Jump to content

'தமிழ்நாடு' பெயர் சர்ச்சை: ஆளுநர் ரவி கருத்தைத் தொடர்ந்து சூடாகி வரும் விவாதங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ்நாடு' பெயர் சர்ச்சை: ஆளுநர் ரவி கருத்தைத் தொடர்ந்து சூடாகி வரும் விவாதங்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 20 நிமிடங்களுக்கு முன்னர்
"தமிழகத்தில் பிரிவினைவாத தீ கொழுந்துவிட்டு எரிகிறது" - சர்ச்சையாகி வரும் ஆளுநர் ரவியின் கருத்து

பட மூலாதாரம்,TNDIPR

தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது டிவிட்டர் தளத்தில் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

அதைத் தொடர்ந்து, இந்திய அளவில்  'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

தமிழ்நாடு என்ற பெயரைப் பயன்படுத்தவேண்டும் என்றும், இந்தியாவின் ஓர் அங்கம்தான் தமிழ்நாடு என்றும் ட்வீட்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒருசிலர் ஆளுநரின் கருத்துக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்துப் பதிவிட்டு வருகின்றனர்.

 

சர்ச்சை தொடங்கியது எப்படி?  

சென்னை  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

அதில் பங்கு பெற்ற தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "பிரதமர் மோதியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதுவும் மிகக் குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்திருந்தார்.  

ஆளுநரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தமிழ்நாடு என்பதற்குப் பதில் தமிழகம் என இருக்க வேண்டும் என்ற கருத்து பற்றிய விவாதம் நடந்து வருகிறது.  

ஆளுநர் ரவியின் பேச்சை விமர்சித்துள்ள திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு, ''வர்ணாசிரம உணர்வு, வேதகால சனாதனக் கோட்பாட்டுகளை கையில் வைத்துக் கொண்டு தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்து விட்டது.

அவருக்கு இம்மூன்றும் பிடிக்கவில்லை. தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் இரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச்செல்லும் முடிவை அவர்தான் எடுக்கவேண்டும்,'' என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக எழுத்தாளர் சு வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், ''தியாகி சங்கரலிங்கனார், அறிஞர் அண்ணா. தோழர் பூபேஷ்குப்தா என்று எங்கள் தலைவர்களால் கொன்று வீசப்பட்ட கருத்தை இன்று மீண்டும் ஆளுநர் ரவி தூக்கிக் கொண்டு வருகிறார். பழைய பிணம் என்றாலும் புதிய வண்டுகள் வெளிவரத் தானே செய்யும்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு என்று பெயர் வந்தது எப்படி?

மெட்ராஸ் மாகாணத்திலிருந்து மொழிவாரிய அடிப்படையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிரிந்து சென்றுவிட்டதில் இருந்தே மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை தீவிரமாக இருந்து வந்தது.

பெரியார், சங்கரலிங்கனார், ம.பொ.சிவஞானம், சி.என்.அண்ணாதுரை ஆகியோர் தொடர்ந்து இதுகுறித்துப் பேசி வந்தனர். நாடாளுமன்றத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பூபேஷ் குப்தா இது தொடர்பாக மசோதா ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

1950களின் மத்தியில் சங்கரலிங்கனார் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தில் இறங்கியபோது, அதில் ஒரு கோரிக்கையாக மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமென்ற கோரிக்கை இடம் பெற்றது.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக முன்வைத்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து அவர், தனது உயிரைத் துறந்தார்.

"தமிழகத்தில் பிரிவினைவாத தீ கொழுந்துவிட்டு எரிகிறது" - சர்ச்சையாகி வரும் ஆளுநர் ரவியின் கருத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தப் பெயர் மாற்றப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஓர் அமைப்பு, ம.பொ. சிவஞானத்தின் தமிழரசு கழகம். 1961ல் மிகத் தீவிரமாக இதற்கான போராட்டங்களை நடத்த ஆரம்பித்தார் ம.பொ. சிவஞானம்.

ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மட்டும் தமிழ்நாடு என்று அழைக்கவும் மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, 1967இல் சி.என். அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை ஆங்கிலத்திலும் பயன்படுத்துவதை நிறுத்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தமிழ்நாடு என்றே மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடுவதற்கான தீர்மானம் 1967 ஜூலை 18ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்டது.

தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறிய பிறகு, முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, தமிழ்நாடு என மூன்று முறை சொன்னதும், உறுப்பினர்கள் வாழ்க என முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு என்ற சொல்லாடல்தான் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது.

ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்புகள் ஏன்?

தற்போது ஆளுநர் தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை முன்னிறுத்தியுள்ளார். ஆளுநரின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டர் தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் ஏன் முன்னிறுத்தப்படுகிறது, தமிழகம் என்ற சொல்லாடலை பயன்படுத்தவேண்டும் என ஆளுநர் ரவி சொல்வதற்கான பின்னணி என்ன என்று நாம் எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.

பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளர் ஜீவகுமார், தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது எளிதாக நடந்த ஒரு நிகழ்வு இல்லை என்றும் பெரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இந்தப் பெயரைப் பெற்றுள்ளதால், ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

''ஆளுநர் இந்திய நாடு என்ற சொல்லில் ஈர்ப்பு கொண்டவராக இருக்கிறார். பலவிதமான தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நிலப்பகுதியைத்தான் நாடு என்று சொல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை, தமிழ் பேசும் மக்களின் நிலமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு என்ற பெயரைக் கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் திராவிட நாடு என்ற பெயர் வேண்டும் என்ற நிலைமை மாறி, தமிழ்நாடு என்ற பெயர்தான் சரி என்ற கருத்து எழுந்தது. பலகட்ட அரசியல் போராட்டங்களுக்குப் பின்னர், தமிழ்நாடு என்ற பெயர் நம் மாநிலத்திற்குக் கிடைத்தது. ஆனால் இந்த சொல்லாடலை ஆளுநர் அரசியல்படுத்துகிறார் என்று தோன்றுகிறது,'' என்கிறார் ஜீவகுமார்.

"தமிழகத்தில் பிரிவினைவாத தீ கொழுந்துவிட்டு எரிகிறது" - சர்ச்சையாகி வரும் ஆளுநர் ரவியின் கருத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ் மொழி குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் ஜீவகுமார், ''தமிழ் மொழி குறித்த பற்று என்பது பல ஆண்டுகளாக மக்களிடம் ஊறிக் கிடக்கிறது. தங்களது மொழியை வைத்து தங்களை தமிழ் மக்கள் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

தமிழர்களுக்கு தனித்த அடையாளம் இருப்பதுகூட ஆளுநருக்கு உறுத்தலாக இருக்கலாம். இந்தியர்கள் என்பதில் நமக்குப் பெருமிதம், அதேநேரம் தமிழர்கள் என்ற அடையாளம் அவசியம் என்று நாம் கருதுகிறோம்.

பிரதமர் மோதி பல நிகழ்வுகளில் தான் தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்துகிறார். அவர் தமிழ் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் தன்னை முன்னிறுத்துகிறார் என்பதால், அவரை ஆளுநர் பின்பற்றுவது சரியாக இருக்கும்.

இதே காசி தமிழ் சங்கமம் நிகழ்வில்தான் மோதி, தமிழ் மொழியின் அடையாளத்தைக் காப்பது இந்தியர்களின் கடமை என்றார். அதை ஆளுநர் செய்வதற்குப் பதிலாக அடையாளத்தை ஏன் வெறுக்கிறார்?'' என்று கேள்வியெழுப்புகிறார் ஜீவகுமார்.

ஆளுநர் தனித்துவத்தை எதிர்க்கிறாரா?

ஆளுநர் தொடர்ந்து பல நிகழ்வுகளில் தொடர்ந்து ஒரே நாடு ஒரே அடையாளம் என்ற கொள்கையைப் பரப்பி வருவது சரியல்ல என்றும், அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போல செயல்படுவதாகத் தோன்றுகிறது என்றும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

''ஆளுநர் ரவி அரசியல் சாசனப்படி தனது கடமையை நிறைவேற்றுவதை விட ஆர்எஸ்எஸ் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிகிறது. அவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, தற்போது ஆளுநர் என்ற பதவியை வகிக்கிறார்.

இந்திய அரசமைப்பு ஒவ்வோர் இந்தியரின் தனித்த அடையாளங்களைப் பாதுகாக்கப் பல விதிகளைச் சொல்கிறது. ஆனால் ஆளுநர் இந்திய அரசமைப்புக்கு எதிராக செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது,'' என்கிறார்.

மேலும், ''தமிழ்நாடு என்ற பெயருக்கு ஒரு வரலாறு உள்ளது என்பதை அறிந்தவர்தான் ரவி. இந்தியா என்பது தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களைக் கொண்டுள்ள நாடு. ஆனால் ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவத்தையும் இந்தியா அரசமைப்பு ஏற்கிறது.

ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே கல்வி முறை என்ற வரிசையில், தற்போது இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அந்த தனித்துவத்தை அழிப்பதற்குச் சமம்,'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.

அரசியல் விமர்சகர் பத்ரி சேஷ்திரி.

பட மூலாதாரம்,BADRI SESHADRI/FACEBOOK

 
படக்குறிப்பு,

தமிழகத்தில் பிரிவினைவாதம் என்ற தீ கொழுந்துவிட்டு எரிவதால், அதைத் தண்ணீர் கொண்டு அணைக்க அவர் இந்திய ஒற்றுமை என்ற கருத்தைச் சொல்வதில் தவறில்லை என்கிறார் அரசியல் விமர்சகர் பத்ரி சேஷ்திரி.

''பிரிவினை என்பது திமுகவின் டிஎன்ஏவில் உள்ளது''

திமுக தனித்துவம் என்று சொல்வதை பிரிவினைவாதம் என்று புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் அரசியல் விமர்சகர் பத்ரி சேஷ்திரி. தனித்துவம் என்ற ஒரு கருத்தைப் பயன்படுத்தி, இந்திய நாடு, இந்தியர்கள் என்ற கருத்திலிருந்து பிரிவதைத்தான் திமுகவினர் விரும்புகிறார்கள் என்கிறார் பத்ரி.  

''தமிழ்நாடு என்ற சொல்லை விட தமிழகம் என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்று ஆளுநர் சொல்வதில் தவறில்லை. தமிழகத்தில் பிரிவினைவாதம் என்ற தீ கொழுந்துவிட்டு எரிவதால், அதைத் தண்ணீர் கொண்டு அணைக்க அவர் இந்திய ஒற்றுமை என்ற கருத்தைச் சொல்வதில் தவறில்லை.

அவர் பல நிகழ்வுகளில் ஓர் அரசியல் கருத்தை வெளியிடுகிறார் என்றால், அவர் பிரிவினைவாதம் என்ற கருத்தை அகற்றி ஒற்றுமையை அதிகரிக்கும் வேலையைச் செய்கிறார், அவருக்கு அந்த வேலை தரப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.

தமிழ்நாடு என்ற கருத்தை முன்வைப்பவர்கள் பலரும் திமுகவினர்தான், ஒற்றுமையை விரும்புபவர்கள் இந்தப் பிரிவினையை ஏற்கமாட்டார்கள்,'' என்கிறார்.

''திராவிடம் என்று சொல்லிக்கொண்டாலும், தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் அண்டை மாநில தலைவர்களுடன் நட்புறவோடு இருப்பதில்லை. அதனால், இந்தியா என்ற கருத்தை ஆளுநர் முன்வைக்கிறார்.

பாஜகவில் இருப்பவர்களின் டிஎன்ஏவில் இந்துத்துவம் இருப்பதைப்போல திமுகவில் இருப்பவர்களின் டிஎன்ஏவில் பிரிவினைவாதம் என்பது அடங்கியுள்ளது. அதனால், அதற்கு எதிர்வினை தென்படும்போது, அவர்கள் பேசுகிறார்கள்.

திமுகவில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற பிரிவினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் மட்டும்தான் இதுபோன்ற பிரிவினை வெளிப்படுகிறது,'' என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/cx9vez5p5zwo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ விலை ஏற்ற போகிறார்கள் .. பெட்ரோலோ.. ரீசலோ .. 😢மக்கள் கவனத்தை திசை திருப்புவது மத்தி/மாநில கூட்டு ஒப்பந்தமாக கூட இருக்கலாம் 👍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழ் நாடென்னு போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே. பா.ஜ.க வுக்கும் ஆர். எஸ்.எஸ் தேள் வந்து பாயுதோ? 

தமிழ் நாடு என்ற பெயரையே சகிக்கமுடியாமல் தமிழ் நாட்டை  தமிழகம் என்றும் தக்‌ஷன பிரதேஷ்  மாற்ற வேண்டுமென்று கூப்பாடு போடும் பாஜக வும் மோடியிம் ஈழத்தமிழருக்கு உதவும் என்று சிலர்  நினைப்பது வேடிக்கையாக இல்லையா? 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்கு… நெருப்பு எடுத்துக் கொடுப்பதே, இந்த தி.மு.க.தான்.
தமிழ்நாடு  என்று அழைக்கப்பட்டு வந்ததை… மேடைகளிலும், சட்டசபையிலும்…
திராவிடநாடு, We Dravidians என்று முட்டாள்தனமாக கூப்பாடு போட்டால்,
பலர் போராடிப் பெற்ற தமிழ்நாடு என்ற பெயரை,  
மற்றவன் தனக்கு வசதியாக மாற்ற நினைப்பான் தானே.

முதலில் இந்த அரை திராவிட வேக்காடுகள்…
வாயை மூடிக் கொண்டிருந்தாலே பாதிப் பிரச்சினை உருவாகாமல் இருக்கும்.

பத்து வருசம்… சட்டமன்றம் போகமால் தோல்வி அடைந்திருந்த தி.மு.க.
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டி போடும் போது…
தமிழ், தமிழ்நாடு என்று மேடைகளில் பேசி விட்டு…  வெற்றி பெற்ற அடுத்த நாளே..
திராவிடம், திராவிட மாடல் என்று உளறிக் கொண்டு திரிகின்ற மாங்காய் மடையர்களை என்ன செய்வது?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

'தமிழகம்' என்று குறிப்பிட்டது ஏன்?: ஆளுநர் தந்த விளக்கம் - சர்ச்சை முடிவுக்கு வருமா?

தமிழ்நாடு - ஆளுநர் விளக்கம்

பட மூலாதாரம்,TNDIPR

18 ஜனவரி 2023, 07:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

பண்டைய காலத்தில் தமிழ்நாடு என்பதே இல்லாததால்தான் காசியுடன் தமிழ் மக்களுக்கு உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.

அவரது விளக்க அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை அவர் 6 முறை பயன்படுத்தியுள்ளார். தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டதால் எழுந்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தின.

இதன் பின்னணியில், தமிழ்நாட்டை தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டது ஏன் என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

"அண்மையில் நடந்து முடிந்த ஒரு மாத கால, காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு ஆளுநர் மாளிகையில் கடந்த ஜனவரி 4-ம் தேதியன்று பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசிக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள தொடர்பை குறிக்கவே 'தமிழகம்' என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.

அந்த காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. ஆகவே, வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது கண்ணோட்டத்தை, 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்திற்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பேச்சின் அடிப்படை புரியாமல், 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள் விவாதப் பொருளாகியுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்." என்று அந்த அறிக்கையில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு என்று குறிப்பிடுவதைத் தவிர்ப்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது இந்த விளக்க அறிக்கையில் 6 இடங்களில் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை தொடங்கியது எப்படி? 

ஜனவரி 5ஆம் தேதி சென்னை  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

அதில் பங்கு பெற்ற தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "பிரதமர் மோதியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதுவும் மிகக் குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்திருந்தார். 

ஆளுநரின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. பல அரசியல் கட்சிகளும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் அவ்வப்போது தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நிலையில் சர்ச்சை நீடித்தது.

இந்நிலையில் தனது உரை குறித்து இன்று விளக்கமளித்துள்ளார் ஆளுநர் ஆர். என். ரவி.

https://www.bbc.com/tamil/articles/cpel8y0qj7lo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயரில் கூட தமிழ்நாடு என்று எழுதவோ, தமிழ்நாடு என்று கூறவோ விடக்கூடாது என்று  என்று ஹிந்தியர்கள் விரும்புகின்றார்கள் போல. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு முதலமைச்சர் - ஆளுநர் ரவி இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 27 ஜனவரி 2023, 13:03 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
குடியரசு தலைவர்

தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக இடையில் மோதல் நீடித்து வந்த நிலையில், ஆளுநர் அளித்த குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றதன் மூலம் அந்த மோதல் உண்மையிலேயே முடிவுக்கு வந்ததா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஒவ்வொரு குடியரசு தினத்தின்போதும் தமிழ்நாடு ஆளுநர், தமது மாளிகையில் விருந்தளிப்பது வழக்கம். இந்த விருந்தில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள்.  

ஆனால், தற்போது தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நிலை நீடித்து வருவதால், இந்த விருந்தில் தமிழ்நாடு அரசை சேர்ந்தவர்களும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி இருந்தது.

ஏற்கெனவே, தி.மு.கவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை இந்த விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்களா என்பது குறித்து தெரியாத நிலையில், குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "குடியரசு தின விழாவையொட்டி நாளை (26.01.2023) மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தொலைபேசியில் அழைப்பு விடுத்தார் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என் ரவி அவர்கள். மாண்புமிகு ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து மாண்புமிகு முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார்" என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆளுநரின் விருந்தில் முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியானது.

அதன்படி, குடியரசு தினத்தன்று நடந்த விருந்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே. பொன்முடி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

கடந்த ஆண்டு ஆளுநர் அளிக்கும் விருந்து கோவிட் பரவல் காரணமாக, ஆளுநர் அளிக்கும் விருந்து ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்றது.

நீட் தொடர்பான மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அந்த விருந்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்தார். ஆனால், அதற்குப் பிறகு, சுதந்திர தினத்தன்று நடந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்றார்.

ஆனால், கடந்த சில மாதங்களில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. பல்வேறு விழாக்களில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசிய விவகாரம் சர்ச்சையான நிலையில், சட்டமன்றக் கூட்டத் தொடர் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, 'தமிழ்நாட்டிற்கு தமிழகம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்' என்று கூறியது பெரும் புயலைக் கிளப்பியது.

ஆளுநர் முதல்வர் சந்திப்பு

இதற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையின் சில பகுதிகளை ஆர்.என். ரவி தவிர்த்து விட்டு வாசித்ததும் அதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானமும் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்ததும் இந்த மோதலை உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

இதற்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் முதலமைச்சரோ, அமைச்சரோ, தி.மு.கவின் கூட்டணி கட்சியினரோ கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில்தான், குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் விருந்தில் முதலமைச்சரும் ஆளும் கட்சியினரும் பங்கேற்றிருக்கின்றனர்.

தொடர்ந்து ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையில் மோதல் நீடித்துவரும் நிலையில், இந்த மாற்றம் எப்படி நடந்தது?

தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பாக ஆளுநர் தந்த விளக்கம், அவர் இறங்கிவந்திருப்பதைக் காட்டுவதாக ஆளும்கட்சி நினைக்கிறது.

இதுதவிர, தொலைபேசி மூலம் ஆளுநரே முதலமைச்சரை அழைத்ததாலும் இந்த விருந்தில் முதலமைச்சர் தரப்பு கலந்துகொண்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் ரவி

ஆனால், தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து நடந்துகொள்வதாக் கூறி, இந்த விருந்தைப் புறக்கணித்த கூட்டணிக் கட்சிகளுக்கு ஆளும்கட்சியின் இந்த நடவடிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதா?

குடியரசு தின விருந்தைப் புறக்கணிப்பது என்ற முடிவை ஆளும் கட்சியைக் கலந்தாலோசித்து அவர்கள் எடுத்தார்களா எனக் கேள்வியெழுப்புகிறார் டி. ராமகிருஷ்ணன்.

"ஒரு ஆட்சி என்று இருந்தால் அதன் பல்வேறு மட்டங்களில் கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். ஏன் ஒரே அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் மத்தியிலேயே கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால், இது போன்ற நிகழ்வுகளில் மரியாதை அளிப்பது என்பது, அந்த தனி நபருக்கு அளிக்கும் மரியாதை அல்ல. அந்தப் பதவிக்கு அளிக்கும் மரியாதை. அப்படித்தான் முதல்வர் கலந்துகொண்டிருப்பார் எனக் கருதுகிறேன். ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் மோதல்கள் தொடரும்பட்சத்தில், நிர்வாகம் பாதிக்கப்படும். அம்மாதிரி சூழலில், இரு தரப்பும் இதுபோல இணைவது நல்லதுதான். மற்றொரு பக்கம்பார்த்தால், இந்த விருந்தில் கலந்துகொண்ட பிறகும்கூட, கருத்து வேறுபாட்டை இருவரும் தொடர முடியும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இது போன்ற மோதல்களை மிக மோசமான நிலைக்கு எடுத்துச்செல்ல மாட்டார்கள். தெலங்கானாவில் ஆளுநர் - முதல்வர் மோதல் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறது. இங்கே அது போல இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

இந்த விருந்தைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியினர் கலந்துகொண்டது தர்மசங்கடமாக இருக்காதா என்று கேட்டால், அவர்கள் தங்கள் புறக்கணிப்பு முடிவை, ஆளும்கட்சியை கலந்தாலோசித்து எடுத்தார்களா என்று கேட்க வேண்டும். தவிர, அதனை எதற்காக ஒரு அறிக்கையாக வெளியிட்டார்கள் என்பதும் தெரியவில்லை. புறக்கணிப்பது என்றால் போகாமல் இருந்துவிடலாமே? எதற்காக அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை. அதனால்தான் இந்தக் கேள்வி எழுகிறது.

ஆளுநர் ரவி

ஆனால், ஆளுநரும் அரசும் இணக்கமாவது மாநிலத்திற்கு நல்லது. அந்த வகையில் இதனை வரவேற்க வேண்டும் என்கிறார்" மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.

வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் கேட்டபோது, "முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமென நான் சொல்ல முடியாது. ஆனால், முதலமைச்சர் கொடியேற்று விழாவில் கலந்துகொண்டதோடு, விட்டுவிட்டு தேநீர் விருந்தை புறக்கணித்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பார்வை." என்று சொன்னார்.

இந்த விழாவில் தி.மு.க. கலந்துகொண்டதாகக் கருதவில்லை; அரசு சார்பில் முதல்வரும் அமைச்சரும் கலந்துகொண்டதாகவே கருதுகிறேன் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

"ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு இணக்கமான சூழலுக்கு இறங்கி வந்திருக்கிறார். ஆகவே முதல்வரும் அமைச்சரும் இதில் கலந்துகொண்டிருப்பதாகக் கருதுகிறேன். ஆனால், ஆளுநர் அப்படி இறங்கிவந்திருப்பதைப் போலத் தோற்றம் தருவதை நாங்கள்  உண்மையென நம்பவில்லை. அதை ஒரு தந்திரமாகத்தான் நினைக்கிறோம். அவர் உண்மையிலேயே இறங்கிவருவதாக இருந்திருந்தால் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஏனென்றால் பல மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்படாமல் மாநிலமே நெருக்கடியில் இருக்கிறது. தேநீர் விருந்து அளிப்பது ஆளுநரின் முதன்மையான கடமையல்ல. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதுதான் அவரது முதன்மைக் கடமை. அதை அவர் சரியாகச் செய்ய வேண்டும்.

முதலமைச்சர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். குடியரசு தின விழாவில் தமிழ்நாடு வாழ்க என்ற முழக்கத்துடன் வாகனங்கள் இடம்பெற்றிருந்தன. ஆகவே, தனது அரசு ரீதியான கடமையை அவர் செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆளுநர் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு" என்கிறார் ரவிக்குமார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆளுநர் சென்னாரெட்டியுடன் மோதல் ஏற்பட்டபோது, இது போன்ற தேநீர் விருந்துகள் நடந்தால், அமைச்சர்கள் பெரும்பாலும் தத்தம் மாவட்டங்களில் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். இதன் மூலம் அமைச்சர்களும் விருந்தில் கலந்துகொள்ள மாட்டார்கள், புறக்கணிப்பு என்ற பேச்சும் எழாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் டி. ராமகிருஷ்ணன்.

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான மோதல் ஓரளவுக்குத் தணிந்திருப்பதைப் போன்ற தோற்றம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற முக்கிய விஷயங்களில் ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என்பதைவைத்துத்தான் இந்த நல்லுறவு எவ்வளவு நாட்களுக்கு நீளும் என்பது தெளிவாகும்.

https://www.bbc.com/tamil/articles/cl78lzpvdzjo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது பிரச்சனை ரிலீஸ் - 

தமிழ் நாயுடு - மத்திய அரசு

IMG-20230128-104715.jpg

ராமதாஸ் கண்டனம்..

டிஸ்கி :

இன-பரம்பல் அடிப்படையில் அவயள் சரியாத்தான் போட்டிருக்கினம்.. 😊

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.