Jump to content

சிறிலங்காவின் அதிகரித்த இராணுவச் செலவீனங்களே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணி ! தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும் !! - பிரதமர் வி.உருத்திரகுமாரன்


Recommended Posts

இன்று இலங்கைத்தீவு எதிர் கொள்ளும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு சிங்கள அரசின் தமிழ்மக்களுக்கு எதிரான இனவழிப்புப்போரும், பெருந்தொகை பணம் இராணுவச் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமையும் கூட முக்கிய காரணிகளாக அமைகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன், தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவின் இன்றைய பொருளாதார நெருக்கடி குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இப்பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா வைரஸ் பொருந்தொற்று, அதனால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை வீழ்ச்சி, வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பில் ஏற்பட்ட பாதிப்பு, சிறிலங்காவின் வரிக்குறைப்பு மற்றும் விவசாயத்தில் ஏற்படுத்தப்பட்ட உர மாற்றீடுகள் என இன்னோரன்ன காரணங்கள் கூறப்பட்டாலும், தமிழின அழிப்புப் போரும், பெரும் இராணுச் செவீனமும் இந் நெருக்கடி ஏற்படுவதற்கு முக்கிய பங்கு வகித்தமையின சிங்கள மக்களும், அனைத்துலக சமூகமும் கவனத்தில் எடுக்கவில்லை என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.


தமிழ்த் தேசிய இனத்துக்கு எதிராக சிங்கள் அரசு நடத்திய கொடிய இனவழிப்பு யுத்தத்துக்கும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும், அதனைத் தொடர்ந்து தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து தமிழர்களை அடக்கி வைக்கவும், கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கு தமிழர் தேசத்தினை உள்ளாக்கவும் சிறிலங்கா அரசு பெரும் இராணுவச் செலவீனங்களைச் செய்து வந்தது. தொடந்தும் செய்து வருகிறது.

கிடைக்கப்பெறும் தரவுகளின்படி மூன்றாம் கட்டஈழப்போர்க் காலத்தில் (1995-2002) 1346 மில்லியன் டொலர்களும், சமாதான காலப்பகுதியில் (2002-2005)  1056 மில்லியன் டொலர்களும், நான்காம் கட்ட ஈழப்போரில் (2006-09) 1499 மில்லியன் டொலர்களும் தமிழ் மக்களுக்கு எதிரான போருக்காக தனது இராணுவச் செலவீனங்களாக சிறிலங்கா செலவு செய்துள்ளது.

2009 ஆம் ஆண்டு காலத்தின் பின்னரும் தனது இராணுவத்தினையும், விசேட அதிரடிப்படையினையும், காவல்துறையினையும் பெருமளவில் பேணிக் கொண்டு தனது செலவீட்டில் 11 வீதத்தினை  பாதுகாப்புக்கு என ஓதுக்கி வருகிறது. (2009-17) இக் காலப்புகுதியிலும் போர்க்காலத்தினை விட அதிகமாவே 1716 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.

உலக அளவில் தனது இராணுவத்தினை 99 வீதமான படையினரை இயங்கு நிலையில் வைத்திருக்கும் நாடாக சிறிலங்கா மாறியுள்ளதோடு, ஆண்டுக்கு 170 மில்லியன் டொலர்களை இராணுவத்தின் ஓய்வூதியத்துக்கு செலவிடுகின்றது.

போரின் ஓய்வுக்கு பின்னராக பாதுகாப்பு தரப்பினரின் சம்பளத்தினை 45வீதத்தினால் அதிகரித்துள்ள சிறிலங்கா அரசு, தனது இராணுவத்தின் பெரும்பகுதியினை தனது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயகத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு, தமிழர்கள் ஆக்கிரமிக்கப்புக்கு உள்ளாகியுள்ள தமது தேசத்தினை விடுவிக்கவும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், அரசியல் இறைமையை அடைந்து கொள்ளவும் அமைதிவழியில் போராடி வரும் இன்றைய நிலையில், சிறிலங்காவின் இந்த இராணுவம் செலவீனங்களின் அவசியம் குறித்து சிங்கள மக்களும், சர்வதேச சமூகமும் பாராமுகமாக இருப்பது எமக்கு கவலையளிக்கிறது.
'தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் சிறிலங்கா இராணுவத்துக்கு இருக்கிறது' என இலங்கைக்குள் இந்தியப் படையினர் நுழைந்ததாக சமீபத்தில் வெளியான செய்திகள் தொடர்பில் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும் ஜெனரலுமான கமல் குணரத்ன கருத்து வெளியிட்டிருந்தார்.

உள்நாட்டில் அச்சுறுத்தல் இல்லையெனவும், எந்தவொரு வெளிநாட்டு அச்சுறுத்தலையும் தமது இராணுவம் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதெனவும் சிறிலங்காவின் இராணுவ தரப்பு தொடர்சியாக வெளியிட்டு வருகின்ற கருத்தானது இந்தியாவை நோக்கியானதாவே கருதப்படவேண்டியது. இது, இந்தியா இலங்கைத்தீவை நோக்கி படையெடுக்கும் என்ற சிங்கள தேசத்தின் மகாவம்ச மனோபாவத்தினை வெளிப்படுத்துகின்றது.

பொருளதார நெருக்கடியில் மக்கள் சந்தித்து வருகின்ற வாழ்வாதார நெருக்கடிகளுக்கு தோழமையுடன் உதவிசெய்யும் நோக்கில் சிறிங்காவுக்கு மனித நேய உதவிகளை வழங்கி வரும் இந்தியா, சிறிலங்காவின் இந்த கட்டுகடங்கா இராணுவ செலவீனங்கள் எதற்காக என்ற கேள்வியினை எழுப்ப வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தேசத்தில் இருந்து இராணுவத்தினை முற்றாக விலக்குவதற்கான அழுத்த்தினை இந்தியா கொடுக்க வேண்டும் இக் இக் கோரிக்கைகளுக்கான தூண்டுதலை தமிழக மக்கள் இந்திய அரசினை நோக்கி முன்வைக்க வேண்டும்.

சர்வதேச சமூகம், சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சினகளைக் கவனத்தில் எடுக்கும் போது, தமிழ்மக்களின் தனித்துவமான தேசிய இனப்பிரச்சனையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசிய இனப்பிரச்சனையில் இரு முக்கியகூறுகளாக நீதிக்கான பொறுப்புக்கூறல், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அரசியல் தீர்வு ஆகியன கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடி, வாழ்வாதார பிரச்சனை காரணாமாக வீதிக்கு இறங்கி போராடி வரும் சிங்கள உறவுகளை தோழமையோடு காண்கின்றோம். ஆனால் ஆட்சி மாற்றம் என்பது இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்பதனை தெரிவிப்பதோடு நிலையான தீர்வு என்பது தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்படும் போதே நிகழும் என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

ஆழ வேரோடிப்போயுள்ள சிங்கள பௌத்த இனவாத கட்டமைப்பில் உருப்பெற்றுள்ள சிங்கள அரச இயந்திரத்தில்,  தமிழ்மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான வெளியில்லை என்பதே யதார்த்தம்.

ஈழத் தமிழர் தேசத்தின் தாயகப்பிரதேசம் சிங்கள அரசின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால், தமிழ் மக்களும் இந் நெருக்கடிக்குள் சிக்குண்டு போயுள்ளார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதவகையில் தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகளை வழங்கி அவர்களைப் பாதுகாப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.