Jump to content

திமுக அமைச்சர்கள் பி.டி.ஆர். - ஐ.பெரியசாமி சொற்போருக்கு என்ன காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திமுக அமைச்சர்கள் பி.டி.ஆர். - ஐ.பெரியசாமி சொற்போருக்கு என்ன காரணம்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

பிடிஆர்

பட மூலாதாரம்,TNDIPR

 

படக்குறிப்பு,

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதும் அதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலடி அளித்ததும் ஆளும் தி.மு.கவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுத் துறையின் அண்மைக்கால செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று குறிப்பிட்டார்.

"செயல்பாட்டுத் திறன், தகவல், தொழில்நுட்பம் இதெல்லாம் மிகவும் சிறப்பிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. இன்றைய சூழலில் முழுமையான கணினிமயமாக்கம் இல்லாமல் இம்மாதிரி சங்கங்களை இயக்குவது மிகவும் கடினமான பணி.

அதில் பல பிழைகள் வர வாய்ப்புண்டு. Aggregate Value பார்த்தீங்கன்னா இன்னும் எனக்குத் திருப்தி இல்லை. நிதியமைச்சராகக் கூறுகிறேன். இன்னும் சிறப்பிக்க பல வாய்ப்பு இருக்கு," என்று கூறினார்.

 

 

பொதுவாக, ஓர் அரசின் செயல்பாடுகளை அதே அரசில் பங்கு வகிப்பவர்கள் விமர்சனம் செய்வது கிடையாது. இம்மாதிரியான பின்னணியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் விமர்சனம் அதிர்வலைகளை எழுப்பியது. இந்த அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாக, இதற்கு பதிலடி கொடுத்து மேலும் அதிரவைத்தார் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி.

நவம்பர் பதினெட்டாம் தேதி, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியை அருகில் வைத்துக் கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த ஐ. பெரியசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பி.டி.ஆருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

 

ஐ. பெரியசாமி

பட மூலாதாரம்,@IPERIYASAMYMLA TWITTER

 

படக்குறிப்பு,

ஐ. பெரியசாமி

"மக்கள் திருப்தி அடைறதைத்தான் நானும் சக்கரபாணியும் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு யார் திருப்தி அடையனும்னா, ஏழு கோடி மக்களும் திருப்தி அடையனும். எங்கள் முதலமைச்சர் திருப்தி அடையனும். அதற்கு நாங்க வேலை செய்வோம். வேற யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. நீங்க எங்கேயாவது குறை இருக்குன்னு சொன்னீங்கன்னா, உங்களுக்கு மாலை போட்டு, அந்தக் காரியத்தை நிறைவேற்றிவிட்டு நாங்க திருப்தி அடைவோம். மக்கள்தான் திருப்தியைச் சொல்லனுமே தவிர, ரேஷன் கடையே தெரியாதவர்களாம் திருப்தியடைனும்னு அவசியம் இல்லை" என்றார் ஐ. பெரியசாமி.

இதையடுத்து, தி.மு.க. அமைச்சர்களுக்குள் மோதல் என்ற வகையில் ஊடகங்களில் இருவர் பேசியதும் அடுத்தடுத்து ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

இந்த விவகாரம் ஆளும் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கட்சித் தலைமையே இருவரிடமும் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து ஊடகங்களில் பேச வேண்டாமென அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.

 

சக்கரபாணி

இது குறித்து தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டீனிடம் கேட்டபோது, "இது முழுக்க முழுக்க தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பி.டி.ஆரைப் பொறுத்தவரை அவர் கூட்டுறவுத் துறையின் செயல்பாட்டில் எனக்குத் திருப்தி இல்லை என்று சொல்லவில்லை. அவர் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கணினிமயமாக்க வேண்டும் என்பதுபோல பாசிட்டிவாகத்தான் சொன்னார். ஆனால், செய்தியாளர்கள் கேள்வியெழுப்பும்போது, கூட்டுறவுத் துறையின் செயல்பாட்டில் திருப்தியில்லை என பி.டி.ஆர். சொல்கிறாரே என்று கேட்டவுடன், கூட்டுறவுத் துறை அமைச்சர் அவ்வாறு பதிலளித்துவிட்டார். இதில் சர்ச்சைக்கு இடமே இல்லை," என்கிறார்.

இந்த மோதல் தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருவரிடமும் பேசியதாகச் சொல்லப்படுவது குறித்துக் கேட்டபோது, ஏற்கனவே அமைச்சர்களின் பேச்சுகள் குறித்து முதலமைச்சர் பொதுக் குழு உட்பட சில இடங்களில் பேசியிருக்கிறார். அது இப்போதும் பொருந்தும் என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

அமைச்சர்களின் பேச்சுகள் ஆளும்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதும் ஊடகங்களில் விவாதமாவதும் இது முதல் முறையில்லை. இதற்கு முன்பாக, கடந்த அக்டோபர் மாதம் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, "உங்கள் குடும்ப அட்டைக்கு நாலாயிரம் ரூபாய் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில போறீங்கல்ல" என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொன்முடிக்கு எதிரான ஹேஷ்டேகுகளை எதிர்க்கட்சிகள் ட்ரெண்ட் செய்யும் அளவுக்கு இந்த விவகாரம் உருவெடுத்தது. பொன்முடி வருத்தம் தெரிவித்த பிறகே இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

 

ஸ்டாலின்

அதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான், வனவேங்கைகள் கட்சியின் நிறுவனர் இரணியன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனைச் சந்திக்கச் சென்றபோது நிற்கவைத்துப் பேசி அவமதித்ததாக சர்ச்சை எழுந்தது.

அதற்கு சில மாதங்களுக்கு முன்பாக, முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான ராஜேந்திரனை அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன்  ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்தது. இதனை பத்திரிகையாளர்களைச் சந்தித்து ராஜேந்திரன் வெளிப்படுத்தியதும், இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

அதற்குப் பிறகு, பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மூத்த அமைச்சரான துரைமுருகன், பெண்களுக்கு தி.மு.க. வழங்குவதாகச் சொன்ன உரிமைத் தொகைப் பற்றிப் பேசும்போது, "கொடுத்துருவோம்.. சில்லரை மாத்திக்கிட்டிருக்கோம். சீக்கிரம் கொடுத்துடுவோம். உங்கம்மாவுக்கும் ஆயிரம். பொண்ணுக்கும் ஆயிரம்" என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் பேச்சுகளுக்குப் பிறகுதான், தினமும் காலையில் அச்சத்துடனேயே கண்விழிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.  அதற்குப் பிறகு, சர்ச்சைப் பேச்சுகள் சில வாரங்கள் ஓய்ந்திருந்த நிலையில், இந்த விவகாரம் தலைதூக்கியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cx7q83wzyw7o

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.