Jump to content

மின்வெட்டும் அரசியலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மின்வெட்டும் அரசியலும்

 என்.கே.அஷோக்பரன்
Twitter: @nkashokbharan

கடந்தவாரத்தில், ஒரு நாளைக்கு ஏறத்தாழ 5 மணித்தியாலங்கள் அளவு வரை இலங்கையின் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களின் பின் பெரும் மின்சார பற்றாக்குறை நிலையை இலங்கை எதிர்கொண்டு நிற்கிறது. இந்த நிலைவரக் காரணம் என்ன? குறுங்காலக் காரணம், இலங்கையிடம் பெற்றோலிய எரிபொருள் வாங்க போதிய டொலர்கள் இல்லை. ஆகவே இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிடம் கடன்வசதிகளைளப் பெற்றுக்கொண்டு பெற்றோலிய எரிபொருட்கள் இறக்குமதிசெய்தி வருகிறது. கிடைக்கும் பெற்றோலிய எண்ணையை,போக்குவரத்திற்கு அதனை ஒதுக்குவதா, அல்லது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பெருமளவில் கடன் செலுத்தவேண்டிய நிலையிலுள்ள இலங்கை மின்சார சபைக்கு அதனை வழங்குவதா என்ற கேள்வி எழுவதிலிருந்துதான் இலங்கையின் இன்றைய மின்பற்றாக்குறை பிரச்சினை தொடங்கியது எனலாம். கடனுக்கு வாங்கிய பெற்றோலியத்தை, கடனுக்கு வழங்கினால், மீண்டும் பெற்றோலியம் வாங்க மீண்டும் கடன் வாங்க வேண்டும். இது ஒரு விஷச்சக்கரம். இந்த முட்டுச்சந்தில்தான் இலங்கை முட்டிமோதி நிற்கிறது.

இது நிலைமையை மோசமாக்கிய குறுங்காலக் காரணம்தான். இதற்கெல்லாம் வழிவகுத்த நீண்டகாலக் காரணத்தை, அதாவது நோய்கான காரணத்தைப் பற்றி யோசிப்பது மிக முக்கியம். நீண்டகாலக் காரணம், இலங்கையின் அறமற்ற அரசியலும், கொள்கைப் பிழைகளும்தான். இலங்கையின் மின்சாரத் துறை என்பது அரசாங்கத்தின் ஆதிக்கத்தின் கீழுள்ளதொன்று. அண்மைத் தசாப்தங்களில் தனியார் துறைக்கு மின்பிறப்பாக்க அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது உண்மை, ஆனால் மின் வழங்கல் என்பது அரசாங்கத்தின் தனியுரிமையிலேயே இருக்கிறது. இலங்கை மின்சாரத்துறையை பெருமளவில் கொண்டுநடத்துவது இலங்கை மின்சார சபை. 2010 முதல் 2019 வரையிலான 10 வருட காலப்பகுதியில், இலங்கை மின்சார சபையின் மொத்த நட்டம் ரூ. 246 பில்லியன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மேலும் பல பில்லியன்கள் நட்டத்தை இலங்கை மின்சார சபை அடைந்துள்ளது.

மின்சாரம் என்பது அனைத்து நுகர்வோருக்கும் தேவைப்படும் ஒன்று. உலக அளவில் மின்சக்தி பிறப்பாக்கம் மற்றும் வழங்கல் என்பன பெரும் இலாபம் தரும் வியாபாரம். இலங்கை மின்சார சபை, இலங்கையின் மின்துறையில் கிட்டத்தட்ட தனியுரிமை கொண்டுள்ளது. அப்படியானால் அது ஏன் நட்டத்தில் இயங்குகிறது? இதற்கு காரணம் இலங்கையின் அரசியலும், அதன்பாலான நிர்வாகச் சீர்கேடுகளும்தான். ஒரே ஒரு உதாரணம் இதற்குப் போதும். அண்மையில் சமூக ஊடகங்களில் வௌிவந்த தகவல்களின் படி, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 2015ல் இருந்து தனது வீட்டிற்கான மின்கட்டணம் கட்டாமல் இலங்கை மின்சார சபைக்கு மீதம் வைத்துள்ள தொகை ஒரு கோடியே இருபது லட்சத்து ஐம்பத்து ஆறாயிரத்து எண்ணூற்று மூன்று ருபாய்களும் முப்பத்தெட்டு சதங்களும்! ஒரு சாதாரண குடிமகன் இரண்டாயிரம் ரூபாய் மின்கட்டணத்தை இரண்டு மாதங்கள் கட்டாமல் விட்டாலே மின்சாரத்தை துண்டிக்கும் மின்சார சபை, அமைச்சருக்கு மட்டும் கோடிக்கணக்கில் கருணை காட்டுகிறது. இப்படி மாறி மாறி கருணை காட்டினால், மின்பிறப்பாக்கத்திற்குத் தேவையான எரிபொருள் வாங்க மின்சார சபையிடம் எப்படிப் பணம் இருக்கும்?

இந்த இடத்தில் இன்னொரு கேள்வி வருகிறது. நீர்மின்னுற்பத்தி, சூரியசக்தி மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி என மின்னுற்பத்தி செய்யத்தக்க இலங்கை ஏன் பெற்றோலிய எரிபொருள் மூலமான மின்னுற்பத்தியில் பெரிதும் தங்கியிருக்கிறது? 1995 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நாட்டின் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 100% நீர்மின்சாரமே பங்களித்தது. எவ்வாறாயினும், இலங்கையின் மின்சார உற்பத்தியில் நிலக்கரி மற்றும் அதிக விலையுயர்ந்த எண்ணெய் மூலமான மின் உற்பத்தியின் பங்களிப்பு கடந்த இரண்டு தசாப்தங்களாக மின்சார தேவையின் விரைவான அதிகரிப்பு மற்றும் பெரிய புதிய நீர் மின் வசதிகளை உருவாக்குவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட சாத்தியக்கூறுகளால் பல ஆண்டுகளாக தொடர்ச்சியான உயர்வைக் கண்டுள்ளது. இந்த மாற்றம் செலவுகளை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றும் மிகக் குறைந்த செலவிலான மின்னுற்பத்தி நீர் மின்னுற்பத்தியாகவே இருக்கிறது. ஆனால் நீர்மின் நிலையங்களின் பங்களிப்பு வானிலை நிலைமைகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது. இது வெவ்வேறு ஆண்டுகளில் அதன் பங்களிப்பில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களை விளக்குகிறது. மழை நன்கு பெய்யும் ஆண்டுகளில், நீர்மின் உற்பத்தியானது இலங்கை மின்னுற்பத்தியில் 40%க்கு மேல் கூட அதிகரிக்கிறது. ஆனால் வறண்ட ஆண்டுகளில், நீர்மின் உற்பத்தியில் உள்ள இடைவெளியைக் குறைக்க எண்ணெயில் இயங்கும் அனல் மின் நிலையங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன

மறுபுறத்தில் சூரியசக்தி மின்பிறப்பாக்கம் பற்றி இன்னும் இலங்கை தீவிரமாகச் சிந்திக்கவேயில்லை. அதைப்பற்றி சிந்திப்பது அவசியம். முறையான திட்டத்தை இலங்கை முன்னெடுத்தால் சூரியசக்தியிலிருந்து இலங்கை இன்னும் பலன்பெறும். தென், வட மத்திய, வட மேல் மாகாணங்கள் ஆகிய பகுதிகளில் சூரியசக்தி மின்பிறப்பாக்க பூங்காக்கள் அமைத்தாலே அது இலங்கையின் மின்தேவையின் கணிசமான பங்கை பூர்த்தி செய்யும். இதற்கான மூலதனம் அதிகம். ஆனால் நீண்டகாலத்தில் அதற்கேற்ற பலனை அது தரும். இது மிகத் தூய்மையான சக்தி என்பதனையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.

மேலும் இலங்கையில் பரவலாக அமைந்துள்ள சிறிய நீரூற்றுக்களில், மின்பிறப்பாக்கம் செய்யக்கூடிய சிறிய நீர்மின்நிலையங்களை அமைக்க இலங்கை அரசாங்கம் தனியார் துறைக்கு ஊக்கமும், அனுமதியுமளித்தால். அப்படி ஒரு 100 - 200 சிறிய நீர்மின்பிறப்பாக்க நிலையங்கள் உருவானால் அது இலங்கையின் மொத்த மின்னுற்பத்திக்கு இன்னொரு 300 - 400 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும்.

இலங்கை அணுமின்னுற்பத்தி பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று கருத்துரைப்போரும் உளர். 2010ல் இலங்கை அரசாங்கமானது, 2030 அளவில் 1000 மெகாவோட் மின்பிறப்பாக்கும் அணுமின்னிலையத்தை 2030 அளவில் அமைக்கத் திட்டமிட்டிருந்தது. 2018, இலங்கையில் அணுமின்னிலையம் அமைப்பது பற்றி இலங்கை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. ரஷ்யா, இலங்கையில் அணுமின்னிலையமொன்றை ஒருநாள் அமைக்கும் என்று 2020ல் இலங்கைக்கான ரஷ்ய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரை இவையெல்லாம் பேச்சளவிலேயே நிற்கின்றன. இன்று உலகளவில் ரஷ்யா சந்தித்து நிற்கு தடைகளால், இதனுடைய உடனடி சாத்தியப்பாடுகள் எல்லாம் கேள்விக்குறியே. அணு மின்சாரம் என்பது உமிழ்வு இல்லாத சுத்தமான சக்தி மூலமாகும். இது பிளவு மூலம் சக்தியை உருவாக்குகிறது, இது ஆற்றலை உற்பத்தி செய்ய யுரேனியம் அணுக்களை பிரிக்கும் செயல்முறையாகும். பிளவு மூலம் வெளியிடப்படும் வெப்பம், பெற்றோலிய எரிபொருட்களால் வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் துணைப் பொருட்கள் இல்லாமல் மின்சாரத்தை உருவாக்க வழிவகுக்கிறது. ஆனால் அணுமின்னிலையத்தின் பாதுகாப்பு, கதிர்வீச்சு ஆபத்துக்கள் போன்ற சிக்கல்கள் அணுமின்னிறலையத்தில் உள்ளது. ஆனால் நாட்டில் மின் தேவை பூதாகரமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கை அணுமின்னுற்பத்தியைப் பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கை மின்சார சபை என்ற தனியுரிமையை சீரமைப்பது அவசியமாகிறது. இலாபத்தில் இயங்க வேண்டிய ஒரு துறையை, பல பில்லியன்கள் நட்டத்தில் இயங்க வைத்துக் கொண்டிருப்பது என்பது நிர்வாகச் சீர்கேட்டையே சுட்டிக்காட்டி நிற்கிறது. மின்பிறப்பாக்க கப்பல்களை வரவழைத்து, அதில் பெற்றோலிய எரிபொருள் மூலம் பிறப்பிக்கப்படும் மின்சாரத்தை பல மடங்கு விலைகொடுத்து வாங்கும் காரியமும் இலங்கையில் அரங்கேறியிருக்கிறது! இப்படி எத்தனையோ “டீல்களைப்” பட்டியலிடலாம். அரசாங்கத்தின் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை, மின்சாரத்துறையின் நிர்வாக சீர்கேடு என்பது தொடரவே செய்யும். இந்த நிலையை மாற்றியமைப்பது அவசியம்.

அடிப்படைகளை மாற்றாமல், கொள்கைகளை மாற்றாமல், கட்டமைப்புக்களை மாற்றாமல் இந்த நோயைத் தீர்க்க முடியாது. கடனெடுத்து இன்று மின்சாரத்தை உற்பத்தி செய்து, இன்றைய தினத்தைக் கடத்திவிடலாம். ஆனால் இப்படி எத்தனை நாட்கள் சமாளிக்க முடியும்? கடனெடுக்க முடியாத நிலைவந்தால், அத்தியாவசிய சேவைகள் தாண்டி வேறு எதற்கு மின்சாரம் இல்லாத இருண்ட யுகத்தையே நாம் நிதர்சனத்தில் அனுபவிக்க வேண்டி வரும். இன்றை நிலையில் அது வெறும் பயங்கரமான கற்பனையல்ல, யதார்த்தத்தில் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகவே இருக்கின்றன.

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மின்வெட்டும்-அரசியலும்/91-292072

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.