Jump to content

சீனா: புதிய கூட்டாளிகளும் பழைய எதிரிகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனா: புதிய கூட்டாளிகளும் பழைய எதிரிகளும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் 20ஆவது தேசிய காங்கிரஸை ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 22 வரை நடத்தியது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் 96 மில்லியன் உறுப்பினர்களின் பிரதிநிதிகள், அதன் உயர்மட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் கட்சிக்கு எதிர்கால திசையை அமைப்பதற்கும் கூடினார்கள். 

இந்த ஆண்டு காங்கிரஸின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று ‘நவீனமயமாக்கலுக்கான சீனாவின் பாதை’ மூலம், நாட்டின் ‘புத்துணர்ச்சி’ ஆகும். 

image_7f9e69b98d.jpg

இம்மாநாட்டுக்கு, அதன் பொதுச் செயலாளரான ஷி ஜிங்பிங் சமர்ப்பித்த அறிக்கையில், சீனாவை ‘ஒரு நவீன சோசலிச நாடாக’ கட்டியெழுப்புவதற்கான முன்னோக்கிய வழியை வரைந்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார். 64 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையானது, சீனாவின் அபிவிருத்தியையும் நாகரிகமான சமூக விழுமியங்களையும் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதையும் பற்றியதாக அமைந்துள்ளது. இந்த முன்மொழிவுகள், சீனாவுக்கு மட்டுமல்ல; ஏனைய மூன்றாமுலக நாடுகளுக்குமானவை.  

இந்த அறிக்கை இரண்டு விடயங்களை முன்மொழிகிறது. முதலாவது, தொடங்கியுள்ள ‘சோசலிச நவீனமயமாக்கலை’ 2020 முதல் 2035 வரையான காலப்பகுதிக்குள் நிறைவு செய்தல். 

image_d1b0fa4077.jpg

இரண்டாவது, ‘அமைதியான நவீனமயமாக்கல்’ மூலம் சீனாவை வளமான, வலுவான, ஜனநாயக, பண்பாட்டு ரீதியாக முன்னேறிய, இணக்கமான ‘நவீன சோசலிச நாடாக’ உருவாக்குதல். இதை 2049 வரை (மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டதன் நூற்றாண்டு) நிலைநிறுத்தல். இவற்றை எவ்வாறு சாத்தியமாக்குவது என்பதற்கான விரிவானதும் விளக்கமானதுமான வரைபடத்தை இவ்வறிக்கை கொண்டுள்ளது. 

இன்று எதிரிகளையும் நண்பர்களையும் கொண்ட உலகில், தலையாய பொருளாதார சக்தியாக சீனா வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி, திடீரென்று ஏற்பட்டதல்ல. அதன் பின்னால், மிகக் கவனமான திட்டமிடலும் உழைப்பும் மக்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் இருக்கிறது. 

1949இல் மாஓ சேதுங் தலைமையில், சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அந்த நாடு உலகின் 11ஆவது ஏழை நாடாக இருந்தது. இன்று உலகின் முதன்மையான பொருளாதார வல்லரசாக வளர்ந்துள்ளது.

இம்மாநாட்டின் வழி, மூன்றாவது முறையாக சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதியாக ஷி ஜிங்பிங் தெரிவாகியுள்ளார். மாஓ சேதுங்குக்குப் பிறகு, ஒரு தசாப்தத்துக்கு மேல் பதவிவகிக்கும் முதலாவது ஜனாதிபதியாக ஷி ஜிங்பிங் உருவெடுத்துள்ளார். 

இவர் 2012இல் கட்சியின் 18ஆவது தேசிய காங்கிரஸில் பொதுச் செயலாளராகத் தெரிவாகி, மார்ச் 2013இல் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், நாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளது. 

பொருளாதார ரீதியாக, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருமடங்காக உயர்ந்துள்ளது, 2013 இல் 58.8 டிரில்லியன் யுவானிலிருந்து 2021 இல் 114.37 டிரில்லியன் யுவானாக வளர்ந்து, அதே காலகட்டத்தில், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 6.6 சதவிகிதம் என்ற விகிதத்தில் விரிவடைந்தது. இதற்கிடையில், நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2013 மற்றும் 2021க்கு இடையில் கிட்டத்தட்ட இருமடங்கானது.

உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 2021ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.5 சதவீதமாக இருந்தது, மேலும், 2013 முதல் 2021 வரையிலான உலக பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதத்துக்கு சீனா காரணமாக இருந்தது. சீனாவும் 2021இல் உலக பொருட்களின் 30 சதவீதத்தை உற்பத்தி செய்தது. 

இவ்வறிக்கையின் மையக் கருத்தானது, ‘அமைதியான நவீனமயமாக்கலை எவ்வாறு நிறைவேற்றுவது’ என்பதாகும். இதை ஷி ஜிங்பிங் பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்: “இது அனைத்து நாடுகளின் நவீனமயமாக்கல் செயல்முறைகளுக்கு பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளது, ஆனால், இது சீனச் சூழலுக்கான தனித்துவமான அம்சங்களால் வகைப்படுத்தப்படுகிறது. கன்பூசியன் தத்துவார்த்த அடித்தளத்தில், சீனப் பண்பாட்டுடன் மிகவும் இணக்கமாக, ‘அமைதியான நவீனமயமாக்கல்’ ஒரு முழுமையான தத்துவார்த்த அமைப்பை உள்ளடக்கியது. இதன் முக்கியான அம்சம் யாதெனில், இதுவரை மேற்குலகின் பொருளாதார மாதிரிக்கு மாற்று இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக மேற்குலக ஏகபோகத்துக்குச் சவாலான ஒரு தத்துவார்த்த மாதிரியை முன்மொழிகிறது”.  

image_1479ed9c7d.jpg

இவ்வறிக்கை உணர்த்த விரும்புவது யாதெனில், ஈரானிய மாதிரி, உகண்டா மாதிரி, பொலிவியா மாதிரி போன்ற அனைத்தும் செல்லுபடியானதாகும். அதுபோலவே, சீனப் பரிசோதனையும் செல்லுபடியாகும். இந்த அறிக்கையின்  அடிப்படை, நாடுகள் தத்தம் வளர்ச்சியை நோக்கி, ஒரு சுயாதீனமான பாதையைத் தொடர்வது முக்கியமாகும்.

சமீபத்திய வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், அமெரிக்க நலன்களுக்கு வெளியே, வளர்ச்சியடைய முயலும் ஒவ்வொரு நாடும், எண்ணற்ற வழிகளில் எவ்வாறு பயமுறுத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. 

இந்நாடுகள், வண்ணப் புரட்சிகள், ஆட்சி மாற்றம், சட்டவிரோதத் தடைகள், பொருளாதார முற்றுகை, நேட்டோ நாசவேலை, படையெடுப்பு ஆகியவற்றின் இலக்காக மாறுகின்றன. 

சீனா முன்மொழியும் மாற்றானது, இன்று உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடையும் நாடுகளில் எதிரொலிக்கிறது. ஏனெனில், 140க்கும் மேலான நாடுகளில், மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது. இந்நாடுகளால், சீனாவின் உயர்தர பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு போன்ற கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இந்த அறிக்கை, சீனாவுக்கான திட்டவட்டமான கட்டாயத்தை வலியுறுத்தியது. சீனாவின் தொழில்நுட்ப மேலாண்மையை, திட்டவட்டமாகக் குறிக்கிறது. சீனாவின் தொழில்நுட்ப மேலாண்மை, எவ்வாறு சீனாவின் தன்னிகரில்லா நிலைக்கு வழிசெய்யும் என்பதையும் கோடிட்டுக்காட்டுகிறது. 

குறிப்பாக, குறைக்கடத்திகள்  உற்பத்தியில் தடம் புரள எந்தத் தடையும் இல்லை என்பதால், தொழில்நுட்ப தன்னம்பிக்கையை விரைவுபடுத்துகிறது. குறைக்கடத்திகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களில், அதன் தொழில்நுட்ப சுதந்திரத்தை விரைவுபடுத்துவதற்கான சீனாவின் உந்துதலை முடக்குவதற்கு அமெரிக்கா கங்கணம் கட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியே, சீனாவின் குறைக்கடத்திகள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் ஆகும்.

உலகளாவிய குறைக்கடத்தி தொழிற்றுறையின் அளவு, தற்போது 500 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் அதன் அளவு ஒரு டிரில்லியன் டொலர் என இரட்டிப்பாக்க வாய்ப்புள்ளது. 

2030ஆம் ஆண்டளவில் குறைக்கடத்தி தொழிற்றுறை வளர்ச்சியில், சுமார் 40 சதவீதத்தை சீனா வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது, அமெரிக்காவின் தலையாய இடத்தை சீனாவுக்கு வழங்கும். இதுவே, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கான உடனடி தூண்டுதலாகவும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து சீனாவின் தொழிற்றுறையை முன்னணியில் இருந்து தடுக்கும் முயற்சியாகவும் உள்ளது. 

அயலுறவுக் கொள்கை தொடர்பில், அறிக்கையில் மிகத் தெளிவாக உள்ளது. சீனா எந்த விதமான ஒருதலைப்பட்சவாதத்துக்கும் குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக குறிவைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் பிரத்தியேக குழுக்களுக்கும் எதிரானது. 

தற்போதுள்ள உலகளாவிய நிர்வாக முறையானது, மூன்றாமுலக நாடுகளுக்கு மிகவும் நியாயமற்றது. சீனா தன்னை ஒரு நாகரிக அரசாகவும் ஒரு சோசலிச நாடாகவும் உலகின் முன்னணி வளரும் நாடாகவும், ஒரே நேரத்தில் கருதுகிறது. 

உலகில் ஆதிக்கம் செலுத்துவதில், தங்கள் நாடு ஆர்வம் காட்டவில்லை என்று சீனா தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. மனிதகுலத்தின் இக்கட்டான பிரச்சினைகளைத் தீர்க்க, மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க சீனா விரும்புகிறது. உதாரணமாக, ‘ஒருவார் ஒருவழி’ முன்முயற்சியானது, 2013 இல் ‘வெற்றி-வெற்றி’  (இருதரப்புக்கு) ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டின் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. 

மேலும், இதுவரை 150 நாடுகளில் ஒரு டிரில்லியன் டொலர் முதலீடு மற்றும் கட்டுமான ஒப்பந்தங்களுடன் மிகவும் தேவையான உட்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. காலநிலை பேரழிவைச் சமாளிப்பதில் சீனாவின் ஆர்வம், கடந்த பத்தாண்டுகளில், உலகின் புதிய காடுகளில் கால் பகுதியை மீளவனமாக்கி, மரங்களை நட்டுள்ளதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடு மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் உலகத்தின் முதன்மையாளராகத் திகழ்கின்றது. 

சீனாவின் பொருளாதாரக் கூட்டணிகள் இன்று அதிகரிக்கின்றன. உலகளாவிய ரீதியில், சீனாவின் பொருளாதாரச் செல்வாக்கு, அமெரிக்காவை விஞ்சியுள்ளது. இது, மேற்குலகுக்குப் புதிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. சீனாவுக்குப் புதிய நண்பர்களைத் தந்துள்ளது. உலகை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நெருக்கடியும், உக்ரேன் யுத்தமும் சீனாவை முதன்மையான நிலைக்குத் தள்ளியுள்ளன. ஷியின் அடுத்த ஐந்து ஆண்டுகள் உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்க வல்லன.

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீனா-புதிய-கூட்டாளிகளும்-பழைய-எதிரிகளும்/91-306993

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.