Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லிராஜா -  ஷோபாசக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல்லிராஜா

மோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ! நான், சாக்கியமுனியும் ததாகதருமான சம்புத்தர் அருளிய தம்மம் வணங்கி; இக்காலத்தில் இலங்கைத் தீவில் பெயர் பெற்றவரும், தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கொடிய சித்திரவதைக் கூடத்திற்குள் இரகசியமாக வீழ்த்தப்பட்டவரும், தற்போது அய்ம்பத்தியிரண்டு கனிந்த வயதுகள் நிரம்பப் பெற்றவருமான சீவலி பால தேரரின் கதையைக் கூறத் தொடங்குகிறேன்!

ஒரு தெருநாயே இலகுவாக வாயில் கவ்வி இழுத்துச் செல்லக் கூடியளவுக்குத் தான் சீவலி தேரரின் உடலிலுள்ள மொத்த எலும்புகளும் மாமிசமும் இருக்கும். கடுமையான நீண்ட உபவாசங்களாலும், மற்றைய தினங்களில் ஒருவேளை மட்டுமே உள்ளங்கையளவு உண்ணும் வழக்கத்தாலும் தேரரின் உடல் வற்றிக் கிடக்கிறது. இலங்கையரின் சராசரி உயரத்தை காட்டிலும் குறைந்தது ஓரடி அளவுக்காவது தேரரது சரீரம் உயரமாகயிருப்பதால்; சீவர துறவாடை தரித்து, மிதியடிகள் தீண்டா வெற்றுப் பாதங்களால் அவர் நடந்து வரும்போது, ஒரு மஞ்சள் பல்லியைப் போலத்தான் தோற்றமளிக்கிறார். ஆனாலும், அவரது உடல்வலு நம்ப முடியாதளவுக்கு அபரிதமானது என்பதற்கு, அவர் தனது வலப்புறத் தோளில் சுமந்துவரும் சம்புத்தரின் மூன்றடி உயரமான வெண்ணிறக் கற்சிலையே பூரண சாட்சியமாகும்.

கொத்திமலையை நோக்கி, சம்புத்தரின் சிலையைச் சுமந்தவாறே, சீவலி தேரர் தன்னந்தனியாகவே நடந்து வந்துகொண்டிருந்தார். காலையில் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாகவே புறப்பட்டவர், உச்சி வெயிலில் குளித்து வந்தாலும் சிறிதும் களைப்பு இல்லாதவராகவே காணப்பட்டார். தாகம் அவரை வாட்டியது தான். அவரது இடப்புறத் தோளில் தொங்கும் காவிநிறத் துணிப் பையில் தண்ணீர்க் குடுவையும் வடிகட்டியும் உள்ளன. ஆனாலும், கொத்திமலையை அடையும்வரை ஆகாரம், நீர் எதுவுமே உட்கொள்ளக் கூடாது என்றொரு விரதத்தை சீவலி தேரர் வரித்திருந்தார்.

தேரரின் பயணப் பாதையில் எதிர்ப்பட்ட இராணுவ அதிகாரிகளும், சிப்பாய்களும் தேரரை வணங்கி “ஹாமத்துருவெனே! எங்களது வண்டியில் ஏறி அமருங்கள்” என்று மன்றாட்டமாக அழைத்தபோதும், உணர்ச்சியற்றதும் உதடுகள் பிரியாததுமான புன்னகையுடன் அவர்களது வேண்டுதல்களை நிராகரித்துவிட்டு, தன்னுடைய பித்தவெடிப்பேறிய பாதங்களை எட்டிப்போட்டு சீவலி தேரர் நடந்தே சென்றார்.
அப்போது நேரம் மாலை நான்கு மணியாகிவிட்டது. தூரத்தே கொத்திமலை உச்சியிலிருக்கும் கைக்கல்லும் சீவலி தேரரின் கண்களுக்குத் தெரியலாயிற்று. சூரியன் படுவதற்குள் தோளிலிருக்கும் சம்புத்தரின் சிலையை இறங்கி வைத்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் தேரர் இருந்ததால், எலும்பு துருத்திக்கொண்டிருக்கும் தன்னுடைய கொக்குப் பாதங்களை இன்னும் வேகமாக முடுக்கிவிட்டார்.

பெயர் தான் மலையே தவிர, உண்மையிலேயே கொத்திமலை ஒரு மொட்டைப் பாறை தான். அங்கே செங்குத்தாக ஆறடி உயரத்திற்கு எழுந்து நிற்கும் கல்லையே கிராமத்தினர் கைக்கல் என்றழைக்கிறார்கள். இந்த மொட்டைப் பாறைக்குக் கீழேயிருக்கும் பசுமையான சமவெளியில் ஒருகாலத்தில் முந்நூறு குடும்பங்களுக்குக் குறையாமல் வசித்தார்கள். இப்போது நாற்பது குடும்பங்கள்தான் இங்கே எஞ்சியுள்ளன. போர்க் காலத்தில் பெருமளவு கிராமவாசிகள் படகுகளில் இந்தியாவுக்குப் போய்விட்டார்கள். இராமேஸ்வரத்தையொட்டியுள்ள மண்டபம் அகதி முகாமில் ‘கொத்தி செட்’ என்றொரு தனிப்பகுதியே உள்ளது.

கொத்திமலைக் கிராமத்தின் எல்லையில் நுழைந்து, ஒற்றையாளாக சம்புத்தர் சிலையோடு வந்துகொண்டிருந்த தேரரை முதலில் ஒரு மூதாட்டிதான் பார்த்தார். சில நிமிடங்கள் கழித்து, ஆதிவைரவர் கோயிலின் சிறிய மணி ஒலித்தது. அதற்கடுத்த நிமிடத்தில் வேறெங்கிருந்தோ காண்டா மணியொலிக்கத் தொடங்கியது. இரண்டு மணிகளும் இடையறாது ஒலித்துக்கொண்டிருக்க, சீவலி தேரர் கொத்திமலையை நோக்கி இப்போது மெதுவாக ஓடவே ஆரம்பித்துவிட்டார். வயல்களிலும், தோட்டங்களிலும் வேலையாகயிருந்த கிராமத்து மக்கள் மொட்டைப் பாறையை நெருங்குவதற்கு முன்பாகவே, சீவலி பால தேரர் அங்கே ஏறிச் சென்று; நிமிர்ந்து நின்ற கைக்கல்லின் தட்டையான உச்சியைப் பீடமாக்கி, அங்கே சம்புத்தரின் சிலையை வைத்துவிட்டார். அந்தப் பீடத்திற்குக் கீழாக, கைக்கல்லில் ஆழமாகப் பதிந்து குழிந்துபோன அய்ந்து கைவிரல்களின் தடங்களிருந்தன. ஒவ்வொரு விரலும் ஒரு முழுப் பனங்கிழங்கின் நீளத்திலிருந்தது.

சீவலி தேரரின் தவறாத கணக்குப்படி, இது அவர் நிறுவியிருக்கும் இருபத்தியிரண்டாவது சம்புத்த சிலையாகும். கொத்திமலையைக் குறித்து ஸ்ரீ சுபூதி தேரரிடமிருந்து அறிந்த கணத்திலேயே, இருபத்தியிரண்டாவது சிலையை அங்கேதான் நிறுவுவது என்று சீவலி தேரர் முடிவெடுத்திருந்தார். ஆனால், இந்தக் காரியத்தில் சீவலி தேரரின் வழிமுறை ஸ்ரீ சுபூதி தேரரின் வழிமுறையிலிருந்து வேறானது. ஸ்ரீ சுபூதி தேரரின் முரட்டுத்தனத்தையும், அடாவடிப் பேச்சையும் சீவலி தேரர் உண்மையில் வெறுக்கவே செய்தார். ஸ்ரீ சுபூதி தேரரால் அன்புநெறிக்கும் தம்மத்துக்கும் இகழ் நேர்கிறது என்பதுவே சீவலி தேரின் எண்ணமாகயிருக்கிறது.

கைக்கல்லின் மீது திடீரெனத் தோன்றிய சம்புத்தர் சிலையை நோக்கிக் கிராமத்துச் சனங்கள் ஓரிருவராகக் கூட ஆரம்பித்து, பத்து நிமிடங்களிலேயே முழுக் கிராமமும் மொட்டைப் பாறைக்கு வந்து சேர்ந்துவிட்டது. சம்புத்தரின் சிலைக்குக் கீழே, மொட்டைப் பாறையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த சீவலி தேரர் கிராம மக்களைத் தன்னுடைய சாந்தமானதும் அடக்கமானதுமான கண்களால் நோக்கினார். அவருடைய வாயில் எஞ்சியிருந்த ஒருசில பற்களால் முறுவலித்தவாறே, அவர் கிராமவாசிகளிடம் பேசத் தொடங்கினார்:

“நம்முடைய சகோதர சகோதரிகளுக்குப் புத்த பெருமானின் அருளால் நிறைவான ஆசிகளைத் தருகிறேன். இந்தப் புனிதமான கல்லில் சம்புத்தரை ஏற்றி வைத்திருப்பதால், இப்போதிலிருந்து நற்காரியங்களும், அதிர்ஷ்டங்களும், அமைதியும், சமாதானமும் மட்டுமே மஹா புத்தரின் பெருங்கருணையால் உங்களைச் சூழ்ந்திருக்கும்…”

சீவலி தேரரை இடைமறித்து ஒரு கிராமவாசி தமிழில் ஏதோ சொன்னார். தேரருக்குத் தமிழ் மொழியில் ஒரேயொரு வார்த்தைதான் தெரியும். ஆனால், அந்த வார்த்தைக்குக் கூட என்ன பொருளென்று அவர் அறியமாட்டார். அந்த வார்த்தையைக் கடந்த முப்பது வருடங்களாக அவர் நினைக்காத நாளில்லை. ஆனால், அந்த வார்த்தையின் பொருளை அறிந்துகொள்ள அவர் ஒருபோதும் விரும்பினாரில்லை. அந்த வார்த்தையை நினைவுறும் போதெல்லாம் தேரர் அளவற்ற துக்கத்தால் பீடிக்கப்படுவதுண்டு.

கொத்திமலைச் சனங்களிடம் சீவலி தேரர் புன்னகை மாறாமலேயே கேட்டார்:

“சகோதரர்களே! உங்களில் யாருக்காவது சிங்கள மொழி தெரியுமா?”

கூட்டத்திலிருந்து முன்னே வந்த, முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணைத் தேரர் கனிந்த விழிகளால் நோக்கினார். குரூபி என்றே சொல்லக் கூடிய அந்தப் பெண்ணில் மூக்கு, காது, உதடு என்ற எந்த அடையாளத்தையும் குறிப்பாகக் காண முடியாதவாறு, அவளது முகம் தீயில் வெந்திருந்ததால், அம்முகம் முறுகக் காய்ச்சிய இரப்பர் போன்றிருந்தது. அந்தப் பெண் சீவலி தேரரை வணங்கிவிட்டு நின்றாள்.

“சகோதரிக்கு நன்மையே விளையட்டும்! உங்களுக்குச் சிங்களம் பேசத் தெரியுமா?”

“ஹாமத்துருவெனே!”

அந்தப் பெண்ணின் இரப்பர் முகம் சற்றே அசைந்தது. இப்போது விட்ட இடத்திலிருந்து சீவலி தேரர் பேசலானார்:

“இப் புனித நிலத்தில் வாழும் ஜனங்களான நீங்கள், கலிங்கத்து அரசன் குஹசிவவைக் காட்டிலும் பேறுடையோர். அவனிடமிருந்த சம்புத்தரின் புனிதப் பல்லைக் கொள்ளையிடுவதற்காக, பெரும் சேனையைத் திரட்டி கீரதர நரேந்திர வம்சத்தார் போர் தொடுத்தபோது, மன்னன் குஹசிவ தன்னுடைய புத்திரியான இளவரசி ஹேமமாலியிடம் ததாகதரின் புனிதப் பல்லைக் கொடுத்து, இரகசியமாக இலங்கைத் துவீபத்துக்கு அனுப்பிவைத்தான். இளவரசி தன்னுடைய கூந்தலுக்குள் புனிதப் பல்லை மறைத்து வைத்துக்கொண்டு, இந்த முல்லைக் கடற்கரையிலேயே தரையிறங்கி, தலைநகர் அனுராதபுரத்திற்குச் சென்று, அரசனான ஸ்ரீ மேகவண்ணவிடம் புனிதப் பல்லைக் கையளித்தாள். அவன் மேஹகிரி விகாரையில் புனிதப் பல்லை அறுக்கை செய்துவைத்து வழிபட்டான். அவனது வம்சத்தினரின் தலைநகரங்கள் மாற மாற புனிதப் பல்லும் அவர்களுடனேயே எடுத்துச் செல்லப்பட்டது.”

சீவலி தேரர் பேச்சை இடைநிறுத்தி, இரப்பர் முகப் பெண்ணை நோக்கினார். அவள் தேரர் சொல்லியதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கிராமவாசிகளிடம் சொல்லலானாள். முழுக் கிராமமும் கவனமாக அந்தக் கதையைக் கேட்டது. சிலர் மொட்டைப் பாறையில் தளர்வாக உட்கார்ந்துகொண்டது, தேரர் சொல்லவிருக்கும் சுவையான மிகுதிக் கதைக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது போலவேயிருந்தது. சீவலி தேரர் முகத்திலும் இப்போது நிம்மதி ரேகை தோன்றி மறைந்தது. அன்புவழியைத் தேர்ந்தெடுத்தவர்களை சம்புத்தர் கைவிடார் என்று அரத்த தம்மசக்கரம் அவர் இருதயத்தில் மெல்லச் சுழலலாயிற்று. தேரர் தொடர்ந்தார்:

“இளவரசி ஹேமமாலி முல்லைக் கடற்கரையில் இறங்கி, இந்தக் கொத்திமலை வழியாகவே சென்றாள். இரவைக் கழிப்பதற்காக, இங்கே படுக்கையைப் போன்றிருந்த ஒற்றைக்கல்லின் மீது சயனித்தாள். விடியல் கருக்கலில் அவள் எழுந்தபோது, அந்தக் கல்லும் கூடவே எழுந்து நிரந்தரமாக இதோ நிற்கிறது! அவளது வலது கை இந்தக் கல்லில் விட்டுச் சென்ற அடையாளம் குழிந்து இது கைக்கல்லுமாயிற்று…”

“இது கொத்தியம்மாவின் கை” என்று தன்னையறியாமலேயே தமிழில் உரக்கச் சொன்ன இரப்பர் முகப் பெண், தேரர் சொன்னதைக் கிராமவாசிகளிடம் சொல்லத் தொடங்கினாள். அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருந்த சனங்கள் மெல்ல எழுந்தார்கள். அவர்கள் சலசலத்துப் பேச ஆரம்பித்தார்கள். 

“அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று அந்தப் பெண்ணிடம் சாந்தம் நுரைக்கும் குரலால் சீவலி தேரர் கேட்டார்.

“இந்தக் கை எங்களது தாயார் கொத்தி அம்மாவுடையது என்றே அவர்கள் கருதுகிறார்கள்.”
அடக்கத்துடன் புன்னகைத்த சீவலி தேரர் வானத்தை நோக்கிக் கைகூப்பித் தொழுதுவிட்டுச் சொன்னார்:

“கொத்தி தெய்வமல்ல! அது அலைவுறும் ஆவி. அதனால் அடையாளத் தடங்களை நீரிலோ நிலத்திலோ கல்லிலோ காற்றிலோ மேகத்திலோ ஒருபோதுமே பதிக்க முடியாது!”

“தெரியும் ஹாமத்துருவெனே” என்று தலையசைத்த அந்தப் பெண் தொடர்ந்தாள்:

“கொத்தி ஆவியாக இருக்கும் அதே வேளையில், அவள் காவல் தெய்வமாகவும் இருப்பாள். எங்களது குழந்தைகள் பிறக்கும் போது கொத்தி தெய்வமாக மாறி மருத்துவிச்சியை இயக்குவாள். குழந்தை பிறந்ததும் ஆவியாகிவிடுவாள். அவளுக்காக நாங்கள் ‘கொத்தி கழிப்பு’ செய்வோம்.”

இப்போது, சீவலி தேரர் தனது வலது கையால் இடது கையைப் பற்றிக்கொண்டார். இன்னொரு கதையைச் சொல்வதற்கு அவர் தயாராகிறார் எனக் கிராம மக்கள் தெரிந்துகொண்டனர்.

“தலதாவம்சம் புனித நூலில் இருக்கும் செய்தியை உங்களுக்கு அறிவிப்பது என்னுடைய கடமையாகிறது சகோதரர்களே! தனது கடமையை நிறைவேற்றிய இளவரசி ஹேமமாலி கலிங்க தேசத்திற்குத் திரும்பிச் செல்லவேண்டிப் பயணித்தபோது, இரவான போழுதில் இந்தக் கைக்கல்லின் மீது தலையைச் சாய்த்து நின்றபடியே துயின்றாள். அவ்வேளையில் யட்சர்களின் நாகம் இரத்தின ஒளியை உமிழ்ந்தவாறே பறந்து வந்து அவளைத் தீண்டியதால், அந்தப் புனிதவதி இங்கேயே முகம் கருகி உயிர்விட்டாள். ஆகவேதான் அவள் கருணைத் தெய்வமாகவும், அதேவேளையில் தந்தை குஹசிவவிடம் சென்று சேர முடியாத துக்கத்தால் ஆவியாக அலைபவளுமாக இருக்கிறாள். இப் புனித இடத்தில் சம்புத்தரை இப்போது நிறுவியுள்ளதால், இனி ஹேமமாலி அமைதியுறுவாள். அவள் அமைதியுற்றால், இந்த நிலமெங்கும் அது பரவிச்செல்லும்.

இரப்பர் முகப் பெண் சீவலி தேரருக்கு முதுகைக் காட்டியவாறே உடலைத் திருப்பி, கூடியிருந்த கிராமவாசிகளைப் பார்த்து, தேரர் சொன்ன மிகுதிக் கதையைச் சொன்னாள். அதைக் கேட்டதும் சனங்களிடமிருந்து கேலியாக எழுந்த முனகல்கள் அப்படியே கூச்சல்களாக மாறத் தொடங்கின. அவள் சீவலி தேரரிடம் உடலைத் திருப்பிச் சொன்னாள்:

“ஹாமத்துருவெனே! கொத்தி எங்கிருந்தோ இங்கு வந்தவளல்ல! முல்லைக் கடலோரக் குறுமணிலில் உதித்த கன்னி. சூலன் பரியாரியின் இளைய மகள். அவளைப் பற்றி எங்களிடம் நூறு கதைகளும் ஆயிரம் பாடல்களுமுள்ளன. மேலதிகமாக உங்களிடமிருந்து கதையும் சிலையும் எங்களுக்குத் தேவைப்படாது என்கிறார்கள் சனங்கள்.”

சீவலி தேரர் மொட்டைப் பாறையில் கூடியிருந்தவர்களை ஊடுருவிப் பார்த்தார். ஏழ்மையும் நோயும் பரவிக் கிடந்த சனங்களாக அவர்களிருந்தார்கள். இளந்தாரிப் பருவ ஆண்கள் அதிகமாகயில்லை. சட்டையற்ற ஆண்களின் தேகங்கள் தழும்புகளாலும் காய்ந்து சொரசொரத்த தோலாலும் போர்த்தப்பட்டிருந்தன. அநேகமான பெண்களோ உதடுகளும் நகங்களும் அசிங்கமாக வெடிப்புற்று இரத்தச் சோகை பூத்திருந்தார்கள். குழந்தைகளோ வயிறுகள் வீங்கிக் கிடக்க, ஈர்க்குக் கால்களால் தள்ளாடி ஓடித்திரிந்தார்கள். தேரர் நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து பேசலானார்:

“என் சகோதர்களான உங்களது நம்பிக்கைகளில் தலையிடவோ மறுத்து நிற்கவோ நான் தகுதியற்றவன். எனினும், இந்த நாட்டின் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையின்படி, இது புனிதப் பல்லைக் கொண்டுவந்த இளவரசி மரணித்த புனிதத் தலம். அவளது சரீரம் பட்டெழுந்த கல்லில் மஹா புத்தர் வீற்றிருந்து பாலிக்கும் கருணை உங்கள் மீதும் இந்த நாட்டின் மீதும் நித்திய சமாதானத்தைக் கொண்டுவரும்!”
அந்தப் பெண் தேரரிடம் சொன்னாள்:

“இது கொத்தியம்மா காலமாக உறைந்திருக்கும் மனை! நன்மையோ புன்மையோ அது கொத்தியம்மாவோடேயே எங்களுக்கு இருக்கட்டும். ஹாமத்துருவெனே! இந்தச் சிலையையும் தூக்கிக்கொண்டு இங்கிருந்து புறப்படுமாறு உங்களைத் தயவாக வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம்.”

இப்போது தேரரது சரீரம் நடுங்கத் தொடங்கியது. பொழுதும் செக்கலாகி இருள் கீழே கவியலானது. கடற்காற்று கூவென மொட்டைப் பாறையில் மோதித் திரும்பிற்று. சீவலி தேரர் பூமியை நோக்கிக் கண்களைத் தாழ்த்தியவாறே துயரோடு சொன்னார்:

இந்தப் புத்தர் சிலையை அகற்றுமாறு நீங்கள் சொல்வது, நானும் நீங்களும் துக்கத்தைப் பெருக்குவதாகும். இந்த நாட்டில் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் – ஏன் தலைநகரத்தில் கூட – எத்தனையோ முருகன் கோயில்களும், இயேசு மாடங்களும், மசூதிகளுமிருக்கின்றன. அப்படியிருக்கும் போது, ஒரு தமிழ் கிராமத்திலோ, முஸ்லீம் கிராமத்திலோ கருணையையும் சமத்துவத்தையும் போதிக்கும் புத்த பெருமானின் சிலையோ, பன்சாலையோ இருக்கக்கூடாது எனச் சொன்னால் அது தர்மமாகுமா?”

அந்தப் பெண் கூடியிருந்த சனங்களிடம் பேசி விட்டுச் சொன்னாள்:

“இந்தக் கைவிடப்பட்ட சனங்கள் சொல்வதைக் கேளுங்கள் துறவியானவரே! அங்கெல்லாம் பிற ஆலயங்கள் உண்டெனில், அங்கே வாழ்ந்தவர்களும் குடியேறியவர்களும் அவற்றை உண்டாக்கவும் வழிபடவும் செய்தார்கள். இந்தக் கிராமத்தில் ஒரேயொரு பவுத்தர் கூட வசிக்கவில்லையே. எங்கிருந்தோ வரும் நீங்கள் திடீரென இங்கேயொரு சிலையை நாட்டுவது எங்களது நிலத்தைக் களவாடும் சூதென்றே இந்த ஏழைச் சனங்கள் கருதுகிறார்கள்.”

சீவலி தேரர் இப்போதும் சாந்தமாகவும் ஆனால், குரலில் உறுதி தொனிக்கவும் சொன்னார்:

“சம்புத்தர் போதி ஞானமடைந்த ஒன்பதாவது மாதத்தில், பூஸ பவுர்ணமியன்று இந்தத் தீவில் இறங்கி, தன்னுடைய அற்புதங்களால் இங்கிருந்த தீயர் யட்சர்களை அகற்றிவிட்டு, இந்த அழகிய நிலத்தை நமக்குத் தத்தம் செய்தார். அந்தத் தூயரின் திருவுருவை இங்கிருந்து அகற்றுவதே உங்களது முடிவான விருப்பமானால், என்னைக் கொன்றுவிட்டு, தாராளமாக நீங்கள் அதைச் செய்துகொள்ளுங்கள். 

கிராமத்துச் சனங்கள் இந்த நாளை மட்டுமல்லாமல், தேரரின் இந்தப் பதிலையும் எதிர்பார்த்தேயிருந்தார்கள். இங்கிருந்து நான்கு கட்டைகள் தொலைவிலிருக்கும் ஈச்சங்குடா கிராமத்தில், முதலில் இவ்விதமே ஒரு புத்தர் சிலை இரவோடு இரவாக ஸ்ரீ சுபூதி தேரரால் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த நிலம் பண்டைய சகாப்தத்தில் புத்த விகாரையாகயிருந்தது என்ற கதையைப் பவுத்த மடாலயங்களும், அரசியல்வாதிகளும் கிளப்பிவிட்டார்கள். புத்தர் சிலையை அகற்றக் கோரிய வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றபோது, விசாரணையை நடத்தவிருக்கும் நீதிபதி ஒரு தமிழர் என்பதையறிந்த ஸ்ரீ சுபூதி தேரர் தீக்குளிக்கப் போவதாக அறிவித்துக்கொண்டு நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். தடுத்த இரண்டு பொலிஸ்காரர்களுக்கும் மண்ணெண்ணெய் நாற்றமடித்த கையால் கன்னத்தைப் பொத்தி ஆளுக்கொரு அறைவிட்டார். அந்த நீதிபதி கூட ‘நாட்டில் திடீரென எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு ஸ்ரீ சுபூதி தேரரும் ஒரு காரணம்’ என்று தனிப்படக் குறைப்பட்டுக்கொண்டாராம். இப்போது ஈச்சங்குடாவில் பெரிய புத்த விகாரையே கட்டி எழுப்பப்படுகிறது. எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடுத்திருந்த முகிலன், மரியநேசன் என்ற இரண்டு இளைஞர்களும் ஈச்சங்குடா கிராமத்திற்குள்ளேயே நுழையக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பாக, ஸ்ரீ சுபூதி தேரருடன் சில துறவிகள் வந்து மொட்டைப் பாறையில் வழிபாடு செய்துவிட்டுப் போனதிலிருந்தே, இங்கேயும் இரவோடு இரவாகப் புத்தர் சிலை தோன்றக்கூடும் எனக் கிராம மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஆனால், அதை எப்படித் தடுப்பது என்று இவர்களுக்குத் தெரியவில்லை. கடைசியில் கொத்தியம்மனில் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, அவளையே நம்பியிருந்தார்கள். ஒவ்வொருநாள் காலையிலும் கைக்கல்லைப் பார்த்து நிம்மதியடைந்தார்கள்.

இப்போது சீவலி தேரர் பகலிலேயே புத்தர் சிலையை வைத்துவிட்டார். இப்போதும் சனங்கள் செய்வதறியாமல் தங்களுக்குள்ளேயே விவாதித்துப் பேசியும், ஒருவரையொருவர் குற்றம் சொல்லியும் தளர்ந்து போனார்கள். தாங்கள் கையாலாகாதவர்கள் என ஒருவரையொருவர் பழித்துக்கொண்டார்கள். இவர்களால் இந்தப் புத்தர் சிலையின் நகத்தைக் கூடத் தொட முடியாது. மீறித் தொட்டால், அது நாட்டு அதிபருக்கோ, இராணுவ ஜெனரலுக்கோ ஊனம் விளைவிப்பதற்குச் சமமான குற்றமாகும்.

சீவலி தேரர் எழுந்து நின்று, தனது இடது தோளில் மாட்டியிருந்த துணிப் பைக்குள்ளிருந்து அகல் விளக்கையும், நெய் குப்பியையும், தீப்பெட்டியையும் எடுத்தார். சூத்திரங்களை உச்சாடனம் செய்தபடியே, புத்தர் சிலையின் முன்னே அகல் விளக்கைத் தேரர் ஏற்றிவைக்கும்போது, சல்லடை இருளைப் பிளந்துகொண்டு காவல்துறையினரின் ஜீப் வண்டி கொத்திமலையை நோக்கி வந்தது. 

பொலிஸ் அதிகாரி மூச்சிரைப்போடு மொட்டைப் பாறையில் ஏறிவந்து, சீவலி தேரரைப் பணிந்து வணங்கினான். அவனோடு வந்திருந்த பொலிஸார் மொட்டைப் பாறையில் மண்டியிட்டுத் தேரரை வணங்கினார்கள். தேரரிடமிருந்து மீண்டும் ஓர் உணர்ச்சியற்ற வெற்றுப் புன்னகையே மொட்டைப் பாறையில் வீழ்ந்தது. இரப்பர் முகப் பெண் அங்கிருந்து காணாமற்போயிருப்பதைத் தேரர் அறிந்துகொண்டார்.

பொலிஸ் அதிகாரிக்குக் கொச்சைத் தமிழ் பேசத் தெரிந்திருந்தது. அவனது வாயிலிருந்து முதல் வசனமாக “எல்லோரும் இங்கிருந்து கலைந்து வீடுகளுக்குச் செல்லுங்கள்” என்ற உத்தரவே கொத்திமலைச் சனங்களுக்குக் கிடைத்தது.

“புத்தர் சிலையை இங்கே வைக்க அனுமதிக்கக் கூடாது” என்று தைரியமாக ஒரு முதியவர் சொன்னபோது 

“பெரியவரே… இந்த இடம் உன்னுடையதா? நீ அதற்கான காணி உறுதிப் பத்திரம் வைத்திருக்கிறாயா? எங்கே காட்டு! வேறு யாரிடமாவது இந்த மொட்டைப் பாறைக்கான உரிமைப் பத்திரம் இருக்கிறதா?” எனக் கேட்டுப் பொலிஸ் அதிகாரி சீறிச் சினந்தான். பின்பு சற்றுத் தணிந்து “எதுவாகயிருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்! இப்போது கலகம் செய்யாமல் இங்கிருந்து கலைந்து போங்கள்!!” என்றான். 

நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த சீவலி தேரர் தனது குரலை உயர்த்திப் பொலிஸ் அதிகாரியிடம் சொன்னார்:

“நீங்கள் உடனடியாக இங்கிருந்து போய்விடுங்கள். நான் இந்த மக்களிடம் பேசிக்கொள்கிறேன். எளியவர்களிடம் அதிகாரம் செய்வது பவுத்த நெறியல்ல. தயவுசெய்து இங்கிருந்து இறங்கிச் செல்லுங்கள்!”
பொலிஸ் அதிகாரி தலையைத் தாழ்த்தி, வலது கையால் தனது நரைத்த மீசையை மறைத்துக்கொண்டு கிசுகிசுப்பாகத் தேரரிடம் சொன்னான்:

“ஹாமத்துருவெனே! உங்களைச் சுற்றி நின்றிருப்பவர்கள் காட்டுச் சனங்கள். எந்தத் தர்மத்துக்கும் கட்டுப்படாத சண்டைக்காரர்கள். தருணம் பார்த்து சம்புத்தரின் சிலையைச் சல்லியாக உடைத்துக் கற்குவியலில் கரைத்துவிடுவார்கள். இந்த மாவட்டத்தில் சங்கைக்குரிய ஸ்ரீ சுபூதி தேரர் நிறுவிய சிலையொன்று ஏற்கனவே உடைக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் உங்களுடனேயே இருக்கத் தயவு செய்து நீங்கள் அனுமதிக்க வேண்டும்.”

“ஸ்ரீ சுபூதி தேரரின் வழிமுறை வேறானது. அவர் போதிசத்துவரைப் பரப்புவதற்கு உங்களைப் போன்ற காவல் அதிகாரிகளையும் நீதிபதிகளையும் அரசியல்வாதிகளையும் நம்பியிருக்கிறார். நானோ முழுவதுமாகத் தம்மத்தையும் ததாகதரையும் இந்த மக்களின் இருதயங்களையுமே நம்பி நடந்துவருகிறேன். நான் நிறுவிய சிலைகளில் ஒன்றுகூட இதுவரை சேதப்பட்டதில்லை! அகற்றப்பட்டதில்லை!!”

கடைசியில் சீவலி தேரரின் பிடிவாதமே வென்றது. அதிருப்தியுடன் பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். போவதற்கு முன்பாக, அங்கே கூடிநின்ற சனங்களின் முகங்களில் பொலிஸார் வெளிச்சத்தைப் பாய்ச்சி, கைத்தொலைபேசியில் அவர்களைப் படம் பிடித்துக்கொண்டார்கள்.

அதன் பின்பு, மொட்டைப் பாறையிலிருந்த சனங்களும் தமக்குள் பேசியவாறே மெதுமெதுவாக அங்கிருந்து கலைந்து செல்லத் தொடங்கினார்கள். அப்போது அங்கே இரப்பர் முகப் பெண்ணை தேரர் மறுபடியும் கண்டார். அவளை நோக்கி “இங்கே சம்புத்தரின் சிலை இருப்பதற்கு கிராமத்துச் சனங்கள் ஒப்புதல் கொடுத்துவிட்டார்களா சகோதரி?” என்று கேட்டார். அப்போது அந்த இரப்பர் முகப் பெண் தமிழில் ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு நிதானமாக இருளுக்குள் நடந்து சென்றாள். 

அந்த வார்த்தை முப்பது வருடங்களுக்கு முன்பு சீவலி தேரர் கேட்ட அதே வார்த்தையாகயிருந்தது. அந்தக் கணத்தில் அதீத துக்கம் அவரை மூழ்கடித்துக் கீழே தள்ளிற்று. யாருமற்ற மொட்டைப் பாறையில் கால்களை நீட்டியவாறே, கைக்கல்லில் தளர்வாக முதுகைச் சாய்த்துக்கொண்டார். துக்கம் ஒரு பாறையாக அவரை அமிழ்த்திக்கொண்டிருக்கிறது. தன்முன்னே விரிந்திருக்கும் இருளைக் கண்களை விரித்துப் பார்த்தவாறே, சம்புத்தரைத் தியானித்து இரு உள்ளங்கைகளையும் மார்பில் வைத்துக்கொண்டார். அவரது மெல்லிய உதடுகள் “துக்கங் அரியசச்சங்” என்று முணுமுணுத்துக்கொண்டன. 

துக்கம் இவ்வுலகின் மாற்றமுறா நித்திய உண்மை என்பதுவே கவுதம புத்தருக்கு முதன் முதலாகச் சித்தித்த ஞானமாகும்.

2

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னதாக, கண்டியிலுள்ள குண்டசாலை பவுத்த துறவு மடத்தில் இருந்தபோது, சீவலி தேரருக்குப் பத்தொன்பது வயதுதான் ஆகியிருந்தது. துறவின் உச்சநிலையை எட்டுவதைத் தவிர வேறு சிந்தனைகளே இல்லாத இளம் துறவியாகவே அவரிருந்தார். தம்மத்தின் நாற்பேருண்மைகளான துக்கம், துக்கத்திற்கான காரணம், துக்க நிவர்த்தி, துக்க நிவர்த்திக்கான மார்க்கம் ஆகியவற்றைக் குறித்து இடையறாது சிந்திப்பது, மூத்த துறவிகளிடம் பாலி கானான் பாடம் கேட்பது, விமானவத்து, பீடவத்து போன்ற சுத்த பிடக குத்தக நிகாயகங்களை ஆராய்வது, சக்க சம்யுக்த சூத்திரத்தைக் கசடறப் புரிந்துகொள்ள முயல்வது போன்றவற்றில் அவர் மூழ்க்கியிருந்தபோது தான்; அவரைத் தேடி நெருங்கிய உறவினனும், பால்ய தோழனுமான மனோஹர சேனக வந்திருந்தான்.

சேனக அவரிடம், தான் ‘தேசப்பிரேமி ஜனதா வியபரயா’ இயக்கத்தைச் சேர்ந்தவன் எனச் சொன்னதை சீவலி தேரரால் முதலில் நம்பவே முடியவில்லை. சேனகவின் குடும்பம் கடுமையான வறுமையில் தத்தளிக்கிறது. சேனக பூனைக்குட்டியைப் போல அமைதியானவன். தவளையைப் போல மந்தமானவன். நாளொன்றுக்கு நான்கு வார்த்தைகளுக்கு மேலாகப் பேசிப் பழக்கப்படாதவன். அப்படியானவன் ஓர் ஆயுத இயக்கத்தின் முக்கிய உறுப்பினரென்றால் யாரால்தான் நம்ப முடியும்.

சேனக உறுப்பினராக இருந்த ‘தேசப்பிரேமி’ என்ற தலைமறைவு இயக்கம் அப்போது நாட்டையே கதிகலங்க வைத்துக்கொண்டிருந்தது. ஆளுங்கட்சி அரசியல்வாதிகளை அந்த இயக்கம் தேடித் தேடிக் கொன்றது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும், இந்திய அமைதிப் படையின் இலங்கை வருகையையும் ஓர்மத்துடன் எதிர்த்து நின்ற அந்த இயக்கம் அம்பாறையிலும், திருகோணமலையிலும் இந்திய அமைதிப் படையின் மீது கண்ணிவெடித் தாக்குதல்களைச் செய்திருந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு குண்டுத் தாக்குதலையும் நிகழ்த்தியது.

தேசப்பிரேமி இயக்கத்தின் எந்தவொரு செயலையும் அணுவளவு கூட ஆதரிக்க இயலாதவர் சீவலி தேரர். அவரது இருதயத்திலே ஓயாமல் சுழன்றுகொண்டிருப்பதாக, அவர் நம்பும் அரத்த தம்மசக்கரமும் ததாகதரின் நெறிகளும் வன்முறையை எதன்பொருட்டும் ஏற்றுக்கொள்ளாதவை. ஆனால், சேனக தன்னுடைய பேச்சால் சீவலி தேரரை வளைக்க முயன்றான். தேசப்பிரேமி இயக்கம் சேனகவின் நாவில் வசிய சூத்திரத்தைப் பொறித்திருந்தது: 

“ஹாமத்துருவெனே! கவனமாகவும் பொறுமையாகவும் கேட்க வேண்டும். நமது சிங்கள மக்களுக்காக அமைந்த ஒரேயொரு நிலம் இந்தச் சிறிய நாடே. இந்தத் தீவைக் கடல் நீர் மட்டும் சூழ்ந்திருக்கவில்லை. தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வரும் தமிழர்களால் ஆயிரம் வருடங்களாகவே அபாயமும் சூழ்ந்திருக்கிறது. சோழர்கள் படைகொண்டு வந்து எங்களுடைய குடிகளையும், தலைநகரத்தையும்,விகாரைகளையும், புராதனப் புத்தர் சிலைகளையும், ஆயிரங்கால் மண்டபத்தையும் அழித்தும் கொளுத்தியும் போட்டார்கள். அதே போன்றுதான் இப்போது இங்கே இந்திய இராணுவமும் நுழைந்திருக்கிறது. இலங்கை அரசாங்கமும் ஒத்துப் போய் இந்த நாட்டையே விற்றுவிட்டது. இந்தத் தேசத்துரோகத்தைத் தேசப்பிரேமிகள் எப்படி அனுமதிக்க முடியும்?” 

உண்மையிலேயே சீவலி தேரர் தனது நண்பன் சேனகவை மறுத்துப் பேச முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டார். நாட்டின் அரசியல் நிலைமைகளைக் குறித்து அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதும் உண்மையே. தன்னுடைய புலன்கள் முழுவதையும் துறவையும் தம்மத்தையும் நோக்கி ஒருமுகப்படுத்தியே இந்தனை காலங்களாக அவர் வாழ்ந்திருக்கிறார். புத்தரின் தம்மத்தையும் அஹிம்சையையும் சேனகவுக்குப் புரியப்பண்ண சீவலி தேரர் எத்தனித்தபோது, சேனக மிக இலகுவாக தேரரை நிலைகுலையச் செய்தான்:

“இறைமையுள்ள பவுத்த நாடொன்று இருந்தால்தான் தம்மத்தை காப்பாற்ற முடியும்! அதற்காகவே இலங்கையைக் கவுதமர் தேர்வு செய்தாரென்பதை சீவலி தேரருக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை.”

தேசப்பிரேமி இயக்கம் செய்யவிருக்கும் அடுத்த நடவடிக்கைக்கு சீவலி தேரர் உதவாவிட்டால், நாட்டைப் பெரும் ஆபத்து அழித்துப்போடும் என்ற பீடிகையுடன் சேனக திட்டத்தை விளக்கினான்.

“பெப்ரவரி, எட்டாம் தேதியன்று கண்டி புனிதத் தந்த தாது விகாரைக்குள் நுழைவதற்குத் தேசப்பிரேமி இயக்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் புனித விகாரைக்கோ, பவுத்த துறவிகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவொரு ஆபத்தும் நிகழாது என்று முன்கூட்டியே உத்தரவாதம் கொடுத்துவிடுகிறேன். எங்களுடைய திட்டம் மிக இலகுவானதும் வெற்றியளிக்கக் கூடியதுமாகும். தேசப்பிரேமியின் பெண் தோழர்கள் இருவர் வெள்ளை ஆடைகளை அணிந்து, மலர்களால் நிறைந்த தட்டுகளுடன் வழிபாட்டுக்குச் செல்வதுபோல விகாரைக்குள் நுழைவார்கள். மகர தோரண முகப்பில் காவல் கடமையில் இருக்கும் பொலிஸார் புனிதருக்காக எடுத்துச் செல்லப்படும் மலர்களைத் தொடவோ சோதனையிடவோ போவதில்லை. ஏற்கனவே விகாரைக்குள் பக்தர்களுடன் கலந்து நின்றிருக்கும் எங்களுடைய இரண்டு ஆண் தோழர்களின் அருகே இந்த மலர்த் தட்டுகள் சென்றவுடன், மலர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைத்துப்பாக்கிகளை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அந்தத் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, சம்புத்தரின் புனிதப் பல் வைக்கப்பட்டிருக்கும் பேழையை எங்களது தோழர்கள் கவர்ந்து வந்துவிடுவார்கள்.”

சேனக சொன்னதைக் கேட்டதும் சீவலி தேரரின் உடல் குளிர்ந்து நடுங்கிவிட்டது. “என்னவொரு கீழ்மையான முட்டாள் திட்டம்” என்று அவரது மெல்லிய உதடுகள் முணுமுணுத்தன.

“கிடையாது ஹாமத்துருவெனே! இதுவொரு புத்திசாலித்தமான உயர்ந்த அரசியல் திட்டம். ஆட்சியாளர்கள் சம்புத்தரின் புனிதப் பல்லைப் பாதுகாக்கும்வரை தான் மக்கள் அவர்களை நம்புவார்கள். இந்தத் தீவின் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகால அரசியல் வரலாறே இந்தப் புனிதப் பல்லைப் பாதுகாக்கும் வரலாறுதான். இந்தத் தேசத்தில் மன்னர்களிடையே நிகழ்ந்த ஒவ்வொரு போரும் இந்தப் புனிதப் பல்லுக்காக நடத்தப்பட்டதுதான். வெள்ளையர்களுக்கு எதிராகக் கண்டி மன்னன் கடைசிவரை போரிட்டு நின்றதற்கும், ரதல பிரபுக்களின் சதியால் அவன் வீழ்த்தப்பட்டதற்கும் காரணம் இந்தப் புனிதப் பல்லே. இந்தப் புனிதப் பல்லைப் பாதுகாக்கத் துப்பில்லாதவர்களை இந்நாட்டு மக்கள் ஆட்சியாளர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்நாட்டு மக்கள் கூடிக் கலகம் செய்யும் தருணத்திற்காக ஏங்கிக் கிடப்பவர்கள். அவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரான கலகத்தில் கண்டிப்பாக இறங்குவார்கள். புனிதப் பல்லை வைத்திருக்கும் தேசப்பிரேமி இயக்கமே ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கும். அதுவே மாற்றமுறாத நியதி எனும் ஆரிய சத்தியம்!”

புனிதப் பல்லை ‘தேசப்பிரேமி’ இயக்கம் எடுத்துச் செல்லப்போகிறது என்ற விஷயத்தை சீவலி தேரரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இவர்கள் அதை என்ன செய்வார்கள்? பேழையின் புனிதத்தன்மையை இவர்களால் காப்பாற்ற முடியுமா? குப்பைமேட்டில் புதைத்து வைப்பார்களா? பேழையுடன் கடலில் விடுவார்களா? அசிரத்தையாக எங்காவது தொலைத்து இந்நாட்டுக்கும் தம்மத்துக்கும் அபகீர்த்தியைக் கொண்டுவருவார்களா? சீவலி தேரர் இதையெல்லாம் சேனகவிடம் கேட்டேவிட்டார்.

“இங்கேதான் சங்கைக்குரிய சீவலி தேரரின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது. புனிதப் பல்லை கெரில்லாக் குழுவான நாங்கள் வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியானதல்ல. புனிதப் பல்லை வைத்திருக்கும் எங்களது அணியொன்று முற்றாக அழிக்கப்பட்டால், புனிதப் பல்லுக்கு என்ன நிகழும் என்பதும் நமக்குத் தெரியாது. என் நண்பனும், நம்பிக்கைக்குரியவனும், தம்மத்தின்மீது அளவற்ற பற்றுள்ளவனுமான சீவலி தேரர் தான் தகுந்த காலம் வரும்வரை புனிதப் பல்லைப் பூஜித்துப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.”

இதைக் கேட்ட சீவலி தேரர் மனக் குழப்பத்துடன், ஆழ்ந்த யோசனைக்குள் செல்லலானார். ஆனால், சேனகவோ “சிந்திக்கவெல்லாம் நேரமில்லை. சீவலி தேரரின் சம்மதத்தைப் பெற்றாகிவிட்டது என்ற நற்செய்தியுடன் எங்களது தலைமைத் தோழரை இன்றிரவே சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன். இப்போதே தாமதமாகிவிட்டது. தன்னுடைய புனிதக் கடமையை ஏற்றுக்கொள்வதற்கு வணக்கத்திற்குரிய சீவலி தேரர் மறுத்துவிட்டார் என்ற அவச் செய்தியுடன் நான் இங்கிருந்து செல்ல முடியாது!” என்றான்.

மனோஹர சேனகவுடைய, வசியச் சூத்திரம் பொறிக்கப்பட்டிருந்த நாவு தங்கத் தகடுபோல சீவலி தேரரின் முன்னே ஒளியாகத் துடித்தது. 

3

தேசப்பிரேமி ஜனதா வியபரயாவின் திட்டப்படி, சரியாகப் பிற்பகல் 02:30 மணிக்கு, கண்டி புனிதத் தந்த தாது ஆலயத்தில் நடவடிக்கை தொடக்கப்படும். அங்கிருந்து எடுத்துவரப்படும் புனிதப் பல் மகாவலிகங்கைக் கரையில் சேனகவிடம் ஒப்படைக்கப்படும். கங்கைப் பாலத்தை சேனக மோட்டார் சைக்கிளில் கடந்து, பிற்பகல் மூன்று மணிக்கு நரப்பிட்டிய சந்தியை அடைந்துவிடுவான். அங்கே சீவலி தேரர் காத்திருக்க வேண்டும். புனிதப் பேழை தேரரிடம் ஒப்படைக்கப்பட்டதும், பேழையை அவர் தரித்திருக்கும் சீவர ஆடைக்குள் மறைத்துவைத்து, குண்டசாலை பவுத்த மடாலாயத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாத்து வைக்க வேண்டும்.

நரப்பிட்டிய சந்திக்கு பிற்பகல் 02:55 மணிக்கு சீவலி தேரர் வந்துவிட்டர். அவர் தங்கியிருக்கும் மடாலயத்திலிருந்து அய்ந்து நிமிட நடை தூரத்திலேயே அந்தச் சந்தி இருந்தது. அங்கிருக்கும் சிறிய படிப்பகத்திற்குள் வைத்துத்தான் புனிதப் பேழை கைமாற்றப்படும். சேனக துல்லியமாகக் கணித்தவாறே அந்த நேரத்தில் படிப்பகத்தில் ஒருவருமில்லை. அங்கே தனியாக உட்கார்ந்திருந்து செய்தித்தாள்களைப் புரட்டிய சீவலி தேரர் உள்ளூறப் பதற்றமுற்றிருந்தாலும், தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் ஒரு வரலாற்றுக் கடமையைச் சுமப்பதால் அவரது உள்ளத்தில் அபரிதமான கிளர்ச்சியுமிருந்தது. சேனகவின் தங்க நாவுக்குத் தான் கட்டுப்பட்டிருப்பதை அவரால் இன்னும்தான் நம்ப முடியவில்லை. 

புனிதப் பேழையைப் பாதுகாக்க சீவலி தேரரிடம் தெளிவான திட்டமிருந்தது. தங்கத்தால் பூஜை மணி வடிவத்தில் செய்யப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கவசக் கூட்டுக்குள்ளே வைக்கப்பட்டிருக்கும் புனிதப் பல்லிருக்கும் சிறு பேழை உள்ளங்கைக்குள் அடங்கிவிடக் கூடியதே. சீவலி தேரரின் அறைச் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் இரும்புக் கதவுள்ள புத்தக அலுமாரிக்குள் பேழையைப் பத்திரமாக வைத்துவிடலாம். அலுமாரியின் சாவியை சீவர ஆடையில் முடிச்சிட்டு எப்போதும் கூடவே வைத்துக்கொள்ளலாம்.

மணி மூன்றைக் கடந்த போது, தேரரின் இருதயத்திலிருந்த அரத்த தம்மசக்கரம் நின்று போயிற்று. பதற்றம் மெல்ல மெல்ல அச்சமாகி, அது கனத்த துக்கமாகித் தேரரை மூடிற்று. புனிதப் பல்லுடன் சேனக வரவேயில்லை. ஆனால், நரப்பிட்டிய சந்தியில் தேரரைச் சூழவர ஒரு செய்தி வேகமாகவும் கோபமாகவும் பரவிற்று: 

‘புனிதத் தந்த தாது விகாரையை, மாறுவேடத்தில் வந்த தமிழ்ப் பயங்கரவாதிகள் தாக்கினார்கள். முதலில் அவர்கள் காவல்துறையினரில் இருவரைச் சுட்டுக் கொன்றார்கள். ஆனால், காவல்துறையினர் துரிதமாகச் செயற்பட்டு, எதிர்த் தாக்குதலை நிகழ்த்திப் பயங்கரவாதிகளில் ஓர் ஆணையும் பெண்ணையும் கொன்றுவிட்டார்கள். இன்னொரு ஆணும் பெண்ணும் காவல்துறையினரால் காயங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புனிதப் பல் பாதுகாப்பாகவேயுள்ளது.’

முதலில், அந்தச் செய்தி உண்மையாகவே இருக்கட்டும் என்றுதான் சீவலி தேரரின் மனம் விரும்பியது. இந்தத் தாக்குதலை தேசப்பிரேமியினர் செய்யாமல் தமிழர்கள் செய்திருந்தால், தன்மீதிருக்கும் மலைபோன்ற பாரம் காற்றாக வீழ்ந்துவிடும் என்பது போலத் தேரர் கற்பனை செய்தார். ஆனாலும், அவரது அறிவு முற்றாக மழுங்கிவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயமாகத் தேசப்பிரேமிகளே இந்தத் தாக்குதலைச் செய்திருப்பார்கள் என்றே அவரது அறிவு சொன்னது.

மறுநாள் அதிகாலையில் சீவலி தேரர் விழித்தபோது; இன்று யாராவது, ஏதாவதொரு சேதியைத் தன்னிடம் கொண்டுவரக் கூடும் என்றொரு உள்ளுணர்வு அவரை அருட்டிப் போட்டது. செய்தித்தாளை வாங்கிப் படித்தால், நேற்றைய தாக்குதல் குறித்து ஏதாவது விபரம் தெரியும் என்று நினைத்துக்கொண்டே, ஆட்கள் நடமாட்டமற்ற அந்தப் பொழுதில் அவர் தனியராக நரப்பிட்டிய சந்திக்கு வீதியோரமாக நடந்து போய்க்கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ புறப்பட்டு வந்த சிறிய கறுப்புநிற வண்டியின் பின்புறக் கதவு திறந்துகொள்ள, சீவலி தேரர் உள்ளே இழுத்துப் போடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டார்.

தன்னைக் கடத்தியிருப்பது தேசப்பிரேமி இயக்கமே என்றுதான் முதலில் சீவலி தேரர் நினைத்தார். ஆனால், வாகனத்தினுள்ளே ஒலித்துக்கொண்டிருந்த தொலைத்தொடர்புக் கருவிகளின் பேச்சுச் சத்தம், அவர் அரச புலனாய்வுத்துறையினராலேயே கடத்தப்பட்டிருக்கிறார் என்பதை அவருக்கு மெல்ல மெல்லத் தெளிவுபடுத்திற்று. அக்கணத்திலேயே, புலனாய்வுத்துறையினரிடம் எதையும் மறைத்துவைத்துப் பேசக்கூடாது எனத் தேரர் மனதில் உறுதியெடுத்துக்கொண்டார். புனிதப் பல்லை மறைத்துவைக்க நினைத்ததற்கு இதுவே தகுந்த பிராயச்சித்தம் என்று அவரது மனதின் அரத்த தம்மசக்கரம் உரைத்தது. ஒருநாள் தம்மத்திலிருந்து வழுவியதற்காக, தன்னுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதும் பிராயச்சித்தம் செய்துகொண்டேயிருக்கப் போவதாகவும் அவர் பிரதிக்ஞை கொண்டார். 

ஆனால், புலனாய்வாளர்களுக்கு சீவலி தேரரிடமிருந்து எந்த உண்மையுமே தேவைப்படவில்லை. ஏற்கனவே மனோஹர சேனக தன்னுடைய தங்க நாக்கால் எல்லாவற்றையும் புலனாய்வுத்துறையினரிடம் வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தான். புலனாய்வுத்துறையினர் தன்னை எங்கே கடத்திச் சென்றார்கள் என்பது இப்போதுவரை சீவலி தேரருக்குத் தெரியாது.

சீவலி தேரரின் கண்கட்டு அவிழ்க்கப்பட்ட போது, போறணை போன்றிருந்த ஓர் அறைக்குள் அவரிருந்தார். பாழடைந்து கிடந்த அந்த அறைக்குச் சாளரங்கள் ஏதும் கிடையாது. அறையின் மூலையில் ஒரு கோணலான மலக்குழி திறந்து கிடந்தது. அதிலிருந்து கிளம்பிய பிணநாற்றம் அறையை நிறைத்திருந்தது. கீழிருந்து வரும் வேதனைக் கூக்குரல்களை வைத்துப் பார்க்கையில், இதுவொரு மாடி அறையாகத்தான் இருக்கவேண்டும். அறையில் ஊசலாடும் மின்விளக்குக்குரிய பொத்தான் அறைக்கு உள்ளேயில்லை. அறையிலிருந்த ஒரேயொரு துருப்பிடித்த நாற்காலியில் தேரரை அமர வைத்துவிட்டுப் புலனாய்வுப் பொலிஸார் வெளியேறினார்கள். இரும்பாலான அறைக்கதவை மூடியதும், வெளியே தாழிடும் சத்தம் தேரருக்குக் கேட்டது. அடுத்த விநாடியே மின்விளக்கும் அணைந்துபோக, தேரர் மை இருளுக்குள் தோய்ந்தார். குத்தக நிகாயகமான பீடவத்துவை அவரது மனம் நினைக்கலாயிற்று. மானுடப் பிறவியில் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக, நித்திய இருளாகயிருக்கும் பேய்களது உலகில் வாழ விதிக்கப்பட்டவர்களது கதைகளைச் சொல்வது பீடவத்து.
துக்கத்தைத் தவிர வேறு உணர்வுகள் சீவலி தேரரிடம் இருக்கவில்லை. துக்கம் அவரை மலைப்பாம்பு போலச் சுற்றிப்பிடித்து நொறுக்கியது. அப்போது அந்த அறையில் ஒரு பல்லி சொல்வதைத் தேரர் கேட்டார். அந்தச் சத்தம் அவரது இடதுபுறமிருந்தே வந்தது. ஆனால், அது எத்திசை என்பதைத் தேரரால் அறிய முடியாது. இன்னொரு முறை பல்லி சொன்னால் கேட்பதற்காகத் தேரர் தன்னுடைய முகத்தை இடதுபுறம் திருப்பிக் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டார். அப்போது அறைக்குள் ஒளி பிரகாசித்தது. பல்லி சுவரில் குத்தென இறங்கி, சுவரிலேயே மறைந்தும் போனது.

அறைக்கதவு திறக்கப்பட்டு மறுபடியும் மூடப்பட்டபோது, கைக்குட்டையால் தனது மூக்கைப் பொத்தியவாறே புலனாய்வுத்துறை உயரதிகாரி அமரக்கூன் உள்ளே நின்றிருந்தான். கட்டான இளந்தாரியான அவனுக்கு வயது முப்பதிற்கும் குறைவாகவேயிருக்கும். சிவந்த தேகமும், இடுங்கிய கண்களும், அடர்த்தியான கம்பித் தலைமுடியும் கொண்டிருந்த அமரக்கூனில் சீன முகச் சாயலிருந்தது. தன்னெதிரே அமைதியாக நின்றுகொண்டு, தன்னுடைய கண்களையே உற்றுப் பார்க்கும் அமரக்கூனின் கண்களை நாற்காலியில் அமர்ந்தவாறே சீவலி தேரர் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார். தேரரது பார்வை அவர் எத்தகைய பிராயச்சித்தத்திற்கும் தயாராகவேயிருக்கிறார் என்பது போலிருந்தது.

அமரக்கூன் தன்னுடைய ஒரேயொரு கேள்வியைக் கேட்டான்:

“ஹாமத்துருவெனே! உமக்கு சுபசிங்க பளிகவர்த்தன ஆராய்சிலாகே என்ற மனிதனைத் தெரியுமா?”

அந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போலத்தான் சீவலி தேரருக்குத் தோன்றியது. அந்தப் பெயரைச் சேனக தன்னிடம் சொல்லியிருப்பானோ என்று தேரர் யோசிக்கும் போதே, அமரக்கூன் சொன்னான்:

“சுபசிங்க பளிகவர்த்தன ஆராய்சிலாகே என்னுடைய இரத்தவழி மூதாதை. கண்டி புனிதத் தந்த தாது விகாரையை அமைப்பதற்கு நிலம் வழங்கியவர்…” சொல்லிக்கொண்டிருக்கும் போதே தன்னுடைய வலது காலைத் தூக்கி, சீவலி தேரரின் மார்பில் அமரக்கூன் ஓங்கி மிதித்தான். நாற்காலியோடு சாய்ந்து பின்புறமாகத் தரையில் வீழ்ந்த சீவலி தேரரின் மழிக்கப்பட்ட தலை பந்து போலத் தரையில் மோதித் துள்ளியது. அமரக்கூனின் கனத்த பூட்ஸ் தேரரின் இடது மார்பில் அச்சாகப் பதிந்து போயிற்று. 

தன்னிடம் புலன் விசாரணை செய்வதல்ல அமரக்கூனின் நோக்கம், மாறாகத் தன்னைச் சிறுகச் சிறுகப் பழி தீர்ப்பதே அவனது நோக்கம் எனச் சில நாட்களிலேயே சீவலி தேரர் புரிந்துகொண்டார். தன்னை ஒரு சாட்சியாக அல்ல, குற்றவாளியாகக் கூட நீதிமன்றத்தில் அவன் நிறுத்தப் போவதில்லை என்பது அவருக்குத் தெளிவாகிவிட்டது. தேரர் கடத்தப்பட்டதும் எவருக்குமே தெரியாது. தேரர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் அமரக்கூனைத் தவிர வேறு யாருமே வரவும் முடியாது. சீவலி தேரருக்கு எப்போதாவது கிடைக்கும் உணவையும் நீரையும் கூட அமரக்கூனே கொண்டுவருவான். அவன் வராத நாட்களில் உபவாசம் இருப்பதைத் தவிர தேரருக்கு வேறு வழியில்லை.

அமரக்கூன் எதையாவது விசாரித்துத் தொலைத்தால் கூட சீவலி தேரருக்குச் சற்று நிம்மதியாக இருக்கும். தன்னுடைய பாவத்தை அவன் முன்னே இறக்கி வைத்துவிடுவார். ஆனால், முதல் சந்திப்பில் பேசியதை விடுத்து, வேறெப்போதும் தேரரிடம் அமரக்கூன் பேசியதேயில்லை. ஆனால், ஓயாமல் உத்தரவுகளைப் பிறப்பிப்பான். ஒவ்வொரு உத்தரவும் தேரருக்குச் சிறுமையையும் வலியையும் கொண்டுவரும். அவர் அந்த அறையில் அமரக்கூனோடு வருடங்களைக் கழிக்க வேண்டியிருந்தது.

அமரக்கூனின் கையால் சீவலி தேரர் வதைபட்ட இரத்தம் தெறித்துத் தெறித்து அந்த அறையின் அழுக்குச் சுவர்கள் மினுங்கும் செந்நிறமாக மாறிக்கொண்டிருந்தன. அமரக்கூனின் தடித்த தோல் இடுப்புப் பட்டியும், முள்ளுத் தடிகளும் விளாறி விளாறித் தேரரின் உடலெங்கும் ஏற்பட்ட பச்சைப் புண்களிலிருந்து வடியும் ஊனாலும் சீழாலும் தரை செம்மஞ்சள் நிறமேறிற்று. தேரர் குளிக்கவோ, மழிக்கவோ அனுமதிக்கப்படவேயில்லை. சிக்கேறிய கத்தை முடிகள் தேரரின் தோளைத் தொட்டன. முகத்தில் வளர்ந்திருந்த முடியால் முகத்தின் அரைப் பகுதி மறைந்துபோனது. முன்வாயில் சில பற்கள் தெறித்து விழுந்துவிட்டன. ஒவ்வொரு பல்லையும் அமரக்கூன் கைக்குட்டையில் சுற்றி தன்னோடு எடுத்துச் சென்றான். தேரரும் சளைத்தவரல்ல. எந்த வேளையிலும் அவர் அமரக்கூன் முன்னே கண்ணீர் விடவோ, ஓலமிடவோ செய்ததில்லை. சகிப்புத்தன்மையின் உச்சமாகயிருப்பதே அரஹந்தப் பாதை. பொளியப்படும் கருங்கல் போன்று தேரரின் துறவு மனம் சீராகச் செதுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. 

ஒருநாள், சீவலி தேரர் பேசிய வார்த்தைகள் தான் அவரது நித்திய துக்கத்திற்குத் திறவுகோலாகியது. அந்த நாளுக்குப் பின்பு, துயரற்ற ஒரேயொரு விநாடிகூட சீவலி தேரருக்கு இருந்ததில்லை. அன்றைய இரவில்தான் அமரக்கூன் “இது உமக்குப் பொருத்தமற்றது” என்றவாறே முதன்முறையாக தேரரின் சீவர ஆடையைக் களையத் தொடங்கினான். அப்போதும் சலனமற்று நின்றிருந்த சீவலி தேரர் உண்மையிலேயே அமரக்கூனுக்குச் சலிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். “புனிதத் தந்த தாது ஆலயத்தில் இரண்டு பொலிஸ்காரர்களைச் சுட்டுக்கொன்ற மாவீரர் கூட்டத்தைச் சேர்ந்த நீர் என்முன்னே பட்ட மரம்போல நிற்கலாமா?” எனக் கேட்டவாறே, அமரக்கூன் சீவலி தேரரை முழு அம்மணமாக்கியபோது, தேரர் அமரக்கூனின் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னார்:

“தசசீலத்தைக் கடைப்பிடிக்கும் துறவி இழப்பதற்குத் தம்மத்தைத் தவிர ஏதுமற்றவன்.”

இந்த வார்த்தைகள்தான் அமரக்கூனைச் சிந்திக்க வைத்திருக்க வேண்டும். அவன் உடனேயே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான். அறைக்கதவைக் கூடத் தாழிடாமல், அவன் குதித்து மாடிப்படிகளில் ஓடிச் சென்றான். தேரர் தரையில் கிடந்த சீவர ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். இப்போது மாடிப்படிகளில் காலடியோசைகள் கேட்டன. மறுபடியும் அறைக்குள் நுழைந்த அமரக்கூன், கைகளில் விலங்கிடப்பட்ட ஒரு பெண்ணைத் தன்னோடு அழைத்து வந்திருந்தான்.

அந்தப் பெண்ணுக்கு இருபது வயதிருக்கும். மார்பிலிருந்து தொடைகள் வரை, நாற்றமடிக்கும் அழுக்குப் பாவாடையைக் கட்டியிருந்தாள். அவள் இயல்பிலேயே குண்டான உடல்வாகு உள்ளவளாக இருக்க வேண்டும். கைகளிலும் கால்களிலும் தசை வழிந்தது. தாடையிலும் தசை இலேசாகத் தொங்கியது. அவளது புழுத்துக்கிடந்த தலைமுடியிலிருந்து இரத்தவாடை கசிந்தது. அவளின் தடித்த உதடுகள் புண்ணாகி, அயறு படர்ந்திருந்தது. அவளது கண்கள் வியப்புடன் தேரரை நோக்கியிருந்தன.

அமரக்கூன் அந்தப் பெண்ணிடம் சில வார்த்தைகளைச் சொன்னான். அவற்றில் ஒரு வார்த்தை கூட சீவலி தேரருக்குப் புரியாது. ஆனால், அமரக்கூன் தமிழில் பேசுகிறான் என்பது மட்டும் தேரருக்குத் தெரிந்தது. அந்தப் பெண் பாவாடையை அவிழ்த்துத் தரையில் நழுவவிட்டாள். சீவலி தேரர் தன்னுடைய கண்களை இறுக மூடிக்கொண்டார். இந்தக் கண்களில் அமரக்கூன் காய்ச்சிய எண்ணெயை ஊற்றினால்கூட இவை திறக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். 

அறைக்கதவை உள்ளிருந்து மூடும் சத்தம் கேட்டது. அமரக்கூனின் கனத்த பூட்ஸ்கள் தன்னை நெருங்கி வருவதையும் சீவலி தேரர் உணர்ந்தார். தனது மார்பில் உள்ளங்கைகளைப் பதித்தவாறே அவர் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார். தேரரை நெருங்கிய அமரக்கூன் அவரது இடதுபுறச் செவிமடலைப் பற்றியிழுத்து, தேரரின் காதுக்குள் கிசுகிசுத்தான்:

“தசசீலரான துறவி சீவலி பால தேரர் இந்தப் பெட்டை நாயைத் தனது ஆண்மையால் அடக்க வேண்டும்! 

அந்தக் கணத்தில் சீவலி தேரரின் உள்ளத்தில் அச்சம், கோபம், பச்சாதாபம் என எந்த உணர்வும் எழவில்லை. முழுவதுமாக அவர் துக்கத்தால் மட்டுமே போர்த்தப்பட்டிருந்தார். அவர் தனது உடலை மரத்துப்போகச் செய்வதற்கு முயன்றார். தன்னையொரு காய்ந்த விறகாகக் கற்பனை செய்துகொண்டார். அப்போது அந்தப் பெண் தன்னுடைய விலங்கிடப்பட்ட கைகளைச் சீவலி தேரரின் இடது முழங்காலில் வைத்து, தமிழில் ஒரு வார்த்தையைச் சொன்னாள். தன்னுடைய முழுப் புலன்களையும் அடக்கி மரக்கட்டையாவதற்கு முயன்றுகொண்டிருந்த தேரரின் செவியில் அந்த வார்த்தை தைத்து அங்கேயே நிலைத்தது.

அமரக்கூன் மறுபடியும் தேரரின் ஆடையைக் களைந்தபோது கூட, தேரர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. அவரது உடல் மரத்துக்கொண்டே வந்தது. நிர்வாணியான தேரரை இழுத்து அமரக்கூன் குப்புறப் படுக்க வைத்தபோதும் தேரர் கண்களைத் திறந்தாரில்லை. அவர் துக்கத்தின் உன்மத்தத்துள் ஆழ்ந்துகொண்டிருந்தார்.

சீவலி தேரர் அந்தப் பெண்ணின் மீதே படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவள் உடல் வலியால் முனகுவது தேரருக்குக் கேட்டது. அவளது முலைக் கும்பங்கள் தேரரின் ஒட்டிய வயிற்றின் கீழே சப்பளிந்து கிடந்தன. தேரர் மூளையில் தீயின் வாசனையை உணர்ந்தார். அமரக்கூனின் கண்முன்னே இரண்டு அழுக்குப் பிண்டங்கள் அசைவற்றுக் கிடந்தன.

அமரக்கூன் தமிழில் ஏதோ கத்தியபோது, அந்தப் பெண் தனது சதைப்பிடிப்பான கால்களால் தேரரின் கால்களைப் பின்னிக்கொண்டாள். அவளது விலங்கிடப்பட்ட கைகள் தேரரின் நிர்வாணத்தைப் பற்றின. தேரர் சம்புத்தரைத் தியானித்து தனது மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்தார். அப்போது, அமரக்கூனின் கையிலிருந்த தடித்த தோல் இடுப்புப் பட்டி தேரரின் புட்டத்தில் சடசடவென விளாறத் தொடங்கியது. தேரர் கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டே, வலியைச் சத்தமேயில்லாமல் தாங்கிக்கொண்டார். புட்டத்தில் முதல் துளி இரத்தம் துளிர்த்தபோது, சீவலி பால தேரருக்கு விந்தும் வெளியாகியது. 

அந்தக் கணத்திற்குப் பின்பு அமரக்கூன் அந்த அறைக்குள் வருவதில்லை. உணவையும் நீரையும் யார் யாரோ எடுத்து வருகிறார்கள். சீவலி தேரரைக் குளிக்க வைத்து, புதிய வேட்டியும் சட்டையும் கொடுத்தார்கள். தேசப்பிரேமி இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும், சீவலி தேரர் சீக்கிரமே விடுதலை செய்யப்படலாம் என்றும் அவர்களில் ஒருவன் தேரருக்கு இரகசியமாகச் சொன்னான்.

அவற்றைப் பற்றியெல்லாம் சீவலி தேரர் அக்கறை கொள்வதில்லை. தன்னுடைய சிந்தனை முழுவதையும் அவர் சம்புத்தரிடமே வைத்திருந்தார். மாளாத துக்கத்தால் அவர் மூழ்கடிக்கப்பட்டிருந்தாலும், துறவு நிலையிலிருந்து தான் விலகியதாக அவர் ஒருபோதுமே கருதவில்லை. அந்தப் பெண் குறித்து இந்த முப்பது வருடங்களில் அவர் யாருடனும் பேசியதுமில்லை. அந்தப் பெண் சொன்ன வார்த்தை மட்டும் அவருடன் எப்போதுமிருந்தது.

4

மொட்டைப் பாறையில் படுத்திருந்த சீவலி தேரர் விண்மீன்களை வைத்து நேரத்தைக் கணக்கிட முயன்றார். நடுநிசி தாண்டியிருக்கலாம். கடற்காற்று அவ்வப்போது கைக்கல்லில் இருந்த அகல் விளைக்கை அணைப்பதாகவும், தேரர் திரும்பவும் விளக்கை ஏற்றுவதுமாகத் தூக்கமற்றிருந்தார். அவரது எண்ணங்கள் கட்டற்றுப் பெருகி இருளில் சிதறிக்கொண்டிருந்தன:

‘புனிதப் பல் இந்தத் தீவில் இருக்கும் வரைதான் நாட்டுக்குத் தீங்கு நேராது. நாட்டை மீண்டும் அபாயம் சூழாதவாறு, ஒவ்வொரு கடற்கரையிலும், மலையிலும், கல்லிலும், மரத்திலும், தெருவிலும் சம்புத்தரை வைக்க வேண்டும். நான் இங்கு இருக்கும்வரை, இதோ இந்தச் சம்புத்தர் சிலையில் கை வைக்க யாருக்கும் துணிவு வராது. சீக்கிரமே இங்கேயொரு சிறிய பன்சாலையைக் கட்டி எழுப்பிவிட வேண்டும். அதற்கான வழியை இப்போது நான் அறியமாட்டேன்…’ 

கூவென வந்த காற்று இன்னொருமுறை விளக்கை அணைத்துத் திரும்பியது. சீவலி தேரர் இருளில் தடுமாறி நடந்து சென்று, திரும்பவும் அகல் விளக்கை ஏற்றிய போது, கைக்கல்லில் பதிந்துள்ள விரல் குழியில் ஒரு பல்லி ஒட்டியிருப்பதைப் பார்த்தார். பல்லி இருப்பது தென்மேற்குத் திசையென தேரர் கணித்தார். அவர் கையில் விளக்கோடு பல்லியை நோக்கி மெல்லக் குனிந்தார். தென்மேற்குத் திசையிலிருந்து பல்லி சொன்னால், எடுத்த கருமம் நிறைவேறும் என்று பலன் என்பதைத் தேரர் அறிவார். அவர் பல்லி சொல்வதற்காகக் காதுகளைக் குவித்துக் காத்திருந்தார். அந்தப் பல்லியோ ஒன்றும் சொல்லாமலும், அசையாமலும் அங்கேயே சித்திரம் போல ஒட்டிக்கொண்டிருந்தது.

சீவலி பால தேரர் பல்லிக்கு நெருக்கமாக விளக்கை எடுத்துச்சென்று “ஒரேயொரு சத்தமெழுப்பு! இலங்கைத் தீவு முழுவதற்கும் உனக்கு அரசுரிமை அளிக்கிறேன்” என்றார்.

(நீலம் – டிசம்பர் 2022 இதழில் வெளியானது)

 

 

https://www.shobasakthi.com/shobasakthi/2023/02/02/பல்லிராஜா/?fbclid=IwAR3mHFfC0S4jp_t0B4aFda6XDdRb5E3bmIbcVatpUrY1u6_a4vw4lS-qGLM

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.......அந்தப் பல் கதைகளில் கூட இன்னும் எவ்வளவு பேரை காவு கொள்ளுமோ அறியோம் ........!  

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.