Jump to content

அருந்ததி பார்க்கும் திருமண சடங்கில் அறிவியல் உள்ளதா? வைரல் வீடியோவும் விஞ்ஞானி விளக்கமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருந்ததி பார்க்கும் திருமண சடங்கில் அறிவியல் உள்ளதா? வைரல் வீடியோவும் விஞ்ஞானி விளக்கமும்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து

பட மூலாதாரம்,MAHESH/SARANYA

'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து' திருமணம் செய்யும் நடைமுறை தமிழ்நாடு உள்ளிட்ட சில தென்னிந்திய மாநிலங்களில் பல சாதிகளில் உள்ளது.

திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அம்மிக்கல் ஒன்றில் கால் வைத்து வானத்தில் மேலே அண்ணாந்து மணமகன் வானத்தில் உள்ள அருந்ததி நட்சத்திரத்தை மணமகளுக்கு காட்டுவதாகவே இந்த சடங்கு இருக்கும்.

வழக்கமாக திருமணம் பகல் நேரத்திலேயே நடக்கும் என்பதாலும், மண்டபத்திலோ, வீடுகளிலோ, பந்தலிலோ உள்ளரங்கத்தில்தான் திருமணம் நடக்கும் என்பதாலும் உண்மையிலேயே மணமகனும், மணமகளும் அருந்ததி பார்ப்பது நடைமுறையில் இல்லை. மேலே காட்டி அருந்ததி நட்சத்திரம் தெரிகிறதா என்று கேட்கும் ஒரு சடங்கு அவ்வளவே.

16ஆம் நூற்றாண்டில் தாண்டவராய சுவாமிகள் எழுதிய கைவல்ய நவநீதம் என்ற நூலில்,

 

"தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார் போல்

ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார்போல்..." என வருகிறது ஒரு பாடல் வரி.

அதாவது வானத்தில் மரங்களைக் காட்டி அதன் பின்னால் இருக்கும் பிறையைக் காட்டுவது போல, வானத்தில் உள்ள நட்சத்திரங்களைக் காட்டி அவற்றுக்குள் உள்ள அருந்ததி நட்சத்திரங்களைக் காட்டுவது போல, உருவத்தை முதலில் காட்டி பிறகு, அருவமாக இருக்கிற மூலப் பொருளை விளக்கத் தொடங்கினார் என்று அந்தப் பாடலின் பொருள் செல்லும்.

எனவே, ஒரு காலத்தில் உண்மையிலேயே வானத்தில் அருந்ததி நட்சத்திரத்தை காட்டும் நடைமுறை திருமண சடங்குகளில் இருந்ததா, அப்படி எனில் திருமணம் இரவில் நடந்ததா, இந்தப் பாடலில் திருமணம் பற்றிய குறிப்பு இல்லாததால், அருந்ததி காட்டும் நடைமுறை திருமணத்தோடு தொடர்பற்ற ஒன்றாக இருந்ததா என்ற கேள்விகள் எழுகின்றன.

விண்வெளி

பட மூலாதாரம்,GETTY IMAGES

எது எப்படி என்றாலும் இது ஒரு சடங்கு. அது அந்த அளவில் இருப்பது வேறு. ஆனால், இது போன்ற சடங்குகளுக்குப் பின்னால் அறிவியல் இருப்பதாகவும், இன்றைய நவீன அறிவியல் கண்டறிந்த உண்மைகளை பழங்காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டறிந்துவிட்டதாகவும் கூறும் வீடியோக்கள் பரவி வருகின்றன.

அதைப் போல பகிரப்பட்டுவரும் ஒரு வீடியோவில் பேசும் பெண், பொதுவாக இரட்டை நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் நிலையாக இருக்கும், மற்றொரு நட்சத்திரம் நிலையாக உள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும். ஆனால், அருந்ததி (மிஸார்) - வசிட்டர் (அல்கோர்) நட்சத்திரங்கள் லட்சியத் தம்பதிகளைப் போல ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. வானத்தில் சிறு புள்ளிகளாகத் தெரியும் நட்சத்திரங்களின் செயல்பாட்டைக் கண்டறிந்து திருமண சடங்கில் வைத்திருக்கிறார்கள் என்று பேசுகிறார்.

இதில் கூறப்படும் வானியல் விவரங்கள் உண்மையா என்று இந்தக் காணொளியை மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பில் பணியாற்றும் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனிடம் அனுப்பிக் கேட்டோம்.

வெங்கடேஸ்வரன் கூறும் மூன்று காரணங்கள்

த.வி.வெங்கடேஸ்வரன்

பட மூலாதாரம்,TVVENKATESWARAN

 
படக்குறிப்பு,

த.வி.வெங்கடேஸ்வரன்

அவர் இந்தக் காணொளியில் கூறப்படும் வானியல் சார்ந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றார். மூன்று அடிப்படைகளில் இவற்றை முற்றிலும் மறுக்க முடியும் என்று கூறிய அவர் விரிவாக அளித்த விளக்கம் இதோ:

முதல் காரணம்:

பூமியிலிருந்து சுமார் 81.7 ஒளியாண்டு தொலைவில் அருந்ததி (அல்கோர்) உள்ளது. ஆனால் வசிட்டர் (மிஸார்) 82.9 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. எனவே இரண்டும் அசல் ஜோடி அல்ல.

பார்வைக்கு இரண்டும் ஒரே திசையில் இருப்பதால் ஜோடிபோல நாடகம் ஆடும் விண்மீன்கள் தான் இவை. இதுபோன்ற போலி ஜோடி விண்மீன்களை 'தோற்றமயக்கம் தரும் ஜோடி' என வானவியலில் அழைப்பார்கள்.

எப்சிலன் லைரே போன்ற அசல் ஜோடி விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு ஒன்றையொன்று சுற்றுகின்றன. இவை அசல் ஜோடி விண்மீன்கள். அல்ஜிடி போன்ற தோற்ற மயக்கம் தரும் ஜோடிகள் இடையே ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே தொடர்பு ஏதுமில்லை.

ஆப்டிகல் பைனரி நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளாது, இரண்டு விண்மீன்களும் வெவ்வேறு தொலைவுகளில் இருந்தாலும் பார்வைக் கோட்டில் ஒரே திசையில் அமைவதால் ஏற்படும் தோற்ற மயக்கம் காரணமாக, இவை ஜோடி போலத் தோற்றம் தரும்.

எனவே, வசிட்டரும் (மிஸார்) அருந்ததியும் (அல்கோர்) ஜோடியே அல்ல. தொலைவில் ஒரே திசையில் இருக்கும் உயரமான இரண்டு மலைகள் பார்வைக்கு இணைந்து மலைத்தொடர் போன்ற தோற்ற மயக்கம் ஏற்படுத்துவது போல வசிட்டர் - அருந்ததி விண்மீன்கள் போலி ஜோடி.

 

இரண்டாவது காரணம்:

ஒரு ஒளிபுள்ளியாக வெறும் கண்களுக்கு புலப்படும் அருந்ததி (அல்கோர்) விண்மீனுக்கு உண்மையிலேயே அல்கோர்-B என்று அழைக்கப்படும் அசல் இணை உள்ளது. வேறு சொற்களில் கூறினால், அருந்ததியின் அசலான இணை வசிட்டர் விண்மீன் அல்ல; அல்கோர்-B என்னும் வேறொரு விண்மீன்.

மூன்றாவது காரணம்:

உண்மையான இரட்டை விண்மீன் தொகுப்பு அனைத்திலுமே இரண்டு விண்மீன்களும் சுற்றி வரவே செய்யும். இரண்டு விண்மீன்களும் உண்மையில் ஒன்றை ஒன்று சுற்றுவதில்லை. பதிலாக இரண்டுக்கும் இடையில் உள்ள நிறைமையம் என்ற புள்ளியையே இரண்டும் சுற்றிவரும்.

புவி, சூரியனை சுற்றுவதாக எளிதாக கூறுகிறோம். ஆனால், உண்மையில் இரண்டுக்கும் இடையில் உள்ள நிறைமையத்தை ஒட்டியே புவி சுற்றி வருகிறது. அந்த நிறை மையத்தை சூரியனும்கூட சுற்றவே செய்கிறது. ஆனால், சூரியன் சுற்றுகிற வட்டம் மிகச் சிறியதாக இருக்கும். ஆட்டு உரலில் குழவிக்கல் சுற்றிவருவதைப் போல சூரியன் சுற்றுவது ஒரே இடத்திலேயே அமைந்திருக்கும்.

எனவே வசிட்டரும் அருந்ததியும் அசல் ஜோடி என்றாலும் கூட தட்டாமாலை போல சுற்றுவது அவற்றின் சிறப்பு குணம் இல்லை. எல்லா ஜோடி விண்மீன்களுக்கும் இருக்கும் குணம் தான் என்கிறார் வெங்கடேஸ்வரன்.

இந்த கட்டுரையின் நோக்கம் சடங்குகளை ஆராய்வதல்ல. அவற்றைக் குறைகூறுவதும் அல்ல. ஆனால், சடங்குகள் அறிவியல் ரீதியில் அமைந்தவை என்று கூறுவதன் மூலம் அறிவியல் உண்மைகள் திரிக்கப்படுவதையும், அறிவியல் எது, நம்பிக்கை எது என்ற மயக்கத்தை ஏற்படுத்தும் தகவல்களை ஆராய்ந்து உண்மையை உரைப்பதுமே.

https://www.bbc.com/tamil/articles/cp3zrxy6n0po

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது வேறை ஒன்டும் இல்லை நீ அம்மிக்குழவியை தலையில் போட நினைத்தால் மேலை இருக்கிறவன் சாட்ச்சி சொல்லுவான் என்டு மனைவியை ஏமாத்தின காலம் அது.😆

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.