Jump to content

ஒரு ஆசிரியரின் நாட்குறிப்பு - சுப. சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                        ஒரு ஆசிரியரின் நாட்குறிப்பு

                                                                -  சுப. சோமசுந்தரம்

இதை எழுதும் நான் ஒரு ஆசிரியன். எழுதுவதன் நோக்கம் நான் சார்ந்த ஆசிரியர் வர்க்கத்திடம் தகவல் பரிமாற்றம். ஊக்கமளிப்பதாக இருக்கலாம்; எச்சரிக்கை மணியாகவும் இருக்கலாம்.
            இன்று நான் நானாக இச்சமூகத்தில் உலவி வருவது எனது ஆசிரியர் பெருமக்கள் சிலரால் என அறுதியிட்டுக் கூறுபவன் நான். எல்லோரும்தான் இதைச் சொன்னார்கள் - பலர் சம்பிராதாயத்துக்காக. இதயபூர்வமாக, ஆணித்தரமாக நம்புகிறேன் நான். ஆதாரங்களும் உண்டு. நான் கணிதம் பேசும் போது என்னை மிகவும் கவர்ந்த ஒரு குறிப்பிட்ட கணித ஆசிரியரின் முறையைப் பின்பற்றுவதை (காப்பியடிப்பதை) நானே உணர்ந்து இருக்கிறேன்; பிறர் சொல்லவும் கேட்டிருக்கிறேன். தமிழோ ஆங்கிலமோ பேசும்போதும் அப்படியே. நற்குணங்களும் அப்படியே. எனது நாட்குறிப்பில் (டைரியில்) வெவ்வேறு நாட்களில் நான் எழுதிய ஒன்றிரண்டு நிகழ்வுகளை இங்கு காட்சிகளாய் விரிக்கத் தோன்றுகிறது.

காட்சி 1: எனது ஊரான நெல்லை மாநகரின் ஒரு பிரபல ஜவுளிக்கடையில் இருந்து வெளியே வருகிறேன் (நாட்குறிப்பில் ஜவுளிக்கடையின் பெயர் எல்லாம் உண்டு; இங்கு பொது வெளியில் தவிர்க்கிறேன்). முப்பது வருடங்களுக்கு முன்பு பள்ளியில் எனக்குக் கணிதம் சொல்லித் தந்த ஆசிரியர் ஒருவர் தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் உள்ளே வருகிறார். சுமார் எண்பத்தைந்து வயதிருக்க வேண்டும். நேருக்கு நேராக வந்த அந்த ஆசிரியருக்கு நான் ஞாபகத்திற்கு வர வாய்ப்பு இல்லை. அவரிடம் பயின்றபோது நான் அத்துணை ஒளிரவில்லை என்பது காரணமாக இருக்கலாம். என்னைக் கணிதத்தை நோக்கி ஈர்த்தவர் என்று அவரை நான் பெரிய அளவில் நினைத்ததில்லை. பாடத்தில் இருந்ததைப் பிழையின்றி சொல்லித் தந்தவர் என்பது எனது கணிப்பு. இதையெல்லாம் தாண்டி, மாணவர்களை மதித்தவர்; குற்றம் செய்த மாணவனையும் திருத்தும் நோக்கத்துடன் மட்டுமே சிறிய தண்டனைகளை அளித்தவர் என்பதும் அவரைப் பற்றிய பொதுவான கணிப்பு. சுருக்கமாய்ச் சொல்வதானால் ஒரு மரியாதைக்குரிய ஆசிரியர். அவரைத் திடீரென்று பல வருடங்கள் கழித்துப் பார்த்த உவகையில் குனிந்து அவரது காலைத் தொட்டு வணங்கினேன். சிறிய அறிமுகம் செய்து கொண்டேன். வாழ்த்தினார். தமது குடும்பத்தினரைப் பார்த்து சிறிய புன்னகை முகம் காட்டினார். அதில் வெற்றிக் களிப்பு தெரிந்தது எனது கற்பனையாக இருக்கலாம். அவரது மகள் என்னிடம் கூறினார், "சார் ! அப்பாவை இன்னும் இரண்டு நாட்களுக்குக் கையில் பிடிக்க முடியாது". அவர் சொன்னது உண்மையானால் ஓய்வு பெற்று 25 வருடங்கள் கழித்து ஒரு ஆசிரியரின் நியாயமான பெருமிதம்தானே !

காட்சி 2: ஒரு நாள் மாலையில் எனது இருசக்கர வாகனத்தில் சந்தடி இல்லாத ஒரு தெருவில் வந்து கொண்டிருந்தேன். ஓய்வு பெற்ற எனது கல்லூரி கணிதப் பேராசிரியர் ஒருவர் துணைவியாருடன் நடைப்பயிற்சியாக எதிரே வந்து கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு இறங்காமலேயே எனது கைகளை அவரது பாதங்களை நோக்கிப் பாவனை செய்து எனது கண்களில் ஒற்றிக்கொண்டேன். "எடுத்ததற்கெல்லாம் பொசுக் பொசுக்கென்று காலில் விழுந்து விடுவான் போல !" என்று நினைக்கத் தோன்றுகிறதா ? பெற்றோர், முன்னாள் ஆசிரியர்களைத் தவிர வேறு யாரையும் அப்படி வணங்கியதாக நினைவில்லை. நாட்குறிப்பும் அவ்வாறே சொல்கிறது. சரி, கதைக்கு வருவோம். கல்லூரி நாட்களில் படிப்பிலும் ஏனைய சில விடயங்களிலும் எனக்கு நல்லதொரு முகவரி இருந்ததால் எனது கல்லூரி ஆசிரியர்கள் அனைவர் நினைவிலும் நான் உண்டு. மேலும் அதே ஊரில் பல்கலைக்கழகம் தோன்றிய போது அதில் ஆசிரியராக வேறு அமர்ந்து விட்டேன். எனவே அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அமைந்ததால் அவர்களது நினைவுத் திரையில் பதிந்து போனேன். சந்தடி இல்லாத தெரு என்பதால் எனது குரு பக்தியில் இறும்பூதெய்திய பேராசிரியர் தமது மகிழ்ச்சியை உரத்த குரலில் தமது துணைவியாரிடம் வெளிப்படுத்தினார், "பாருடீ ! உனக்குதான் இந்த வாத்தியான் அருமை தெரியல. ஒரு யுனிவர்சிட்டி புரொபசர் என் காலத் தொட்டுக் கும்பிடுறான். அவன் என்ன சாதாரண ஆளா ? நான் வளர்த்த புள்ளடீ !". நான் கேள்விப்பட்டவரை ஒன்று இரண்டு பொது இடங்களில் கூட இந்த சாதாரண நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு என்னைப் புகழ்ந்தார்; தாமும் பெருமிதம் கொண்டார். உரிய பருவத்தில் உயர் கணிதத்தில் சில அடிப்படைகளைக் கற்பித்த ஆசிரியரிடம் நான் வெளிப்படுத்திய தினைத்துணை நன்றியை அவர் பனைத்துணையாய்க் கொண்டது எனக்கான பேறு. வள்ளுவத்தில் தினைத்துணை, பனைத்துணை சொல்லாடல்கள் ஈண்டு யான்  எடுத்தாண்டதினின்றும் சற்றே வேறுபட்ட பொருளினது என்பது என் தமிழாசிரியர் தந்த பாடம். அடுத்து அவரிடமே வருகிறேன்.

காட்சி 3: முதல் இரண்டு காட்சிகளில் எனது கணித ஆசிரியர்கள். இப்போது ஓரளவு மொழி ஆளுமையிலும் சமூக அரங்கிலும் என்னை நிமிர்ந்து நிற்க வைத்த தமிழாசிரியர். எண்ணும் எழுத்தும்தான் சிறந்த வாழ்வாக அமைய முடியும் என்பது என் கருத்து. இவருக்கு மட்டும் ஒரு பெயர் கொடுக்கத் தோன்றுகிறது. ஒரு சிறிய வட்டத்திலாவது எனக்கென்று ஒரு பெயர் ஏற்பட இவர் ஒரு காரணம் என்று நான் நினைப்பதாலோ என்னவோ ! எனவே இவரை ரொட்ரிகோ என்று கொள்வோம். கற்பனைப் பெயர்தான். அது என்ன போர்த்துக்கீசியப் பெயர் ? அவருடைய இயற்பெயரும் அப்படித்தான். போர்த்துக்கீசியர் வருகையினால் நெல்லை, குமரி மாவட்டக் கடலோர கிராமங்களில் போர்த்துக்கீசியப் பெயர்கள் நிறைய உண்டு. நிற்க.
          உணர்வுடன் அமைவது இலக்கியம் என்பதை உணர்ந்து இலக்கிய உணர்வைப் பள்ளிப் பருவத்திலேயே எனக்கு ஏற்படுத்தியவர் எனது ஆசிரியர் திரு ரொட்ரிகோ. இன்றும் மரபு இலக்கியம், பின்நவீனத்துவம் இரண்டையும் நான் ரசிப்பதற்கு முதல் காரணம் அவரே. வளர்ந்த பின் அறிஞர் தொ.பரமசிவன் போன்ற சான்றோர் கேண்மையினால் என்னை நான் மேலும் தீட்டியது வேறு கதை. கணிதத்தை ரசித்தது போலவே இலக்கணமும் ரசனைக்கான ஒன்று என்பதையும் எனக்கு உணர்த்தியவர் திரு. ரொட்ரிகோ.
           இவை தவிர திராவிட இயக்க உணர்வை என் போன்றோர்க்கு ஊட்டியவர் அவரே. கார்ல் மார்க்ஸை எனக்கு அறிமுகம் செய்தவர் தோழர் பொன்னுராஜ் (இயற்பெயர்தான்) என்றால், அறிஞர் அண்ணாவையும் பெரியாரையும் அறிமுகம் செய்தவர் ஆசிரியர் ரொட்ரிகோ அவர்களே. என்னுள் எப்போதோ முகிழ்த்த நாத்திகம் வேர் பிடித்து உறுதிப்பட்டது மார்க்ஸ், அண்ணா, பெரியார் மூலமாகத்தான். இறை நம்பிக்கை, நம்பிக்கையின்மை இவையெல்லாம் ஒரு மனிதனின் வாழ்வில் ஏதோ சாதாரண கருத்துருவாக்கங்கள் அல்ல. நாத்திகம் இவ்வுலக வாழ்வில் எனக்கான வரம். எல்லோருக்கும் அமைவதில்லை. இவ்வரம் எனக்குக் கிட்டுவதில் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகக் காரணி ஆனவர் எனது தமிழ் ஆசிரியர் திரு.ரொட்ரிகோ.
             திரு.ரொட்ரிகோ அவர்களுக்குக் கோரமான ஒரு முகமும் உண்டு. பள்ளிப்பருவத்தில் மாணவர்களின் பக்குவமின்மை காரணமாக சில சமயங்களில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பொதுவாக எந்த ஒரு ஆசிரியருக்கும் ஏற்படலாம். அது மாணவனைத் திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு வரம்புக்குள் அமைய வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் கேள்விக்குப் பதில் தெரியவில்லை, புத்தகம் கொண்டு வரவில்லை என்று மாணவனின் சிறு தவறுக்குக் கூட கோர தாண்டவம் ஆடுவது ரொட்ரிகோவிற்கு வாடிக்கையான ஒன்று. எதிரே நிற்பவன் மாணவன் என்றில்லாமல் அவனைத் தமது எதிரியாக்கிக் கொள்வார். மாணவனின் சிறு தவறைக் கூட தமது கௌரவப் பிரச்சினையாக எடுத்துக் கொள்வார் போலும். வகுப்பில் மாணவர் பிரதிநிதியாக இருப்பவன் மாணாக்கர்க்கு அவ்வப்போது இவர் விதித்த தண்டத் தொகையில் மரத்தினாலான பத்து அளவுகோல்களை வாங்கி வைத்திருக்க வேண்டும். ஒரு மாணவனை அவர் அடிக்கும் போது குறைந்தபட்சம் ஒரு அளவுகோலாவது உடையும். உடனே மாணவர் பிரதிநிதி அடுத்த அளவுகோலைத் தர வேண்டும். மரியாதை துளியும் இல்லாமல் மாணாக்கர்க்கு அவர் மீதும் அவரது வகுப்பின் மீதும் பயம் மட்டுமே உண்டு. பயத்தை எல்லாம் மீறி அவரிடம் தமிழ் உணர்வை நான் பெற்றதற்கு எல்லாப் புகழும் எனக்கே; அவருக்கு அல்ல. பயத்தை மரியாதை போல் காட்ட நிறையப் பேர் சமூகத்தில் உண்டே ! அதற்கான பயிற்சியை மாணாக்கரில் நிறையப் பேர் இவர் வகுப்பில் எடுத்துக் கொள்வர். மாணவனை ஆசிரியர் அடிப்பது கிரிமினல் குற்றம் என்ற சட்டம் தமிழகத்தில் வந்த போது என்னைப்போல் குதூகலித்தவர் உலகில் யாரும் இருக்க முடியாது. அதற்கு முழுமுதற் காரணம் திரு.ரொட்ரிகோ. இவரிடம் நான் படித்து முடித்து வெகு காலத்திற்குப் பின்னரே அச்சட்டம் இயற்றப்பட்டது என்பதுதான் எனது மனக்குறை.
            பள்ளி வகுப்புத் தோழன் ஒருவன் வெளிநாட்டில் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பின் பேசினான். நண்பர்களைப் பற்றி விசாரித்தான். ஆசிரியர்களை பற்றிக் கேட்டான். அவர் எப்படி இருக்கிறார், இவர் எப்படி இருக்கிறார் என்று மற்றவர்களை விசாரித்தவன், "அவன் இன்னுமா இருக்கிறான் ?" என்று திரு.ரொட்ரிகோவைப் பற்றி வெறுப்புடன் ஒருமையில் விசாரித்த போது தெரிந்ததுசிறுபிராயத்தில் மனதில் விதைக்கப்படும் வன்மம் காலம் கடந்தும் கடல் கடந்தும் விளைந்து நிற்கும் என்று.
            நான் அதே ஊரில் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளனாகச் சேர்ந்த சமயம். ஒரு நாள் நகரப் பேருந்தில் எனக்கு அடுத்த இருக்கையில் வந்தமர்ந்த திரு.ரொட்ரிகோவை நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் என்னை நினைவில் வைத்திருக்க வாய்ப்பே இல்லை. இச்சமூகத்தில் நான் நானாக உருவெடுக்கத் தமது பங்களிப்பை அளித்த அவரை யாரோ ஒரு சக பயணி என்று ஆக்கினேன். அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் என் அளவில் இயன்ற பழி தீர்த்தல் அவ்வளவே.
"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்"
எனும் வள்ளுவத்தைப் பேருந்தின் ஜன்னல் வழியாகத் தூக்கியெறிந்தேன்; மாணாக்கர்க்கு அக்குறள் தரும் நீதியைச் சொல்லும் பொறுப்பிலுள்ள ஆசிரியனான நான் அந்நீதியைத் தூக்கியெறிந்தேன்; எனக்கு அதைச் சொல்லித் தந்த ஆசானின் கண் முன்பே  தூக்கியெறிந்தேன்.
             இப்போது எனது அகவை அறுபத்திரண்டு. என் மனதில் திரு.ரொட்ரிகோ மீதான வன்மம் தவறு என்று, எஞ்சியிருக்கும் என் வாழ்நாளில் எப்போதாவது தோன்றினால் இதனை வாசிக்கும் உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கணித பாட ஆசிரியரையும், வர்த்தகமும் கணக்கியல் பாட ஆசிரியரையும் வாழ்நாள் பூராக கொண்டாடுவேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான அனுபவப் பகிர்வு தொடருங்கள்.......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி, சு.ப.சோமசுந்தரம் ஐயா. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.