Jump to content

சிங்களம் மாறுமா - ஜூட் பிரகாஷ்


Recommended Posts

சிங்களம் மாறுமா? 

 

“அரசன் அன்று அறுப்பான்,

 தெய்வம் நின்று அறுக்கும்” 

 

என்பது தமிழர் வாழ்வியலில் அடிக்கடி பேசப்படும் பழமொழிகளில் ஒன்று. இலங்கை தேசத்தின் இன்றைய நிகழ்வுகளால், இன்று இந்தப் பழமொழி மீண்டும் ஒரு வலம் வந்து கொண்டிருக்கிறது. 

 

எங்கள் தமிழ் இனத்தை, எங்கள் குலத்தின் வீரமறவர்களை, அன்று இனவழிப்புச் செய்த அன்றைய இலங்கை அரசனையும், அவர்தம் குடும்பத்தையும், இன்று அந்த அரசனது சிங்கள இனமே, தூஷிப்பதையும் துரத்துவதையும் பார்த்து பார்த்து தமிழர்கள் அகம் மகிழ்வதை யாராலும் மறுக்க முடியாது.

 

இனவிடுதலை என்ற உன்னத நோக்கத்தோடு போராடி, விடுதலை தாகம் அடங்காமலே உயிர் நீத்தவர்களின் சாந்தியடையாத ஆத்மாக்கள் தான், இன்று உயிர் கொண்டெழுந்து தென்னிலங்கையை ஆட்டுவிக்கிறதோ, என்றும் எங்களில் பலர் பேசும் போதும் வெளிப்படுவதும் அடக்கப்பட்ட எங்கள் இனத்தின் உணர்வே அன்றி வேறொன்றுமில்லை.

 

இரண்டே இரண்டு வருடங்களிற்கு முன்னர் தான், ராஜபக்‌ஷ குடும்பம் நாட்டைக் கொள்ளையடித்தது, ஊடகவியலாளர்களைக் கொலை செய்தது, தங்கள் குடும்பத்தவர்களிற்கு பதவிகள் வழங்கியது, என்பவற்றை எல்லாம் தெரிந்தும் அறிந்துமே பெரும்பான்மையின சிங்கள மக்கள் ஜனாதிபதி கோத்தாவிற்கு பெருவாரியாக வாக்களித்தது மாத்திரமன்றி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் வழங்கி ராஜபக்‌ஷ குடும்பத்தை ஆட்சிக் கட்டிலேற்றினார்கள். 

 

வரலாறு காணாத ஜனநாயகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த கோத்தா & கோ பார்த்த முதல் வேலை, அரசியல் யாப்பின் 19 ஆவது ஷரத்தை மேவி 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து, ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்கியதோடு, இரட்டை பிராஜாவுரிமையுள்ளவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக வழிவகுத்ததும் தான்.

தங்கள் கண்முன்னே அநியாயம் அரங்கேறுவதை கண்டும் காணாமல் இருந்த சிங்களம், அமெரிக்காவில் இருந்து பறந்து வந்த பஸில் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும், நாட்டில் பாலும் தேனும் ஓடும் என்ற பேக்கதைகளையும் கேட்டுக் கொண்டு சும்மா தான் இருந்தது.

என்று எரிபொருள் தட்டுபாடும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்களும், நீண்ட மின்வெட்டும், தங்களது அன்றாட வாழ்வை பாதிக்கத் தொடங்கியதோ, அன்றே திடீரென விழித்துக் கொண்ட சிங்களம் வீதிக்கு வந்து “கோத்தா வீட்டுக்கு போ” என்றுக் கத்திக் கதறத் தொடங்கியது.

இன்று காலிமுகத்திடலிலும் நாடெங்கிலும் கேட்கும் கோஷங்கள் தமிழர் காதில் தேனாக பாய்கின்றன. விமானம் ஏறிப் போய் காலிமுத்திடலில் இறங்கி, ஜனாதிபதி செயலகத்தை பாதுகாக்கும் ஆமிக்காரனின் முகத்தில் “கோத்தா கொப்பையா, கோத்தாகே அய்யா கொப்பையா” என்று கத்தி விட்டு வர மனம் துடிக்குமளவிற்கு எங்களின் மனதில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.

எப்பவுமே விரும்பிக் கேட்டிராத தமிழ் தேசிய கீதத்தின் சத்தமும், இன மொழி ஒற்றுமையை கோரும் கோஷங்களும், தமிழர் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்லும் பதாகைகளும், புதிய மாற்றத்திற்கான அறைகூவல்களாக மட்டும் இருக்க முடியுமேயன்றி, முழுமையான மாற்றத்திற்கான அடித்தளமாக மாற முடியாது. 

 

1971 இல் இடம்பெற்ற JVP கிளர்ச்சியும், அதே காலத்தில் எழுச்சி பெறத் தொடங்கிய தமிழ் இளைஞர்களின் விடுதலைப் போராட்டமும், ஆட்சியாளர்கள் தடம்மாறி நாட்டைச் சீரழிவுப் பாதையில் இட்டுச் செல்ல தொடங்கியதன் வெளிப்பாடாகவே அமைந்தன. JVP கிளர்ச்சிகளை அடக்க சில ஆண்டுகளே எடுத்த ஆட்சியாளர்களிற்கு, தமிழ் இளைஞர்களின் எழுச்சியை அடக்க கன காலம் எடுத்தது.

இரு இன இளைஞர்களின் போராட்டங்களும் மனித உரிமைகளை மீறி ஓடுக்கப்பட்டதை அறிந்தும், அந்தப் படுகொலைகள் புரிந்த அரசியல்வாதிகளை மீண்டும் மீண்டும் பெருமளவில் வாக்களித்து ஆட்சிக்கட்டிலேற்றி அழகு பார்த்ததும் இன்று வீதியில் நின்று கத்திக் கூப்பாடு போடும் சிங்கள பெளத்த மகா சனங்களே. 

இனவாதிகளையும், களவெடுத்தவனையும், கொலை செய்தவனையும், படிப்பறிவில்லாதவனையும், காடையர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, இன்று ஒப்பாரி வைத்து அழுது குழறுவதும் அதே சிங்கள பெளத்த மகா சனங்களே.

இலங்கையின் இன்றைய பிரச்சினைகளிற்கான நிரந்தரத் தீர்வும், இலங்கையின் பொருளாதாரத்தினது மீளெழுச்சியும் நடந்தேற கிட்டத்தட்ட 5 முதல் 7 ஆண்டுகள் எடுக்கப் போகிறது. ஆனால், அந்த மீளெழுச்சி நடைந்தேற வேண்டுமென்றால், பெரும்பான்மை சிங்கள மக்களின் எண்ணக்கருவில் மாற்றங்கள் ஏற்படுவது கட்டாயமாகிறது. மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்கள பெளத்த பெரும்பான்மையினரின் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டால் அன்றி இலங்கையின் பிரச்சினைகளுக்கு யாராலும் தீர்வு காணமுடியாது. 

 

இலங்கை மீளெழுச்சி பெறவேண்டும் என்றால் முதலில், இன்றைய பொருளாதார பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது பெரும்பான்மையின சிங்கள பெளத்த மக்கள் அறிந்தும் தெரிந்தும் செய்த தவறான தெரிவுகளால் ஏற்பட்ட சீர்கெட்ட ஆட்சிகளே (mal-governance) என்பதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

தமிழர்களை பிரிவினைவாதத்திற்கு தள்ளியதும் 1956 இல் தனிச் சிங்களச் சட்டத்துடன் தொடங்கிய இந்தச் சீர்கெட்ட ஆட்சிகள் எடுத்த தவறான செயற்பாடுகளே என்பதையும் சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இரண்டாவதாக, இலங்கை ஒரு பன் மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் கொண்ட நாடு என்பதையும் சிங்கள பெளத்தர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நாடு, பெளத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் கொடுக்கும் முன்னுரிமை நீக்கப்பட்டு, மும் மொழிகளிற்கும் சமவுரிமை வழங்கப்பட்டு , அனைத்து மதங்களிற்கும் சமனான மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். 

சிறுபான்மையினத்தவரை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள் நீக்கப்பட்டு, சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்கள் தங்களைத் தாங்களே ஆள வழிவகுக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பு மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியதை சிங்கள பெரும்பான்மையின மக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். 

இலங்கையின் பொராளாதார மீளெழுச்சிக்கு சிங்கள பெளத்த மக்களின் மனங்களில் ஏற்பட வேண்டிய இந்த இரண்டு அடிப்படை மாற்றங்கள் கட்டாயமாக அத்தியாவசியமாகிறது. இந்த இரு அடிப்படை மாற்றங்களிலேயே புதிய இலங்கைக்கான சரியான செல்நெறி ஆரம்பமாகும். 

அத்தோடு இணைந்தாக மத்திய வங்கி ஆளுநர் போன்ற நாட்டின் முக்கிய பொறுப்புக்களிற்கு் துறைசார் வல்லுநர்களை (experts) நியமிப்பதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். பல பொருளாதார விற்பனர்களை தன்னகத்தே கொண்டிருக்கும் இலங்கையின் இன்றைய பொருளாதா சீரழிவிற்கு, குடும்ப அரசியலும், அந்தக் குடும்பத்தின் பாதங்களை கழுவும் தகைமையற்ற அடிவருடிகளிற்கு பதவிகள் கொடுக்கப்பட்டதும் முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. 

தேசம் தொடர்பான முக்கிய முடிவுகளில், குறிப்பாக பொருளாதாரம் தொடர்பான விடயங்களில், வெளிப்படைத்தன்மை (transparency) இருக்க வேண்டியதும், இலங்கையின் புதிய செல்நெறியில் இருக்க வேண்டிய அவசியமான தன்மையாகும். 

இலங்கையின் பூகோள முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு செயற்படுத்த வேண்டிய புதிய இலங்கைக்கான சமூக- பொருளாதார செல்நெறி, மனிதவள மேம்பாட்டை (human development) மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டியதும் அவசியம். இதுவே இலங்கையின் பொருளாதாரத்தை நீண்ட காலங்களிற்கு தக்கவைக்கும் (sustainable) தன்மையுடையதாக இருக்கும்.  

ஜனநாயக வெளியும், உறுதியான யாப்பும், சட்டம் ஓழுங்கை நீதியாகப் பேணலும், இலங்கையின் மாற்றத்திற்கான பயணத்தின் போதும் அதன்பின்னரும் அவசியமாகிறது. இலங்கையின் வரலாற்றில் எந்த அரசியல்வாதியோ, இராணுவ அதிகாரியோ, காவல்துறையினரோ, அரசாங்க அதிகாரியோ, அவர்கள் செய்த கொலைக் குற்றத்திற்கோ, அரச சொத்துக்களை கொள்ளையடித்ததற்காகவோ சட்டத்தால் தண்டிக்கடவில்லை என்ற நிலை மாறாமல், மாற்றம் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. 

மொத்தத்தில், இலங்கையில் மாற்றம் வர வேண்டும் என்றால் அது சிங்கள பெளத்த பெரும்பானமையின மக்களின் மனதுகளில் தான் தங்கியிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக அவர்கள் தெரிவு செய்த ஆட்சியாளர்கள் அவர்கள் நாட்டையே அழித்து விட்டதை சிங்கள மக்கள் உணரத் தொடங்கியிருப்பதை அடிப்படை மாற்றமாக கருதமுடியாது. 

பெரும்பான்மையின சிங்கள பெளத்த மக்களின் எணக்கருவில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டு, சரியான ஆட்சியாளர்களை தெரிவு செய்து, சிறுபான்மையினரிற்கு சமவுரிமை அளித்து, நல்லதொரு ஆட்சிக் கட்டமைப்பை (good governance) கட்டமைக்கும் வரை, இலங்கையின் மீளெழுச்சி என்பது சவாலானதாகவே இருக்கப் போகிறது.

அதுவரை, அவர்கள் காலிமுகத்திடலில் கோத்தாவையும் மகிந்தவையையும் பஸிலையும் நக்கலடித்தும் கிண்டலடித்தும் பாடும் பைலாப் பாட்டுக்களை கேட்டு ரசித்துக் கொண்டு அவர்களிற்கு ஆதரவாய் குரல் கொடுப்போம். 

“பஸில்.. பஸில்.. பஸில்..

கா… கா… கா”

ஜூட் பிரகாஷ்

மெல்பேர்ண்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.