Jump to content

அவர்கள் அழிக்க விரும்பும் ரத்தச்சிவப்பு கையெழுத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

C963C25E-DEB2-401D-8C41-2790FFCF3E50.jpeg
 

 

சரி, கங்கிரஸ் தான் ராஜீவைக் கொன்று விட்டார்களே எனும் கோபத்தில் விடுதலை செய்யவில்லை, இந்த பாஜகவுக்கு என்ன பிரச்சனை என சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்வி. ஆனால் இதைக் கேட்பவர்கள் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான ஒற்றுமைகளைப் பற்றி யோசிக்க வேண்டும்

 

காந்தியின் காலத்தில் இருந்தே இந்துத்துவர்கள் மத்தியில் இரண்டு பிரிவுகள் இருந்தனர். ஒரு தரப்பு அமைதி வழியில் இந்து ராஜ்ஜியத்தை தோற்றுவிக்க முயன்றனர்; மற்றொரு தரப்பினர் வன்முறையை விரும்பினர். முதலாவது தரப்பினர் காந்தியுடன் இணைந்து பணியாற்றினர், ஆனால் காங்கிரஸுக்கு வெளியே இருந்து கொண்டு. இவர்களை காந்தி அங்கீகரித்து பேசியுள்ள பதிவுகள் உள்ளன. மற்ற தரப்பு காந்தியை கடுமையாக வெறுத்தது, இறுதியில் கொன்றது. இந்த இரண்டு தரப்புகளையும் இணைத்த அமைப்பு தான் பாஜக

 

வன்முறைக்காக பின்னதையும் நிர்வாகத்துக்காகவும் தலைமைக்காகவும் முன்னதையும் பாஜக நம்பி இருக்கிறது. முகப்பூச்சுகளைக் கழுவினால் பாஜகவும் காங்கிரஸும் கிட்டத்தட்ட ஒன்று போல இருப்பது இதனாலே. அவர்கள் ரெட்டைக் குழந்தைகள். ஒரு குழந்தை மருவுடன் கறுப்பாக இருக்கிறது, மற்றொன்று பளிச்சென்று சிவப்பாக இருக்கிறது. ரகசியமாக அவ்வப்போது கைகோர்த்து அண்ணா தம்பி என கொஞ்சிக் கொண்டாலும் வெளியே விரோதிகளாக நடிப்பார்கள். இதுதான் இந்திய அரசியலின் அன்பு மலர்களே நம்பி இருங்களேன், நாளை நமதே இந்த நாளும் நமதே”. 

 

சற்று சீரியஸாக யோசித்தால், இந்த இரண்டு கட்சிகளுக்கும் வேறு இரண்டு ஒற்றுமைகள் தெரியும்.

 

  1. தேசமே முக்கியம், மக்கள் அல்ல எனும் நம்பிக்கை. பக்கூனின் தனது God and the State நூலில் தேசம் எனும் கட்டமைப்பே ஒரு அரசியல் மதம் என்கிறார். அதாவது தேசத்தை மதமாக்கி, இறையாண்மையை கடவுளாக்குவது தான் நவீன அரசுகளின் வேலை. கடவுள் என்று வந்து விட்டால் அவருக்கு எதிராக யாரும் பேசவோ செயல்படவோ விமர்சிக்கவோ முடியாது. கடவுளை எதிர்ப்பவர் துரோகி, அவரை தூக்கிலடாம். இந்த பகுத்தறிவுக்கு அப்பாலான கடவுள் பக்தியே தேசபக்தி என உருமாற்றப்படுகிறது. அதனால் தான் ராஜீவின் கொலையாளிகள் என அறியப்படுபவர்களை விடுவிப்பது ஒரே நேரத்தில் பாஜகவினரையும் காங்கிரஸர்காரர்களையும் கடுப்பேற்றுகிறது. அது அவர்களுடைய தெய்வத்தை (தேசம் / இறையாண்மை) நிந்திக்கிற செயலாகிறது. அதன் பின்னுள்ள தர்க்கம், நியாயம் அவர்களுக்குப் புரியாது. ஏனென்றால் பக்திக்கு தான் தர்க்கம் இல்லையே. தெருவில் ஒருவர் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ஓடினால் நாம் பீதியடைவோம், ஆனால் தேசிய மாணவர் படையினர் போலி துப்பாக்கிகளுடன் அணிவகுத்தால் அதைப் பார்த்து பெருமை கொள்வோம். அதன் வன்முறை நமக்குப் புலப்படாது. ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டால் கண்ணீர் விடுவோம், ஆனால் ராணுவ வீரர்கள் யாரையாவது கொன்றால் கண்டுகொள்ள மாட்டோம். இது தான் நமக்குள் ஊறியுள்ள பக்தியின் விளைவு. இம்முறை பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட போது அதை கடுமையாக கண்டித்து எழுதியவர்கள் பாஜக எதிர்ப்பாளர்களும் கூடத்தான் என்பதை கவனியுங்கள். அவர்கள் நேரடியான காங்கிரஸ் ஆதரவாளர்கள் அல்ல. ஆனால் தேசியவாதிகள், மறைமுக காங்கிரஸ் எண்ணப்பாடு கொண்டவர்கள். அதே நேரம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் அல்ல. குழப்பமாக இருக்கிறதா?

 

பொதுவாக இந்த தரப்பினர் இப்போதுள்ள பாஜக ஆட்சி முரட்டுத்தனமாக இருக்கிறது, இதே இந்துத்துவத்தை இன்னும் சற்று நாகரிகமாக மென்மையாக முன்னெடுக்கலாமே என கோருகிறார்கள். அதனாலே அவர்களுக்கு மோடி / அமித் ஷா மீது கடும் கோபம் வருகிறது. விமர்சிக்கிறார்கள். சபிக்கிறார்கள். அதே நேரம் இவர்களுக்கு காங்கிரஸின் முற்போக்குவாதம், சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் போக்கும் பிடிக்காது. காங்கிரஸ் தனது இந்து அடையாளத்தை, பெருமிதத்தை முன்வைப்பதை விரும்புவார்கள். நான் ஒரு இந்து என இத்தகையோர் பிரகடனம் செய்ய கூச்சப்பட மாட்டார்கள். ராமச்சந்திர குஹாவில் துவங்கி பேஸ்புக்கில் தேசப்பற்றுடன் கொந்தளிக்கிற நபர்கள் வரை இப்படியானவர்களே

 

இவர்கள் தீவிர இந்து பக்தர்கள் அல்லது வைதீக இந்து பண்பாட்டில் மனச்சாய்வு கொண்டவர்கள் என்பதால், வெளிப்படையாக அதை முன்வைப்பதில் குழப்பம் கொண்டவர்கள் எனப்தால், தம் பக்தியை தேசபக்தியாக மாற்றிக் கொள்கிறார்கள். மதசார்பற்ற தேசியர்கள் என ஒரு முகமூடி அணிந்து கொள்கிறார்கள்

 

ஒருவர் இதுவரை விடுதலை புலிகள் கொன்றவர்களின் பட்டியல் என ஒன்றை வெளியிடுகிறார். அந்த பட்டியலையும் தாண்டி புலிகள் ஆயிரக்கணக்கானோரை வெடிகுண்டு வைத்தும், சுட்டும் கொன்றிருக்கிறார்கள் என்கிறார். அவரது நோக்கம் இவ்வளவு கொடூரமான புலிகளுடன் தொடர்பில் இருந்த பேரறிவாளனையா விடுவித்தீர்கள் என வினவுவதே. சரி, இவர் ஏன் சிங்கள ராணுவம் கொன்றவர்களின் பட்டியலை வெளியிடுவதில்லை? சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய ராணுவமும், காவல்துறைகளும் கொன்றவர்களின் பட்டியலைப் பற்றி ஏன் யோசிப்பதில்லை? ஏனென்றால் மக்களைக் கொல்வதற்கு தேசத்துக்கு உரிமை உண்டு என இவர்களைப் போன்றோர் நம்புகிறார்கள். ஒரே கொலையை ஒருவர் செய்யலாம், இன்னொருவர் செய்யலாகாது. ஏனென்றால் முதலாமவர் கடவுள்”.

 

2) அடுத்த ஒற்றுமை இதன் நீட்சியே. ராஜீவ் கொல்லப்பட்டது அல்ல ராஜீவ் எனும் பிரதமர் கொல்லப்பட்டதையே இவர்களால் - காங்கிரஸ் + பாஜக + நடுநிலை பக்தர்கள் - தாங்கிக் கொள்ள முடியவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரண்மனை சதிகளால் மன்னர் கொல்லப்படும் போது இப்படித் தான் பொதுமக்களால் தாங்க முடியாமல் போனது. கடவுளை விமர்சித்தால் ஜனங்களுக்கு கொலைவெறி ஏற்பட்டது. இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது தில்லி முழுக்க ஆயிரக்கணக்கான சீக்கியர்களை வேட்டையாடினார்களே காங்கிரஸார். ஏன்? இந்திராவுக்காகவா? இல்லை. ஒரு பிரதமர் மீது கைவைத்தால் என்ன செய்வோம் எனக் காட்டுவதற்காக. ஒருவேளை ராஜீவ் பிரதமரே ஆகவில்லை, அவர் வெறும் விமானியாக இருந்திருந்தால் இவர்களில் ஒருவரும் அவரது கொலையை பொருட்படுத்தி இருக்க மாட்டார்கள். இதே போலொரு அரண்மனை சதித்திட்டத்தின் விளைவாகத் தானே சஞ்சய் காந்தி கொல்லப்பட்டார். ஏன் அதற்கு தண்டனை பெற்றுத் தருமாறு காங்கிரஸார் கொந்தளிக்கவில்லை. ஏனென்றால் கொன்றது யார் என அவர்களுக்குத் தெரியும்.

 

ராஜீவ் கொலை கூட நரசிம்மராவின் விருப்பத்துடன் சந்திராசாமியால் நடத்தப்பட்டது, புலிகள் வெறும் கருவிகள் என அனைவருக்கும் தெரியும். அதனாலே நரசிம்மராவை தில்லியில் கௌரவமாக அடக்கம் பண்ண சோனியா காந்தி அனுமதிக்கவில்லை. ஆனால் ஏன் நரசிம்மராவை எந்த காங்கிரஸ்காரரும் கண்டித்து ஒரு சொல் கூட கூறுவதில்லை. ஏன் பாஜகவினரும் நமது நடுநிலை அங்கிகள்களும் அவரைப் பற்றி பேசுவதில்லை? ஒரு சதித்திட்டத்தின் ஏவலாட்கள் அல்ல, அதைத் தீட்டியவர்கள் தானே பிரதான குற்றவாளிகள்? ஏனென்றால் நரசிம்மராவும் ஒரு பிரதமர்

 

இதில் இருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ளலாம் - பிரச்சனை ராஜீவோ, அவரது உயிரோ, அல்லது இவர்கள் திடீர் அக்கறையில் கூவுவதைப் போல வெடிகுண்டு தாக்குதலில் அன்று கொல்லப்பட்ட பொதுமக்களோ அல்ல. பிரச்சனை அரியணை மட்டுமே. பிரச்சனை இறையாண்மை மட்டுமே. பிரச்சனை ராஜீவ் மீது வெடித்த குண்டு என்பது தன்னிச்சையாக நம் வரலாற்றில் இடப்பட்ட அரசின்மைவாதத்தின் ரத்தச்சிவப்பு கையெழுத்து என்பது. அதை இவர்கள் அவசரமாக அழித்து விட தவிக்கிறார்கள்.

 

இவர்களால் ஒரு போதும் எழுவரையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு பற்பல பொய்க்காரணங்களை புனைந்தபடியே இருப்பார்கள். பக்தர்களுக்கும், பக்தாஸுக்கும் இந்த விசயத்தில் பெரிய வேறுபாடுகள் இல்லை

 

கடவுள் ஒருவேளை இல்லாமல் இருக்கலாம் எனும் இடத்துக்கு வந்து விட்ட இவர்களுக்கு ஒரு பற்றுகோலாக இறையாண்மை தேவைப்படுகிறது. அதன் மீது வெடித்த குண்டை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

 

தேசத்துக்கும் தெய்வத்துக்கும் ஒரு ஒற்றுமை இரண்டுமே எதார்த்தத்தை நம் கண்ணில் இருந்து மறைப்பதற்கான ஒரு மூடுதிரை. விசித்திரமாக இரண்டையும் நம்மால் பார்க்கவோ உணரவோ முடியாது. ஏனென்றால் இரண்டுமே இல்லை’. தேசபக்தி ஒரு போதை. மனிதர்களின் துயரத்தை, அநீதிகளைப் பார்க்க விடாமல் அது நம்மைத் தடுக்கிறது.

 

அதனால் … “ என ஆரம்பிக்கும் இறுதி வரி ஒன்று உள்ளது. அதை நான் எழுதினால் என்னை சிறையில் தள்ளி விடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2022 at 18:30, ஏராளன் said:

ராஜீவ் கொலை கூட நரசிம்மராவின் விருப்பத்துடன் சந்திராசாமியால் நடத்தப்பட்டது, புலிகள் வெறும் கருவிகள் என அனைவருக்கும் தெரியும். அதனாலே நரசிம்மராவை தில்லியில் கௌரவமாக அடக்கம் பண்ண சோனியா காந்தி அனுமதிக்கவில்லை. ஆனால் ஏன் நரசிம்மராவை எந்த காங்கிரஸ்காரரும் கண்டித்து ஒரு சொல் கூட கூறுவதில்லை. ஏன் பாஜகவினரும் நமது நடுநிலை அங்கிகள்களும் அவரைப் பற்றி பேசுவதில்லை? ஒரு சதித்திட்டத்தின் ஏவலாட்கள் அல்ல, அதைத் தீட்டியவர்கள் தானே பிரதான குற்றவாளிகள்? ஏனென்றால் நரசிம்மராவும் ஒரு பிரதமர்

அனைவருக்கும் தெரியவேண்டியதுதான்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.