Jump to content

ஜெனீவா இன்னொரு முறை ஏமாறுவோமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா இன்னொரு முறை ஏமாறுவோமா?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

மீண்டுமொருமுறை இலங்கை அரசியலில், ஜெனீவா அமர்வுகள் கவனம் பெறுகின்றன. கடந்த ஒரு தசாப்தகாலமாக, ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஒரே களமான இருப்பது, ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையாகும்.

குறிப்பாக, இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக, அதனூடு தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுவிட முடியும் என்ற திசைவழியில், தமிழர் அரசியல் பயணித்திருக்கிறது. ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ கதையாகிப் போன இந்த முயற்சியின் மீது, இப்போதும் அளவற்ற நம்பிக்கை சூழ்ந்து இருக்கிருக்கிறது.  

தமிழருடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, அவர்களுடைய ஒற்றுமையையும் சொந்த ஆற்றலையும் நம்பியிருக்குமாறு அவர்களுடைய தேசியவாதத் தலைமைகள் தமிழரை என்றுமே ஊக்குவிக்கவில்லை. இது பொன்னம்பலம் இராமநாதன் காலம் தொட்டு, வே. பிரபாகரன் காலம் வரை நாம் கண்ட உண்மை.

அதற்குக் காரணங்கள் உள்ளன. ஏனெனில், மக்கள் தமக்காகப் பேசத் தொடங்கிவிட்டால், கேட்கக்கூடாத கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் பிறகு, மக்களுடைய பிரச்சினைகள் எவை என வரையறுக்கும் அதிகாரம், மேட்டுக்குடி அரசியல் தலைமைகளுக்கு இருக்காது. 

அதுவுமல்லாமல், மேட்டுக்குடி மேலாதிக்கத்தின் ஒவ்வோர் அம்சமும் கேள்விக்கும் எதிர்ப்புக்கும் உட்படத் தொடங்கிவிடும். பிறகு யார் எங்கே இருப்பது என்பதற்குக் கட்டுப்பாடே இல்லாமல், அரசியலின் முகமே மாறிவிடலாம்.

தமிழர் அரசியல், கடந்த நூற்றாண்டில் கணிசமாக ஜனநாயகப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனாலும், அந்த ஜனநாயகத்தின் செயற்பாட்டுத் தளம், தேர்தல் அரசியலுக்கு மட்டுப்பட்டே இருந்து வந்தது. 

1961ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகம் முதலாகப் பொங்கி அடங்கி, அழிவில் முடிந்த ஆயுதப் போராட்டம் வரை, எந்த ஒரு தமிழ்த் தேசிய தலைமையும் மக்களை ஒரு போராட்டச் சக்தியாகக் கற்பனை செய்ததில்லை. இப்போது சலுகைகளுக்காகக் கையேந்தும் பிச்சைக்காரர்களாக, மக்களைக் கருதுகிற ஒரு போக்கு வலுப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே, இப்போதைய தமிழ்த் தேசியவாதத் தலைமைகள், தேசிய இனப்பிரச்சினையில் கடைப்பிடிக்கும் அணுகுமுறையை நோக்க வேண்டியுள்ளது. 

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை, சிங்களவர்-தமிழர் பிரச்சினையாகவே நோக்குகிற போக்கு, இன்னமும் தொடர்கிறது. அமெரிக்காவையும் மேற்குலகையும் ராஜபக்‌ஷவுக்கு (அதாவது சிங்களவர்களுக்கு) எதிராகப் பயன்படுத்தலாம் என்ற கனவு ஒரு புறமும் இந்திய குறுக்கீட்டைப் பற்றிய மூடநம்பிக்கைகள் இன்னொரு புறமும்,  அவர்களது இறுதிப் பற்றுக்கோடுகளாக உள்ளன.

இதன் பயனாக, இப்போது மேற்குலகம் நேரடியாகவும் ஐ.நா மூலம் மறைமுகமாகவும் கொடுக்கிற நெருக்குவாரங்களை எல்லாம், தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கிலானவை என்று கருதுகிற ஒரு போக்கு வளர்கிறது. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அதற்கான புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. ராஜபக்‌ஷர்களை போர்க் குற்றங்களுக்காக அமெரிக்கா தண்டிக்கும் என்ற நம்பிக்கை, புலம்பெயர்ந்த தமிழ்த் தேசியவாதிகளிடையே வலுவாக உள்ளது. அதுவே அவர்களுக்குப் போதுமானதாகவும் இருக்கலாம். தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடையே அது, ஏறத்தாழ ஒரு வெறியாகவே புலப்படுகிறது. 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், அமெரிக்காவின் ஆணைக்கு உட்படாத, மனித உரிமைகள் மீறல் குற்றவாளிகளைப் பிடிக்க விடுத்துள்ள பிடியாணைகள், மியான்மர் விடயத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் என்பன, இலங்கையின் விடயத்திலும் அவ்வாறு நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளன. அவ்வாறு நடக்கலாம்; நடக்காமலும் போகலாம். ஆனால், அதற்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் தீர்வுக்கும் ஓர் உறவுமில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்வது நல்லது.

போர்க் குற்றங்களும் மனித உரிமைகள் மீறல்களும் விசாரிக்கப்படுவது முக்கியமானது. போரின் கொடிய உண்மைகளை, முழுநாடும் அறிவது முக்கியமானது. ஆனால், அந்த விசாரணைகளை யார், ஏன் வலியுறுத்துகிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவு தேவை. 

இதை விடவும், அக்கொடுமைகள் நிகழ, முழு உடந்தையாக இருந்த நாடுகள் எவை எனவும் அனைத்தும் நடக்கையில் பார்த்திருந்து விட்டு, இப்போது மனித உரிமைகள் மீறல், போர்க்குற்றங்கள் என்று பாசாங்கு செய்கிற நாடுகள் எவை எனவும் நினைவூட்டத் தமிழ்த் தலைமைகள் விரும்ப மாட்டா. இச்சூழலில், தமிழ் மக்களையும் முழு நாட்டையும் எதிர்நோக்குகின்ற உடனடி, நீண்ட கால அபாயங்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். 

இலங்கையில் இப்போது ஜனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் பெரும் மிரட்டலுக்கு உட்பட்டுள்ளன. மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க இயலாமல், அரசாங்கம் நாட்டை மேலும் கடனாளியாக்கி, சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளுக்குப் பணிந்து, மக்கள் மீது சுமைகளை ஏற்றுகிறது. 

பயங்கரவாதத்தைக் காட்டி, மக்களை ‘ஏய்ப்பது’ இனிக் கடினம். மக்களின் எதிர்ப்பைச் சமாளித்து, திசைதிருப்பப் பேரினவாத அரசியல் மட்டும் போதாது. எனவே, நேரடியான அடக்குமுறை தேவை. அதை நாம் இன்று பல இடங்களிலும் கண்டுள்ளோம். 

இப்பின்புலத்திலேயே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரது அண்மைய கருத்துகளை நோக்க வேண்டியுள்ளது. உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறல் என்று தோற்றம் பெற்ற இலங்கை மீதான பிரேரணை, தொடர்ச்சியாக அதன் உள்ளடக்கத்திலும் அறிக்கையிடலிலும் மாற்றமடைந்து வந்துள்ளது. 

மேற்குலகத்துக்கு உவப்பில்லாத அரசாங்கம், இலங்கையில் பதவியில் இருந்தபோது, இறுதிப் போரில் நடைபெற்ற விடயங்களே கூடிய முக்கியத்துவம் பெற்றன. ஆனால், காலப்போக்கில் கவனம், இலங்கையின் பொதுவான மனித உரிமைகள் பற்றியதாக மாறியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, அது குறித்த உண்மைகள், இலங்கை தொடர்பான அறிக்கையின் முக்கிய பேசுபொருளாகின. 

இதன் தொடர்ச்சியாகவே, செவ்வாய்க்கிழமை (06) வெளியாகிய அறிக்கையை நோக்க வேண்டியுள்ளது. இது, இலங்கையின் பொருளாதாரக் குற்றங்கள் பற்றிப் பேசுகிறது. அவ்வறிக்கை, ‘நிலையான முன்னேற்றங்களை அடைவதற்கு, கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமைகள் மீறல்கள், பொருளாதாரக் குற்றங்கள், உள்ளூர் ஊழல்களுக்கான தண்டனை உட்பட, பொருளாதார நெருக்கடிக்குப் பங்களித்த அடிப்படைக் காரணிகளை அடையாளம் கண்டு, நிவர்த்தி செய்வது இன்றியமையாதது’ என்று தெரிவிக்கிறது.

16 பக்கங்கள் நீள்கின்ற இந்த நீண்ட அறிக்கையின் நிறைவுரையில், இரண்டு விடயங்கள் வலியுறுத்தப்படுகின்றன. அவை, இலங்கை மீதான தீர்மானத்தின் மாறும் இயல்பையும் அதன் இன்றைய நிலையையும் அடிக்கோடிட்டுக்காட்ட வல்லன.

‘இலங்கை ஒரு பேரழிவுகரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இது மக்களின் வாழ்க்கையை கடுமையாகப் பாதிக்கிறது. இலங்கையை மீட்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்’ என உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார். 

எவ்வாறாயினும், நிலையான முன்னேற்றத்துக்கு, கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமைகள் மீறல்கள், பொருளாதாரக் குற்றங்கள், ஊழல்களுக்கான  தண்டனை உட்பட, இந்த நெருக்கடிக்கு பங்களித்த அடிப்படை காரணிகளை அடையாளம் கண்டு, இலங்கைக்கு உதவுவது இன்றியமையாததாகும். 

அனைத்து சமூகங்களிலிருந்தும் பொறுப்புக்கூறல், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான பரந்த அடிப்படையிலான கோரிக்கைகள் எதிர்காலத்துக்கான புதிய மற்றும் பொதுவான பார்வைக்கான ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியை முன்வைக்கின்றன. பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி, பாகுபாடு காட்டாமை, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில், இலங்கையை எவ்வாறு, பன்மைத்துவ மற்றும் முழுமையான ஜனநாயக நாடாக மாற்றுவது என்பது குறித்த புதிய அர்த்தமுள்ள தேசிய உரையாடலுக்கான வாய்ப்பு இருப்பதாக உயர்ஸ்தானிகர் நம்புகிறார்.

இந்தப் பின்புலத்தில், கடந்தகால வரலாற்றை ஒருமுறை மீள நினைவூட்டல் தகும். தேசிய இனப்பிரச்சினையின் தீர்வின்மையின் பயனான கொடிய போராலேயே, போர்க் குற்றங்களும் மனிதவுரிமை மீறல்களும் நிகழ்ந்தன. போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும், அரசியல் தீர்வு நிராகரிப்பும் ஜனநாயக மறுப்பும் மனிதவுரிமை மீறல்களுமே காணக்கிடைத்த நிலையிலேயே, ஐ.நா தனது நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில், இலங்கையின் விடயத்தை மனித உரிமைகள் பேரவை நிகழ்ச்சி நிரலுக்குள் புகுத்தியது. அதில் அமெரிக்காவின் பங்கும் பெரியது. 

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து, மக்களிடையே நல்லெண்ணத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தவோ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவோ வேண்டி அமெரிக்கா, ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னிருந்து முழுமூச்சாகச் செயற்படவில்லை. இலங்கை மீதான பிடியை வைத்திருப்பதற்கான ஒரு கருவியாகவே, அன்றிலிருந்து இன்றுவரை இத்தீர்மானம் செயற்படுகிறது. 

இந்தப் பின்னணியில், ஜெனீவாவில் நடந்தவையும் நடப்பவையும் தமிழர்களின் நன்மைக்காக என்று நம்புபவர்கள், ஏமாற்றப்படுவதையே, தமது கடந்த காலமாகவும் எதிர்காலமாகவும் கொண்டிருக்க ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜெனீவா-இன்னொரு-முறை-ஏமாறுவோமா/91-304010

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.