Jump to content

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போர்க்கோலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போர்க்கோலம்

புருஜோத்தமன் தங்கமயில்

ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, முழு நாடும் போர்க்கோலம் பூண்டிருக்கின்றது. ராஜபக்‌ஷர்கள் ஆட்சி அதிகாரத்தை விட்டு, வீட்டுக்கு செல்லும் வரை இந்தப் போர்க்கோலம் இன்னும் இன்னும் தீவிரமடையும் நிலையே காணப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் மிரிஹான இல்லத்துக்கு முன்பாக, கடந்த வாரம் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அன்று ஆரம்பித்த ராஜபக்‌ஷர்களின் வீடுகள், வளவுகளை முற்றுகையிடும் போராட்டம், மஹிந்த ராஜபக்‌ஷவின் தங்காலை வளவு, அவர் தற்போது வதியும் கொழும்பு இல்லம், பசில் ராஜபக்‌ஷவின் பத்தரமுல்லவிலுள்ள வீடு என்று ஒவ்வொரு நாளும் போராட்டக்காரர்களால் சூழப்படுகின்றது.

பொலிஸாருக்கும் இராணுவத்துக்கும் ராஜபக்‌ஷர்களினதும், அவர்களின் தீவிர விவசுவாசிகளான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளைப் பாதுகாப்பதே பிரதான வேலையாகிப் போய்விட்டது.

அது மாத்திரமல்லாமல், அநுராதபுரத்தில் இருக்கும் ஒரு சோதிடப் பெண்மணியின் வீட்டுக்குத் தொடர் பாதுகாப்புகளை வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. அந்தப் பெண்மணியிடம்தான் கோட்டா தன்னுடைய சோதிட விடயங்களைக் கேட்டு நடக்கின்றார்.

image_b73bf414a2.jpg

கொரோனா காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்த போது, கண்டி தலதா பெரஹராவை நடத்துவதற்கான ஆலோசனை, குறித்த சோதிடப் பெண்ணினால் கோட்டாவுக்கு வழங்கப்பட்டது. அதற்கமைய அவர் பெரஹராவை நடத்தவும் செய்தார். இப்படி, ராஜபக்‌ஷர்களுக்கு யார் யாரெல்லாம் நெருக்கமானவர்களோ, அவர்களால் ஆதாயம் பெற்றவர்களோ  அவர்களையும் கூட மக்கள் எதிர்க்க ஆரம்பித்திருக்கின்றார்கள். அதனால், செத்த நாயில் இருந்து கழன்று செல்லும் உண்ணிகள் போல, ராஜபக்‌ஷர்களைவிட்டு பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பலரும் விலகத் தொடங்கிவிட்டார்கள்.

செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மை இழக்கப்பட்டுவிட்டது. சாதாரண பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 113 உறுப்பினர்ளின் ஆதரவு தற்போது ராஜபக்‌ஷர்களிடம் இல்லை.
எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்டப்போவதாக அறிவித்த விமல் வீரவங்ச தலைமையிலான அணி, அநுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான அணி, சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்டவற்றின் உறுப்பினர்களைச் சேர்ந்தால் தற்போது அது 118 என்கிற அளவில் இருக்கின்றது.

நாடு பூராவும் போராட்டம் வலுத்து வருகின்ற நிலையில், ராஜபக்‌ஷர்களோடு இருக்கின்றவர்களில் இன்னும் கணிசமான தொகையினர் எதிர்க்கட்சிக்கு செல்வார்கள் அல்லது சுயாதீனமாக இயங்கும் வாய்ப்புகள் உண்டு. ஏனெனில், ராஜபக்‌ஷர்களோடு இருப்பவர்களுக்கு எதிரான போராட்டம், நினைத்துப் பார்க்க முடியாத கட்டத்தை அடைந்திருக்கின்றது.

image_8581961aaa.jpg

 

இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என்று ராஜபக்‌ஷர்களோ, அவர்களுக்கு எதிராகப் போராடும் மக்களோ, கனவிலும் நினைத்திருக்க வில்லை. ஆனால், அதுதான் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்டதான பயத்தில், வெள்ளிக்கிழமை (01) இரவு பிறப்பித்த அவசரகால சட்டத்தை, செவ்வாய்க்கிழமை (05) நள்ளிரவு வர்த்தமானி அறிவித்தலூடாக மீளப்பெற்று இருக்கின்றார். மக்கள் போராட்டங்களை, அவசரகால சட்டத்தின் ஊடாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்று கோட்டா நினைத்தார். அதன்போக்கில், பொலிஸ் ஊரடங்குச் சட்டங்களையும் பிறப்பித்துப் பார்த்தார். ஆனால், அதுவெல்லாம் வயிற்றுப் பசியால் வாடும் மக்களை அடக்கப் போதுமானதாக இல்லை.

மக்கள் வீதிக்கு வந்தார்கள். போராட்டங்களின் வழி, அடக்குமுறைக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், 14 நாள்களுக்குள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறான நிலையில், அவசரகால சட்டத்தின் மீது, தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது தோற்கடிக்கப்படலாம். அது, ராஜபக்‌ஷர்களின் தோல்வி; பாராளுமன்றத்துக்குள் நிலைநாட்டப்பட்டதாகிவிடும் என்ற நோக்கிலும் நீக்கப்பட்டிருக்கின்றது.

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு செல்லுமாறு ஆரம்பித்த போராட்டம், இன்றைக்கு ராஜபக்‌ஷர்கள் கொள்ளையிட்ட பணத்தை, மீட்க வேண்டும் என்கிற கோஷங்களை அடைந்திருக்கின்றது. ராஜபக்‌ஷர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும், தங்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக் கருதி, வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை விட்டுச் செல்வதற்கு ராஜபக்‌ஷர்கள் தயாராக இல்லை. மாறாக, தங்களுக்கு எதிரான மக்களின் கோபத்தை, மடைமாற்றும் வேலைகளைச் செய்வது தொடர்பில் கவனம் செலுத்துகிறார்கள்.

தற்போது மக்கள் பூண்டுள்ள போர்க்கோலத்துக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பெரிய சம்பந்தம் ஏதுமில்லை. கட்சிகளை வெளியில் நிறுத்திக் கொண்டே, மக்கள் போராடுகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியினரும், ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்தினாலும், மக்களின் போராட்டத்துக்குள் நுழைந்துகொள்ளவில்லை. அவ்வாறு நுழைந்தால், தங்களுக்கு எதிராகவும் மக்கள் திரும்புவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

image_eddcef999b.jpg

அதுபோல, எந்தவொரு தருணத்திலும் ராஜபக்‌ஷர்கள் அங்கம் வகிக்கும் எந்தவோர் ஆட்சிக் கட்டமைப்பிலும் இணைந்து கொள்வதற்கும் எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.  ஏனெனில், ராஜபக்‌ஷர்கள் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதன் ஊடாக, தங்கள் மீதான மக்களின் கோபத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ராஜபக்‌ஷர்களின் இந்த நினைப்பிற்கு ஒருபோதும் இணங்கக் கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் குறியாக இருக்கின்றன.

ராஜபக்‌ஷர்கள் முழுவதுமாக இராஜினமாச் செய்துவிட்டு, ஆட்சியைவிட்டுச் செல்ல வேண்டும்; அல்லது, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் சஜித் பிரேமதாஸவின் எண்ணம். அதனைத்தான் அவர் வெளிப்படுத்தியும் இருக்கின்றார்.

ஏனெனில், ராஜபக்‌ஷர்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ள எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளும், அவர்களுக்கு எதிராகத் திரும்பும் நிலையே காணப்படுகின்றது. அப்படியான நிலையில், தேர்தல் வெற்றியொன்றுக்காகக் காத்திருப்பதுதான் நல்லது என்பது, சஜித்தின் எண்ணம். முழுமையான ஆட்சி அதிகாரத்துக்கான அவாவோடு இருக்கும் எந்தத் தரப்பும் அப்படித்தான் இயங்கும்.

image_506f6f5922.jpg

தற்போதுள்ள நெருக்கடி நிலையை, உண்மையிலேயே எப்படி சமாளிப்பது என்று பாராளுமன்றத்துக்குள் இருக்கின்ற எந்தக் கட்சிக்கும் தெரியவில்லை என்பதுதான் முக்கியமான விடயம். ஏனெனில், ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு செல்லுமாறு மக்களோடு சேர்ந்து எதிர்க்கட்சிகள் கோரினாலும், வீழ்ந்து கிடக்கின்ற பொருளாதாரத்தை எப்படி மீட்டெடுப்பது என்பது தொடர்பில் எந்தவித திட்டங்களையும் அவர்கள் இதுவரை முன்வைக்கவில்லை.

நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் தேர்தலொன்றை நடத்துவது என்பது இன்னும் இன்னும் வீணான செலவுகளை இழுத்துவிடும் வேலையாகவே இருக்கும். அப்படியான நிலையில், புதிய ஏற்பாடு ஒன்று குறித்து எதிர்க்கட்சிகள் சிந்தித்தாக வேண்டும். அது, நாட்டு மக்களின் குரல்களை உள்வாங்கியதாக இருக்கவும் வேண்டும்.

69 இலட்சம் மக்களின் ஆணை இன்னமும் ராஜபக்‌ஷர்களோடு இருப்பதாகவும், அப்படியான நிலையில் ராஜபக்‌ஷர்கள் பதவி விலக வேண்டியதில்லை என்றும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கூறியிருந்தார்.  நாடு பூராவும் மக்கள், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற நிலையிலும் கூட, இவ்வாறான கூற்றை ஜொன்ஸ்டனால் கூற முடிந்துள்ளமை என்பது, ராஜபக்‌ஷர்களின் ஆட்சி அதிகாரத்துக்கான நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதையே காட்டுகின்றது.

ஆனால், ராஜபக்‌ஷர்கள் பதவிகளைத் துறக்கும் வரையில், நாடு தற்போது பூண்டுள்ள போர்க்கோலமும் அடங்கிவிடாது. ராஜபக்‌ஷர்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாத வரையில், எதிர்வரும் நாள்கள் இன்னும் இன்னும் மோசமான நெருக்கடி நிலையையே பதிவிடச் செய்யும்.
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்களுக்கு-எதிரான-போர்க்கோலம்/91-294454

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.