Jump to content

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள்? - யதீந்திரா 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள்? - யதீந்திரா 

ரணில் விக்கிரமசிங்க அவரது, நீண்டநாள் இலக்கில் வெற்றிபெற்றிருக்கின்றார். ஆனாலும் இதனை முழுமையான வெற்றியென்று கூறவிடமுடியாது. ஏனெனில் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு இந்த இடத்தை அடையவில்லை. ஆனாலும் கிடைத்த இடத்தை கெட்டியாக பற்றிக்கொள்வதும் அதே வேளை, எதிர்காலத்தில் முடிந்தால் மீண்டுமொருமுறை சதுரங்கத்தை ஆடுவதும்தான் அவருக்கு முன்னாலுள்ள தெரிவுகளாக இருக்கின்றன. எனவே அடிப்படையில் ரணில் ஆடப்போவது முற்றிலும் தென்னிலங்கைக்கான அரசியல் ஆட்டம்தான். எனவே இதில் தமிழர்கள் அதிகம் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்தத் தென்னிலங்கை ஆட்டத்திற்குள் எந்தளவு தூரம் போகலாம், போகக் கூடாது என்பதில் தமிழ் தேசிய தரப்பினர் மத்தியில் தெளிவான புரிதல் இருக்க வேண்டியது அவசியம். 2015 ஆட்சி மாற்றத்திலிருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு அளவுக்கதிகமாக தென்னிலங்கை அரசியலுக்குள், தேவையற்ற வகையில் தலையீடு செய்துவருகின்றது. சுமந்திரன்தான் இதற்கான பிரதான காரணமாகும்.

சுமந்திரனின் வரவுக்கு முன்னர் இவ்வாறானதொரு போக்கு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருந்ததில்லை. இதற்கு சுமந்திரனின் பின்னணியும் ஒரு பிரதான காரணமாகும். சுமந்திரன் அடிப்படையிலேயே தமிழ் தேசிய அரசியல் பின்புலம் சார்ந்த ஒருவரல்ல. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் தேசிய அரசிலுக்குள் இணைந்து கொண்டவர். இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் நிலையில்தான், 2010இல் சுமந்திரனும் இருந்தார். ராஜபக்சக்களின் வீழ்சி, ரணிலுக்கு வாய்ப்பை வழங்கியது போன்றுதான், புலிகளின் வீழ்ச்சி சுமந்திரனுக்கு மட்டுமல்ல விக்கினேஸ்வரனுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் எதிர்பார்த்தது போன்று விக்கினேஸ்வரன் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்கு வந்ததும், விக்கினேஸ்வரன் அவரது இயல்புக்கு மாறானதொரு கடும்போக்கு நிலைப்பாட்டை தழுவிக் கொண்டார். இப்போது அதனை தொடர்ந்தும் கடைப்பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றார்.

விக்கினேஸ்வரனோடு ஒப்பிட்டால் சுமந்திரன், வலிந்து தேசியவாதியாவதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. சுமந்திரன் ஒரு வேளை அப்படி நடிக்க முற்பட்டிருந்தாலும் கூட, அது அதிக காலத்திற்கு நீடிக்காது. ஆனால் இந்த அரசியல் நடிப்பில் இப்போதும் கொடிகட்டிப் பறக்கும் ஒருவரென்றால், அது சிவஞானம் சிறிதரன் மட்டும்தான். அவரால் பிரபாகரனுக்கு பிறந்தநாளும் கொண்டாட முடிகின்றது, உருத்திரகுமாரனோடு சேர்ந்து பொதுசன வாக்கெடுப்பு தொடர்பிலும் பேச முடிகின்றது பின்னர் ரணில்விக்கிரமசிங்கவுடன், அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்போவதாகவும் கூற முடிகின்றது. இவ்வாறான நடிப்பாற்றல் எல்லோருக்கும் வாய்க்காது.

spacer.png

2015, தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்தே, சுமந்திரனின் செல்வாக்கு கூட்டமைப்பிற்குள் வலுவடைந்தது. தேசிய பட்டியல் மூலம் சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு ஒரு இடத்தை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் இருந்த போதிலும் கூட, சம்பந்தன் அதனை விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை என்பது, முற்றிலும், கொழும்மை அனுசரித்து – முக்கியமாக ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்து பயணிப்பாதாகவே இருந்தது. இந்தக் காலத்தில்தான், சுமந்திரனின் கொழும்பு செல்வாக்கு கணிசமாக வலுவடைந்தது. ஒரு தமிழ் தேசிய கட்சியின் பிரதிநிதி என்பதற்கு அப்பால், ஒரு இலங்கை அரசியல்வாதியாக சுமந்திரன் வளர்சியடைந்தார். சுமந்திரன் அதிகம் தென்னிலங்கை அரசியலுக்குள் ஆர்வம் காண்பிப்பதை, இந்த பின்புலத்திலிருந்துதான் நாம் நோக்க வேண்டும்.

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள் பற்றி பேசும்போது, இந்த விடயங்கள் எதற்காக என்னும் கேள்வி எழலாம். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், ரணிலுக்கும் சுமந்திரனுக்கும் நெருக்கமான உறவிருந்தது. ரணிலுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கூட்டமைப்பு கடுமையாக விரோதித்துக் கொண்டது. ஆனால் இப்போது, ரணில் தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திவரும் அபிப்பிராயங்களை உற்றுநோக்கினால், தென்னிலங்கையிலுள்ள சிங்கள அரசியல்வாதிகள் கூட, சுமந்திரனை போன்று ரணிலை விமர்சிக்கவில்லை. இதன் பின்னணி என்ன? சுமந்திரன் தென்னிலங்கை அரசியலுக்குள் அதிகம் தலையீடு செய்ய முற்பட்டதன் விளைவாகவே, ரணிலுடன் முரண்பட வேண்டியேற்பட்டிருக்கின்றது. அது எவ்வாறான தலையீடு என்பதை நம்மால் அறிய முடியாவிட்டாலும் கூட, சுமந்திரன் மேற்கொண்ட சில நகர்வுகள், ரணிலின் தென்னிலங்கை நகர்வுகளுடன் நேரடியாக உரசியிருக்கின்றது. இல்லாவிட்டால் இந்தளவிற்கு ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்க வேண்டிய தேவையில்லை.

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள் வெள்ளிடைமலை. அதாவது, தற்போது கிடைத்திருக்கும் அதியுச்ச அதிகாரத்தை முழு அளவில் பிரயோகித்து, தன்னை நிலைநிறுத்திக் கொள்வது. அவ்வாறு தனது அதிகாரத்தை அதியுச்சளவில் பிரயோகிக்க வேண்டுமாயின், அரசு பலமாக இருக்க வேண்டும். அரசு பலமாக இருக்க வேண்டுமாயின் அரசிற்கு எதிரான எதிர்ப்புக்களை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டு. இதனை கருத்தில்கொண்டே, போராட்டக்காரர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்சியடைவதை ரணில் தடுக்க முற்படுகின்றார். மேலும் இடதுசாரி பின்புலம் கொண்ட சக்திகள் கொழும்பில் எழுச்சியடைவதை இந்தியா மற்றும் மேற்குலம் ஒரு போதும் ஆதரிக்காது. தாராளவாத பின்புலம் கொண்டவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்க்க மாட்டார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில்தான், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, பொன்சேகா, போராட்டத்தை தன்வசப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார். பொன்சேகாவின் தலைமைக்கு போராட்டம் கைமாறுமாயின், அது முற்றிலும் கட்சி அரசியலுக்குள் சென்றுவிடும். ஆனால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ வேண்டிய உடனடித் தேவையை எதிர்கொண்டிருக்கும் மக்களோ, மூச்சுவிடுவதற்கான அவகாசத்தை தேடியலைகின்றனர். இந்த நிலையில் இவ்வாறான போராட்டங்களை மக்கள் வெறுக்கவே அதிக வாய்ப்புண்டு. இந்த விடயத்தையும் ரணில் சரியாக கணித்திருப்பார். மேலும் ரணில் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியவர் என்னும் அப்பிராயம் மத்தியதர வர்கத்தினர் மத்தியிலுண்டு. இதுவும் ரணிலுக்கு சாதகமான ஒரு விடயமாகும்.

spacer.png

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகளுக்கு இரண்டு இலக்குகள் இருக்கலாம். ஒன்று, வீழ்ந்துகிடக்கும் ஜக்கிய தேசியக் கட்சியை தூக்கிநிறுத்த முயற்சிப்பது. இதுதான் ஜக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம். அதே வேளை, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியாக தன்னை நிலைநிறுத்துவது. தற்போதுள்ள நிலையில், ராஜபக்சக்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பில்லை. இந்த நிலையில் அனைவரது ஆதரவுடனும் ரணில் விக்கிரமசிங்க ஒரு பொது வேட்பாளராக வருவதற்கான வாய்ப்பையும் குறைத்துமதிப்பிட முடியாது.

ஆனால் அனைத்தும் பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதில்தான் தங்கியிருக்கின்றது. மொத்தத்தில், இது ரணிலுக்கான இறுதி அரசியல் சதுரங்கம். ரணிலை பொறுத்தவரையில் – அரசியல் சதுரங்க ஆட்டத்தை விடவும் மேலானது. அதுவே சற்று காலம் எடுக்குமென்றால், அரசியல் ஒரு மரதன் ஓட்டம் போன்றது. கடுமையான ஆட்டமெனில், அது ரகர் விளையாட்டு போன்றது. இரத்தம்பார்க்கும் விளையாட்டு எனில் பொக்சிங் போன்றது. அனைத்து ஆட்டத்தையும் ரணில் ஆட வேண்டியிருக்கின்றது. மற்றவர்கள் எவரையும் விடவும், அரசியலில் இந்த ஆட்டங்களை ரணில் நன்கு கற்றுத்தேறியவர். ரணிலின் தென்னிலங்கை ஆட்டத்திற்குள் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காமல் இருப்பதுதான், தமிழ் தேசிய தரப்பினருக்கு நல்லது. ஆட்டத்தின் சூட்சுமங்களை விளங்கிக்கொள்ளாமல், ஆட்டத்திற்குள் நுழைவது எதிர்மறையான விளைவுகளையே தரும். யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரு வருடங்களில், தமிழ் தேசிய தரப்பினர், சிறிலங்காவின் அரசியல் சதுரங்கத்தில் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கின்றனர். சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் தாங்கள் ஆடுவதாக எண்ணிக் கொண்டனர் ஆனால் அவர்கள் ஆடவேயில்லை.
 

http://www.samakalam.com/ரணிலின்-தென்னிலங்கை-நகர்/

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.