Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பறையா என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பறையா என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை

  • க.சுபகுணம்
  • பிபிசி தமிழ்
6 ஜனவரி 2022
புதுப்பிக்கப்பட்டது 7 பிப்ரவரி 2023
பறையா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"என்னை பள்ளியிலுள்ள சக மாணவர்கள் ஒரு 'பறையன்' போல் நடத்துகிறார்கள்."

இந்த வரியை பார்த்தவுடன் முகம் சுழிக்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த வார்த்தை ஏற்படுத்தக்கூடிய காயம் அவர்களுக்குப் புரியும்.

ஆனால், ஆங்கில மொழியில் 'பறையா' மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான்.

2021ஆம் ஆண்டு இறுதியில், இளவரசர் ஆண்ட்ரூ குறித்து டேனியெல்லா எல்சர் எழுதிய ஒரு கட்டுரையில், "பறையா" என்று அவரைக் குறிப்பிட்டிருப்பார்.

 

இதேபோல், ஏன்.என்.ஐ செய்தியின்படி, 2021ஆம் ஆண்டு ஜூலை மாத கடைசியில் ஆப்கானிஸ்தான் தாலின்பகளால் கைப்பற்றப்பட்ட நேரம். அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆன்டனி ப்ளிங்கன், "தனது சொந்த மக்களுக்கு எதிராகவே அட்டூழியங்களைச் செய்யும் ஆப்கானிஸ்தான், தனது மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படாத ஆப்கானிஸ்தான், ஒரு பறையா நாடாக மாறிவிடும்," என்று குறிப்பிட்டார்.

இப்படியாக இந்தச் சொல், ஆங்கில மொழியில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுபோல் பயன்படுத்தப்படுவது சரியா என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.

சாதிய பாரபட்சம் கொண்ட சொல்

2018-ம் ஆண்டு, டைம் இதழ் வெளியிட்ட ஓர் அட்டைப்படத்தில் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுடைய படத்தைப் போட்டு, "தயாரிப்பாளர், வேட்டையாடி, பறையா," என்று குறிப்பிட்டிருந்தது.

அதைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிகுமார் டைம் இதழுக்குக் கடிதம் எழுதினார். அதில், "இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பறையா என்று அழைக்கப்பட்டார்கள், அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய வழியில் வந்த பலரும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். உங்கள் நாட்டில் பயன்படுத்தப்படும் 'N (நிக்கர் அல்லது நீக்ரோ என்ற சொல் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பயன்படுத்தப்பட்டது)' என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லைப் போலவே மோசமாக, அவமானப்படுத்தும் விதமாக இது பயன்படுத்தப்படுகிறது" என்று கண்டித்திருந்தார்.

சாதிய பாரபட்சம் கொண்ட இந்தச் சொல்லைப் பயன்படுத்தியதைக் கண்டித்து அவர் கடிதம் எழுதியபோது, இதன் பயன்பாடு குறித்துப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதன் பிறகும் இந்தச் சொல்லின் பயன்பாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆன்டனி ப்ளிங்கன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு குழுவில் இருந்தோ, பொதுச் சமூகத்திடம் இருந்தோ, ஏதோவொரு காரணத்திற்காக ஒதுக்கப்படுபவரைக் குறிக்க, "பறையா" என்ற சொல் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. தனி மனிதரைக் குறிப்பதற்காக மட்டுமின்றி, சர்வதேச அளவில் மற்ற நாடுகளால் ஒதுக்கப்படும் நாட்டை கூட "பறையா ஸ்டேட் (Pariah State)" என்று குறிப்பிடுகிறார்கள்.

"பறையா" பரவியதன் வரலாற்றுப் பின்னணி

உலகின் ஒரு குறிப்பிட்ட மொழி பேசக்கூடிய ஒரு மக்களிடையே இருக்கின்ற சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக, ஒதுக்கப்பட்ட சாதியாக பறையர் இன மக்கள் வகைப்படுத்தப்பட்டனர். அதன் விளைவாக சொல்லவொண்ணா கொடுமைகளுக்கும் உள்ளானார்கள்.

இந்நிலையில், இத்தகைய சொல் பயன்பாடு அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே பல்வேறு மன உளைச்சலை உண்டாக்குவதாக சமூக ரீதியிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் மானுடவியல் ஆய்வாளர் முனைவர்.அ.பகத் சிங் கூறுகிறார்.

மேலும், இந்தியா முழுக்கவே இருக்கும் சமூகக் கட்டமைப்பில் நூற்றுக்கணக்கான சாதிகள் பட்டியலினத்தவர்களாக இருந்துள்ளனர், இருக்கின்றனர். ஆனால், தெற்கே இருக்கும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் ஒரேயொரு சாதியின் பெயர் மட்டும் எப்படி, உலகளவில் ஒருவரையோ, ஒரு நாட்டையோ இழிவுபடுத்துவதற்குரிய அடையாளச் சொல்லாக மாறியது?

அதன் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொள்ள, ஆங்கிலப் பேராசிரியர் முனைவர்.அழகரசனிடம் பேசினோம்.

"பாப்லா நெரூடா, டிம் மொராரி போன்ற எழுத்தாளர்கள்கூட தங்கள் எழுத்துகளில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். இது ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயராக உள்ளது. ஆனால், இதை வேறு மொழி பேசுபவர்கள் பயன்படுத்தும்போது, இழிவானவர்களை, ஒதுக்கப்படுபவர்களைக் குறிக்கக்கூடிய பொதுச் சொல்லாக மாறுகிறது.

வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் மானுடவியல் ஆய்வாளர்களின் குறிப்புகள், இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், இனவியலாளர்களின் குறிப்புகள் போன்றவற்றில், இந்தச் சொல்லின் பயன்பாடு, அதன் பின்னணி போன்றவை 300 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது.

டுவர்டே பர்போஸா

பட மூலாதாரம்,ARCHIVE.ORG

இந்தச் சொல் முதன்முதலாக போர்ச்சுகீசிய மொழியில் தான் உலா வரத் தொடங்குகிறது. 1500 முதல் 1517 வரை போர்ச்சுகீசிய அரசரின் சார்பாக இந்தியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த டுவர்டே பர்போஸா (Duarte Barbosa) என்பவரின் எழுத்துகளில் தான் முதன்முதலில் 'பறையாஸ் (Pareas)' என்ற சொல் பயன்பாடு தெரிகிறது.

அங்கிருந்து பிரெஞ்சு மொழிக்குச் சென்ற இந்தச் சொல், பிறகு, ஜெர்மன், ஸ்பானிய மொழிகளுக்கும் பின்னர் ஆங்கிலத்திற்கும் சென்றது" என்று கூறினார்.

பல்வேறு சாதிகள் இருக்கையில் ஏன் இது மட்டும் பரவியது?

அவரிடம், இந்த ஒரு குறிப்பிட்ட சொல், எப்படி இவ்வளவு மொழிகளில் இத்தகைய ஓர் அர்த்தத்தில் பயன்பாட்டிற்கு வர முடிந்தது என கேட்டபோது, "வேறு நாடுகளைச் சேர்ந்த இனவியலாளர்களின் குறிப்புகள் மற்றும் பயணக் குறிப்புகளில் தான் முதலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களுக்கு இது மிகவும் புதிரான, புதிதான விஷயமாக இருந்ததுதான், அதைக் குறிப்பிடக் காரணம்.

இங்கிருந்த தீண்டாமை அவர்களுக்குப் புதிதாகவும் இவ்வளவு கட்டுப்பாடுகளை ஒரு சமூகத்தின் மீது எப்படிச் செலுத்த முடிகிறது என்று அவர்களுக்குப் புதிராகவும் இருந்தது," என்று கூறுகிறார்.

மேலும், இந்தியாவில் பல்வேறு சாதிகள் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கும்போது, ஏன் இந்த ஒரு குறிப்பிட்ட சாதிப் பெயர் மட்டும் வேறு மொழிகளுக்குச் சென்றது என்ற கேள்வியை அவரிடம் எழுப்பியபோது, "சுப்புராயலு போன்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், பட்டன் ஸ்டெயின், நொபோரு கராஷிமா போன்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரின் குறிப்புகளின்படி பார்த்தால், 12-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் 'தீண்டா' என்ற சொல் பிரயோகமே வருகிறது.

அப்படி நடைமுறையில் பின்பற்றப்படத் தொடங்கிய தீண்டாமை சார்ந்த சொல் பிரயோகம் இதில் பங்கு வகிக்கிறது. துடைப்பத்தை பின்னால் கட்டிக்கொண்டு, நடக்கும் பாதையைச் சுத்தம் செய்துகொண்டே செல்லுதல், செருப்பைக் கையில் எடுத்துச் செல்லுதல் போன்ற நடைமுறை பழக்க வழக்கங்கள் ஒரு வகை. அதேபோல் சாதியக் குறியீடு நிறைந்த சொல் பிரயோகம் ஒரு வகை.

அயோத்திதாச பண்டிதர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

கறுப்பாக இருக்கும் காக்கையை 'பற காக்கா', சொறி பிடித்த நாயை 'பற நாய்' என்று அழைப்பதை அவர் குறிப்பிடுகிறார். அதாவது இந்தச் சமுதாயத்தில் எவையெல்லாம் இழிவாகக் கருதப்பட்டனவோ அவற்றுக்கு எல்லாம் பற, பறை என்ற அடைமொழி வைக்கப்பட்டன.

மேலும், ஒருவரை வசைபாடும்போதும் கெட்ட வார்த்தைகளில் சாதியக் குறியீடு வைக்கப்பட்டன.

பறையா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதைப் போல, ஒட்டுவைத்துப் பேசக்கூடிய பழக்கம் இந்தியாவில் பிற பண்பாடுகளில் இல்லை. கொல்கத்தாவிலோ, ஆந்திராவிலோ, மத்தியப் பிரதேசத்திலோ இதைப் பார்க்க முடியவில்லை. திராவிடக் கழகத்தில் தீண்டப்படாதவர்கள் என ஒதுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்காக மிகவும் பாடுபட்டவர் சாமி நாயுடு. அவரை பற நாயுடு என்று அழைத்தார்கள்.

இந்த மாதிரியான போக்கு, மாலா, மதியா, வால்மீகி போன்ற சமூகங்களுக்கு வரவில்லை.

வால்மீகி என்றொரு தாழ்த்தப்பட்ட சமூகம் இருக்கிறது. அதற்காக, வால்மீகி என்று கூறித் திட்டும் பழக்கம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் தான் பற நாய் என்று பறையர் சாதியக் குறியீட்டை வைத்துத் திட்டும் பழக்கம் இருக்கிறது.

அதுமட்டுமின்றி, அயோத்திதாசப் பண்டிதரின் குறிப்புகளின்படி, பறை என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஓரிடத்தில் ஒரு செயலைக் குறிக்கப் பயன்படும் அதேநேரம், இன்னோரிடத்தில் ஒரு நபரையோ உயிரினத்தையோ குறிக்கவும் அது பயன்படுத்தப்படுகிறது.

இப்படியாக ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை அடிப்படையாகக் கொண்ட சொல் பிரயோகம் பொதுத் தளத்தில் பயன்பாட்டில் இருப்பது, வேறு மாநிலங்களில் இல்லை. அதனால் இங்கிருந்த இந்தக் குறிப்பிட்ட வார்த்தைப் பயன்பாட்டின் மீது வெளிநாட்டவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.

இப்படியாக, ஒரு வார்த்தையைப் பொதுவான இழிவுக்குப் பயன்படுத்துவதைப் பார்த்தவர்கள், அதை ஒரு பொதுவான இழிசொல்லாகவே ஆரம்பத்தில் கருதினார்கள். அதனால், அதைத் தம் மொழியிலும் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.

அடையாளப்படுத்திய ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி

அப்படிப் பயன்படுத்திய வெளிநாட்டவர்கள், 18, 19-ம் நூற்றாண்டு வரை, பறையா என்ற சொல்லை தீண்டப்படாதோருக்கான ஒரு பொது சொல்லாகவே புரிந்திருந்தார்கள். அதன்பிறகுதான் முழுமையாகத் தெரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். ஆனால், அதேநேரத்தில் அந்தச் சொல்லின் பயன்பாடும் பெருமளவு வளர்ந்துவிட்டது," என்று கூறினார் முனைவர்.அழகரசன்.

முனைவர் அழகரசன் கூறியதைப் போல, போர்ச்சுகீசிய மொழிக்குச் சென்ற பறையா என்ற சொல், பிரெஞ்சு, ஜெர்மன் எனப் பல்வேறு ஐரோப்பிய மொழிகளுக்கும் பரவியது. 1823-ம் ஆண்டில், டெர் பறையா (Der Paria), என்ற தலைப்பில் பெர்லினில் ஜெர்மனியிலுள்ள யூதர்கள் எதிர்கொண்ட பாகுபாடுகளைப் பற்றிய நாடகத்தை மைக்கேல் பீர் என்ற யூதக் கவிஞர் உருவாக்கினார். அது பின்னர், 1826-ம் ஆண்டில் பாரீஸிலும் இயற்றப்பட்டது.

பறையா என்ற சொல்லை, வெறுமனே அரசியல் ரீதியிலான சொல்லாக மட்டுமின்றி, மானுடவியல் ரீதியாக, சமூக ரீதியாக ஒருவரை, ஒரு குழுவைச் சிறுமைப்படுத்த பயன்படுத்தப்பட்டது என்று எலெனி வரிகாஸ் தன்னுடைய தி ஃபிகர் ஆஃப் தி அவுட்காஸ்ட் (The Figure of the Outcast) ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியாகத் தொடங்கிய இந்தச் சொல்லின் பயன்பாடு, பிற்காலங்களில் இந்தச் சொல்லின் வரலாற்றுப் பின்னணி குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடந்த பிறகும், இப்போதும்கூட பொதுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

2011-ம் ஆண்டு அமெரிக்காவில் "பறையா" என்று பெயரிடப்பட்டு ஒரு படம் வெளியானது. தன்பால் ஈர்ப்பாளராக இருக்கும் ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண் குடும்பத்தாலும் சுற்றத்தாலும் ஒதுக்கப்படுவது குறித்த அந்தப் படத்திற்கு இட்ட பெயர் தான் இது.

இப்படியாக தமிழ்நாட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும் சொல்லை, உலகின் பல்வேறு பகுதிகளில் இழிசொல்லாக, மோசமான நிலையிலுள்ள ஒருவரைக் குறிக்கும் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி, இந்தச் சொல்லை அவமதிப்பான சொல் என்று அடையாளப்படுத்தியது.

பறையா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2011-ம் ஆண்டு வெளியான 'பறையா'

இருப்பினும் இதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட உலகச் சமூகத்தின் பல்வேறு தரப்பினர் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்தியாவில் ஒருவருடைய சாதியைக் குறிப்பிட்டுப் பேசுவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், உலகளவிலான ஒரு சொற்பிரயோகம், அந்த மக்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

மொழிச் சீர்திருத்தம் நடக்கவேண்டும்

இத்தகைய சொற்பிரயோகம், என்ன மாதிரியான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துகிறது எனத் தெரிந்துகொள்ள, மானுடவியல் ஆய்வாளர் முனைவர்.அ.பகத் சிங் பிபிசி தமிழுக்காகப் பேசியபோது, "எந்த ஒரு மொழியிலும், ஒரு கலாச்சாரத்தை வரையறுப்பதற்கான அவசியம் இருக்கும். பிரிட்டிஷ்-இந்திய சமூகத்தில் ஆங்கில மொழி நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் பெறத் தொடங்கியதால் தான், அதன் முதன்மைத்துவம் இன்றும் இருக்கிறது.

உள்ளூர் நிர்வாகத்திற்கு, இங்கிருக்கும் கலாச்சாரத்தை, சமூக அமைப்பை வரையறுக்கக்கூடிய சொற்கள் தேவைப்பட்டன. இந்திய கலாச்சாரத்தில் இருக்கக்கூடிய சாதிய அமைப்பை, அதில் இருக்கும் பாகுபாட்டை விவரிக்கக்கூடிய வகைப்பாட்டில் இருந்து வரக்கூடிய சொல்தான் பறையா.

அம்பேத்கர் இருக்கின்ற தனிப்பட்ட சாதிய அடையாளங்களை நீக்கவே பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் என்ற வகைப்பாட்டை உருவாக்கினார்.

ஆனால், ஒரு மொழியை நிர்வகிக்கக்கூடிய இடத்தில் மேல்தட்டைச் சேர்ந்த, மேல் சாதியைச் சேர்ந்த ஒருவர் இருக்கையில், அவர் இந்தக் குறிப்பிட்ட சொல், இழிவுபடுத்தக்கூடியதாக இருக்கிறது என நினைக்கப்போவதில்லை. ஏனெனில், அந்தச் சொல் அவரைப் பாதிக்கப்போவதில்லை. அவருக்கும் அந்தச் சொல்லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஆனால், உலகளவில் மக்கள் பரவி வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற பேச்சுவழக்கு அந்தச் சமூகத்தினரிடையே மனதளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகவே, இத்தகைய வார்த்தைப் பயன்பாடுகள், இத்தகைய பாகுபாடுகளை எதிர்கொள்ளக்கூடிய ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை அது எந்தளவுக்குப் பாதிக்கக்கூடும் என்பதை விவாதிக்கவேண்டிய தேவை உள்ளது. அதுவும், இந்த ஒரு சொல்லுக்கு மட்டுமல்ல, இதுபோல் வேறுமொழிகளில் இருந்து பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும் அனைத்திற்குமே உள்ளது. இதைப் போலவே, ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை, திருநங்கைகளை இழிவுபடுத்தும் சொற்களைச் சரிசெய்யும், மொழியைச் சீர்திருத்தும் முயற்சிகளில் பல்வேறு மொழியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இதைச் சீர்திருத்துவதற்கான தேவையும் அதிகமாகவே உள்ளது.

ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான அமைப்புகள் வெகுவாக வளர்ச்சியடையத் தொடங்கிய பிறகு தான், நீக்ரோ என்ற சொல்லின் பயன்பாடு மாறத் தொடங்கியது. இந்தியாவிலேயே, அழியும் நிலையில் இருந்த பழங்குடிக் குழுக்களைக் குறிக்க, பின்தங்கிய பழங்குடிக் குழு (Primitive tribal group)என்று குறிப்பிடப்பட்டது. அதை மாற்றி தற்போது, அழியும் நிலையிலுள்ள பழங்குடியினக் குழு (PVTG) என்று மாற்றப்பட்டது.

அதேபோல், இந்திய சமூகத்திலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற இழிவுபடுத்தக்கூடிய சொற்களையும் விவாதித்து, சீர்திருத்தவேண்டும். சமூக செயல்முறையில், இவை அனைத்துமே ஒரு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, தவறு என்று நிரூபிக்கப்படும்போது, அடுத்த கட்டத்தில் அனைவருக்குமான வளர்ச்சியை உருவாக்கக்கூடிய சமூக சூழலை நோக்கி நகரமுடியும்," என்று கூறினார்.

இதுகுறித்துப் பேசிய பட்டியல் சாதி மக்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்பட்டுவரும் சமூக ஆர்வலர் புனித பாண்டியன், "2020 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களிடையே திருமணத்திற்கு வரன் பார்க்கும் ஷாதி டாட் காம் என்ற ஓர் இணையதளம் சாதியரீதியிலான பாகுபாட்டை மேற்கொள்வதாகக் கூறி கடுமையாகச் சாடப்பட்டது.

சாதிரீதியாக வரன் பார்ப்பது குறித்த வசதியைக் குறிப்பிட்டு, அது தன் நாட்டு சமத்துவச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இங்கிலாந்தின் சமத்துவச் சட்டத்தின் கீழ் சாதியரீதியிலான பாகுபாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதும் உள்ளடங்கியுள்ளது. அதைப் போல, மொழியிலுள்ள வார்த்தைப் பயன்பாட்டிலும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சமுதாயத்தின் அனைத்துத் தரப்பிலும் இத்தகைய பயன்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அதுதான், சமூகப் புரிதலுக்கு வழிவகுக்கும்," என்று கூறினார்.

இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-59885980

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.