Jump to content

பரி யோவான் பொழுதுகள்: பண்டிதர் Cup


Recommended Posts

பரி யோவான் பொழுதுகள்:

பண்டிதர் Cup - Prelude 

அந்தக் காலத்தில் பந்தடியில் மட்டுமல்ல படிப்பிலும் கலக்கிய பரி யோவான் கல்லூரி என்றால் எல்லோருக்கும் கிரிக்கெட் தான் உடனடியாக நினைவில் வரும், ஆனால் பரி யோவானில் காலத்திற்கு காலம் உருவான பலமான உதைபந்தாட்ட அணிகளின் வரலாறும் சாதனைகளும் கிரிக்கெட் அணிகளிற்கு இணையானவை, எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல. 

பரி யோவானின் மிடுக்கான சிவப்பு கறுப்பு வர்ணங்களிலான வரிவரி football jerseyயையும் முழங்கால் வரையும் நீளும் அதே நிறத்திலான socksஐயும் அணிந்து கொண்டு, பரி யோவானின் உதைபந்தாட்ட அணி ரொபேர்ட் வில்லியம்ஸ் மண்டபத்தின் பின்பகுதியில் இருந்த games room அடியில் அணி சேரும்.

அப்படியே ரொபேர்ட் வில்லியம்ஸ் மண்டத்தின் கரையால் கம்பீரமாக நடந்து வந்து, புளிய மரத்தடியில் மைதானத்திற்குள் இறங்கி, மெதுவாக ஓடத் தொடங்கி, lab பக்கம் உதைபந்தாட்டத் திடலுக்கு போடப்பட்டிருக்கும் வெள்ளைச் சுண்ணாம்புக் கோட்டை மிதித்துக் கொண்டு, தொம் தொம் என்று boots பாதங்கள் நிலத்தை அதிரவைக்க, சீரான வரிசையில் ஓடி மைதானத்தின் மத்திக்கு முன்னேறும் காட்சியைக் காண உண்மையிலேயே கண் கோடி வேண்டும். 

கிரிக்கெட்டில் Central Collegeற்கு எதிராக விளையாடும் Big Match எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போன்றது தான் St Patrick’s அணியுடன் மோதும் உதைபந்தாட்ட போட்டிகள். மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் யாழ்ப்பாணத்தின் கார்த்திகை மாதங்களில் யாழ்ப்பாண நகரமே ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உதைபந்தாட்ட நிகழ்வுகளில் ஓன்று SJC vs SPC football match தான்.

பழைய பூங்கா பக்கமாக நிலைகொள்ளும் பற்றிக்ஸ் அணி, தங்களது Green & Gold நிற jerseyகளை அணிந்து கொண்டு மிடுக்காக நடந்து, மெதுவாக ஓடி, திடலிற்குள் நுழையும் போது குனிந்து மைதானத்தை தொட்டு நெற்றியில் பிதா சுதன் பரிசுத்த ஆவி போட்டுக் கொண்டு களமிறங்க, மைதானத்தில் எழும் கரகோகஷம் கோட்டையில் இருக்கும் ஆமிக்காரனையே கிலி கொள்ள வைக்கும். 

வடமாகாணத்தில் மட்டுமல்ல முழு இலங்கைத் தீவிலும் மிகச்சிறந்த அணியாக வலம் வந்து கொண்டிருந்த பத்திரிசியார் அணியை பரி் யோவான் அணிகள் வீழ்த்திய வரலாறுகள் கோலியாத்தை வென்ற தாவீதின் கதைகளாக காலத்திற்கும் நிலைத்து நிற்கும். பற்றிக்ஸை வீழ்த்திய என்ன வீழ்த்திய, பற்றிக்ஸ் அணியை draw ஆக்கிய கதைகளே பெரும் எடுப்பில் பரி் யோவான் ஒன்றுகூடல்களிலும் குழுமங்களிலும் அலுக்காமல் திரும்ப திரும்பப் பேசப்படும். 

அதிலும் 1978ம் ஆண்டு பத்திரிசியார் மைதானத்திலேயே வைத்து வாமபாகன் அண்ணா தலைமை தாங்கிய பரி யோவான் அணி 4-0 கணக்கில் பத்திரிசியார் அணிக்கு கொடுத்த அடி, இன்னும் 200 வருடங்கள் கழித்தும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். 

பரி யோவான் வரலாற்றில் நீங்கள் தலைமை தாங்கிய 1978 அணி தான் சிறந்த அணியா என்று வாமபாகன் அண்ணாவை கேட்டால் “இல்லையடாப்பா, மூத்தத்தம்பி தலைமை தாங்கிய 1967ம் ஆண்டு அணி தான் மிகச் சிறந்தது” என்றார் ஜொனியன்ஸேக்கே உரித்தான விட்டுக்கொடுப்புடன். 

இலங்கை தேசிய U19 உதைபந்தாட்ட அணிக்கு ஆடி, முதலாவது Johnian Eagle விருது பெற்ற அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் விளையாடிய 1972 அணியையும் விடேலாது என்று பரி யோவான் உதைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும் கோச்சருமான அருள்தாசன் மாஸ்டர் வக்காலத்து வாங்கினார்.  

“1971ல் பற்றிக்ஸ் அணிக்கு இலங்கையின் தேசிய U19 அணிக்கும் தலைமை தாங்கிய பிரான்சிஸ் விளையாடினார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் சென் ஜோன்ஸிற்கு அந்தனிப்பிள்ளையும் பற்றிக்ஸிற்கு பிரான்சிஸும் கப்டனாக இருந்ததால், 71ல ரெண்டு பேரும் கப்டன் பண்ணவில்லை, ஆனால் ரெண்டு பேரும் டீமில் விளையாடினவ. எங்கட கிரவுண்டில் நடந்த அந்த மட்சில் நாங்க 2-1 அடிச்சு பற்றிக்ஸை தோற்கடிச்சம் ” அருள்தாசன் மாஸ்டர் சொல்லிக் கொண்டே போக அவரது குரலில் பெருமிதம் தொனித்தது. 

இந்த ஜொனியன்ஸ் அண்ணாமார் மற்றும் மாஸ்டர்மாரிடம் இருக்கும் ஒரு “கெட்ட பழக்கம்” எண்பதுகளின் வரலாற்றை கேட்டால் எழுபதுகள் அறுபதுகள் ஐம்பதுக்கள் வரலாறுகளையும் சுவைபட சேர்த்து சொல்லி விசராக்குவது தான்.

எண்பதுகளில் ரோபேர்ட் வில்லியம்ஸ் மண்டபத்தடியில் இருந்த மரம் என்ன என்று ஒரு கொண்ணரைக் கேட்க, அவர் “புளியமரம்” என்று ஒற்றை சொல்லில் பதிலைத் தட்டி விட்டு விட்டு, “கன வருஷங்களுக்கு முதல் நாலு இலுப்பை மரங்கள் அதில நிண்டது. கிட்டத்தட்ட அதுதான் Cricket Boundary line” என்று அடுத்த நிமிஷமே மிச்ச வரலாற்றையும் உட்பெட்டியில் எட்டிப் பார்க்க வைத்தார். 

“அதோடயடா, புளியங்காய்க்கு கல்லெறிஞ்சு வில்லியம்ஸ் ஹோல் ஓடுகள் உடையுதெண்டு tea intervalக்கு “புளியமரத்தடி duty”யும் prefectsக்கு இருந்தது எங்கட காலத்தில” என்ற கொசுறுத் தகவலையும் தந்துவிட்டு பறந்தார்.

அதே போலத் தான், 1978ம் ஆண்டு பற்றிக்ஸ் அணிக்கு அவங்கட மைதானத்தில் வைத்து கொடுத்த 4-0 வரலாறு பற்றியும் 1978 அணி தான் பரி யோவான் வரலாற்றில் சிறந்த உதைபந்தாட் அணியா என்று வாமபாகன் அண்ணாவைக் கேட்டால், அவர் ஒரு குட்டிக் கட்டுரையே எழுதி அனுப்பினார்.  

“1978 இன் உதைபந்தாட்ட அணி பரியோவானின் மிகச்சிறந்த அணியல்ல. ஆனால் எமது கல்லூரியின் வரலாற்றைத் தாங்கி வந்த சஞ்சிகையில் இவ்வணிபற்றி ஒரு சில வரிகள் எழுதப்பட்டுள்ளது. காரணம் நாம் 

 St. Patricks இற்கு எதிராக மிகப்பெரிய சாதனையொன்றைச் செய்தோம். அதாவது 4 - 0 என்ற வித்தியாசத்தில் St. Patricks ஐ தோற்கடித்தோம். 

 அது ஒரு நீண்டகால சாதனை. அதற்கு முன்போ பின்போ இவ்வாறான பெரிய வெற்றியை எமது கல்லூரி பெறவில்லை. இதில் முக்கியமான விடயமொன்றுண்டு. நான் குறிப்பிடும் சஞ்சிகை பரியோவானின் 150 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் போது எழுதுவதாக திட்டமிட்டார்கள். 

அதாவது 1973 இல்தான் எமது கல்லூரியின் 150ஆவது ஆண்டுவிழா. அப்போதுதான் Peto Memorial Hall உம் திறக்கப்பட்டது. ஆனால் சஞ்சிகை எதிர்பார்த்தபடி 1973 இல் வெளிவரவில்லை. 

சில பல தடங்கல்களால் வெளிவரமுடியாமல் போய் விட்டது. பின்பு 1983 இதனைப் பூர்த்தி செய்து வெளியிட்டார்கள். அப்போது 1973 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட சாதனைகள் Modern Era என்னும் தலைப்பில் எழுதப்பட்டது. அதானால்தான் 1978 இன் அணி அதற்குள் இடம்பெற்றது. 

இந்த சஞ்சிகைக்கு பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர் பரியோவானின் சிறந்த கல்விமானும், விளையாட்டு வீரனுமாகிய திசநாயகம். அத்துடன் பரியோவானின் 160 வருடங்களில் மிகச்சிறந்த உதைபந்தாட்ட அணியாகவும் விமர்சிக்கப்பட்டது மூத்ததம்பியின் தலைமையிலான 1967 ஆம் ஆண்டின் அணி தான். அவ்வருடம் விளையாடிய சகல போட்டிகளையும் வென்று சாதனை படைத்தது.” என்று எழுதி அனுப்பினார் வாமபாகன் அண்ணா.

அறுபதிகளிலும் எழுபதுகளிலும் ஆடிய பலமான பரி யோவான் உதைபந்தாட்ட அணிகளிற்கு கிட்டாத ஓரு அரிய சாதனையாக, யாழ்ப்பாண மாவட்ட உதைபந்தாட்ட சம்பியனாகும் பெருமை 1986ம் ஆண்டில் பார்த்திபன் அண்ணா தலைமை தாங்கிய பரி யோவான் அணிக்கு கிட்டியது. 

இன்று பரி யோவானின் Principal ஆகத் திகழும் துஷிதரன் அண்ணாவும், அண்மையில் காலமான நேசகுமார் அண்ணாவும் கூட அந்த உதைபந்தாட்ட அணியில் ஆடியிருந்தார்கள். 1986ல் பரி யோவானின் 1st XI உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் வேறு யாருமல்ல 1979ல் பரி யோவானிற்கு தலைமை தாங்கிய அருள்தாசன் மாஸ்டர் தான்.

1950களில் நடந்த யாழ்ப்பாணத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய ஒரு சம்பவத்திற்கு பின்னர் 40 ஆண்டுகளிற்கும் மேலாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் சுற்றுப் போட்டிகளில், பத்திரிசியார், பரி யோவான், யாழ்ப்பாணக் கல்லூரி, ஹாட்லி, ஹென்றீஸ் போன்ற பிரதான கிறிஸ்தவ பாடசாலைகள் எவையும் பங்கெடுப்பதில்லையாம். 

இந்த கறுப்பு வரலாற்றை மாற்றியமைத்தது 1986ல் விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பான SOLT (Students Organisation of Liberation Tigers) நடாத்திய யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்த அனைத்து பாடசாலகளிற்கும் இடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி தான்.

SOLT அமைப்பின் பொறுப்பாளராக முரளி இருக்க, பரி யோவான் மைதானத்தில் இடம்பெற்ற கப்டன் பண்டிதர் நினைவுக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்று போட்டியை SOLT அமைப்பின் நிரஞ்சன் ஒருங்கிணைத்து முன்னின்று நடாத்தினார்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளிற்கு பின்னர் அனைத்து யாழ்ப்பாண பாடசாலைகளும் பங்கெடுத்த, உண்மையை சொல்லப் போனால் பங்கெடுக்க வைக்கப்பட்ட, உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை பரி யோவான் கல்லூரி வென்ற கணத்தையும் அந்த போட்டிகளில் நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்களையுல் யாரால் தான் மறக்க முடியும்?..

அடுத்த பதிவில்.. பரி யோவான் வென்ற பண்டிதர் Cup 

 

ஜூட் பிரகாஷ்

மெல்பேர்ண்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.