Jump to content

சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க - இது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க - இது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?

9 பிப்ரவரி 2020
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

(சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துப் பேசியது சர்ச்சை ஆவதை ஒட்டி இக்கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பது போன்ற பதிவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று இந்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமுறை கூறப்பட்டது.

அரசு கூறுவது என்ன?

ஆனால் தகவல் அறிந்தவர்களின் கருத்துப்படி, சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்.

சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டாரா என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் எழுந்தது.

 

அப்போது இது குறித்துப் பேசிய மத்திய கலாசார அமைச்சர் பிரஹ்லாத் படேல், சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்தும் பதிவுகள் ஏதும் அந்தமான் -நிக்கோபார் நிர்வாகத்திடம் இல்லை என்று கூறியிருந்தார்.

"அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகத்தின் கலை மற்றும் கலாசாரத் துறையிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, செல்லுலார் சிறையில் இருந்தபோது, அவர் மன்னிப்பு கேட்டார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களோ அல்லது கருணை மனு கொடுத்ததாகவோ எந்த பதிவும் இல்லை" என்று அமைச்சர் கூறியிருந்தார்.

பாரத ரத்னா விருது

இந்து மதத் தலைவர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நேரத்தில் மத்திய அரசின் இந்த கருத்து வெளிவந்தது. ஆளும் பாஜக அரசும் அதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

2019 ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதும், சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜகவினர் எழுப்பி, தேர்தல் களத்தை சூடாக்கினார்கள்.

இருப்பினும், மகாத்மா காந்தி படுகொலையில் தொடர்புடையவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்று கோருவது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. மறுபுறம், இந்த வழக்கில் சாவர்க்கர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

சாவர்க்கர் மற்றும் அவர் தொடர்பான சர்ச்சைகள் பற்றி பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஸல் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்…

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

சாவர்க்கர் கடலில் குதித்து தப்பித்தார்

சாவர்க்கர் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நிரஞ்சன் தக்லே இவ்வாறு கூறுகிறார்: "நாசிக் மாவட்ட ஆட்சியர் ஜாக்சனின் கொலை தொடர்பாக சாவர்க்கரின் சகோதரர் 1910 இல் முதன்முதலில் கைது செய்யப்பட்டார்".

"படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு துப்பாக்கியை லண்டனில் இருந்து தனது சகோதரருக்கு அனுப்பியதாக சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 'எஸ்.எஸ். மெளர்யா' என்ற கப்பல் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். கப்பல் பிரான்சில் உள்ள மார்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டபோது, கப்பலின் கழிப்பறை ஜன்னல் வழியாக சாவர்க்கர் கடலில் குதித்து தப்பித்தார். "

தனது அரசியல் கருத்துக்களுக்காக புனேவின் பெர்குசன் கல்லூரியில் இருந்து சாவர்க்கர் வெளியேற்றப்பட்டார். 1910 ஆம் ஆண்டில், நாசிக் கலெக்டர் கொலை வழக்கில் லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார்.

'பிரேவ்ஹார்ட் சாவர்க்கர்' என்ற சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தக்கத்தை எழுதிய அசுதோஷ் தேஷ்முக் பல விஷயங்களை கூறுகிறார். "சாவர்க்கர் திட்டமிட்டு தனது இரவு கவுனை அணிந்திருந்தார். கழிப்பறையில் இருக்கும் கைதியை கண்காணிப்பதற்காக கழிப்பறையில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. சாவர்க்கர் தனது கவுனை கழற்றி கண்ணாடியை மூடிவிட்டார்."

"அவர் ஏற்கனவே கழிப்பறையின் ஜன்னலை அளவிட்டிருந்தார். அதன் வழியாக வெளியேறி தப்பித்துவிடலாம் என்றும் கணித்து வைத்திருந்தார். அதேபோல், சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு மெலிந்த உடல்வாகைக் கொண்டிருந்த சாவர்கர், ஜன்னலில் வழியாக லாவகமாக இறங்கி கடலில் குதித்துவிட்டார்."

 

1910 மார்ச் 13 அன்று விக்டோரியா நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட சாவர்க்கரின் புகைப்படம்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

 

படக்குறிப்பு,

1910 மார்ச் 13 அன்று விக்டோரியா நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட சாவர்க்கரின் புகைப்படம்

தேஷ்முக் மேலும் எழுதுகிறார், "கடலில் நீந்தும்போது சாவர்க்கருக்கு காயம் ஏற்பட்டு, ரத்தம் வரத் தொடங்கியது. அவர் தப்பித்ததை அறிந்த பாதுகாப்புப் படையினரும் கடலில் குதித்து நீந்தியவாறே அவரைத் துரத்திக் கொண்டு சென்றனர்."

"சுமார் 15 நிமிடங்கள் நீந்திய பிறகு கரையை அடைந்தார் சாவர்க்கர். முதல் முறை அவர் வழுக்கி விழுந்தார். ஆனால் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்று தரைப்பகுதிக்கு சென்ற அவர் வேகமாக ஓடத் தொடங்கினார், ஒரு நிமிடத்தில் அவர் 450 மீட்டர் தூரத்தை கடந்தார்."

"டிராம்களும் கார்களும் இருபுறமும் ஓடிக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த சாவர்க்கர் ஒரு போலீஸ்காரரைப் பார்த்ததும் அவரிடம் சென்று ' அரசியல் தஞ்சம் கோரி வந்திருக்கிறேன். மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் செல்லுங்கள்' என்று ஆங்கிலத்தில் கூறினார். அவரை துரத்திக் கொண்டு ஓடி வந்த பாதுகாப்புப் பணியாளர்கள், "திருடன்! திருடன்! அவரைப் பிடியுங்கள்" என்று கூச்சலிட்டனர். சாவர்க்கர் கடுமையாக எதிர்த்த போதிலும், பலரும் சேர்ந்து அவரைப் பிடித்துவிட்டனர்."

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

அந்தமான் செல்லுலர் சிறை செல் எண் 52

இப்படி சாவர்க்கரின் தப்பிக்கும் முயற்சி சில நிமிடங்களில் முடிவடைந்தது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவர் ஏதோ ஒரு வடிவத்தில் ஆங்கிலேய அரசின் கைதியாகவே இருந்தார் சாவர்கர்.

25-25 ஆண்டுகள் என இரண்டு தனித்தனி தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார் சாவர்க்கர். செல்லுலர் சிறை, காலா பானி என்றும் அறியப்படும் அந்தமான் சிறைச்சாலை, நாடு கடத்தப்பட்டவர்களை அடைத்து வைக்கும் சிற்றறை சிறைச்சாலை.

698 அறைகளைக் கொண்ட செல்லுலார் சிறையில் 13.5க்கு 7.5 அடி கொண்ட தனியறைகள் உண்டு. அதில் சிறை எண் 52 இல் சாவர்க்கர் சிறை வைக்கப்பட்டார்.

வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றில், அந்தமானில் சாவர்கரின் சிறை வாழ்க்கையைப் பற்றி அசுதோஷ் தேஷ்முக் இவ்வாறு எழுதுகிறார், "அந்தமானில் உள்ள அரசு அதிகாரிகள் வண்டிகளில் செல்வார்கள், அரசியல் கைதிகள் இந்த வண்டிகளை இழுத்துச் செல்லவேண்டும்".

" மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்ட அந்தமானில் முறையான சாலை வசதிகள் இல்லை. வண்டிகளை கைதிகளால் இழுக்க முடியாதபோது, அவர்கள் தாக்கப்பட்டனர். பிரச்சனை செய்யும் கைதிகள் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டனர்."

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு

ஆனால் சாவர்க்கரின் இரண்டாவது வாழ்க்கை இங்கிருந்து தொடங்குகிறது. செல்லுலார் சிறையில் அவர் கழித்த 9 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்களும், அவரது ஆங்கிலேய எதிர்ப்பை மழுங்கடித்துவிட்டது.

இதை நிரஞ்சன் தக்லே விளக்குகிறார், "நான் சாவர்க்கரின் வாழ்க்கையை பல பகுதிகளாக பார்க்கிறேன். அவரது வாழ்க்கையின் முதல் பகுதி ஒரு புரட்சியாளரின் வாழ்க்கை, அதில் அவர் 1857 போரைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதினார். அதில் அவர் மதச்சார்பின்மையை மிகச் சிறந்த முறையில் ஆதரித்தார்."

"கைது செய்யப்பட்ட பின்னர் யதார்த்தத்தை எதிர்கொண்டார் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார். "

"மாதந்தோறும் மூன்று அல்லது நான்கு கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று அந்தமான் சிறைச்சாலை பதிவுகள் காட்டுகின்றன. மரணதண்டனை வழங்கப்பட்ட இடம், சாவர்கர் இருந்த அறைக்குக் கீழே இருந்தது. இதுவும் சாவர்க்கரை பாதித்திருக்கலாம். ஜெயிலர் பைரி, சாவர்க்கருக்கு பல சலுகைகளை வழங்கியதாகவும் சிலர் கூறுகின்றனர். "

"சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கிவிடுவார்கள். சாவர்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை" என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

நிரஞ்சன் தக்லேவின் கருத்துப்படி, "15 நாட்களுக்கு ஒருமுறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது. அதாவது அவர் சிறையில் தண்டனை அனுபவித்தக் காலத்தில் அவரது எடை 14 பவுண்டுகள் அதிகரித்திருந்தது. "

"தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்."

"பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு முறைமையில் தனக்கு நம்பிக்கையை உண்டாக்கியுள்ளதாகவும், இப்போது வன்முறையின் பாதையை விட்டுவிட்டதாகவும் சாவர்க்கர் கூறினார். இதன் விளைவாகத்தான், 1919 மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் அவருடைய மனைவி மற்றும் தம்பியைப் பார்க்க அந்தமான் சிறையில் இருந்த சாவர்கருக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது."

 

பிபிசி அலுவலகத்தில் ரெஹான் ஃபசலுடன் மூத்த பத்திரிகையாளரும் இந்திரா காந்தி கலை மையத்தின் தலைவருமான ராம் பகதூர் ராய்

 

படக்குறிப்பு,

பிபிசி அலுவலகத்தில் ரெஹான் ஃபசலுடன் மூத்த பத்திரிகையாளரும் இந்திரா காந்தி கலை மையத்தின் தலைவருமான ராம் பகதூர் ராய்

சிறையில் இருந்து வெளியேறவே இந்த உத்தி செய்யப்பட்டது

பின்னர் சாவர்க்கரும் அவரது ஆதரவாளர்களும் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கோருவதை நியாயப்படுத்தியிருந்தனர். இது தங்களுடைய தந்திர திட்டத்தின் ஒரு பகுதி என்றும், இதன் காரணமாக சில சலுகைகளைப் பெற முடியும் என்றும் கூறியிருந்தனர்.

சாவர்க்கர் தனது சுயசரிதையில், "நான் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால், இந்தியாவுக்கு கடிதம் அனுப்பும் உரிமையை என்னிடம் இருந்து பறித்திருப்பார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

பகத் சிங்கிற்கும் மன்னிப்பு கேட்கும் தெரிவு இருந்தது, ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இந்த நிலையில் சாவர்க்கருக்கு மட்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? இதற்கு பதிலளிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும் இந்திரா காந்தி கலை மையத்தின் தலைவருமான ராம் பகதூர் ராய். "பகத்சிங்கிற்கும் சாவர்க்கருக்கும் இடையே மிகப்பெரிய அடிப்படை வேறுபாடு உள்ளது. பகத்சிங் குண்டு வீச முடிவு செய்த போதே, தூக்கு தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை என்று நினைத்து உயிர்த் தியாகம் செய்ய முடிவு எடுத்திருந்தார். மறுபுறம், வீர் சாவர்க்கரோ ஒரு புத்திசாலி புரட்சியாளர் ஆவார். "

"ரகசியமாக வேலை செய்வதற்கும், சிறப்பாக பணியாற்றுவதற்குமான வாய்ப்புகள் கிடைத்தால் அதை ஒருபோதும் சாவர்க்கர் தவறவிட்டதில்லை. தான் மன்னிப்பு கேட்டால் மக்கள் என்ன சொல்வார்கள் என்று சாவர்க்கர் கவலைப்படவில்லை என்றே நான் நம்புகிறேன். அவர் சிறையில் இருந்து வெளியில் வந்தால்தான், தான் விரும்பியவற்றை செய்ய முடியும் என்று நினைத்தார். "

 

பிபிசி ஸ்டுடியோவில் நீலஞ்சன் முகோபாத்யாய்

 

படக்குறிப்பு,

பிபிசி ஸ்டுடியோவில் நீலஞ்சன் முகோபாத்யாய்

சாவர்க்கரின் இந்து மதம் பற்றிய கருத்து

அந்தமானில் இருந்து திரும்பிய பிறகு, 'இந்துத்துவா - இந்து யார்?' என்ற புத்தகத்தை சாவர்க்கர் எழுதினார். அதில் தான் முதல் முறையாக இந்துத்துவத்தை ஒரு அரசியல் சித்தாந்தமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.

நீலாஞ்சன் முகோபாத்யாய் விளக்குகிறார், "அவர் இந்துத்துவாவை ஒரு அரசியல் சாதனமாகப் பயன்படுத்தினார். இந்துத்துவத்தை வரையறுத்து, இந்த நாட்டின் மக்கள் அடிப்படையில் இந்துக்கள் என்று கூறுகிறார். இந்த நாட்டை தனது மூதாதையர் நிலமாகவும், தாய் மண்ணாகவும் மற்றும் புனித பூமியாக நினைப்பவர்கள் தான் இந்நாட்டின் குடிமக்களாக இருக்க முடியும் என்பதே சாவர்கரின் உறுதியான நம்பிக்கை.

"மூதாதையர் மற்றும் தாய்வழி நிலம் யாருக்கும் வேண்டுமானாலும் சொந்தமானதாக இருக்கலாம், ஆனால் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் மட்டுமே இந்தியாவை புனித நிலமாக கருதுவார்கள். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இது புனித நிலம் அல்ல. இந்த வரையறையின்படி, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் இருந்தாலும் ஒருபோதும் குடிமக்களாக இருக்க முடியாது" என்கிறார் சாவர்கர்.

"அவர்கள் இந்துக்களாக மாறினால் மட்டுமே இங்கே அவர்கள் இருக்க முடியும் என்று நினைத்தார் அவர். ஒருவர் இந்துவாக இருந்தாலும் கூட இந்து மதத்தையோ, மத நம்பிக்கையையோ பின்பற்றாமல் இருக்கலாம் என்ற முரண்பாட்டை அவர் ஒருபோதும் புரிந்துக் கொள்ளவில்லை".

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம்

எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக்கூடாது; ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் 1924 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள எர்வாடா சிறையில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.

"காந்தி, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்களை எதிர்ப்பதற்கு அவர்கள் இருவருக்கும் ஒரே நோக்கம் இருப்பதாக வைஸ்ராய் லின்லித்கோவுடன் சாவர்க்கர் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்" என்று நிரஞ்சன் தக்லே விளக்குகிறார்.

"ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது" என்கிறார் நிரஞ்சன்.

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

கருப்பு தொப்பி மற்றும் வாசனை திரவியம்

தீவிரமான கருத்துக்களை கொண்டவராக இருந்தபோதிலும், அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களை விரும்பினார். அவருக்கு சாக்லேட்டுகளும் 'ஜிண்டான்' பிராண்ட் விஸ்கியும் மிகவும் பிடித்தமானது.

அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய அசுதோஷ் தேஷ்முக் இவ்வாறு எழுதுகிறார்: "சாவர்க்கர் 5 அடி 2 அங்குல உயரம்கொண்டவர். அவர் அந்தமான் சிறையில் இருந்தபோது அவரது தலையில் முடிகள் உதிர்ந்து வழுக்கையாகிவிட்டது. அவருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது. அந்தமனின் சிறைச்சாலையில் புகையிலை கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, சிறை சுவர்களில் இருந்த சுண்ணாம்பை சுரண்டி சாப்பிடப் பழகிக் கொண்டார். இதனால் அவரது ஆரோக்கியம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. "

"சாவர்க்கர் சிகரெட் மற்றும் சுருட்டுகளையும் புகைப்பார். ஆனால் அதில் அவருக்கு நாட்டம் இல்லை. எப்போதாவது மது அருந்துவார். காலை உணவில் வேகவைத்த முட்டைகள் இரண்டை சாப்பிடுவார், பகலில் பல முறை தேநீர் அருந்துவார். சாவர்க்கருக்கு காரசாரமான உணவுகள் அதிலும் குறிப்பாக மீன் மிகவும் பிடித்தமானது. "

அல்போன்சோ மாம்பழம், ஐஸ்கிரீம் போன்றவை சாவர்க்கருக்கு மிகவும் பிடித்தமானவை. எப்போதும் ஒரே மாதிரியான உடைகளை உடுத்துவார் ... கருப்பு தொப்பி, வேட்டி அல்லது கால்சராய், கோட் இதுதான் சாவர்க்கரின் ஆடை அணியும் பாணி. கோட் பாக்கெட்டில் ஒரு சிறிய ஆயுதம், ஒரு பாட்டில் வாசனை திரவியம், ஒரு கையில் குடை மற்றும் மறுகையில் மடித்து வைக்கப்பட்ட செய்தித்தாள் என்பதே சாவர்க்கரின் தோற்ற அடையாளம்.

 

1948 ஜனவரி 30ஆம் தேதியன்று, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார் நாதுராம் கோட்சே

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1948 ஜனவரி 30ஆம் தேதியன்று, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார் நாதுராம் கோட்சே

மகாத்மா காந்தி படுகொலையில் கைது

1949 இல் காந்தி படுகொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் சாவர்க்கரும் ஒருவர் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார்.

நிலஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார், "காந்தி கொலை வழக்கில் தங்கள் மீது படிந்தக் கறையை நீக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ்க்கு நீண்ட காலம் எடுத்தது. இந்த வழக்கில் சாவர்க்கர் சிறைக்குச் சென்றார், பின்னர் வழக்கில் இருந்து விடுபட்டு 1966 வரை வாழ்ந்தார், ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை."

"ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கூட அவரை புறக்கணித்தது. அவர் எப்போதுமே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். காந்தி கொலை தொடர்பாக சாவர்க்கர் மீதான சந்தேகம் எப்போதும் மறையவே இல்லை என்பதே காரணம். சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது."

 

நானா ஆப்தே, தாமோதர் சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணுபந்த் கர்கரே, திகம்பர் பட்கே, மதன்லால் பஹாவா (வலதுபுறம் நிற்பவர்), கோபால் கோட்சே, சங்கர் கிஸ்தய்யா (இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பது)

பட மூலாதாரம்,NANA GODSE

 

படக்குறிப்பு,

நானா ஆப்தே, தாமோதர் சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணுபந்த் கர்கரே, திகம்பர் பட்கே, மதன்லால் பஹாவா (வலதுபுறம் நிற்பவர்), கோபால் கோட்சே, சங்கர் கிஸ்தய்யா (இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பது)

சாவர்க்கரின் அரசியல் சித்தாந்தம்

சாவர்க்கரின் வாழ்க்கையின் கடைசி இரண்டு தசாப்தங்கள் தனிமையில் கழிந்தன. அவர் அரசியலில் இருந்தும் பொதுவாழ்க்கையில் இருந்து தனிமைப்படுத்தப்ப்ட்டார்.

சாவர்கரின் வாழ்க்கை சரிதத்தை மற்றுமொரு வரலாற்று ஆசிரியர் தனஞ்சய் கீர் என்பவரும் எழுதியிருக்கிறார். 'சாவர்க்கர் அண்ட் ஹிஸ் டைம்ஸ்' என்ற அந்த புத்தகத்தில் அவர் இவ்வாறு எழுதுகிறார்: "செங்கோட்டையில் நடைபெற்ற காந்தி கொலை வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து, சாவர்க்க்ரை நீதிபதி விடுவித்தார். அப்போது, சிலர் சாவர்க்கரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள், 'இந்து - இந்தி - இந்துஸ்தான்; பாகிஸ்தான் ஒருபோதும் வராது' என்ற முழக்கங்களையும் எழுப்பினார்கள்".

"சாவர்க்கரின் வாழ்க்கையின் கடைசி நாட்களில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சட்டானது, ஒரு கறையாகவே படிந்துவிட்டது. உலகில் ஒரு சில புரட்சிக்காரர்கள்தான், நல்ல கவிஞராகவும், நல்ல எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள்" என்கிறார் ராம் பகதூர் ராய்.

"அந்தமான் சிறையில் வாழ்ந்தபோது, கல்லையே எழுத்தாணியாக்கி, சுவரில் 6000 கவிதைகளை எழுதி மனப்பாடம் செய்த தலைசிறந்த கவிஞர் அவர். ஐந்து புத்தகங்களை வீர் சாவர்க்கர் எழுதியுள்ளார். ஆனால் மகாத்மா காந்தியின் படுகொலையில் சம்பந்தப்படுத்தப்பட்டபோது, சாவர்க்கரின் பெருமை குறைந்தது, அவருடைய அரசியல் சித்தாந்தம் மங்கிப்போனது. "

 

சாவர்க்கர் குறித்து சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்ட நிரஞ்சன் தக்லே பிபிசி ஸ்டுடியோவில்

 

படக்குறிப்பு,

சாவர்க்கர் குறித்து சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்ட நிரஞ்சன் தக்லே பிபிசி ஸ்டுடியோவில்

வீர் சாவர்க்கர் 1966-ஆம் ஆண்டில் இறந்துவிட்டாலும், தற்போது பல தசாப்தங்களுக்குப் பிறகும் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான நபராகவே இருக்கிறார். கதாநாயகனாகவோ அல்லது வில்லனாகவோ இன்றும் பேசுபொருளாகவே இருக்கிறார்.

"2014 ஆம் ஆண்டில், சாவர்க்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்கு வந்தபோது, அவர் மகாத்மா காந்திக்கு முதுகைக் காட்டியவாறு நிற்கவேண்டியிருந்தது. ஏனெனில் காந்திஜியின் உருவப்படமும் அதே இட த்தில் சாவர்க்கரின் படத்திற்கு முன்னால் இருந்தது" என்கிறார் நிரஞ்சன் தக்லே.

"இது இன்றைய அரசியலின் யதார்த்தத்தை காட்டுவதாகவே இருக்கிறது. நீங்கள் சாவர்க்கரை மதிக்க விரும்பினால், காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் பின்தள்ள வேண்டும். அதேபோல் காந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை நிராகரிக்க வேண்டும்" என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார் நிரஞ்சன் தக்லே.

https://www.bbc.com/tamil/india-51431488

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.