Jump to content

13 பற்றிய யதார்த்தம் — கருணாகரன் —


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13 பற்றிய யதார்த்தம்

13 பற்றிய யதார்த்தம்

— கருணாகரன் —

முப்பத்தி ஆறு வருடங்களுக்குப் பிறகு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தயார் என்று இலங்கை ஜனாதிபதி ஒருவர் (ரணில் விக்கிரமசிங்க) பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். இதைக் குறித்த உரையாடல்கள் தீவிரமடைந்துள்ளன. “மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அதைக் கடுமையாக எதிர்ப்போம்” என்று கூறுகிறது பிக்குகள் முன்னணி. இதே எதிர்ப்பை வெளியிட்டுள்ளன விமல் வீரவன்ச போன்றோரின் சிறிய சில இனவாதக் கட்சிகள்.

இதற்கு நிகராக மறுமுனையில் “மாகாணசபைகளுக்காகவா எங்களுடைய போராட்டமெல்லாம்?” என்று கேட்கின்றன அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் அரசியற் தரப்புகள். கூடவே புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் அமைப்பினர்களிற் சிலரும் “மேல்நிலை தமிழ் அரசியல் அபிப்பிராயவாதி”களும் இதே கேள்வியை எழுப்பியுள்ளனர். (இவர்களுடைய கற்பனைக்கு எல்லையே இல்லை. மாகாணசபையைத் தவிர்த்து வடக்குக் கிழக்கு மாகாணங்களை அல்லது இவர்கள் சொல்வதைப்போல தமிழர் தாயகத்தை எந்த அடிப்படையில் இணைத்து உரிமைகளைப் பெறுவது? அதில் முஸ்லிம் மக்களுக்கான இடமென்ன? அதற்கு அவர்களுடைய சம்மதம் உண்டா? நடைமுறைச் சாத்தியமான திட்டமும் தீர்வும் என்ன? என்பவை குறித்தெல்லாம் இந்தத் தரப்புகள் ஒரு போதுமே தெளிவாகப் பேசுவதில்லை. பதிலாக அதிதீவிர அரசியற் பிரகடனத்தை (தமிழீழம்) மட்டும் வசதியான நிலையில் இருந்து கொண்டு திருவாய் மலர்ந்தருள்கின்றன).

ஆக தமிழ், சிங்களத் தரப்பிலுள்ள மிகச் சிறிய ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ள சிறிய தரப்பினரே மாகாணசபை முறைமையை – அதற்கான அதிகாரங்களைக் குறித்து – தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன. இவை எப்போதும் இப்படித்தான். நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திப்பதில்லை. பிரச்சினைகள் தீர்வதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தே தம்மை வாழ வைக்கின்றன.

 ஆனால், ஏனைய பெருங்கட்சிகள் அனைத்தும் இதற்கு ஆதரவாகவே உள்ளன.

இதேவேளை ஜனாதிபதியின் இந்த அறிவிப்பைக் குறித்து இதுவரையில் முஸ்லிம் தரப்புகள் ஏதும் சொல்லவில்லை என்பது கவனத்திற்குரியது. அவை என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ள என்பது கேள்வியே!

இவ்வளவு காலமும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. இலங்கை இந்திய உடன்படிக்கையில் கூறப்பட்ட சில அதிகாரங்களை 1990 இல் அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச தந்திரோபாயமாக வெட்டியெடுத்திருந்தார். இதற்கு அவர் அப்பொழுது விடுதலைப் புலிகளையும் புலிகளுக்கு இணக்கமாக இருந்த ஈரோஸ் இயக்கத்தையும் பயன்படுத்தினார். மாகாணசபையைப் பலவீனப்படுத்தி, அதில் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த ஈ.பி.ஆர். எல்.எவ்வை அப்புறப்படுத்துவதற்கு புலிகள் விரும்பினர். இதை தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திப் பிரேமதாச வெற்றியடைந்தார்.

இதனால்தான் 1990 இல் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையை கலைத்தார் அ.வரதராஜாபெருமாள். இதனால்தான் மாகாணசபை முறைமை தொடர்ந்தும் நம்பிக்கையீனமாகவும் சர்ச்சைக்குரியதாகவும் நோக்கப்படுகிறது.

இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அதற்குப் பிறகு ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் அதிகாரத்திலிருந்த ஜனாதிபதிகளும் மாகாணசபையின் அதிகாரங்களை வழங்காமல் – நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்தே வந்தனர். போதாக்குறைக்கு ஜே.வி.பியின் மூலமாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை சட்டரீதியாகப் பிரித்தனர்.

ஆனாலும் 2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு உருவான அரசியற் சூழலில் மாகாணசபையைத் தவிர, வேறு உடனடி மார்க்கம் ஏதுமில்லை என்ற யதார்த்தம் உருவானது. இதனால்தான் மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைத் தவிர்ந்த ஏனைய தமிழ்க்கட்சிகள் அனைத்தும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு ஆறு தமிழ்க் கட்சிகள் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தன. இதை விட தனித்தனியாகவும் ஏனைய தமிழ்க்கட்சிகள் இதை இந்தியாவிடமும் இலங்கை அரசிடத்திலும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில்தான் இந்தியாவும் இந்தியாவின் வலியுறுத்தலின் அடிப்படையில் ஐ.நாவும் இவற்றின் அடிப்படையில் இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவும் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசும் நிலை உருவாகியுள்ளது.

அதாவது 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு மிகச் சாதகமான ஒரு சூழல் கனிந்து வந்துள்ளது என்பதை மனதிற் கொண்டே ரணில் விக்கிரமசிங்க கடந்த நவம்பரில் வரவு செலவுத்திட்ட உரையின்போது இனப்பிரச்சினைக்கு ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதில் அவர் ஓரளவுக்கு உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது. அவருடைய நோக்கில் (சிங்களநோக்கு நிலையில்) இதற்கு மேலான அதிகாரத்தை வழங்குவதற்குப் பதிலாக 13 உடன் நின்றுவிடலாம் என்றும் யோசித்திருக்கக் கூடும். இதை விடவும் அதிகமான அனுகூலங்களை ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய அரசியல் நலனுக்காகவும் சிங்கள மேலாதிக்க நலனுக்காகவும் சிந்திக்கலாம்.

ஆனால், தமிழ் பேசும் சமூகங்களைப் பொறுத்து இதை அவை எப்படி அணுகப் போகின்றன?

ஏனெனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரும் 13 ஐப் பற்றியே பேசியிருக்கிறார். மட்டுமல்ல, இந்த விடயம் உள்பட ஏனைய விடயங்களைப் பற்றிப் பேசுவதற்காகவும் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்திருக்கிறது இந்தியா.

ஆக மொத்தத்தில் இப்பொழுது 13 ஐ நடைமுறைப்படுத்துவதே முதன்மையான விடயமாக மாறியுள்ளது. ஆனால், இதற்கு தமிழ்த் தரப்பில் இன்னொரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பினால் ஏற்பட்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெளிப்படையான விரிசல் 13 நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை மற்றும் அதற்கான பேச்சுகளைப் பாதிக்கக் கூடிய நிலையே ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்க தான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் பல விதமான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருகிறார். சுதந்திர தினத்தையொட்டி இன்னொரு தொகுதி அரசியற் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ அறிவிப்பார் என்று தெரிகிறது. கூடவே வலி வடக்கில் மேலும் ஒருதொகுதி நிலத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழ்த் தேசியத் தரப்புகள் இதையிட்டெல்லாம் திருப்திப்பட்ட மாதிரித் தெரியவில்லை.

இறுதியில் 13 உம் இல்லை. சமஸ்டியும் இல்லை. தமிழீழமும் இல்லை என்ற நிலைதான் வருமோதெரியாது. ஏனென்றால் 1987 இல் 13  ஐ வலுப்படுத்தக் கூடிய சூழல் இருந்தது. தமிழ்த்தரப்பில் காணப்பட்ட பிளவே (புலிகள் – ஈ.பி.ஆர்.எல்.எவ் + இந்திய அரசு) அது பலவீனமாகக்காரணமாகியது. இப்பொழுது அதே 13 ஐ பலப்படுத்துவது, நடைமுறைப்படுத்துவது என்று பேசுவதற்கே 36 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. இடைப்பட்ட காலப்பகுதியில் கொடுக்கப்பட்ட விலை – இழப்புகள் கொஞ்சமல்ல.

இந்த 36 ஆண்டு காலத்திலும் தமிழர்கள் பெற்றது எதுவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் செய்த தியாகங்கள், நடத்திய போராட்டங்கள், சந்தித்த இழப்புகள் எல்லாவற்றுக்குப் பின்னும் 13 ஐ நடைமுறைப்படுத்துவது – அமுலாக்குவது என்றளவில்தான் பேச்சுகள் உள்ளன.

இதற்கு அப்பால் செல்வதற்கு இந்தியாவோ பிற சர்வதேச சமூகமோ சிந்திப்பதாகவும் தெரியவில்லை.

இந்த நிலையில் சோதனையாகவும் சாதனையாகவும் 13 வந்து முன்னே நிற்கிறது.

எண் சோதிடத்தின்படி 13 என்பது அதிர்ஸ்டமற்ற எண் என்று சொல்வார்கள்.

தமிழர்களுக்கும் இலங்கைக்கும் அது என்ன மாதிரியான எண் என்பது வரலாற்றின் முடிவாகும். அப்படியான – அதற்கான ஒரு வரலாற்றுத் தருணம் இப்பொழுது வந்துள்ளது.

யதார்த்தவாதிகள் 13 வரவேற்கிறார்கள்.

கற்பனாவாதிகள் எதிர்க்கிறார்கள்.

இனவாதிகள் எதிர்க்கிறார்கள். நியாயவாதிகள் ஆதரிக்கிறார்கள்.

இப்படியான ஒரு விசித்திரத்தின் முன்னே நிற்கும் 13 ஐப்பற்றிய உண்மையான நிலவரத்தை அடுத்து வரும் மாதங்களில் துலக்கமாக – நிர்ணயமாக அறிந்து கொள்ளலாம்.

ஆம், தமிழ் பேசும் மக்களுடைய எதிர்காலத்தையும்தான். 
 

https://arangamnews.com/?p=8637

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.