Jump to content

உள்நாட்டுக் கடனைப் பற்றிப் பேசுவது எப்போது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டுக் கடனைப் பற்றிப் பேசுவது எப்போது?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையின் வரலாற்றில், வாங்கிய வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவியலாத நிலையில், முதன்முறையாக நாடு வங்குரோத்தாகியுள்ளது. உலகளாவிய ஊடகங்களில் இது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. 21ஆம் நூற்றாண்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், இவ்வாறு வங்குரோத்தான முதலாவது நாடு இலங்கையாகும்.

   இங்கு நாம் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன. முதலாவது, அரசுக்கெதிரான ஓர் எதிர்ப்பியக்கம் காலிமுகத்திடலில் போராடுகையில், அது சர்வதேச கவனம் பெறவில்லை; ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் மரணமோ, காலிமுகத்திடலில் ஏவப்பட்ட வன்முறையோ, சர்வதேச கவனத்தைப் பெறவில்லை. ஆனால், இலங்கையால் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடனை மீளக்கொடுக்க இயலவில்லை என்கிறபோது, சர்வதேச கவனம் இலங்கை மீது திரும்புகிறது. ஏன்? இது முக்கியமானதொரு கேள்வி.

எரிபொருளுக்கும் எரிவாயுச் சிலிண்டர்களுக்கும் தொடர்ச்சியாக வரிசையில் நிற்கையில், அடுத்தவேளை உணவுக்கான வருவாயைத் தேடுவதே குதிரைக் கொம்பாக இருக்கையில், மருந்துப் பொருட்கள் எதுவுமற்ற நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தைச் சூழ்ந்து அரங்கேறும் சூதாட்டங்களைக் கவனிக்க, அன்றாடங்காய்ச்சிகளுக்கும் குடிமக்களுக்கும் நேரமோ அதற்கான வலுவோ இல்லை. இதை ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கமும் நன்கறியும்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெற்றுவிட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற பொய்யை நம்பவைக்க, இந்த நெருக்கடியும் அது தொடர்ந்து தீவிரமடைவதும் பயன்பட்டிருக்கிறது. அப்பாவி இலங்கையர்கள், சர்வதேச நாணய நிதியம் தான் ‘ஆபத்பாண்டவன்’ என்று நம்பியிருக்கும் அவலம் நடந்தேறியிருக்கிறது.

இன்று எல்லோரது கவனமும் அக்கறையும், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பற்றியது. இலங்கை வெளிநாட்டுக் கடனை கட்டவியலாமல் வங்குரோத்தாயிருக்கிறது என்பது, இலங்கையர்களுக்கு அவமானம் என்று பலர் சொல்கிறார்கள். இதில் இலங்கையர்கள் அவமானப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் வாங்கப்பட்ட கடனின் பலனை சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கவில்லை. அது ஒருசிலரின் கஜானாக்களை நிறைத்தது. இன்னும் சிலருக்கு மேலதிக வருமானத்தைத் தந்தது. அவ்வளவே!

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக்கடன் 51 பில்லியன் அமெரிக்க டொலர். இதில் 55%மானவை நிதிச்சந்தைகளில் இருந்து பெறப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை, 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெறப்பட்ட உயர் வட்டிவீதம் குறைந்த திருப்புச்செலுத்தல் காலம் என்பவற்றைக் கொண்ட கடன்கள் ஆகும்.

இந்தக் கடன்கள், உலகின் பலநாடுகளில் தனியார் நிதியமைப்புகளில் இருந்து பெறப்பட்டவை. இந்தக் கடன்களைத் திருப்பச் செலுத்த இயலாமையே இலங்கையை வங்குரோத்தாக்கியது. ஏனைய 45% வெளிநாட்டுக் கடன், பிற நாடுகளில் இருந்தும் உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளில் இருந்தும் பெறப்பட்டவை.

இலங்கை எந்தெந்தச் தனியார் நிதியமைப்புகளில் இருந்து கடனைப் பெற்றிருக்கிறது என்பது பற்றிய தகவலை இன்றுவரை வெளிப்படுத்தத் தயங்குகிறது.
அதேவேளை, இலங்கை நெருக்கடி உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருந்தபோதும் இவ்வாண்டு ஜனவரி மாதம் பெற்றிருந்த கடனுக்கான வட்டியாக 500 மில்லியன் அமெரிக்க டொலரை ஒரு தனியார் நிதியமைப்புக்கு வழங்கியது. இலங்கை அந்நியச் செலவாணி நெருக்கடியில் இருக்கையில் இவ்வளவு பெரிய தொகை ஏன் வழங்கப்பட்டது என்பது விடையற்ற வினாவாகவே இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்புச் செய்வதற்கான பேச்சுகளில் ஈடுபடுவதற்காக, இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது.

இலங்கை அரசாங்கம் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் என்பதை பிரதமரும் அமைச்சர்களும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு சர்வதேச நாணய நிதியம் உதவவேண்டும் என்று கோரி வருகிறார்கள். வெளிநாட்டுக் கடனுக்காகவே உலகளாவிய ரீதியில் இலங்கை கவனம் பெற்றிருக்கிறது.

இங்கு எழுப்பவேண்டிய கேள்வி யாதெனில், வெளிநாட்டுக் கடனை விட அதிகளவாக இருக்கின்ற உள்நாட்டுக் கடன் பற்றிப் பேசுவார் யாருமில்லை. அது இன்று பேசுபொருளில்லை.

இலங்கையின் மொத்த உள்நாட்டுக்கடன் 81 பில்லியன் அமெரிக்க டொலர். வெளிநாட்டுக் கடனோடு ஒப்பிடுகையில் இது மிகப்பெரியது. ஆனால் இது குறித்தும் ஒருவரும் வாய் திறக்கிறார்கள் இல்லை. இங்கு இரண்டு மேற்கோள்களை சுட்டுவது பொருத்தம்.

‘வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது இலங்கைக்கு முன்னுரிமையாக இருப்பதால், அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் அபிவிருத்திப் பத்திரங்கள் வடிவில் உள்ள உள்நாட்டுக் கடன்கள் மறுசீரமைக்கப்படாது’ என்று கடந்தமாதம் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும் ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகருமான இந்திரஜித் குமாரசுவாமி,  மார்ச் மாத இறுதியில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு தெரிவித்தார்: “நாங்கள், உள்நாட்டுக்கடனை மறுசீரமைப்பது குறித்துப் பேசக் கூடாது. அது சிந்திக்ககூடாதவொரு விடயம், ஏனெனில் அவ்வாறு மறுசீரமைப்பதால் எம்மால் எமது வெளிநாட்டுக் கடன்களை மீளச்செலுத்த இயலுமா? இல்லை. மேலும் உள்நாட்டுக் கடனில் கைவைப்பது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். அது எமது வங்கித் துறையை மட்டுமன்றி மொத்த நிதியமைப்பையே சரித்துத் சிதைத்துவிடும்” என்றார்.

இங்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முதலாவது, வெளிநாட்டுக்கடனை விட உள்நாட்டுக்கடன் அதிகமாக இருக்கிறபோதும் அதை மறுசீரமைக்க அரசாங்கமோ அலுவலர்களோ விரும்புகிறார்கள் இல்லை.

இரண்டாவது, எப்படியாவது வெளிநாட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்றே இவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். இந்த நடத்தையை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் ஜோன் பேர்கின்ஸ் எழுதிய ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்று நூலை வாசிப்பது பயனுள்ளது.

இன்று இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் அவசியம், திறந்த சந்தையின் முக்கியத்துவம், வெளிநாட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்த அரசை வலியுறுத்தல் ஆகியவற்றைச் செய்பவர்கள் அனைவருமே பொருளாதார அடியாள்கள். இது குறித்துப் பிறிதொரு தடவை பார்க்கலாம்.

உள்நாட்டுக் கடனுக்கு வருவோம். முதலில் உள்நாட்டுக் கடன் என்றால் என்னவென்று பார்ப்போம். அரசாங்கம் நாட்டுக்குள்ளேயே தனது தேவைகளுக்காகக் கடனைப் பெற்றுக்கொள்கிறது.

இவ்வாறு அரசாங்கத்தால் பெறப்படும் கடன் உள்நாட்டுக் கடன் எனப்படும். இலங்கையின் மொத்த உள்நாட்டுக்கடன் பிரதானமாக மூன்று வழிகளில் பெறப்பட்டுள்ளது. (1) திறைசேரி உண்டியல்கள் (2) திறைசேரி முறிகள் (3) பிற கடன்கள்.
இலங்கையின் மொத்த உள்நாட்டுக்கடனில் 18%மானவை திறைசேரி உண்டியல்களாகவும் 63%மானவை திறைசேரி முறிகளாகவும் உள்ளன. இதில் திறைசேரி உண்டியல்கள் குறுகிய காலத்திற்குப் பெறப்படுபவை.

நீண்டகாலத்திற்குப் பெறப்படும் திறைசேரி முறிகளில் பெரும்பான்மையானவை ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டவை. மொத்த உள்நாட்டுக் கடனில் 29%மானவை ஊழியர் சேமலாப நிதியிலிருந்தும் 8%மாவை ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியிலிருந்தும் பெறப்பட்டவை. 

இலங்கை அரசாங்கம் உள்நாட்டுக் கடன் குறித்து அக்கறையில்லாமல் இருப்பதற்கான காரணம், இக்கடன் இலங்கை மக்களுக்கு அரசு கொடுக்க வேண்டிய கடன். இதை யாரும் கேட்கப் போவதில்லை, கேட்டாலும் அதைத் தட்டக்கழிக்கக்கூடிய வகையிலேயே இலங்கையின் அரச கட்டமைப்பு உள்ளது.

இதை இரண்டு சிறிய உதாரணங்களுடன் விளக்கலாம். முதலாவது, ஒருவர் தனது ஊழியர் சேமலாப நிதியையோ ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியையோ பெறுவதற்குப் போனால் இத்தனை நாள்களுக்குள் அதனை வழங்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே அதை தேவையான காலம் தள்ளிப் போடலாம்.

இரண்டாவது உதாரணம், புதிதாக ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதம் நிகழ்கிறது. கொரோனா, மின்சாரம் இல்லை, வீட்டிலிருந்து வேலை எனப் பல காரணங்களைக் காட்டி இத்தாமதம் நிகழ்கிறது.

உள்நாட்டுக் கடனில் பேசப்படாத இன்னொரு வகை யாதெனில் வங்கிகள் அரசுக்குக் கொடுத்த கடன்கள். அரசாங்கம், வெளிநாட்டுக் கடனைப் பெறமுடியாத நிலையில் அரச வங்கிகள் அந்நியச் செலாவணியில் வெளிநாட்டுக் கடனைப் பெற்று அதை அரசுக்குக் கொடுத்துள்ளன.

ஆனால் உள்நாட்டு வங்கி, அரசுக்குக் கொடுத்த கடன் என்ற வகையில் அது உள்நாட்டுக் கடன் என்ற வகையிலேயே அடங்குகிறது.

ஆனால், அவை வெளிநாட்டுக்கு அந்நியச் செலாவணியில் செலுத்த வேண்டிய கடன். இதனை செலுத்த இயலாமையால் அரச வங்கிகள் நெருக்கடியில் உள்ளன.
இதனைக் காரணம் காட்டி, சர்வதேச நாணய நிதியம் அரச வங்கிகளைத் தனியார்மயமாக்கக் கோருகிறது. உள்நாட்டுக்கடன் மிகப்பெரிய கருந்துளை. அது ஏன் பேசப்படுவதில்லை என விளங்குவது, இலங்கை குடிமக்களுக்கு மிகவும் முக்கியமானது.   

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உள்நாட்டுக்-கடனைப்-பற்றிப்-பேசுவது-எப்போது/91-297431

 

  • Like 2
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.