேசிய கட்சியின் இரு தசாப்தகால ஆட்சியைத் தோற்கடிப்பதற்காக, சந்திரிகா குமாரதுங்கவை எதிரணிகள் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டன. அவரை, சமாதானத்தின் தேவதையாகவே தென் இலங்கை முன்னிறுத்தியது. அதனை, வடக்கிலும் கிழக்கிலும் நம்ம வைக்கும் அளவுக்கான ஒருங்கிணைப்பு, எதிரணியிடம் அப்போது காணப்பட்டது.

அதுதான், ஐ.தே.கவை சுமார் இரு தசாப்தகாலம், எதிரணியில் உட்கார வைக்கக் காரணமானது. 2002இல் ரணில், இரண்டு ஆண்டுகள் ஆட்சியைப் பிடித்தாலும், ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா, ஆட்சியை ஆட்டி வைத்தார். பாராளுமன்றத்தைக் கலைக்கவும் செய்தார்.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாள்களில், ராஜபக்‌ஷர்கள் யுத்த வெற்றிவாதத்தில் திளைத்துக் கொண்டு நடத்திய தேர்தல்களில், தன்னால் வெற்றி பற்றி சிந்திக்கவே முடியாது என்ற கட்டத்தில் ரணில், இன்னொரு யுத்த வெற்றி வீரரான சரத் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக மாற்றினார்.

ராஜபக்‌ஷர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய இராணுவத் தளபதியை, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகப் பொது வேட்பாளராக தமிழ்த் தேசிய கட்சிகளை ரணில் ஏற்க வைத்தார். சிங்கக் கொடியை சம்பந்தன் ஏந்தி, பொன்சேகாவுக்காகப்  பிரசாரம் செய்யும் காட்சிகள் அரங்கேறின. தமிழ் மக்களும் அந்தத் தேர்தலில், பொன்சேகாவுக்கு ஓரணியில் திரண்டு வாக்களித்தார்கள். ஆனால், அப்போது பொது வேட்பாளர் யுக்தி வெற்றியளிக்கவில்லை. ரணில் தன் தோல்வியைத் தவிர்ப்பதற்காக பொன்சேகாவை பகடையாக்கினார்.

ஆனால், 2015 ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்தன. அதுவும் தேர்தல் அறிவிக்கப்படும் இறுதி நாள்கள் வரையில், எதிரணி தயார்படுத்தும் பொது வேட்பாளர் யார் என்பதை, ராஜபக்‌ஷர்களுக்கு தெரியாமல், எதிரணியில் உள்ளவர்கள் மிக மிக இரகசியமாகப் பேணியமை, ராஜபக்‌ஷர்களின் தோல்விக்கு காரணமானது.

அது, மாத்திரமல்லாமல், மஹிந்த ஆட்சியில் மிக முக்கியமான நபராக,  அனைத்து ராஜபக்‌ஷர்களாலும் மதிக்கப்பட்ட மைத்திரியை, அவர்களுக்கு எதிராகவே பொது வேட்பாளராகத் தயார்படுத்தியமை, தென் இலங்கை மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, முழு இலங்கையிலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது.

அது, ராஜபக்‌ஷர்களை தோற்கடிப்பதற்கான அலையை தோற்றுவிக்கவும் காரணமானது. நல்லாட்சி உருவாகவும் 18ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கவும் வித்திட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஆட்சி அதிகாரம் பாராளுமன்றத்தோடும் பகிரப்பட்டது. அதன்மூலம் ஜனநாயக ஆட்சிக்கான தத்துவம் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டது.

ஆனால், ஆட்சித் தலைவர்களாக இருந்த மைத்திரியும் ரணிலும் தங்களுக்குள் முரண்பட்டு, நல்லாட்சியை இடைநடுவில் போட்டுடைத்தபோது, ராஜபக்‌ஷர்களின் மீள்வருகை உறுதி செய்யப்பட்டது.

69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்று, மீண்டும் ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்த போது, குறைந்தது ஒரு தசாப்தகாலத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சி பற்றிய கனவைக் காணும் வாய்ப்பு இல்லை என்ற நிலையே இருந்தது. ஆனால், அந்த நிலையை சில மாதங்களுக்குள்ளேயே ராஜபக்‌ஷர்கள் இல்லாமல் செய்தனர்.

இன்றைக்கு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இலங்கையை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். யார் யாரெல்லாம் ராஜபக்‌ஷர்களை நாட்டின் பாதுகாவலர்களாக முன்னிறுத்தினார்களோ, அவர்கள் எல்லாமும் நாட்டை விட்டு வெளியேறும் அவசரத்தில் இருக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்களின் ஆட்சி, இப்படியே இன்னும் சில மாதங்களுக்கு நீடித்தால், நாடு முழுமையாகத் திவாலாகிவிடும் என்று தென் இலங்கை சக்திகள் நம்பத் தொடங்கிவிட்டன. இந்தக் கட்டத்தில் இருந்துதான், பொது வேட்பாளருக்கான ஓட்டம் சூடுபிடித்திருக்கின்றது.

ராஜபக்‌ஷர்களைத் தோற்கடித்துவிட்டு, அடுத்த ஜனாதிபதி தேர்தலிலேயே அவர்களுக்கு ஆதரவளித்து, ஆட்சியில் பங்காளியாகிவிட்ட மைத்திரிக்கு, மீண்டும் பொது வேட்பாளராகும் ஆசை வந்திருக்கின்றது. எதிர்க்கட்சிகளை விட, அரசாங்கத்தை அதிகமாக விமர்சித்து வருபவர் மைத்திரிதான். ஆனால், அவரது கட்சி இன்னமும் அரச பங்காளியாகவே இருக்கின்றது.

கடந்த காலத்தைப் போன்று இம்முறையும் அரசாங்கத்தில் இருந்துவிட்டு, இறுதி நேரத்தில் தன்னைப் பொதுவேட்பாளராக முன்னிறுத்தும் எண்ணம் மைத்திரியிடம் இருக்கலாம். அவ்வாறான எண்ணம் அவரிடத்தில் இருப்பதை, ராஜபக்‌ஷர்கள் ஏற்கெனவே கண்டுகொண்டதால், அவரைத் தன்னுடைய முக்கிய அமைச்சர்களைக் கொண்டு, அதிகமாக விமர்சிக்க வைத்தனர்.

முன்னாள் ஜனாதிபதி, ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியின் தலைவர் என்கிற வரைமுறைகள் தாண்டி, மைத்திரியை நோக்கி, பாராளுமன்றத்தில் அமைச்சர்கள்  கைகளை நீட்டினார்கள். ஒரு கட்டம் வரையில் பொறுமை காத்த மைத்திரி, தனக்காக யாரும் வாதாட இல்லாத நிலையில், தானே தனக்காகக் களமாடத் தொடங்கினார்.

அதன் அடுத்த கட்டமாகத் தன்னைப் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் பணிகளைத் தொடங்கினார். ஆட்சியில் பங்காளிகளாக இருந்தாலும், தங்களைத் தீண்டத்தகாதவர்கள் போல, ராஜபக்‌ஷர்கள் நடத்துகிறார்கள் என்கிற வெப்பியாராம், சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், முக்கியஸ்தர்களிடம் தொடர்ச்சியாக இருந்தது. அப்படியான நிலையில்தான், மீண்டும் மைத்திரியை பொது வேட்பாளராக்கும் திட்டத்துக்கு அவர்கள் வலுச் சேர்க்கத் தொடங்கினார்கள்.

ஆனால், மைத்திரி தன்னை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்த போதிலும், அவரை எதிர்க்கட்சிகள் எதுவும் சீண்டவே இல்லை. ஏற்கெனவே ஜனாதிபதியாகி, ஒரு கட்டத்தில் ராஜபக்‌ஷர்களிடம் ஆட்சியைக் கையளிக்க முனைந்தமை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலான சிக்கல் என, மைத்திரி மீதான அதிருப்தி, ஐக்கிய மக்கள் சக்தியிடம் நீடிக்கின்றது.

அத்தோடு, தொடர்ச்சியாக நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாத ஒரு சிக்கலை, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தங்களது கட்சிக்கு வெளியில் இருந்து வேட்பாளர் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை.

இந்தக் கட்டத்தைப் ஏற்கெனவே புரிந்து கொண்ட சம்பிக்க ரணவக்க, தான் அங்கம் வகித்த ஜாதிக  ஹெல உறுமயவிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.  சஜித் பிரேமதாஸவுக்கு பௌத்த பீடங்களிடம் செல்வாக்கு இல்லை. அந்தப் புள்ளியில் தன்னைப் பௌத்தத்தின் காவலனாக அடையாளப்படுத்துவது இலகுவானது.

தென் இலங்கையில் கடும்போக்கு சக்திகள் தன்னை ஆதரிக்கும் என்கிற விடயங்களை முன்னிறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகலாம் என்பது  சம்பிக்க ரணவக்கவின் எதிர்பார்ப்பு. அதை முன்னிறுத்தியே, அவர் புதிய செயலணியாகச் செயற்படத் தொடங்கியிருக்கிறார்.

ஆனால், சஜித் பிரேமதாஸ தனக்குப் பதிலாக இன்னோருவரை வேட்பாளராக ஏற்கும் நிலையில் இல்லை. ராஜபக்‌ஷர்கள் மீதான மக்களின் அபிமானம், பெரும் வீழ்ச்சிப் புள்ளியில் இருக்கின்ற நிலையில், அதைப் பயன்படுத்தாதுவிட்டால், என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவரது எண்ணம். அதை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.

ஆனால், ஓர் எதிர்க்கட்சித் தலைவராக அவர் சரியாகச் செயற்படவில்லை என்கிற எண்ணம், கட்சியினரிடத்திலும் மக்களிடத்திலும் காணப்படுகின்றது. அது, இன்னொரு புறத்தில் சந்திரிகா குமாரதுங்கவை களத்தில் இறக்கியிருக்கின்றது.

மைத்திரியைப் பொது வேட்பாளராக்கியதில் தன்னுடைய பங்கு இருந்ததைக் காட்டிலும், இம்முறை கிங்மேக்கராகத் தன்னை உயர்த்தும் கட்டத்தில் சந்திரிக்கா நிற்கிறார். அதற்காக, ஏற்கெனவே ராஜபக்‌ஷர்களால் பழிவாங்கப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்துகிறார்.

அது தவிர, தென் இலங்கையின் முற்போக்கு சக்திகள், வழக்கமாகவே அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலுக்கு 30 மாதங்கள் இருக்கின்ற நிலையில், ஆரம்பித்திருக்கின்ற பொது வேட்பாளருக்கான ஓட்டம், எவ்வாறு முடிவுக்கு வருமென்று தெரியவில்லை. ராஜபக்‌ஷர்கள் தற்போது வீழ்ச்சிப் பாதையில் இருந்தாலும், அவர்களைத் தோற்கடிப்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல; அதற்கு அதிகமாக உழைக்க வேண்டும். முதலில், ஆளுமையுள்ள ஒருவரை எதிரணிகள் ஓரணியில் நின்று தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், ராஜபக்‌ஷர்கள் யுகம், இருண்ட யுகமாகத் தொடரும்.

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொது-வேட்பாளருக்கான-ஓட்டம்/91-290044

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.