Jump to content

மன்னார் மாவட்ட காற்றாலைகளும் கரிசனைகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாவட்ட காற்றாலைகளும் கரிசனைகளும்

By DIGITAL DESK 5

03 SEP, 2022 | 08:30 PM
image

-ஆர்.ராம்-

மன்னார் மாவட்டத்தில் மன்னார்த்தீவு, மன்னார் பெருநிலப்பரப்பு ஆகிய இரு பகுதிகளில் மூன்று கட்டங்களாக காற்றாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலாம் கட்டத்தில், மன்னார்த் தீவின் தென்பகுதியான தாழ்வுப்பாடிலிருந்து துள்ளுகுடியிருப்பு வரையில் இலங்கை மின்சார சபையினால் 30காற்றாலைகள் ஏலவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்ட முதலாம் கட்டத்தில் 50மெகாவோல்ட் மின்சாரத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டு 21காற்றாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாகியுள்ளன.

அதில், 7காற்றாலைகள் தாழ்வுப்பாடிலிருந்து சவுத்பார் வரையிலும், ஏனையவை ஏலவே அமைக்கப்பட்டுள்ள 30காற்றாலை நிரலுக்கு சமாந்தரமாக 1.2கிலோமீற்றர் இடைவெளியில் நிலப்பகுதியை நோக்கியதாக அமைக்கப்படவுள்ளன.

இரண்டாவது கட்டத்தில், மன்னார் தீவின் வடபகுதியான தலைமன்னார் முதல் எருக்கலம்பிட்டி வரையில் 286மெகாவோல்ட் மின்சாரத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டு தலா 5.5மெகாவோல்ட்டுக்களைக் கொண்ட காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான முதலீட்டை அதானி குழுமம் செய்யவுள்ளதோடு அதற்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டத்தில் வங்காலை மாதிரிக்கிராமத்திருந்து முள்ளிக்குளம் வரையில் 100மெகாவோல்ட் மின்சாரத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டு காற்றாலைகளை அமைப்பதற்கு 38 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், அந்த இடங்களுக்கான அனுமதிகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இன்னமும் வழங்கப்படவில்லை.

P01.jpg

இவ்வாறான நிலையில், மன்னார் தீவுக்குள் ஏலவே அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளினால் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் மேலதிகமாக எந்தவொரு காற்றாலைகளையும்; நிறுவுவதற்கு அனுமதிக்கவே முடியாது என்று பிரதேசவாசிகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றார்கள்.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம், தாழ்வுப்பாடு கடற்றொழிலாளர் சங்கம், உட்பட அருட்தந்தைகள், சிவில் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியன தரப்பினரே  திட்டவட்டமாக மறுதலிப்பவர்களாக உள்ளனர்.

இதில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் உள்ளிட்ட தரப்பினர், மன்னார்த்தீவுக்கு வெளியில், விவசாயம்,மீன்பிடி, மற்றும்  பொதுமக்கள் குடியிருப்பு ஆகியவற்றுக்கு பாதகமில்லாத பகுதிகளில் வெளிப்படையான ஆய்வுகளின் உறுதிப்படுதலுடன் காற்றாலைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

குறித்த தரப்பினருக்கு, மன்னார்த் தீவு கடல்பெருக்கு அபாயத்தில் இருப்பதால் 180அடி ஆழத்தில் காற்றாலைகளுக்கான கோபுரங்கள் அமைக்கப்படுவதால் எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம் என்ற பொதுவான அச்சம் காணப்படுகின்றது.

அதுமட்டுமன்றி, வெளிநாட்டுப்பறவைகளின் வருகை தடைப்படுகின்றமை, கரைவலை கடற்றொழில் பாதிக்கப்படுகின்றமை, வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்றமை, நீண்டகாலத்தில் மழைவீழ்ச்சி குறைவடைகின்றமை, வறட்சியான சூழல் ஏற்படுகின்றமை, காணிகள் கையகப்படுத்துகின்றமை, மாவட்ட மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யவதற்கு முடியாதிருக்கின்றமை என்று பல்வேறு கரிசனைகள் காணப்படுகின்றது. அவர்கள் குறிப்பிட்டுக்கூறும் கரிசனைகள் வருமாறு,

P02.jpg

 

பெருநிலப்பரப்பில் வேறுபட்ட கரிசனை

அவ்வாறிருக்கையில், மன்னார் தீவுக்கு வெளியாக பெருநிலப்பரப்பில் வங்காலை மாதிரிக்கிராமத்திருந்து முள்ளிக்குளம் வரையில் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட காற்றாலைத் திட்டம் குறித்த கரிசனைகள் சற்றே வேறுபட்டவையாக உள்ளன.

முள்ளிக்குளத்தைச் சேர்ந்த விவசாயிகளில் ஒருவரான, பிலிப்பு அன்ரனி குரூஸ் குறிப்பிடுகையில், “காற்றாலையின் மூன்றாவது கட்டத்தை  முன்னெடுப்பதற்காக எமது உறுதிக்காணிகளை விலைக்கு வழங்குமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. காற்றாலையொன்றை அமைப்பதற்கு 7ஏக்கர்கள் தேவையாக உள்ள நிலையில், என்போன்ற ஏழு விவசாயிகளிடத்தில் தலா 7ஏக்கர்கள் வீதம் 49ஏக்கர் காணிகளை தமக்கு வழங்குமாறு அதிகாரிகள் அழுத்தமளிக்கின்றார்கள்.

எம்மைப்பொறுத்தவரையில், 400வருடங்களுக்கும் அதிகமான பரம்பரையான உறுதிக்காணிகளை வழங்கமுடியாது. அதுமட்டுமன்றி, ஏற்கனவே, எமது பிரதேசத்தில் படைமுகாம் அமைப்பதற்காக ஐந்து குளங்களும், ஆயிரம் ஏக்கர் காணிகளும் கபளீகரம் செய்யப்பட்டு விட்டது.

அதேநேரம், இப்பகுதியில் இருந்த ஐந்து கரைவலைப்பாடுகளில் தற்போது ஒன்றிலேயே தொழில் நடைபெறுவதால் மக்கள் கடினமான சூழலுக்குள் உள்ளனர். தற்போது, குளமொன்றும், 300 ஏக்கர் காணிகளுமே எஞ்சியுள்ளன. அதில் இருபோகங்களிலும் வேளாண்மை செய்யும் பட்சத்தில் எமக்கான அரிசித்தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆகவே, விவசாயக்காணிகளை காற்றாலைகளுக்காக தரைவார்த்துக் கொடுக்க முடியாது” என்றார்.

கவனத்தில் கொள்ளப்பட்டதா?

காற்றாலைத்திட்டம் குறித்து மேற்குறிப்பிட்டவாறு பல்வேறுபட்ட கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் திட்டத்தினை முன்னெடுக்கும் இலங்கை மின்சாரசபை கருத்திற்கொண்டதா என்பது இங்கு பிரதான கேள்வியாகின்றது.

அந்தவகையில், மன்னார் காற்றாலை மின்சாரத்திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் அஜித் அல்விஸ், வெளியிடப்பட்ட கரிசனைகள் தொடர்பில் தமது தெளிவுபடுத்தல்களைச் செய்திருந்தார். அதனடிப்படையில், “நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொள்கின்றபோது, காற்றாலை மின்சாரத்திட்டத்தினால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கள் பூச்சிமாகும். 2030ஆம் ஆண்டில் 70சதவீதமான மின்சாரத்தேவையை புதுப்பிக்கத்தக்க சக்தியின் ஊடாக பெறுவதைக் இலக்காகக் கொண்டு பாதுகாப்பான சக்தியை நோக்கிய பாதையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

காற்றாலையின் சிறகுகளில் உள்நாட்டு,வெளிநாட்டு பறவைகள் சிக்கி பரிதாபமாகும் நிலைமைகள் தொடர்பில் குறிப்பிட்ட அவர், “காற்றாலைக் கோபுரங்களுக்கு அருகில் பறவைகள் வருகை தராதவாறு, பறவைகளின் பயணத்திசையை மாற்றும் எச்சரிக்கை பொறிமுறையொன்று பொருத்தப்பட்டுள்ளது. அதனால் பறவைகளுக்கு பாதிப்பில்லை” என்று கூறுகின்றார்.

அதேபோன்று, “காற்றாலையிலிருந்து வெளியேறும் சத்தமானது, கீழேவருகின்றபோது அதன் அதிர்வெண் படிப்படியாக குறைவடைந்து செல்வதற்கும் தொழில்நுட்ப முறைமையொன்று பின்பற்றப்படுகின்றது” என்றும் “இதனால், காற்றாலை சத்தம் காரணமாக, கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது”என்றும் கூறினார்.

அத்துடன் “கடற்றொழிலாளர்களுக்கான மீன்வளம் குறைந்தமைக்கு, இந்திய மீனவர்களின் ரோலர்கள் வருகையே பிரதான காரணமாக இருக்கின்றது” என்றும் சுட்டிக்காட்டினார்.  காற்றாலைகளினால் முகில்கூட்டங்கள் கலைவதால், மழைவீழ்ச்சி குறைவடையும், மற்றும் தரையில் ஈரப்பதன் குறைவடைந்து வறட்சி ஏற்படும் என்பது தொடர்பில், கருத்துவெளியிட்ட அவர், “அதற்கான எவ்விதமான உறுதிப்படுத்தப்பட்ட ஆய்வுகளும் காணப்படவில்லை. அதேநேரம் கடந்தவருடம் மன்னாரில் அதியுச்சமான மழைவீழ்ச்சி 35முதல் 40ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்திருக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி, வெள்ளப்பாதிப்பு தொடர்பில் கரிசனைகள் வெளியிடப்படுவதை கவனத்தில் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் நீண்டகாலத்திற்கு பின்னரான அதீத மழைவீழச்சியே கடந்தவருட வெள்ளத்துக்கு காரணமாகின்றது. எனினும், தற்போது வெள்ளநீர்வடிந்தோடுவதற்கு ஏற்றவாறு கால்வாயொன்றை அமைப்பதற்கான இணக்கம் தெரிவித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கடலோரப்பாதுகாப்பு அதிகாரசபை, இலங்கை சிவில் போக்குவரத்து அதிகாரசபை, இலங்கை நிலைபேண்தகு வலு அதிகாரசபை ஆகியவற்றின் முறையான அனுமதிகளின் பின்னரேயே இக்காற்றாலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், “இலங்கை மின்சாரசபையானது, வெறுமனே, காற்றாலைகளை நிறுவுவதற்கு அப்பால், அப்பகுதியைச்சேர்ந்த கடற்றொழிலாளர்களின் நலனை அடிப்படையாகக்கொண்டு சமூக அபிவிருத்தி நோக்கில் கடற்கரையை அண்மித்து வீதியொன்றையும் அமைத்துக்கொடுத்துள்ளது” என்றும் கூறினார்.

அதேநேரம், “மன்னார் காற்றாலையின் ஊடாக பெறுகின்ற மின்சாரமானது, தேசிய மின்சார வலையமைப்புடன் இணைக்கப்பட்டதன் பின்னரே பகுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.  நேரடியாக உள்ளுருக்கு வழங்கும் முறைமை எங்கும் பின்பற்றப்படுவதில்லை” என்றும் “இருப்பினும் மன்னார் மாவட்டத்திற்கான மின்சார விநியோகத்திற்கான உபகரணங்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன” என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில், மன்னார் மாவட்டச் செயலாளர் அ.ஸ்ரான்லி டிமெல், குறிப்பிடுகையில், “காற்றாலைத்திட்டம் சம்பந்தமான, விடயங்களை பிரஜைகள் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அத்துடன், மகஜரையும் கையளித்தனர். அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, ஏனைய பிரச்சினைகள் பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து உரையாடல்களைச் செய்துவருகின்றேன்” என்றார்.

அந்தவகையில், “மின்சாரசபையினால் அமைக்கப்பட்ட வீதியானது, முறையான வடிகாலமைப்பற்ற கரையோரவீதியாகவுள்ளது. மற்றும், காற்றாலை கோபுரங்களால் வெள்ளம் ஏற்படுகின்றது என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது 7மில்லியன் ரூபா செலவில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான வாய்க்கால் அமைக்கப்படுவதற்கு மின்சாரசபை இணங்கியுள்ளதோடு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

இதேவேளை, காற்றாலையின் தாக்கத்தினால் கரைவலைத்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, ஆய்வாளர் கலாநிதி ரேகா தலைமையிலான குழுவினர் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

P03.jpg

கேந்திரஸ்தானம்

2014ஆம் ஆண்டு நிலைபெறுதகுவலு அதிகாரசபையினால் ‘பாதுகாப்பான சக்தியை நோக்கிய பாதையை அமைத்தல்' என்ற இலக்குத் திட்டத்தின் கீழாக காற்றாலைகளை அமைப்பதற்கான அதிசிறந்த பகுதிகள் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், மன்னார்த் தீவின், 'பாத்திரம்' போன்ற அமைப்பால், தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்றையும், வடகீழ் பருவப்பெயர்ச்சிக்காற்றையும் பெறவல்ல இடமாக உள்ளது. இதனால் வருடம் பூராகவும் மின்சாரத்தினைப் பெறுவதற்கான கேந்திர ஸ்தானமாக மன்னார்த் தீவு காணப்படுகின்றது.

மன்னார்த் தீவிலிருந்து எதிர்ப்புக்களும், கரிசனைகளும் வெளியிடப்பட்டாலும், அந்தப்பகுதியில் காற்றாலைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமான நிலைப்பாடுகள் காணப்படுகின்றதன் பின்னணியில் இருப்பது கேந்திர ஸ்தானம் தான்.

இவ்வாறிருக்கையில், குறித்த காற்றாலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக உரிய கட்டமைப்புக்கள் அனுமதிகளை முறையாக வழங்கியுள்ளதாகவே கூறுகின்றன. அதேநேரம், இலங்கை மின்சார சபையும், கரிசைசெலுத்தப்பட்டுள்ள விடயங்களை கருத்தில் கொண்டுள்ளதாகவே தெரிவிக்கின்றன.

ஆனால், யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.நாகமுத்து பிரதீபராஜா, “மின்சக்தித் திட்டங்களில் மிகக்குறைந்த சூழல்பாதிப்புக்களைக் கொண்ட முறைமைகளில் ஒன்றாக இருப்பது கற்றாலை மின்திட்டமாகும். இருப்பினும் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரத்திட்டமானது கரிசனைகளைக் கொண்டதாக உள்ளது' என்று குறிப்பிட்டார்.

அத்துடன், முதலாவதாக, ரஷ்யா, சைபீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தரும் வலசைப்பறைவைகள் வங்காலையில் உள்ள பறைவைகள் சரணாலயத்தினையே முதலில் அடைகின்றன. விசேடமாக மன்னார் தீவில் காணப்படும் தட்வெப்ப சூழல் காரணமாகவே சமுத்திரங்கள் கடந்து அப்பறவைகள் வருகை தருகின்றன.

ஆகவே, காற்றாலைகள் அமைக்கப்படுவதால் அவற்றின் வழமையான பயணப்பாதை தடைப்படும். வலசைப்பறைவகளும் உடனடியாக தமது பயணப்பாதைகளை மாற்றிக்கொள்ளாது. எனவே, அவற்றுக்கான மாற்றுப் பயண வழிகள் உருவாக்கப்படாது, கற்றாலைகளில் பறவைகளின் பயணத்திசைகளை மாற்றுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கியிருந்தாலும் அதில் பயனில்லை. அந்தவகையில், வலசைப்பறவைகளின் வருகை பாதிப்புக்குள்ளாகப் போகின்றது.

P04.jpg

இரண்டாவதாக, காற்றாலையின் தொடர்ச்சியான சுழற்சி காரணமாக, அவை அமைக்கப்படும் பகுதிகளில் காலவோட்டத்தில் தரைமேற்பரப்பில் உள்ள நீரும், தரைக் கீழ் நீரும் வற்றிப்போகும் நிலைமைகள் ஏற்படும். இது, விவசாயத்துறையில் பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தும். அத்துடன், சிறுபுதர்கள், காடுகளில் வாழும் விலங்கினங்களின் வாழ்விடத்திலும் தாக்கத்தினைச் செலுத்தும்.

மூன்றாவதாக, காற்றாலைகள் முகில்களைக் கலைப்பதால் மழைவீழ்ச்சி குறையும் என்ற நோக்குநிலைக்கு அப்பால், காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் இடி,மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கும். அதேநேரம், காற்றில் காணப்படும் ஈரப்பதனின் அளவு படிப்படியாக குறைவடைவதோடு, 'மனித சௌகரிய காலநிலை' மாற்றம் காணும் ஆபத்துள்ளது என்று மேலும் சுட்டிக்கூறியுள்ளார். 

அந்தவகையில், காற்றாலைத்திட்டமானது, மத்திய அரசாங்கத்தின் உயர்மட்டங்களால் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு மக்கள் வாழும் பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றது என்பது வெளிப்படை. ஆகவே மன்னார் காற்றாலைத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, கூறப்படும் கரிசனைகள் தொடர்பில் வெளிப்படையான பக்கச்சார்பற்றதுமான ஆய்வுகளும் முடிவுகளும் அவசியமாகின்றன. அதுவே, நாட்டின் நிலைபெறுதகு வலு குறித்த தேசிய கொள்கைத் திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கு வழிசமைக்கும். https://www.virakesari.lk/article/134994

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஷயத்தில் பிரச்சனைகளை அதிகப்படுத்தி தமக்கு தேவையானவற்றை அரிசிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெற்றுகொள்வது தான் சாலச்சிறந்தது. உதாரணத்துக்குவிவசாய நிலங்கள் பறிப்போகும் என்பதால் இழப்பீட்டை பெறுமதிக்கும் அதிகமாகக் கேளுங்கள். பறிப்போகும் காணிகளுக்கு பதில் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கும் காணிகளைக் கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

இந்த விஷயத்தில் பிரச்சனைகளை அதிகப்படுத்தி தமக்கு தேவையானவற்றை அரிசிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெற்றுகொள்வது தான் சாலச்சிறந்தது. உதாரணத்துக்குவிவசாய நிலங்கள் பறிப்போகும் என்பதால் இழப்பீட்டை பெறுமதிக்கும் அதிகமாகக் கேளுங்கள். பறிப்போகும் காணிகளுக்கு பதில் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கும் காணிகளைக் கேளுங்கள்.

மன்னார் தீவே பறிபோனபின்னர் நிலம் எங்கே இருந்து வரும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்ந்த நிலமட்டம் காரணமாக பல மலையக பிரதேசங்களில் காற்றின் வேகம் கடற்கரைப்பிரதேசங்களுக்கு ஈடானதாகவே காணப்படுகிறது. அப்படியிருந்தும் காற்றாலை திட்டத்திற்கு மன்னாரை முழுமூச்சாக தெரிவு செய்வதன் அரசியல் பின்னணியில் சரியான வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை. இலங்கை மின்சார சபை வேறு எந்த பிரதேசங்களை மாற்றுத் தீர்வாக தெரிவுசெய்துள்ளது என்பதும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின் வலையமைப்புடன் இணைக்கப்பட்டபின்னரே பயனாளர்களுக்கு பிரித்தளிக்கப்படும் என்பதால் இந்த கற்றாலைகள் மன்னாரில் தான் அமைக்கப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது. பெரிய எண்ணிகையில் காற்றலை நிறுவப்படும் பட்சத்தில் அந்தப் பிரதேசத்தில் இயற்கையின் காற்று வழித்தடங்களில் உள்ள சமநிலை பாதிப்புக்குள்ளாகும். நீண்ட கால இடைவெளியில் இம்மாற்றங்கள் தொடரும் பட்சத்தில்  மழைவீழ்ச்சி, நிலத்தின் தன்மை, வளரும் தாவரங்கள், செடி, கொடி அனைத்தையும் பாதிக்கும்.

 

15 hours ago, ஏராளன் said:

“காற்றாலையிலிருந்து வெளியேறும் சத்தமானது, கீழேவருகின்றபோது அதன் அதிர்வெண் படிப்படியாக குறைவடைந்து செல்வதற்கும் தொழில்நுட்ப முறைமையொன்று பின்பற்றப்படுகின்றது”

காற்றாலைகளில் இருந்து வெளியேறும் இரைச்சல் சத்தங்களின் ஒலி அலைகளின் அதிர்வெண் மாற்றம் சூழல் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு உதவாது. இரைச்சல் சத்தங்களில் அதிர்வெண்  குறைப்பால் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்பது ஆய்வுரீதியாக நிறுவப்பட வேண்டும்.

 

15 hours ago, ஏராளன் said:

“காற்றாலைக் கோபுரங்களுக்கு அருகில் பறவைகள் வருகை தராதவாறு, பறவைகளின் பயணத்திசையை மாற்றும் எச்சரிக்கை பொறிமுறையொன்று பொருத்தப்பட்டுள்ளது. அதனால் பறவைகளுக்கு பாதிப்பில்லை”

இப்படி ஒரு பொறிமுறை உண்டா என்பதையும் அது நடைமுறைக்கு சாத்தியமானதா என்பதையும் விஞ்ஞானரீதியாக ஆராயவேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.