Jump to content

படைப்பாளியைச் சுரண்டிக் கொழுக்கும் பதிப்பகத்தார்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பாளியைச் சுரண்டிக் கொழுக்கும் பதிப்பகத்தார்கள்!

-எழில் முத்து
531324-1.jpg

தமிழ்நாட்டில் பதிப்பகங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதில் நேர்மையாக எழுத்தாளனுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு தான் பஞ்சமோ பஞ்சம்! உச்சபட்ச பித்தலாட்டமும், சுரண்டலும் நிலவும் துறைகளில் பதிப்பகத் துறை முக்கியமானது. சொன்னால் நம்பமாட்டீர்கள், பல அறிவாளிகளை எல்லாம் அதோகதிக்கு ஆளாகியுள்ளார்கள்!

நல்ல வேளையாக எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நேர்மையான மீனாட்சி புத்தக நிலையத்தார் அமைந்தனர்! இந்த பதிப்பகம் வருடம்தோறும் ஜே.கேவுக்கு லட்சக்கணக்கில் ராயல்டி கொடுத்தனர். அவர் இறந்த பிறகும் விற்பனையில் 15% ராயல்டி இன்றும் தந்து வருகின்றனர்.

ஆனால், பிரபல எழுத்தாளர் சுஜாதாவிற்கு அப்படி அமையவில்லை.மென்மையான சுபாவமும், யாரையும் எளிதில் நம்பிவிடுபவருமான அவர் மிகவும் ஏமாற்றப்பட்டார்! அவர் புத்தக விற்பனையை நம்பி இல்லாததால் கொஞ்சம் அசால்டாக இருந்துவிட்டார். ஆனால், அவர் மறைவுக்கு பிறகு அவர் குடும்பம் அதிரடியாக தங்களை ஏமாற்றி வந்த அந்த பதிப்பாளரிடமிருந்து முற்றிலும் விலகி, தற்போது ஒரு நல்ல பதிப்பகத்தை பார்த்து பதிப்பு உரிமை தந்துள்ளனர். எழுத்தாளர்கள் சோ.தர்மனும், கி.ராவும், சாரு நிவேதிதாவும்,சிவனும்  கடந்த காலங்களில் தங்களின் ஏமாற்றங்களை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர்.

 

3934e78.jpg

இதே போல பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் கடுமையாக ஏமாற்றப்பட்ட நிலையில் தனியாக பதிப்பகம் ஒன்றை ‘தேசாந்திரி’ என்ற பெயரில் தானே நிறுவிக் கொண்டார். இந்த லிஸ்டில் எழுத்தாளர்கள் தமிழ்மகன், சுகிசிவம், நக்கீரன்,விமலாதித்த மாமல்லன்… போன்ற நிறைய பேரைக் குறிப்பிடலாம்!

பிரபல பத்திரிகையாளர் மணா அவர்கள் எழுத்தாளர்களை பதிப்பகத்தார் எப்படி எல்லாம் சுரண்டிக் கொழுக்கிறார்கள் என அவ்வப்போது தன் முகநூலில் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் நூலில் ஒரு எழுத்தாளன் ஏமாற்றப்பட்டு போராடி வென்ற கதையை மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் எழுதி இருப்பார். அந்த கண்ணீர் நிலையில் தான் இன்றும் பல படைப்பாளிகள் உள்ளனர்.

download-4.jpg

பிரபல எழுத்தாளர் ஜீவபாரதி தன் நூல்களை ஒரு இடதுசாரி இயக்க பதிப்பகத்திற்கு தான் ஆரம்பத்தில் கொடுத்தார். ஆனால், அவர்களிடம் ராயல்டியை பெறுவதற்கு ”தீக்குளித்து போராடுவேன்..”என்ற அளவுக்கு செல்ல வேண்டியவரானார். அதன் பிறகும் அவர் வேறு சில பதிப்பாளர்களுக்கு தந்து ஏமாற்றமடைந்த நிலையில் தற்போது தான் ஓரளவு சரியான ஆட்களைக் கண்டடைந்துள்ளார். சுமார் 100 நூல்களுக்கு மேல் படைத்துள்ள கவிஞர், தோழர் ஜீவபாரதியிடம் பேசிய போது,

”பதிப்பாளர், படைப்பாளர் உறவு குறித்து என்ன சொல்வது? தற்போது என்னைப் பொறுத்தவரை சரியான முறையில் நடந்துகொள்ளும் பதிப்பாளர்களிடமே எனது படைப்புகளை தருகிறேன். அவை பல பதிப்புகள் கடந்தும் வருகின்றன. குறிப்பாக எனது நூல்களை வெளியிடும் குமரன் பதிப்பகம்  மாதந்தோறும் ராயல்டியாக ௹.3000 தருகிறார். அதே போல் எனது தோழரும் பதிப்பாளர் ஜீவா பதிப்பகம் ராயல்டி-க்கு அதிகமாகவே தருகிறார். இதனை பிற பதிப்பாளர்களும் ராயல்டி தொகை விஷயத்தில் நடந்துகொண்டால் நல்லது” என்றார்.

kumaravel-1.jpg

இது குறித்து இந்த வரிசையில் ஆய்வு நூல்கள் 25-க்கு மேல் படைத்த எழுத்தாளர் குமரவேல்நம்மிடம் பேசும்போது,” பிரஸ், பைண்டிங். விற்பனையாளர்கள் யாருக்கும் பாக்கி வைக்க முடியாது – ஏமாத்த முடியாது. ஏமாத்துனா அடுத்த வேலை நடக்காது. அவங்களையும் கூட ஏமாற்றி அடுத்த பிரஸ்ல மாற்றி அச்சடிக்கும் பிராடு பதிக்கங்களும் உள்ளன!

நீங்களே பாருங்க, சம்பாதிக்கமலா பதிப்பகத்தார் காரு, பங்களான்னு இருக்கிறாங்க. பதிப்பாளர்கள் நல்லா இருக்கட்டும். மகிழ்ச்சி. ஆனால், தாங்கள் நல்லா இருப்பதற்கு அடித்தளமிட்ட எழுத்தாளரை பொருளாதாரத்தில் என்றைக்கும் அடித் தளத்திலேயே அழுத்தி வைக்கலாமா?  ஒரு பழமொழி உண்டு’ பதிப்பாளர் கார்லே போறான், படைப்பாளி இன்னும் நடந்துதான் போறான்’

நான் எழுதிய ஒரு நூலில் பல லட்சம் பார்த்தார் ஒரு பதிப்பாளர். எனக்கு ஒரு லட்சம் கூட தராமல் வெறும் பத்தாயிரம் தான் கொடுத்தார். மேலும் கூடுதலாக ஒரு பத்தாயிரத்தை வாங்குவதற்குள் 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அண்ணா, கலைஞர். / டைரி விற்பனையில் உலகம் முழுக்க வியாபித்துள்ள  ஒரு நிறுவனம் எனது நூலுக்கு 50 ஆயிரம் தர வேண்டிய நிலையில், வெறும் பத்தாயிரம் மட்டுமே கொடுத்தது.

எனது நூலைப் பதிப்பத்த பதிப்பாளர்-பெரிய நட்சத்திரப் பேச்சாளர்கள். எழுதாளர்கள் – அதிகாரிகளின் நூல்களை போடக்கூடிய வியாபாரி என்னுடைய 1,500 பக்கமுள்ள எம்.ஜி.ஆர் ஆய்வு நூல் வெளியிட்டார். நூலக ஆணையும் பெற்றுள்ளார். ஆனால், எனக்கு இன்னும் 5 சதம் கூட ராயல்டி தரவில்லை.

எனவே, பெரிய பதிப்பாளர்களை எதிர்பார்க்காமல் மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டும். புதிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எனது மனதில் பட்டது, என்னவென்றால் ஒரே பதிப்பகம் வெவ்வேறு பெயர்களில் கடைகள் எடுப்பதை கட்டுப் படுத்த வேண்டும். ஒரு சிலர் எட்டு முதல் 10 கடைகள் வரை எடுக்கிறார்கள்! இரண்டு கடைகள் அல்லது நான்கு கடைகள் மட்டுமே ஒதுக்க வேண்டும்” – என நீண்ட ஆதங்கத்தை வெளியிட்டார்.

642683-1.jpg

இன்றையச் சூழலில் பதிப்பாளர்கள், படைப்பாளர்களை மூன்று விதமாக அணுகுகிறார்கள்.

1 . ஆண்டுதோறும் புத்தக விற்பனை, அரசு நூலக ஆணை மூலம் விற்கும் தொகையில் 5% முதல் 15% வரை எழுத்தாளர்களைப் பொருத்து வழங்கிறார்கள்.

2 .அவுட்ரேட் முறையில் ஒரே முறையாக ரூ5,000 தொடங்கி 15,000 வரை தந்து விடுவார்கள்! அதற்கு பிறகு, அதனை எத்தனை பதிப்பு போட்டார்கள், விற்றார்கள் என எழுத்தாளர் கேட்க முடியாது.

3 .ஃபார்ம்-க்கு இவ்வளவு என்று – அது௹.250-ல் தொடங்கி அதிக பட்சம் 400 /- வரை வழங்குவது. இதுவும் ஒரே முறையோடு பணம் கொடுத்து முடிசிடறது. அதுக்கு மேல பல பதிப்புகள் போட்டு எவ்வளவு வேணா சம்பாரிச்சுக்குவாங்க!

இது சம்பந்தமாய் முறையான அக்ரிமெண்ட் பலரும் போடுவதாய் தெரியவில்லை. சிலர் தங்கள் மனோதர்மத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் குழுமனப்பான்மையை கைவிட்டு ஆசிரியர் பதிப்பாளர் உறவு நல்லுறவாக மாற முயற்சி எடுத்தல் வேண்டும்.

ஆயிரம் படைப்புகள் மலரட்டும் அவற்றை படைப்பவர் வாழ்வில் ஒளிவீசட்டும்.

இத்துடன், தற்போது நடக்கும் புத்தக கண்காட்சி குறித்தும் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில், எல்லா புத்தகங்களும் வளைத்தளத்துக்குள் நின்றாலும் மென்பொருள் குறித்த அறிவும் இயக்கமும் அறிந்தவர்கள் மட்டுமே படிக்க இயலும்.

இதற்கு வழிகாட்டுவது தான் புத்தகக் கண்காட்சிகள். கடந்த 44 ஆண்டுகள் கடந்து 45 ஆண்டை தொடும் பப்பாசி புத்தகப் பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம், கொரோனா காலகட்டத்தில் ஜனவரி மாதம் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய் இப்போது அரசு சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதித்தது.

hqdefault-2.jpg

இதில் சிங்கிள், டபுள் ஸ்டால்கள் 565 உள்ளன! ஒன்றிணைந்த நான்கு கடைகள் 56- உள்ளன! ஆக,மொத்தம் 786 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை திறந்துவைத்த தமிழக முதல்வர் இந்நிறுவனத்துக்கு ரூ 1 கோடி நிதியினை தந்ததோடு, இன்னும் சிறப்பான செய்தி ஒன்று உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன் என உறுதி தந்துள்ளார்!

இந்த கண்காட்சியின் பப்பாசியின் பதிவு பெற்ற விற்பனையாளர்., பதிப்பாளர்கள் கிட்டத்த 600 நிறுவனங்கள இருந்தாலும், கொரோனா முடக்கத்தல் பலர் கலந்து கொள்ள இயலவில்லை, விற்பனை மந்தத்தாலும் கலந்துகொள்ளவில்லை. இதில் புதிதாக 200 விற்பனையாளர்கள் பதிப்பாளர்கள் பதிவு செய்தும் உள்ளனர்.

hqdefault-1.jpg

 

பதிவு பெறாத பதிப்பாளர்கள் பலர் இருக்கவும் செய்கிறார்கள். அவர்களின் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்ட’ படைப்பு’ பதிப்பக ஜின்னா ,” நாங்களும் விண்ணப்பித்தோம். சென்ற ஆண்டில் கலந்தும் கொண்டோம். இந்த ஆண்டில் நாங்கள் செலுத்திய செக் கடைசி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டது. இக் கண்காட்சியால் இடம்பெற்றுள்ள பெரும் விற்பனையாளர்கள்,  பதிப்பாளர்கள் சிலர் ஃபோர்ஸ்டாலும், டபுள் ஸ்டாலும், சிங்கிள் ஸ்டாலும் எடுத்தது போதாது என்று இவர்களின் நூல்கள் அனைத்துக் கடைகளிலும் கொடுத்து வைக்கிறார்கள். திரும்பிய திக்கெல்லாம் தங்கள் புத்தகங்களெ தெரிய வேண்டும் என நினைக்கிறார்கள்! சிறு பதிப்பாளர்கள் நூல்கள் விற்பனை செய்ய முடியாமல் திணறுகிரார்கள்! ஆனால், பெரிய பதிப்பாளர்களோ புத்தகக் கண்காட்சியை  ஆக்டோபஸ் போல ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.

எங்கள் நிறுவனம் 20 தலைப்புகளில் இளம் படைப்பாளிகள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் படைப்புகளை வெளியிடுவதோடு நலிந்த படைப்ப்பாளர்களின் நூல்கள் வெளியிட்டு அவர்களின் வாழ்வியலுக்கு உதவுவது தோடு, இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சன்மானத்தோடு விருதுகளும் வழங்கி வழங்கிவருகிறோம்.எங்களுக்கு இடம் அளிக்காமல் இவர்கள் ஒரு குழுமனப்பான்மையோடு செயல்படுவது தான் வேதனை அளிக்கிறது” என்றார்.

கட்டுரையாளர்; எழில் முத்து

எழுத்தாளர், பத்திரிகையாளர்

 

 

https://aramonline.in/8048/book-publisher-writer-rayalty-cheating/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.