Jump to content

‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம்

என். கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது. 

இந்தக் ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சிக்கு, ஆரம்பத்தில் இலங்கை எங்கும் ஆங்காங்கே கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களே ஆரம்பப்புள்ளி. இவை கட்சி சார்ந்த அல்லது இடதுசாரி அமைப்புகள் சார்ந்த ஆர்ப்பாட்டங்கள் அல்ல! பொதுமக்கள், தாமாக வீதிக்கு இறங்கி, அமைதி வழியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள். 

இப்படி, பொதுமக்கள் கொழும்பில் ஒன்று திரண்ட இடங்களில், ஆர்ப்பாட்டங்களுக்கு என்று கோட்டாபயவே ஒதுக்கிய காலிமுகத்திடலுக்கு எதிரிலான, ஜனாதிபதி மாளிகைக்கும், ‘ஷங்றி-லா’ ஹொட்டலுக்கும் அருகிலான இடம். இதற்கு ஒரு சிலர் ‘கோட்டா கோ கம’ (கோட்டா போ கிராமம்) என்று பெயரிட்டு, பெயர்ப்பலகையை  வைக்க, அதுவே இவ்விடத்தைக் குறிக்கும் பெயராகியது.

இதன் தொடர்ச்சியாக இலங்கை எங்கும், ‘கோட்டா கோ ஹோம்’ ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வௌிநாடுகளில் வாழும் புலம்பெயர் இலங்கையர்கள், அந்நாடுகளிலும் ‘கோட்டா கோ ஹோம்’ ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தார்கள்.

மிகவும் அமைதியான வழியில் போராடுவதற்கான தமது உரிமையை பொதுமக்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தி, ராஜபக்‌ஷர்களுக்கு கடும் அழுத்தத்தை வழங்கி, அதன் விளைவாக கோட்டாவையும் மஹிந்தவையும் தவிர, மற்றைய ராஜபக்‌ஷர்கள் எல்லாரும் பதவி விலகியிருந்த நிலையில்தான், இந்த ‘அறகலய’வின் அடுத்த கட்டம் உருப்பெற்றது. 

அது, அன்று பிரதமராக இருந்த மஹிந்தவின் பதவி விலகல். மஹிந்த பதவி விலகும் தினமன்று, அலரி மாளிகையில் கூட்டிய பெருங்கூட்டம், அங்கிருந்து புறப்பட்டு, அலரிமாளிகைக்கு முன்னிருந்த ‘மைனா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிவிட்டு, ‘கோட்டா கோ கம’ நோக்கிப் பயணித்து, அங்கிருந்த ஆாப்பாட்டக்காரர்களைத் தாக்கியது. 

இந்தக் கோரத் தாக்குதலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்; தாக்குதலில் ஈடுபட்டவர்கள், தாக்குதலில் ஈடுபடத் தூண்டியவர்கள் என அனைவரும் நீதியின் முன்னே நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் சாதாரண மக்கள் எவருக்கும் இருக்க முடியாது.

ஆனால், இதே தினம்தான் இந்த ‘அறகலய’வின் இன்னொரு பக்கம் வௌிச்சத்துக்கு வந்தது. அலரிமாளிகையிலிருந்து வந்த காடையர்கள், ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிவிட்டார்கள் என்று தெரிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அங்கு விரைந்தார்கள். 

ஜே.வி.பி தலைவர் அநுர குமார, ‘கோட்டா கோ கம’வுக்கு வந்தபோது, ஒரு ‘ஹீரோ’ போல அவருக்கான வரவேற்பு, சில ஆர்ப்பாட்டக்காரர்களால் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்னவோடு அங்கு வந்தபோது, அவர்கள் மீது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி, அவர்களை ஓடஓட விரட்டினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன அங்கு வந்தபோது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. 

இதுதான், பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு, இயற்கையாக வளர்ந்த ‘அறகலய’வின் முன்னரங்கிற்கு ஜனநாயக விரோத சக்திகள் வந்துவிட்டன என்பது அனைவருக்கும் வௌிப்படையாகத் தெரியவந்த முக்கிய சந்தர்ப்பம். தொடர்ந்து, அடுத்த தினங்களில், ராஜபக்‌ஷர்கள், மற்றும் அவரது ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துகள் எரியூட்டப்பட்டன. 

அமைதி வழியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஜனநாயக போராட்டத்துக்குள் ஜனநாயக விரோத சக்திகள் நுழைந்து, தம் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கத் தொடங்கியது, தற்போது ‘வௌ்ளிடை மலை’யாகத் தெரிந்தது.

பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு, இயற்கையாக வளர்ந்த ‘அறகலய’வை சொந்தம் கொண்டாட, ஜனநாயக விரோத இடதுசாரி சக்திகள் தொடங்கின. ‘அறகலய’ முளைவிட்டு, வேர்விட்டு வளரும் வரை, பின்னரங்கில் பதுங்கியிருந்த இந்த ஜனநாயக விரோத இடதுசாரி சக்திகள், தற்போது, அதனை தாமே வழிநடத்த வேண்டுமென முன்னரங்கிற்கு முன்னேறியிருந்தார்கள். 

இதன் விளைவாக, ஜூலை ஒன்பதாம் திகதி, அதுவரை காலமும் எந்த வன்முறையும் சட்டவிரோத நடவடிக்கைகளுமின்றி அமைதிவழியில் போராடி, நிறையவற்றைச் சாதித்துக்கொண்ட மக்கள் போராட்டம், இந்த இடதுசாரி ஜனநாயக விரோதிகளின் வழிநடத்தலில் சிக்கி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, பிரதமர் காரியாலயம் என்பவற்றுக்குள் உடைத்துக்கொண்டு உள்நுழைந்தது. 

இதுதான் சந்தர்ப்பம் என்று உணர்ந்த, ரணில் விக்கிரமசிங்கவோடு தனிப்பகை கொண்டிருந்த கூட்டமொன்று, ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் கூடியது. அதன் விளைவாக, ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரியூட்டப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, நாட்டை விட்டு வௌியேறினார் கோட்டாபய ராஜபக்‌ஷ. அடுத்து, பாராளுமன்றத்தைக் கைப்பற்ற ஒரு கூட்டம், இதே இடதுசாரி ஜனநாயக விரோத சக்திகளின் தலைமையில் சென்றது. ரணில் விக்கிரமசிங்கவின் உறுதியான முடிவால், அந்த நடவடிக்கை தகர்க்கப்பட்டது.

மேற்சொன்ன வன்முறைகளைக் கண்ட பொதுமக்களுக்கு, இந்த ஜனநாயக விரோத சக்திகளின் நிகழ்ச்சி நிரல் புரிந்தது. மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீதுதான் கோபமேயன்றி, ஜனநாயக ஆட்சி முறையை, அரசியலமைப்பை, சட்டத்தின் ஆட்சியை எல்லாம் தகர்ப்பது மக்களின் விருப்பமோ, நிகழ்ச்சிநிரலோ அல்ல. 

இந்த இடதுசாரி ஜனநாயக விரோத சக்திகள், மக்களின் ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை, இலங்கையின் ஜனநாயக கட்டமைப்புகளைத் தகர்த்து, தம்முடைய இடதுசாரி சர்வாதிகார நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கப் பயன்படுத்த முனைகின்றமை மக்களுக்கு தௌிவாகப் புரிந்ததால்தான், ஜூலை ஒன்பதாம் திகதிக்குப் பிறகு, மக்கள் தாமாக, இதுவரை மீண்டும் வீதிக்கு இறங்கவில்லை. 

இடதுசாரி கட்சிகளும் அவை சார்ந்த அமைப்புகளும் ஒரு 400-500 பேர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தகின்றனவே அன்றி, ‘அறகலய’ போல பொதுமக்கள் இவர்களின் ஜனநாயக விரோத நிகழ்ச்சி நிரலுக்குள் மீண்டும் வர விரும்பவில்லை என்பது, மிகத் தௌிவாகவே தெரிகிறது.

பொதுமக்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேரம் வழங்கிப் பார்க்க விரும்புகிறார்கள் என்றே தெரிகிறது. இடதுசாரிகளும் தற்போது தமது தனிப்பட்ட காரணங்களுக்காக, ரணிலோடு முறுகிக்கொண்டு நிற்கும் ரணிலின் முன்னாள் ஆதரவாளர்களான அரசியல்வாதிகளும் படித்த, ஆங்கிலம் பேசும் ‘சிவில் சமூகமும்’ எதிர்கால அரசியல் கனவோடு, இந்தப் போராட்டத்தை தமது அரசியல் வாழ்க்கைக்கான திறவுகோலாகக் கருதும் சில இளைஞர்களும், இன்று ரணில் எதிர்ப்பை மும்முரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்குத் தமது நிகழ்ச்சி நிரலை இங்கு முன்னெடுக்க விரும்பும் சில வௌிநாடுகளும் பின்னணியில் ஆதரவளித்து வருகின்றன. 

இரண்டு மாதங்களுக்கு மேலாக, ரணில் எதிர்ப்பை கடுமையான முன்வைக்க இவர்கள் பகிரதப்பிரயத்தனப்பட்டாலும், இதுவரையும் இவர்களால் அவர்களது நிகழ்ச்சிநிரலுக்குள் பொதுமக்களைக் கொண்டு வரமுடியவில்லை. இதுவரை மக்கள், அதற்கு இடமளிக்கவில்லை என்பது மக்களின் வெற்றி. இவர்களது கைப்பிள்ளைகளல்ல நாங்கள் என்பதை, மக்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இதனை ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய வெற்றியாக எண்ணிவிடக் கூடாது. மக்கள் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பார்ப்பதற்காக நேரமளித்து இருக்கிறார்கள். 6.9 மில்லியன் மக்களின் பேராதரவோடு வந்த கோட்டாவை வௌியேற்ற, இராணுவம், பொலிஸ் என எதற்கும் அஞ்சாமல் வீதிக்கிறங்கிய பொதுமக்களுக்கு, நாளை ரணிலை வௌியேற்ற வீதிக்கிறங்க முடியாது என்றில்லை. 

ஆகவே, மக்களுக்கு நன்மை செய்வதினூடாக மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டிய பெருங்கடமை ரணிலுக்கு இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற பெரும்பான்மையைத் தக்கவைக்க சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டிய கையறு நிலையில் நிற்கலாம். 

ஆனால், அவர் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்தால் மட்டுமே, அவருக்கு அரசியலில் எதிர்காலம் இருக்கும் என்பது, பழுத்த அரசியல்வாதியான அவருக்கு சொல்லிப்புரிய வைக்க வேண்டியதொன்றல்ல; மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அறகலய-எனும்-அரசியல்-ஆயுதம்/91-304414

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.