Jump to content

உரையாடல் கலை: முன்பின் தெரியாத நபர்களிடம் பழகுவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உரையாடல் கலை: முன்பின் தெரியாத நபர்களிடம் பழகுவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அந்நியர்களுடன் பழகுதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சந்தேகத்திற்குரிய இந்த உலகில், நம்மில் பலர் அந்நியர்களுடன் தொடர்புகொள்ள தயங்குகிறோம். ஆனால், முன்பின் அறிமுகமில்லாத நபர்களோடு உரையாடுவது நம்மை புத்திசாலியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

1980களில் அமெரிக்காவில் வளர்ந்த மற்ற குழந்தைகளைப் போலவே அந்நியர்கள் குறித்த பயத்துடனே நானும் வளர்ந்தேன். அந்நியர்கள் ஆபத்தானவர்கள் என்ற கருத்து அந்த நாட்களில் மிகவும் பரபரப்பாக இருந்தது. பெற்றோரின் அக்கறையும், மனிதர்களின் இயல்பான எச்சரிக்கை உணர்வும் ஊடகங்கள் மற்றும் சமூக நம்பிக்கையின் வீழ்ச்சியால் மிகைப்படுத்தப்பட்டிருந்தது.

அந்நியர்களுடன் பழகுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தைப் பரப்புவதில் காவல்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், ஊடகப் பிரமுகர்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.

சிலருக்கு அந்நியர்களுடன் மோசமான அனுபவங்கள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லாவிட்டாலும்கூட, அந்நியர்கள் ஆபத்தானவர்கள் என்று கூறுவதற்கு போதுமான புள்ளிவிவரங்கள் இல்லை. குழந்தைகளுக்கு எதிரான பெரும்பாலான பாலியல் மற்றும் வன்முறைக் குற்றங்கள் உறவினர்கள், அண்டைவீட்டார் மற்றும் குடும்ப நண்பர்கள் என தெரிந்தவர்களால் செய்யப்படுகின்றன.

 

அந்நியர்கள் ஆபத்தானவர்கள் என்ற இந்த சிந்தனை முறை, நம் பிற்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? மதிப்பு வாய்ந்த ஏதேனும் ஒன்றை நாம் தவறவிட்டுள்ளோமா?

உலகில் அவர்கள் சந்திக்காத அனைவரும் ஆபத்தானவர்கள் என்று குழந்தைகளுக்கு கற்பிப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும் என சில சமூக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் டயட்லிண்ட் ஸ்டோல், பல தசாப்தங்களாக நிலவும் இந்தக் கருத்து, முழு தலைமுறையின் பிறரை நம்புவதற்கான திறனை சேதப்படுத்தியிருக்கலாம் என்கிறார். பல சமூக செயல்பாட்டிற்கு நம்பிக்கை மிக முக்கியமானது என்பதால் இது பிரச்னைக்குரிய விஷயம்.

 

அந்நியர்களுக்கு பயப்படுவதால் நாம் நிறைய இழக்கிறோம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்நியர்களுக்கு பயப்படுவதால் எத்தனை சமூக அல்லது பொருளாதார வாய்ப்புகளை நாம் இழக்கிறோம் என்பது குறித்து ஸ்டோல் ஆச்சரியப்படுகிறார். அந்நியர்கள் குழந்தைகளை அணுக வேண்டும் என்றோ, குழந்தைகள் அந்நியர்களை அணுக வேண்டும் என்றோ நான் பரிந்துரைக்கவில்லை. பெரியவர்களாகிய நாம் அந்நியர்களிடம் பாதுகாப்பாகப் பேசுவதன் நன்மைகளைப் பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும் என்று நம்புகிறேன் .

The Power of Strangers: The Benefits of Connecting in a Suspicious World என்ற என்னுடைய புத்தகத்திற்காக நாம் ஏன் அந்நியர்களுடன் பேசுவதில்லை என்பது குறித்து பல வருடங்களாக ஆராய்ந்தேன். இந்த முயற்சி மானுடவியலாளர்கள், உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், நகர்ப்புற வடிவமைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், தத்துவவாதிகள், இறையியலாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தற்செயலான அந்நியர்களுடன் என்னை இணைத்தது.

அந்நியர்களுக்கு பயப்படுவதால் நாம் நிறைய இழக்கிறோம். சரியான சூழ்நிலையில் அந்நியர்களுடன் பேசுவது நமக்கும், நமது சுற்றுப்புறங்களுக்கும், நமது நகரங்களுக்கும், நமது நாட்டிற்கும், நமது உலகத்திற்கும் நன்மை தரும். அந்நியர்களுடன் பேசுவது உங்களுக்கு புதிய விஷயங்களைக் கற்பிக்கவும், உங்களை ஆழப்படுத்தவும், உங்களை சிறந்த குடிமகனாகவும், சிறந்த சிந்தனையாளராகவும், சிறந்த மனிதராக மாற்றவும் உதவும். இது வாழ்வதற்கான சிறந்த வழி என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவில் நான் கற்றுக்கொண்டேன்.

 

பேச்சு

பட மூலாதாரம்,GETTY IMAGES

6,000 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்நியர்கள் மிகுந்த சமூக அமைப்பின் ஒரு வடிவமான நகரங்களில் மனிதர்கள் வாழ்ந்து வந்தாலும், முகம் தெரியாத அந்நியர்களுடன் பேசும்போது என்ன நடக்கிறது என்பதை சமீபத்தில்தான் உளவியலாளர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

இங்கிலாந்தின் சசெக்ஸ் பல்கலைக்கழக உளவியலாளர் கில்லியன் சாண்ட்ஸ்ட்ரோம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எலிசபெத் டன் ஆகியோர் ஒரு பரிசோதனையின் முடிவை கடந்த 2013ஆம் ஆண்டு வெளியிட்டனர். அந்த ஆய்வில் டொரொண்டோவில் உள்ள ஒரு தேநீர் கடையில் 30 நபர்கள் தேநீர் பரிமாறும் நபருடன் சிரிக்கவும் பேசவும் வைக்கப்பட்டனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் தேநீரை வாங்கும்போது அந்நியருடன் பேசியவர்கள், பேசாதவர்களைக் காட்டிலும் வலுவான உணர்வையும் மேம்பட்ட மனநிலையையும் உணர்ந்ததாக தெரிவித்தனர்.

சிகாகோ பல்கலைக்கழக நடத்தை விஞ்ஞானிகள் நிக்கோலஸ் எப்லி மற்றும் ஜூலியானா ஷ்ரோடர் இணைந்து நடத்திய ஓர் ஆய்வில், வெகுஜன போக்குவரத்து, டாக்சி மற்றும் காத்திருப்பு அறைகளில் இருக்கும்போது அந்நியர்களுடன் பேசுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த ஆய்வின் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் இந்த அனுபவம் மோசமாக இருக்கும் இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால், பங்கேற்பாளர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டபோது, அந்நியர்கள் வியக்கத்தக்க வகையில் ஆர்வமுள்ள மற்றும் இனிமையானவர்களாக இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். "அந்நியர் ஒருவருடன் பேசுவது சமூக நிராகரிப்பின் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று பயணிகள் நினைக்கிறார்கள்" என எப்லி மற்றும் ஷ்ரோடர் குறிப்பிட்டனர். அதோடு, "நாங்கள் பார்த்தவரை, இது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை" என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அந்நியர்களுடன் உரையாடிய பங்கேற்பாளர்கள், உரையாடல்கள் சுவாரஸ்யமாகவும், தாங்கள் கணித்ததை விட நீண்ட காலம் நீடித்ததாகவும், அவர்களின் பயணங்களை இனிமையாக மாற்றியதாகவும் தெரிவித்தனர். இது சமூக தொடர்புகளின் ஆழமான தவறான புரிதலை காட்டுவதாக கூறும் எப்லி மற்றும் ஷ்ரோடர், "மனிதர்கள் சமூக விலங்குகளாக இருக்கலாம் ஆனால் எப்போதும் தங்கள் சொந்த நலனுக்காக போதுமான சமூகமாக இருக்க மாட்டார்கள்" என்று தெரிவிக்கின்றனர்.

இந்த முடிவுகள் மத்திய மேற்கு அமெரிக்க நட்பைப் பற்றியதாக இல்லாமல் இருக்க, எப்லே மற்றும் ஷ்ரோடர் அதே பரிசோதனையை லண்டனில் வெகுஜனப் போக்குவரத்தில் நடத்தினர். அங்கும், பயணிகளின் உரையாடல்கள் சிறப்பாக நடந்ததால் எப்லி மற்றும் ஷ்ரோடருக்கு அதே முடிவுகள் கிடைத்தன.

 

தேநீர் கடையில் நடந்த ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பலதரப்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய மற்ற நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளிலும் இதே மாதிரியான முடிவுகள் கிடைத்தன. பலர் அந்நியர்களுடன் பேச பயப்படுகிறார்கள், ஆனால் பேசும்போது, அவர்கள் நன்றாக உணர்கிறார்கள் என்பது அந்த ஆய்வில் கிடைத்த நிலையான தகவல்.

அந்நியர்களுடன் பேசுவது பாதுகாப்பான உணர்வைத் தருவதாகவும், தங்களைச் சுற்றியுள்ளவர்கள் நல்லவர்கள் என்று உறுதிமொழியைத் தருவதாகவும் பல நிபுணர்களும் பொதுமக்களும் என்னிடம் கூறினார்கள்.

எனினும், அந்நியர்களிடம் பேசுவதில் மக்கள் சங்கடத்தை உணர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. நாம் தவறாகப் பேசிவிடுவோம், நம்மிடம் பேசுவதற்கு எதுவுமில்லை, வேறு குழுவைச் சேர்ந்தவர்களுடன் பேச பயப்படுவது என சமூக நெறிமுறைகளை மீறுவதைப் பற்றி மக்கள் கவலைப்படுகிறார்கள்.

ஒருவரோடு ஒருவர் பேசுவதைத் தடுக்க பல விஷயங்கள் சதி செய்கின்றன. குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள். நமக்கு அருகே உள்ளவர்களுடன் தொடர்புகொள்தலை தவிர்ப்பதை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் எளிமையாக்கியுள்ளன. நமக்கு நம்பத்தகாதவராகத் தோன்றும் ஒருவரை அணுகுவதில் இயல்பாகவே நாம் எச்சரிக்கையாக இருக்கலாம். நமக்கு அறிமுகமான நம்பிக்கையற்றவர்களைவிட கடந்த காலத்தில் நாம் நம்பிய ஒருவரைப் போலவே இருக்கும் நபருடன் நாம் பழக விரும்புகிறோம்.

அந்நியர்கள் ஆபத்தானவர்கள் என்ற அச்சம் நீங்கும்போது, மக்கள் நிம்மதியடைவது ஆச்சரியமாக உள்ளது. சில அந்நியர்களுடன் நேர்மறையான தொடர்பைக் கொண்டிருந்தபோது இதை நானே உணர்ந்தேன். இந்த உலகம் ஆபத்தானது என்ற கருத்தைக் கைவிடுவதே அதற்கான நிவாரணமாக இருக்கலாம் எனக் கூறும் சாண்ட்ஸ்ட்ரோம், அதன் பிறகு நீங்கள் அந்நியர்களுடன் உரையாடலாம், அவை சிறப்பாக இருக்கும் என்கிறார்.

அந்நியர்களுடன் தொடர்புகொள்வது, சமூக தொடர்புகளை உருவாக்க மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீது நம்பிக்கையை வளர்க்க உதவும். "நண்பர்களை எப்படி உருவாக்குவது என்பதை நான் மறந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால், பெரும்பாலான மக்கள் நட்பாக உள்ளனர். நீங்கள் உங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதை இந்த ஆய்வு எனக்கு நினைவுபடுத்தியுள்ளது" என்று சாண்ட்ஸ்ட்ரோமின் சமீபத்திய சோதனை ஒன்றில் பங்கேற்ற ஒரு பல்கலைக்கழக மாணவர் தெரிவித்தார்.

 

அந்நியர்களுடன் தொடர்புகொள்வது நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீது நம்பிக்கையை வளர்க்க உதவும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெள்ளைக்காரர் என்ற முறையில், அந்நியர்களுடனான எனது தொடர்புகள் வெள்ளையர்கள் இல்லாத நபர்களுடன் குறைவாக இருக்கும் என்பதை தொடக்கத்திலேயே நான் உணர்ந்தேன். எனவே, எனது புத்தகத்திற்கான ஆராய்ச்சின் போது பலதரப்பட்ட மக்களுடன் பேசுவதை உறுதி செய்தேன். அவர்களிடம் மாறுபட்ட பின்னணிகள் மற்றும் அனுபவங்கள் இருந்தபோதிலும், அவை பெரும்பாலும் ஆய்வு முடிவுகளில் காணக்கூடிய அதே நேர்மறையான விளைவுகளை வெளிப்படுத்தின. இந்தத் தொடர்புகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை என்று நான் கருதமாட்டேன். மேலும் அந்நியர்களுடன் அதிர்ச்சிகரமான அனுபவங்களைக் கொண்டவர்களின் கவலைகளை நான் எந்த வகையிலும் நிராகரிக்கவில்லை. கூடுதலாக, அந்நியர்களுடன் உரையாடும்போது இதைக் கவனத்தில் கொள்ளுமாறு என் நிலையில் இருக்கும் ஆண்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

தெரியாத நபர்களுடன் உரையாடுவதற்கு சாண்ட்ஸ்ட்ரோம் சில ஆலோனைகளை வழங்குகிறார். அவர்களைப் பேச வைக்க முதலில் ஏதேனும் ஒரு திறந்த கேள்வியைக் கேளுங்கள். அதன் பிறகு, இருவரிடமும் உள்ள பொதுவான விஷயம் குறித்து பேசுங்கள். வானிலை குறித்து பேசுவதை சிறந்த உதாரணமாக அவர் கூறுகிறார்.

உங்களால் முடிந்தால், அதை முயற்சி செய்வது பலனளிக்கும். அந்நியர்களுடன் பேசுவது நீங்கள் எதிர்பார்ப்பதை விட ஆழமான வழிகளில் உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டு வரும்.

அந்நியர்களுடன் பேசுவது நம்மை புத்திசாலியாகவும், பிறரின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடியவராகவும் மாற்றும் என்கிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் ஆலன். அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, நகரத்தின் ஏழ்மையான பக்கத்திலிருந்து விலகி இருக்குமாறு அவரை சக ஊழியர்கள் தொடர்ந்து எச்சரித்தனர். அந்நியர்கள் குறித்த பயம் தன்னுடைய சக ஊழியர்களின் அறிவுசார் மற்றும் சமூக திறன்களை அரித்துவிட்டதாக அவர் நம்பினார். அங்கிருந்து விலகி இருக்க மறுத்துவிட்ட டேனியல் ஆலன், அதன் சுற்றுப்புறங்களில் பாரட்டத்தக்க சில வேலைகளை செய்தார். மேலும், அந்நியர்களுடன் தொடர்புகொள்ளாத மக்கள் மற்றும் குழுக்களை இணைப்பதற்காக தன்னுடைய தொழில் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். நமக்கு பரிட்சயமான உலகத்திற்கு வெளியே இருந்து பெறப்படும் உண்மையான அறிவு மட்டுமே பயத்தைப் போக்கும் எனக் கூறும் ஆலன், அந்த அறிவு அந்நியர்களுடன் உரையாடுவது மூலமே கிடைக்கும் என்கிறார்.

அந்நியர்களுடன் பேசுவதன் மூலம், மனித இனத்தின் சிக்கலான தன்மையையும், எண்ணற்ற மனித அனுபவங்களையும் நீங்கள் காணலாம். மேலும், மற்றவரின் பார்வையில் இருந்து இந்த உலகைப் பார்க்க முடியும். அது இல்லாமல் ஞானம் சாத்தியமற்றது.

ஆனால், அது எளிதானது அல்ல. உலகம் மற்றும் அதில் உங்களது இடம் பற்றிய அனுமானங்களை நீங்கள் தொடர்ந்து மறுபரிசீலனை செய்வதை காண்பீர்கள். இது கடினமானதாகவும், திசைதிருப்பக்கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் உற்சாகமாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும். நாம் எவ்வாறு தனிமனிதனாக வளர்கிறோம், சமூகங்களாக ஒன்றிணைந்து நடத்துகிறோம் என்பதும் இதுதான். இப்படித்தான் நாம் ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறோம், ஒருவரையொருவர் அறிந்துகொள்வதன் மூலம் மட்டுமே நாம் ஒன்றாக வாழ முடியும் என்று நம்புகிறோம்.

அந்நியர்களுக்கு பயந்து வளர்க்கப்பட்ட நான், இப்போது அவர்களை நம்பிக்கையின் ஆதாரமாகக் காண்கிறேன் என்பது முரண்பாடான ஒன்று. என்னுடைய ஃபோன் அல்லது மடிக்கணிணி மூலம் கிடைக்கும் மனிதநேயத்தைப் பற்றிய எனது எல்லா கருத்துகளையும் நான் அடிப்படையாகக் கொண்டால், மற்ற நபர்களைப் பற்றி எனக்கு மிகவும் எதிர்மறையான பார்வையே இருக்கும். அந்நியர் ஆபத்தால்நான் முடங்கிவிடுவேன். நான் மக்களிடம் பேசினேன். உலகத்தைப் பற்றிய எனது கருத்தை நான் பெருமளவில் அவர்கள் மீது அடிப்படையாகக் கொண்டுள்ளேன். மேலும் அந்நியர்களுடன் பேசுவதன் விளைவாக, என்னுடைய கண்ணோட்டம் கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளது.

"நான் அந்நியர்களுடன் பேசுவதால், ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் விரும்புகிறேன்" என்று ஆலன் என்னிடம் கூறினார். அமெரிக்காவில் ஒரு கறுப்பினப் பெண்ணாக அவருடைய தொடர்புகள் எனக்கு இருந்ததை விட மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும். எனினும், அந்நியர்களிடம் பேசும் போது, "எதிர்மறைகளை விட நேர்மறைகள் அதிகமாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

அந்நியர்கள் ஆபத்தானவர்கள் என்ற கருத்தை பரப்புவதில் முன்னணியில் இருந்த அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான மையம், கடந்த 2018ஆம் ஆண்டு அந்தக் கருத்தைக் கைவிட்டது. "நாங்கள் குழந்தைகளை பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க அதிகாரம் அளிக்க முயற்சிக்கிறோம், அவர்களை வாழ்நாள் முழுவதும் காயப்படுத்தவில்லை" என்று அந்த மையத்தின் நிர்வாகி கால் வால்ஷ் என்னிடம் கூறினார்.

அவர்களின் இந்த முடிவு உலகெங்கிலும் உள்ள பிற குழந்தைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனங்களிலும் பிரதிபலித்தது.

இது ஒரு நல்ல தொடக்கம்தான்.

https://www.bbc.com/tamil/global-63463348

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.