கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 21 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல்த் தலைவர்கள் மக்களைப் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தும் முகமாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், வி.என்.நவரட்ணம், கே.பி.ரட்ணம், கே.துரைரட்ணம் , எம்.சிவசிதம்பரம் ஆகியோர் வைகாசி 21 ஆம் திகதி யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் கூடி மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததோடு, மறுநாள் நடைபெறவிருந்த குடியரசு தின நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். பொலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். பன்னாலையிலிருந்த அவரது வீட்டிற்கு அமிர்தலிங்கத்தை அழைத்துச் சென்ற பொலீஸார் அவரது வீட்டைச் சோதனை செய்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தேசியப் பிரச்சினையாகக் காட்டிய பிரதமர் சிறிமாவும் அவரது அரசாங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனிநாட்டினை உருவாக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். வைகாசி 23 ஆம் திகது தம்புள்ளை மகாவித்தியாலயத்தில் சிங்களவர்களிடம் பேசிய சிறிமா சமஷ்ட்டிக் கட்சியினர் பல்லாண்டுகளாக தனிநாட்டிற்காகப் பிரச்சாரம் செய்துவருவதாகவும் நாட்டில் ஒற்றுமையின்மையினை ஏற்படுத்த முயன்றுவருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நாட்டின் குடியரசு யாப்பினைக் காக்கவும், நாட்டின் அமைதியினைக் காக்கவும் மிகக்கடுமையான நடவடிக்கைகளை தான் எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். ஜி ஜி பொன்னம்பலம் தமிழரிடையே பிரிவினையினை உண்டாக்க நினைத்த அரசாங்கம், சிவசிதம்பரத்தை விடுதலை செய்ததுடன், ஏனைய தமிழ்த் தலைவர்களை உயர் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தியது. மேலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தலைவர்களையும் ஜூரிகளின் முன்னால் நிறுத்துவதைத் தவிர்த்து மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நிறுத்தி விசாரிக்கத் தீர்மானித்தது. இது, தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்கான தமது ஆதரவினைக் காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் குடியரசு யாப்பின் நியாயத்தன்மையினைக் கேள்விகேட்கும் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த நான்கு தமிழ் தலைவர்களுக்கு ஆதரவாக வாதாட ராணியின் ஆணை பெற்ற வழக்கறிஞர் ஜி ஜி பொன்னம்பலம் உட்பட 61 வழக்கறிஞர்கள் முன்வந்தார்கள். தமது பிரதான ஆட்சேபணையாக அவசரகாலச் சட்டத்தினை தவறானது என்று வாதாடிய வழக்கறிஞர்கள் குடியரசு யாப்பின் அடிப்படையில் நான்கு தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவது செல்லுபடியற்றது என்று வாதாடியதோடு, அவர்கள் நால்வர் மீதும் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் கூறினர். "சட்டத்திற்குப் புறம்பான குடியரசு யாப்பின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டிருப்பதால் எனது கட்சிக்காரர்கள் எந்தவிதத்திலும் குற்றமற்றவர்கள் என்று கூறுகிறேன்" என்று வாதிட்டார் ஜி ஜி பொன்னம்பலம் . அவசரகாலச் சட்டத்தினை குடியரசு யாப்பில் அரசு குறிப்பிட்ட விதத்தில் இருந்த தவறினைப் பயன்படுத்தியே பொன்னம்பலம் இந்த வழக்கு தவறானது என்று வாதிட்டார். வைகாசி 22 வரை அமுலில் இருந்த சோல்பரி யாப்பின்பிரகாரம் ஆளுநரே அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்த முடியும். ஆனால், குடியரசு யாப்பின்படி பிரதமர் இதனைச் செய்ய முடியும் என்று இருந்தது. சோல்பரி யாப்பின் இறுதிநாளும், குடியரசு யாப்பின் ஆரம்பநாளும் ஒரே நாளான வைகாசி 22 ஆக குறிப்பிடப்பட்டிருந்தமையினால், இக்கைதுகள் செல்லுபடியற்றதாகிவிடும் என்று பொன்னம்பலம் மிகவும் திறமையாக வாதாடியிருந்தார். ஆகவே, அவசரகாலச் சட்டத்தினைப் பாவித்து வைகாசி 22 இற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படியவேண்டியவர்கள் என்கிற நிலை உருவாகியது. இந்த விசாரணையின் இரண்டாவது ஆட்சேபணைப் பகுதியில் வாதாடிய திருச்செல்வம் குடியரசு யாப்பின்படி அமைக்கப்பட்ட இந்த நீதிமன்ற வழக்கு செல்லுப்படியற்றது என்று வாதாடினார். அவர் தனது வாதத்தினை இரு முனைகளூடாக முன்வைத்தார். முதலாவதாக சோல்பரி யாப்பு சிறு மாற்றங்களைச் செய்யவே அனுமதியளித்திருந்ததுடன், முற்றான யாப்பு மாற்றத்திற்கு ஆங்கீகாரம் வழங்கியிருக்கவில்லை என்று கூறினார். ஆனால், எதிர்த்து வழக்காடிய அரசு தரப்பு வழக்கறிஞர் சிவா பசுபதி, நடைமுறை அரசான ஐக்கிய முன்னணி மக்களிடமிருந்து யாப்பில் பெருமளவு மாற்றங்களைக் கொண்டுவரும் ஆணையினைப் பெற்றிருப்பதாக வாதாடினார். இதற்குப் பதிலளித்து வாதாடிய திருச்செல்வம், யாப்பினை மாற்றுவதென்பது கைதுசெய்யப்பட்ட தலைவர்களின் போராட்ட நோக்கங்களில் ஒன்றாக இருக்கவில்லை என்று கூறினார். திருச்செல்வம் முன்வைத்த இரண்டாவது வாதம் முக்கியமானது. அரசாங்கம் கூறுவதுபோல அரசியலமைப்பினை முற்றாக மாற்றுவதற்கு மக்களின் ஆணையினைப் பெற்றிருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அது தனியே சிங்கள மக்களின் ஆணை மட்டுமே அன்றி, தமிழ் மக்களின் ஆணை அல்ல என்று அவர் கூறினார். மேலும் தமிழ்மக்கள் தனிநாட்டிற்கான தேவையினை உணரத் தொடங்கிவிட்டதாகவும் 1956 ஆம் ஆண்டிலிருந்து சமஷ்ட்டி முறையிலான தீர்வொன்றிற்காக அவர்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வருவதாகவும் அவர் கூறினார். பொன்னம்பலம் முன்வைத்த முதலாவது வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் அவசரகாலச் சட்டம் வைகாசி 22 உடன் முடிவிற்கு வரவேண்டும் என்றும், கைதுசெய்யப்பட்ட அரசியல்த் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கூறியது. இதே தீர்மானத்தில், குடியரசு யாப்பின் நியாயத்தன்மைபற்றிய கேள்விகளை அது நிராகரித்திருந்தது. நீதியற்ற குடியரசு யாப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு அந்த யாப்பின் நியாயத்தன்மைபற்றி விசாரிக்கும் உரிமை இல்லை என்று அது கூறியது. யாப்பினைக் கேள்விகேட்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்று நழுவியதன் மூலம் தமிழர்களின் நலன்களைக் காக்கும் தேவையோ அல்லது அதிகாரமோ இலங்கையின் நீதித்துறைக்குக் கிடையாது என்பது அம்பலமாகியது. ஆனால், இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அரச தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்மூல இலங்கையின் சட்டத்துறை தொடர்பாக தமிழர்கள் தவறான கருத்தினைக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதனால், இத்தீர்ப்பு மாற்றப்படவேண்டும் என்று முறையிட்டிருந்தார். மேலும், அவசர காலச் சட்டத்தினைப் பயன்படுத்தி இலங்கையின் காவல்த்துறையும், இராணுவமும் வடக்கில் பல கிளர்ச்சியடக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருவதால், இத்தீர்ப்பின்மூலம் இச்செயற்பாடுகள் பாதிப்படையலாம் என்றும் வாதிட்டார். அதன்படி நீதியரசர் விக்டர் தென்னாக்கோன் தலைமையில் கூடிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு, உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து அரசுக்குச் சார்பாக தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு மாசி 1977 ஆம் ஆண்டுவரை நடைபெற்று வந்தது. இதனால் விடுதலைப் போராட்டம்பற்றிய எண்ணத்தினையே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் முற்றாக மறந்துவிட்டிருந்தனர். ஆனால், ஆயுத அமைப்புக்கள் போராட்டம் தொடர்பாக தொடர்ச்சியாகச் செயற்பட்ட வண்ணமே இருந்தனர். வட்டுக்கோட்டைத்தீர்மானம் தொடர்பாக அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர். போராட்டத்தை ஆரம்பிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். இதற்கான ஆயத்த வேலைகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். பணத்தினைச் சேர்த்தல், ஆயுதங்களைச் சேகரித்தல், போராளிகளைச் சேர்த்தல், பயிற்சியளித்தல் என்று பல முனைகளில் அவர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். 1976 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆயுத அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தேடுவதை பொலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். இளைஞர் அமைப்புக்களை அடியோடு அழித்துவிடுங்கள் என்று அமைச்சர் செல்லையா குமாரசூரியர் பொலீஸார் மீது அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். வெள்ளவத்தையில் அமைந்திருந்த தனது வீட்டில் குமாரசூரியர், பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பத்மனாதன் ஆகியோருடன் பல ரகசிய திட்டமிடும் கூட்டங்களை நடத்தியிருந்தார். தமது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதை ஆயுத அமைப்புக்களின் இளைஞர்கள் உணரத் தலைப்பட்டனர். பிரபாகரனும் தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றவேண்டியிருந்தது. ஆகவே, பொலீஸ் வலையமைப்பினை அழிக்கவேண்டிய தேவை இளைஞர்களுக்கு ஏற்பட்டது. பிரபாகரன் எப்படியாவது ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்துவிட வேண்டும் என்று விரும்பியிருந்தார். அமிர்தலிங்கத்தையும், நவரட்ணத்தையும் அவர் தொடர்ச்சியாக சந்தித்து போராட்டத்தினை முன்னெடுக்கும்படி கேட்டுவந்தாலும்கூட, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போராட்டம் பற்றி உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார். ஆகவே, தனது அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதப் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தி வைத்திருந்தார். இதன் முதற்கட்டமாக இருவிடயங்களைச் செய்ய அவர் தீர்மானித்தார். முதலாவது பொலீஸ் அதிகாரிகள் பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பதமனாதன் ஆகியோரால் பின்னப்பட்டிருக்கும் உளவாளிகளின் வலையினை அழிப்பது. இரண்டாவது, துரையப்பாவின் கொலையினை விசாரிக்கும் பொலீஸ் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இளைஞர் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வரும் அதிகாரிகளைக் கொல்வது. பொலீஸாருக்குத் தகவல் வழங்கும் உளவாளிகளையும், விசாரிக்கும் அதிகாரிகளையும் பற்றிய தகவல்களைச் சேகரிக்க தனது அமைப்பில் உளவுப் பிரிவொன்றை அவர் உருவாக்கினார். தனது போராளிகளுக்கான பயிற்சிகளின்போது உளவுத்தகவல்களைச் சேகரிக்கும் விதத்தினையும் அவர் கற்றுக்கொடுத்தார். புதிதாக இணையும் போராளிகள் தாக்குதல் அமைப்புக்களில் சேர்க்கப்படுமுன்னர் உளவுத்தலகவல்களைச் சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளிகளில் பிரபாகரன் முதலாவதாகக் கொல்லத் தீர்மானித்தவரின் பெயர் என். நடராஜா. இவர் உரும்பிராய் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை நடாத்தி வந்ததுடன், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தார். இவரை பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், போராளி சிவகுமாரன் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கியது இவரே. தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலவாது கொலை அதுதான் என்பது குறிப்பிடத் தக்கது. பிரபாகரன் தனது அமைப்பின் இரு உறுப்பினர்களை இந்த நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார். நடராஜாவின் வீட்டிற்குச் சென்ற அந்த உறுப்பினர்கள் இருவரும் அவரை வெளியே வரும்படி அழைத்து அங்கேயே சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கையே 1977 ஆம் ஆண்டில் தமிழ் மக்களை விடுதலை வேட்கை நோக்கி நகர்த்தியதுடன், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமிழ் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு தமிழீழத்தை அமைப்பதற்கான ஆணையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கினர். 1 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted January 21 கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 எப்படி எல்லாம் வாதடி வென்ற எமது சமூகம் ! மனதுக்கு பாரமாக உள்ளது. தொடருங்கள் ரஞ்சித்.நன்றி. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 24 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 அங்கீகரிக்கப்பட்ட மக்கள் ஆணை தந்தை செல்வாவின் இறுதிப் பிரகடணம் ஐந்து காரணங்களுக்காக "1977" ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வருடத்திலேயே இலங்கையின் இரு முக்கிய சிங்களக் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கையில் தமிழருக்கு இனப்பிரச்சினை என்று ஒன்று இருக்கிறது என்பதனை ஏற்றுக்கொண்டன. இந்த வருடத்திலேயே தந்தை செல்வா இலங்கைத் தமிழருக்கிருக்கும் ஒரே தெரிவு சுதந்திரமான தனிநாடு மட்டுமே என்று பிரகடணம் செய்திருந்தார். இந்த வருடத்திலேயே இலங்கைத் தமிழர்கள் தனிநாட்டிற்கான தமது விருப்பத்தினை ஏகமனதோடு தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். இந்த வருடத்திலேயே ஜெயவர்த்தனவின் அரசாங்கம் பொலீஸ் ராணுவ அமைப்புக்களையும், காடையர்களையும் வைத்துக்கொண்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கும் கைங்கரியத்தினை ஆரம்பித்திருந்தார். இந்த வருடத்திலேயே தமிழ் ஆயுத அமைப்புக்கள் அரச ராணுவத்திற்கெதிரான தமது ஆயுத நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தன. இது ஒரு தேர்தல் ஆண்டாகும். இந்த வருடத்திலேயே சுதந்திரக் கட்சி தனது புதிய அரசியலமைப்பின் மூலம் நடைமுறைக்கு முரணாக தனது 5 வருட ஆயுட்காலத்தை இன்னும் இரு வருடங்களால் நீட்டித்து, ஏழு வருடங்களை நிறைவு செய்திருந்த ஆண்டு. ஜெயவர்த்தனாவிற்கு சிங்கள மக்களிடையே அதிகரித்துவரும் செல்வாக்கினைக் கண்ணுற்று அச்சமடைந்த சிறிமாவோ, தமிழ் மற்றும் முஸ்லீம் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட முயற்சித்துக்கொண்டிருந்தார். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக பாராளுமன்றத்தில் இவ்வின மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, அம்மக்களின் குறைகளையும், தேவைகளையும் அறிந்துகொள்ள கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பினை இளைஞர்கள் மிகுந்த எரிச்சலுடனேயே பார்த்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மூலம் தமிழ் மக்களால் தமிழப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி ஒன்றுதான். அது தம்மை ஒருவிடுதலைப் போராட்ட அமைப்பாக உருவாக்கி தனிநாட்டிற்கான வரைபினை வரைவது மட்டும்தான், நீங்கள் சிறிமாவின் கூட்டத்தில் பங்கேற்க எந்தத் தேவையுமில்லை என்று அவர்கள் வாதாடினர். தமிழ் இளைஞர் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எந்தவொரு அரசியற் கட்சியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாதென்றும், தனிநாட்டினை உருவாக்கும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று கேட்டிருந்தது. தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளை இந்தப் பிரச்சினையினை தந்தை செல்வாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தது. சுமார் 79 வயது நிரம்பிய, அனுபவம் மிக்க சிவில் வழக்கறிஞரான தந்தை செல்வா தன்னைச் சந்திக்க வந்திருந்த தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்களிடம் பின்வருமாறு கூறினார். 2 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 24 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 "தயவுசெய்து ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறார்கள் என்றால் ஒருபோதும் அதனை நிராகரிக்க வேண்டாம். அக்கூட்டத்தில் பங்குபற்றுவதனால் மட்டுமே அவர்கள் கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமாகிவிடாது. ஒரு கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் கூற விரும்புவதைக் கூறுவதற்கான சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் எங்கள் கவலைகளை செவிமடுக்கத் தயாரில்லாததனால், நாம் எம் வழியில் செல்லப்போகிறோம் என்பதை இந்த அரசாங்கத்திற்கு நான் சொல்லப்போகிறேன். எமக்கான தனிநாடான தமிழ் ஈழத்தை அமைப்பதில் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் இடமில்லை என்பதையும் நான் அங்கு சொல்லப்போகிறேன்" என்று அவர் கூறினார். பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்க சிறிமாவோ தலைமையில் 1977 ஆம் ஆண்டு மாசி 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தந்தை செல்வா இதனையே கூறினார். தமிழருக்கான தனிநாடு என்கிற பேச்சினை கேட்கவே அரசு தயாரில்லை என்று கடும் தொணியில் அமைச்சர் பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்கா பேசியதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த தந்தை செல்வா அவர்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ் ஈழம் எனும் தமது இலட்சியத்தில் எதனையும் விட்டுக் கொடுக்க தாம் தயாரில்லை என்றும், ஆனால் இடைக்கால ஒழுங்காக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அவலங்களுக்கான தீர்வுகளை ஆராய ஒரு கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார். அன்று நடந்த கூட்டத்திலும், அதற்குப் பின்னர் பங்குனி 16 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திலும் பங்குபற்றிய சிறிமாவோ தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அவலங்களை செவிமடுக்கத் தயாராகவே இருந்தார். இவ்விரு இனங்களையும் பாதித்து வந்த முக்கியமான ஆறு விடயங்கள் அடையாளம் காணப்பட்டன. தமிழ் மொழியின் பாவனை பல்கலைக்கழக அனுமதி வேலையில்லாப்பிரச்சினை தமிழ் அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆதிகாரப் பரவலாக்கப்பட்ட நிர்வாகம் இந்தியத் தமிழர்கள் மலையகத் தோட்டங்களில் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் சிறிமாவோ இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தான் தர விரும்புவதாகக் கூறினார். தமிழ் மொழியினை தேவைக்கேற்றாற்போல் பாவிக்கும் அனுமதியை யாப்பினூடாக உருவாக்குவது, பல்கலைக்கழக அனுமதி முறையினை மாற்றுவது, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் வேலையில்லாப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பது, தமிழ் அரச ஊழியர்களின் பிரச்சினைக்கான தீர்வு, மலையகத் தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்று பல விடயங்களில் சாதகமான சிந்தனையினை அவர் கொண்டிருந்தவராகக் காணப்பட்டார். மேலும், அதிகாரப் பரவலாக்கம் என்பது தனது அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் கூறினார். தந்தை செல்வா கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி சாதகமான மனநிலையினைக் கொண்டிருந்தபோதும், ஏனையவர்கள் அதனை நம்பத் தயாராக இருக்கவில்லை. கூட்டத்தின் முடிவுபற்றி கருத்துத் தெரிவித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் செல்வா பின்வருமாறு கூறினார், 2 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 24 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 "இவ்வளவு காலமும் தமிழர்களுக்கென்று எந்தப் பிரச்சினையுமில்லை என்று சிங்களவர்கள் உலகத்தை ஏமாற்றி வந்திருக்கின்றனர். சிங்களவர்களை விடவும் தமிழர்களே அதிக சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் என்றும் கூறிவந்தனர். ஆனால், அவர்களால் இதனை இனிமேல் கூறமுடியாது. ஏனென்றால், அரசாங்கம் தமிழர்களுக்குத் தனியான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளதோடு, அவற்றினை அடையாளம் காணவும் அவர்களால் முடிந்திருக்கிறது. ஒரு தனிநாட்டிற்கான முயற்சியினை ஆரம்பிப்பதற்கு எமக்குப் பலமான அடித்தளம் ஒன்று கிடைத்திருக்கிறது" என்று கூறினார். ஆனால் தமிழ் இளைஞர்களோ இந்தப் பதிலினால் திருப்தியடையவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தனிநாட்டிற்கான முயற்சிகளை எடுக்காமல் தாமதித்துவருவதாக இளைஞர்கள் குற்றஞ்சாட்டினர். ஆகவே, அவர்களை பொறுமையினைக் கடைப்பிடிக்குமாறு கோரிய தந்தை செல்வா, வரப்போகின்ற தேர்தலினை ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகக் கணித்து, தனிநாட்டிற்கான ஆணையினை மக்களிடமிருந்து பெற்றுவிட வேண்டுமென்றும், பின்னர் படிப்படியாக தனிநாட்டிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்றும் கூறினார். தந்தை செல்வா தனது இரண்டாவது செயற்பாட்டினை திருகோணமலை இந்துக் கல்லூரியில் பங்குனி 1977 இல் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் முன்னெடுத்தார். அங்கு பேசிய தந்தை செல்வா அவர்கள், "1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் தொடர்பான மாற்றப்படமுடியாத தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு விட்டது. சிங்களத் தலைவர்களுக்கான எனது அறிவுரை என்னவென்றால், எங்களை எமது வழியில் செல்ல விடுங்கள் என்பதுதான். எமக்கிடையே கசப்புணர்வு ஏதுமின்றி, அமைதியாகப் பிரிந்துசெல்ல எம்மை அனுமதியுங்கள். சம அந்தஸ்த்துள்ள இரு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பின்மூலம் இந்த நாடுகளின் இருப்பினை நாம் மேம்படுத்திக்கொள்ளலாம். தமிழர்களுக்கு வேறு தெரிவுகள் எதுவும் கிடையாது. எமது இளைய சந்ததியினரிடம் கசப்புணர்வு வளர்ந்து வருகிறது. இந்தக் கசப்புணர்வினை மேலும் வளரவிட்டு, மோதல்களாக்கி, ஈற்றில் வேற்று நாட்டு தலையீட்டினை இந்த நாட்டில் உருவாக்குவதைக் காட்டிலும் சமாதான முறையில் எமக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்கும் வழிவகைகளை நாம் கையாள வேண்டும். இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை நாம் நம்புவதோடு, இந்தக் கடுமையான பயணத்தில் நாம் வென்றே தீருவோம் என்பதையும் இக்கணம் கூறிக்கொள்கிறேன்" என்று கூறினார். தமிழரின் பிரச்சினைக்கான அங்கீகாரம் 1977 ஆம் ஆண்டு, சித்திரை 29 ஆம் திகதி தந்தை செல்வா மரணமானார். அவருக்குப் பின்னர் அமிர்தலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராக வந்தபோதும் தந்தை செல்வாவினால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட தந்தை எனும் ஸ்த்தானத்தை அவரால் நிரப்ப முடியவில்லை. தந்தை செல்வா அவர்கள் தனக்கு முன்னால் வைக்கப்படும் சகல விவாதங்களையும் அமைதியாகக் கண்களை மூடிச் செவிசாய்த்துவிட்டு, அவற்றுக்கான தனது தீர்வுகளை அவர் முன்வைக்கும்போது எல்லோருமே கேள்வியின்றி அதனை ஏற்றுகொண்டார்கள். ஆனால், அமிர்தலிங்கம் வித்தியாசமானவர். பிரச்சினைகளைக் கிளப்பிவிடுவதும், மக்கள் முன் தன்னை பிரபலப்படுத்துவதும் அவருக்கு பிடித்திருந்தது. மக்கள் தந்தை செல்வா மீது வைத்திருந்த மரியாதையும், மக்கள் மீது செல்வா அவர்கள் கொண்டிருந்த கட்டுப்பாடும் அமிர்தலிங்கத்திற்கு எரிச்சலை ஊட்டியிருந்தது. அமிர்தலிங்கம் ஒரு மக்கள் தலைவன் என்பதை விடவும் ஒரு அரசியல்வாதியாகவே செயற்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைப்பொறுப்பினைப் பெற்றுக்கொண்டபின்னர் அமிர்தலிங்கத்தின் ஒரே கரிசணையாக இருந்தது தேர்தலினை எதிர்கொள்வது எவ்வாறு என்பதும், தேர்தலின் பின்னர் தான் செயற்படவேண்டிய முறை என்னவென்பது பற்றி மட்டும் தான். ஜெயவர்த்தன தேர்தலில் அமோக வெற்றியீட்டுவர் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே ஜெயவர்த்தனாவுடன் ஒரு ஒப்பந்தத்தினைச் செய்யலாம் என்று அமிர்தலிங்கம் விரும்பியிருந்தார். வெளிப்படையாகவும், ரகசியமாகவும் ஜெயவர்த்தனவின் விருப்பினை நாடிபிடித்தறிய அமிர்தலிங்கம் சில செயல்களைச் செய்தார். வெளிப்படையாக அவர் செய்த விடயம் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் ஊடாக பேச்சு ஒன்றுனை வழங்கியது. நாளிதழான வீரகேசரிக்குப் பேட்டியளித்த துரைரட்ணம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வினை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆலோசிக்கவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி விரும்புவதாகக் கூறியிருந்தார். இதே மாதிரியான கருத்தையே அமிர்தலிங்கம் ஊர்காவற்றுரையில் தான் பேசிய கூட்டத்திலும் தெரிவித்தார். ரகசியமான செயற்பாட்டினை தொண்டைமான் ஊடாக அவர் நடத்தினார். 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 24 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 றோயல் கல்லூரி, கொழும்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான தனது சந்திப்பு ரகசியாமக இருக்கவேண்டும் என்று ஜெயவர்த்தனா விரும்பினார். ஆகவே கொழும்பு றோயல் கல்லூரிக்கு முன்னால் அமைந்திருந்த தனது தொடர்மாடி வீட்டிற்கு தோசை விருந்தொன்றிற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் தொண்டைமான் அழைத்திருந்தார். ஜெயவர்த்தனா, எம் டி பண்டா மற்றும் எஸ்மொண்ட் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியையும், அமிர்தலிங்கம் , சிவசிதம்பரம் மற்றும் கதிரவேற்பிள்ளை ஆகியோர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட்டால் சிறிமாவின் அரசாங்கத்தினை வீழ்த்த முடியும் என்று தொண்டைமான் கூறவும் அங்கிருந்த அனைவரும் அதனை ஆமோதித்தனர். "ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தைக் காத்திட வேண்டும்" என்று ஜெயவர்த்தனா கூறினார். இதற்குப் பதிலளித்த கதிரவேற்பிள்ளை, "ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, அதனைக் காப்பாற்றும் உங்களின் முயற்சிக்கு நாம் ஆதரவாய் இருப்போம்" என்று கூறினார். இதனால் மகிழ்ந்த ஜெயவர்த்தனா, "நாங்கள் இருவரும் ஒரே ஆவர்த்தனத்தில் பேசுகிறோம்" என்று கூறினார். பின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களைப்பார்த்து, "நான் பதவியேற்றதும் எந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார் ஜே ஆர். அப்போது தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்னவென்பதை இரு பகுதியினரும் ஆராய்ந்தார்கள். அதன்படி பின்வரும் பிரச்சினைகள் அவர்களால் அடையாளம் காணப்பட்டன. தமிழ் மொழியின் பாவனை தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியிருப்புக்களை நிறுத்துவது வேலைவாய்ப்பு பல்கலைக்கழக அனுமதி இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தந்தை செல்வா கைக்கொண்ட அணுகுமுறைக்கும் அமிர்தலிங்கம் கைக்கொண்ட அணுகுமுறைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருந்தது. செல்வா அவர்கள் 1957 இல் பண்டாரநாயக்காவுடன் பேசும்போதும், 1977 இல் சிறிமாவுடன் பேசும்போதும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றைப்பற்றியே அவர் பேசினார். தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்காது ஆனால், தமிழ்மக்கள் எதிர்கொண்டு நிற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகளைப்பற்றி அவர் பேசினார். இதன்படி பண்டாரநாயக்காவுடன் சமஷ்ட்டி அலகு அடிப்படையிலான தீர்வு பற்றியும், சிறிமாவுடன் தனிநாட்டுக்கான அமைப்புப் பற்றியும் அவர் பேசியிருந்தார். ஆனால், அமிர்தலிங்கமோ தனிநாட்டிற்கான தேவை பற்றி ஒருபோதும் ஜெயவர்த்தனாவுடன் பேசியதில்லை, மாறாக பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றி மட்டுமே அவர் பேசினார். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தொண்டைமானின் இல்லத்தில் அன்று நடந்த சம்பாஷணைகளில் ஒரேயொரு முறை மட்டுமே தனிநாடு எனும் பதம் பாவிக்கப்பட்டது. அதுகூட ஜெயவர்த்தனாவினாலேயே கூறப்பட்டது. அனைவரும் இந்திய கோப்பிப் பாணத்தை அருந்திவிட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அமிர்தலிங்கத்தைப் பார்த்து பின்வருமாறு கூறினார் ஜெயவர்த்தனா, " நீங்கள் தனிநாட்டிற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எனக்குத் தேவையானதெல்லாம் நீங்கள் 15 ஆசனங்களை வெல்வது மட்டும் தான். அப்படி வென்றால் மட்டுமே என்னால் அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியும்" என்று கூறினார். தனிநாட்டிற்கான தேவையினை அந்தச் சந்திப்பில் முன்வைப்பதில் அமிர்தலிங்கம் தோல்விகண்டிருந்தாலும் கூட, ஐக்கிய தேசியக் கட்சி தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவைப்பதில் வெற்றி கண்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவை தமது 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழருக்குப் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டிருந்ததுடன், அவற்றுக்குத் தீர்வு காணவேண்டிய அவசியம் பற்றியும் கூறியிருந்தன. தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இல்லை, அவர்கள் சிங்களவரைக் காட்டிலும் அதிக சலுகைகளை அனுபவிக்கிறார்கள், தாம் அனுபவிக்கும் சலுகைகளைத் தொடர்ச்சியாக தக்கவைக்கவே கூக்குரலிட்டு வருகிறார்கள் என்று உலகின் முன் பிரச்சாரம் செய்துவந்த சிங்களவர்களின் கடும்போக்கில் இது பாரிய திருப்பம் என்றால் அது மிகையில்லை. 1 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 25 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 25 (edited) ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனியான பகுதியொன்றை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக வரைந்திருந்தது. தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்கிற தலைப்பில் இது உருவாக்கப்பட்டிருந்தது. "தமிழ் பேசும் மக்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்தப் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதனாலேயே தமிழ் பேசும் மக்கள் தனியான நாட்டினை உருவாக்கும் இளைஞர் அமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கையின் ஒருமைப்பாட்டினைக் காத்திடவும், பொருளாதார அபிவிருத்தியை அடையவும் இந்தப் பிரச்சினைகள் காலம் தாழ்த்தாது தீர்க்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கருதுகிறது. எமது ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்தப் பிரச்சினைகளையும் கவலைகளையும் தீர்க்கக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்ளும் என்று கூறிக்கொள்வதுடன், பிரச்சினைகள் இருக்கக் கூடிய விடயங்களாக பின்வருவனவற்றை இனங்கண்டுள்ளது", " கல்வி - தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் - தமிழ் மொழியின் பாவனை - அரச மற்றும் தனியார் துறைகளில் தமிழ் பேசும் மக்களுக்கான வேலைவாய்ப்பு" "நாம் சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதோடு இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க முயற்சி எடுப்போம்" என்றும் கூறியிருந்தது. சுதந்திரக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் "தேசிய ஒருமைப்பாடும் தேசியப் பிரச்சினைகள்" என்கிற தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறுகிறது, "இலங்கையில் இன, மொழி, சமூக, கலாசார வழிகளில் தேசிய மட்டத்தில் சிறுபான்மையினக் குழுக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எடுக்கும் வகையில் நாட்டில் இருக்கும் அனைத்து இனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஆலோசனைச் சபை ஒன்றினை எமது அரசு உருவாக்கும்" என்று கூறியிருந்தது. அதேபோல், இடதுசாரிக் கூட்டணியாகக் களமிறங்கிய கம்மூனிஸ்ட் கட்சி மற்றும் சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய சிறுபான்மையின மக்கள் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறியிருந்தது, "நாட்டின் ஒருமைப்பாட்டினைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, பொதுத் தேசிய மாவட்டங்களுக்கான வலையமைப்பின் மூலம் பிராந்தியங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலினை நாம் ஏற்படுத்துவோம். ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் மொழி தொடர்பான அதிகாரங்களை முழுமையாக அமுல்ப்படுத்தும் அதேவேளை, தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியினை உத்தியோக பூர்வ மொழியாகவும் நாம் ஆக்குவோம். ஏற்கனவே தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் நிர்வாக அந்தஸ்த்தினை, குடியரசு யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் உறுதிப்படுத்துவோம். அரசியலமைப்பில் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி எனும் அந்தஸ்த்தினை பாதிக்கா வண்ணம் தமிழ் மொழிக்கு யாப்பினூடாக தேசிய மொழி எனும் அந்தஸ்த்தினை நாம் வழங்குவோம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் இன, மத, குல ரீதியான பாகுபாட்டினை நாம் முற்றாக தடைசெய்வோம். இன மத ரீதியிலான கலகங்களைத் தூண்டுவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும்". வாக்கெடுப்பு ஆகவே அனைத்துச் சிங்களக் கட்சிகளும் தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கிறது, அவற்றினைத் தீர்க்க அரசியல் ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியபடியே 1977 ஆம் ஆண்டிற்கான தேர்தலை எதிர்கொண்டன. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தேசியக் கட்சிகள் இந்த அடிப்படையிலேயே தேர்தலில் பங்குகொண்டன. இதேவேளை இத்தேர்தலில் பங்குகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்களா அல்லது தனிநாட்டினை நோக்கி நகரப்போகிறார்களா என்பதனை உறுதிப்படுத்த இத்தேர்தலினை தமிழ் மக்கள் பாவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனி 1 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அதனைத் தொடர்ந்து பாரிய பேரணி ஒன்றையும் நடத்தியது. மக்களின் முன் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அமிர்தலிங்கம், இத்தேர்தல் தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறதென்றும், இத்தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் சுதந்திர மக்கள் கூட்டமாக வாழவிரும்புகிறார்களா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டிலிருந்து அரச ஆதரவிலான குண்டர்கள் நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியிருந்ததுடன், இதன் விளைவாக தமிழர்கள் உரிமைகளோ, பாதுகாப்போ அற்ற இரண்டாம்தர குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற வாதத்தினை முன்வைத்திருந்தார். "தமிழர்களும் முஸ்லீம்களும் சிங்களக் காடையர்களாலும், அரச ஆதரவுடனான சிங்கள அமைப்புக்களாலும், ராணுவ பொலீஸ் பிரிவுகளாலும் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படு தாக்கப்பட்டு வருகின்றனர். திட்டமிட்ட இத்தாக்குதல்கள் மூலம் தமிழர்களும் முஸ்லீம்களும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருவதுடன், அவர்களது சொத்துக்கள், வியாபார நிலையங்கள், வாழிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டும் வருகின்றன. உயிரிழப்புக்கள், உடல்ரீதியிலான துனுபுருத்தல்கள், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் என்று மிகவும் கொடூரமானஅட்டூழியங்களுக்கு அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்" என்று அந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் கூறியது. அத் தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் கூறுகையில், "தமிழ் மொழிக்கான உரிமைகளைக் கோரி 1961 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் அகிம்சை முறையிலான ஒத்துழையாமை போராட்டங்களை ராணுவப் பயங்கரவாதம் கொண்டு சிங்கள அரசுகள் மிகவும் மூர்க்கத்தனமாக அடக்கி வருகின்றன. 1976 ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 7 முஸ்லீம்களை சிங்களப் பொலீஸார் மிகவும் குரூரமான வகையில் கொன்றுதள்ளியிருந்தனர். இக்கொலைகள் பற்றி விசாரிக்க அரசாங்கம் இன்றுவரை மறுத்தே வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் கூறும் செய்தி என்னவென்றால், சிங்கள அரசாங்களின் கீழ் தமிழர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ சுதந்திரமாக வாழ முடியாதென்பதும், அவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுவார்கள் என்பதும் தான்". மேலும், இந்த விஞ்ஞாபனம் கேள்வியொன்றினையும் வாக்காளர்களை நோக்கி முன்வைத்திருந்தது, "சிங்கள அரசாலும், அதன் காடையர்களாலும் தொடர்ச்சியாக கொலைகளுக்கும், சொத்துச் சூறையாடல்களுக்கும், அழிவுகளுக்கும் முகங்கொடுத்துவரும் தமிழ் பேசும் மக்கள் முன்னால் உள்ள மாற்றுத் தேர்வுதான் என்ன? இருட்டினுள் தமது அடையாளத்தைத் தேடிக்கொண்டும், அழிவின் விளிம்பிலும் நின்றுகொண்டிருக்கும் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தனியான தமிழ்த் தேசத்தினைத் தவிர வேறு மார்க்கம் ஏதாவது இருக்கின்றதா? " என்று கேட்டிருந்தது. இக்கேள்விக்கான பதிலையும் அந்த விஞ்ஞாபனமே முன்வைத்திருந்தது. "இதற்கு நம்மிடம் இருக்கும் இறுதியானதும், துணிவானதுமான ஒரே முடிவு, எமது தந்தையர் ஆண்ட எமது தேசத்தை மீண்டும் நாமே ஆள்வதுதான். சிங்கள ஏகாதிபத்தியம் எமது தாயகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் மூலம் தமிழர்கள் தனிநாட்டு நோக்கிப் பயணிக்கவே முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதனை தமிழர் விடுதலைக் கூட்டணி சிங்கள அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறது. நீங்கள் எமக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் தேசம் சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ விரும்புகிறதென்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தும்". தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலின் பின்னர் எவ்வாறான நடவடிக்கையினை எடுக்கும் எனும் கேள்விக்கான பதிலையும் இத்தேர்தல் விஞ்ஞாபனம் கொடுத்திருந்தது. "இத்தேர்தலினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்படும் தமிழ்பேசும் உறுப்பினர்கள் இலங்கையின் தேசிய சபையில் உறுப்பினர்களாக இருக்கும் அதேவேளை, தேசியத் தமிழ் ஈழச் சபையிலும் உறுப்பினர்களாகத் தொழிற்படுவர். மேலும், இந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் ஈழத்திற்கான அரசியலமைப்பினை வரைவதுடன், அதனை நடைமுறைப்படுத்த அகிம்சை வழியிலும், தேவையேற்பட்டால் நேரடி நடவடிக்கைகள் மூலமாகவும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பர்". Edited January 25 by ரஞ்சித் 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 25 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 25 ஆனால், இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் உறுப்பினர்களுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் செயல்ப்படும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதை தமிழ் இளைஞர்கள் சந்தேகத்துடனேயே பார்த்தார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஊடாக மக்கள் முன்னால் தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வைத்த வாக்குறுதியான இறையாண்மையுள்ள சுதந்திரமான தமிழீழத்தினை உருவாக்கும் நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுவோம் என்பதற்கு முரணான வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் செயற்படுவதாக விஞ்ஞாபனம் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை இத்தேர்தலின் மூலம் மக்கள் ஆணையாக மாற்றவேண்டும் என்பதே தமது முதலாவது குறிக்கோளாக அன்று இருந்தமையினால், இதுபற்றி அப்போதைக்கு அதிகம் முரண்படுவதை அவர்கள் தவிர்த்தார்கள். இளைஞர்கள், குறிப்பாக ஆயுத அமைப்புக்களில் செயற்பட்டு வந்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றியடையவேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்தார்கள். சுய கெளரவத்துடனும், மரியாதையுடனும் , சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்றால் எமக்கு ஈழமே தீர்வு என்று கூறியதுடன், ஆகவே, நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் ஈழத்தை உருவாக்க உதவும் என்றும் மக்களிடம் பிரச்சாரம் செய்துவந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் தேர்தல் பரப்புரைகளுக்குத் தலைமை தாங்கிய அமிர்தலிங்கம், தமிழ் ஆயுத அமைப்புக்களின் உதவியினை முழுமையாக உபயோகித்திருந்தார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் இறுதிநாளான ஆடி 19 ஆம் திகதி நடைபெற்ற மிகப்பெரும் பொதுமக்கள் கூட்டத்தில் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு பிரகடணம் செய்தார், "எமது பிரச்சினை வெறுமனே ஒரு தேசியப் பிரச்சினையல்ல. அது இரு இனங்களுக்கிடையிலான பிணக்காகும். ஆகவே நாளை மறுநாள் நடக்கவிருக்கும் தேர்தல் சாதாரணமான தேர்தல் அல்ல, மாறாக அது ஒரு மக்கள் ஆணையாக இருக்கும். இத்தேர்தல் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டுமா அல்லது தனித்துச் சென்று தமக்கான தனிநாட்டினை உருவாக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்". வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக தனிநாட்டிற்காக வாக்களித்திருந்தார்கள். வடக்கில் தாம் போட்டியிட்ட அனைத்து 14 தொகுதிகளிலும் வெற்றியீட்டிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் கிழக்கில் மேலும் 3 தொகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர். பின்னர் நடைபெற்ற பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் மூலம் இன்னொரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆசனங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இந்தத் தேர்தல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், அமிர்தலிங்கத்திற்கும் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருந்தது. தந்தை செல்வாவின் தொகுதியான காங்கேசந்துறையில் போட்டியிட்டிருந்த அமிர்தலிங்கம் மிகப்பெரிய வெற்றியினை ஈட்டியிருந்தார். 1975 ஆம் ஆண்டின் இடைத்தேர்தலில் தந்தை செல்வா பெற்ற 25,927 வாக்குகளைக் காட்டிலும் 5228 வாக்குகளை அதிகமாகப் பெற்று 31,155 வாக்குகளுடன் அமிர்தலிங்கம் வெற்றிபெற்றிருந்தார். அமிர்தலிங்கத்தின் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை. யாழ்ப்பாண தேர்தல் அதிகாரி விஜேபால தேர்தல் முடிவினை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் தனது வெற்றிப் பேச்சை வழங்கிய அமிர்தலிங்கம்,"இத்தேர்தல் வெற்றியின்மூலம் தமிழ் மக்கள் இறையாண்மையுள்ள, சுதந்திர தனிநாடான தமிழ் ஈழத்தில் வாழவே விரும்புகிறார்கள் என்பது உறுதியாகிறது" என்று கூறினார். பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் தனது பேச்சினைத் தொடர்ந்த அமிர்தலிங்கம் இழந்த தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தம்மாலான அனைத்துத் தியாகங்களையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். அவர் மேலும் பேசுகையில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு அமோக ஆதரவினைத் தமிழர்கள் வழங்கியிருப்பதன் மூலம் தனிநாட்டிற்கான ஆணையினைத் தந்திருக்கிறார்கள் என்று கூறினார். "இனித் திரும்பிப் பார்க்கப்போவதில்லை. எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை வென்றெடுக்க முன்னோக்கி அணிவகுத்துச் செல்வோம்" என்று அவர் முழங்கினார். தேசிய மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. 165 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 138 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள சிறிமாவின் சுதந்திரக் கட்சி வெறும் 8 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது. இலங்கைத் தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தைப் பெற்றிருந்தது. இடதுசாரிக் கட்சிகள் முற்றான தோல்வியினைத் தழுவியிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 3,179,221, இது மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 50.9 வீதமாகும். சிறிமாவின் சுதந்திரக் கட்சி 1,855,331 வாக்குகளைப் பெற்றிருந்தது, இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 29.7 வீதமாகும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெற்ற வாக்குகள் 421,488, இது மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 6.4 வீதமாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 62,707 வாக்குகளைப் பெற்றுகொண்டது, இது மொத்த வாக்குகளில் 1 வீதமாகும். ஜெயவர்த்தனே அரசாங்கத்தை அமைத்துக்கொண்டார். ஆனால், மக்கள் தனக்கு வழங்கிய ஆணையினை முற்றாக மறந்துவிட்ட அமிர்தலிங்கம், தொடர்ந்தும் சிங்கள மக்களுடன் சேர்ந்து செயற்பட முடிவெடுத்தார். தேசியப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பினை, இலங்கை அரசியலமைப்பின் மீது சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம், ஜனநாயகம் செழிப்புடன் செயற்பட தான் முழுமையாக ஒத்துழைக்கப்போவதாக வாக்குறுதியளித்தார் ! 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 26 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 26 மிதவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஆணை எதிர்க்கட்சித் தலைவர் ரொனி டி மெல், அமிர்தலிங்கம், ஜெயவர்த்தன, ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் - பாராளுமன்ற விருந்துபசாரத்தின்போது 1975 ஆம் ஆண்டு, மாசி மாதம் 6 ஆம் திகதி நடத்தப்பட்ட காங்கேசந்துறை இடைத்தேர்தல்க் காலத்திலிருந்தே வடக்குக் கிழக்கு மக்கள் தமது சொந்தத் தாயகத்தில் தம்மைத் தாமே ஆளும் வகையில் தனியான நாடொன்று தமக்குத் தேவை என்பதைத் தொடர்ச்சியாகவகே பிரகடணம் செய்து வந்திருக்கிறார்கள். தந்தை செல்வா தனது தேர்தல் வெற்றிப் பேச்சில் கூறியதுபோல, தமிழர்கள் தமது விருப்பை மிகத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டார்கள். தமது விருப்பத்தை 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 14 ஆம் திகதியன்று நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மீண்டும் தெளிவுபடுத்திய தமிழ் மக்கள், 1977 ஆம் ஆன்டுப் பொதுத் தேர்தலில் தமது விருப்பினை மக்கள் ஆணையின்மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்கள். வட்டுக்கோட்டைப் பிரகடணத்தின் பின்னரான காலப்பகுதியில் பிரதமர் சிறிமாவைச் சந்தித்த தந்தை செல்வா அவர்கள் தனியான நாடு எனும் தமது நிலையிலிருந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எந்த விட்டுக்கொடுப்பினையும் செய்யாது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அதேபோன்றே அமிர்தலிங்கமும் தனது தேர்தல் வெற்றிப் பேச்சில் தந்தை செல்வாவின் நிலைப்பாட்டினை "எமது இலட்சியமான ஈழத்தை அடையும் வரை முன்னோக்கிச்ச் செல்வோம்" என்று கூறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். தனிநாட்டிற்கான போராட்டத்தினை ஆரம்பிக்கப்போவதாக தனது தேர்தல் வெற்றிப் பேச்சில் சூளுரைத்த அமிர்தலிங்கமும், ஏனைய தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்களும் சரியாக ஏழு நாட்களின் பின்னர் தாம் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடிவெடுத்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியே இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக இருந்தமையினால் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பு அவர்களின் மடியில் தானாகவே வந்து வீழ்ந்தது. அப்பதவியினை இழக்க அக்கட்சியினர் சிறிதும் விரும்பவில்லை. அந்தப் பதவிக்காக தமது இலட்சியமான தனிநாடு நோக்கி முன்னெறுவேம் என்று மக்களுக்குக் கொடுத்த சத்தியத்தைப் பிற்போட அவர்கள் முடிவெடுத்தனர். தேர்தலின் மொத்தப் பெறுபேறுகளும் வெளிவந்த நாளான ஆடி 23 ஆம் திகதியன்று எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதென்று கட்சி உத்தியோகபூர்வமாக முடிவெடுத்தது. யாழ்ப்பாணத்தின் கட்சி அலுவலகத்தில் கூடிய அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், கதிரவேற்பிள்ளை, யோகேஸ்வரன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் அடங்கிய குழு இந்த முடிவினை எடுத்திருந்தது. இக்கூட்டத்தில் பேசிய கதிரவேற்பிள்ளை பின்வருமாறு கூறினார், "இது எமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பொன்னான சந்தர்ப்பம். இதனை நாம் தவறவிடக் கூடாது" என்று மற்றையவர்களுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். அமிர்தலிங்கமோ சிறிது தயங்கியவராகக் காணப்பட்டார். தமது இந்த முடிவிற்கு இளைஞர்களின் எதிர்வினை எப்படியாக இருக்குமோ என்று பயந்தார். "நாம் இளைஞர்களின் உணர்வுகுறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார். வழக்கமாக இளைஞர்களை அழைக்கும் "பையன்கள்" எனும் சொல்லிற்குப் பதிலாக "பெடியன்கள்" எனும் சொல்லை அவர் அங்கு பாவித்தார். அதற்குப் பதிலளித்த சிவசிதம்பரம், "அவர்கள் சில நாட்களுக்குக் கத்துவார்கள், அதன்பின்னர் எல்லாம் அடங்கிவிடும்" என்று ஏளனமாகக் கூறினார். ஆடி 30 அன்று, வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை ஏற்றுக்கொள்வதான தீர்மானம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக அமிர்தலிங்கமும், உப தலைவராக சிவசிதம்பரமும் தெரிவுசெய்யப்பட்டார்கள். தலைவர்கள் தேர்வின் பின்னர், எந்தவித கேள்விகளுமின்றி, கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு எதிர்க்கட்சித் தலைவர்ப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்று முடிவாகியது. இதனை அறிந்தபோது இளைஞர்கள் கொதிப்படைந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் அணி இம்முடிவுக்கெதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன் மக்கள் ஆணைக்கு எதிராகக் கட்சித் தலமைப்பீடம் செயற்படுவதாகவும் விமர்சித்தனர். மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் இந்தப் பாராளுமன்றக் குழு தனி ஈழத்திற்கான பாராளுமன்றக் குழுவினை உருவாக்கி, தமிழ் ஈழத்திற்கான அரசியல் யாப்பினை வரைந்து, தனிநாடு நோக்கிய பயணத்தினை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. இக்கண்டனங்களுக்கு அறிக்கை ஒன்றின்மூலம் பதிலளித்த கதிரவேற்பிள்ளை பின்வருமாறு கூறியிருந்தார், "எமது பாராளுமன்றக் குழு பாராளுமன்றத்தினை தனிநாட்டிற்கான பிரச்சாரத்தைச் செய்யும் களமாகப் பாவிக்கும்". ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு செவ்வியொன்றினை வழங்கிய அமிர்தலிங்கம் தமது முடிவிற்கான மேலும் இரு காரணங்களை முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவியின் வாயிலாக தமிழர்கள் தமது செய்தியினை முழு உலகிற்கும் தெளிவாகச் சொல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அத்துடன் சர்வதேச அளவில் முக்கிய அமைப்புக்களுடனும், தனிநபர்களுடனும் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பத்தினையும் இப்பதவி வழங்கியிருக்கிறது என்றும் அவர் தமது முடிவினை நியாயப்படுத்தினார். ஆவணி 3 ஆம் அதிகதி, தொண்டைமானின் வாசஸ்த்தலத்தில் மீண்டும் கூடிய பாராளுமன்றக் குழு, மறுநாள் நடைபெறவிருந்த பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பநாள் நிகழ்வுகளில் பங்கேற்பது என்று எடுத்த முடிவு இளைஞர்களுக்கு மேலும் கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. புதிதாகப் பதவியேற்கும் பிரதமர் ஜெயவர்த்தனேயுடன் சிநேகபூர்வமாக பணிபுரிந்து, அவருக்குத் தேவையான கால அவகாசத்தினை வழங்குவதற்காக தனிநாட்டிற்கான கோரிக்கையின அப்போதைக்கு தள்ளிவைக்கலாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எடுத்த தீர்மானமே இளைஞர்களுக்கு அதிக சினத்தினை ஏற்படுத்தியிருந்தது. ஆவணி 4 ஆம் திகதி சபாநாயகரைத் தெரிவுசெய்யும் வாக்கெடுப்பிற்காக பாராளுமன்றம் கூடியவேளை, அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரது கட்சியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பினை முற்றாக ஏற்றுக்கொள்வதாக அதன் மீது சத்தியம் செய்து தமது பாராளுமன்றப் பொறுப்புக்களை அன்று காலை ஏற்றுக்கொண்டதோடு, சபாநாயகருக்கான வாக்கெடுப்பிலும் கலந்துகொண்டனர். பின்னர் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்ட பிரேமதாசா, ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் பெயரை சபாநாயகர் பதவிக்குப் பிரேரிக்க, எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் அதனை வழிமொழிந்தார். பின்னர் பிரேமதாசாவும், அமிர்தலிங்கமும் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட சபாநாயகரை அழைத்துச் சென்று சபாநாயகர் ஆசனத்தில் அமரவைத்தனர். சபாநாயகரிடம் அப்போது பேசிய அமிர்தலிங்கம், தானும், தனது கட்சியும் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒழுங்காக நடந்தேறுவதற்கு சபாநாயகருக்குத் தம்மாலான முழு ஆதரவினையும் வழங்குவதாகவும், அவ்ருடன் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார். 1957 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிராக தமது கண்டனத்தைப் பதிவு செய்யும் முகமாக அதுவரை பாராளுமன்ற திறப்பு நிகழ்வில் பங்கேற்பதனைப் புறக்கணித்து வந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று நடைபெற்ற பாராளுமன்ற உத்தியோகபூர்வ திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். அமிர்தலிங்கத்தின் ஒத்துழைப்பிற்கு நன்றியுடன் பதிலளித்த ஜெயவர்த்தனா தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் எனும் பதத்தினை நினைவுகூர்ந்தார். தமது செயற்பாடுகளால் இளைஞர்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதனை நன்றாகப் புரிந்திருந்த அமிர்தலிங்கம், ஆவணி 7 ஆம் திகதி அவர்களின் சீற்றத்தினைத் தணிக்கும் முகமாக அறிக்கயொன்றினை வெளியிட்டார். அமிர்தலிங்கத்தின் ஒத்துழைப்பிற்கு பிரதியுபகாரமாக ஜெயவர்த்தனா எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவிக்கு தகுந்த கெளரவத்தினை வழங்கினார். அமிர்தலிங்கத்திற்கு உத்தியோகபூர்வ வாசஸ்த்தலம், பொலீஸ் பாதுகாப்பு, உத்தியோகபூர்வ மோட்டார் வண்டி, காரியதிரிசி எனபன ஜெயவர்த்தனவினால் வழங்கப்பட்டன. அரசியல் தந்திரத்தில் மிகவும் சூட்சுமமானவராகத் திகழ்ந்த ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்திற்கும், அவரது கட்சிக்கும் தொடர்ச்சியான சலுகைகளை வழங்குவதன் மூலம் தனிநாட்டிற்கான அவர்களது இலட்சியத்தை அவர்களாகவே கைவிட்டுவிட திட்டமிட்டுச் செயற்பட்டு வந்தார். அமிர்தலிங்கம் தொடர்ந்தும் சிங்களவர்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் ஜெயவர்த்தனா எடுத்தார். தமது கண்முன்னே நடந்துகொண்டிருக்கும் ஏமாற்றுவேலையினை இளைஞர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டனர். அதுவரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது இருந்த அதிருப்தி மொத்தமாக அமிர்தலிங்கம் மீது திரும்பியது. இளைஞர்களால் யாழ்ப்பாணதில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன, "கேட்டது தமிழ் ஈழம், கிடைத்தது எதிர்க்கட்சித் தலைவர் பதவி" என்று வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் யாழ் நகரில் பரவலாக ஒட்டப்பட்டன. மேலும், தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு அக்கட்சியினர் துரோகமிழைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்கிற துண்டுப்பிரசுரங்களையும் இளைஞர்கள் விநியோகித்தனர். ஒரு துண்டுப்பிரசுரம் பின்வருமாறு கேள்விகேட்டிருந்தது, "தமிழ் ஈழத்தின் தேசிய பாராளுமன்றத்திற்கு என்ன நடந்தது?" என்றும் "மக்கள் உங்களுக்குத் தந்த ஆணையினை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள்" என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைமையினையும் கேட்டிருந்தது. 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 26 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 26 பொலீஸாரின் வன்முறை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பாராளுமன்றக் குழுவிற்கெதிராக இளைஞர்கள் தமது செயற்பாடுகளை அதிகரிக்கத் தொடங்க இலங்கை வரலாற்றில் முதலாவது பொலீஸ் அட்டூழியத்தினை யாழ்ப்பாணக் குடாநாடு கண்டது. அது ஒரு சிறிய சம்பவமாகவே ஆரம்பித்தது. பொலீஸார் பேரூந்துகளில் பயணம் செய்யும்போதோ அல்லது களியாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லும்போதோ அனுமதிச் சீட்டினை வாங்குவதில்லை என்பது பொதுவான நடைமுறையாகவே இருந்துவந்தது. அதன்படி, ஆவணி 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற கார்னிவல் நிகழ்வுக்கு சிவில் உடையில் பொலீஸாரின் குழுவொன்று சென்றிருந்தது. புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் கண்பார்வையற்றவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் யாழ்ப்பாண புற்றுநோய் வைத்தியசாலைக்கான உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதிசேகரிப்பு நிகழ்வே அன்று புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வாயிற்கடமையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சிவிலுடையில் வந்த பொலிஸார் நுழைவுச் சீட்டினை வாங்கினால் ஒழிய உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். சில நேர வாக்குவாதங்களுக்குப் பின்னர் பொலீஸார் நுழைவுச் சீட்டுக்களை வாங்கினர். உள்ளே நுழைந்து மதுபானங்களை அருந்திவிட்டு, வெளியே போகும் போது வாயிலில் கடமையிலிருந்தவர்கள் மீது கடுமையான தாக்குதலினை அவர்கள் மேற்கொண்டனர். அந்த களியாட்ட நிகழ்வினை ஒழுங்குசெய்தவர்களில் ஒருவரான வைத்தியர் பிலிப்ஸ் அவர்கள் பொலீஸ் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு பொலீஸ் கொன்ஸ்டபிள்களை களியாட்ட நிகழ்வுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், மறுநாள் ஆவணி 13 அன்று யாழ்ப்பாணத்தின் ஏனைய பொலீஸ்நிலையங்களிலிருந்து இந்த நிகழ்வுக்குச் சென்ற பல பொலீஸார் மதுபோதையில் பொதுமக்களுடன் கடுமையான கைகலப்பில் ஈடுபட்டனர். சீருடையில் அங்கு சென்றிராத பொலீஸார் மீது திருப்பித் தாக்கிய பொதுமக்கள் அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டனர். இதற்குப் பதிலடியாக வன்முறையில் இறங்கிய பொலீஸார் மறுநாள், ஆவணி 14 ஆம் திகதி தமது பொலீஸ் நிலையங்களிலிருந்து வெளியே வந்து வீதிகளில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். சைக்கிள்களில் சென்றவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தமது சைக்கிள்களைக் காவிச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். புத்தூர்ப் பகுதியில் சைக்கிள்களில் சென்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்களை வழிமறித்து பொலீஸார் தாக்கத் தொடங்கவே ஒரு இளைஞர் தான் மறைத்துவைத்திருந்த கைத்துப்பாக்கியினால் பொலிஸார் மீது சுடவும் ஒரு பொலீஸ்காரருக்குத் தொடையில் காயம் பட்டது. மறுநாளான ஆவணி 15 அன்று யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட பொலீஸ் குழுவொன்று தம் கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கியது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர். தமது துப்பாக்கிச் சூட்டினை நியாயப்படுத்திய பொலிஸார், ஆயுதம் தரித்த இளைஞர்களிடமிருந்து ஆயுதங்களைத் தாம் களைய எத்தனித்தபோது அவர்கள் எதிர்த்தமையினாலேயே தாம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவேண்டி ஏற்பட்டதாக அது கூறியது. யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் வி. யோகேஸ்வரன் இத்தாக்குதல் தொடர்பாக கொழும்பு பொலீஸ் தலைமைச் செயகலத்தில் முறையிட்டபோதும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை பொலீஸார் நிறுத்தவில்லை. ஆவணி 16 இலும் பொலீஸாரின் தாக்குதல்கள் தொடர்ந்தன. டிரக் வண்டிகளில் யாழ்ப்பாணவீதிகளில் வலம் வந்த பொலிஸார் கடைகளுக்குத் தீவைத்துக்கொண்டே சென்றனர். ஆவணி 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட பொலீஸ் அணி யாழ்ப்பாணம் சந்தைக்கும் அருகிலிருந்த வியாபார நிலையங்களுக்கும் தீவைத்துக்கொண்டு சென்றது. சந்தையின் ஒருபகுதி முற்றாக எரிந்துபோக பல கடைகளும் முற்றாக எரிந்து நாசமாகின. வீதியில் சென்ற தமிழர்கள் மீது பொலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்றும் இரு தமிழர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவங்கள் ஆரம்பித்த வேளை அமிர்தலிங்கம் கொழும்பிலேயே தங்கியிருந்தார். ஆனால், பொலீஸாரின் வன்முறைகள் தொடர்ந்ததையடுத்து ஆவணி 17 அன்று இரவு யாழ்ப்பாணம் வந்த அவர், மறுநாள் காலை, எரிந்துபோன யாழ்ப்பாணச் சந்தைப்பகுதியினைச் சென்று பார்வையிட்டார். சந்தைப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் அத்தியட்சகரைக் கண்ட அமிர்தலிங்கம் அவர் அருகில் சென்று "ஏன் அப்பாவிகளைக் கொல்கிறீர்கள்?" என்று கோபத்துடன் கேட்கவும், அந்த அதிகாரி அமிர்தலிங்கத்தை தகாத வார்த்தைகளால் வையத் தொடங்கினர். அந்த அதிகாரியின் பின்னால் நின்றிருந்த இன்னொரு பொலீஸ் கொன்ஸ்டபிள், தான் வைத்திருந்த துப்பாக்கியின் பிடியால் அமிர்தலிங்கத்தின்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினான். தமிழ் மக்கள் மீது பொலீஸார் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துவைத்த வன்முறைகள் தெற்கிற்கும் பரவத் தொடங்கின. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த சிங்கள மாணவர்கள் கலவரத்தைத் தூண்டிவிட, பொலீஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். 1964 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் - சிங்கள நல்லுறவை வளர்க்கவென்று வருடா வருடம் ஒருதொகை சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். ஆனால், தமது வாழிடங்களிலிருந்தான தொலைவு, புதிய சமூகம், மொழி, மதம், பழக்கமில்லா கலாசாரம் என்பவற்றிற்காக சிங்கள மாணவர்கள் தாம் யாழ் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவதை விரும்பியிருக்கவில்லை. ஆகவே தமது வீடுகளுக்கு அண்மையாக கொழும்பு, பேராதனை, வித்யோதயா மற்றும் வித்யாலங்கார ஆகிய பகுதிகளில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றம் பெற்றுச் செல்லவே அவர்கள் முயன்று வந்தனர். அதைவிடவும் 1977 ஆம் ஆண்டு இன்னொரு தனியான சம்பவம் ஒன்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்திருந்தது. தமிழ் மாணவி ஒருவரை சில சிங்கள மாணவர்கள் சீண்டியதையடுத்து, அம்மாணவியின் உறவினர்கள் அந்தச் சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதுவும் ஒரு காரணம் சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினை வெறுத்ததற்கு. ஆகவே, நடந்துவந்த வன்முறைகளைப் பாவித்து தாம் வீடுசெல்ல முடிவெடுத்தனர் சிங்கள மாணவர்கள். யாழ்ப்பாணத்தில் நிலவிவந்த வன்முறைச் சூழலினால் தமது உயிருக்கு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளதால், தாம் உடனடியாக வீடு செல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டனர். ஆகவே, இந்த சிங்கள மாணவர்கள் விசேட பேரூந்துகளில், பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் ஆவணி 17 ஆம் திகதி அநுராதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அநுராதபுரத்தினை இப்பேரூந்துகள் அடைந்தவுடன், அம்மாணவர்களின் தலைவனான ஒருவன் பேரூந்தின் கூரையின் மீது ஏறி தன் முன்னே திரண்டிருந்த சிங்கள மக்கள் கூட்டத்தை நோக்கி "யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் சிங்களவர்களைத் தாக்குகிறார்கள்" என்று கூக்குரலிடத் தொடங்கினான். மாணவனின் பேச்சைக் கேட்டு வெறியேறிய அந்தச் சிங்களக் கூட்டம் உடனடியாக வன்முறைகளில் இறங்கியது. அநுராதபுரத்தில் வாழ்ந்துவந்த பல தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, பல வியாபார நிலையங்கள் சூறையாடப்பட்டபின் தீக்கிரையாக்கப்பட்டன. தெருக்களிலும் வீடுகளிலும் தமிழர்கள் தேடித்தேடித் தாக்கப்பட்டார்கள். தமிழர் மீதான தாக்குதல்களை பொலீஸார் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். உயிரச்சம் காரணமாக பொலீஸ் நிலையங்களை நாடி ஓடிவந்த பல தமிழர்களை பொலீஸார் விரட்டியடித்தனர். பொலீஸாரே தமிழர்களை எதிரிகளாக நடத்தத் தொடங்கினர். ஆவணி 18 ஆம் அன்று தமிழருக்கெதிரான வன்முறைகள் குருநாகல, மாத்தளை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும், ஆவணி 19 ஆம் திகதி கண்டி மற்றும் ஏனைய மலையகப் பகுதிகளிலும் கட்டவிழ்த்து விடப்பட்டன. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 27 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 27 கொழும்பு திரும்பிய அமிர் ஆவணி 19 அன்று கொழும்பு திரும்பிய அமிர் பாராளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையில் பேசும்போது யாழ்ப்பாணத்தில் பொலீஸார் நடத்திவரும் அராஜக வன்முறைகளைப் பற்றி முறையிட்டார். இந்த விவாதத்தில் பேசிய அமிர், "என்னை நோக்கிச் சுடுவதற்காக பொலீஸார் துப்பாக்கியை நீட்டினர். இன்று நான் உயிருடன் இருப்பதே எனது அதிஷ்ட்டம் தான். அவர்கள் எல்லோருமே பொலீஸ் சீருடையில்த்தான் இருந்தார்கள், தம்மை அடையாளம் காண்பதைத் தவிர்த்துக்கொள்ள அவர்களது இலக்கங்கங்கள் சீருடையிலிருந்து அகற்றப்பட்டிருந்தன. எதற்காக அப்பாவிகளைக் கொல்கிறீர்கள் என்று நான் அவர்களை வினவியபோது என்னை தூஷண வார்த்தைகளால் வைததோடு, துப்பாக்கியின் பின்புறத்தாலும் அடித்தார்கள்" என்று கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சில ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், "எங்கே, அந்த தூஷண வார்த்தைகளைச் சொல்லுங்கள் கேட்கலாம்" என்று ஏளமாக அமிரைப் பார்த்துக் கேட்டார்கள். "இல்லை சபாநாயகர் அவர்களே, இந்த கெளரவமான அவையில் அந்த அருவருக்கத்தக்க, இனவாதத் தூஷணச் சொற்களைக் கூறப்போவதில்லை. பாராளுமன்றத்தில் பேசப்பட முடியாத கீழ்த்தரமான சொற்கள் அவை" என்று அமிர் கூறினார். யாழ்ப்பாணத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றினை அமிர் பாராளுமன்றத்தில் வழங்கியதோடு, இவற்றுக்கெல்லாம் காரணம் பொலீஸாரே என்பதையும் உறுதிப்படுத்தினார். பின்னர் பிரதமரைச் சுட்டிக்காட்டி, "இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடும் பொலீஸாரைக் கொண்டு ஒரு நாட்டினை எப்படி நடத்துவீர்கள்?" என்று அவர் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயவர்த்தனா, "மிக அண்மைக்கலம் வரை போலீஸார் தமிழர்களிடமிருந்து தாக்குதலை எதிர்கொண்டே வந்திருக்கிறார்கள், ஆகவேதான் திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார். ஒத்திவைப்புப் பிரேரணையில் இறுதியாகப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்தின் குற்றச்சாட்டுக்களைக் கடுமையாக மறுத்ததுடன், சினமேலீட்டுடன் பதிலளித்தார். புத்தூர் சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட ஜே ஆர், "என்ன துணிவிருந்தால் உங்கள் பையன்கள் எமது பொலீஸாரை நோக்கித் துப்பாக்கியை நீட்டுவார்கள்?" என்று கேட்டார். இலங்கையில் பிரிவினையினை உருவாக்க அமிர்தலிங்கம் முயல்கிறார் என்று ஜே ஆர் கூறியபோது பாராளுமன்றமே அதிரும்வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆரவாரமிட்டனர். "இலங்கையில் தனியான நாடொன்றினை உருவாக்கப்போகிறார்கள், திருகோணமலையினையே அதற்குத் தலைநகராக்கப் போகிறார்கள் என்று கூறும்போது மக்கள் அமைதியிழக்கிறார்கள். திருக்கோணமலையினைக் கைப்பற்றினால் ஆசியாவுக்கான வாயில் திறக்குமென்று நெப்போலியன் கூறியதாகவும், அந்தத் திருகோணமலையினையே தமிழர்கள் தலைநகராக்கப்பார்க்கிறார்கள் என்றும் பத்திரிக்கைகளில் செய்திகள் வரும்போது சிங்களவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. அடுத்ததாக, நெப்போலியன் அப்படியொன்றைச் சொன்னார் என்பதைக்கூட நாம் நம்பவில்லை". "நீங்கள் வன்முறைகளில் ஈடுபடுவதில்லை என்று கூறிக்கொண்டே வன்முறைகளில் ஈடுபடும்போது நாட்டிலுள்ள ஏனைய மக்கள் இதற்கு எந்தவிதத்தில் பதிலளிப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? உங்களுக்குச் சண்டைதான் வேண்டுமென்றால், வாருங்கள், தாராளமாகச் சண்டை செய்துபார்க்கலாம். உங்களுக்குச் சமாதானம் வேண்டுமென்றால், சமாதானம் செய்யலாம். தமிழர்களுக்கு நான் கூறவிரும்புவது இதைத்தான், சிங்கள மக்களும் இதைத்தான் சொல்கிறார்கள்" என்று ஜே ஆர் ஆவேசமாகக் கூறினார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயரவும், அவர்களின் சொத்துக்கள் நாசமக்கப்படவும் காரணமாக இருந்த பொலீஸாரின் வன்முறைகள் பற்றி ஜே ஆர் சிறிதும் வருத்தமடையவில்லை. வேண்டுமென்றால், ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்கலாம், அதைவிட வேறு எதுவும் என்னால் செய்யமுடியாது என்று அவர் கையை விரித்து விட்டார். பாராளுமன்றத்தில் ஜே ஆரின் ஆக்ரோஷமான பேச்சினையடுத்து கொழும்பில் வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்தன. கொழும்பு, பாணதுறை, களுத்துறை ஆகிய பகுதிகளில் ஆவணி 19 அன்றிரவு வன்முறைகள் ஆரம்பித்திருந்தன. வீதிகளின் முக்கிய சந்திகளில் கூடிய சிங்கள மக்கள் கூட்டம் பொலீஸார் பார்த்திருக்க தமிழர்களின் வீடுகள் கடைகள் என்று ஒவ்வொன்றாகத் தேடித் தேடித் தாக்கத் தொடங்கியது. 1958 ஆம் ஆண்டுக் கலவரத்தைப் போலல்லாமல், இம்முறை தமிழர்களின் வீடுகளுக்குச் சென்ற சிங்களவர்கள் அங்கிருந்தவர்களை அடித்துத் துன்புறுத்தியதுடன், பலரைக் கொன்றதோடு, அவர்களின் வீடுகளைக் கொள்ளையடித்தபின் எரியுமூட்டினர். இந்தத் தாக்குதல்களின்போது சிங்களவர்கள் பல சைவக் கோவில்களையும் எரியூட்டியபடியே சென்றனர். கலகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மறுநாளான ஆவணி 20 ஆம் திகதி மாலை 5 மணிக்கு அரசாங்கம் 35 மணிநேர ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்ததுடன் இராணுவத்தினரையும், கடற்படையினரையும் நகரங்களில் நிறுத்தியது. ஆவணி 22 ஆம் திகதியன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படத் தொடங்கியதுடன் 30 ஆம் திகதி முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆவணி 29 அன்று வெளியான டெயிலி நியூஸ் பத்திரிக்கை இத்தாக்குதல்களில் 112 தமிழர்களே கொல்லப்பட்டதாகக் கூறியதோடு சுமார் 25,000 தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், சுயாதீன தரப்புக்கள், வைத்தியசாலைகளின் விபரங்களின்படி கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தது 300 ஆவது இருக்கும் என்று கணிக்கப்பட்டதுடன் 30,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாகவும், 300 சைவக் கோவில்கள் எரியூட்டப்பட்டதாகவும் தெரியவந்தது. தெற்கின் பல இடங்களிலும் தமிழ் அகதி முகாம்களைத் திறந்த அரசாங்கம் அங்கிருந்த தமிழர்களை படிப்படியாக கப்பல்கள் மூலம் வடக்குக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தது. தமிழர்கள் கொல்லப்பட்டும் அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டும் உள்ளதை அறிந்தபோது தமிழ் மக்களும் இளைஞர்களும் கொதித்துப்போனார்கள். மேலும் வடக்கில் வாழ்ந்துவந்த சிங்களவர்கள் மீது பதில்த்தாக்குதல்கள் நடைபெறலாம் என்கிற வதந்தியும் அப்போது உலாவி வந்தது. ஆனால், வடக்கில் வாழ்ந்துவந்த எந்தச் சிங்களவர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படாத போதிலும், பல வருடங்களாக வடக்கில் வாழ்ந்துவந்த சிங்களவர்கள் தமக்கு அருகிலிருந்து பொலீஸ் நிலையங்களில் அடைக்கலம் புகுந்தார்கள். சிங்கள மக்களுக்கான அகதி முகாம்களை பொலீஸார் சிங்கள மகா வித்தியாலயத்திலும், நாகவிகாரையிலும் திறந்திருந்தனர். இலங்கையில் தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமிழ்நாட்டில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், அவர்களைக் கோபங்கொள்ளவும் செய்திருந்தது. தாக்குதல்களுக்கான தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்த தமிழ் நாடு பாராளுமன்றம், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் உடனடியாக ஒரு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வன்முறைகள் பற்றிய விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால், ஜே ஆருடன் மிகவும் நெருக்கமான மொரார்ஜியோ, தனது வெளிவிவகார அமைச்சரின் மூலம் இந்தியாவின் கரிசணையினை தில்லியிலிருந்த இலங்கை உயர்ஸ்த்தானிகரிடம் கூறச் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். சென்னையில் ஆளும் தி மு க அரசு தமிழர்களுக்கு ஆதரவு தேடி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சென்னையில் அமைந்திருந்த இலங்கை பிரதி உயர்ஸ்த்தானிகரலாயத்தில் மனுவொன்றும் பேரணியில் கலந்துகொண்டவர்களால் கொடுக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டின் தமிழர் மீதான சிங்களவர்களின் வன்முறைகள் இவ்விரு இனங்களுக்கிடையிலான உறவின் முக்கிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. தமிழர் மீதான வன்முறைகள் பல்வேறு வழிகளில் நடத்தப்பட்டதுடன், கடுமையான பின்விளைவுகளையும் ஏற்படுத்தியிருந்தன. இந்த வன்முறைகளின் விளைவுகளை பின்வருமாறு சாராம்சப்படுத்தலாம், தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள் ஜே ஆரின் மீது வைத்திருந்த நம்பிக்கையினை முற்றாக இழந்தனர் தமிழர்கள் இலங்கைப் பொலீஸார் வைத்திருந்த நம்பிக்கையினை இழந்ததுடன் அவர்களை சிங்களப் பொலீஸார் என்று அழைக்கவும் ஆரம்பித்தனர் தனிநாட்டிற்கான தேவை மேலும் மேலும் உறுதியடைந்தது மிதவாதத் தலைவர்கள் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த செல்வாக்கு பாரிய வீழ்ச்சியைக் காண, ஆயுத அமைப்புக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத் தொடங்கின பிரபாகரனின் சுலோகமான திருப்பியடி எனும் கொள்கை மக்களிடையே வரவேற்பினைப் பெறத் தொடங்கியது தமிழர்களின் பிரச்சினையில் தமிழ்நாடும், இந்தியாவும் உள்வாங்கப்பட்டன மிதவாதிகள் இலக்குவைக்கப்பட்டார்கள் 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 27 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 27 தமிழ் மிதவாதிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியது. பொலீஸ் அராஜகத்தினை ஜே ஆர் நியாயப்படுத்தியிருந்ததும், தமிழர்களுடான போருக்கான அவரின் அறைகூவலும் தமிழ் இளைஞர்களை வெகுவாக ஆத்திரப்பட வைத்திருந்தன. ஆகவே, ஆயுத அமைப்புக்கள் தாமும் மோதலுக்கு ஆயத்தம் என்கிற ரீதியில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டனர். ஜே ஆருக்கு யுத்தமே வேண்டுமென்றால், நாமும் அதனைத் தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்று அவர்கள் கூறியிருந்தனர். தமிழருக்கெதிரான வன்முறைகளின்போது நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் அத்தாக்குதல்களுக்காகப் பதிலடி வழங்கியே தீரவேண்டும் என்கிற மனநிலையில் இருந்தனர். தாம் தமிழர் என்பதற்காகவே சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களில் சிலர் தங்கத்துரையின் அமைப்பிலும், பிரபாகரனின் அமைப்பிலும் இணைந்துகொண்டனர். கொழும்பில் இயங்கிவந்த குற்றச்செயல் விசாரணைப் பிரிவு அரசுக்கு அனுப்பிய உளவுக் குறிப்பில் இவ்விரு அமைப்புக்களிலும் இணைந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 30 இலிருந்து 50 வரை இருக்கலாம் என்றும், அனுதாபிகளின் எண்ணிக்கை 100 இலிருந்து 200 வரை இருக்கலாம் என்று கூறியிருந்தது. இதேவேளை மக்களின் அனுதாபம் இளைஞர்களின் பக்கம் திரும்பியிருந்தது. ஆயுத அமைப்புக்கள் உடனடியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்ன்ணையினர் மீது, குறிப்பாக அமிர்தலிங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். அரசுக்கெதிராக கடுமையான நிலைப்பாட்டினை எடுக்குமாறு அவர் கோரப்பட்டார். இளைஞர்களின் அழுத்தத்திற்குப் பணிந்துபோவதைத்தவிர த.ஐ.வி.மு தலைமைத்துவத்திற்கு வேறு வழி இருக்கவில்லை. அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை புரட்டாதி முதலாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்றவேளை, அதற்குத் திருத்தம் ஒன்றினை முன்வைத்த த.ஐ.வி.மு தலைமைப்பீடம், தமிழ் மக்களுக்கான தனிநாட்டினை அரச கொள்கை உரையில் இணைத்துக்கொள்ளாமைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனால் கொதிப்படைந்த அரசுதரப்பு அமிர்தலிங்கம் இனங்களுக்கிடையே பகைமையுணர்வினை உருவாக்கும் பேச்சுக்களில் ஈடுபடுகிறார் என்று குற்றஞ்சாட்டியது. மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திஸாநாயக்க அமிர்தலிங்கம் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததுடன், அமிர் முற்கரண்டி நாக்குக் கொண்டவர் என்றும், இருமுகம் கொண்டவர் என்றும் சாடினார். தெற்கில் சிங்களவருக்கு ஒரு முகத்தினையும், வடக்கே சென்றவுடன் தமிழருக்கு இன்னொரு முகத்தினையு காட்டுபவர் என்றும் கூறினார். அமிர்தலிங்கத்தின் இனவாதப் பேச்சே சிங்கள மக்களை கலவரங்களில் ஈடுபடத் தூண்டியதாகவும் அவர் நியாயப்படுதினார். புரட்டாதி 22 ஆம் திகதி சபாநாயகரின் அதிகாரத்தைப் பலப்படுத்தி குடியரசு யாப்பில் திருத்தங்களைச் செய்யக்கூடியவகையில் தீர்மானம் ஒன்றைப் பாராளுமன்றத்தி ஜே ஆர் சமர்ப்பித்தார். இதன்மூலம் யாப்பு, அதனோடிணைந்த ஏனைய சட்டங்களையும் சீர்செய்யும் குழுவினரையும், அதன் தலைவரையும் உருவாக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்படும். இத்தீர்மானம் மறுநாளே பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இளைஞர்களிடமிருந்து கடுமையான அழுத்தத்தினச் சந்தித்துவந்த அமிர்தலிங்கமும் அவரது கட்சியும், அரசியலமைப்பை மாற்றும் குழுவின் கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவிற்கு வந்தனர். அனால், 1978 ஆம் ஆண்டு மாசி மாதம் 4 ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை நிலைநாட்ட கடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை உலகிற்கு "அரசுக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சி" என்று காட்டியும் தன்னைப் பலப்படுத்த நினைத்திருந்த ஜே ஆருக்கு அமிர்தலிங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வருவதன் மூலம் சிறிமாவின் அரசியல் பலத்தை முற்றாக முடக்கிவிடலாம் என்று அவர் எண்ணியிருந்தார். செளமியமூர்த்தி தொண்டைமான் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் தெரிவுக்குழுவின் அங்கத்தவர்களின் விபரம் கார்த்திகை 3 ஆம் திகதி வெளியானது. த.ஐ.வி.மு இனரின் பிரதிநிதி எவரையும் இத்தெரிவுக்குழு கொண்டிராதபோதும், தொண்டைமான் இக்குழுவில் பங்கேற்றிருந்தார். இத்தெரிவுக்குழுவின் அங்கத்தவர் விபரங்கள், ஜே ஆர் ஜெயவர்த்தனா - தலைவர், ஆர் பிரேமதாசா, லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்கா, ரொனி டி மெல், கே. டபிள்யூ தேவநாயகம், எம் எச் எம் நைனா மரிக்கார், சிறிமாவோ பண்டாரநாயக்கா, மைத்திரிபால சேனநாயக்கா மற்றும் தொண்டைமான். அமிர்தலிங்கத்தை மையப்படுத்தி, மொத்த த.ஐ.வி. மு இனர் மீது மிகக்கடுமையான பிரச்சாரத்தை ஜே ஆர் கட்டவிழ்த்து விட்டிருந்தார். லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள், ரூபவாகினி எனப்படும் தேசியத் தொலைக்காட்சி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றைக் கைவசம் வைத்துக்கொண்டு ஜே ஆர் இந்தப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருந்தார். ஊடகத்துறையின் சுயாதீனமான செயற்பாட்டிற்காக முன்னர் குரல்கொடுத்த ஜே ஆர், ஆட்சிக்கு வந்தவுடன் அரச ஊடகத்துறையினை தனது சொந்த கருத்து வெளியிடும் சாதனங்களாக மாற்றினார். தனது முன்னாள் காரியதரிசி ரனபால பொடினாகொடவை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக அமர்த்தியதுடன், அவரூடாகவே பத்திரிக்கைத் துறையினைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பொடினாகொட ஒவ்வொரு காலையிலும் ஜே ஆரின் வாசஸ்த்தலத்திற்குச் சென்று, ரூபவாகினி மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர்களுடன் ஜே ஆரைச் சந்தித்து, அங்கு ஜே ஆர் கூறும் செய்திகளை அப்படியே தத்தமது ஊடகங்களில் பிரச்சாரப்படுத்தி வருவது வழமையானது. ஆரம்பத்திலிருந்தே அமிர்தலிங்கமும், சிறிமாவோவுமே ஜே ஆரின் முக்கிய இலக்குகளாக இருந்து வந்தனர். அமிர்தலிங்கத்தை தட்டி, அடக்கிவைப்பது, சிறிமாவின் அரசியல் எதிர்காலத்தைச் சிதைப்பது ஆகிய இரண்டுமே ஜே ஆரின் குறிக்கோளாக அன்று இருந்தன. அமிர்தலிங்கத்திற்கெதிரான பிரச்சாரம் அவரை ஒரு பூதமாக சிங்களவர் மத்தியில் காட்டியதோடு, தமிழ் ஆயுதக்குழுக்களை பின்னாலிருந்து தூண்டிவிட்டு பிரிவினைவாதத்தை வளர்த்தெடுக்கும் ஒரு தமிழ் இனவாதியாகவும் சித்தரித்திருந்தார். அமிர்தலிங்கத்திற்கு இருபுறத்திலும் இருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தது. அவரது அன்றைய நிலையினை முன்னிறுத்தி அவரை 1978 ஆம் ஆண்டு ஐப்பசி 5 ஆம் திகதி பேட்டி கண்டேன். பாராளுமன்றத் தெரிவுக்குழுவைப் புறக்கணித்ததன் காரணம் ஜே ஆர் இன் ஜனாதி அதிகாரத்தை புறக்கணிப்பதாக அர்த்தப்படுத்தவில்லையென்றும், ஜே ஆர் ஜனாதிபதியாக இருந்தால் என்ன, பிரதமராக இருந்தாலென்ன, தமிழர்கள் அதுபற்றிக் கவலைப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார். "உங்கள் முழு வீடுமே தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும்போது யன்னல்களின் திரச்சீலைக்கு என்ன வர்ணம் பூசுவது என்று உங்களால் கவலைப்பட முடியுமா? " என்று அவர் கேட்டார். மத்தளத்திற்கு இருபக்கமும் அடிபோல தனது நிலை இருப்பதாக இச்செவ்வியில் அவர் கூறினார். "நான் ஜே ஆரின் பக்கம் நிற்பதாக இளைஞர்கள் எண்ணி என்மீது விமர்சனம் செய்கிறார்கள். ஜே ஆரோ நான் இளைஞர்களின் பக்கம் நிற்பதாக நினைத்து என்மீது தாக்குதல் நடத்துகிறார்" என்று அவர் கூறினார். என்னிடம் தனிப்பட்ட ரீதியில் கூறும்போது, "இவர்கள் இருவரில், ஜே ஆரே மிகவும் ஆபத்தானவர், பழிவாங்கும் எண்ணம் கொண்டவர். நாம் அவரை பிழையான வழியில் அணுகினோம் என்றால், தமிழர்களை முற்றாக அழித்துவிடுவார்" என்றும் அவர் கூறினார். ஜே ஆரின் பழிவாங்கும் குணத்தைப்பற்றி நான் கேள்விப்படுவது இதுவே முதற்தடவையல்ல. 1950 களில் ஜோன் கொத்தலாவலை ஜே ஆரைப் பற்றிக் கூறும்போது, "புல்லுக்குள் மறைந்திருக்கும் பாம்பு" என்று விளித்திருந்தார். சிறிமா பலமுறை ஜே ஆர் ஐப் பழிதீர்க்கும் மனிதர் என்று அழைத்திருந்ததுடன், அவர் கையால் பலமுறை துன்பங்களுக்கும் ஆளாகியிருக்கிறார். தமிழர்களைப்பொறுத்தவரை 1977 ஆம் ஆண்டின் கலவரங்களைத் தூண்டிவிட்டது ஜே ஆரே என்று உறுதியாக நம்புகின்றனர். யாழ்ப்பாண மக்களால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக ஜே ஆர் கருதியதாலேயே தமிழினத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் அவர் ஈடுபட்டு வருவதாக அவர்கள் உறுதியாக நம்பினர். ஜே ஆர் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கும் சம்பவம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் இடம்பெற்றிருந்தது. ஐ தே க வை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ஜே ஆர் யாழ்ப்பாண பிரச்சாக் கூட்டம் ஒன்றிற்கு போயிருந்தார். யாழ் முற்றவெளியில், துரையப்பா அரங்கிற்கு அருகில் தற்காலிக மேடையொன்று அமைக்கப்பட்டிருந்தது. ஜே ஆர் மேடையில் ஏறியபொழுது மேடை சரிந்து வீழுந்து குழப்பகரமான நிலையொன்றினை அங்கு ஏற்படுத்தியிருந்தது. ஜே ஆரும், மேடையில் அவருடன் இருந்தோரும் கீழே விழுந்தனர். அதன்பின்னர் கூட்டம் நிறுத்தப்பட்டது. இது தனக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாக ஜே ஆர் கருதினார். மேடையினை பலவீனமாக்கிய செயலின் பின்னால் இருந்தவர்கள் தமிழ் ஈழ மாணவர் அமைப்பான ஈரோஸ் அமைப்பின் அன்றைய உறுப்பினர்களும், இன்று கொழும்பில் ஈ பி டி பி அமைப்பில் செயல்ப்பட்டு வருகிறார்களுமான சிலரே. என்னிடம் அவர்கள் இதுகுறித்து ஒருமுறை பேசியபோது, மேடையைச் சுற்றி நிலையாக நடப்படும் குற்றிகளை, அவை வீழ்ந்துவிடாமலிருக்கக் கட்டும் கயிற்றை தாம் அறுத்துவிட்டதனாலேயே மேடை சரிந்து வீழ்ந்ததாகக் கூறினர். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted January 29 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 29 வெளியே வந்த போராளிகள் 1977ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரச காவல்த்துறையினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள், நாடு முழுவதும் தமிழர்மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்களவர்களின் தாக்குதல்கள் மற்றும் அமிர்தலிங்கம் மீது ஜே ஆரினால் செய்யப்பட்ட விஷமத்தனமான பிரச்சாரம் ஆகியன மிதவாத தமிழர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டிருந்ததோடு, ஆயுத அமைப்புக்கள் முன்னுக்கு வரவும் காரணமாக அமைந்தன. தனது நடவடிக்கைகள் மூலம் தமிழ்மக்கள் அச்சமடைந்து அடங்கிவிடுவார்கள், போராட்டங்களைக் கைவிட்டு விடுவார்கள் என்று ஜே ஆர் நிணைத்தது மிதவாத தமிழ் அரசியல்வாதிகளான அமிர்தலிங்கம் மற்றும் ஏனைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உறுப்பினர்களைப் பொறுத்தவரை உண்மையாகவே இருந்தது. 1977 ஆம் ஆண்டின் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்கள் பற்றி அரசுடன் கலந்துரையாடுவதற்கு தமிழர் ஐக்கியமுன்னணி பலமுறை சென்றிருந்தது. இந்தக் கூட்டங்களின் மூலம் அரச பதவிகளில் பணிபுரிந்த தமிழ் உத்தியோகத்தர்கள் இக்கலவரங்களினால் பாதிப்படைந்தது பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தை த.ஐ.வி. மு பாவித்துக்கொண்டது. முன்னணியின் கரிசணைகளை ஜே ஆர் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தார். 1977 ஆம் ஆண்டு, மார்கழி 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் செயகலத்தில் வர்த்தக அமைச்சரான லலித் அத்துலத்முதலி தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் குழுக் கூட்டத்தில் முன்னணியும் கலந்துகொண்டது. முன்னர் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்கிற தமது முடிவை மாற்றிக்கொண்டு அமைச்சர் நடத்திய இக்கூட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கலந்துகொண்டது இளைஞர்களுக்குக் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. முன்னணியின் இந்தத் திடீர் முடிவினை எதிர்த்து யாழ்ப்பாணம் முழுவதும் கண்டனச் சுவரொட்டிகள் இளைஞர்களால் ஒட்டப்பட்டிருந்தன. யாழ்ப்பாணச் செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆகவே, மிதவாதிகளான முன்னணியின் தலைவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உலாவுவதற்கு பொலீஸ் பாதுகாப்பு அரசால் வழங்கப்பட்டது. மிதவாதிகள் என்று அறியப்பட்ட தமிழ்த் தலைவர்கள் யாழ்ப்பாணச் சமூகத்திலிருந்து மெதுமெதுவாக அந்நியப்பட்டுப் போகத் தொடங்கினார்கள். அதுலத் முதலியின் யாழ்ப்பாணப் பயணத்தை பதிவிடுவதற்காக நான் அப்பொழுது யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். அமிர்தலிங்கத்தின் திறமையான பேச்சினை நான் டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தேன். ஏ. அமிர்தலிங்கம் அவர் இப்படிக் கூறினார், "தமிழ்ச் சமூகத்தால் எதிர்நோக்கப்படுகின்ற பல பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துவைக்க பிரதமர் ஜே ஆர் ஜெயவர்த்தனா எடுத்துவரும் முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் தமது முழு ஆதரவினையும் வழங்கவேண்டியது அவர்களின் கடமையாகும். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நீதியுடனும் நேர்மையாகவும் தீர்த்துவைக்கப்போவதாக பிரதமர் எம்மிடம் உறுதியளித்திருக்கிறார். அவருக்கு நாம் தேவையான கால அவகாசத்தினையும் சந்தர்ப்பத்தினையும் வழங்கவேண்டும். பரஸ்பர நல்லெண்ணமே இன்று தேவையானது. எமது சார்பில் முழு ஆதரவினையும் நல்லெண்ணத்தையும் நாம் அரசுக்கு வழங்கியிருக்கிறோம். எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் செயல்வடிவில் நிகழ்த்தும் என்று நாம் முழுமையாக நம்புகிறோம்" என்று பேசியிருந்தார். பாராளுமன்றத்திலும் த.ஐ.வி. மு அரசுக்கான தனது ஆதரவினை வழங்கி வந்தது. 1977 ஆம் ஆண்டு மார்கழி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், "எதிர்க்கட்சியின் வேலை அரசு செய்யும் எல்லா விடயங்களையும் எதிர்ப்பது என்பது அல்ல. மாறாக தாம் நியாயம் என்று நினைக்கும் விடயங்களை ஆதரிப்பது, தவறென்று நினைப்பதை சுட்டிக்காட்டி, ஆட்சி சிறந்தவகையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்வதுமே ஆகும்". மார்கழி 26 இல் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவரது அரச ஆதரவு நிலை பற்றி வினவியபோது, "இது ஒன்றும் புதிய விடயம் அல்லவே? எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்க் கூட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எமது கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கும் என்று கூறியிருந்தோமே?" என்று பதிலளித்தார். தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் அமிர்தலிங்கம் விளக்க முனைந்தமை ஜே ஆருக்கு மகிழ்வினைக் கொடுத்திருந்தது. ஜே ஆர் ஜெயவர்த்தனா தமிழர்களை நீதியாகவும், சமமாகவும் நடத்தும் ஒரு தலைவர் எனும் பெயரினை சர்வதேசத்தில் பெற்றுக்கொள்ளவே ஜே ஆர் முயன்று வந்தார். ஆகவே அதற்கு வலுச் சேர்க்கும் முகமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி செயற்படவேண்டும் என்று ஜே ஆர் விரும்பினார். அவர் நினைத்தவாறே அமிரும் அவரது மிதவாத அரசியல் சகாக்களும் அப்போது செயற்பட்டு வந்தனர். விளைவுகள் எப்படியாக இருப்பினும் தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகள் தான் நிச்சயம் தீர்த்துவைப்பேன் என்று ஜே ஆர் 1978 ஆம் ஆண்டு கூறியிருந்தார். அரசுக்கு எதிரான நிலைப்பாட்டினை படிப்படியாகத் தளர்த்தி வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஜே ஆரின் இந்தப் பேச்சோடு முழுவதுமாக தனது எதிர்ப்பினைக் கைவிடும் நிலமைக்கு வந்திருந்தது. ஒவ்வொரு சுதந்திர தின நிகழ்வையும் கறுப்புக்கொடி காட்டிப் புறக்கணிப்புச் செய்துவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் 1978 ஆம் நடைபெற்ற 30 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பதில்லை என்கிற முடிவை எடுத்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே ஆர் பதவியேற்கும் நாளன்று பேசிய அமிர், ஜே ஆர் மீது தாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால் அவருக்கெதிரான எந்தவித புறக்கணிப்புப் போராட்டங்களையும் கைக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார். 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பினை மாற்றியமைத்தே ஜே ஆர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு, சித்திரை 22 ஆம் திகதி, அனைத்துப் பாராளுமன்ற செயற்குழுக்களிலும் அங்கம் வகிப்பதன் மூலம் அரசுக்கு ஆதரவாக நெருங்கிச் செயற்படும் முடிவினை அமிர்தலிங்கமும் அவரது கட்சியும் எடுத்திருந்தார்கள். அமிர் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசுக்கு ஆதரவான செயற்பாடுகளை இளைஞர்கள் மிகுந்த எரிச்சலுடன் அவதானித்துக்கொண்டிருந்தனர். 1 Link to comment Share on other sites
Recommended Posts