Jump to content

கள்ள வீசா – ஒரு கனவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள வீசா – ஒரு கனவு

கள்ள வீசா – ஒரு கனவு 

    — அகரன் — 

பாரிசுக்கு வந்து ஒன்பது வருடமும் 25 நாட்களும் கடந்தபோது எனக்கு அகதி அடைக்கலம் கிடைத்தது. அன்று வெள்ளிக்கிழமை. ஊரில் தூக்கத்தின்போதுநாளொரு கனவு வருவது உண்டு. எப்போது நாடுகளிள் எல்லைகளை கடக்கும் இலட்சியத்தில் இறங்கினேனோ அன்றில் இருந்து எனக்கு கனவு வந்ததாக நினைவில்லை. விதிவிலக்காக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலைகனவு ஒன்று எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. கனவிற்கும் விசாகிடைத்ததற்கும் சாமி சம்மந்தம் இருக்குமோவென்று யோசித்தேன். ஒரு சாமியுமில்லை. சம்மந்தமுமில்லை.  

கனவு கண்டெழும்பி அதன் நினைவுகளோடு காலை பத்துமணிக்கு வேலைக்குச் சென்றேன். கனவைப்பற்றி ஏன் சொல்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அதுவல்ல நான் சொல்லவந்த கதை. சொல்லவந்தது எனக்கு விசாக்கிடைத்த நாள் பற்றியதுதான். ஆனாலும் அந்தக் கனவையும் சொல்லுமாறு மூளை தொணதொணத்துக்கிடக்கிறது. ஒரு புத்தக வெளியீட்டில் புத்தகம் பற்றி பேச நினைத்தவர் தன்னைப்பற்றி பேசி முடித்ததுபோல எனக்கு இந்த சமாச்சாரம் ஆகிவிட்டது.  

சரி, இருந்துவிட்டுப் போகட்டும். கனவைச் சொன்னால் பலிக்காது என்பார்கள். இந்தக் கனவும் பலிக்காத கனவுதான். அதனால் பிரச்சனை இல்லை.  

கனவு இதுதான் :-   

அந்த விசாலமான வீட்டில் பஞ்சபாண்டவர்போல ஐந்து ஆண்கள். ஒரு பெண்ணின் முகம்மட்டும் தெரிகிறது. உடலில் துணி இல்லை. கழுத்துக்கு கீழ் கானல் நீர்போல் பெண் உடல் தெரிகிறது. ஆண்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். ஏதோ பெரிய செயலில் ஈடுபட ஆயத்தமானார்கள். அங்கு நானும் இருக்கிறேனா அல்லது அவற்றை பார்த்துக்கொண்டிருக்கிறேனா தெரியவில்லை. கனவில் அந்தக்காட்சி தெளிவில்லை. திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இருட்டை போக்க விளக்கை கொழுத்தவேண்டுமென்று ஐவரும் முயல்கிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட போட்டியில் தீப்பெட்டி தண்ணீரில் விழுந்துவிடுகிறது. திடீரென அடைமழை. வீட்டின் முகட்டை காணவில்லை. இருட்டோடு வந்த மழையில் வீடுநீரில் நிறைந்து. எல்லோரும் நீரில் மூழ்குகிறோம். சாவுப் பயத்தில் திடுக்கிட்டு எழுந்தபோது கனவு கலைந்தது. 

இந்தக் கனவைப்பற்றி நினைத்தவாறு வேலைக்குச் சென்றேன். பின் காலை 11:35 மணிக்கு எனது விலாசக்காரன் அழைப்பில் வந்தான்.  

வழமைபோல முகவரி வாடகை கேட்கப் போகிறான் என்று நினைத்தவாறு ஆமிக்காரனுக்கு ஐசி நீட்டியதைப்போல பச்சை பொத்தானை தட்டினேன்.  

‘’மாறன் என்ன வேலையோ?’’ 

‘’ஓமோம், சொல்லுங்கோ.. ‘’ 

 என்று பேச்சை முடிக்கும் நோக்கோடு இரண்டு பாத்திரங்களை மெதுவாக தட்டிவிட்டேன். அவை நிலத்தில் விழுந்து கணீர்… கணீர் என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தன. வாடகை முகவரி வீட்டுக்காரனுக்கு நான் வேலையில் இருப்பதை அந்தச்சத்தம் உறுதிப்படுத்தும்.  

‘’வேலை முடிய வீட்ட வாறியா?’’ என்றான். வழமையாக பாரிசில் நான் இருப்பது ஒர் அகதி அறையில். அரசு என்னை தொடர்புகொள்ள ஒரு முகவரி வேண்டும். இருக்கும் அறை அதற்கு தகுதியற்றது. அதனால் தனபாலன் என்பவரிடம் வாடகைக்கு முகவரியை வாங்கி வைத்திருக்கிறேன். அரசின் கணக்குப்படி நான் இருப்பது தனபாலன் வீட்டில். அங்குதான் எனக்கான கடிதங்களை அரசு அனுப்பும். அதற்கான வாடகையை மாதத்தின் முதற்கிழமை தனபாலுவிடம் கொடுத்திட வேண்டும். அல்லாவிட்டால் தனபாலுவின் வாய் கெட்டவார்த்தை பூமாலையை அணிவிக்கும். அவற்றுக்கு பொருள் கண்டுபிடிப்பதே கடினம். எல்லாம் தனபாலின் சொந்த தயாரிப்புக்களாக இருக்கும். தனபால் பிரான்சுக்கு வந்ததில் இருந்து இப்படியான சேவைகளையும், அரசு உதவியையும் பெற்று செழிப்பாக வாழும் சீவன். வழமைக்கு மாறாக அன்று அவன் குரல் இங்கிதமாக இருந்தது. அது தனபாலின் சுவாபம் இல்லை. ஏதாவது காசுகீசு கடன் கேட்க்கப்போகிறானோ? என்று நினைத்தவாறு,. 

‘’அண்ண இந்த மாத விலாசகாசை வாற கிழமை தல்லாம். இப்ப கொஞ்சம் கஷ்டமா இருக்கு’’  

என சூரியனைத் தொலைத்தபட்டி மாடு போல் வேகம்காட்டினேன்.  

‘மாறா, உனக்கு விசா கிடைத்துவிட்டது. கடிதம் வந்திருக்கு வந்து எடு’’ என்றான்.  

என்னால் பேசமுடியவில்லை. ‘’உண்மையாவா அண்ண!?’’ அப்படியே அமர்ந்துவிட்டேன். எனக்கு முப்பத்தி ஒரு வயது என்று சொல்லும் நாட்களில் பிரான்சுக்கு வந்தேன். என்னை அகதியாக ஏற்றுக் கொள்ள இந்த நாட்டுக்கு ஒன்பது வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இங்கு எல்லோரும் அகதி என்ற அந்தஸ்தை  நாகரீகமாக ’விசாகிடைத்தது’ என்று கொண்டாடுவார்கள். பிறந்தநாள் கொண்டாட்டம்போல அகதி நாள் கொண்டாட்டம். எங்கும் செல்வதற்கான அனுமதி இல்லை. இங்கு வாழ்வதற்கான அனுமதி. 

 இத்தனை நாட்களாக எப்படி இருக்க முடிந்தது? என்று நீங்கள் அவசரப்படக்கூடாது. அகதியாகத்தான் இருந்தேன். இதற்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட அகதியாக இருப்பேன். காவல்துறையை கண்டால் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்குபற்றி உள்ளாடைகள் நனையவேண்டிய அவசியம் இனி இல்லை அவ்வளவுதான். ஆனாலும் அகதியாவதை பெருமையாகவும், வாழ்வின் இலக்காகவும் கொண்டவர்களை உற்பத்தி செய்த நிலத்தைச் சேர்ந்தவன்தானே நானும்?!. 

ஆறு அடியைத் தாண்டிய உயரமும், நீண்ட முகமும் காதலியை விட அதிகமாக கியூப சுருட்டை விரும்பும் ஜெறோம் என்ற முதலாளியின் உணவு விடுதியில் கடந்த நான்கு வருடங்களாக கள்ள விசாவில் வேலை செய்கிறேன்.  அங்கு என்னை சிவா என்று அழைப்பர். 

சண்முகசுந்தரம் சிவராசா என்னை புறத்தோற்றத்தில் ஒத்து இருந்து உதவி புரிந்தார். அத்தோடு வேலையற்ற அகதியின் அவதியை மறக்காத மனதை அவர் வைத்திருந்ததால், அவரின் நல்ல விசா என் கள்ள விசாவாகி எனக்கு வேலை கிடைப்பதற்கு காரணமாக அமைந்தது.  

அந்த விடுதியின் முதலாளி அந்தப் பெயரை ‘சண்முகசுந்தரம் சிவராசா’ என்று வாசித்து முடித்தபோது நூற்றாண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன விலங்கை தான்தான் கண்டுபிடித்தவன்போல மகிழ்ச்சி அடைந்தார். அதனால் அந்த விசாவில் உள்ள உருவத்தையும் என் முகத்தையும் உற்றுப்பார்க்கவில்லை. உற்றுப்பார்த்து இருந்தாலும் ஐந்து வருடங்களாக நான் பெற்ற பயிற்சி எனக்கு நிச்சயம் கைகொடுக்கும். அவர் கையில் வைத்திருந்த கியூப சுருட்டை அதிசயமாக வெளியில் எடுத்து, 

‘’உன்னை நான் சிவா என்று அழைக்க முடியுமா?‘’ என்றான்.  

எனக்கோ அகதி வாழ்வின் முதல் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் கேள்வியில் இருந்து எனக்கு வேலை கிடைப்பது பாரிசில் உறுதியாகியது. அந்த முக்கியமானதும் தமிழர்களை கைகொடுத்து காப்பாற்றிய தொழிலின் பெயர் ‘புளோஞ் அடித்தல்’ அப்படியெனில் புரியும்படி சொல்வதென்றால் சட்டிபானை கழுவுதல். இன்னும் புரியவில்லையெனில் கோப்பை கழுவுதல். இந்தத் தொழிலுக்கு ஒரு மதிப்பு இருந்தது. எல்லாச் சாதித் தமிழர்களையும் சரிசமனாக்கிய, ஒரேதொழிலாக இருந்தது. அப்படியெனில் இது ஒரு புரட்சிகரமான தொழில்.  

அந்த விடுதியில் 300 பேர் ஒரே நேரத்தில் உணவருந்த முடியும். சமையல் பகுதியில் என்னோடு சேர்ந்து ஆறு பேர் வேலை செய்தார்கள். மூன்று தமிழர்கள் இரண்டு கறுப்பு பிரஞ்சுக்காரர், ஒரு வெள்ளை பிரஞ்சுக்காரர். கறுப்பும் இன்றி வெள்ளையும் இன்றிய மூன்று அகதி தமிழர்.  

அந்தக் குசினி அறையில் பெரும்பான்மை தமிழர் என்றாலும் தலைமை வெள்ளைக்காரன் பிலிப்தான். அவன் இல்லாதவிடத்து கறுப்பு பிரஞ்சுக்காரன் சாமுவேல் பொறுப்பில் இருப்பான். சாமுவேலின் பெயரின் முடிவில் ‘வேல்’ இருப்பதால் நாம் அவனை முருகா என்போம். அவர்கள் தகுதியானவர்களாக இருந்தார்கள். பிரஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். அதைவிட சமையல் கலை கற்று தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். 

என்னை வேலையில் சேர்த்து விட்ட குலம் அண்ணை இந்த ஆறு பேரைவிட அதிகமான காலம் இங்கு வேலை செய்கிறார். இருபத்தைந்து வருடங்களாக அந்த குசினி அறைதான் அவருடைய வாழ்க்கையாக இருக்கிறது. அவர் எல்லா வேலைகளையும் தெரிந்தவராக இருந்தபோதும் பிரெஞ்சு மொழி முழுமையாக தெரியாததாலும் சமையல் கலை படித்து பட்டம் பெறாததாலும் அவரால் தலைமை சமையலாளர் என்ற பட்டத்தை அலங்கரிக்க முடியவில்லை. அவ்விடத்தை விட்டு வேறு இடம் செல்லும் வாசனை இல்லாத மனிதராக அவர் இருந்தார். அவரில் ஏற்பட்டிருக்கும் முதுமை இனி அவர் ஒருபோதும் அவரிடம் வேறு வேலை செய்வதற்கான வாய்ப்பையும் வழங்க மறுத்துவிட்டது. என்னை வேலைக்கு அங்கு சேர்த்ததற்காக முதல் மாத சம்பளத்தை பேசிக் கொண்டபடி மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார். இந்த விஷயத்தில் மனுஷன் தமிழன் என்பதில் உறுதியாக இருந்தார்.  

எப்போதும் சிரிக்க ஆரம்பித்தவன் போலவும், நாடியில் தாடி மயிர் வழிக்க மறந்தவனாகவும் தலையில் முன்பாதி முடியை கடவுளுக்கு தானம் கொடுத்தவன் போலவும் ரமணன் இருந்தான். ஐந்து வருடமாக அங்கு வேலை செய்கின்றான். தன்னைப் பற்றி அதிகம் பேசாமலே கெட்டித்தனம் காட்டினான். ஆனால் வஞ்சகம் அற்றவன். உன் வேலை என்வேலை என்று பங்கு பிரிக்காது எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்வான்.  

நான் ஒரு கள்ள விசா என்பது குலத்தாரை தவிர ஒரு குஞ்சுக்கும் அங்கு தெரியாது. ரமணன் கூட என்னை சிவா என்றே அழைப்பான். அன்று மாலை குலம் அண்ணையை அழைத்து காதுக்குள் குசுகுசுத்தேன். அவர் இரவு எப்படியும் தனக்கு பாட்டி வைக்க வேண்டும் என்று மகிழ்ந்தார். முதுகில் தட்டி பெருமூச்சு விட்டார்.  

‘ரமணன் இன்று வேலை முடிய ஒரு பாட்டி இருக்குது’ என்றேன். என்ன பிறந்தநாளா? என்றான். ‘இல்லை அதைவிட மேல’ என்று அவன் ஆர்வத்தை தூண்டினேன். ‘நான் குடிக்க மாட்டேன்‘ என்றான். குலத்தார் குறுக்கிட்டு ‘அது பழரசம் குடிக்கத் தேவையில்லை. நாக்கை நினைத்தால் போதும் ரசத்தின் மகிமை தெரியும்.’ என்றார். நானும் உசுப்பேத்தும் விதமாய் ‘மச்சான், பாரிசில் இருந்துகொண்டு வைன் சுவை தெரியாமல் இருப்பதைவிட இந்த நதியில் விழுந்து சாவது மேல்’ என்றேன்.  

வழக்கத்துக்கு மாறாக குலத்தார் எனக்கு வேலையில் உதவி செய்தார். அன்று இரவு பொதுவாக பத்து முப்பது மணிக்கு எல்லோரும் வேலை முடித்து விடுவார்கள். ஆனால் என்னுடைய வேலையின் நிமித்தம் இரவு பதினொரு மணி வரை கோப்பைகள் கழுவிக் கொண்டிருக்க வேண்டும். அன்று எல்லோரும் பத்து முப்பது மணிக்கு வெளியேறும் முகமாக நாம் வேகவேகமாக வேலையை முடித்தோம். குலத்தார் வழமையாக வைன் வேண்டும் அடையான் கடையில் அவரின் அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து மூன்று விலை உயர்ந்த பொர்தோ வைன் வேண்டினோம்.  

‘அடையான் கடை’ முக்கியமானது. பிரான்சில் மூத்த அகதித் தமிழர்கள் உருவாக்கிய தமிழ்ச்சொல்.  

வட ஆப்பிரிக்க பழுப்பு நிறத்தவர்களின் பலசரக்கு கடை பாரிஸ் பூராகவும் பரவியிருக்கும். இவர்கள் சாமம் சாமாக தமது பலசரக்கு கடையை திறந்து வைத்திருப்பார்கள். இதனால் வேலைகள் முடிந்து இரவு வேளைகளில் அகதியாக இருந்த தமிழர்கள் இந்த கடைகளுக்குச் சென்று தான் தங்களது பொருட்களை வேண்டுவார்கள். ஆதலால் அவர்களை ‘அடையார்’ அதாவது கடையை மூடாதவர்கள் என்று ஆதியில் வந்த அகதித் தமிழர்கள் பெயர் வைத்தார்கள். ஆதலால் அடையார்களுக்கு கடமைப்பட்டவர்கள் அகதிகள். 

மெட்ரோ நிலையத்திற்கு அருகில் இருந்த ஓய்வு தோட்டத்தில் நுழைந்தோம். அங்கு ஆபிரிக்க ஆணழகர்கள் மேலாடையற்று பெரிய குரலெடுத்து பாடி ஆடிக் கொண்டிருந்தனர். வெயில் காலம் என்பதால் பாரிஸ் தூங்கவில்லை. .  

குலத்தார் மிக நேர்த்தியாக வைன் திறந்துகொண்டே ‘ரமணன் சிவாக்கு விசா கிடைத்து விட்டது’ என்றார். நான் அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன் கண்கள் விரிய பாய்ந்து கட்டியணைத்தான். ‘உண்மை பெயரென்ன?என்றான். வரதன் என்று சக மனிதனை ஏமாற்றிய வெட்கத்தோடு கூறினேன். குலத்தார் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு ‘சோந்தே’ என்றார்.  

நாங்கள் இந்திரலோக வாசலில் இருந்தோம். குலத்தார் எல்லா சினிமா பாடல்களின் முதல் வரிகளையும் சேர்த்து புது பாடல்களை உருவாக்கி பாட ஆரம்பித்தார். ரமணன் ‘வயதும் ஆகுது கல்யாணம் காட்டுங்கோ’ என்றான். எப்படி கட்டுவது? யாரை கட்டுவது? யார் இருக்கிறார்? என்றேன்.  

பாட்டை நிறுத்தி குலத்தார் ‘’கொப்பா, கொம்மா எங்க?’’ என்றார். எனக்கும் இந்த நிலையில் உண்மைகளை சொல்ல வேண்டும் போலிருந்தது.  

‘அப்பாவையும் அம்மாவையும் 1987இல் இந்தியன் ஆமி சாமிகிட்ட அனுப்பி விட்டார்கள். என்றேன். ‘என்னடா சொல்றாய்?’ என்று நிமிர்ந்தமர்ந்தார்.  

‘ஓம் அண்ண எனக்கு எட்டு வயது 21/10/1987 வீட்டில் என்னையும் அக்காவையும் விட்டுட்டு அம்மாவும் அப்பாவும் யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரிக்கு போனவை. வயித்துல குழந்தை இருந்தது. அப்பா சைக்கிளில் கூட்டிக் கொண்டு போனவர். அங்கு வைத்தியர் சிவபாதசுந்தரம் உட்பட எல்லோரையும் சேர்த்து இந்தியன் ஆமி சுட்டுக் கொன்றார்கள். அந்த வைத்தியசாலைக் கொலையில் அப்பாவும், அம்மாவும் எனக்கு தம்பியோ தங்கையோ பூமியை பார்க்காத சிசுவும் கொல்லப்பட்டார்கள். பிறகு சித்தியோட வளர்ந்தோம். அக்கா இயக்கத்திற்கு போயிட்டா. மல்லாவியில் இடம்பெயர்ந்திருந்தபோது ஓயாத அலை சண்டையில் அக்கா வீரச்சாவு. கடைசியில தாய் போல என்னை வளர்த்த சித்தி இரணைப்பாலையில் செல் விழுந்து சிதறிப் போய் விட்டார்.’’ என்றேன். பொர்தோ வைன் எல்லாவற்றையும் ஒரு பூட்டிக்கிடந்த புதையல் கதவை உடைத்துத்திறப்பது போல மனதின் பூட்டை உடைத்து திறந்ததுவிட்டது.  

குலத்தார் என் தலையில் கைவைத்து தடவினார். எனக்கு அந்த அரவணைப்பு தேவைப்பட்டது. ‘’உனக்கு நான் கல்யாணம் கட்டி வைப்பேன்’’ என்று போத்தல் மீது சத்தியம் செய்தார்.  

இன்னும் இருக்கும் பதினைந்தாயிரம் யூரோ கடனை கட்டி திருமணம் செய்ய எனக்கு நாற்பத்தி மூன்று வயதாக இருக்கும் என் திருமண வயதுக்கு ஏற்றாற்போல் தமிழ் பெண்கள் எல்லோரும் திருமணம் முடித்து இருப்பார்கள். இது குலத்தாருக்கு தெரியாமல் அவசரப்பட்டு சத்தியம் செய்துவிட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது ரமணன் முதல்முதல் மனம் அவிழ்த்து பேச ஆரம்பித்தான்.  

ரமணன் நாக்கை பழ ரசத்தில் ஊற வைத்துக்கொண்டே. தானும் கள்ள விசாவில் வேலை செய்வதை கூறி, தன் உண்மைப்பெயர் ‘வதனன்’ என்றும் இதை மறைத்ததற்கு மன்னிப்புக் கோரியவனின் கதை என் நிலையை விட மோசமாக இருந்தது.  

 பேயறைந்ததுபோல் வதனன் கதையை கேட்ட குலத்தார் கதறி அழ ஆரம்பித்தார். இலங்கையில் 1983 பின்னர் ஆயுப்போராட்டத்தின் மூலம் விடிவு என்று முப்பதுக்கும் அதிகமான  போராட்ட அமைப்புகள் உருவாகின. அதில் ஐந்து பேருக்கே தெரிந்த அமைப்பின் தலைவராக குலத்தார் இருந்திருக்கிறார். அந்த வயதானவரின் கண்ணீரும், கதையும் வரலாற்றிடம் மன்னிப்புக்கேட்பதுபோல் இருந்தது. எனக்கு அதிகாலை கண்ட கனவு மீண்டும் நினைவில் வந்தது.  
 

 

https://arangamnews.com/?p=7663

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு அலைந்து திரிந்து அல்லல் பட்டு இங்கு வந்த எல்லோரிடமும் இதுபோன்ற ஒரு கதை மூளைக்குள் முட்டி மோதிக் கொண்டே இருக்கின்றது........!  😢

நன்றி கிருபன்......!

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2022 at 20:36, கிருபன் said:

‘அப்பாவையும் அம்மாவையும் 1987இல் இந்தியன் ஆமி சாமிகிட்ட அனுப்பி விட்டார்கள். என்றேன். ‘என்னடா சொல்றாய்?’ என்று நிமிர்ந்தமர்ந்தார்.  

அங்கதமாகத் தொடங்கி, மேற்குறித்த பகுதியிலிருந்து பெரும் அவலத்தைப் பதிவு செய்கிறது. இனவிடுதலைக்கான போராட்டத்திலே சொல்லமுடியாத ரணங்களோடும், ஆற்றுப்படுத்தலற்ற அச்சத்தோடும் இன்றும் பலர் இந்தியப்படைகளின் கொடுமைகளை சுமந்தவாறு வாழ்கிறார்கள். இணைப்புக்கு நன்றி. கதையை(கதையல்ல) நகர்த்தியவிதம் நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை அகதியாக ஏற்றுக்கொள்ள ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டார்கள். புலம் பெயர் வாழ்வில் எதிர்காலம் என்றால் என்ன என்று தெரியாத ஒரு வாழ்வு இருந்தது.

நல்லதொரு கதை கிருபன். நன்றி!

  • Like 2
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.