Jump to content

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் உணர்த்தும் செய்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் உணர்த்தும் செய்தி

புருஜோத்தமன் தங்கமயில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவையும் அவரது சகோதரர்களையும் ஆட்சியை விட்டுவிட்டு, வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி,  ஐக்கிய மக்கள் சக்தி செவ்வாய்க்கிழமை (15) நடத்திய போராட்டத்தால் கொழும்பு அதிர்ந்தது.

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் நுழைந்து, ராஜபக்‌ஷர்களின் உருவப் பொம்மைகளை எரித்தார்கள். வழக்கமாக கட்சிகள், அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் இருந்து, இந்தப் போராட்டம் பெருமளவு மாறுபட்டிருந்தது.

இந்தப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஒழுங்கு செய்திருந்தாலும், பங்குபற்றியவர்களில் கணிசமானவர்கள் கடந்த காலத்தில் ராஜபக்‌ஷர்களுக்கு வாக்களித்தவர்கள்; அவர்களுக்காக போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள். ஆனால், இம்முறை ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகவே வீதிக்கு வரவேண்டிய கட்டாயத்தை, காலம் அவர்கள் மீது திணித்திருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்து வைத்திருக்கும், ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் இந்தப் போராட்டம், புதிய புதிய வடிவங்களில் இனி தொடரச் செய்யும். அதுபோல, அனைத்து எதிர்க்கட்சிகளும் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களை, நாடு பூராவும் மக்களின் பெரும் பங்களிப்போடு நடத்திக் காட்டும்.

image_9c692a4503.jpg

ஏனெனில், இன்றைக்கு ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்களின் எழுச்சி என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதுவும் தென் இலங்கை மக்கள், ராஜபக்‌ஷர்களை தேசத்தின் காவலர்கள், அபிவிருத்தி நாயகர்கள் என்கிற தேர்தல் கால பரப்புரைகளை நம்பி வாக்களித்தவர்கள். அந்த நம்பிக்கையை, ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களுக்குள் ராஜபக்‌ஷர்கள் பொய்யாக்கினார்கள். எரிபொருட்களுக்கான வரிசை, சமையல் எரிவாயுவுக்கான வரிசை, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு என்று நாடே அல்லாடுகின்றது. வரிசைகளில் காத்திருப்பு என்பது, பல மணித்தியாலங்கள் என்கிற அளவைத் தாண்டி, நாள்கணக்கில் என்றாகிவிட்டது!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்ட போது, மண்ணெண்ணை அடுப்புக்கு மாறிய மக்கள், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, மின்சார அடுப்புக்கும், விறகு அடுப்புக்கும் மாறினார்கள். மின்சார அடுப்புக்கு மாறிய மக்கள் மீது, ஏழு மணித்தியால மின் தடை, அதிலும் பிரச்சினையை தோற்றுவித்தது.

இன்றைக்கு நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், ராஜபக்‌ஷர்களை திட்டித்தீர்க்கும் காட்சிகளை காணலாம். மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து, எந்தவித கரிசனையும் இன்றி செயற்பட்ட ராஜபக்‌ஷர்களின் பொருளாதார அணுகுமுறை, மக்களை நடுத்தெருவுக்கு இறக்கி விட்டுள்ளது.

வழக்கமாகத் தங்கள் ஆட்சிக்கு எதிரான போராட்டங்ளை, ஆயுத முனையில் அடக்கி ஒடுக்கும் ராஜபக்‌ஷர்கள் இம்முறை அடக்கி வாசிக்க முனைகிறார்கள். ஏனெனில், ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடும் நோக்கிலேயே நடத்தப்பட்டது. ஆனால், அது ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் நுழைந்து, சீற்றத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு மாறியது.

image_626360424f.jpgசவப்பெட்டியையும் உருவ பொம்மைகளையும் ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் கொண்டு வந்து, போராட்டக்காரர்கள் எரிக்கும் மட்டும் பொலிஸாரும் பாதுகாப்புத்தரப்பினரும் அமைதியாக இருந்ததையே காண முடிந்தது.

இதற்கு முன்பு இவ்வாறான போராட்டங்கள், ஜனாதிபதி செயலக வளாகத்தை அண்மிக்கும் முன்பே கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டும், தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பார்கள்.

ஆனால், இந்தப் போராட்டத்தின் போது, பாதுகாப்புத் தரப்பினருக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் சூழல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக பலப்பிரயோகம் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற உத்தரவு ராஜபக்‌ஷர்களால் வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகின்றது.

ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் ஏற்கெனவே பெரும் கோபத்தோடு இருக்கும் மக்களைக் கட்டுப்படுத்துவது இயலாமல் போய்விடும் என்கிற எச்சரிக்கை உணர்வே, ராஜபக்‌ஷர்களை அடக்கி வாசிக்க வைத்திருக்கின்றது. இல்லையென்றால், ராஜபக்‌ஷர்களுக்கு ஆயுதப் பலப் பிரயோகம் என்பது இயல்பான ஒன்றுதான்.

இன்னொரு பக்கத்தில், ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆட்சியை யார் பிடிப்பது என்கிற போட்டியில் எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் பங்காளியான சுதந்திரக் கட்சியும் இருக்கின்றன. ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் வல்லமை, ஐக்கிய மக்கள் சக்திக்கே இருக்கின்றது என்கிற நம்பிக்கையை, நாட்டு மக்களிடத்தில் ஏற்படுத்தும் ஓட்டத்தில், சஜித் பிரேமதாஸ முந்த நினைக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலிலும், அதன் பின்னரான பொதுத் தேர்தலிலும் ராஜபக்‌ஷர்களிடம் பெருந்தோல்வியைக் கண்ட சஜித், அடுத்த பத்து வருட காலத்துக்குள் ஆட்சியைக் கைப்பற்றுவது இலகுவான காரியமல்ல என்கிற உணர்வோடுதான் இருந்தார்.

ஆனால், ராஜபக்‌ஷர்களின் தற்போதையை ஆட்சித் தோல்வி, அவரை இலகுவாக ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஏதுகைகளை உண்டு பண்ணியிருக்கின்றது. ஓர் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அரசியலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் சஜித் முன்னெடுத்து இருக்கவில்லை. அவர், யால சரணாலயத்தில் பொழுது போக்குவதிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டார். மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி இருக்கவில்லை.

image_dd63c940ec.jpgஆனால், இப்போது ஆட்சிக்கு எதிராக மக்களே வீதிக்கு இறங்கிவிட்ட பின்னர், சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது என்கிற ரீதியில் செயற்பட ஆரம்பித்திருக்கிறார். அத்தோடு ராஜபக்‌ஷர்களுக்கு மாற்றாக, மீண்டும் மைத்திரியும் புதிதாக சம்பிக்க ரணவக்கவும் தங்களைத் தென் இலங்கையில் முன்னிறுத்த ஆரம்பித்திருப்பது, தன்னுடைய இடத்தையே கேள்விக்குள்ளாக்கும் என்கிற பயம் சஜித்துக்கு ஏற்பட்ட பின்னரே, அவர் வீதிக்கு வந்திருக்கின்றார்.

மக்களும் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான கோபத்தின் போக்கிலேயே, சஜித்தை நோக்கி வருகிறார்கள். இந்த இரண்டு புள்ளிகளையும் இணைத்தால், ராஜபக்‌ஷர்களை அகற்றலாம் என்பது ஏனையவர்களின் எண்ணம். அதற்காக சஜித்தை நோக்கி, தென் இலங்கையின் சிறிய கட்சிகளும் அமைப்புகளும் இம்முறை வரத் தொடங்கியிருக்கின்றன.

நாட்டின் பொருளாதார நிலை, தற்போதுள்ள நிலையில் தொடர்ந்தால் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி 300 ரூபாயை வரும் சில நாள்களில் எட்டிவிடும். அது, மக்கள் மீதான பொருளாதாரச் சுமையை இன்னும் இன்னும் அதிகமாக்கிவிடும். ஆறு மாதங்களுக்கு முன்னர் வாங்கிய பொருளொன்றை, இரண்டு மடங்கு பணம் செலுத்திப் பெற வேண்டி ஏற்படும்.

ஆனால், மக்களின் வருமானம் என்பது, கடந்த காலத்தைக் காட்டிலும் குறைந்து செல்லும் நிலையே நீடிக்கின்றது. எரிபொருட்கள் தட்டுப்பாடு, மின்தடையால் அனைத்துத் தொழிற்றுறைகளும் முடங்கிப் போய்விட்டன. தொழில்கள் முடங்கிவிட்டால், வருமானத்துக்கு ஏது வழி?

வருமானமே இல்லையென்றால் இரண்டு, மூன்று மடங்காக அதிகரித்துவிட்ட பொருட்களை எப்படி வாங்குவது? இந்த நெருக்கடியை ராஜபக்‌ஷர்களே ஏற்படுத்தி விட்டிருக்கிறார்கள்.

அப்படியான நிலையில், தெளிவான பொருளாதாரத் திட்டங்களோடு வரும் யாரையும், மக்கள் ஆதரிப்பதற்குத் தயாராகவே இருப்பார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எவ்வாறான பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை முன்வைக்கப்போகின்றது என்பது முக்கியமான கேள்வி.

ஏனெனில், ராஜபக்‌ஷர்களின் தோல்வியைப் பிடித்துக் கொண்டு ஆட்சிக்கு வருவது மாத்திரம், சஜித்துக்கோ அவரது அணிக்கோ இலக்காக இருக்குமானால், எதிர்காலத்தில் ராஜபக்‌ஷர்கள் இன்று எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடியை அவர்களும் சந்திக்க நேரிடும்.

அப்போது, மீண்டும் ராஜபக்‌ஷர்கள் வீதிக்கு இறங்குவார்கள். நாடு எந்தவித மீளெழுச்சியும் இன்றி படுபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கும்.
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்களை-வீட்டுக்கு-அனுப்பும்-போராட்டம்-உணர்த்தும்-செய்தி/91-293206

 

Link to comment
Share on other sites

ஒரு சிங்களவர் பிரபாகரனிடம் வடக்கு கிழக்கை கொடுத்து இருந்தால் இன்று அவரிடம் கடன் வாங்கி இருக்கலாம் என்ற வட்ஸ் அப் காணொளியை காண முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நிழலின் (நிலவின் ) அருமை வெயிலில் தெரியும் . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.