Jump to content

சீனாவின் ராணுவ பலம்: அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளை ஆயுத போட்டியில் முந்தப்போவது எப்படி?


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் ராணுவ பலம்: அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளை ஆயுத போட்டியில் முந்தப்போவது எப்படி?

  • டேவிட் பிரவுன்
  • பிபிசி நியூஸ்
23 டிசம்பர் 2021
புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சீன ராணுவ வீரர்கள்

சீனா தனது படைகளை அதிவேகமாக பெருக்கிக் கொண்டிருக்கிறது.

ஏவுகணை தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அதன் முன்னேறும் வேகம் பல மேற்கத்திய நிபுணர்களிடையே தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளன. ராணுவ ஆற்றல் அடிப்படையிலான உலகளாவிய சமநிலையில் திட்டவட்டமான மாற்றம் நடந்து வருவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

2035-ஆம் ஆண்டுக்குள் சீனாவின் படைகளை நவீனமயமாக்குமாறு அதிபர் ஸீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். 2049ஆம் ஆண்டுக்குள் "போர்களில் சண்டையிட்டு வெற்றிபெறும்" திறன் கொண்ட "உலகத் தரம் வாய்ந்த" ராணுவ சக்தியாக சீனா மாற வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

இது ஒரு பெரும்முயற்சி. ஆனால் சீனா இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

 

சீனாவின் ராணுவப் பெருஞ்செலவு

பாதுகாப்புக்காக சீனா எவ்வளவு செலவழிக்கிறது என்பதில் "வெளிப்படைத்தன்மை இல்லை", "புள்ளிவிவரங்கள் சீராக இல்லை" என சில சர்வதேச நிபுணர்களால் விமர்சிக்கப்பட்டது.

சீனா அதிகாரபூர்வமாக செலவுகள் தொடர்பான தரவை வெளியிடுகிறது. ஆனால் அதன் படைகளுக்கான செலவு அதைவிட கணிசமான அளவு அதிகம் என மேற்கத்திய நாடுகள் கணிக்கின்றன.

அமெரிக்கா தவிர்த்த மற்ற எல்லா நாடுகளையும் விட சீனா தற்போது தனது ராணுவத்துக்கு அதிகமாகச் செலவு செய்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது.

வாஷிங்டனில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் தரவுகளின்படி, சீனாவின் ராணுவ வரவு செலவுத் திட்டத்தின் வளர்ச்சி குறைந்தது ஒரு தசாப்தத்திற்கு அதன் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை விட அதிகமாக இருக்கிறது

அதிகரிக்கும் அணுஆயுத கையிருப்பு

நடப்பு தசாப்தத்தின் இறுதிக்குள் சீனா தனது அணுஆயுதக் கையிருப்பை நான்கு மடங்காக உயர்த்தும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை கடந்த நவம்பரில் கணித்துள்ளது.

சீனா "2030-ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 1,000 அணுஆயுத ஏவுமுனைகளை வைத்திருக்க வாய்ப்புள்ளது" என்று கூறியது.

சீன அரசு ஊடகம் இந்த கூற்றை " பயங்கரமான, பாரபட்சமான ஊகம்" என்று கூறியது. அணுஆற்றல் "குறைந்தபட்ச மட்டத்தில்" வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

எனினும் உலகளாவிய அணுஆயுதக் கையிருப்பை வெளியிடும் சிப்ரி எனப்படும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள், சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது அணுஆயுத எண்ணிக்கையை அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர்.

 

அணு ஆயுதம்

5,550 அணுஆயுதங்களைக் கொண்ட அமெரிக்காவின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் இருந்து சீனா இன்னும் வெகு தொலைவு பின்னால் இருக்கிறது. ஆனால் அதன் அணுஆயுதப் பெருக்கம், மேற்கத்திய ராணுவ மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

"சீனாவின் அணு ஆயுதங்கள் மிக முக்கியமான பிரச்சினை" என்று லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வீர்லே நவ்வென்ஸ் கூறுகிறார்.

"இரு தரப்பிலும் பெரிய நம்பிக்கையின்மை உள்ளது. தேவையான அளவுக்கு அருகில்கூட பேச்சுவார்த்தையின் அளவு இல்லை. இதில் உள்ள பெரிய அபாயங்களும், நெளிவுகளும் கடினமானவை"

ஹைபர்சானிக் எதிர்காலம்

ஹைபர்சானிக் ஏவுகணைகள் ஒலியைவிட 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன்கொண்டவை.

அவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் போல வேகமானவை அல்ல. ஆனால் அவை பறந்து கொண்டிருக்கும்போது கண்டறிவது மிகவும் கடினம். சில ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை பயனற்றதாக ஆக்கிவிடும்.

"சீனர்கள் மிகவும் பின்தங்கியிருப்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே பெரிய சாதனைகளைப் புரிய, வேறு ஆற்றலில் பாய்ந்து செல்ல முயற்சிக்கிறார்கள்"

"ஹைபர்சானிக் ஏவுகணைகளை உருவாக்குவது இதற்காக அவர்கள் செய்யும் வழிகளில் ஒன்றாகும்."

 

வேகம் புதியது

ஹைபர்சானிக் ஏவுகணைகளைப் பரிசோதிப்பதாகக் கூறப்படுவதை சீனா மறுத்துள்ளது. ஆனால் மேற்கத்திய வல்லுநர்கள் கடந்த கோடை காலத்தில் நடத்தப்பட்ட இரு ராக்கெட் சோதனைகளைச் சுட்டிக்காட்டி, ஹைபர்சானிக் ஏவுகணைத் தயாரிப்பில் சீன ராணுவம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று நம்புகின்றனர்.

சீனா என்ன எந்தவிதமான ஏவுகணை அமைப்பை உருவாக்குகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு முக்கிய வகைகள் உள்ளன:

  • ஹைபர்சானிக் க்ளைட் ஏவுகணைகள் பூமியின் வளிமண்டலத்துக்குள் இயங்கும்.
  • FOBS எனப்படும் பகுதியளவு சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்புகள் இலக்கை நோக்கி விரையும்வரை தாழ்நிலை சுற்றுப்பாதையில் பறக்கின்றன.

இந்த இரண்டு நுட்பங்களையும் ஒருங்கிணைக்கும் வகையிலான அமைப்பையும்கூட சீனா உருவாக்கிக் கொண்டிருக்கலாம். அதாவது, FOBS விண்கலத்தில் இருந்து ஒரு ஹைபர்சானிக் ஏவுகணையைச் செலுத்துவது போல.

 

செயல்படும்முறை

ஹைபர்சானிக் ஏவுகணைகள் ஒரு கேம்-சேஞ்சராக இல்லாவிட்டாலும், சில இலக்குகளை தாக்குதல் அபாயத்துக்கு உள்பட்டவையாக மாற்றிவிடும் என்று லியோனி கூறுகிறார்.

"குறிப்பாக விமானம் தாங்கி போர்க் கப்பல்களின் பாதுகாப்பை ஹைபர்சானிக் ஏவுகணைகள் கடினமாக்குகின்றன" என்று அவர் கூறுகிறார்.

விண்வெளி ராணுவத் தொழில்நுட்பத்துக்கு நிதியுதவி செய்வதற்கான வாதங்களை வலுவாக்க விரும்பும் சில மேற்கத்திய அதிகாரிகளால் சீனாவின் ஹைபர்சானிக் ஏவுகணை அச்சுறுதல்கள் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

"அச்சுறுத்தல் உண்மையானது. ஆனாலும், இது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்."

செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் தாக்குதல்கள்

சீனா இப்போது "புத்திசாலித்தனமான" போர்முறையை அல்லது சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட எதிர்கால ராணுவ முறைகளை - குறிப்பாக செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறுகிறது.

"சிவில்-ராணுவ இணைப்பு" மூலம், வேறுவிதமாகக் கூறுவதென்றால் நாட்டின் பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களுடன் சீன தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களை இணைப்பதன் மூலம், தங்களது இலக்கை அடைவதைச் சாத்தியப்படுத்த சீனாவின் ராணுவ அறிவியல் அகாடமிக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது.

சீனா ஏற்கனவே ராணுவ ரோபோட்டிக்ஸ் மற்றும் ஏவுகணை வழிகாட்டுதல் அமைப்புகளிலும், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா படைக் கப்பல்களிலும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா ஏற்கனவே வெளிநாட்டில் பெரிய அளவிலான சைபர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சமீபத்திய நிபுணத்துவ மதிப்பீடு கூறுகிறது.

மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் சர்வர்களை குறிவைத்து ஒரு பெரிய சைபர் தாக்குதலை சீனா நடத்தியதாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டின.

இந்தத் தாக்குதல் உலகளவில் குறைந்தது 30,000 நிறுவனங்களை பாதித்ததாகவும், தனிப்பட்ட தகவல் மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பெறுதல் உட்பட பெரிய அளவிலான உளவு வேலைகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் நம்பப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய, ஆனால் மிகவும் ஆற்றல்மிக்க கடற்படை அல்ல

சீனா அமெரிக்காவை முந்தி உலகின் மிகப்பெரிய கடற்படையாக உருவெடுத்துள்ளது. ஆனால் கப்பல் எண்களை மாத்திரம் கொண்ட ஒப்பீடு கடற்படையின் திறன்களை தீர்மானிக்கும் பல காரணிகளை விட்டுவிடுவதாகும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆயினும் இந்தத் துறையின் போக்குகளை ஆய்வு செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பல கடற்படைத் திறன்களில் தெளிவாக முன்னணியில் உள்ளது அமெரிக்கா. அமெரிக்காவிடம் 11 விமானம்தாங்கிக் கப்பல்கள் இருக்கின்றன. சீனாவிடம் இருப்பது இரண்டுதான். அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள், க்ரூஸ் கப்பல்கள், தாக்கி அழிக்கும் கப்பல்கள், பெரியவகை போர்க் கப்பல்கள் போன்றவற்றிலும் அமெரிக்காவே முந்தியிருக்கிறது.

 

புதியது

ஆனால் சீனா தனது கடற்படையை இன்னும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தான் எதிர்கொள்ளும் கடல் சார்ந்த அச்சுறுத்தல்களை சமாளிக்க சீனா தனது கடற்படையை வலுப்படுத்துவது "முக்கியத்துவம் வாய்ந்தது" என்று தான் நம்புவதாகக் கூறுகிறார். சீன ராணுவத்தின் முன்னாள் அதிகாரி சோவ் போ.

"நாங்கள் எதிர்கொள்ளும் மிகக் குறிப்பான பிரச்னை என்னவென்றால், சீனாவின் கடல் பகுதியில் அமெரிக்க அத்துமீறல் என நாங்கள் கருதுகிறோம்." என்கிறார் அவர்.

2020 மற்றும் 2040-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சீன கடற்படை கப்பல்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 40% அதிகரிக்கும் என்று அமெரிக்க கடற்படை கணித்துள்ளது.

நிச்சயமற்ற எதிர்காலம்

எதிர்கொண்டு நிற்கும் நிலையில் இருந்து விலகி அச்சுறுத்தும் நிலைப்பாட்டை நோக்கி சீனா நகர்கிறதா?

"சண்டையிடாமல் வெற்றி பெறுவது" சீனாவின் இப்போதைய அணுகுமுறை என்கிறார் டாக்டர் லியோனி. இருப்பினும் எதிர்காலத்தில் இந்த உத்தியை சீனா மாற்றக்கூடும் என்கிறார்.

"முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட கடற்படை சக்தியாக உருவெடுப்பது அதற்கான ஒரு முக்கிய புள்ளியாக இருக்கலாம்."

ஆனால் மேற்கத்திய நாடுகளின் அச்சங்கள் அடிப்படையற்றவை என்று மூத்த ராணுவ அதிகாரி சோவ் கூறுகிறார்.

"அமெரிக்காவைப் போலல்லாமல், உலகைப் பாதுகாக்கும் எண்ணம் சீனாவுக்கு இல்லை" என்று அவர் கூறுகிறார்.

"சீனா ஒரு நாள் மிகவும் ஆற்றல்மிக்கதாக மாறினாலும், அது அதன் அடிப்படைக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்"

வியட்நாம் போருக்குப் பிறகு, 1979 முதல் சீனா இதுவரை வேறு போர்களில் ஈடுபடவில்லை. அதன் படைத் திறன்கள் முழுமையாக சோதிக்கப்படவில்லை.

மேற்கு மற்றும் சீனாவில் உள்ள பலர் அது அப்படியே நீடிக்கும் என்று நம்புகிறார்கள்.

வரைகலை: சாண்ட்ரா ரொட்ரிகோ சில்லிடா, ஜாய் ரோக்ஸஸ், ஷான் வில்மாட்

https://www.bbc.com/tamil/global-59756473

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.