Jump to content

அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது

AFP_32K247X.jpg?resize=1200%2C550&ssl=1

Photo, AFP/ The Hindu

உயர்ந்த விலைகளில் பொருட்களை வாங்கக்கூடியவர்கள் பெருமளவுக்கு அவதானிக்காவிட்டாலும், இலங்கையின் பொருளாதார நிலைவரம் பல முனைகளிலும் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே போகிறது. கடந்த நான்கு மாதங்களாக பெற்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் ஒப்பீட்டளவில் நிலையாக இடம்பெற்றுவருகிறது. நீண்ட வரிசைகளை இப்போது காணவில்லை. ஆட்டோ டீசலுக்கான பங்கீட்டு முறை அதற்கான கிராக்கியை பயனுடைய விதத்தில் கட்டுப்படுத்தி டொலர்களை சேமிக்க உதவுகிறது. சமையல் எரிவாயு தாராளமாக கிடைக்கிறது. இந்த அத்தியாவசிய பொருட்கள் சகலதினதும் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்து பணவீக்கத்தை உயர்த்தியிருக்கிறது.

ஆனால், உயர்ந்த மட்ட வருமானம் பெறுபவர்களினால் இரண்டு அல்லது மூன்று மடங்கு விலைகளால் வாங்கக்கூடியதாக இருப்பதால் முன்னரைப் போன்று நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியதில்லை என்பது குறித்து அவர்கள் திருப்பதியடைகிறார்கள். அவர்கள் இனிமேலும் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களாக இல்லை. உண்மையில் அவர்களில் பலர் அறகலய மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையின் ஆதரவாளர்களாகக் கூட மாறிவிட்டார்கள்.

போராட்ட இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் பணக்காரர்களும் வறியவர்களும் கடுமையான தட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருட்கள், மின்சாரம் இன்மை காரணமாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மாற்றத்துக்காக நாடளாவிய ரீதியில் ஐக்கியப்பட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதுவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தை வீழ்த்தியது. அந்த ஐக்கியப்பட்ட கோரிக்கை இப்போது இல்லை. ஏனென்றால், கையில் பணம் உள்ளவர்களினால் உயர்ந்த விலைகளில் பொருட்களை வாங்கக்கூடியதாக இருக்கிறது. அவர்கள் தங்களின் வழமை வாழ்வுக்கு திரும்பிவிட்டார்கள்.

வாழ்க்கையை சமாளிக்க முடியுமென்பதால் அவர்கள் வீதிப்போராட்டங்கள் இல்லாத வாழ்வை விரும்புகிறார்கள். ஆனால், பெரும்பான்மையானவர்களினால் தங்களது பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பமுடியாமல் இருக்கிறது. அவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தி சந்தேகத்துக்கிடமின்றி ஒரு கிளர்ச்சித் திருப்பத்தை எடுக்கும். தொடரும் மாணவர் போராட்டங்களில் இதற்கான அறிகுறிகளைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசு அதிகாரத்தை தன் கையில் எடுத்திருக்கிறார். அவரின் கீழ் அரசின் பிரதான அம்சமாக போராட்ட இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. அவர் அதிகாரத்துக்கு வந்த பிறகு பெருமளவு மக்களினால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு விலைவாசி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னதாக அந்த மக்கள் விளிம்புநிலையில்தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்கள். வழமை வாழ்வைத் தொடரக்கூடிய வருமானம் இல்லாத அந்த மக்களின் பிரதிநிதிகள்தான் தொடர்ந்தும் போராடுகின்ற பல்கலைக்கழக மாணவர்கள். கடந்த வாரம் கொழும்பில் அந்த மாணவர்களின் போராட்டம் வன்முறை மூலமாக கலைக்கப்பட்டதுடன் 80 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ஒரு ஐந்து வருட இடர்பாடுகளுக்குப் பின்னரே பொருளாதார நிலைவரத்தில் மேம்பாடு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தற்போது தோன்றுகிறது. அதனால் இன்னும் ஒரு ஐந்து வருடங்களுக்கு அடக்குமுறை சாத்தியமா அல்லது விரும்பத்தக்கதா என்பதை ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் சிந்தித்துப் பார்க்கவேண்டியது அவசியமாகும்.

மேலும் கடன்களைப் பெற்று பழைய நடைமுறைகளையே தொடருவதன் மூலம் நெருக்கடியின் அறிகுறிகளைத் தணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணிகளை கையாளத்தவறியதைப் போன்று அறகலயவைக் கொண்டுவந்த அடிப்படைக் காரணிகளை கையாளவும் அரசாங்கம் தவறுகின்றது.

இனப்பிரச்சினையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதால் மூண்ட போர்  மூன்று தசாப்த காலம் நீடித்தது. அரசியல் தீர்வு காணப்படவில்லை. அதன் விளைவாகவே அரசாங்கம் இன்று ஜெனீவாவில் நெருக்கடியை எதிர்நோக்குகிறது. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோது சமாதானத்தின் பயன்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சாத்தியப்படவில்லை. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு போன இராணுவ செலவினம் பட்ஜெட் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் கண்ணியமான வாழ்க்கையைத் தொடர முடியாமல் கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். நீர்ப்பீரங்கி, கண்ணீர்புகை மற்றும் குண்டாந்தடி தாக்குதல்களை நடத்துவதன் மூலமும் மாணவர்களைக் கைதுசெய்து நீதிமன்றங்கள் முன் நிறுத்துவதன் மூலமும் பரந்துபட்ட சமுதாயத்துக்கு அரசாங்கம் ஒரு செய்தியைச் சொல்கிறது. பொருளாதாரப் இடர்பாடுகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ளப்படமாட்டாது என்பதே அந்தச் செய்தியாகும்.

அரசாங்கத்தின் அக்கறை இரண்டு வகைப்பட்டதாக இருக்கலாம். முதலாவது, ஆர்ப்பாட்டங்களை முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால், மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் இடர்பாடுகள் காரணமாக அவை மேலும் தீவிரமடைந்து அண்மைய மாதங்களில் காணக்கூடியதாக இருந்ததைப் போன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய்விடும். கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம் உச்சபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கிறது என்பதன் அறிகுறி. இரண்டாவது, நிதியுதவி கிடைக்கவேண்டுமானால் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தவேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை.

போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலப்பகுதியில் எதிரியின் தாக்குதல்களில் இருந்து இராணுவ தளங்களை பாதுகாப்பதற்காக வடக்கு கிழக்கில் முன்னர் உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை ஜனநாயகத்துக்குப் பாதகமானது என்று கண்டனம் செய்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட உத்தரவின் ஏற்பாடுகளை மிக உன்னிப்பாக ஆராயப்போவதாகவும் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு உகந்த சட்ட நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் காலப்பகுதியில் அறகலயவின் பலமும் மக்கள் செல்வாக்கும் ஆட்சிசெய்வதற்கான மக்கள் ஆணையை அரசாங்கம் இழந்துவிட்டது என்பதைக் காட்டின. இப்போதும் நிலைமை அதுவே. பெருமளவு மெய்க்காவலர்கள் சகிதம் வந்தாலன்றி மற்றும்படி அரசாங்க தலைவர்களினால் வீதிகளில் மக்கள் மத்தியில் கலந்து நிற்க முடியாது. தேசிய பாதுகாப்பு என்ற நிறப்பிரிகை ஊடாகவே அவர்கள் தங்கள் இருப்பை நோக்குகிறார்கள்.

தனது பதவியின் இறுதி நாட்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பொருளாதார நெருக்கடியின் உடனடிப் பிரச்சினைகளை கையாளுவதற்கு ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய – பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தேசிய பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்கக்கூடிய 15 அமைச்சர்களைக் கொண்ட சிறியதொரு அரசாங்கத்தை அமைக்க முன்னவந்ததுடன் 6  மாதங்களில் புதிய தேர்தல்களை நடத்துவதாகவும் அறிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தபோது அத்தகைய ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்வரக்கூடிய ஒரு மதிப்புமிக்க அரசியல் தலைவராக அவர் செயற்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதில் அவர் செலுத்திய கவனம் அதிர்ச்சியை தந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய தேவையின் அடிப்படையில் அது நியாயப்படுத்தப்பட்டது. அதேபோன்றே ஊழலையும் அரசியல்வாதிகள் தங்களை வளப்படுத்துகிற நடைமுறைகளையும் அவர் ஒடுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.

யாழ்ப்பாண உதாரணம்

முன்னைய ஜனாதிபதியின் கீழ் அதிகார பதவிகளில் இருந்த – பொருளாதார நெருக்கடியை தடுக்கத்தவறிய அதே அரசியல்வாதிகள் குழுவே மீண்டும் நியமிக்கட்ட்டிருக்கிறது. மீண்டும் அவர்களது நியமனம் தீர்வொன்றை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஒட்டுமொத்த தேசிய நெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு வழிவகுக்கக்கூடிய திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லையென்றே தெரிகிறது. அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கே அன்றி தீர்வுகளை முன்வைப்பதற்கு பழக்கப்பட்டவர்கள் அல்ல.

இத்தகைய பின்புலத்தில், திட்டங்களுக்கே பணம்  இல்லாமல் இருக்கும் ஒரு நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் அமைச்சர்கள் நியமனம் நியாயமற்ற ஒன்று என்று மக்கள் நோக்குகிறார்கள். அந்த அமைச்சர்களை வெறுப்புடன் நோக்கும் மக்கள் அவர்களை பிரச்சினையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள். இந்த அரசியல்வாதிகள் குழு முழுமையும் போகும்வரை பிரச்சினையும் போகாது என்றே மக்கள் நம்புகிறார்கள்.

இத்தகைய இருளார்ந்த சூழ்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விச் சமூகம் ஒரு முன்னுதாரணத்தை வகுத்திருக்கிறது. மாணவர்களை தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களது மனங்களை வென்றெடுப்பதற்கு அரசாங்கம் அந்த உதாரணத்தை பின்பற்றலாம். தனது மாணவர்கள் காலையில் உணவருந்தாமல் வகுப்புக்களுக்கு வருவதை ஒரு விரிவுரையாளர் அவதானித்ததையடுத்தே இது ஆரம்பமானது. தனது வகுப்பில் மாணவர்களுக்கு பிஸ்கற் மற்றும் வாழைப்பழத்தை அவர் கொடுக்கத்தொடங்கினார். அடுத்து அவர் இலவச உணவு வழங்குவதற்கு பங்களிப்புச் செய்ய தனது சகாக்கள் இருவரை ஊக்கப்படுத்தினார். இது மூன்று மாதங்களாக தொடருகிறது. இன்று அந்தச் சமூக நடவடிக்கை தினமும் 1200 க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கக்கூடிய ஒரு மட்டத்துக்கு வளர்ச்சியடைந்துவிட்டது. நல்லிணக்கம் மற்றும் நீதி மீது கொண்டிருக்கும்  பற்றுறுதிக்கான சான்றை வெளிக்காட்டுமாறு ஜெனீவாவில் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் அரசாங்கத்திடம் கேட்கப்படுகின்ற ஒரு நேரத்தில் யாழ்ப்பாண கல்வியாளர்கள் அரசாங்கம் தேசிய ரீதியில் முன்னெடுக்கவேண்டிய திட்டத்துக்கான உணர்வை வெளிக்காட்டியிருக்கிறார்கள். நாட்டின் சகல பாகங்களில் இருந்து வரும் வேறுபட்ட இனங்கள் மதங்களைச் சேர்ந்த தங்களது மாணவர்களுக்கு அந்த கல்வியாளர்கள் சமூக உணவகம் ஒன்றை நிறுவியமை நடைமுறையில் ஒரு தேசிய நல்லிணக்கச் செயற்பாடாகும்.

சிவில் சமூக செயற்பாடுகள் என்று பார்க்கும்போது அரசாங்கம் மட்டத்தில் முன்னெடுக்கவேண்டிய ஒன்றை நுண்மட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியாளர்கள் செய்துகாட்டியிருக்கிறார்கள். சிவில் சமூகத்தினால் சமுதாய மட்டத்தில் ஆதரவை பெருக்கமுடியும். முறைமைசார் ஆதரவை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

jehan-e1660716495972.jpg?resize=83%2C116கலாநிதி ஜெகான் பெரேரா

 

https://maatram.org/?p=10376

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.