Jump to content

இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வி அடையுமா? நிலாந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வி அடையுமா? நிலாந்தன்!

May 22, 2022

spacer.png

 

ரணில் விக்ரமசிங்க யாருடைய பிரதமர் ? அவர் கோத்தபாயவின் பிரதமரா ?அல்லது ஆளுங்கட்சியின் பிரதமரா ?அல்லது எதிர்க்கட்சிகளின் பிரதமரா? சிலர் அவரை அமெரிக்காவின் பிரதமர் என்று சொன்னார்கள். மேற்கத்திய நிதி முகவர் அமைப்புக்களின் பிரதமர் என்று சொன்னார்கள். காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை டீல்களின் பிரதமர் என்று சொன்னது. முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவரை கிழட்டுக் கோழி என்று சொன்னார்.

ஆனால் ஒரே ஒரு ஆளாக உள்ளே வந்தவர்,இப்பொழுது பெரும்பாலானவர்களின் தவிர்க்கப்பட முடியாத தெரிவாக மாறியுள்ளார். நாட்டின் நிதி நெருக்கடியும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியும் அவரை தவிர்க்க முடியாதவராக மாற்றி உள்ளனவா?

அவர் மந்திரவாதி அல்ல. மந்திர தந்திரங்களில் நாட்டமுடையவரும் அல்ல. ராஜபக்ச குடும்பத்தைப் போல ஞானாக்காக்களின் பின் செல்பவரோ, அல்லது மந்திரித்த தாயத்துக்களை கைகளில் அணிந்திருப்பவரோ வைத்திருப்பவரோ அல்ல. அவர் மந்திரத்தை விடவும் தந்திரத்தை நம்புபவர். அவர் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதும் பங்குச்சந்தை மாற்றத்தை காட்டத் தொடங்கியது. டொலரின் பெறுமதி குறைந்தது. மேற்கு நாடுகள் உதவிகளை அள்ளி வழங்கின. இதனால் ஒரு திடீர் எதிர்பார்ப்பு அவரை நோக்கி உருவாகியது. அதன் விளைவாக உள்ளூர் சந்தைகளில் பதுக்கப்பட்டிருந்த பொருட்கள் வெளிவந்தன. மூடப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வெளிப்படத் தொடங்கியது. முகநூலில் ஒரு நண்பர் எழுதியது போல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் ஊற்றெடுக்க தொடங்கியது. 3 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்ட சீமெந்து திடீரென்று 1200ரூபாய்க்கு இறங்கியது. இவ்வாறு பதுக்கப்பட்ட பொருட்கள் வெளிப்படத் தொடங்கியதும் அவர் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்தது.

நாடாளுமன்றத்தில் அவர் தெரிவு செய்யப்பட்ட விதத்தை, அவருடைய தெரிவை எதிர்த்த கட்சிகள் பெரும்பாலானவை படிப்படியாக அவரை எதிர்ப்பதில்லை என்ற முடிவை எடுக்கத் தொடங்கின. ஏனென்றால் ரணிலுக்கு எதிராக வாக்களித்தால் மக்களின் எதிர்ப்பை வாங்கிக்கட்ட வேண்டியிருக்கும் என்ற பயம் அவர்களுக்கு. கடந்த 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் மக்களின் கோபம் எப்படியிருக்கும் என்பதை அனுபவித்தவர்கள் அவர்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேசசபைத் தலைவரும் மக்களால் அடித்துக் கொல்லப்படும் அளவுக்கு நிலைமைகள் பயங்கரமாக இருந்த நாட்கள் அவை. எனவே முதலில் பத்திரமாக சொந்த தேர்தல் தொகுதிக்குப் போகவேண்டுமென்றால் இப்போதைக்கு ரணிலை எதிர்ப்பதில்லை என்று பெரும்பாலான சிங்கள கட்சிகள் முடிவெடுத்தன. எனினும் பிரதி சபாநாயகர் தெரிவில் ரணிலுக்குள்ள வரையறைகளை ஆளுங்கட்சி உணர்த்தியிருக்கிறது.

ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டதை பேராயர் மல்கம் ரஞ்சித் ஏற்றுக்கொள்ளவில்லை. மகா நாயக்கர்களின் கருத்தும் அதுதான் என்று அவர் சொன்னார். சகல மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சகல மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று பேராயர் போர்க்கொடி எழுப்பினார். அப்படி ஒருவரை நாடாளுமன்றத்தில் கண்டுபிடிப்பது கடினம் என்று பேராயருக்கும் தெரியும். தவிர நாடாளுமன்றத்துக்கு வெளியே அப்படிப்பட்ட ஒருவரைத் தேட பேராயராலும் முடியவில்லை. மகாநாயக்கர்களாலும் முடியவில்லை. இந்த வெற்றிடத்தை தந்திரமாகப் பயன்படுத்தி ரணிலை கோத்தபாய தெரிவு செய்தார்.

யாப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கோத்தாபய ரணிலைத் தெரிவு செய்தார். அதாவது யாப்பின்படி ரணில் தெரிவு செய்யப்பட்டார். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்கவேண்டும். கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்டு ஒரு புதிய தலைமுறை போராடுகிறது. ஆனால் யாப்பின்படி அவரை வெளியே அனுப்ப முடியாதுள்ளது. அதேசமயம் மஹிந்த பதவி விலகியது யாப்பின்படி அல்ல. யாப்பின்படி அவர் பலமாகக் காணப்பட்டார். ஆனால் யாப்புக்கு வெளியே நடந்த மக்கள் எழுச்சிகள் அவரைப் பதவிவிலகத் தூண்டின. அந்த மக்கள் எழுச்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் தலைமை தாங்கியிருந்திருந்தால் கோட்டோவையும் வீட்டுக்கு அனுப்பியிருந்திருக்கலாம். ஆனால் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்க எந்த ஒரு சிங்களக் கட்சியாலும் முடியவில்லை. சஜித் பிரேமதாசவும் ஜேவிபியும் போராடும் தரப்புகளின் கோஷங்களை ஏற்றுக் கொள்வதன்மூலம் தாங்கள் அவர்களின் பக்கம் என்று காட்டினார்கள். ஆனால் போராடும் மக்களுக்கு தலைமை தாங்க அவர்களால் முடியவில்லை. இதுதான் அடிப்படைப் பிரச்சினை. யாப்பை மீறிச் செல்லத் துணிச்சலற்ற எதிர் கட்சிகளின் மத்தியில் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணிலைத் தெரிவு செய்தார்.

இதை இன்னும் சரியான வார்த்தைகளில் சொன்னால் காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறையும் தெருக்களில் இறங்கி அரசியல்வாதிகளுக்கு பாடம் படிப்பித்த மக்களும், எதிர்க்கட்சிகளும் போராடியதால் கிடைத்த கனிகளை ரணில் விக்கிரமசிங்க சுவீகரித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

மிகப் பலவீனமான, உலகின் மிக நூதனமான ஒரு பிரதமராக அவர் தொடக்கத்தில் தோன்றினார். ஆனால் படிப்படியாக தன்னை பலப்படுத்தி வருகிறார். அவர் கடைசியாக இரண்டு தடவைகள் பதவியில் இருந்த போதும் கூட நிலைமை அப்படித்தான் இருந்தது. அவர் உள்நாட்டில் மிகப் பலவீனமான தலைவராகவும் வெளியுலகில் மிகப் பலமான ஒரு தலைவராகவும் காணப்பட்டார். அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையும் தெரிவிக்கும் தகவல்களும் ஒப்பீட்டளவில் வெளிப்படையானவை. அவர் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கத் தயாரில்லை என்று தெரிகிறது.

இந்தச் சோதனையில் அவர் வெற்றி பெற்றால் அவர் ஒரே கல்லில் மூன்று கனிகளை வீழ்த்துவார். முதலாவது தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் -அதாவது அவரைப் பொறுத்தவரை இது கடைசி ஓவர் -இந்த கடைசி ஓவரில் ஆவது அவர் வெற்றி பெற்ற ஒரு தலைவராக ஓய்வு பெறலாம். மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாட்டை மீட்டெடுத்தவர் என்ற புகழுடன் அவர் ஓய்வு பெறலாம். இரண்டாவது தனது கட்சியை பலப்படுத்தலாம். மூன்றாவது தனது உட்கட்சி எதிரிகளை தோற்கடிக்கலாம்.

அதேசமயம் ரணிலை நியமித்ததன் மூலம் கோத்தபாய முதலாவதாக தன்னைத் தற்காத்துக் கொண்டார். இரண்டாவதாக ஏனைய ராஜபக்சக்களையும் பாதுகாத்துக் கொண்டார். மூன்றாவதாக மக்கள் எதிர்ப்பை ஒப்பீட்டளவில் தணித்திருக்கிறார். காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை வீட்டுக்கு போ என்று கேட்கிறது.  ஆனால் இன்றுவரை அவர் வீட்டுக்கு போகவில்லை. அதேசமயம் ரணிலை நியமித்தன்மூலம் அவர் நாட்டின் கவனத்தையும் வெளி உலகின் கவனத்தையும் ரணிலின் மீது குவியச் செய்து விட்டார். ரணிலின் மறைவில் அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டார்.

இப்படிப் பார்த்தால் ரணிலை நியமித்ததன்மூலம் கோத்தபாயவும் ஒரு கட்டம் வரை வெற்றி பெற்றிருக்கிறார். ஆளும் கட்சியும் வெற்றி பெற்றிருக்கிறது. ரணிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அதாவது சிங்களத் தலைவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தங்களையும் யாப்பையும் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பையும் அமைச்சுப் பதவிகளையும் பாதுகாத்திருக்கிறார்கள் என்று பொருள்.

ரணிலை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற ஒரு வெற்றிடம் ஏற்படுவதற்கு எதிர்க்கட்சிகளும் காரணம். பேராயர் மல்கம் ரஞ்சித் மகாநாயக்கர் போன்ற மதத் தலைவர்களும் காரணம். மதத்தலைவர்கள் நீதியின் மீது பசி தாகம் உடையவர்களாக இருந்தால் அரசியல்வாதிகளும் மக்களுக்கு பொறுப்புக் கூறுவார்கள். இலங்கைத்தீவின் பௌத்த மதம் ஓர் அரச மதம். யாப்பின்படி ஏனைய மதங்களை விட முதன்மை வகிக்கும் பௌத்தமதம் அதற்க்கு முழுப் பொறுப்புக் கூறவேண்டும். ஈஸ்டர் குண்டு வெடிப்போடு பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு ஞானக்கண் திறந்திருக்கிறது. இலங்கைத்தீவின் கத்தோலிக்கத் திருச்சபை ஒப்பீட்டளவில் அதிக இன முரண்பாட்டை பிரதிபலித்தது. கடந்த வாரம் கூட வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லியிருக்கிறது. ஆனால் பேராயர் மல்கம் ரஞ்சித் கூறுவாரா?

இவ்வாறு மதத்தலைவர்கள், குடிமக்கள் சமூகங்கள் போன்றவற்றால் ஒரு பொருத்தமான தலைவரை நாடாளுமன்றத்துக்கு வெளியே கண்டுபிடிக்க முடியாத ஒரு வெற்றிடத்தில்தான் ரணிலுக்கு லொத்தர் விழுந்தது.

“ரணில்விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்த தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும்” என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கைத்தீவு எப்பொழுதோ ஒரு தேசமாக இருப்பதில் தோல்வியடைந்து விட்டது. அதை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவது என்பது சிங்கள பௌத்த தேசமாகக் கட்டியெழுப்புவது அல்ல. அது,தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிப்பதுதான். அந்த அடிப்படையில், பல்லினத் தன்மை மிக்க; பல் சமயப் பண்பு மிக்க; பல்மொழி பண்புமிக்க; ஒரு தேசமாகக் இக்குட்டித்தீவைக் கட்டியெழுப்புவதுதான். தனது கடைசி ஓவரிலாவது ரணில் அதைச் செய்வாரா? அல்லது இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வியடையுமா?

 

https://globaltamilnews.net/2022/176989

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.