Jump to content

சுதந்திர இலங்கையில் சாத்தானிடம் வரம் கேட்கும் நிலை… - கருணாகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர இலங்கையில் சாத்தானிடம் வரம் கேட்கும் நிலை…

சுதந்திர இலங்கையில் சாத்தானிடம் வரம் கேட்கும் நிலை…

—- கருணாகரன் —-

இலங்கை பொருளாதார ரீதியாக மீண்டெழுவது எப்பொழுது என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. ஆனால், ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகளுக்குள் நாட்டில் யாருக்கும் அடிபணியாத பொருளாதார வலுவை உருவாக்குவேன் என்றிருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எதனை ஆதரமாகக் கொண்டு, எப்படி அந்தப் பொருளாதார வலுவை உருவாக்கப் போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. அவர் மட்டுமல்ல, வேறு எந்தப் பொருளாதார நிபுணர்களும் கூட இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வழிகள் எப்படி அமைய வேண்டும்? எவ்வாறு அமையமுடியும் என்று சொல்லவில்லை.

ஆக மொத்தத்தில் இலங்கையின் பொருளாதார மீட்சியைக் குறித்து எவருக்கும் எதுவுமே தெரியாத நிலையே தொடர்கிறது. ஏதோ நடக்கிறது. போகிற வரையில் போகட்டும் என்ற அளவில்தான் பலரும் உள்ளனர். கடந்த மூன் று மாதங்களுக்கு முன்பு நாடு எரிபொருளுக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்குமாகத் தெருவில் நின்ற போது பலருக்கும் பொருளாதார நெருக்கடி பெரிதாக – உயிர்ப் பிரச்சினையாக இருந்தது. இப்பொழுது விலை அதிகம் என்றாலும் எல்லாமே கிடைக்கிறது. ஆகவே எப்படியாவது சமாளித்துக்கொள்வோம் என்றே பலரும் கருதுகிறார்கள். இதனால்தான் எல்லோரும் பொருளாதார நெருக்கடியை விட அரசியல் நெருக்கடியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் எதிர்க்கட்சிகள் அடிக்கின்ற பம்பலும் பகடியும் சாதாரணமானதல்ல. தங்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் தாம் என்ன செய்வோம் என்று எந்த விளக்கத்தையும் சொல்லாமலே சஜித், அநுர போன்ற தலைவர்கள் உள்ளனர். சங்கர் படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜூன் வந்து அதிரடி செய்வதைப்போல இவர்களும் அதிரடிப்பர் என்றுதான் இவர்களுடைய ஆதரவாளர்களில் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர்.

நாடோ மீட்கக் கடினமான புதை சேற்றில் மாண்டுள்ளது என்பதைக் குறித்த விளக்கம் எவருக்கும் இல்லை.

ஆகவே இந்த அரசியல் நெருக்கடி ஒரு போதும் தீரப்போவதில்லை. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எத்தனை தலைமைகள் மாறினாலும். முக்கியமாக இனவாத அரசியலில் மாற்றம் நிகழப் போவதில்லை. அதற்கான சாயல்களையும் சாத்தியங்களையும் காணவே இல்லை. மக்கள் இனவாத அரசியலை ஆதரிக்கும் வரையில் மாற்றமோ மீட்சியோ ஏற்படாது.

இதெல்லாம் நமக்குத் தெரியாமலே நடத்தப்படுகின்ற, நம்மைப் பொம்மைகளாக்கி ஆட்டுவிக்கின்ற ஏகாதிபத்திய நாடுகளின் – வல்லரசுகளின் கூட்டுச் சதி என்பதைப் பற்றி எவரும்சிந்திப்பதாகத் தெரியவில்லை. அப்படித் தெரிந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர்கள் பேசுவதாக இல்லை. பதிலாக இந்த வல்லரசுகளின் அங்கீகாரத்தையும் அனுசரணையையும் நட்பையும் பேணிக் கொள்ளவே பலரும் முற்படுகின்றனர். இதை அவர்கள் பகிரங்கமாகவே சொல்லிப் பெருமை அடித்துக் கொள்கிறார்கள். அந்தளவுக்குத்தான் நம்முடைய புத்திஜீவிகளின் அறிவுத் தராதரம் உள்ளது. சனங்களின் மீதான, சமூகம் மீதான, நாடு மீதான இவர்களுடைய பற்றுள்ளது.

அமெரிக்கா ஒரு பக்கம், இந்தியா இன்னொரு பக்கம், சீனா இன்னொரு பக்கம் என்று இலங்கையை மட்டுமல்ல, இலங்கையர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வல்லரசும் சுற்றி வளைத்துப்பிடிக்கப் பார்க்கிறது. இதற்காக இவை ஒவ்வொன்றும் நாட்டிலுள்ள புத்திஜீவிகள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், அரசியற் கட்சிகள், அரசியற் தலைமைகள் என தமக்குச் சாத்தியப்படக்கூடிய அனைத்துத் தரப்பையும் வளைத்துப் பிடிக்க முற்படுகின்றன. இதொரு பகிரங்கப்போட்டியாகவே நடக்கிறது.

இதனால் மாறி மாறி ஒவ்வொரு கட்சியையும் ஒவ்வொரு தரப்பையும் ஒவ்வொரு ஊடகவியலாளரையும் ஒவ்வொரு புத்திஜீவிகளையும் தூண்டில் போட்டுப் பிடிக்கின்றன வல்லாதிக்கச் சக்திகள். இந்த வல்லாதிக்கச் சக்திகள் லேசுப்பட்டவை அல்ல. சட்டைப் பின்னை (சட்டை ஊசியை), அப்பிளை விற்பதில் தொடக்கம் ஆயுதம், உணவு தொடக்கம் அனைத்தையும் நமக்கு விற்றுச் சம்பாதிப்பவை. நம்மைச் சுரண்டிப் பிழைப்பவை.

வல்லரசுகள், அவற்றின் தகுதியை விட்டுவிட்டு இப்படிச் சட்டை ஊசியையும் விற்குமா என்று நீங்கள் கேட்கலாம். குண்டூசி, நெற்றில் ஒட்டும் ஒட்டுப் பொட்டு தொடக்கம் எதையும் விற்றுக் காசாக்குவதே  – சம்பாதிப்பதே – அவற்றின் முதலாவது இலக்கு. அதனால்தான் அவை வல்லரசுகளாக இருக்கின்றன. அதனால்தான் அவை நம்முடைய ஊரில் உள்ள சில்லறை ஆட்களோடும் கூட்டு வைக்கின்றன, இரகசியமாக தம்முடைய காரியங்களைச் செய்துகொள்கின்றன.

இப்படியாக இருக்கும் ஒரு நிலையில்தான் இலங்கையின் பொருளாதாரம் எப்படி அமையப்போகிறது என்று நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தேசிய பொருளாதாரக் கொள்கை ஒன்று வகுக்கப்படாமல், பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்படாமல் அனைத்துத் தரப்பும் ஒன்று பட்டு உழைக்காமல் பொருளாதார மீட்சியையோ மறுமலர்ச்சியையோ எட்ட முடியாது. ஒரு இடர்கால நெருக்கடியில் ஒருங்கிணையும் தன்மையோடு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டே இதைக் கடக்க முடியும். இதிலிருந்து மீள முடியும்.

அதற்கு யாரும் தயாரில்லை. எல்லோரும் முட்டையில் மயிர் பிடுங்குவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

ஐ.எம்.எவ் வின் கடனுதவி மூலமாக பொருளாதார மேம்பாட்டை எட்ட முடியும் என்றொரு அபிப்பிராயம் படித்தவர்கள் மட்டத்திற் கூட உண்டு. அதொரு மயக்கமே. ஐ.எம். எவ் என்பது இன்னொரு கடன்பொறி. நாட்டின் இறைமையையே இல்லாதொழிக்கும் சதி என்பதைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. அதன் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால்தான் அதனுடைய அருளும் அனுசரணையும் கிட்டும். இல்லையென்றால் பெப்பேதான். இதேவேளை ஐ.எம்.எவ்விடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழி இப்பொழுது இலங்கைக்கு இல்லை. ஆக சாத்தானிடம் வரம் கேட்கும் நிலையே இப்போதுள்ளது.

இதாவது பரவாயில்லை. இனி வரப்போகும் நிலைதான் மிகப் பயங்கரமானது.

என்னதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டங்களைச் சொன்னாலும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதாக இருந்தால் அதற்கு சில வழிமுறைகளே உண்டு. ஒன்று, உற்பத்தியைப் பெருக்குவது. குறிப்பாக ஏற்றுமதியை அதிகரிப்பது. இது இலகுவானதல்ல. உடனடிச் சாத்தியமுடையதும் அல்ல. ஆனால், இதை எட்டியே தீர வேண்டும். அது இப்பொழுது முடியாது. இரண்டாவது, அந்நியச் செலாவணியைத் திரட்டக் கூடிய வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பது. இதில் முக்கியமானது வெளிநாடுகளில் உள்ள – வேலைவாய்ப்புக்காகச் சென்ற மக்கள் தமது பணத்தை இங்கே உரிய வழிமுறைகளுக்கு ஊடாக அனுப்புவது. இதற்கு புலம்பெயர் சமூகத்தினர் தயாரில்லை. அவர்கள் வேறு வழிமுறைகளுக்கூடாகவே தமது பணப் பரிவர்த்தனைகளைச் செய்கின்றனர். ஆகவே அவர்களிடம் அதை நாம் எதிர்பார்க்க முடியாது. அதில் அவர்கள் பல வகையான லாபங்களைப் பெற்று ருசிப்பட்டவர்கள். எளிதில் அதிலிருந்து மீண்டு நாட்டின் நலனுக்காகச் செயற்படுவர் என்றில்லை. அரசும் இதைக் குறித்துச் சிந்தித்து எளிய வழிமுறைகளை உருவாக்கும் சாத்தியங்களும் இல்லை. அதை விட முக்கியமானது, இனமுரண்பாட்டு அரசியலை முடிவுக்குக் கொண்டு வராத வரையில் அவர்கள் அரசுக்கு எதிராகவே செயற்படுவர். அவர்களைப் பொறுத்தவரை இலங்கை அரசு என்பது எதிர்த்தரப்பு என்பதாகும். எனவே இதுவும் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய நன்மைகளைத் தரும் என்றில்லை. அடுத்தது – மூன்றாவது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகும். இதைச் செய்ய வேண்டும் என்றால் இதற்கு கதவுகளை அகலத் திறக்க வேண்டும்.

இந்தக் கதவு திறத்தல் என்பது சாதாரணமானதல்ல.

ஏறக்குறையத் தாய்லாந்தைப்போல கட்டற்ற பாலியல் பயன்பாட்டுக்கு (Free sex routine) இடமளித்தல் என்பதாக இது அமையும். கூடவே சிறார் துஸ்பிரயோகத்துக்கும் Child abuse க்கும் இடமளிக்க வேண்டியிருக்கும். அதாவது ஒன்று அல்லது இரண்டு தலைமுறை தன்னை விலைகொடுக்க வேண்டியிருக்கும். அப்பொழுதுதான் நாட்டை கொஞ்சமாவது மீட்டெடுக்க முடியும். இதைப் படிப்பதற்கோ இதைப்பற்றிக் கேட்பதற்கோ உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், வேறு வழியில்லை. இந்த நிலையை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். இரண்டு தலைமுறைகள் நாட்டுக்காகத் தங்களைத் தியாகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரண்டு மூன்று தலைமுறை தவிர்க்க முடியாமல் இப்படித் தன்னைக் கொடுத்துத்தான் நாட்டை – மக்களை மீட்க முடியும். அடுத்து வரும் தலைமுறைகள் இதிலிருந்து மீள்வதற்காகக் கடினமாகப் போராட வேண்டியிருக்கும். சில வேளை இதுவே ஒரு பழக்கமாகி, வழக்கமாகி மேலும் தொடரவும் கூடும். அதாவது இந்தச் சீரழிவு மேலும் தொடரவும் கூடும். இலங்கையின் பண்பாடு இது என்பதாகியே விடவும் கூடும்.

தங்கத் தீவின் நிலவரம் இதுதான். 

இலங்கைத்தீவை வேறு விதமாக மீட்பதற்கு யாருமில்லை. உள்நாட்டிலும் யாருமில்லை. வெளியிலும் யாருமில்லை. அதாவது அதன் பிள்ளைகளுமில்லை. அதன் நண்பர்களுமில்லை. 

வீழ்ந்து கிடக்கும் நாட்டை மேலும் மேலும் கடன் பொறிக்குள் தள்ளவே  அத்தனை சக்திகளும் முயற்சிக்கின்றன. வறுமைக்குள்ளான மக்களை வட்டிக் கம்பனிகள் வளைத்துப் பிடிப்பதைப்போலவே இன்றைய நிலை உள்ளது. 

மீட்பர்களில்லாத தேசமாகிவிட்டது இலங்கை. யாருடைய சொல்வழியும் கேளாத பிள்ளைகளை – மனிதர்களை – யாரும் பொருட்படுத்தாத ஒரு நிலை, ஒரு கட்டம் வருமல்லவா! அதைப்போன்ற நிலை  – கட்டம்தான் இது. 

இதிலிருந்து மீள்வதாக இருந்தால் அது நம் அனைவருடைய கூட்டுப் பொறுப்பாகும். தனியே அரசாங்கத்தின் பொறுப்பென்று சொல்லி விட்டு வாழாதிருக்க முடியாது. அப்படிச் சொன்னாலும் அரசாங்கத்தினால் என்னதான் செய்து விட முடியும்?
 

 

https://arangamnews.com/?p=8670

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.