Jump to content

மீண்டும் தொடங்கிவிட்டதா பனிப்போர் காலம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: மீண்டும் தொடங்கிவிட்டதா பனிப்போர் காலம்?

spacer.png

ராஜன் குறை 

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகு உலக நாடுகளுக்கு இடையிலான சர்வதேச அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்த பரபரப்பான உலக அரசியல் சூழலில் இந்தியக் குடியரசுக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைத்துள்ளது. ரஷ்யாவுடன் நேரடியாகப் போரிட முடியாத நிலையில் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் அதற்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஏனெனில் உக்ரைனுக்கு ஆதரவாக அந்த நாடுகள் போரில் ஈடுபட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என ரஷியா அறிவித்துள்ளது. அதனால் உக்ரைனுக்கு மறைமுகமாக ஆயுத உதவிகள் செய்வது மற்றும் பொருளாதாரத் தடைகளின் மூலம் ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவது ஆகிய முயற்சிகளில் மேற்கத்திய நாடுகள் இறங்கியுள்ளன.

ஆனால் தடைகள் மூலம் ரஷ்யாவைப் பணிய வைப்பது சுலபமாக இல்லை. சீனா, ரஷ்யாவுக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறது. உலகில் பல நாடுகள் ரஷ்யாவுடன் முக்கியமான வர்த்தக உறவுகளில் உள்ளன. ஆயுதங்களை வாங்குகின்றன. அவற்றால் திடீரென ரஷ்ய உறவைத் துண்டித்துக்கொள்ள முடியாது. இந்த நிலையில் இந்தியாவும் ரஷ்யாவுடன் உறவைத் தொடர்வதும், மலிவான விலையில் பெட்ரோல் வாங்குவதும், ஆயுதங்கள் வாங்குவதும், பல்வேறு ராணுவ ஒப்பந்தங்களைத் தொடர்வதும் பிரச்சினைக்குரியதாக அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் பார்க்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்ற வாரம் இந்தியாவுக்கு வந்தார். அடுத்து ஐரோப்பிய யூனியன் அதிபர் வந்திருந்தார். அவர் ரஷ்யாவும், சீனாவும் முழுமையான தங்கு தடையற்ற உறவினை அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி எச்சரித்துப் பேசினார். இந்தியா போல ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்தும் மக்களாட்சியைப் பேணும் நாடு, உலகின் சுதந்திர நாடுகளுடன் இணைந்து ரஷ்ய ஆக்கிரமிப்பையும், ரஷ்யா - சீனா கூட்டுறவையும் எதிர்க்க வேண்டும் என்றார். அடுத்த மாதம் ஜப்பானில் அமெரிக்க அதிபர், இந்தியப் பிரதமரைச் சந்திக்கிறார். எத்தனை அழுத்தம் கொடுத்தாலும் இந்தியாவால் எந்தப் பக்கமும் உடனடியாக சாய முடியாது. இந்த நிலை இந்தியாவுக்கு ஆபத்தான சிக்கலா அல்லது அனுகூலமான சந்தர்ப்பமா என்பதையும் திட்டவட்டமாகக் கூற முடியாது.

பிரச்சினை என்னவென்றால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் தரும் ஆயுத உதவிகளைக் கொண்டு உக்ரைன் சிறிது காலம் தாக்குப் பிடிக்கலாமே தவிர, அது ரஷ்யாவைத் திருப்பி தாக்குவதோ, தோற்கடிப்பதோ சாத்தியமில்லை. ரஷ்யாவின் மீது விதிக்கக்கூடிய தடைகளையெல்லாம் விதித்தாயிற்று; பொருளாதாரத் தடை என்பது இரண்டு புறமும் வெட்டும் கத்தி. ரஷ்யாவிலிருந்து எரிவாயு போன்றவை கிடைக்காததால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இந்த நிலையில் என்ன செய்து ரஷ்யாவின் பிடியிலிருந்து உக்ரைனை மீட்பது என்று புரியாமல் மேற்கத்திய நாடுகள் திணறுகின்றன. ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய மூன்று நாடுகளும் அணு ஆயுதங்களுடனும், திறன் மிக்க ஏவுகணைகளுடனும் காத்திருக்கின்றன. சரி, உக்ரைனை ரஷ்யா பிடித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடலாமா என்றால் இத்தனை நடந்த பிறகு அவ்விதம் பின்வாங்குவது மோசமான முன்மாதிரியாகிவிடும். ஏற்கனவே ஆஃப்கானிஸ்தானை இருபதாண்டு ஆக்கிரமிப்புக்குப் பிறகு அமெரிக்கா தாலிபான்களிடமே விட்டுவிட்டு வரவேண்டியதாயிற்று. அங்கும் தாலிபானுக்கு பின்புலத்தில் சீன ஆதரவு இருக்கிறது. அதனால் சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமான புதிய பனிப்போர் காலம் தொடங்கிவிட்டது என்பதே பலர் கருத்தாக இருக்கிறது.

spacer.png

இருபதாம் நூற்றாண்டின் பனிப்போர் வரலாறு 

நான் சிறுவனாக இருந்த அறுபதுகளில் ஆன்றோர்களும், சான்றோர்களும் உலகைக் குறித்து கொண்டிருந்த மிகப்பெரிய கவலை மூன்றாவது உலகப் போர் மூளுமா, அணு ஆயுத பெருவெடிப்பு நேர்ந்து மானுடம் அழிந்துபோகுமா என்பதாகத்தான் இருந்தது. ஏனெனில் உலக அரசியல் இரு துருவங்களுக்கிடையே சிக்கிக்கொண்டிருந்தது. சுதந்திரவாத - தனியுடமை கோட்பாட்டை பின்பற்றும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஒரு துருவம், அரசு மைய - பொதுவுடமை கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் ரஷ்யா தலைமையிலான நாடுகள் இன்னொரு துருவம். உலக நாடுகள் எந்த பாதையைத் தேர்வு செய்யப் போகின்றன என்பதை தீர்மானிப்பதில் இரண்டு அணிகளும் முனைப்புக் காட்டியதால் அவர்களுடைய நேர்முக, மறைமுக தலையீடுகள் பல்வேறு நாடுகளில் இருந்தன. இதுவே பனிப்போர் காலம் என அறியப்பட்டது. சீனாவும் அரசுமைய - பொதுவுடமை நாடுதான் என்றாலும் ரஷ்யாவுடன் அதற்கேற்பட்ட முரண்களால் அது தனிப்பாதை அமைக்கத் தொடங்கியது. இந்த நிலையில்தான் அணிசேரா நாடுகள் என்ற கோட்பாடும், மூன்றாம் உலக நாடுகள் என்ற சிந்தனையும் உருவாயின.

அமெரிக்கா பொதுவுடமை சித்தாந்தம் பரவக் கூடாது என்ற அச்சத்தில் பல நாடுகளின் அரசியலில் தலையிட்டது. வியட்நாம் மிக முக்கியமான உதாரணம். அங்கே ஹோசிமின் தலைமையில் உருவான வெகுஜன ஆதரவு பெற்ற பொதுவுடமை அரசுக்கு எதிராக தெற்கு வியட்நாம் பகுதியைத் தூண்டி, அந்த அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பியது. வடக்கு வியட்நாம் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது. உலகெங்கும் அமெரிக்காவுக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்தன. ஐரோப்பாவில் அறுபதுகளின் இறுதியில் நிகழ்ந்த மாணவர் கிளர்ச்சிகளில் வியட்நாம் ஆதரவு, அமெரிக்க எதிர்ப்பு முக்கிய பங்கு வகித்தது. வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகள் தோல்வியுடன் திரும்பின. ஹோசிமின் நிறுவிய அரசு வென்றது. தென் அமெரிக்க நாடான சிலியில் பொதுவுடமை சிந்தனை கொண்ட, வெகுஜன ஆதரவுமிக்க அலெண்டே அரசுக்கு எதிராக ராணுவ கிளர்ச்சியை அமெரிக்கா தூண்டிவிட்டது. அலெண்டே கொல்லப்பட்டார்.

தொடர்ந்து இஸ்ரேல், அரேபிய நாடுகள் போர்கள், இந்தியா - பாகிஸ்தான் போர்கள், ஈரான் - ஈராக் போர் உள்ளிட்ட பல்வேறு போர்களிலும் பனிப்போர் கால அமெரிக்க, ரஷ்ய வல்லரசு தலையீடுகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இருந்து வந்தன. கொமெனியின் ஈரானை கட்டுப்படுத்த சதாம் ஹுசைனைத் தூண்டிய அமெரிக்கா, பின்னர் சதாம் ஹுசைன் குவைத்தை கைப்பற்ற அவர் மீது படையெடுத்தது. அதற்கு முன்னர் ஆஃப்கானிஸ்தானை சோவியத் யூனியன் தன் பிடிக்குள் கொண்டுவர அதனை அகற்றும்பொருட்டு ஜிஹாதி குழுக்களை ஊக்கப்படுத்தியது அமெரிக்கா. சீனா ஏற்கனவே அமெரிக்க முதலீட்டுக்கு அனுமதி வழங்கி சீர்திருத்தங்களைச் செய்தது. டெங் சியோபிங் ஆட்சியில் சீனா அரசு மையத்துவம், மக்கள் நல ஆட்சி, எல்லைக்குட்பட்ட முதலீட்டிய சந்தை பொருளாதாரம் என்று மறு சீரமைப்பு செய்துகொண்டது.

இதற்கிடையில் கோர்ப்பசேவ் ஆட்சிக்கு வந்தபிறகு எண்பதுகளின் பிற்பகுதியில் சோவியத் யூனியனில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பெரஸ்தொரய்கா, கிளாஸ் நாஸ்ட் என அறியப்பட்ட அந்தச் சீர்திருத்தங்கள் ரஷ்ய சமூகத்தை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க தொடங்கின. 1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் மக்கள் எழுச்சியால் தகர்க்கப்பட்டு ரஷ்யா வசமிருந்த கிழக்கு ஜெர்மனியும், சுதந்திர பொருளாதாரமாக இருந்த மேற்கு ஜெர்மனியும் இணைந்தன. அதைத்தொடர்ந்து 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து பதினைந்து நாடுகளாகப் பிரிந்தது. ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி கலைக்கப்பட்டது. எழுபதாண்டு காலமாக பொதுவுடமை தத்துவத்தின் முக்கிய அடையாளமாக விளங்கிய சோவியத் யூனியன் உடைந்ததும், கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி முடிவுக்கு வந்ததும் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

spacer.png

ஒரு துருவ உலகம் 

அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து சர்வதேச அரங்கில் நிழல் யுத்தம் நடத்தி வந்த சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு, உலக அரசியல் ஒற்றை துருவ அரசியலாக மாறிவிட்டதாக கருதப்பட்டது. பொதுவுடமை தத்துவம் காலாவதியாகிவிட்டதாகத் தோன்றியது. இனி உலகம் முழுவதும் சுதந்திரவாத - மக்களாட்சி - முதலீட்டிய சந்தை பொருளாதாரமே நிலவும் எனக் கருதப்பட்டது. முதலீட்டிய அமைப்பில் அடங்கியுள்ள சுரண்டல், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு இது வருத்தத்தை அளித்தாலும், பனிப்போர் கால யுத்தங்கள் முடிவுக்கு வருவதும், அணு ஆயுத போர் குறித்த அச்சங்கள் அகல்வதும் நன்மையாகக் கருதப்பட்டது.

தத்துவார்த்த அளவில் இது உலகின் எதிர்காலம் குறித்த பல கணிப்புகளுக்கு வழி வகுத்தது. இனிமேல் முரண்களுக்கு இடமில்லை; மெள்ள மெள்ள உலகம் முழுமையான சுதந்திரவாத - முதலீட்டிய கட்டமைப்புக்கு வந்து சேர்ந்துவிடும் என சிலர் நினைத்தனர். இன்னொரு நன்மையும் விளையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தேசிய அரசுகள் முக்கியத்துவம் இழந்து, உலக முதலீட்டிய கட்டமைப்பை ஒரு பேரரசு போல அமெரிக்கா வழி நடத்தும் என்ற ஒரு கணிப்பு உருவானது. இத்தாலிய மார்க்ஸீய தத்துவவாதியான அண்டோனியோ நெக்ரியும், அமெரிக்க பேராசிரியர் ஹார்ட்டும் இணைந்து பேரரசு என்ற நூலை எழுதினார்கள். அவர்கள் கணிப்பில் இந்தப் பேரரசு என்பது ஏகாதிபத்தியமல்ல. முதலீட்டிய கூட்டமைப்பை நிர்வகிக்கும் அமைப்புதான். ஐக்கிய நாடுகள் சபையே உருமாறி அமெரிக்க நிர்வாகத்தில் இந்தப் பேரரசாக வடிவெடுக்கும் எனக் கூறினார்கள். அப்படி ஒரு பேரரசு உருவானால், உலகெங்கும் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதும் அவர்கள் தேசங்களைக் கடந்த மக்கள் திரளாக ஒன்றுபட்டு பேரரசை தங்கள் வயப்படுத்துவதும் சாத்தியமாகலாம் என்றும் நினைத்தார்கள்.

ஆஃப்கானிஸ்தானில் ரஷ்ய ஆதரவு கம்யூனிசத்தை அகற்ற உருவான மதவாத, தீவிரவாத ராணுவக்குழுக்கள் பலவகையில் உருமாறி தாலிபான், அல்-கொய்தா என வடிவம் எடுத்தன. செளதி அரேபிய கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா-பின்-லேடன் அல்கொய்தா தலைவராக விளங்கினார். இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நியூயார்க் நகரில் தீவிரவாதத் தாக்குதலை நடத்தி உலக வர்த்தக மையம் என்ற இரட்டை கோபுரக் கட்டடங்களைத் தகர்த்தது அல்-கொய்தா. அதற்கு அடைக்கலம் தந்த ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் அரசை வீழ்த்த அமெரிக்கா ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அடுத்து சதாம் ஹுசைனின் ஈராக் பேரழிவு ஆயுதங்களை, ஆந்த்ராக்ஸ் என்னும் ஆட்கொல்லி ரசாயன துகளை உற்பத்தி செய்வதாக சொல்லி 2004ஆம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்தது. தீவிரவாதத்துக்கு எதிரான போர் என அறிவித்து இந்த இஸ்லாமிய நாடுகளில் தனது படைகளை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்தது. போரில் கைது செய்யப்பட்டவர்களை அமெரிக்க ராணுவத்தினர் குரூர சித்ரவதை செய்து மகிழும் காட்சிகள் வெளியாகி உலகை அதிர்ச்சியுற செய்தது.

spacer.png

சீனாவின் எழுச்சி 

சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு உலக நாட்டாமையாக தன்னை அமெரிக்கா கருதிக்கொண்ட சமயத்தில், சீனா பிரம்மாண்டமான பொருளாதார ஆற்றலாக வடிவெடுத்தது. சீனாவில் தயாராகும் பொருட்கள் உலக சந்தைகளை நிரப்பின. மலிவான விலையில் மின்னணு தொழில் நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்வதில் சீனா அசாதாரணமான சாதனைகளைச் செய்தது. ஏற்கனவே அணு ஆயுத வல்லரசாகவும், மக்கள் தொகையில் உலகின் ஆகப்பெரிய நாடாகவும் விளங்கிய சீனா, பொருளாதார வல்லரசாக மாறியவுடன் அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக கற்பனை முடிவுக்கு வந்தது.

சோவியத் யூனியன் சிதைந்தாலும், அதன் முக்கிய அங்கமான ரஷ்யா ஓர் அணு ஆயுத வல்லரசாகவே தொடர்ந்தது. பொதுவுடமை அமைப்பு சிதைந்த பின்னர், பெருந்தொழிலதிபர்களின் குழு ஒன்று உருவானது. அவர்கள் ஆதரவுடன் அரசு மைய சமூகத்தின் அதிகார குவிமையத்தை விளாடிமீர் புடின் கைப்பற்றினார். மேற்கத்திய மக்களாட்சி வடிவத்தை ரஷ்யாவில் புகுத்திவிட்டால் சுதந்திரவாத - தனியுடமை உலகம் முழுமை பெறும் என்ற அமெரிக்காவின் நோக்கம் புடினின் எழுச்சியாலும், சீனாவின் எழுச்சியாலும் நடைபெறாமல் போனது. சீனாவிலும் பெரு முதலாளிகள் உருவானாலும், அரசு மைய சமூகமாக சீன கம்யூனிஸ்டு கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் நாடு இருக்கிறது.

ரஷ்யாவுக்கு அழுத்தம் தர நேடோ எனப்படும் வடக்கு ஒப்பந்த நாடுகளின் வளையத்தை ரஷ்யாவைச் சுற்றி அமெரிக்கா உருவாக்கியது. இதை புடின் தொடர்ந்து கண்டித்து வந்தார். இறுதியாக ரஷ்யாவுக்கு அடுத்து, சோவியத் யூனியனின் முக்கிய அங்கமாக இருந்த உக்ரைனையும் நேட்டோவில் இணைக்க முயற்சிகள் நடந்தபோது ரஷ்யா, உக்ரைனின் கிரிமியா பகுதியை முதலில் கைப்பற்றியது. தொடர்ந்து முரண்பாடுகளும், மோதல்களும் அதிகரிக்க இரண்டு மாதங்களுக்கு சீனாவின் ஆதரவுடன் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் போர் தொடுத்துவிட்டது.

இப்போது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தங்களுக்கு எதிராக அணி திரண்டுவிட்ட சீனா, ரஷ்யா, வடகொரியா கூட்டணியை எப்படி எதிர்கொள்வது என்ற சிக்கலில் இருக்கின்றன. ஒரு துருவ உலக கற்பனைகள், பேரரசு உருவாகுமென்ற கணிப்புகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. இது புதிய பனிப்போரா அல்லது சூடான அமைதியா என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும்.

சுதந்திர உலகம் என்ற கற்பிதம் 

அமெரிக்கா தேர்தல் நடக்கும் நாடுகளெல்லாம் சுதந்திரவாத சொர்க்க பூமியென்றும், அரசு மைய நாடுகளெல்லாம் உலகை முழுமையாக சுதந்திரவாத உலகாக உருவாக்க தடையாக உள்ளன என்றும் ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறது. இதில் பெரிய பிரச்சினை என்னவென்றால் சுதந்திரவாத நாடுகளில் நிலவும் கடும் பொருளாதார ஏற்றத்தாழ்வு.

அமெரிக்காவில் கல்வி கற்கவே, கல்வி கட்டணம் செலுத்தவே இரவு விடுதியில் நிர்வாண நடனமாடி பணம் சம்பாதிக்கும் மாணவியின் நேர்காணல் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இது போன்ற முரண்களை சமாளிக்க தொழிலாளர் அமைப்புகளைப் பல நாடுகளிலும் ஒடுக்க வேண்டியுள்ளது. இந்தியா மக்களாட்சி நாடு என்று பாராட்டிப் பூரிக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிபருக்கு, பீமா கொரேகான் வழக்கில் விசாரணையின்றி சிறையில் ஆண்டுக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பற்றி தெரியாதா என்ன? நோம் சாம்ஸ்கி உள்ளிட்ட உலக அறிஞர்களெல்லாம் அவர்களை விடுதலை செய்யச் சொல்லி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பினார்களே? மனித உரிமை செயற்பாட்டாளர்களையே சிறையில் அடைத்துவிட்டு தேர்தலை மட்டும் நடத்தினால் அது சுதந்திரவாத சொர்க்க பூமியா? அமெரிக்காவின் முக்கிய பொருளாதார கூட்டாளியான சவுதி அரேபியாவில் எவ்வாறு மனித உரிமை பேணப்படுகிறது?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அதிகமான படையெடுப்புகளையும், ஆக்கிரமிப்புகளையும், மறைமுக ஆட்சிக் கலைப்புகளையும் செய்தது அமெரிக்காதான். உள் நாட்டிலேயே கறுப்பின மக்களுக்கெதிரான இனவெறி தலையெடுத்து ஆடுகிறது. அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடில்லாமல் வாழவே முடியாது. உயிர்காக்கும் சிகிச்சைகளை கூட தள்ளிப்போட வேண்டிய நிலையில்தான் அமெரிக்கத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. ரஷ்யாவிலும், சீனாவிலும் அரசு மைய சமூகமாக இருந்தாலும் மருத்துவ வசதி இலவசமாக அல்லது மலிவாகக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மக்கள் எதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.

எனவே தான் இப்போது உருவாகிவரும் புதிய பனிப்போர் உலகம் இருபதாம் நூற்றாண்டு பனிப்போர் அளவுக்குக்கூட தத்துவார்த்த காரணங்களை காட்ட முடியாது. அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் ஒற்றைத்துருவ உலகா அல்லது அதிகாரப் பரவலைச் சாத்தியமாக்கும் பல்வேறு அதிகார மையங்களை கொண்ட கூட்டாட்சி உலகா என்பதுதான் கேள்வியோ என்றும் தோன்றுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் என்பது உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு திருப்பம் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.

 

https://minnambalam.com/politics/2022/05/02/10/has-the-coldwar-started-once-again
 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.