Jump to content

சுமந்திரனை வளர்க்கும் புதிய கூட்டணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை வளர்க்கும் புதிய கூட்டணி

புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் எம்.ஏ சுமந்திரன் நுழைந்தது முதல், கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதித்திட்டங்களில் ‘ஆமை’ போன்று ஈடுபட்டதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (ஜ.த.தே.கூ - DTNA)) குற்றஞ்சாட்டுகின்றது. 

கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ‘சுமந்திரன்’ என்ற பெயர் பிரதான பேசு பொருளானது. “ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை” என்று சுமந்திரன், சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி, அவரை பலமாகப் பதம் பார்த்தது. அவரது கட்சியின் சக வேட்பாளர்களே, அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார்கள்.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சுமந்திரனின் பெயர்தான் பிரதான பேசு பொருளாகி இருக்கின்றது. “கூட்டமைப்பை பிளவுபடுத்திய ஆமை”, “தமிழரசு கட்சியை கைப்பற்றப்போகும் சதிகாரன்” என்றெல்லாம், ஜ.த.தே.கூட்டணியினர் மேடைக்கு மேடை பேசி வருகிறார்கள். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு முடிவெடுத்தது. அதனை, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுமந்திரன் அறிவித்தார். தமிழரசுக் கட்சியின் சார்பில், அந்தக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜாவும் சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்கள். 

எனினும், தனித்துப் போட்டியிடுவது என்ற தமிழரசுக் கட்சியின் தீர்மானம் சுமந்திரனால் எடுக்கப்பட்டது என்பது மாதிரியாக உணர்நிலையை, ஏனைய இரு பங்காளிக் கட்சிகளான டெலோவும் புளொட்டும் முன்னிறுத்தின. அதனால்தான், சுமந்திரனின் பெயர் இந்தத் தேர்தல் மேடைகளிலும் தொடர்ந்து உச்சரிக்கப்படுவதற்கு காரணமாகி இருக்கின்றது.

பங்காளிக் கட்சிகளை இணைத்துக் கொண்டு, தொடர்ந்தும் கூட்டமைப்பாக வீட்டுச் சின்னத்தில்,  தமிழரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்று மாவை சேனாதிராஜா மத்திய குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினர். அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் மாத்திரமே பேசினார்கள். 

ஆனால், மத்திய குழுவில் இருந்த 90 சதவீதமான உறுப்பினர்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்கிற முடிவில் உறுதியாக இருந்தார்கள். தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை அறிவிக்க முதலே, கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிவஞானம் சிறிதரன் பத்திரிகை அறிவித்தல்களை வெளியிட்டிருந்தார். 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கிளிநொச்சியிலுள்ள மூன்று சபைகளில் பங்காளிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை சிறிதரன் வழங்கி இருக்கவில்லை. அவர், ஒட்டுமொத்தமாகத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கொண்டே நிரப்பியிருந்தார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், சிறிதரன் செய்தது மாதிரியான ஏற்பாடுகளை, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழரசுக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் தலைவர்கள் எடுத்துவிட்டார்கள்.

 அவ்வாறான நிலையில், பங்காளிக் கட்சிகளோடு இடங்களைப் பங்கிடுவது என்பது, தங்களது ஆதரவாளர்களை கோபப்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால்தான், மத்திய குழு, மாவையின் உணர்ச்சிகரமான உரையை புறந்தள்ளிக் கொண்டு, தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்தது.

அத்தோடு, கடந்த பொதுத் தேர்தல் தொடக்கம், தமிழரசுக் கட்சியை பங்காளிக் கட்சிகள் அலைக்கழித்து வருவதான எண்ணம், அந்தக் கட்சியினருக்கு உண்டு. அதனை, சி.வி.கே சிவஞானம் போன்றவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தவும் செய்தார்கள். 

தங்களது வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றுவிட்டு, தங்களை ஏறி மிதிக்கும் செயற்பாட்டை ஏற்க முடியாது என்பது தமிழரசுக் கட்சியினரின் நிலைப்பாடு. அதனை, கட்டுப்படுத்துவதற்கு வீட்டுச் சின்னம் இல்லாமல் டெலோவும் புளொட்டும் போட்டியிட்டு, தங்களது உண்மையான நிலையை உணர்ந்து கொள்ளட்டும் என்பது தமிழரசின் எண்ணம். 

அதுபோல, தமிழரசுக் கட்சியினருக்கு கூட்டமைப்பாக நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரிதாக இல்லை. பங்காளிக் கட்சிகளின் தொல்லைகள் அற்ற, தனிக் கட்சியாக முன்னேறுவதே இலக்கு. அதற்கு, ஏதாவது காரணத்தை முன்வைத்து, பங்காளிகளை வெட்டிவிட்டாக வேண்டும். அதற்கு, தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையிலுள்ள குழப்பத்தை கையிலெடுத்துக் கொண்டு, கூட்டமைப்பின் பங்காளிகள் அனைவரும் தனித்துத் தனித்து போட்டியிட்டுவிட்டு, தேர்தலின் பின்னர் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்ற ‘காதில் பூச்சுற்றும்’ தொழில்நுட்ப விடயத்தை கையிலெடுத்தது. 

தேர்தல் களத்தில் தனித்து தனித்து போட்டியிட்டால், கட்சி ரீதியாக பலமாக மோத வேண்டி ஏற்படும். அது, இன்னும் இன்னும் பிளவுகளை ஏற்படுத்தும். அதனால், எதிர்காலத்தில் கூட்டாக சேர்வது தடுக்கப்படும் என்பது வெளிப்படையான விடயம்.

தமிழரசு தனித்துப் போட்டியிடும் முடிவை, மேற்கண்ட காரணங்களுக்காகத்தான் எடுத்தது. இது, அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, ஆயுதப் போராட்டம், தேர்தல் அரசியல் களம் என்று 50 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் செல்வம் அடைக்கலநாதனுக்கும் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் தமிழரசின் நோக்கம் தெரியாதது இல்லை. அதனால்தான், அவர்கள் இருவரும் தமிழரசு தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்ததும், கூட்டமைப்பை தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, பொதுச் சின்னத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று இரா.சம்பந்தனுக்கு கடிதம் எழுதினார்கள். 

இதன்மூலம், கூட்டமைப்பு என்கிற அடையாளத்தை தமிழரசு தன்னோடு எடுத்துச் செல்வதைத் தடுக்க முடியும் என்று நினைத்தார்கள். ஏனெனில், கடந்த 20 ஆண்டுகளாக கூட்டமைப்பு என்பது வீட்டுச் சின்னத்தோடு இயங்கியது. இன்றைக்கு தமிழரசு தனித்துப் போட்டியிட முடிவெடுத்ததும், வீட்டுச் சின்னத்தையும் எடுத்துச் சென்றுவிட்டது. அப்படியான நிலையில், கூட்டமைப்பு என்கிற அடையாளத்தையாவது தாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால், தமிழரசின் தனித்துப் போட்டியிடும் முடிவு என்பது, கடந்த பொதுத் தேர்தலின் பின்னரே எடுக்கப்பட்ட முடிவு ஆகும். அதனை, பங்காளிக் கட்சிகள் உணராமல் விட்டதுதான், இப்போது இறுதி நேரத்தில் இவ்வாறான சிக்கல்களைச் சந்தித்து, புதிய கூட்டணியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்ற பெயரோடு வரக் காரணமாகி இருக்கின்றது. 

இதனை மறைப்பதற்காக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற ‘லேபிளை’ ஒட்ட செல்வமும் சித்தார்த்தனும் முயன்றாலும் அது, அவ்வளவு இலகுவான ஒன்றல்ல.

தமிழரசுக் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் சந்தித்த பின்னடைவை, பங்காளிக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயன்றன. கூட்டமைப்புக்குள் கடந்த காலத்தில் தமிழரசு செலுத்திய ஏகபோக நிலையைத் தடுப்பதற்கு நினைத்தன. அதற்காக, கூட்டமைப்புக்கு வெளியிலுள்ள கட்சிகளோடு பலமான நெருக்கத்தையும் பேணின. அதன் மூலம் தமிழரசை மிரட்டலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு. 

ஆனால், டெலோவும் புளொட்டும்  இவ்வாறான நடவடிக்கைககளால் தமிழரசின் தனித்துப் போட்டியிடும் முடிவை, கட்சிக்குள் பலமாக உறுதிப்படுத்துவதற்கே உதவின. மாறாக, தாங்கள் பலமான அணியாக எழுவது குறித்து சிந்திக்க மறந்துவிட்டன. 

அதுதான், தேர்தலொன்று வரும் வரையில், அமைதியாக இருந்துவிட்டு, இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சி மத்திய குழுவைக் கூட்டி, தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்தது. டெலோவும் புளொட்டும் தமிழரசின் தனித்துப் போட்டியிடும் எண்ணத்தை மாவை உள்ளிட்டவர்களைக் கொண்டு தடுத்துவிடலாம் என்று முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், இன்றைக்கு மாவையைத் தாண்டி முடிவுகளை சுமந்திரன், சிறீதரன் உள்ளிட்ட தரப்பினர் தமிழரசுக் கட்சிக்குள் எடுக்கும் நிலை வந்துவிட்டது. 

அப்படியான நிலையில்தான் டெலோவும் புளொட்டும் பலமான கூட்டணியைக் கட்ட முடியாமல், தேர்தல் மேடைகள் தோறும் சுமந்திரனை வசைபாடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் தனித்துப் போட்டியிடும் முடிவை, ஆறு மாதங்களுக்கு முன்னரேயே உணர்ந்து கொண்டிருந்தாலே, இன்னும் பலமான கூட்டணியைக் கட்டியிக்கலாம். இறுதி நேரத்தில், அவசர அவசரமாக ஒரு கூட்டணியை அமைக்க வேண்டி வந்திருக்காது. அமைக்கும் போதே புதிய கூட்டணி, நம்பிக்கையீனங்களின் வழியாக எழுந்திருக்கின்றது. 

வெற்றிபெறுவோம் என்ற எண்ணம் செல்வத்திடமும் சித்தார்த்தனிடமும் இல்லை. அதனால்தான், கூட்டமைப்பின் பிளவு சுமந்திரனால் நிகழ்ந்தது என்றும், அவரை ஆமை என்றும் தூற்றுகிறார்கள்.

சுமந்திரன் சர்ச்சைகள், விமர்சனங்கள் வழியாக, தான் அடையாளப்படுத்தப்படுவது குறித்த கவலை கொள்ளும் நபர் அல்ல. அவர், மக்களிடம் கவனம் பெற வேண்டுமானால், அவையெல்லாம் ஒருவகையிலான உத்திகள் என்று கருதுபவர். 

இன்றைக்கு சுமந்திரன், தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்குள் அடைந்திருக்கின்ற இடம், அவரின் செயற்பாட்டு அரசியலால் மாத்திரமல்ல, எதிர்த்தரப்பினரின் விமர்சனங்கள் வசைகளினூடும் நிகழ்ந்தது. இன்றைக்கும், சுமந்திரனுக்கு உதவும் வேலையைத்தான் புதிய கூட்டணியினரும் செய்து கொண்டிருக்கிறார்கள். 

சுமந்திரனை மறந்துவிட்டு, தங்களின் அரசியல் இலக்கு, அதனை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி மக்களை தெளிவுபடுத்தினால், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர் மேல் எழ முடியும். இல்லையென்றால், வயிற்றெரிச்சலை கொட்டித்தீர்க்கும் களமாக மாத்திரமே தேர்தல் களத்தை, புதிய கூட்டணியினர் பயன்படுத்தியதாக வரலாறு பதிவு செய்யும்!
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுமந்திரனை-வளர்க்கும்-புதிய-கூட்டணி/91-311895

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.