Jump to content

கேரள அரசின் டிஜிட்டல் ரீசர்வே: தமிழ்நாட்டின் பகுதிகள் பறிபோகும் என எல்லையோரத் தமிழர்கள் அச்சம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேரள அரசின் டிஜிட்டல் ரீசர்வே: தமிழ்நாட்டின் பகுதிகள் பறிபோகும் என எல்லையோரத் தமிழர்கள் அச்சம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பி.சுதாகர்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கேரள முதல்வர் பினராயி விஜயன்

 

படக்குறிப்பு,

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள மாநில அரசு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து அந்த மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரீ சர்வேவை தொடங்கியது. கேரள மாநில அரசு நடத்தும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால், தமிழகம் கிட்டத்தட்ட சுமார் 1000 சதுர கிலோமீட்டர் வரையிலான பரப்பை கேரளாவிடம் இழக்கும் அபாயம் உள்ளதாக, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழக அரசுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரனை சந்தித்து இதுதொடர்பான ஆவணங்களை அளித்தனர்.

 

கேரளா அரசு 14 மாவட்டங்களிலுள்ள 200 கிராமங்களில் டிஜிட்டல் ரீ சர்வே செய்யும் இடங்களை அறிவித்திருந்தது. இந்த சர்வே பணியில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 1500 சர்வேயர்கள், 3200 உதவியாளர்கள், 4 வருடங்களில் தொடர்ச்சியாக பணி செய்து முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

 

இதனால் தமிழகத்தை ஒட்டியிருக்கும் கேரளத்தின் 7 மாவட்டங்களிலுள்ள, 15 தாலுக்காக்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேனி மாவட்ட விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இன்று தலைமைச்செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தலைமையில் தமிழக வருவாய்த்துறை செயலாளர் மற்றும் நில அளவைத் துறை செயலாளர் ஆகியோருடன் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. தமிழக எல்லையோரம் கேரளாவில் உள்ள கட்டக்கடை நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு , புனலூர் கோணி , பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளம், பாலக்காடு, மன்னார்காடு, சித்தூர், நிலம்பூர், வைத்திரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி ஆகிய 15 தாலுகாக்களில் டிஜிட்டல் ரீ சர்வேயை நிறுத்தி வைக்க கேரள மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த உரையாடலில், ஜமீன் பட்டா அடிப்படையிலும், 1956 மொழிவழி பிரிவினை கமிட்டி கொடுத்த நில வரைவியல் அடிப்படையிலும் அளவீடு நடத்தப்பட வேண்டும். குறிப்பாக தமிழக கேரள எல்லை முறையாக வரையறை செய்யப்பட வேண்டும் என்று சொன்னதையும் வருவாய்த்துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்தனர். இரண்டொரு நாட்களில் வருவாய்த் துறை மற்றும் சர்வே துறை சார்ந்த துணை செயலாளர் மட்டத்திலான இரண்டு அதிகாரிகள் தேனிக்கு வரவிருக்கிறார்கள். அவர்களோடு எங்கள் சங்க நிர்வாகிகளையும் இணைத்துக் கொள்ள அமைச்சர் சொல்லியுள்ளதாக கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

 

எல்லையோரத் தமிழர்களின் அச்சம் என்ன? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் சொல்வதென்ன?

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருஙகிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பிபிசி தமிழிடம் இதுகுறித்து பேசினார்.

தமிழக-கேரள எல்லையையே அளவிட்டு முழுமைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மறு அளவீடு முழுமை பெறும். மாநில எல்லையை முறையாக அளவீடு செய்யாமல், எந்த அடிப்படையில் வருவாய் நிலங்களை கேரள மாநில அரசு மறு அளவீடு செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

1956 இல் மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக கேரள எல்லைகள் பிரிக்கப்படவில்லை. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் மாகாணங்களுக்கும், தமிழகத்திற்கும் எந்த முரணும் இல்லை. அதனால் எல்லைகள் பிரிக்கப்படவில்லை என்றார்.

பசல் அலி தலைமையிலான கமிஷன் 1956 மொழிவாரியாக மாநில எல்லைகளை பிரிக்க சொன்னது. ஆனால் முறையாக, கமிட்டி கொடுத்த வரையறையின் அடிப்படையில் 'தமிழக கேரளா எல்லைகள்' பிரிக்கப்படவில்லை எனவும் அன்வர் பாலசிங்கம் சுட்டிகாட்டினார்.

தமிழக கேரள எல்லையிலுள்ள 822 கிலோ மீட்டர் தூர எல்லையில் பாதியைக்கூட இதுவரை இரு மாநில அரசுகளும் அளக்கவில்லை.

கேரளாவின் 15 தாலுக்காக்களில், இந்த டிஜிட்டல் ரீ சர்வே செய்யப்பட்டால், தமிழகத்தின் ஏழு மாவட்டங்களிலுள்ள மிகப்பெரிய நிலபரப்புகளை தமிழகம் இழப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.

உதாரணமாக 2017ல் உத்தமபாளையம் கோட்டாட்சியர் மற்றும் தேவிகுளம் சப் கலெக்டர் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு சர்வேயில், கம்பம் மெட்டில் உள்ள கேரள போலீஸ் சோதனைச்சாவடி தமிழக எல்லைக்குள் வருகிறது என இரு மாநில அதிகாரிகளும் இணைந்து அளவீடு செய்தனர். ஆனால், இன்று வரைக்கும் கேரளா சோதனைச்சாவடி தமிழகத்திற்குள்தான் இருக்கிறது, அதை நம்மால் எடுக்க முடியவில்லை.

1956 எல்லை பிரிப்பின்போது, கேரளாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து, ஏ.கே. கோபாலன் முதல் ஈ எம் எஸ் நம்பூதிரபாட் வரை கூட்டணி அமைத்து, நவீன கேரளாவை உருவாக்கினார்கள். அவர்களுடைய குறிக்கோள் தமிழக எல்லைகளாகத்தான் இருந்து.

இந்த டிஜிட்டல் ரீ சர்வேவால், சுமார் 1000 சதுர கிலோ மீட்டர் வரையுள்ள, தமிழக பகுதிகளை இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

1986 ஆம் ஆண்டில் கேரளாவிலுள்ள உடும்பஞ்சோலை, பீர்மேடு பகுதியில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான 1240 ஏக்கர் நிலத்தை, தமிழக வனத்துறை அதிகாரிகள் அதிரடி ஆபரேசன் நடத்திதான், மீட்டார்கள். மீட்கவில்லை எனில் இன்றைக்கு அது கேரளாவின் சொத்தாக மாறியிருக்கும் எனவும் அன்வர் பாலசிங்கம் கூறுகிறார்.

 

 

கேரளா டிஜிட்டல் சர்வே

தமிழகத்தில் இருக்கும் பத்மநாபபுரம் அரண்மனை கேரளாவின் சொத்தாக இருக்கிறது. குற்றாலத்தில் 64 ஏக்கர் நிலம் கேரளா அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. செங்கோட்டை அருகே 24 ஏக்கர் நிலம் கேரள வனத்துறையினரின் வசம் உள்ளது. மூணாறில் தமிழக அரசின் பேருந்துகள் நிறுத்துவதற்கு கொடுக்கப்பட்ட 5 சென்ட் நிலத்தையும் தற்போது கேரளா அரசு எடுத்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கேரளாவிற்கு சொந்தமான நிலம் தமிழக அரசால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசுக்கு கேரளாவில் ஒரு பிட்டு நிலம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

மொழிவாரியாக மாநிலஙகள் பிரிக்கப்பட்ட போது, பழனி மலைக்குன்றில் வரும் காந்தலூர், மறையூர்,கீழாந்தூர், கோவிலூர் ஆகிய ஊர்கள் தமிழக வனப்பகுதிக்குள் வருகிறது. மூணாறில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள சட்ட மூணாறு வரைதான் கேரளாவுக்கு சொந்தம், எப்படி மற்ற பகுதிகள் கேரளாவிற்குள் சேர்ந்தது என கேள்வி எழுப்பினார்.

தேவிகுளம் தாலுகாவில் டாடா வசம் உள்ள கண்ணன் தேவன் தேயிலை தோட்டங்களை, மறு அளவீடு செய்ய வேண்டும் என்று கடந்த 2004 ஆம் ஆண்டு, நான் தலைவராக இருந்த கேரள தமிழர் கூட்டமைப்பு ஒரு கோரிக்கையை முன்வைத்தது.

கோரிக்கை சட்டமன்றத்தில் விவாதமாக எழுந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில், அன்றைக்கு கேரள மாநில முதல்வராக இருந்த வி.எஸ் அச்சுதானந்தன் சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி டாட்டா வசமுள்ள நிலங்களை சர்வே செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவருடைய மேற்பார்வையில், ஏஜென்சி நியமித்து ஓராண்டுக்குள் மறு அளவீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

 

 

கேரளா டிஜிட்டல் சர்வே

முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டது கேரள மாநில வருவாய்த்துறை. இப்போது விஷயம் மறுபடியும் சூடு பிடித்திருக்கிறது.

1956ல் நடத்தப்பட்ட மொழிவாரி மாநில பிரிவினையின் போது தமிழக, கேரளா எல்லையோர கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை அடித்து விரட்டிய பட்டம் தாணுப்பிள்ளை அரசாங்கம், அதை நாணல் காடுகளாகவும்,அட்டைக் காடுகளாகவும் வகைப்படுத்தி, அதில் மலையாளிகளை வலுக்கட்டாயமாக குடியேற்றியது.

அப்படி குடியேற்றப்பட்ட மலையாளிகள் தான் இன்று தமிழக-கேரள எல்லையில் உள்ள, தமிழகத்திற்கு சொந்தமான வன நிலங்களை வருவாய் நிலங்களாக மாற்றி, கேரளாவில் பட்டாவை முறையாக பெற்று, ஆண்டனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக சர்வே துறையில் தமிழக வனநிலமாக குறிக்கப்பட்டிருக்கும் ஒரு இடம் ,கேரள வருவாய்த் துறையால் ஒரு மலையாளியின் நிலமாக வகைப்படுத்தப்பட்ட கதைதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

எல்லையில் இத்தனை குளறுபடிகளை வைத்துக்கொண்டு, இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாக்களை மறு அளவீடு செய்யப் போகிறோம் என்று கேரள மாநில வருவாய் துறை அமைச்சர் ராஜன் அறிவித்திருப்பது உண்மையிலேயே கண்டனத்திற்குரியது.

1905ல் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பதிவேடுகள். 1966இல் நடத்தப்பட்ட மறு அளவீட்டில் எடுக்கப்பட்ட குறிப்புகள் என அத்தனையையும் காற்றில் பறக்க விட்டு, டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறது கேரள மாநில அரசு.

 

 

கேரளா டிஜிட்டல் சர்வே

கேரளா அரசு ஒரு விரிவான தீர்வு சட்டத்தை தயாரித்து வருவதாகவும், அதன் வரைவு வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர், பொது விவாதத்திற்கு வைக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்திருக்கிறார்.

இடுக்கி மாவட்டத்தில் நிலம் அதிகம் வைத்திருக்கும், தமிழ் விவசாயிகளை துன்புறுத்துவதற்கான வாய்ப்பு, இந்த டிஜிட்டல் சர்வேயில் அதிகம் இருப்பதாக கூறினார்.

செப்டம்பர் 15 2020 இல் வழங்கப்பட்ட அரசாணையின் படி,அதாவது மறு அளவீட்டுக்குப் பிறகு ,ஒரு நில உரிமையாளருக்கு கூடுதலாக 5 சதவீத நிலம் இருந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், அதிகப்படியான நிலத்தின் உரிமையை சம்பந்தப்பட்டவருக்கு வழங்க முடியும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவருக்கு கூடுதலாக இரண்டு சென்ட் அதிகமாக இருந்தால் உரிமை வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 10 சென்ட் நிலம் வைத்திருக்கும் ஒருவருக்கு மறு அளவீட்டில் 16 சென்ட் நிலம் வந்தால் அவருக்கு பிரித்து கொடுப்பதில் பிரச்சனை ஏற்படும்.

2020 ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த அரசாணையையும், அதற்கு முன்னால் 1991ல் போடப்பட்ட அரசாணையையும் கவனமாக கேரள மாநில அரசு ரத்து செய்துவிட்டது.

 

இப்போது புதிய மறு அளவீடு. Real Time Kinematic இயந்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக இயங்கும் CORS குறிப்பு நிலையங்களின் நெட்வொர்க் போன்ற சேவைகளின் மூலம் உங்கள் சமீபத்திய நில விவரங்களை உடனடியாக இணையத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

தாசில்தாருக்கும்,மாவட்ட ஆட்சியருக்கும் நில மறு அளவீடு தொடர்பாக கொடுக்கப்பட்ட உரிமைகளை கேரள மாநில அரசு ரத்து செய்திருப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்து கிறது.

அதுபோல் பீர்மேடு தாலுகாவில் உள்ள, வாகமன், மஞ்சு மலை, பெருவந்தானம், குமுளி, வண்டிப்பெரியாறு,பீர்மேடு வரை,மறு அளவீடு செய்வதற்கு முன்னால்,140 ஆண்டுகளாக அந்த மலையகத்தில் பணிபுரியும், தமிழக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளுக்கான மனைகளை வழங்காமல் மறு அளவீடு செய்யவும் அனுமதிக்க மாட்டோம்.

அதுபோல இதுவரை எந்த அளவீடும் செய்யப்படாமல், இருக்கும் டாடா நிறுவனத்தின், கண்ணன் தேவன் மலையும் முழுமையாக அளவீடு செய்யப்பட வேண்டும்.

மொத்த டாட்டாவின் நிலத்தில் 20% நிலம்,அங்கு 142 ஆண்டுகளாக பணிபுரியும் தமிழ் மக்களுக்கு வருவாய் நிலங்களாக ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இடுக்கி மாவட்டத்தில் மறு அளவீடு செய்வதற்கு முன்னால், தேனி, திருப்பூர் இடுக்கி, வயநாடு, நீலகிரி, பாலக்காடு, கோவை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.

எங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டால் தமிழக கேரள எல்லையோரங்களில், எந்தப் பிரச்சனையும் எழாது.

இல்லை உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக கேரள எல்லையை அளவீடு செய்யாமல் தேவிகுளம் பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களில், மறு அளவீட்டை கேரள அரசு நடத்துமானால், சட்டப்படி அதை தடுத்து நிறுத்துவோம் என அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் பிபிசி தமிழிடம் பேசினார்.

கேரளா அரசு தமிழக கேரள எல்லையை இன்னமும் அளக்காமல், கிடக்கும் நிலையில், எந்த அடிப்படையில் தமிழகத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ள இருக்கிறது எனக்கேள்வி எழுப்பினார். கேரள மாநில அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

 

பிரச்னைக்குரிய இடுக்கி, பாலக்காடு, வயநாடு, கொல்லம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், மத்திய பார்வையாளர் இல்லாமல் டிஜிட்டல் சர்வே நடத்துவதை அனுமதிக்க முடியாது.

நீலகிரி மாவட்டத்தோடு நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்ளும் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்ரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி ஆகிய மூன்று தாலுகாக்களில் மொத்தமுள்ள 49 வருவாய் கிராமங்களில், டிஜிட்டல் சர்வே நடத்தும் முன் நீலகிரி - வயநாடு மாவட்ட, மாநில எல்லைகள் அளவீடு செய்யப்பட வேண்டும்.

அதேபோல், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர், ஆலத்தூர், மன்னார்காடு உள்ளிட்ட மூன்று தாலுகாக்களும், கோவை மாவட்டத்தோடு நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதிலும் குறிப்பாக மன்னார்க்காடு தாலுகாவில் வரும் அட்டப்பாடி, தமிழ் விவசாயிகள் 8,000 பேருக்கு மேல் வாழும் ஒரு விவசாய பூமி.

இங்கு ஏற்கனவே கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் விவசாயிகளிடம் நிலவரி வசூலிப்பது தொடர்பான பிரச்னை எழுந்தபோது, அன்றைக்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சம்சுதீனிடம் முறையிட்டும், அட்டப்பாடி விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் பிரமாண்டமான உண்ணாவிரதத்தை நடத்தினோம்.

 

 

தமிழ்நாடு-கேரளா எல்லை

 

படக்குறிப்பு,

தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதி

ஏற்கனவே அட்டப்பாடி விவசாயிகள் மீது எரிச்சலில் இருக்கும் மன்னார்காடு தாலுகா நிர்வாகம், இப்போது தமிழ் விவசாயிகளை பழிவாங்க வாய்ப்பு நிறையவே இருக்கிறது. எனவே மத்திய பார்வையாளர் இல்லாமல், மன்னார்காடு, ஆலத்தூர், சித்தூர், தாலுக்காக்களில் டிஜிட்டல் ரீசர்வேயை அனுமதிக்க முடியாது.

கேரளா ஒரு முழுமையான மாநிலம் இல்லை என்பதற்கு, அதனுடைய முழுமையடையாத, நில அளவை முறையே முதல் சாட்சியாகும்.

அரசாங்கங்கள் மாறும் போதெல்லாம் நில அளவை குறித்து விவாதம் எழுப்புவதும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நீதிமன்றங்களுக்கு செல்வதும், தொடர் கதையாக இருந்து வருகிறது.

மத்திய பார்வையாளர் இல்லாமல் டிஜிட்டல் ரீ சர்வேயை கேரளா அரசு நடத்தினால், கம்பம் மெட்டு மற்றும் ஆனைகட்டி பகுதியில் இருக்கும் கேரளா எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் வருவாய் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

 

படக்குறிப்பு,

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் வருவாய் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

டிஜிட்டல் ரீ சர்வே என்கிற பெயரில், கேரளத்தில் பட்டா நிலம் வைத்திருக்கும் தமிழ் விவசாயிகளை விரட்டியடிப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் அவர்களை கேரளாவிற்கு அனுப்பி, தகுந்த முன்னேற்பாடுகளை செய்வதற்கு முன் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேவிகுளம்,சுல்தான் பத்தேரி, சித்தூர், ஆலத்தூர், புனலூர், நெய்யாற்றின்கரை உள்ளிட்ட 15 தாலுகாக்களில் மத்திய பார்வையாளர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக் காவலர்களை கொண்டு நிலங்களை மறு அளவீடு செய்ய கேரள அரசு முன்வர வேண்டும். இல்லையென்றால் இந்த டிஜிட்டல் அளவீட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

தமிழக அரசு இந்த 15 தாலுக்காவை ஒட்டி இருக்கும் தமிழக பகுதிகளில் ஒரு குழுவை அமைத்து டிஜிட்டல் ரீ சர்வேவை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

கட்ந்த நவம்பர் 1 ஆம் தேதி கேரளா அரசு டிஜிட்டல் ரீ சர்வேயை தொடங்கியதை கண்டித்து, அதே தினத்தில் கம்பத்தில் இரு விவசாய அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கடந்த 7 ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

கேரளா டிஜிட்டல் சர்வே

 

படக்குறிப்பு,

தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக முறையிட்டனர்.

அதில் கேரள மாநிலத்தின் தொடுபுழா உதவி இயக்குநர் கடந்த 13 ஆம் தேதி தேனி நில அளவை உதவி இயக்குநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையை பகிரும் கேரளா மாநிலத்தின் , உடும்பன் சோழா வட்டத்திற்கு உட்பட்ட சின்னக்கானல், சதுரங்கப்பாறை , கருணாபுரம், சாந்தன்பாறை ஆகிய கிரமங்களில் முதல் கட்டமாக நவீன மறு நில அளவை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நவீன நில அளவை செய்வது தொடர்பாக கேரளாவில் நடைபெறும் கூட்டத்தில், கலந்துகொள்ள தேனி மாவட்ட நில அளவை உதவி இயக்குநருக்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தனர்.

உதவி இயக்குநர் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய நேரம் மற்றும் தேதி தெரிவிப்பதாக பதில் அளித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக கேரளா எல்லைப்பகுதிகளில் கேரள அரசு நவீன மறு நில அளவை பணியை துவங்கும் முன், இரு மாநில எல்லைகள் தொடர்பான நில அளவை மற்றும் இதர ஆவணங்களுடன், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நில அளவை , வருவாய்த்துறை அலுவலர்களின் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதன் பின்னரே மூல ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, இரண்டு மாநில எல்லைப்பகுதிகளில் கூட்டு புலத்தணிக்கை மேற்கொண்டு, நவீன மறு நில அளவைப்பணி குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கேரளா அரசு டிஜிட்டல் ரீ சர்வேவை நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி விட்டார்கள். கேரளா, தமிழக அரசுக்கு தெரியாமல் எல்லைப்பகுதியில் டிஜிட்டல் ரீ சர்வே நடத்த முடியாது. மத்திய அரசின் அதிகாரிகளை வைத்து டிஜிட்டல் சர்வே நடத்தப்படுகிறது.

இரு மாநில அரசுகளும் இணைந்து தான் எல்லைப்பகுதியில் டிஜிட்டல் ரீ சர்வே எடுக்க முடியம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் வருவாய் ஆவணங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.

 

 

வயநாடு

இந்த தடவை டிஜிட்டல் ரீ சர்வேவால் 2011 ஆம் ஆண்டைப்போல் தமிழர்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் இருக்காது. இதில் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக இருப்பதாகவும், கேரளா அரசு நம்மை கலந்தாலோசிக்காமல், செய்யக்கூடாது என்பதை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதுவரை இரு மாநில அரசுகளும் இணைந்து டிஜிட்டல் ரீ சர்வே எடுக்கவில்லை. கூட்டம் போட்டு பேசிவிட்டுதான் எடுக்க இருக்கிறோம்.

கேரளா அரசின் டிஜிட்டல் ரீ சர்வேவை கண்டித்து போராட்டம் நடத்திய பெரியாறு வைகை பாசன  விவசாயிகள் சங்கத்தினர், தன்னை சந்தித்து, கடந்த 11 ஆம் தேதி இதுகுறித்து மனு அளித்தனர்.

இதனையடுத்து தலைமைச்செயலகத்தில் வருவாய் மற்றும் சர்வே துறை முதன்மைச்செயலாளர்கள் தலைமையில் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினரும் கலந்துகொள்ள உள்ள கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழக கேரளா எல்லையை ஒட்டி இருக்கும் 7 மாவட்ட ஆட்சியர்கள், இந்த டிஜிட்டல் ரீ சர்வேவின் போது நேரடியாக களத்தில் இருந்து அளக்க முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக விவசாயிகள் மற்றும் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

கேரளா வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் பிபிசி தமிழுக்கு இதுபற்றி விளக்கம் அளித்தார்.

டிஜிட்டல் ரீ சர்வே குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். கேரளா வருவாய்த்துறை மற்றும் சர்வே துறை அதிகாரிகள் தமிழக அரசின் வருவாய் மற்றும் சர்வே துறை அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். தானும் நேரடியாக தமிழக அரசுடனும், வருவாய்த்துறை அமைச்சருடனும் பேசியுள்ளதாக தெரிவித்தார். தமிழக மக்கள் மற்றும் தமிழக கேரளா விவசாயிகளின் கருத்துகளை முழுமையாக கேட்காமல் சர்வே நடத்தப்படாது. கேரளத்தில் டிஜிட்டல் ரீ சர்வேவை வைத்து தமிழகம் கேரளாவில் பிரச்னையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்றார். விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் நிலங்களை முறையாக ஆவணப்படுத்தவே இந்த டிஜிட்டல் ரீ சர்வே எடுக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசின் ஒப்புதலோடுதான் இந்த டிஜிட்டல் ரீ சர்வே எல்லைப்பகுதியில் நடக்க இருக்கிறது என்றார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்திற்கு பிறகு, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cql0nlenng4o

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.