Jump to content

டில்லி கொழும்பைக் கையாளுகின்றதா, கொழும்பு டில்லியை ஏமாற்றுகின்றதா?


Recommended Posts

 
பதின்மூன்றை ஈழத்தமிழர்களுக்காகக் காண்பித்துக் கொண்டு

டில்லி கொழும்பைக் கையாளுகின்றதா, கொழும்பு டில்லியை ஏமாற்றுகின்றதா?

இலங்கையின் விருப்பங்களுக்கு உடன்பட்ட ஜெய்சங்கரின் கொழும்புப் பயணம்
 
பதிப்பு: 2023 ஜன. 21 10:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 21 21:54
main photomain photomain photo
தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே தொடர்ச்சியாகக் காணப்படும் முரண்பாடுகள், பிரிந்து நின்று அமெரிக்க இந்திய அரசுகளின் தந்திரோபாயங்களுக்கு உட்படுதல், மற்றும் கொழும்பில் சிங்கள ஆட்சியாளர்களுடனான தனிப்பட்ட உறவுகள் போன்ற நேர்மையற்ற அரசியல் செயற்பாடுகளை இந்திய - இலங்கை அரசுகள் கன கச்சிதமாகக் கையாண்டு வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கொழும்புப் பயணம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டுடன் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் புதுடில்லியில் பதவி வகிக்கும் மிலிந்த மொறகொட அதற்குரிய அரசியல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பதின்மூன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜெய்சங்கர் பரிந்துரைத்திருப்பது வேடிக்கை.
 
பதின்மூன்றை விட மேலதிகமான அரசியல் அதிகாரப் பங்கீட்டை ஈழத்தமிழர்களுக்கு வழங்க இந்தியாவுக்குச் சுத்தமாக விருப்பமில்லை. ஆகவேதான் 2009 இற்குப் பின்னர் பதின்மூன்றும் தேவையில்லை என்ற சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கையில் தமது நோக்கத்தை வெற்றிகொள்ளலாம் என்ற எண்ணக் கரு இந்தியாவிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது

 

பதின்மூன்று என்பது தற்போது இந்திய - இலங்கை அரசுகளுக்கு உதைப்பந்தாட்ட விளையாட்டாக மாறிவிட்டது.

ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில் எழுந்துள்ள புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிகளுக்கு மத்தியில், தன்னை மிகப் பெரிய சக்தியாகக் காண்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட இந்தியா, இந்தோ – பசுபிக் விகாரத்தில் இலங்கையைத் தனது கூட்டாளியாக வைத்திருக்க வேண்டுமென்றால். சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உண்டு.

இலங்கைக்கும் இது தெரிந்த பின்னணியில்தான், இந்தியாவைத் தங்கள் பக்கம் இறங்கி வர வைக்கும் அரசியல் நுட்பங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிக நுட்பமாகக் கையாண்டு வருகின்றார். இந்த நகர்வு ஏறத்தாள கடந்த மூன்று மாதங்களாகச் சூடு பிடித்திருந்த நிலையில், ரணிலின் குறிப்பாக இலங்கையின் சில விருப்பங்களுக்கு இந்தியா உடன்பட்டிருக்கின்றது. கடந்த நவம்பரில் இலங்கையில் இந்தியாவுக்கான முக்கியத்துவத்தை ரணில் வழங்கியிருந்தார்.

இந்த இடத்தில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென அமைச்சர் ஜெய்சங்கர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடுமையாக அழுத்தியதாக இந்திய ஆங்கில ஊடகங்கள் மார் தட்டுகின்றன. இலங்கையை அடிபணிய வைத்தார் ஜெய்சங்கர் என்று ஒன்இந்தியா (oneindia) என்ற செய்தி இணையத்தளம் வர்ணித்துள்ளது.

ஆனால் இலங்கைக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்வதற்கு இந்தியா இணங்கியுள்ளதாகவும், இலங்கையின் பல கோரிக்கைகளுக்கு இந்தியா விட்டுக் கொடுத்துச் சாதகமான பதில் வழங்கியிருப்பதாகவும் கொழும்பில் சிங்கள ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன.

டெயிலிமிரர் நாளிதழ், ரணில் விக்கிரமசிங்கவின் சிறந்த உத்தியால் இலங்கைக்கு உதவி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டிருப்பதாக விபரித்துள்ளது. இலங்கையின் இராஜ தந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி என்ற தொனியில் அததெரன (adaderana) என்ற செய்தித் தளம், ஜெய்சங்கரின் கொழும்பு வருகையை விமர்சிக்கிறது.

 

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான இந்தியாவின் வெறும் ஆறுதல் வார்த்தையல்ல. இது புதுடில்லி பகிரங்கப்படுத்திய உண்மை. அதாவது ஈழத் தமிழர் விவகாரத்தை வைத்து இலங்கைக்கு இனிமேல் அழுத்தம் கொடுக்கமாட்டோம். தேவையான உதவிகளைச் செய்வோம் என்பதே அந்த உண்மை. ஆகவே இலங்கையின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது

 

இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையில் தமக்குரிய தேவைகளை இலங்கை வழங்கினால் போதும் என்ற நிலையிலும், ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கை குறிப்பாகச் சிங்கள ஆட்சியாளர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்பக் கையாளட்டும் என்ற போக்குமே விஞ்சிக் காணப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் விவகாரத்தில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அழுல்படுத்துங்கள் என்று சொல்லளவில் மாத்திரம் இந்தியா நின்றால் போதும் என்ற மன நிலையே மேலோங்கியுள்ளது.

ஆகவே இந்தியாவின் தேவைக்கு இலங்கையும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவும் விட்டுக் கொடுத்துச் செயற்படுதல் என்ற பரஸ்பர அரசியல் அணுகுமுறை வெற்றியளித்திருக்கின்றது என்பதையே ஜெய்சங்கரின் கொழும்புப் பயணம் இம்முறை பகிரங்கப்படுத்தியிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்கவும் ஜெய்சங்கரும் உத்தியோகபூர்வமாகச் சந்தித்து உரையாடியபோது, இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்கள் மற்றும் முதலீட்டு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டிருப்பதாக அததெரன என்ற ஆங்கில இணையத்தளம் கூறுகின்றது.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெற இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற தொனியில் ரணில் நேரடியாகக் கேட்டிருக்கிறார்.

சீனாவின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இணக்கத்தை ஏற்படுத்த சர்வதேச நாணய நிதியம் களைத்துவிட்டது. ஆகவே இந்தியாதான் ஒத்துழைக்க வேண்டும் என்ற தொனியை ஜெய்சங்கரிடம் இலங்கை தெளிவுபடுத்தியிருக்கிறது.

இதன் காரணமாகவே வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்த பின்னர் கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஜெய்சங்கர், மற்றைய நாடுகளின் கடன் மறுசீரமைப்புகளை இலங்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை எனவும் இந்தியா அனைத்தையும் செய்யும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

இது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான இந்தியாவின் வெறும் ஆறுதல் வார்த்தையல்ல. இது புதுடில்லி பகிரங்கப்படுத்திய உண்மை. அதாவது ஈழத் தமிழர் விவகாரத்தை வைத்து இலங்கைக்கு இனிமேல் அழுத்தம் கொடுக்கமாட்டோம். தேவையான உதவிகளைச் செய்வோம் என்பதே அந்த உண்மை. ஆகவே இலங்கையின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.

அத்துடன் இலங்கையும் தமக்கு அடங்காமல் அமெரிக்கா – சீனாவுடன் நேரடியாக உறவைப் பேணி வல்லரசு நாடு என்ற இந்தியாவின் கனவுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற புதுடில்லியின் அச்சத்திற்கும் நிம்மதியான பதில் இலங்கையிடம் இருந்து இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.

அதற்கு ஏற்ப இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் ஒன்றையும் வெள்ளிக்கிழமை கைச்சாத்திட்டுள்ளது. இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட உயர் தாக்க சமூக அபிவிருத்தித் திட்டத்தின் (High Impact Community Development Project- HICDP) வரம்பை அதிகரிப்பது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமே கைச்சாத்தாகியுள்ளது.

இலங்கையின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும், இந்தியா சார்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கையெழுத்திட்டனர்.

2005 ஆம் ஆண்டு மே மாதம் முதன்முதலில் கைச்சாத்திடப்பட்ட இலங்கையில் சமூக மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் பத்து பில்லியன் டொலர்கள் உதவிகளை இலங்கை கட்டம் கட்டமாகப் பெறவுள்ளது. வடக்குக் கிழக்கு என்றில்லாமல் இலங்கைத்தீவின் சகல பகுதிகளிலும் சமூகக் கட்டமைப்பை மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கம் என்று அததெரன இணையத்தளம் விபரிக்கின்றது.

அதேவேளை. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். டெல்லி, இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் முகாமிட்டுள்ளது. தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலை துறைமுகம், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரத்தில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

முந்நூற்றுத் தொன்நூறு பேருடன் இந்தியப் போர்க்கப்பல் திருகோணமலையில் தரித்து நிற்பதாக ஒன்இந்தியா என்ற ஆங்கில இணையத்தளம் கூறுகின்றது.

ஆகவே இலங்கையில் இந்தியாவின் எதிர்பார்ப்பும் விருப்பங்களும் நிறைவேறியுள்ளன. அதேநேரம் இலங்கை எதிர்பார்க்கின்ற ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் கொடுக்கக்கூடாது. மற்றும் பதின்மூன்று பற்றியும் பேசக்கூடாது என்ற விருப்பங்களும் நிறைவேறியிருக்கின்றன.

ஆனால் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாகக் கூறியதால் இலங்கைக்குப் பயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுத் தமிழ் நாட்டைத் திருப்திப்படுத்துவதாகக் கற்பனை செய்கின்றன.

 

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா இனிமேல் தலையிடாது, அழுத்தம் கொடுக்காது என்பதை மேலும் சில மாதங்கள் காத்திருந்து நன்கு உறுதிப்படுத்திய பின்னர், இலங்கையில் இந்தியாவுக்கான ஆதரவுத் தளத்தையும் சிங்கள ஆட்சியாளர்கள் புறம்தள்ளும் காலம் இல்லாமில்லை

 

கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் நாளிதழ்கள் மற்றும் தமிழ் செய்தி இணையங்களும் அரசியல் தீர்வு வந்துவிட்டது என்ற தொனியில் பதின்மூன்றுக்கு இந்தியா கொடுத்த பெரும் அழுத்தம் என்று முக்கியப்படுத்தியுள்ளன.

பதின்மூன்றை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இந்தியா 2009 மே மாத்தில் இருந்து இன்று வரை கடந்த பதின் நான்கு வருடங்களில் பல தடவை அழுத்தம் கொடுத்திருக்கின்றன.

2012 ஆம் ஆண்டில் இருந்து கடந்த 2022 மார் மாதம் வரை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் பதின்மூன்று உண்டு. ஆனால் இலங்கை அது பற்றிக் கவனமே செலுத்தவில்லை. பதின்மூன்று பற்றி இலங்கை கருத்தில்கூட எடுக்கவும் இல்லை.

ஈழத்தமிழர்கள் அதனை ஏற்க விரும்பவில்லை என்பதைக் காரணம்கூறி, அந்தத் திருத்தச் சட்டத்தில் இருந்த காணி பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட முக்கியமான அதிகாரப் பரவலாக்கல்களை சிங்கள ஆட்சியாளர்கள் கொழும்பை மையப்படுத்திய இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் மீண்டும் கொண்டு சென்றுள்ளனர். இது இந்தியாவுக்கும் உலகத்துக்கும் தெரியாததல்ல.

தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் அது புரியாததல்ல. ஆனால் பதின்மூன்றை வைத்துக் கொண்டுதான் இந்தியா தனக்குரிய அரசியல் - பொருளாதார லாபங்களை இதுவரை சம்பாதித்து வந்தது.

இருந்தாலும் ஜெய்சங்கர் வியாழக்கிழமை கொழும்புக்குப் பயணம் செய்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதில் இருந்து, பதின்மூன்றை இந்தியா இலங்கையிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறது. அதாவது பதின்மூன்றை இலங்கை நடைமுறைப்படுத்தினால் என்ன, கைவிட்டால் என்ன என்பதே அதன் அர்த்தம்.

பதின்மூன்றை விட மேலதிகமான அரசியல் அதிகாரப் பங்கீட்டை ஈழத்தமிழர்களுக்கு வழங்க இந்தியாவுக்குச் சுத்தமாக விருப்பமில்லை. 1983 இல் இருந்து இந்தியாவின் நிலைப்பாடும் இததான். ஆகவேதான் 2009 இற்குப் பின்னர் பதின்மூன்றும் தேவையில்லை என்ற சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கையில் தமது நோக்கத்தை வெற்றிகொள்ளலாம் என்ற எண்ணக் கரு இந்தியாவிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

அதேநேரம் ரசிய – உக்ரெயன் போர்ச் சூழல் ரசியாவுக்கு இந்தியா வழங்கும் ஆதரவினால் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள பனிப்போருக்கும் குறைந்தபட்சம் ஜெய்சங்கரின் கொழும்புப் பயணம் ஓரளவு தீர்வு கண்டிருக்கின்றது என்ற அவதானிப்பும் உண்டு.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளை அமெரிக்கா நேரடியாகக் கையாண்டிருக்கின்றது. அதுவும் பாகிஸ்தான் அரசுடன் நேரடியான உறவுகளைப் பேணி பாகிஸ்தான் கடற்படையைப் பலப்படுத்தி இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது.

இதன் பின்னணயில் இலங்கையை இந்தியா அவசரமாகக் கையாண்ட இந்தியா, சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குரிய தீர்வுகளை ஏற்படுத்தத் தனது சக்திக்கு அப்பாற்பட்டு இணங்கியிருப்பதை அமெரிக்கா பாராட்டியுள்ளது.

 

ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கையின் விருப்பங்களுக்கு ஏற்ப ஏலம் விட்டுச் சிங்கள ஆட்சியாளர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் இந்தியா கொண்டு வரும் முயற்சியை எடுத்திருக்கிறது என்றே கருத இடமுண்டு

 

கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ள கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், அனைத்துக் கடன் வழங்குனர்களும் இதற்கு இணங்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் இலங்கைக்கு அமெரிக்காவும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத்தயார் என்று ரூவிற்றரில் கூறியிருக்கிறார்.

'பாரிஸ் கிளப்' நாடுகளுடன் ஒருங்கிணைந்து உரியவறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தததுமான கடன் சலுகைகளை வழங்குவதாகவும் இந்தியா அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக அமெரிக்கத் தூதுவர் புகழ்ந்துள்ளார்.

அமெரிக்க - இந்திய அரசுகளிடையே பனிப்போர் இருந்தாலும் ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் சேர்ந்தே செயற்பட்டிருக்கின்றது.

இதனால், இந்தியாவைக் கடந்து அமெரிக்காவுடன் நேரடியான உறவைப் பேண வேண்டும் என்று விரும்பித் தன்னால் இயன்ற இராஜதந்திர உத்திகளைக் கையாண்ட இலங்கைக்குக் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா பாடம் புகட்டியதாகச் சில இந்திய ஆங்கில ஊடகங்கள் பராட்டும் நிலை வரலாம்.

ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கையின் விருப்பங்களுக்கு ஏற்ப ஏலம் விட்டுச் சிங்கள ஆட்சியாளர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் இந்தியா கொண்டு வரும் முயற்சியை எடுத்திருக்கிறது என்றே கருத இடமுண்டு.

இருந்தாலும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா இனிமேல் தலையிடாது, அழுத்தம் கொடுக்காது என்பதை மேலும் சில மாதங்கள் காத்திருந்து நன்கு உறுதிப்படுத்திய பின்னர், இலங்கையில் இந்தியாவுக்கான ஆதரவுத் தளத்தையும் சிங்கள ஆட்சியாளர்கள் புறம்தள்ளும் காலம் இல்லாமில்லை.

ஏற்கனவே அதற்குரிய பட்டறிவு இந்தியாவுக்கு உண்டு. இலங்கையின் அரசியல் ஏமாற்றுக்கள் உலகத்துக்கும் தெரியும்.

ஆகவே ஜெய்சங்கரின் கொழும்புப் பயணத்தில் வடக்குக் கிழக்குக்கு முழுமையான அரசியல் அதிகாரப் பங்கீட்டை வழங்குவது பறறிய பேச்சு எடுக்கப்படவேயில்லை. மாறாக வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இந்தியா உதவி செய்யும் என்று பொதுக் கண்ணோட்டத்தில் கருத்துக் கூறிவிட்டு ஜெய்சங்கர் சென்றிருக்கின்றமை, பிராந்தியத்தில் இந்திய நலன்களுக்கு உகந்ததல்ல.

https://www.koormai.com/pathivu.html?therivu=2472&vakai=4&fbclid=IwAR05ww4l6qfvQ9JoNzi8huYKnR5_RdSDhCbRCU1GDU2nPZDkuVy2N2SqMrg

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா இந்த கட்டுரை எழுதியவர் யாரென்று கடைசிவரை குறிப்பிடவில்லையே?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.