Jump to content

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில் நேரடி தகுதிபெற குறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில் நேரடி தகுதிபெற குறி

31 JAN, 2023 | 09:45 AM
image

(என்.வீ.ஏ.)

புளூம்ஃபொன்டெய்ன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (29) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது.

இந்தியாவில் இந்த வருட பிற்பகுதியில் நடைபெறவுள்ள 50 ஓவர் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட நேரடி தகுதிபெறுவதற்கு கடுமையாக முயற்சித்துவரும் தென் ஆபிரிக்காவுக்கு இந்த வெற்றி பெரும் திருப்தியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள தென் ஆபிரிக்கா தொடரை இப்போதைக்கு 2 - 0 என தனதாக்கிக்கொண்டுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இங்கிலாந்து ஏற்கனவே தகுதிபெற்றுவிட்ட நிலையில், ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் தரவரிசையில் தற்போது 9ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா, அடுத்து நடைபெறவுள்ள 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிபெற்றால் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெறும்.

இந்தத் தொடருக்கு முன்னர் 11ஆவது இடத்திலிருந்த தென் ஆபிரிக்கா, இந்த 2 வெற்றிகளுடன் 18 போட்டிகளில் 79 புள்ளிகளைப் பெற்று 9ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தனது போட்டிகளை ஏற்கனவே நிறைவுசெய்துள்ளதுடன் 88 புள்ளிகளைப் பெற்று 8ஆம் இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்துடனான 3ஆவது போட்டிக்குப் பின்னர் நெதர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆபிரிக்கா விளையாடவுள்ளது. இந்த 3 போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட நேரடி தகுதிபெறும்.

அதேவேளை, 77 புள்ளிகளுடன் 10ஆம் இடத்திலுள்ள இலங்கை, நியூஸிலாந்துடனான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக  வெற்றிபெற்றால் மாத்திரமே தென் ஆபிரிக்கா நேரடி தகுதியைப் பெறுவது சந்தேகத்திற்கிடமாகும். எவ்வாறாயினும், நியூஸிலாந்தில் இலங்கை சாதிக்கும் என எதிர்பார்க்க முடியாது.

உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் தற்போது விளையாடி வரும் தென் ஆபிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியில் டெம்பா பவுமாவின் அபார சதம், டேவிட் மில்லரின் அதிரடி அரைச் சதம் என்பவற்றின் உதவியுடன் 5 பந்துகள் மீதமிருக்க வெற்றியை உறுதி செய்துகொண்டது.

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 343 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 347 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரிக்கா விரட்டிக் கடந்த அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

தென் ஆபிரிக்கா சார்பாக துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் டெம்பா பவுமா 109 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் ஏய்டன் மார்க்ராம் 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஒல்லி ஸ்டோன் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக் 80 ஓட்டங்களையும் மொயீன் அலி 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/147068

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளில் தொட‌ரில் நல்லா விளையாடினாலும் ஜ‌ந்து நாள் போட்ஃபியில் தென் ஆபிரிக்கா தொட‌ர்ந்து ப‌டுதோல்வி அடையுது

திற‌மையான‌ வீர‌ர்க‌ள் ரெஸ் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்த‌னால் நிலைத்து நின்று ஆட‌ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இல்லை..........அன்மையில் அவுஸ்ரேலியாவில் ந‌ட‌ந்த‌ ரெஸ் தொட‌ரில் பார்க்க‌ முடிந்த‌து............ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி : தென் ஆபிரிக்காவின் உலகக் கிண்ண நேரடி தகுதிக்கு தாமதம்

By DIGITAL DESK 5

02 FEB, 2023 | 10:31 AM
image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கிம்பர்ளி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜொஸ் பட்லர் குவித்த அபார சதமும் ஜொவ்ரா ஆச்சரின் சிறப்பான பந்துவீச்சும் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

எனினும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா தனதாக்கிக்கொண்டது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபற்றும் தென் ஆபிரிக்காவின் வாய்ப்பு சற்று தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 79 புள்ளிகளுடன் தற்போது 9ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா, தனது சொந்த மண்ணில் நெதர்லாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் முழுமையாக வெற்றிபெற்றால் உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபற்ற வாய்ப்பு கிடைக்கும்.

புதன்கிழமை நடைபெற்ற கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 346 ஓட்டங்களைக் குவித்தது.

போட்டியின் 6ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தபோது இங்கிலாந்து அதன் 3ஆவது விக்கெட்டை இழந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

0102_david_malan_eng_vs_sa.jpg

ஆனால், டேவிட் மாலன், அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 232 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை பலப்படுத்தினர். சகல நாடுகளுக்கும் எதிராக இங்கிலாந்து சார்பாக 4ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் இதுவாகும்.

டேவிட் மாலன் 114 பந்துகளில் 7 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 118 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது 3ஆவது சர்வதேச ஒருநாள் சதமாகும்.

0102_jos_buttler_eng_vs_sa.jpg

11ஆவது   ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்த ஜொஸ் பட்லர் 127 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 6 பவுண்டறிகளுடன் 131 ஓட்டங்களைக் குவித்தார்.

அவர்களை விட மொயீன் அலி 41 ஓட்டங்களைப் பெற்றார்.;

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் லுங்கி நிகிடி 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

347 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 43.1 ஓவர்களில் 287 ஓட்டங்களைப்  பெற்று தோல்வி அடைந்தது.

சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த இங்கிலாந்து 31ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

டெம்பா பவுமா (38), ரீஸா ஹெண்ட்றிக்ஸ் (52) ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து 3ஆவது விக்கெட்டில் ரீஸா ஹெண்ட்றிக்ஸுடன் ஏய்டன் மார்க்ராம் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவர் 39 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார். (158 - 43 விக்.)

தொடர்ந்து டேவிட் மில்லர் (13), மார்க்கோ ஜென்சன் (12) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தனர். (193 - 6 விக்.)

0102_heinrich_klaasen_sa_vs_eng.jpg

எவ்வாறாயினும் ஹெய்ன்றிச் க்ளாசென், வேய்ன் பார்னல் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஒரளவு பலம் சேர்த்தனர். க்ளாசென் 80 ஒட்டங்களையும் பார்னல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

0102_jofra_archer_eng_vs_sa.jpg

உபாதை காரணமாக 28 மாதங்களின் பின்னர் மீண்டும் விளையாட ஆரம்பித்த ஜொவ்ரா ஆச்சர் மீள்வருகையில் 2ஆவது போட்டியில் 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.

அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய ஆதில் ராஷித் 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய 2 விருதுகளையும் ஜொஸ் பட்லர் வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/147230

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.