Jump to content

பிரிட்டிஷ் முடியாட்சியின் எதிர்காலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் முடியாட்சியின் எதிர்காலம்

on September 20, 2022

64fcb92caba0e440bf2cc82d51e46281.jpg?res

Photo, Evening Standard

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு லட்சக்கணக்கான மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் நேற்று இடம்பெற்றது. லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் கடந்த நான்கு நாட்களாக மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் அவரது பூதவுடல் நேற்று திங்கட்கிழமை வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் ஆராதனைக்குப் பிறகு வின்ஸ்டர் மாளிகை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இது 6 தசாப்தங்களுக்கு பிறகு பிரிட்டன் காணும் அரசமரியாதையுடனான முதலாவது இறுதிச்சடங்காகும். அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் அங்கு  முடியாட்சி தலைவர்களுக்கே நடத்தப்படுவது வழக்கமாகும். ஆனால், போர்க்கால பிரதமர் சேர். வின்ஸ்டன் சேர்ச்சிலுக்கு 1965 ஜனவரியில் அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

எலிசபெத் மகாராணி தனது 96ஆவது வயதில் மறைந்த தினமான செப்டெம்பர் 8ஆம் திகதிக்கு சரியாக 7 வருடங்களுக்கு முன்னதாக (89 வயதில்) மிகவும் நீண்டகாலம் பதவியில் இருந்த பிரிட்டிஷ்  முடியாட்சியாளர் என்ற சாதனையைப் படைத்தார். அவருக்கு முன்னர் விக்டோரியா மகாராணி 63 வருடங்கள் 7 மாதங்கள் பதவிவகித்தார். 70 வருடங்களும் 126 நாட்களும் பதவியில் இருந்த தாய்லாந்து மன்னர் 2016 அக்டோபர் 13 மரணமடைந்ததை அடுத்து மகாராணி நவீன உலகின் மிகவும் நீண்டகால முடியாட்சியாளர் என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டார். தனது வைரவிழாவை அவர் இவ்வருடம் ஜூன் 5  கொண்டாடினார்.

இதற்கு முன்னர் பிரெஞ்சு மன்னர் 14ஆவது லூயி (1643 – 1715) 72 வருடங்கள் 110 நாட்கள் ஆட்சியில் இருந்தார். அவரே உலகின் மிகவும் நீண்டகாலம் முடியாட்சியில் இருந்தவர் என்று வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.

தனது ஏழு தசாப்தகால முடியாட்சியில் எலிசபெத் மகாராணி 15 பிரதமர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்திருக்கிறார். அவரின் முதலாவது பிரதமர் சேர். வின்ஸ்டன் சேர்ச்சில். 1952ஆம் ஆண்டு தனது 25 வயதில் மகாராணியாக எலிசபெத் வந்தபோது சேர்ச்சிலுக்கு 77 வயது. இந்த இளம் பெண்ணுக்கு முடியாட்சிப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் இருக்கக்கூடிய ஆற்றல் குறித்து சேர்ச்சில் சந்தேகம் கிளப்பினாராம். ஆனால், இறுதியில் அவர் 70 வருடங்கள் மகாராணியாக இருந்து உலகில் சகல கண்டங்களின் மக்கள் மத்தியிலும் பிரபல்யமான அரச ஆளுமையாக  விளங்கினார். பிரிட்டனுக்கு வெளியே ‘மகாராணி’ என்று  எவராவது பேசினால் அது எலிசபெத் மகாராணியைத் தவிர வேறு எவருமாக இருந்திருக்கமுடியாது.

தற்போதைய பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு மகாராணி இறுதியாக அதுவும் மரணமடைவதற்கு இரு தினங்கள் முன்னதாக பதவிப்பிரமாணம் செய்துவைத்து அரசாங்கத்தை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். புதிய கன்சர்வேட்டிவ் பிரதமர் 1975ஆம் ஆண்டு பிறந்தவர். அதாவது மகாராணியின் முதல் பிரதமரான சேர்ச்சில் பிறந்து 101 வருடங்களுக்கு பிறகு உலகிற்கு வந்தவர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரியான லிஸ் ட்ரஸ் 1990 களின் நடுப்பகுதியில் மாணவ நாட்களில் முடியாட்சிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டவர். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தார்கள் என்பதற்காக பரம்பரை பரம்பரையாக அரச தலைவர்களாக வருவதும் ஆட்சி செய்வதும் ஏதோ பிறப்புரிமை என்பது போன்ற நடைமுறையை உருவாக்குவது வெறுக்கத்தக்கது என்று கூறிய அவர் சுமார் 30 வருடங்கள் கழித்து பிரதமராக மகாராணியின் மறைவு குறித்து அறிவித்தபோது  அவரை வானளாவ புகழ்ந்ததுடன் புதிய மன்னர் சார்ள்ஸுக்கு தேசத்தின் ஆதரவை தெரிவித்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

உண்மையில் மகாராணியாவதற்கு பிறந்தவர் அல்ல எலிசபெத். விதி வசத்தினாலேயே அவர் முடியாட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டிவந்தது. அவரின் தந்தையார் ஜோர்ஜின் மூத்த சகோதரர் எட்வேர்ட் எட்டாவது எட்வேர்ட் மன்னராக 1936 ஜனவரி 20 முடிசூடினார். ஆனால், ஏற்கெனவே மணம்முடித்து விவாகரத்து செய்துகொண்ட அமெரிக்க கத்தோலிக்க பெண்மணி வாலிஸ் சிம்ப்சன் மீதான காதலினால் அந்த வருடம் முடிவடைவதற்கு முன்னதாக டிசம்பர் 11 மன்னர் எட்வேர்ட் முடிதுறந்தார்.

அந்தப் பெண்மணியைத் திருமணம் செய்து பிரிட்டனின் இராணியாக்குவதை பிரிட்டனின் எழுதப்படாத அரசியலமைப்பு தடுத்தது. முடியா அல்லது சிம்ப்சனா என்ற தெரிவில் மன்னர் சிம்ப்சனுக்கே முன்னுரிமை கொடுத்தார் (காதல் அல்ல, ஜேர்மன் நாஜிகளுக்கு ஆதரவாளராக இருந்ததால் கிளம்பிய எதிர்ப்புக்கு முகங்கொடுக்க முடியாமல் போனதே அவர் முடி துறந்ததற்கு உண்மையான காரணம் என்றும் அந்த நேரத்தில்  விமர்சனம் முன்வைக்கப்பட்டது). முடிதுறந்த மன்னரின் சகோதரர் – எலிசபெத்தின் தந்தையார் – எதிர்பார்த்திராத வகையில்  ஆறாவது ஜோர்ஜ் மன்னராக முடிசூடவேண்டியேற்பட்டது. இந்த திடீர் மாற்றம் எலிசபெத்தை பத்து வயதில் முடிக்குரிய இளவரசியாக்கியது.

கிரேக்க மற்றும் டென்மார்க் இளவரசரான பிலிப்ஸை தனது 21 வயதில் திருமணம் செய்த எலிசபெத் நான்கு பிள்ளைகளுக்கு தாயானார். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு மத்தியில் அவர் 1952 முற்பகுதியில் கணவருடன் ஆபிரிக்காவுக்கு சுற்றுலாவுக்கு சென்றவேளையில் பெப்ரவரி 6 மன்னர் ஜோர்ஜ்  தனது 57 வயதில்  மரணமடைந்தார்.

அன்றைய தினம் எலிசபெத்தும் கணவரும் கென்யாவில் இருந்தனர். அங்கு மரமொன்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த தங்குமிடத்தில்  நித்திரையில் இருந்த அவரை எழுப்பி கணவர்  தந்தையார் இறந்த செய்தியை அமைதியாகக் கூறினார். இளவரசியாக மர உச்சி படுக்கைக்குச் சென்ற எலிசபெத் இங்கிலாந்தின் மகாராணியாக கீழே இறங்கினார். 1953 ஜூன் 2 அவரின் முடிசூட்டு வைபவம் நடைபெற்றது.

மகாராணியின் முடியாட்சி காலகட்டம் உலகில் பல போர்களை, அனர்த்தங்களை, அரசியல் நெருக்கடிகளை, பெருந்தொற்று நோய்களை, ஊழல் விவகாரங்களை, பொருளாதார நெருக்கடிகளைக் கண்டது. அவரின் காலத்தில் உலகம் அடையாளம் காணமுடியாத அளவுக்கு மாற்றமடைந்தது. அவர் ஒரு அரசியல்வாதி இல்லாவிட்டாலும், உலகம் முடியாட்சியைப் பெருமளவுக்கு விரும்பாவிட்டாலும் தலைமைத்துவ ஆளுமையைப் பொறுத்தவரை ஒரு உலக விக்கிரகமாக விளங்கினார்.

மனிதகுல வரலாற்றில் மிகவும் கூடுதலான அளவுக்கு புகைப்படம் எடுக்கப்பட்ட பெண்மணியாகக் கூட மகாராணியே விளங்கினார் எனலாம். கடந்த நூற்றாண்டின் பின் அரைப்பகுதி தொடக்கம் இந்த நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தின் முற்பகுதி வரை உலகின் எந்தத் தலைவரை விடவும் நீண்டகாலம் பதவியில் இருந்த அவர் வெளிநாட்டு பயணங்களைப் பொறுத்தவரை, சாதனை படைத்தவராகவும் விளங்குகிறார். இந்தக் காலப்பகுதியில்தான் வின்ஸ்டன் சேர்ச்சில், சார்ள்ஸ் டீ கோல், மாவோ சேதுங், மார்ஷல் டிட்டோ, அப்துல் கமால் நாசர், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, பிடல் காஸ்ட்ரோ, றொனால்ட் றேகன், மார்கரட் தட்சர், பரிசுத்த பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் மற்றும் மிக்கெயில் கொர்பச்சேவ் என்று முக்கியமான உலகத் தலைவர்கள் ஆட்சி செய்து வரலாற்றிற்குள் சென்றார்கள்.

74 வருடகால மணவாழ்க்கைக்கு பிறகு மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் 2021 வருடம் ஏப்ரில் 9 தனது 100ஆவது பிறந்ததினத்துக்கு 62 நாட்கள் முன்னதாக காலமானர். அதற்குப் பிறகு ஒரு வருடம் 4 மாதங்கள் 9 நாட்கள் கழித்து மகாராணி தனது 96 வயதில் கணவரை பின்தொடர்ந்தார்.

அதைத் தொடர்ந்து உடனடியாகவே அவர்களின் மூத்த மகன் சார்ள்ஸ் மன்னரானார். அவருக்கு வயது 73. மிகவும் முதிர்ந்த வயதில் பிரிட்டிஷ் முடியாட்சியைப் பொறுப்பேற்ற அவர் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் என்று அழைக்கப்படுகிறார். அவரின் மூத்த மகன் வில்லியம் 40 வயதில் அடுத்த முடிக்குரிய இளவரசாகியிருக்கிறார். 21 நூற்றாண்டில் முடியாட்சி நிறுவனம் செழிப்பதோ அல்லது பிழைத்திருப்பதோ இவர்கள் இருவரினதும் கைகளில்தான் இருக்கிறது.

குடியரசுவாதம் 

பிரிட்டனில் முடியாட்சி மிக நீண்டகால வரலாற்றைக் கொண்டிருப்பதைப் போன்றே முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து ஜனநாயக குடியரசை நிறுவவேண்டும் என்று கோரும் குடியரசுவாதத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. எலிசபெத் மகாராணியின் காலப்பகுதியில் குடியரசுவாத குமுறல்கள்   அவ்வப்போது தலைகாட்டியிருந்தாலும் கூட, அவர் மக்கள் மத்தியில் அனுபவித்த நேசம், மதிப்பு காரணமாக முடியாட்சியை இல்லாதொழித்துவிட வேண்டும் என்ற இயக்கத்தினால் ஒரு அளவிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது.

இப்போது மகாராணி மறைந்து மக்கள் மத்தியில் குறைந்தளவு செல்வாக்கைக் கொண்ட சார்ள்ஸ் மன்னராகியிருக்கும் நிலையில் 1000 வருடகால முடியாட்சி நிறுவனத்தின் முடிவை விரைவுபடுத்த முடியும் என்று குடியரசுவாதிகள் நம்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தியொன்று கடந்தவாரம் தெரிவித்தது.

பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை, முடியாட்சி என்றாலே அது மகாராணிதான். அவரின் மறைவுக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் எதிர்காலம் பெரும் ஆபத்துக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கும் குடியரசுவாதிகள் சார்ள்ஸ் மன்னராக வந்திருக்கலாம், ஆனால் மகாராணிக்கு மக்கள் காட்டிய பணிவையும் மதிப்பையும் அவரால்  பெறமுடியாது; நவீன ஜனநாயகத்தில் அரச குடும்பத்துக்கு இடமிருக்கமுடியாது. அந்த குடும்பத்தைப் பேணுவதற்குப் பிரமாண்டமான செலவும் நாட்டுக்கு கட்டுப்படியாகாது என்று வாதிடத்தொடங்கியிருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.

முடியாட்சி நிறுவனத்தினால் ஒவ்வொரு பிரிட்டிஷ் குடிமகனுக்கும் வருடாந்தம் ஒரு பவுணுக்கும் பணம் செலவாகிறது என்று அரச குடும்ப அதிகாரிகள் கூறுகின்ற அதேவேளை ‘ றிபப்ளிக் ‘ என்ற குடியரசுவாத குழு வருடாந்தம் நாட்டுக்கு சுமார் 35 கோடி பவுண்கள் செலவாகிறது என்று கூறுகிறது.

அரச குடும்பத்தின் நிதி வளங்கள் மற்றும் அவர்களுக்கு நேரடியாக சொந்தமாக இருக்கும் சொத்துக்கள் பற்றி ஒரு தெளிவற்ற தன்மை இருப்பதால் அவர்களின் ஒட்டுமொத்த செல்வத்தை மதிப்பிடுவதும் கஷ்டமாக இருக்கிறது. ராய்ட்டர்ஸினால் 2015 மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று அரச குடும்பத்தின் அண்ணளவான சொத்துக்கள் 2300 கோடி பவுண்கள் பெறுமதியானவை என்று  மதிப்பிட்டது.

பரந்தளவு பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் முடியாட்சியை ஆதரிப்பதாகவும்  மகாராணிக்கான ஆதரவும் அதே மட்டத்தில் அல்லது கூடுதலாக இருந்ததாகவும் அபிப்பிராய வாக்கெடுப்புகள் தொடர்ச்சியாக வெளிக்காட்டிவந்தன. மகாராணி உயிரோடிருக்கும் வரை முறைமையை மாற்றுவதற்கு தங்களுக்கு வாய்ப்புக்கள் குறைவு என்பதை குடியரசுவாதிகளும் ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.

அதேவேளை, முடியாட்சிக்கான ஆதரவு குறிப்பாக இளம் சந்ததியினர் மத்தியில்  சரிந்துகொண்டு வருவதையும் சார்ள்ஸ் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு கொண்டவர் அல்ல என்பதையும் கூட அபிப்பிராய வாக்கெடுப்புகளின் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

மன்னர் என்ற வகையில் சார்ள்ஸுக்கான ஆதரவு ஏறியிறங்குவதாக இருக்கிறதென்றும் சில அபிப்பிராய வாக்கெடுப்புகள் முடி இளவரசர் வில்லியத்துக்கு கையளிக்கப்படுவதை பலர் விரும்புவதைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

மன்னரின் இரண்டாவது மனைவி கமிலாவும் மக்கள் மத்தியில் வேற்றுமை உணர்வுகளை தோற்றுவிக்கக்கூடிய ஒருவராக இருக்கிறார் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. வில்லியத்துக்கும் மனைவி கேற்றுக்கும் இருக்கும் பெரும் செல்வாக்கு முடியாட்சியை ஒழிப்பதை நோக்கி எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய நகர்வுகளை தடுக்க உதவமுடியும் என்பது முடியாட்சி ஆதரவு சக்திகளின் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறதாம்.

பிரிட்டனில் முடியாட்சியை அகற்றுவதற்கான தெளிவான பாதை இல்லை. அதற்கான நடைமுறைகளை தெளிவுபடுத்தும் வகையிலான ஒரு ஒழுங்கமைவான அரசியலமைப்பும் அந்த நாட்டில் இல்லை. சகல கட்சிகளுக்குள்ளும் குடியரசுவாதத்துக்கு ஆதரவானவர்களும் இருக்கிறார்கள் என்றபோதிலும் பிரதான அரசியல் கட்சிகளான கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிற்கட்சி, லிபரல் ஜனநாயக கட்சி மற்றும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி ஆகியவை முடியாட்சி குறித்து தெளிவான கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்று அவதானிகள் கூறுகிறார்கள். பெரியளவில் மக்கள் அபிப்பிராயம் முடியாட்சிக்கு எதிராக திரும்பினால், அரச குடும்பம் தொடரமுடியாமல் போகும் என்று முடியாட்சியை எதிர்ப்பவர்கள் கருதுகிறார்கள்.

வரலாற்றில் பிரிட்டிஷ் முடியாட்சியின் தொடர்ச்சி ஒரு தடவை மாத்திரமே குறுக்கீடு செய்யப்பட்டது. 1649 ஆண்டில் முதலாவது சார்ள்ஸ் மன்னர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது. குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஆங்கில குடியரசு ஒன்று குறுகிய காலம் நடைமுறையில் இருந்தது. ஆனால், அந்த குடியரசு 1660 முடிவுக்கு வந்து மீண்டும் முடியாட்சி நிறுவப்பட்டது.

முடியாட்சியை ஒழிக்கக் கோருவதை ஆயுள்கால சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக கருதும் சட்டம் இன்னமும் பிரிட்டனில்  நடைமுறையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

 

https://maatram.org/?p=10349

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.