Jump to content

கல்கி கிருஷ்ணமூர்த்தி: பொன்னியின் செல்வன் எழுத்தாளரின் பன்முகத் தன்மை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்கி கிருஷ்ணமூர்த்தி: பொன்னியின் செல்வன் எழுத்தாளரின் பன்முகத் தன்மை

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கல்கி கிருஷ்ணமூர்த்தி

பட மூலாதாரம்,KALKI FILE

 

படக்குறிப்பு,

ராஜாஜி, கல்கி சதாசிவத்துடன் கல்கி கிருஷ்ணமூர்த்தி (இடமிருப்பவர்)

தமிழ் வெகுஜன இலக்கிய உலகில் நீங்காத இடத்தைப் பெற்ற 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி - சிறுகதை, நாவல், கட்டுரைகள், இதழாளர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல் செயற்பாட்டாளர், சினிமா எழுத்தாளர் என பன்முகத் தன்மை வாய்ந்தவர்.

கடந்த சில ஆண்டுகளில் 'கல்கி' என்ற பெயர் பெரிதும் 'பொன்னியின் செல்வன்' என்ற மகத்தான நாவலுடன் இணைத்தே அறியப்படுகிறது. ஆனால், கல்கி வெறும் ஒரு நாவலின் ஆசிரியர் மட்டுமல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். பாடலாசிரியர். சொந்தமாக பத்திரிகை நடத்தியவர். திரு.வி. கல்யாண சுந்தரனாருடன் நெருங்கிய தொடர்புகொண்டவர், அரசியல் செயல்பாட்டாளர் என பன்முகம் கொண்டவர்.

பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தற்போது தனி மாவட்டமாக உள்ள மயிலாடுதுறையிலிருந்து எட்டு மைல் தூரத்தில் இருக்கும் புத்தமங்கலம் என்ற கிராமத்தில் ராமசாமி - தையல்நாயகி தம்பதியின் இரண்டாவது குழந்தையாக 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி (கல்கி). இவருடைய தந்தை அருகில் உள்ள மணல்மேடு கிராமத்தின் கர்ணமாக விளங்கினார்.

சிறுவயதிலேயே அவரது தந்தையார் இறந்துவிட, உறவினர்களின் ஆதரவிலேயே கிருஷ்ணமூர்த்தி வளர்ந்தார். அவரது பக்கத்து வீட்டில் இருந்த ஐயாசாமி என்பவர், கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரிடமிருந்தே புத்தகங்கள் மீதான ஆர்வத்தை கிருஷ்ணமூர்த்தி வளர்த்துக்கொண்டார்.

 

சிறிய வயதிலேயே, தமிழில் வெளிவந்திருந்த நாவல்களில் பெரும்பாலானவற்றை படித்து முடித்த கிருஷ்ணமூர்த்தி, பிறகு ஆங்கில எழுத்துகளின் மீது கவனத்தைத் திருப்பினார். சார்லஸ் டிக்கென்ஸ், அலெக்ஸாந்தர் த்யூமா ஆகியோரின் படைப்புகளை மிகுந்த தீவிரத்தோடு வாசித்தார்.

புத்தகங்களின் மீது கல்கிக்கு பெரும் ஆர்வம் இருந்தபோதிலும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் உடனடியாக படிப்பைத் தொடர முடியவில்லை. இந்தத் தருணத்தில் 'சந்திரகாசன் என்ற தனது முதல் நாடகத்தை எழுதினார் கிருஷ்ணமூர்த்தி.

இதற்குப் பிறகு, திருச்சியில் இருந்த தன்னுடைய சிறிய தாயாரின் வீட்டில் இருந்தபடி படிப்பைத் தொடர ஆரம்பித்தார். அதற்குப் பிறகு தேசிய உயர்நிலைப் பள்ளியில் இடம் கிடைத்தது. பள்ளிப் படிப்பை முடிக்கும் நேரத்தில் 1921ஆம் ஆண்டின் நாகபுரி காங்கிரஸ் கூட்டத் தீர்மானம் வெளியிடப்பட்டது.

சட்டமன்றங்களைப் புறக்கணிப்பது, நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது, மாணவர்கள் கல்விக்கூடங்களைப் புறக்கணிப்பது ஆகிய தீர்மானங்கள் இதில் இருந்தன. பள்ளி இறுதித் தேர்வை எழுதவிருந்த கிருஷ்ணமூர்த்தி, இந்தத் தீர்மானத்தின்படி தேர்வை எழுதாமல் பள்ளியிலிருந்து வெளியேறினார். சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜனின் பேச்சைக்கேட்டு கல்கி இந்த முடிவை எடுத்தார்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு

 

கல்கி

பட மூலாதாரம்,ANANDHI RAMACHANDRAN

இதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார் கிருஷ்ணமூர்த்தி. 1922ஆம் ஆண்டில், சுதந்திர உணர்வைத் தூண்டும் ஒரு மேடைப் பேச்சிற்காக கல்கி கைதுசெய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்த சமயத்தில் அவருக்குக் கிடைத்த ஒரே புத்தகம் ஆர்.எல். ஸ்டீவன்சன் எழுதிய 'ட்ரஷர் ஐலாண்ட்'. ஆகவே இதனைத் திரும்பத் திரும்பப் படித்தார் கல்கி. அவருடைய பிற்கால எழுத்துகளில் இதன் தாக்கத்தை ஆங்காங்கே காண முடியும். ஓராண்டுகால திருச்சி சிறை வாசத்தில்தான் தனது நண்பர் சதாசிவத்தை முதல் முறையாக சந்தித்தார் கல்கி.

தனது முதல் நாவலான 'விமலா'வையும் இந்த சிறைவாசத்தின்போதுதான் அவர் எழுதினார். வ.ரா. நடத்திய 'சுதந்திரன்' இதழில் அந்த கதை தொடராக வெளியானது (தற்போது இந்த நாவல் தொலைந்து போயுள்ளது). இதற்குச் சில காலத்திற்குப் பிறகு, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், திரு.வி. கல்யாணசுந்தரனாரைச் சென்று பார்க்கும்படி கூறி கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு சிபாரிசு கடிதத்தைக் கொடுத்தார். அப்போது திரு.வி.க. நவசக்தி இதழை நடத்திக்கொண்டிருந்தார். 1923 அக்டோபரில் நவசக்தியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.

'நவசக்தி'யில் கதைகளை எழுதியபோது, கிருஷ்ணமூர்த்தி என்ற பெயருக்குப் பதிலாக 'அகஸ்தியர்' என்ற புனைப் பெயரில் எழுதிவந்தார். காந்தியின் சுயசரிதை Young Indiaவில் தொடராக வெளிவந்தபோது, 'நவசக்தி'யில் கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் தமிழில் தொடராக வெளிவந்தது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

'நவசக்தி'யில் பணியாற்றிய காலத்தில், மார்ச் 1924ல் ருக்மிணி என்ற பெண்ணுடன் கல்கிக்கு திருமணமானது. 1927ல் கல்கியின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'சாரதையின் தந்திரம்' வெளியானது. ஆனால், அது அவ்வளவு வெற்றிகரமான புத்தகமாக அமையவில்லை.

இந்தத் தருணத்தில், பூதூர் வைத்தியநாதரிடமிருந்து 'ஆனந்த விகடனை' வாங்கியிருந்த எஸ்.எஸ். வாசன், அதனை வெற்றிகரமான இதழாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 'தேனீ' என்ற பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'ஏட்டிக்குப் போட்டி' என்ற கட்டுரை அதில் வெளியானது. 'தேனீ' என்ற பெயருக்குப் பதிலாக 'கல்கி' என்ற புதிய புனைப் பெயரில் கட்டுரை வெளியானது. இதற்குப் பிறகு கல்கி என்ற பெயரே நிலைத்துவிட்டது. அந்த கட்டுரையில் இருந்த எழுத்து நடை வாசனுக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில், ஆனந்த விகடனுக்கு கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார்.

'நவசக்தி'யிலிருந்து விலகும் விருப்பத்தை திரு.வி.கவிடம் தெரிவித்த கிருஷ்ணமூர்த்தி, அதற்குப் பிறகு ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமம் நடத்தவிருக்கும் பத்திரிகையில் சேரவிருப்பதாகச் சொன்னார். ஆனந்த விகடனிலும் தொடர் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார்.

ராஜாஜியை ஆசிரியராகவும் கல்கியை துணை ஆசிரியராகவும் கொண்டு மதுவிலக்குக்காக ஆரம்பிக்கப்பட்ட 'விமோசனம்' என்ற பத்திரிகை, பத்து இதழ்களோடு நின்றுவிட, சுதந்திரப்போராட்டம் தொடர்பான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார் கல்கி. இதையடுத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட கல்கிக்கு ஆறு மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தீவிர எழுத்து பணி

 

கல்கி அஞ்சல் தலை

சிறையிலிருந்து திரும்பி வந்த கல்கிக்கு வேலை தர முன்வந்தார் வாசன். ராஜாஜியிடம் தெரிவித்துவிட்டு, ஆனந்த விகடன் இதழில் 1931ல் இணைந்தார் கல்கி. இதற்குப் பிறகு எழுத்துலகில் ஒரு சூறாவளியாக உருவெடுத்தார் கல்கி. நாவல், கதை, கட்டுரை என எழுதிக் குவித்தார் கல்கி. அவரது 'கள்வனின் காதலி' விகடனில் தொடராக வெளிவந்தது. வங்க மொழியில் நல்ல புலமை கொண்டிருந்த குமாரஸ்வாமி, நகைச்சுவை எழுத்துகளில் சிறந்து விளங்கிய தேவன் ஆகியோரை விகடனில் எழுத அறிமுகப்படுத்தினார்.

விகடனில் இருக்கும்போதுதான், விமானத்தில் இலங்கைக்குப் பயணம் செய்து 12 வாரங்களுக்கு பயணக் கட்டுரையாக எழுதினார் கல்கி. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த 'தியாக பூமி' நாவல், கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் திரைப்படமாக உருவானது. படத்திற்கு பெரும் வரவேற்புக் கிடைத்த நிலையில், படத்தை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது.

கல்கி எழுதிய திரைப்பட விமர்சனங்கள் மிகக் கடுமையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் உண்டு.

இந்த நிலையில், 1940ஆம் ஆண்டின் இறுதியில் ஆனந்த விகடனில் இருந்து விலகினார் கல்கி. இதற்குப் பிறகு சதாசிவத்துடன் இணைந்து புதிய பத்திரிகையைத் துவங்க முடிவு செய்தார் கல்கி. இதற்கு நடுவில் மீண்டும் ஒரு தடவை சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.

புதிய பத்திரிகை

 

கல்கி கிருஷ்ணமூர்த்தி

பட மூலாதாரம்,KALKI FILE

சிறையிலிருந்து கல்கி திரும்பிய பிறகு, புதிய பத்திரிகை துவங்கப்பட்டது. கல்கி என்ற பெயரிலேயே. 1941ல் மாதமிருமுறை பத்திரிகையாக துவங்கப்பட்டு 1944லேயே வாரப் பத்திரிகையாக மாற்றப்பட்டது. ஒரு கட்டத்தில் வாரம் 70,000 பிரதிகள் விற்கும் அளவுக்கு, இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றாக கல்கி உருவெடுத்தது. இந்த காலகட்டத்தில் எஸ்.எஸ். வாசன், புதுமைப்பித்தன் ஆகியோருடன் தொடர்ந்து மோதிவந்தார் கல்கி.

கல்கி விகடனில் இருந்தபோதும் சரி, கல்கியின் ஆசிரியராக இருந்தபோதும் சரி, தொடர்ச்சியாக ராஜாஜியை ஆதரித்துவந்தார். கல்கி துவங்கிய ஆறாவது இதழில் 'பார்த்திபன் கனவு' தொடராக வெளிவர ஆரம்பித்தது. இதற்குப் பிறகு 'சிவகாமியின் சபதம்' தொடராக வெளியானது. இந்த இரண்டு சரித்திர நாவல்களும் பிற்காலத்தில் வெளிவந்த சரித்திர நாவல்களுக்கு முன்னுதாரணமாய் அமைந்தன.

இந்த காலகட்டத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் இருந்த கல்வெட்டுகள் தீவிரமாக படிக்கப்பட்டு, சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி ஆகியோரால் சோழர்களின் வரலாறு வெளிவந்தது. இதனைப் பின்னணியாக வைத்து அவரது வாழ்நாள் சாதனையான பொன்னியின் செல்வனை எழுதினார் கல்கி.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

தமிழ் இதழியலில் சரளமான மொழிநடையை அறிமுகப்படுத்திய முன்னோடி கல்கி என்கிறார் மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாஸந்தி.

'பண்டித தமிழில் அநேகமாக எல்லோரும் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் பத்திரிக்கை ஒன்றை ஆரம்பித்து அனைவரும் ரசித்து படிக்கக்கூடிய சரளமான மொழியைக் கொண்டுவந்த முன்னோடி கல்கி என்று சொல்லவேண்டும். ஒரு பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, கலை விமர்சகராக, சிறை அனுபவம் பெற்ற சுதந்திர போராளியாக பல அவதாரங்களை எடுத்தவர். ஆடல் - பாடல் என்று அவரைப்போல ஹாஸ்யமாகவும் ரசனையுடனும் இசை நிகழ்ச்சிகளையும் நாட்டிய நிகழ்ச்சிகளையும் எழுதியவர் வேறு எவரும் இருக்கமுடியாது. அவரது அரசியல் தலையங்கங்களே பல வாசகர்களை ஈர்த்ததென்றால், அவரது தொடர் நாவல்கள் பல்லாயிரம் வாசகர்களை அவரது ரசிகர்களாக்கின. விமர்சகர்கள் பலர் அவரது நடையை கடுமையாக விமர்சித்தாலும் அவரைப்போல சுவாரஸ்யமாக வரலாற்று புதினங்களை எழுதியவர் யாரும் இன்று வரையில் இல்லை என்று சொல்லலாம். அவரது பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் கொண்ட மாபெரும் நாவல். வாசகர்களுக்கு இன்று வரை அதைப் படிப்பதற்கு அலுக்கவில்லை. இன்றும் அந்த நாவலின் விற்பனையை வேறு எவருடைய புத்தகமும் அணுக முடியவில்லை என்று அதை மீண்டும் மீண்டும் பதிப்பிக்கும் பதிப்பகத்தார்கள் சொல்கிறார்கள்" என்கிறார் வாஸந்தி.

55 வயதில் மறைவு

சில காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கல்கி, 1954ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி சென்னையில் காலமானார். அந்தத் தருணத்தில் அவர் அமரதாரா என்ற நாவலை கல்கியில் எழுதத் துவங்கியிருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவர் வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு, அதனை அவருடைய மகள் ஆனந்தி எழுதி முடித்தார்.

55 வயதிலேயே மறைந்துவிட்ட கல்கி, ஒரு குறுகிய காலகட்டத்தில் நிறைய எழுதியிருக்கிறார். தற்போது கிடைக்காமல் போய்விட்ட அவரது முதல் நாவலாகக் கருதப்படும் விமலாவோடு சேர்த்துக் கணக்கிட்டால் மொத்தம் பதினைந்து நாவல்களை எழுதியிருக்கிறார் கல்கி. சுமார் 75 சிறுகதைகளையும் எழுதியுள்ள கல்கி, எண்ணற்ற கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சினிமா, புத்தகம், இலக்கியம், அரசியல், சங்கீதம், நாடகம் என கல்கி ஈடுபடாத துறைகளே கிடையாது.

1990களின் பிற்பகுதியில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கல்கியின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டன. பல பதிப்பகங்கள் கல்கியின் படைப்புகளை தற்போது வெளியிட்டு வருகின்றன.

குறிப்பாக, அவரது பொன்னியின் செல்வன் நாவல் பல்வேறு பதிப்பகங்களால் பல நூறு முறை வெளியிடப்பட்டுவிட்டது. "மங்கள நூலகம் முதலில் அந்த நாவலை மொத்தமாக வெளியிட்டது. அதற்குப் பிறகு, நாங்கள்தான் வெளியிட ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் கல்கியின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டு, பலரும் அந்த நாவலை வெளியிட்டார்கள். இருந்தபோதும் கல்கியின் நூல்களின் விற்பனை குறையவே இல்லை. அதிகரித்தபடிதான் இருக்கிறது" என்கிறார் வானதி பதிப்பகத்தின் உரிமையாளர் வானதி ராமநாதன்.

தமிழ்நாட்டில் இப்போதும் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பாத்திரங்களின் பெயரான அருள்மொழி வர்மன், நந்தினி, ஆதித்தன், பூங்குழலி ஆகிய பெயர்களைச் சூட்டுகின்றனர்.

பார்த்திபன் கனவு நூலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை கல்கியின் எழுத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார்.

"தூய தமிழ்ச் சொற்களைத் துருவித் தேடுவதுமில்லை. வடமொழிச் சொற்களென்று தூர விலகியோடுவதுமில்லை. மிகத் தெளிவான நடை, உணர்ச்சி ததும்பும் நடை. வாசகர்களை உடன் கொண்டு செல்லும் நடை. சந்தர்ப்பத்திற்கும் பாத்திரங்களுக்கும் தக்க நடை. இக்காலத்துள்ள வசனகர்த்தர்களுள் முன்னணியில் நிற்பவர் இவ்வாசிரியர்".

1944வாக்கில் எழுதப்பட்ட இந்தப் பத்தியின் கடைசி வாக்கியம் இப்போதும் உண்மையாகவே இருக்கிறது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-62955425

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.