Jump to content

பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே யார் கொண்டு போவது? எப்படிக் கொண்டு போவது? நிலாந்தன்.


Recommended Posts

பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே யார் கொண்டு போவது? எப்படிக் கொண்டு போவது? நிலாந்தன்.

who-how-what-750x375.png

மற்றொரு ஜெனிவா கூட்டத்தொடர் கடந்து போகிறது. ஐநா மன்றம் மீண்டும் ஒரு தடவை உக்ரைனில் தனது கையாலாகாத்தனத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஓர் உலகச் சூழலில், மற்றொரு ஜெனிவா கூட்டத்தொடர் நம்மை கடந்து போகின்றது.கடந்த மார்ச் மாத கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்படட விடயங்களில் எத்தனை கடந்த ஓராண்டுகாலப் பகுதிக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவ்வாறு நிறைவேற்றுவதற்கு போதுமான நிதி இந்த ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு ஒதுக்கப்படவில்லை என்ற தொனிப்பட மனித உரிமைகள் ஆணையரின் இவ்வாண்டுக்கான இலங்கை தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி மேற்படி நடவடிக்கைகளை “கட்டுப்படுத்துவதாக “அந்த அறிக்கை கூறுகிறது .

கடந்த மார்ச் மாத ஜெனிவா தீர்மானத்தில் ஒரு விடயம் கூறப்பட்டது. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளைத் திரட்டுவதற்கான ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்பதே அது. ஆனால் அது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மூன்று கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டிருந்த ஒரு பொறிமுறையைப் போன்றது அல்ல. சிரியாவிலும் மியான்மரிலும் உருவாக்கப்பட்ட பொறிமுறைகளோடு ஒப்பிடுகையில் இது பலவீனமானது என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. எனினும் அப்பொறிமுறையை கூட்டமைப்பு வரவேற்றிருந்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையர் கடந்த செப்டம்பர் மாதம் வாய்மூல அறிக்கையில் அப்பொறிமுறை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அது கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து இயங்க தொடங்கும் என்று மனித உரிமைகள் ஆணையர் குறிப்பிட்டிருந்தார்.

அப்பொறிமுறையானது சான்றுகளைத் திரட்டுடுவதற்கான அலுவலகம் என்று அழைக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.அந்த அலுவலகத்துக்கு தேவையான நிதியை ஒஸ்ரேலியாவும் பிரித்தானியாவும் வழங்க முன்வந்தன. உரிய நிதி கிடைத்ததும் அந்த அலுவலகம் இயங்கத் தொடங்கும் என்று ஒரு பொதுவான எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி என்றால் கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து அந்த அலுவலகம் இயங்கத் தொடங்கி இன்று வரையிலும் என்ன செய்திருக்கிறது?

கிடைக்கும் தகவல்களின்படி, அந்த அலுவலகம் தொடர்பாக எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நிலைமைகள் முன்னேறவில்லை என்று தெரிகிறது. அந்த அலுவலகம் 13 நிபுணர்களைக் கொண்டதாக அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு வழங்கும் நிதியை 40 விகிதத்தால் குறைக்க வேண்டும் என்று சீனா போன்ற அரசாங்கத்துக்கு ஆதரவான நாடுகள் ஐநா வை வற்புறுத்தியதாகத் தெரிகிறது. அதன் விளைவாக 60 வீத நிதியே அந்த அலுவலகத்துக்கு ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. அவ்வாறு எதிர்ப்பார்க்கப்பட்டதை விடவும் குறைந்தளவு நிதி ஒதுக்கப்படுவதால் அவ்வலுவலகத்துக்குரிய நிபுணர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி நிபுணர்ர்களின் எண்ணிக்கை எட்டாகக் குறைக்கப்பட்டு உள்ளது என்றும், இதில் எட்டாவது நிபுணர் இந்த மார்ச் மாதமளவில் நியமிக்கப்படுவார் என்றும் உத்தியோகப்பற்றற்ற ஒரு தகவல் தெரிவிக்கிறது.

அதாவது கடந்த ஜனவரி மாதம் மூன்று கட்சிகளும் இணைந்து ஐநாவிடம் கேட்டததை விடவும் பலவீனமான ஒரு பொறிமுறைதான் பரிந்துரைக்கப்பட்டது. அங்கேயும் வழங்கப்பட்ட நிதியை வெட்டி அதன்மூலம் அப் பொறிமுறையானது மேலும் பலவீனமாக்கப்பட்டிருக்கிறது.

மேலும், அந்த அலுவலகம் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் என்றும் தெரிகிறது. அந்த அலுவலகத்துக்கு சமாந்தரமாக உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றையும் உருவாக்க வேண்டும் என்று ஐநா எதிர்பார்ப்பதாகவும், ஆனால் இலங்கை அரசாங்கம் அதை அடியோடு நிராகரித்து விட்டதாகவும் தெரிகிறது.அது மட்டுமல்ல இம்முறை கூட்டத்தொடரில் ஐநா வுக்கு சென்ற அரச தூதுக்குழு அந்த அலுவலகத்தை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அனைத்துலக அளவில் நாட்டுக்கு வெளியே இயங்கும் அந்த அலுவலகத்தையே நிராகரிக்கும் ஓர் அரசாங்கம், நாட்டுக்குள் எப்படி அதற்கு சமாந்தரமாக ஒரு உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக்கொள்ளும்?

எனவே தொகுத்துப் பார்த்தால் ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நீதி கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மிகக் குறிப்பாக உக்ரேனில் நடப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிகத் தெளிவாகத் தெரியும். ஓர் அரசுடைய தரப்பு மேற்கு நாடுகளில் முழுப் பின்பலத்தோடு ரஷ்யாவுக்கு எதிராக நிற்கிறது. எனினும் ஐநா மன்றத்தால் உக்ரேனில் நடப்பவற்றை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே உண்மை நிலையாகும்.ஐநா ஓர் அரசுகளின் அரங்கம்.அதில் அரசுகள்தான் அங்கம் வகிக்கின்றன. அப்படிப்பட்ட தோர் அரங்கிலேயே அரசுடைய மக்களாகிய உக்ரேனியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. உக்ரைன் நிலவரம் பலவான்தான் பாக்கியவான் என்பதைத்தான் மறுபடியும் நிரூபித்திருக்கிறது. அரசுடைய ஒரு மக்கள் கூட்டத்தின் கதி இதுதான் என்றால் அரசற்ற தரப்பு ஆகிய ஈழத் தமிழர்களின் நிலை எப்படி இருக்கும்?

அப்படி என்றால் ஐநாவுக்கு வெளியேதான் நீதியைத் தேடிப் போகவேண்டும். கடந்த ஜனவரி மாதம் ஐநாவுக்கு கடிதம் எழுதிய மூன்று கட்சிகளும் அப்படித்தான் கேட்டிருந்தன. பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று. தமிழ் மக்கள் தமக்குரிய நீதியை ஐநாவிடம் எதிர்பார்ப்பதை விடவும் அனைத்துலக நீதிமன்றங்களிடம்தான் எதிர்பார்க்க வேண்டும் என்பதை மூன்று கட்சிகளும் ஏற்றுக்கொண்டு அக்கூட்டுக் கடிதத்தை அனுப்பின.

அவ்வாறு பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்ததும் அதை உறுதியாக வலியுறுத்தியதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். அக்கோரிக்கையை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஏனைய இரண்டு கட்சிகளும் அதை ஏற்றுக் கொண்டன. அதனால் அவ்வாறு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அது கடந்த 12 ஆண்டுகளில் தமிழ் தரப்பில் ஏற்பட்ட மிக அபூர்வமான ஒர் அடைவாகப் பார்க்கப்பட்டது. ஆனால் அக்கடிதத்தை எழுதி சரியாக 14 மாதங்கள் ஆகிவிட்டன. அக்கடிதத்தில் கேட்கப்பட்ட கோரிக்கையை நோக்கி உலக சமூகத்தை வளைத்தெடுப்பதற்கான வேலைத் திட்டம் எதுவும் மேற்படி மூன்று கட்சிகளிடமும் இருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

அக்கடிதத்தை அனுப்பிய பின் தமிழ்க் கட்சிகள் தங்களுக்கிடையே அசிங்கமான விதத்தில் மோதிக்கொண்டன. இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டது யார் ஏற்றுக் கொள்ளாதது யார் என்றெல்லாம் விவாதத்தில் ஈடுபட்டன. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அக்கடிதத்தை அனுப்பிய பின் கடந்த 14 மாதங்களில் என்ன நடந்திருக்கிறது என்று தொகுத்துப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று வலியுறுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதற்காக என்ன செய்திருக்கிறது என்பதனை அக்கட்சிதான் கூற வேண்டும். அனைத்துலக நீதி என்பது அரசுகளின் நீதிதான். அது தூய நீதி அல்ல. அரசுகளின் நீதி என்பது இறுதியிலும் இறுதியாக அரசியல் தீர்மானம்தான். எனவே அரசுகள் ஈழத் தமிழர்கள் தொடர்பில் அரசியல் தீர்மானத்தை எடுக்கும் விதத்தில் அரசுகளை நோக்கி lobby-லொபி செய்யவேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த 14 மாதங்களிலும் அவ்வாறு செய்திருக்கிறதா ?

அதேசமயம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு அக்கடிதத்தில் ஒப்பமிட்டு ஏனைய கட்சிகள் இதுவிடயத்தில் கடந்த 14 மாதங்களில் என்ன செய்திருக்கின்றன? கடிதம் எழுதுவதுதான் நீதிக்கான போராட்டமா ?

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கி டெலோ இயக்கத்தின் முன் முயற்சியால் ஐந்து கட்சிகளுக்கிடையே ஓர் ஒருங்கிணைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரை நோக்கி ஒரு கடிதமும், இந்தியாவை நோக்கி ஒரு கடிதமும், இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கி ஒரு கடிதமும் அனுப்பப்பட்டிருகின்றன.

மொத்தம் மூன்று கடிதங்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கின்றன. ஐந்து கட்சிகளின் கூட்டு அனுப்பிய கூட்டுக் கடிதத்தின் விளைவாக கடந்தவாரம் ஐநா மனித உரிமைகள் ஆணையகம் மேற்படி கட்சித் தலைவர்களோடு ஒரு மெய்நிகர் சந்திப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் ஒரு புதிய ஒருங்கிணைப்பு முயற்சி என்ற அடிப்படையில் மேற்படி ஐந்து கட்சிகளையும் ஐநா மனித உரிமைகள் ஆணையகம் கவனத்தில் எடுத்திருப்பதாக மேற்படி சந்திப்புக்கு ஒரு விளக்கம் தரப்படுகிறது.

இம்முறை ஜெனிவாவுக்கு தாயகத்திலிருந்து தமிழ்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் போகவில்லை. அரசாங்கத்தின் தூதுக்குழு ஒன்றுதான் சென்றிருக்கிறது. தமிழ்த்தரப்பு ஏன் யாரையும் அனுப்பவில்லை? இது விடயத்தில் மெய்நிகர் சந்திப்பு மட்டும் போதுமா?

ஒருபுறம் அனைத்துலக அளவில் உக்ரேன் விவகாரத்தில் ஐநாவின் கையாலாகாத்தனம் வெளிப்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் தமிழ் மக்களுக்கு சார்பானது என்று நம்பப்படும் சான்றுகளைத் திரட்டும் அலுவலகத்தின் பலம் குறைக்கப்பட்டிருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், 12 ஆண்டுகளின் பின்னரும் ஜெனிவாவில் தமிழ் மக்களின் நிலை பரிதாபகரமாகத்தான் தெரிகிறது. ஜெனிவாவுக்கு கடிதம் எழுதுவதற்கும் அப்பால், நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்குமப்பால் பொறுப்புக்கூறலை ஐநாவுக்கு வெளியே கொண்டு போகும் விடயத்தில் தமிழ் கட்சிகள் விசுவாசமாக உழைக்கத் தவறிய மிக வறிய ஓர் அரசியற் சூழலில் மீண்டும் ஒரு ஜெனிவா நம்மை கடந்து செல்கிறது.

https://athavannews.com/2022/1270582

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.