Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சுசீலா சிங்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
மாரடைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பலருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைப் பார்க்க முடிகிறது.

ஒரு வீடியோவில் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும் நபர் திடீரென தரையில் விழுவதைக் காண்கிறோம். மற்றொரு வீடியோவில், ஒரு விழாவில் கையில் பூங்கொத்தை ஏந்திச்சென்றுகொண்டிருக்கும் ஒரு பெண் திடீரென்று கீழே சரிகிறார்.

மற்றொரு வீடியோவில் ஒரு நபர் தனது நண்பர்களுடன் நடந்து செல்லும்போது தரையில் விழுந்துவிடுகிறார்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு, ஹேஷ்டாக் heartattack, ட்விட்டரில் ட்ரெண்டாக்கத் தொடங்கியது. இதுபோன்ற திடீர் மரணங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களையும், கவலையையும் வெளிப்படுத்தினர்.

 

சமீபத்தில் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் அப்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, ஜிம்மில் டிரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பின்னர் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு அவர் காலமானார்.

 

திடீரென ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகளை, கார்டியாக் அரெஸ்ட் என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

இதயத்தின் அளவு மற்றும் தசைகள் பெரிதாவதால், அதன் ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்திவிடுவது போன்ற காரணங்களால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மரபணு காரணங்களாலும் இது ஏற்படலாம்.

கார்டியாக் அரெஸ்ட்டின் அறிகுறிகள்

மாரடைப்பு அறிகுறிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாக்டர் ஓ.பி. யாதவ், நேஷனல் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். உங்கள் உடலில் காரணம் சொல்லமுடியாத அறிகுறிகளை நீங்கள் கண்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அத்தகைய அறிகுறிகளில் இவை அடங்கும்

  • வயிற்றுப் பிடிப்பு
  • மேல் வயிறு உப்புவது மற்றும் கனமான உணர்வு . இதை வாயு அல்லது நெஞ்சரிச்சல் என்று கருதி அலட்சியப்படுத்தாதீர்கள்
  • மார்பில் அழுத்த உணர்வு
  • தொண்டையில் ஏதோ சிக்கியுள்ளது போன்ற உணர்வு
  • உடலின் செயல்படும் திறனில் திடீர் மாற்றம். உதாரணமாக உங்களால் ஒரு நாளைக்கு மூன்று மாடிகள் ஏற முடியும். ஆனால் திடீரென்று முடியாமல் போவது மற்றும் சோர்வாக உணர்வது.
  • பல வலிகள் பரவக்கூடியதாக உள்ளன.அதாவது வலி இதயத்திலிருந்து முதுகு வரை பயணிக்கிறது. சில நேரங்களில் இது பல் அல்லது கழுத்து வலி என்று புறக்கணிக்கப்படுகிறது. அப்படி செய்யக்கூடாது.
  • குடும்பத்தில் யாராவது 30-40 வயதில் இறந்திருந்தால் அல்லது திடீர் மரணம் அடைந்திருந்தால், உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.

”மாரடைப்பு ஏற்படும்போது நோயாளி அரை மணி நேரம் அல்லது அதற்கு மேல் நெஞ்சு வலியை அனுபவிக்கிறார். வலி இடது கைக்கு பரவுகிறது. அவருக்கு அதிகம் வியர்க்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது கார்டியாக் அரெஸ்டாக மாறும்,” என்று டெல்லியில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த இதயநோய் நிபுணர் டாக்டர் விவேகா குமார் தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனைக்கு வெளியே ஏற்படும் மாரடைப்பில் மூன்று முதல் எட்டு சதவிகிதம் பேர் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் என்று அவர் கூறினார்.

கொரோனா, தடுப்பூசி மற்றும் கார்டியாக் அரெஸ்டுக்கு இடையேயான தொடர்பு

கொரோனா மற்றும் கார்டியாக் அரெஸ்டுக்கு தொடர்பு

பட மூலாதாரம்,KATERYNA KON/SCIENCE PHOTO LIBRARY

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் இதுபோன்ற கார்டியாக் அரெஸ்ட் அதிகம் ஏற்படுகின்றன என்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அது குறித்த விவாதமும் சூடு பிடித்துள்ளது.

கொரோனா காரணமாக உடலில் ரத்தக் கட்டிகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. நுரையீரல், இதயம், கால்களின் நரம்புகள் மற்றும் மூளையில் இந்தக் கட்டிகள் உருவாகலாம் என்று டாக்டர். ஓ.பி. யாதவ் மற்றும் டாக்டர் விவேகா குமார் ஆகிய இருவரும் கூறுகிறார்கள். ரத்தத்தை நீர்க்கச்செய்ய மருந்துகளும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

“சமீபத்தில் உங்களுக்கு கோவிட் வந்திருக்கலாம், அதன் பிறகு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். எனவே இரண்டுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் கொரோனா இருந்த ஒருவருக்கு ரத்தம் உறைவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நோயாளிக்கு ப்ளட் தின்னரை கொடுக்கிறோம். உடற்பயிற்சி செய்யவும், நடை பயிற்சி செய்யவும் அறிவுறுத்துகிறோம். ஆனால் ஒவ்வொரு மாரடைப்பும் கொரோனாவால் ஏற்படுகிறது என்று சொல்வது தவறு,”என்று டாக்டர். ஓ.பி. யாதவ் குறிப்பிட்டார்.

“கொரோனா தடுப்பூசியும் ஒரு வகையில் கொரோனா தொற்று போன்றதுதான். கொரோனா மிகவும் கடுமையான தொற்று நோய். மேலும் அதன் காரணமாக ரத்த உறைவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ரத்த உறைவு இதயத்தில் இருந்தால் மாரடைப்பு அல்லது கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இது மூளையில் ஏற்பட்டால் ப்ரெயின் ஸ்ட்ரோக் ஏற்படும். இத்தகைய நிகழ்வுகள் இளைஞர்களிடையே அதிகம் காணப்படுகின்றன. மன அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் இதற்குக் காரணமாகும்,” என்கிறார் டாக்டர் விவேகா குமார்.

பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் ஏற்படும் மாரடைப்பு

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் இருக்கும் வரை, அவரது உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில் பெண்ணுக்கு மாதவிடாய் இருக்கும் வரை இந்த ஹார்மோன் அவளைப் பாதுகாக்கிறது, ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு, மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது.

மாரடைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

“45 வயது பெண்களை ஒப்பிடும்போது ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகம். இதன் விகிதம் 10:1. அதாவது பத்து ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஒரு பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது,”என்று டாக்டர் ஓ.பி.யாதவ் குறிப்பிட்டார்.

ஒரு பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து, மாதவிடாய் நின்றவுடன், மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது. அதே நேரத்தில், 60 வயதில், மாரடைப்பு என்ணிக்கை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக மாறுகிறது. 65 வயதுக்குப் பிறகு ஆண்களை விட பெண்களிடையே அதிக மாரடைப்பு ஏற்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே தங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இளம் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணத்தை விளக்கும் டாக்டர் ஓ.பி.யாதவ், “பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் இதுபோன்ற நோய்களை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது. புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் மைதாவால் செய்யப்பட்ட உணவு போன்றவற்றால் இத்தகைய நோய்களின் ஆபத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மறுபுறம் வீட்டில் இருக்கும் பெண்கள் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவதில்லை,”என்று குறிப்பிட்டார்.

ஜிம், சப்ளிமெண்ட்ஸ் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு

திடீரென ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்து, பழக்கமில்லாத உடற்பயிற்சிகளை செய்தால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி செய்யும் போது படிப்படியாக அதன் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நீங்கள் ஏதேனும் போட்டியில் பங்குகொள்ள தயாராகி வருகிறீர்கள் என்றால் அதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

அதிகமாக வியர்த்தால், அதிக தண்ணீர் குடிக்கவும், உடலில் உப்பு பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். ஆல்கஹால், புகையிலை மற்றும் போதைப்பொருள் நுகர்வு ஆரோக்கியத்தை பாதிக்கலாம். கூடவே ஆபத்தையும் அதிகரிக்கலாம்.

"எனர்ஜியை உருவாக்கும் அல்லது தசையை மேம்படுத்தும் பானங்களை குடிக்க வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு மனஎழுச்சியை ஏற்படுத்தும் மருந்துகள் இவற்றில் உள்ளன. உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை கலவைகளும் இவற்றில் உள்ளன,”என்று டாக்டர் விவேகா கூறுகிறார்.

பணிஓய்வுக்குப் பிறகு மட்டுமல்ல, இளமையிலும் உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக இரு மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். கட்டுப்பாடான உணவு மற்றும் உடற்பயிற்சி நல்ல ஆரோக்கியத்திற்கான மூல மந்திரமாகும்.

https://www.bbc.com/tamil/articles/c727qe9dd1no

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.