Jump to content

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும் அவசியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும் அவசியம்

gettyimages-1065657700-2048x2048-1-e1669

Photo, ISHARA S. KODIKARA/AFP via Getty Images

தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த வருடம் இலங்கையின் 75ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்படும் நாட்களில் தீர்வொன்றைக் காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதை தமிழ் அரசியல் சமுதாயம் ஓரளவு சந்தேகத்துடனேயே நோக்கியிருக்கிறது. 1960 களில் இருந்து அடுத்தடுத்து பதவிக்குவந்த அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதிகள் முழுமனதுடன் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். ஜனாதிபதியின் முன்னைய ஆட்சிக்காலங்களும் எந்த வகையிலும் வித்தியாசமானவையாக அமையவில்லை.

2015 – 2019 காலப்பகுதியில் அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதாக விக்கிரமசிங்க பிரதமர் என்ற வகையில் உறுதியளித்தார். ஆனால், 2018 பிற்பகுதியில் 52 நாள் சதி முயற்சியின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை நியாயமில்லாத வகையில் பதவிநீக்கம் செய்தார். அவர் மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான போராட்டத்தில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் முன்னின்றார்கள். விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றபோது  அரசியலமைப்பு சீர்திருத்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என்ற ஒரு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால், ஏதும் நடக்கவில்லை. மாகாண சபை தேர்தல்கள் கூட நடத்தப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் முயற்சிகளுக்குப் புறம்பாக புதிய உண்மை மற்றும் நல்லிணக்க செயன்முறையொன்றுக்கும் தலைமை தாங்கி வழிநடத்த விக்கிரமசிங்க முன்வந்திருக்கிறார். இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு தென்னாபிரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோசாவை சந்தித்து அவர் கலந்துரையாடினார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தனது கோட்பாடு குறித்து சிவில் சமூக தலைவர்களுடன் அண்மையில் கருத்துக்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி யோசனைகளை முன்வைக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். இந்த ஆணைக்குழுவை வெற்றிகரமானதாக்குவதற்கான உறுதியான அரசியல் துணிவாற்றல் இருப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஆயுதப்படைகளும் அவற்றின் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புவதனால் உண்மை ஆணைக்குழு கோட்பாட்டுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்சமயம் இலங்கை ஆயுதப்படைகளின் சகல பிரிவுகளுமே சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினாலும் சில வெளிநாட்டு அரசாங்கங்களினாலும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய ஆணைக்குழுவொன்று நம்பகத்தன்மையுடையதாகவும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடியதாகவும் அமைவதற்கு கருத்தொருமிப்பைக் காண்பதில் வெளியுறவு அமைச்சர் அக்கறை கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் தாங்கள் செய்வதை உண்மையில் அக்கறையுடனும் நேர்மையாகவுமே செய்வதாக பொதுமக்களை  நம்பவைப்பதில் பெரும் சவாலை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது. தென்னாபிரிக்காவின் நல்லிணக்கச் செய்முறைகளைப் பற்றி ஆராய தூதுக்குழுவொன்றை அந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக செய்திகள் வருகின்றன. அத்தகைய ஆய்வுகள் கடந்த காலத்திலும் மேற்கொள்ளப்பட்டன.

சனத்தொகையில் ஒரு பிரிவினருக்கு ஒரு நேரத்தில் உண்மையையும் நல்லிணக்கத்தையும் கொடுக்கமுடியாது. உண்மையையும் நல்லிணக்கத்தையும் பிரிவு பிரிவாக செய்யமுடியாது. அவற்றை தமிழர்களுக்கு கொடுத்து சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இல்லாமல் செய்யமுடியாது. இரு மாணவ தலைவர்களை நீண்ட நாட்களாக தடுத்துவைத்திருப்பது உண்மையும் இல்லை, நல்லிணக்கமும் இல்லை. அரசாங்கத்தின் நீதியுணர்வு சமத்துவமானதாக இருக்கவேண்டும். சகல சமூகங்கள் மீதுமான கடப்பாட்டை அரசாங்கம் வெளிக்காட்ட வேண்டியது அவசியம்.

தேர்தல்களை ஒத்திவைத்தல் 

ஊழல், வளங்களின் முறைகேடான ஒதுக்கீடை ஒழிக்கக்கூடியதும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடியதுமான முறைமை மாற்றம் (System change) ஒன்றுக்கான போராட்ட இயக்கத்தின் கோரிக்கை பல்கலைக்கழக மாணவர்களுடன் மட்டுப்பட்ட ஒன்றல்ல. மக்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் வடிவில் வெளிப்படையாகக் காண்பிக்கப்படாவிட்டாலும் அந்தக் கோரிக்கை மிகவும் பரந்த ஒரு தளத்தைக் கொண்டதாகும். இரு மாணவ தலைவர்களையும் மற்றையவர்களையும் போன்று கைதுசெய்யப்பட்டு நீண்டகாலத்துக்கு தடுத்துவைக்கப்படக்கூடும் என்ற பயத்தில்தான் தாங்கள் அண்மைய போராட்ட இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்கவில்லை என்று மட்டக்களப்பில் சிவில் சமூக சந்திப்பொன்றில் கடந்தவாரம் மௌலவி ஒருவர் தெரிவித்தார்.

மாணவ தலைவர்கள் நீதியற்ற முறையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்  மிகவும் பெரியவையாக இருக்கின்றன. ஆனால், அரசாங்கம் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்றும் அவர் சொன்னார். இத்தகைய சூழ்நிலையில் மாற்றத்தை விரும்புகின்ற போதிலும் கைதுசெய்யப்படுவதை விரும்பாத மக்கள் தங்களது விருப்பங்களையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்த தங்களது ஜனநாயக உரிமையை பயன்படுத்த தேர்தல்களை மாத்திரமே எதிர்பார்த்திருக்கமுடியும்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விருப்பத்தையும் ஜனநாயக தகுதிப்பாடுகளையும் கொண்டிருக்கின்ற போதிலும், தற்போதை தருணத்தில் அவர் தேர்தல்களை நடத்துவதற்கு தயக்கத்தை வெளிக்காட்டுகின்றார். இரு வகையான தேர்தல்கள் நடத்தப்படவேண்டியவையாக இருக்கின்றன. உள்ளூராட்சி தேர்தல்களும் மாகாண சபை தேர்தல்களுமே அவை. விக்கிரமசிங்க அதிகாரப்பதவியில் இருந்த போதெல்லாம் பொருளாதார மீட்சிக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவந்திருக்கிறார். 2002 – 2004, 2015 – 2019 காலப்பகுதிகளில் பிரதமராக பதவியில் இருந்த இரு சந்தர்ப்பங்களிலும் தேசிய தலைவர் என்ற வகையில் அவர் இதைச் செயதிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, அவ்விரு சந்தர்ப்பங்களிலும் அவர் அதிகாரத்தை இழந்தார். அடுத்து வந்த தேர்தல்களில் அவர் கடுமையான தோல்வியைக் கண்டார். நிதியமைச்சையும் தன்வசம் வைத்திருக்கும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழான தற்போதைய அரசாங்கம் சர்ச்சைக்குரிய பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்கிறது. சர்வதேச நிதிவழங்கும் நிறுவனங்களின் குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரமே இந்த சீர்திருத்தத்தை முன்னெடுக்கவேண்டியிருக்கிறது. மறுபுறத்தில் உணர்ச்சிபூர்வமான தேசிய நல்லிணக்க முயற்சிகளையும் கையாளப்போவதாகவும் அவர் சூளுரைத்திருக்கிறார். இந்தப் பிரச்சினையை அவர் 2002ஆம் ஆண்டு ‘எரிமலை மீது இருப்பது போன்றது ‘ என்று வர்ணித்தார்.

இத்தகையதொரு பின்புலத்தில், தேர்தல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஜனாதிபதி அக்கறை காட்டுகிறார். தவறான ஒரு நேரத்தில் அவர் செய்யும் இந்த காரியம் நியாயப்படுத்தப்படக்கூடியதல்ல. ஏற்கனவே ஒரு வருட காலத்துக்கு பின்போடப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களை அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்தப்படவேண்டியவையாக இருக்கின்றன. அரசாங்கம் முன்னெடுக்கும் தேர்தல் சீர்திருத்த செயன்முறைகள் மார்ச் மாதத்தையும் தாண்டி நீடிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மாகாண சபை தேர்தல்களை நடத்தவேண்டியிருந்த நேரத்தில் தேர்தல் சீர்திருத்தங்களை முன்னெடுத்த அரசாங்கத்தின் 2017 தந்திரோபாயத்தை ஒத்ததே இதுவாகும்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைக்கப்பட்ட மாகாண சபைகள் கடந்த நான்கு வருடங்களாக செயலிழந்து கிடக்கின்றன. அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளினால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவேண்டிய நிலையில் மாகாணங்கள் – அதிகாரங்கள் கடுமையாக மத்தியமயப்படுத்தப்பட்டு – ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநர்களின் நிர்வாகங்களின் கீழ் இருக்கின்றன. மாகாண சபை தேர்தல்கள் ஒத்திவைப்பு அதிகாரப்பரவலாக்கலை கேலிக்கூத்தாக்குகிறது. மத்திய அரசாங்கத்தின் முகவர்களாகச் செயற்படும் ஆளுநர்களின் நிர்வாகம் மாகாணங்களின் மக்களின் விருப்பங்களுக்கு வழக்கம் மீறிய ஒன்றாக இருக்கிறது.

மாறுகின்ற முன்னுரிமைகள் 

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு வரிகள் அதிகரிப்பு, அரசாங்க செலவினங்கள் குறைப்பு, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுதல் என்பவற்றையும் விட வேறு பல நடவடிக்கைகளை வேண்டிநிற்கிறது. தங்களது பங்கேற்பினால் நிலைவரங்களில் மேம்பாட்டை ஏற்படுத்த முடியும் என்று மக்கள் உணரக்கூடிய ஆட்சிமுறையொன்று அதற்கு தேவை. மாகாணங்களின் மக்களினால் தெரிவுசெய்யப்பட்டு மக்களுக்குப் பொறுப்புக்கூறக்கூடிய – அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட கட்டமைப்புக்களை உருவாக்குவதே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும்.

மாகாண சபைகளுக்கு போதுமான வளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உகந்த முறையில் அவை செயற்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், தற்போதுள்ளதைப் போன்று இல்லாமல், பொருளாதார நெருக்கடியை இலங்கையினால் சிறப்பாக தாக்குப்பிடித்திருக்கக்கூடியதாக இருந்திருக்கும். மாகாண சபைகளுடன் ஒப்புரவான முறையில் தேசிய பட்ஜெட்டை பகிர்ந்துகொள்வதற்குப் பதிலாக மத்திய அரசாங்கம் மிகப்பாரிய  பங்கை தனக்கு ஒதுக்கியது. அதிகாரப்பரவலாக்கத்தை உறுதிசெய்வது நாடு இன்று எதிர்நோக்கியிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்குத் தேவையான முறைமை மாற்றத்தின் ஒரு அங்கமாகும்.

இத்தகைய பின்புலத்தில் அரசாங்கம் தங்களுக்கு எதையும் செய்யவில்லை என்று உணரும் மட்டக்களப்பு சிவில் சமூக தலைவர்கள் தங்களது வருமானத்தையும் நுகர்வையும் அதிகரிக்க வீட்டுத்தோட்டச் செய்கை மற்றும் சுயதொழில்வாய்ப்பு திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டுவது குறித்து பேசினார்கள். ஆனால், நவீன யுகத்தின் வாய்ப்புக்களை அனுகூலமாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான தொழில்வாய்ப்பு மற்றும் சம்பாத்தியங்களுக்கு வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையினால்  பெரியளவுக்கு உதவமுடியாது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அரசாங்கத்தின்  பட்ஜெட் யோசனைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சமுதாயத்தின் அடிமட்டங்களில் உள்ள மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் புரிந்துகொண்டதாக பட்ஜெட் யோசனைகள் அமையவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால், புதிய கொள்கைகளில் ஒன்று குறித்து கலந்துரையாடலில் திருப்தி வெளிப்படுத்தப்பட்டது. பட்ஜெட் யோசனை இல.13 பின்வருமாறு கூறுகிறத “அரசாங்க நிலங்களை பாராதீனப்படுத்தும் பூர்வாங்க நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்களின் ஊடாக பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பின்னர் ஒரு கட்டத்தில் அத்தகைய கடமைகள் விசேட தேவைகளுக்கென்று நிறுவப்பட்ட இலங்கை மகாவலி அதிகார சபைக்கும் நிலச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கும் கூட ஒதுக்கப்பட்டன. நிலங்களை பராதீனப்படுத்துவதுடன் தொடர்புடைய பூர்வாங்க நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் வெவ்வேறு வழிகளில் கையாளப்பட்டதால் பாரபட்சமும் முறைகேடுகளும் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.

“எனவே மேற்கூறப்பட்ட விசேட தேவைகள் ஏற்கெனவே நிறைவு செய்யப்பட்டதால், மகாவலி அதிகாரசபை மற்றும் நிலச்சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் வருகின்ற நிலங்களில் பராதீனப்படுத்தல் உட்பட சகல அரசாங்க நிலங்களின் பராதீனப்படுத்தலுடன் தொடர்புடைய பூர்வாங்க நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்களினால் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதற்கு வசதியாக அடுத்தவருடம் செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும்.”

முன்னர் மகாவலி அதிகாரசபை பொறுப்பில் இருந்தபோது நாட்டில் உள்ள பெரும்பாலான நிலங்களின் பயன்பாட்டுடன் தொடர்புடைய தீர்மானங்கள் கொழும்பில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன. நிலங்கள் பாரதீனப்படுத்தலுடன் தொடர்புடைய தீர்மானங்கள் பிரதேச மட்டத்துக்கு பன்முகப்படுத்தப்படுவது  நிலப்பயன்பாடு தொடர்பில் சமூக மட்டத்தில் மக்கள் தங்கள் அபிப்பிராயத்தை தெரிவிப்பதற்கான வாய்ப்பைக் கொடுக்கும். அதிகாரப்பரவலாக்கல் உணர்வுடன் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை ஊழலையும் முறைகேடாக வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதையும் குறைக்க உதவமுடியும் என்பதுடன் பொறுப்புக்கூறலை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பொது முயற்சிகளில் தங்களுக்கு உரிமையிருக்கிறது என்ற உணர்வை  சகல மக்களுக்கும் கொடுக்கும்.

jehan-e1660716495972.jpg?resize=83%2C116கலாநிதி ஜெகான் பெரேரா
 

 

https://maatram.org/?p=10508

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.