Jump to content

அதிகரிக்கும் அமெரிக்க ஈடுபாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் அமெரிக்க ஈடுபாடு

By DIGITAL DESK 2

13 NOV, 2022 | 03:48 PM
image

(ஹரிகரன்)

 “ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவின் வருகையினால் அமெரிக்கா முழுத் திருப்தியடைந்திருக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எனினும் அவர் போன்ற ஆட்சியாளர் ஒருவர் இருப்பது அமெரிக்காவுக்குப் பாதுகாப்பானது தான்”

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும், அந்த நாட்டின் இராஜதந்திரிகளும் கொழும்பில் இரவுபகலாக பணியாற்றிக் கொண்டிருந்தது போலவே, பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பல நாடுகளின் தூதரக மற்றும் இராஜதந்திரச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன.

முக்கியமாக அமெரிக்காவின் இராஜதந்திரச் செயற்பாடுகள், மிகத் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க தூதுவராக ஜூலி சங் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், இராஜதந்திர ரீதியாக அமெரிக்கத் தூதரகத்தின் பணிகள் மும்முரமடைந்திருக்கின்றன.

அண்மையில் அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில், உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

2001ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் சமாதானப் பேச்சுக்களை நடத்துவதற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டுப்படுத்தவும், சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட போதும், ஆற்றிய விசேட பங்களிப்புகளையும் ஆதரவையும் கண்டிப்பாக இங்கு குறிப்பிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இலங்கையில் சொந்தமாக கடற்கரையைக் கொண்டிருக்கும் ஒரே தூதரகம் அமெரிக்க தூதரகம் தான் என்று குறிப்பிட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, எங்களுக்கிடையிலான உறவு வர்த்தகம், கல்வி, மதம் சார்ந்ததாக மட்டுமல்ல, அது இராணுவ விவகாரங்களுடன் தொடர்புடையதாகவும் இருந்தது. குறிப்பிடத்தக்க நேரங்களில் நாங்கள் உங்களுக்காக பங்காற்றியிருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்தியிருந்தார்.

k4-01.JPEG

ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், அல்கெய்டாவுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில், உலகெங்கும் உள்ள அந்த அமைப்பின் பயங்கரவாதிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.

அதேவேளை, அமெரிக்காவுடன், நல்லாட்சி அரசாங்கம், செய்து கொண்டிருந்த பாதுகாப்பு உடன்பாடுகள் இலங்கையை விநியோக வசதிகளுக்குப் பயன்படுத்தும் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளை அடக்குவதற்கு அமெரிக்கா உதவியது, நாங்களும் அமெரிக்காவுக்கு பாதுகாப்பு ரீதியாக உதவினோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தடி சாக்கில் நினைவுபடுத்தியிருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவை அமெரிக்காவின் நண்பனாகவே பெரும்பாலானோர் பார்க்கின்றனர். அவ்வாறு நம்புவதற்கு நியாயமான பல காரணங்களும் இருக்கின்றன.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் வருகையினால் அமெரிக்கா முழுத் திருப்தியடைந்திருக்கிறதா என்ற கேள்வி உள்ளது.

அவர் ஆட்சிக்கு வந்த பின்னர்- பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த பின்னர், இலங்கைக்காக அமெரிக்காவின் இராஜதந்திரத் தொடர்புகள், நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பது, அவரை பலப்படுத்துவதற்காகவோ, அவருடனான தொடர்புகளை வலுப்படுத்துவதற்காகவா அல்லது அமெரிக்காவின் நிலையை இங்கு வலுப்படுத்துவதற்காகவா என்ற கேள்வி பலருக்கு உள்ளது.

ஒக் டோபர் மாத தொடக்கத்தில் கொழும்பில் உள்ள அமெரிக்க துதரகத்தில், அமெரிக்க ஏற்றுமதிக் கட்டுப்பாடு மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

k4-02.jpg

“இந்த சவாலான காலகட்டத்தில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிகளை வலுப்படுத்துவதை உறுதி செய்து, பாதுகாப்பான, உற்பத்தித் துறைமுகங்களுக்கான அமைப்புகளை மேம்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் இலக்குடன் அவர் இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவார்.” என்று அமெரிக்கத் தூதுவர் ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இலங்கையில் 'ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் எல்லைப் பாதுகாப்பு' திட்டத்தில் முதன்மையான காரணி, அமெரிக்க தேசிய பாதுகாப்பே என்றும், அதற்காகவே இந்த அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான தயா கமகே குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த செப் டெம்பர் மாதம், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்துக்குச் சென்றிருந்த போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் விக்டோரியா நுலன்டை சந்தித்துப் பேசியிருந்தார்.

இதற்குப் பின்னர், இலங்கைக்கு அமெரிக்க அதிகாரிகள், பிரதிநிதிகள் பலர் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

ரோமில் உள்ள ஐ.நா. முகவர் அமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர், சின்டி மக்கெய்ன், தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலர் டொனால்ட் லூ, அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவிச் செயலர் ரொபேர்ட் கப்ரூத், இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவப் பிரிவு உதவிச் செயலாளர் ஜோன் பாஸ், தெற்கு மத்திய ஆசியாவுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அப்ரீன் அக்தர், அமெரிக்க காங்கிரஸ் குழு எனப் பலர அமெரிக்காவில் இருந்து கடந்த சில வாரங்களுக்குள் இங்கு வந்திருக்கின்றனர்.

இவர்களில் பலர் கொழும்புடன் தங்களின் பயணங்களை நிறுத்தியிருந்தனர். இன்னும் பலர் வடக்கு, கிழக்கில் கவனம் செலுத்தியிருந்தனர்.

அமெரிக்க துணைத் தூதுவர் வடக்கில் அண்மையில் ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில், அமெரிக்க காங்கிரஸ் குழு யாழ்ப்பதாணத்துக்குச் சென்று வலி. வடக்கு மீள்குடியமர்வு பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் நேரடியாக கவனம் செலுத்தியிருக்கிறது.

அதேவேளை,  அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கிழக்கு மாகாணத்துக்கான தனது முதல் பயணத்தை சில நாட்களுக்கு முன்னர் மேற்கொண்டிருந்தார்.

இலங்கையிலும், இந்தியப் பெருங்கடலிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அமெரிக்கா தனது இராஜதந்திர தொடர்புகளையும், செயற்பாடுகளையும் விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவது மட்டும் அமெரிக்காவின் முழு நோக்காக தெரியவில்லை.

அதற்குள் அதன் பாதுகாப்பு நோக்கமும் ஒளிந்திருக்கிறது என்பது இரகசியமான விடயம் அல்ல.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை பெற்றுக் கொள்வதில் அமெரிக்கா முக்கிய பங்கை வகிக்கிறது. 

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவைப் பலப்படுத்திக் கொள்வதில் மட்டும், அமெரிக்கா கவனம் செலுத்தவில்லை.

ரணில் விக்கிரமசிங்க போன்ற ஆட்சியாளர் ஒருவர் இருப்பது அமெரிக்காவுக்குப் பாதுகாப்பானது தான்.

அதற்காக, அவரைக் கண்மூடித்தனமாக பலப்படுத்துவதற்கு அமெரிக்கா தயாராக இல்லை.

ஏனென்றால், ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷவினரின் பொம்மையாகத் தான் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்க நலன்களுக்கும், இலங்கையில் அமெரிக்காவின் நீண்டகால இருப்புக்கும் இந்த நிலை பாதுகாப்பானதாக இருக்க முடியாது என அமெரிக்கா கருதக் கூடும்.

கொழும்பில் மாத்திரமன்றி அதற்கு அப்பாலும் அமெரிக்கா தனக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க விரும்புகிறது.

நீண்டகாலமாகவே யு.எஸ்.எய்ட். ஊடாக அமெரிக்கா சாதாரண மக்கள் மத்தியில் இறங்கிப் பணியாற்றி வந்திருக்கிறது.

அதனை உடைப்பதற்கு சீனா இப்போது, கடுமையாக முயற்சிக்கிறது.

அரிசி, மருந்துப் பொருட்கள், உதவிப் பொதிகள் என்று கிராமம் கிராமமாக சீனா தனது உதவியைக் கொண்டு செல்ல முயற்சிக்கிறது.

இப்போது, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 10 மில்லியன் லீற்றர் டீசலை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது சீனா.

இது, இந்த துறையினரை தன் பக்கம் இழுப்பதற்காக சீனா மேற்கொள்ளும் தந்திரமும் கூட.

அரசுகளை மட்டும் கைக்குள் வைத்திருப்பது முக்கியமல்ல. அரசாங்கத்தை உருவாக்கும் மக்களையும் கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை சீனா உணர்ந்திருக்கிறது.

இதற்கு எதிர்நிலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது.

வடக்கிலுள்ள மீள்குடியமர்வு, காணி அபகரிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளின் மீதும், மனித உரிமைகள் சார் விவகாரங்களின் மீதும் அமெரிக்கா செலுத்துகின்ற அக்கறை, அவ்வாறானதொன்று தான்.

இது நீதியை, பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் அளவுக்கு காத்திரமானதாக இருக்குமா என்பது ஒரு புறத்தில் இருக்க, அவ்வாறானதொன்றாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்களுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை.

https://www.virakesari.lk/article/139906

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும், அந்த நாட்டின் இராஜதந்திரிகளும் கொழும்பில் இரவுபகலாக பணியாற்றிக் கொண்டிருந்தது போலவே, பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பல நாடுகளின் தூதரக மற்றும் இராஜதந்திரச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன.

ஆம். இரவு  பகலாக புலிகளையும் தமிழ் மக்களையும் அழிக்க அயராது உழைத்தனர்.

1 hour ago, ஏராளன் said:

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவது மட்டும் அமெரிக்காவின் முழு நோக்காக தெரியவில்லை.

அதற்குள் அதன் பாதுகாப்பு நோக்கமும் ஒளிந்திருக்கிறது என்பது இரகசியமான விடயம் அல்ல.

சீனாவை விரட்ட அரும்பாடு படுகிறார்கள்.
பொருளாதார நெருக்கடியை துரும்பாக பயன்படுத்த நினைக்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.